VB-G RAM-G சட்டம்: முதலாளிகளின் நலனுக்காக ஒழித்துக் கட்டப்பட்ட நூறுநாள் வேலை திட்டம்

தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கின்ற, முதலாளிகளின் நலன்களுக்கான, நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பை அமல்படுத்துவதாக அறிவித்ததன் தொடர்ச்சியாக, தற்போது கிராமப்புற மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நூறுநாள் வேலை திட்டத்திற்கும் கொள்ளி வைத்திருக்கிறது மோடி கும்பல்.

நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு சாவு மணி அடித்திறுக்கிறது மோடி கும்பல். தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கின்ற, முதலாளிகளின் நலன்களுக்கான, நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பை அமல்படுத்துவதாக அறிவித்ததன் தொடர்ச்சியாக, தற்போது கிராமப்புற மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நூறுநாள் வேலை திட்டத்திற்கும் கொள்ளி வைத்திருக்கிறது இந்த பாசிச கும்பல்.

தனியார்மயக் கொள்கைகளின் விளைவால் இந்தியா கிராமப்புறங்களில் அதிகரித்த வேலையின்மை மற்றும்  வாங்கும் சக்தி குறைந்திருப்பது ஆகியவற்றை சமாளிக்க, குடும்பத்தில் ஒருவருக்கு வருடத்திற்கு நூறுநாள் வேலை என்ற திட்டத்தை (MGNREGA) 2005-இல் காங்கிரஸ் கொண்டு வந்தது. கடந்த இருபது வருடங்களாக மிகவும் சொற்பமான வருவாயையாவது கிராமப்புற குடும்பங்களுக்கு உத்திரவாதப்படுத்திய இத்திட்டத்தை திரும்பபெற்று அதற்கு பதிலாக வேலைக்கு உத்திரவாதம் இல்லாத வளர்ந்த இந்தியாவிற்கான கிரமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் (VB-G RAM-G) என்ற ஒன்றை நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றி சட்டமாக்கியுள்ளது மோடி கும்பல்.

 

MGNREGA திட்டம் திரும்பப்பெறப்பட்டு அதற்குப் பதிலாக VB G RAM G சட்டம் கொண்டு வரப்பட்டது ஏன்? என்ற கேள்விக்கு, “கிராமங்களோடு தொடர்பு அதிகரித்திருப்பது, கிராமப்புற வீடுகள் மற்றும் அவற்றுக்கிடையேயான மின்சார இணைப்புகள் அதிகரித்திருப்பது, பேடிஎம் கூகுள் பே போன்ற இணைய பண பரிவர்த்தனை அதிகரிப்பு, கிராமப்புற மக்களின் சமூக பாதுகாப்பிற்காக அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் கிராமப்புற தன்னிறைவிற்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றின் பலனாய் கடந்த 20 வருடங்களில் கிராமப்புற இந்தியாவின் சமூக-பொருளாதார நிலைமைகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் 2047-இல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு இலக்கின் அடிப்படையில் MGNREGA திட்டம் மாற்றப்பட்டு இருப்பதாக” மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

மோடி கும்பலின் கருத்துப்படி, கடந்த 20 வருடங்களில் கிராமப்புற இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. திறன் பேசிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே இதற்கு உதாரணம். எனவே நூறுநாள் வேலை வழங்க வேண்டிய கட்டாயம் ஒன்றிய அரசுக்கு இல்லை. அரசின் நிதி நிலைமையைப் பொருத்தே அது முடிவுசெய்யப்படும்.

“குடிக்க தண்ணியில்ல வாய் கொப்பளிக்க பன்னீரு கேட்குதா” என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்போம். அதுபோல, சாப்பாட்டுக்கு கையில் காசு இல்லையென்றாலும் பாக்கெட்டில் திறன்பேசி வைத்திருப்பது எதார்த்தமாகியுள்ள இன்றைய சூழலில் அவற்றை வளர்ச்சிக்கான ஒரு குறியீடாக எடுத்துக்கொள்ள முடியுமா?  மேலும் டிஜிட்டல் இந்தியா, செலவீனங்கள் குறைப்பு என்ற பெயரில் ஒன்றிய, மாநில அரசுகளின் உதவித் திட்டங்களைப் பெற திறன்பேசி-வங்கிக்கணக்கு-ஆதார் வலைப்பின்னலை மக்களின் மீது திணித்து வருகின்றனர். திறன்பேசி இல்லாமல் அரசின் பணச் சலுகைகளைப் பெறமுடியாது என்ற நிர்பந்தத்தை மோடி கும்பல்தான் மக்களின் மீது திணித்தது. தற்போது, அதே திறன்பேசியை காரணம் காட்டி கிராமப்புற இந்தியா வளர்ந்ததாகக் கூறி ஏழை மக்களுக்கு வழங்கிவந்த வேலைவாய்ப்பையும் பறித்துள்ளது.

கிராமப்புற இந்தியக் குடும்பங்களின் பொருளாதாரம் வளர்ந்துள்ளதா? கிராமப்புற இந்திய மக்களின்/விவசாயிகளின் சமூக-பொருளாதார நிலைமைகளைக் குறித்து சமீபத்திய ஆய்வுகள் சொல்லுவது என்ன?

  1. கடந்த பத்தாண்டுகளில் கிராமப்புற உண்மைக் கூலியின் அளவில் (விவசாயம் அல்லது விவசாயம் அல்லாத வேலை) பெரிய மாறுதல் இல்லாமலே உள்ளது. ஆனால் அதேகாலகட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது.
  2. விவசாயப்பொருட்களின் விலையானது அதனை உற்பத்தி செய்வதற்கான விலையை விட மிக அதிகமாக உள்ளது (terms of trade for peasants). இதனால் சிறுவிவசாய உற்பத்தியாளர்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.   
  3. குடும்ப செலவீனங்களைச் சமாளிப்பதற்காக பெண்கள் குடும்பத் தொழில்களில் பங்கெடுப்பதும், குறைந்த ஊதியமாக இருந்தபோதிலும், MGNREGS வேலை வேண்டி பதிவு செய்வதும் அதிகரித்துள்ளது.
  4. கிராமப்புறக் குடும்பங்களின் வருவாய் குறைந்துள்ளது இதனால் அத்தியாவசியப் பொருட்களின் பயன்பாடும் குறைந்துள்ளது. உதாரணாமாக கடந்த பத்தாண்டுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசியப் பொருள்களான சோப்பு, பற்பசை, உண்வுப்பொருட்கள், மருந்துகள், டீ தூள்கள் ஆகியவற்றின் வளர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே வந்துள்ளது.

இந்த உண்மைகளை புறந்தள்ளிவிட்டு கிராமப்புற பொருளாதார நிலைமைகள் வளர்ந்துள்ளதாக பொய் சொல்லியும் 2047-இல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கோயபல்ஸ் பிரச்சாரத்தின் மூலமும் மக்களுக்கு கிடைத்து வந்த சொற்ப அளவிலான வருவாயையும் நிறுத்த முடிவெடுத்துள்ளது மோடி கும்பல்.

VB-G RAM-G திட்டத்தினை நியாயப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக ஆதரவாளர்கள், நூறுநாள் வேலையை 125 நாட்களாக உயர்த்தியுள்ளதாக ஊரெங்கும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். ஆனால் MGNREGA பணியாளர்களின் கூட்டமைப்பான MGNREGA சங்கர்சன் மோர்ச்சா 125 வேலை நாள் என்பதே ஒரு நாடகம் என்கிறது.  

புதிய சட்டத்தில், வேலை நாட்களை 125 நாட்களாக உயர்த்தியுள்ளனர்  என்பது உண்மைதான். ஆனால் இதை அமல்படுத்துவதற்காக சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளையும் நிதி ஒதுக்கீட்டுக்கான வழிகாட்டுதல்களையும் ஆராய்வதின் மூலம் 125 நாள் வேலை என்பதே ஒரு பித்தலாட்டம் என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும். இதற்கு MGNREGA மற்றும் VB-G RAM-G சட்டத்தின் மையமான கூறுகளை ஒப்பிடுவோம்.

MGNREGA, 2005VB GRAM G, 2025
குடும்பத்தில் ஒருவருக்கு வருடத்திற்கு 100 நாள் வேலை வழங்குவது ஒன்றிய அரசினுடைய பொறுப்பு.
கூடவே, 100 நாள் வேலை என்பது ஒருவரின் அடிப்படை உரிமை.
125 நாள் வேலை என்பது ஒன்றிய அரசினுடைய பொறுப்பு கிடையாது.
நிதி நிலைமைகளை பொறுத்தே இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்படும்.
முழுமையாக ஒன்றிய அரசினுடைய நிதி பங்களிப்பிலிருந்து அமல்படுத்தப்படும் திட்டமாகும்.

ஊதியம் மற்றும் உபகரணங்கள் வாங்குவதில் 75% நிதியை ஒன்றிய அரசு வழங்கும்.
உபகரணங்களை வாங்குவதில் 25% நிதியை மாநிலங்கள் வழங்கினால் போதும்.

இதில் ஒன்றிய அரசு 60% நிதியையும் மாநில அரசு 40% நிதியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

60%-க்கு மேல் ஒன்றிய அரசு நிதி ஒதுக்காது.
தேவைக்கேற்ப மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்கி கூடுதல் நபர்களுக்கு வேலை வழங்கலாம்.
இது மாநில அரசுகளின் விருப்பத்தைப் பொறுத்தது.

வேலை வேண்டி மக்கள் பதிவு செய்கின்ற எண்ணிக்கையைப் பொறுத்து
இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு அதிகரிக்க வேண்டும்.
நிதி நிலைமைகளைப் பொறுத்தே இத்திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யும்.

எந்த மாநிலத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பதை ஒன்றிய அரசே முடிவு செய்யும்.

கிராமப்புறங்களில் செய்ய வேண்டிய வேலைகள் மற்றும் திட்டங்களை
அந்தந்த கிராம பஞ்சாயத்து முடிவு செய்து மேலதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.
எந்த மாநிலம் அல்லது மாவட்டத்தில் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்,
எந்த வகையான வேலைகள் செய்ய வேண்டும் என்பதை ஒன்றிய அரசே முடிவு செய்யும்.

குறிப்பாக “2047-இல் வளர்ச்சியடைந்த இந்தியா” என்ற இலக்கை மையமாகக் கொண்டு
வேலைகள் திட்டமிடப்படும்.

புதிய சட்டத்தின் படி, கிராமப்புற வேலையை  தீர்மானிக்கக்கூடிய மொத்த அதிகாரமும் மோடி கும்பலிடம் மட்டுமே உள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடு என்பது அரசினுடைய மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைச் சார்ந்தது. உலகவங்கியும், மூடீஸ் போன்ற தர நிர்ணய நிறுவனங்களும் சொல்லுவதைப் பொறுத்துதான் நிதி ஒதுக்கீடு இருக்கும்.

கூடவே, இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் கணிசமான அளவு மாநில அரசுகள் ஏற்கவேண்டும். ஏற்கனவே, ஜிஎஸ்டி வரி விதிப்பினால் மாநில அரசுகளின் வருவாய் கணிசமாக குறைந்துள்ள நிலையில் இத்திட்டத்திற்காக பல ஆயிரம் கோடிகளை மாநில அரசுகள் ஒதுக்குவதென்பது சாத்தியமில்லாதது. உதாரணமாக, கடந்த நிதியாண்டில் MGNREGA க்காக 93,850 கோடியை செலவு செய்துள்ளது. இதில் 85,333 கோடியை (90%) ஒன்றிய அரசும் 8,500 கோடியை மாநில அரசுகளும் (10%) செலவளித்துள்ளன.  VB-G RAM-G இன்படி, ஒன்றிய அரசின் பங்கு 56,310 கோடியாகக் (60%) குறைந்தும் மாநில அரசுகளின் பங்கு 37,450 கோடியாக (40%) அதிகரித்தும் இருக்கும்.  நிதி நிலைமைகளை காரணம் காட்டி திட்டத்தினை முழுமையாக அமல்படுத்துவதை மாநில அரசுகள் தவிர்க்கவே செய்யும்.

மேலும் மோடி கும்பல், தங்களுடைய அரசியல் இலாபத்தின் அடிப்படையிலேயே மாநிலங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்கிறது. குறிப்பாக பாஜக ஆட்சி இல்லாத மற்றும் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பில்லாத  மாநிலங்களுக்கு சட்டபடி வழங்க வேண்டிய நிதியை கூட பாஜக வழங்குவதில்லை. உதாரணமாக மேற்குவங்கம்,  தமிழ்நாடு,  கேரளா போன்ற மாநிலங்களுக்கான கல்வி நிதியையோ அல்லது நூறுநாள் வேலை உள்ளிட்ட திட்டங்களுக்கான நிதியையோ இன்றுவரை வழங்காமலே உள்ளனர். அதேவேளையில், பீகார் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக, 19,000 கோடி அளவிலான திட்டங்களை தேர்தல் அறிவிப்புக்கு சில தினங்களுக்கு முன்பு மோடி கும்பல் அறிவித்தது.  

இந்தப் பின்புலத்தோடு புதிய சட்டத்தின் அம்சங்களை  இணைத்துப் பார்க்கும் போது, 125 நாள் வேலை என்பதே சாத்தியமில்லை என்பதும், அது வரக்கூடிய எதிர்ப்புகளை சமாளிப்பதற்காக முன்கூட்டியே திட்டமிடப்பட்டு சொருகப்பட்ட பொய் என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.  

MGNREGA சட்டத்தின் படி, வருடத்திற்கு 100 நாள் வேலை கொடுக்க வேண்டியது ஒன்றிய அரசினுடைய பொறுப்பு. ஆனால் இன்றுவரை காங்கிரஸோ அல்லது பாஜகவோ சராசரியாக வருடத்திற்கு 60 நாள் வேலையை கூட வழங்கியதில்லை. கூடவே கடந்த பத்து வருடங்களில்  தொழிற்துறை வேலைவாய்ப்புகள் குறைந்ததின் விளைவாய் நூறுநாள் வேலைக்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. ஆனால் அதற்கு தகுந்தாற் போல நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்காமல் இத்திட்டத்திற்கான நிதியை குறைத்து வந்துள்ளனர். தற்போது திட்டத்தையே நிறுத்திவிட்டனர்.  

கோடிக்கணக்கான கிராமப்புற மக்களுக்கு குறைந்தபட்ச வருவாயை உத்திரவாதப்படுத்திய ஒரு திட்டத்தை ஒழித்துக்கட்டவேண்டியதன் அவசியம் என்ன? இரு நாட்களுக்கு முன்பு, வரும் பட்ஜெட்டை ஒட்டி, இந்திய தரகு முதலாளிகளுடன் கலந்துரையாடிய மோடி, இந்தியா சீர்திருத்த எக்ஸ்பிரஸில் ஏறியுள்ளதாகவும் இச்சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் எனவும் கூறினார். மோடி சொன்ன சீர்திருத்தம் என்பது அந்நிய முதலீடுகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து தொழில் தொடங்க அனுமதித்து  மக்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையிடுவதற்கு இடையூறாக உள்ள சிறுதடைகளைக் கூட ஒழித்துக்கட்டுவோம் என்பதுதான். இதையே பொருளாதார வளர்ச்சி, Viksit Bharat 2047 என்று மோடி உருட்டியிருந்தார்.

உதாரணமாக கடந்த ஒருமாதத்திற்குள், நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்பை அமல்படுத்துவது, ஆயுள் காப்பீட்டில் 100% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி, அணுக்கரு உலைகள் அமைப்பதில் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பது, தனியார்/வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கான உயர்கல்வி வரைவுக்கொள்கை போன்ற சட்டத்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளனர். அனைத்தையும் தனியார்களிடமும் நிதியாதிக்க கும்பல்களிடமும் ஒப்படைப்பது என்பதையே சீர்திருத்த எக்ஸ்பிரஸ் என்கிறார் மோடி. இதிலிருந்தே நூறுநாள் வேலை திட்டத்தை திரும்பப் பெற்றதற்கான காரணத்தை கண்டறிய வேண்டியுள்ளது.

பொருளாதார சீர்திருத்தத்தைத் (தனியார்மயத்தை) தீவிரப் படுத்துவதன் மூலம் ஏராளமான அந்நிய முதலீடுகள் இந்தியாவில் வந்து குவியும் என்றும் அதனை கொண்டு வளர்ச்சித் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய முடியும் என்று சொல்லி சீர்திருத்த நடவடிக்கைகளை நியாயப்படுத்துகின்றனர். ஆனால் அந்நிய முதலீடுகள் இந்தியாவிற்குள் நுழையும் போதே அது மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியைக் குறைக்க வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் உள்ளே வருகின்றன. தரகு முதலாளிகளின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றிய,  மாநில அரசுகள் மற்றும் ஓட்டுக்கட்சிகளும் அக்கோரிக்கையை ஏற்று கல்வி, மருத்துவம், நூறுநாள் வேலை போன்ற மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் இதர அரசாங்க செலவீனங்களை குறைக்கின்றனர். இந்த பின்புலத்தில் VB-G RAM-G திட்டத்தையும் நாம் பொருத்திப் பார்க்க வேண்டும். முதலாளிகளின் நலனுக்காக கோடிக்கணக்கான கிராமப்புற ஏழைகளின் சோத்தில் மண்ணள்ளி போட்டிருக்கிறது மோடி கும்பல்.

  • செல்வம்

செய்தி ஆதாரம்

https://thewire.in/rights/rollback-of-a-hard-won-right-the-political-economy-of-dismantling-mgnrega

https://rupe-india.org/aspects-no-88/the-depression-of-mass-consumption/

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/dec/doc20251216733301.pdf

https://theleaflet.in/governance-and-policy/how-the-g-ram-g-bill-marks-the-end-of-indias-rural-employment-revolution

https://thewire.in/rights/rollback-of-a-hard-won-right-the-political-economy-of-dismantling-mgnrega

https://thewire.in/labour/mgnrega-vb-g-ram-g-bill-parliament-history-rights-based-approach

https://swarajyamag.com/politics/the-logic-of-vb-g-ram-g-why-government-replaced-mgnrega-instead-of-reforming-it

https://indianexpress.com/article/explained/explained-economics/how-new-vb-g-ram-g-act-affects-states-finances-10437630/

https://indianexpress.com/article/opinion/columns/mgnrega-vb-g-ram-g-rural-employment-viksit-bharat-10424877/

https://indianexpress.com/article/opinion/columns/from-mgnrega-to-ram-g-how-the-government-kills-a-right-10422099/?ref=opinion_hp

https://scroll.in/article/1089326/a-bill-to-destroy-mnrega-why-experts-fear-the-worst-from-new-job-guarantee-bill

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன