“[முதலாளித்துவ] தாராளவாதிகள் கூடப் பொறுமையிழந்து சட்டப் பூர்வ பத்திரிக்கைகளில் தமது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தி வருகின்றனர்; எனினும், புதிய-இஸ்க்ரா வகைப்பட்ட சமூக-ஜனநாயகவாதிகளோ [மென்ஷ்விக்குகளோ] தாராளாவாதிகளைவிட எளிதில் எதையும் நம்பிவிடும் ஏமாளிகள் (credulous) என்பதை நிரூபித்துவருகின்றனர்” – லெனின்
குறிப்பு: 2020-இல் மார்க்சியத்தைத் துறந்தோடி, அதன் விளைவாக எமது அமைப்பில் இருந்தும் ஓடிப் போய் இன்று தி.மு.க.வின் பாதந்தாங்கிகளாகச் சீரழிந்துள்ள கோவன், காளியப்பன் தலைமையில் இயங்கிவரும் கும்பலையே கலைப்புவாதக் கும்பல் என இக்கட்டுரை குறிப்பிடுகிறது. ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு., மக்கள் அதிகாரம்., புதிய ஜனநாயகம் ஆகிய எமது அமைப்புகளின் பெயரைக் கேடாகப் பயன்படுத்திக் கொண்டு, தி.மு.க.விற்கு பாதந்தாங்கும் அதேவேளையில் புரட்சியாளர்கள்போல இக்கும்பல் நடித்து வருகிறது.
*****
ஆளும் வர்க்கக் கட்சிகளின் பாதங்களில் சரணாகதி அடைந்து, வெட்கமின்றிப் புரட்சியாளர்கள்போல வேடமிட்டுத் திரியும் கலைப்புவாதக் கும்பலொன்று “செங்கனலின்” மீது அவதூறுகளை அள்ளி வீசி வருகிறது. இன்றைய காவி-கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பு சூழலில் அரசியல் சாசன மாயையைகளைத் தகர்த்தெறிய வேண்டிய தேவை, தேர்தல் புறக்கணிப்பு, மக்கள் எழுச்சியின் தேவை ஆகியவை குறித்த நமது கருத்துகள் அவர்களிடையே ஆத்திரத்தைக் கிளறிவிட்டுள்ளதே இதற்கான அடிப்படையாகும். செங்கனல் முன்வைக்கும் எந்தவிதமான வாதங்களுக்கும் மறுப்புகளோ பதில்களோ கூறாமால், “மார்க்சிய புரோகிதர்கள்” “சித்தாந்தப் புலிகள்” “தமிழகத்தில் புரட்சிகர அந்தஸ்து கோருபவர்கள்” என வசைபாடுவதன் மூலம் மட்டுமே நம்மை அம்பலப்படுத்திவிட்டதாக அக்கும்பல் அகமகிழ்ந்து கொள்கிறது.
அக்கும்பலின் பிதற்றல்கள், உளறல்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
“பரகல பிரபாகர் சமீபத்தில் சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில், “பீகார் தேர்தலை புறக்கணிக்க வேண்டும். அது மட்டுமல்ல. நாடு முழுவதும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.” என்று பல்வேறு புள்ளி விவரங்களை எடுத்துச் சொல்லி உரை நிகழ்த்தினார்.
“உடனே மனக்கிளர்ச்சி அடைந்த சிலர் அவரே தேர்தலை புறக்கணிக்க சொல்லிவிட்டார். எனவே தேர்தல் புறக்கணிப்பு அரசியல் தான் தற்போதைய தேவை என்று எகிறி குதிக்க துவங்கி விட்டனர்….
“பரகல பிரபாகர் முன்வைக்கின்ற தேர்தல் புறக்கணிப்பும், இவர்கள் சொல்லிக் கொள்கின்ற தேர்தல் புறக்கணிப்பும் ஒன்றா என்பதை பற்றிய எந்த வகையான அடிப்படை அரசியல் ஞானமும் இல்லாத அரைவேக்காடுகள், தேர்தல் புறக்கணிப்பு என்றவுடன் மனக் கிளர்ச்சி அடைந்து அவரது உரையை முன்வைத்து கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி அணிகளை திக்கு முக்காட வைக்கின்றனர்.” (செப் 12, 2025, அழுத்தம் எமது)
அதாவது, மா-லெ ரீதியில் தேர்தல் பங்கேற்பு / புறக்கணிப்பை எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றி எவ்விதப் புரிதலுமின்றி பரகலா போன்ற ஆளும் வர்க்க அறிவு ஜீவிகள் கூறியதும் “மனக்கிளர்ச்சி அடைந்து” “துள்ளிக் குதித்து” செங்கனல் தேர்தல் புறக்கணிப்பைப் பேசுகிறதாம். முழுப் பூசணியை சோற்றில் மறைக்கும் இந்த அண்டப் புளுகு, ஆகசப் புளுகை என்னவென்று சொல்ல! கடந்த பிப்ரவரி 2024-இலேயே (அதாவது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே) தேர்தல் பங்கேற்பு / புறக்கணிப்பை மா-லெ கண்ணோட்டத்தில் போர்த்தந்திர ரீதியிலும், செயல் தந்திர ரீதியிலும் எவ்வாறு கையாள்வது என்ற இரண்டு நீண்ட கட்டுரைகளை நாம் வெளியிட்டோம். இன்றைய பாசிச எதிர்ப்பு பருண்மையான செயல்தந்திர நிலைமைகள் ஏன் தேர்தல் புறக்கணிப்பைக் கோருகிறது என்பதையும் அவற்றில் மா-லெ அடிப்படையில் மிகவிரிவாக விளக்கியிருந்தோம். அவ்வடிப்படையில், கலைப்புவாதக் கும்பல் அப்போது முன்வைத்த வாதங்கள் எந்தளவு நகைப்புக்குரியவை, மா-லெ விரோதமானவை, அவர்களின் ஆளும் வர்க்கச் சரணடைவை மூடி மறைப்பதற்கானவை என்பதையும் விரிவாக அம்பலப்படுத்தியிருந்தோம்.
இவைபற்றியெல்லாம் இப்போதுவரை வாய்திறக்காத இக்கும்பல், “பரகலா கூறியதும் மனக்கிளர்ச்சி அடைந்து புறக்கணிப்பைப் பற்றி பேசுவதாக”வும் நம்மை “அரசியல் ஞானம் இல்லாத அரைவேக்காடுகள்” என்றும் கூச்சமேயின்றி செங்கனல் மீது அவதூறு செய்கிறது!
பரகலா போன்ற ஆளும் வர்க்க பிரதிநிதிகள் முன்வைக்கும் தேர்தல் புறக்கணிப்பும், செங்கனல் முன்வைக்கும் தேர்தல் புறக்கணிப்பும் தன்மையிலேயே வேறுபட்டவை. அவர்கள் நிலவும் நாடாளுமன்ற, தேர்தல் அமைப்பை மீட்டெடுப்பதற்காகவே, அதாவது வரலாற்றுச் சக்கரத்தை 2014-க்கு முன் சுழற்றுவதற்காகவே புறக்கணிப்பை முன்மொழிகின்றனர். இதற்காக மட்டுமே நாடு தழுவிய ஒரு கலகம், எழுச்சி வேண்டுமென்று வாதிடுகின்றனர். ஆனால், செங்கனலோ, வரலாற்றுச் சக்கரத்தை முன்னோக்கிச் சுழற்றுவதற்காக தேர்தல் புறக்கணிப்பை முன்வைக்கிறது. பாசிச எதிர்ப்புக்கு அடிப்படையாக இருக்க கூடிய பாட்டாளி வர்க்க முன்னணியைக் கட்டியமைப்பதற்கு, இன்றைய வர்க்கப் போராட்ட நிலைமைகளானது தேர்தல் புறக்கணிப்பைக் கோருகிறது என்கிற செயல்தந்திர பகுப்பாய்விலிருந்து செங்கனல் முடிவெடுத்து அமல்படுத்தி வருகிறது. அதற்காக, பாசிச அபாயத்தை உணர்த்தியும், பாசிச சக்திகளின் பலம், ஆயுதங்களை விளக்கி, அதனை முறியடிப்பதற்கான நிச்சயகரமானப் பாதையை (உள்நாட்டுப் போருக்கான தேவையை) விளக்கியும் புறக்கணிப்பை செய்கிறோம். இத்தகைய உள்நாட்டுப் போருக்கு மக்கள் திரள வேண்டுமெனில் நிலவுகின்ற அரசமைப்பு நிறுவனங்களின் மீதான மாயைகள் தகர்க்கப்பட வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும்.
ஆளும் வர்க்க அறிவு ஜீவிகள் தரும் விவரங்கள், வாதங்கள் நமது இந்தக் கடமைக்கு ஆதரவான வகையில், துணை செய்யும் வகையில் இருந்தால் ஒரு ஊக்கமுள்ள கம்யூனிஸ்டு பிரச்சாரகன் அவற்றை ஆக்கப்பூர்வமாக, விமர்சனப்பூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா?! அல்லது அவர்களெல்லாம் “ஆளும் வர்க்க அறிவு ஜீவிகள்” என்று உதாசீனப் பார்வையை வீசிவிட்டு அந்த விவரங்கள், வாதங்கள் மீது பாரமுகமாக இருக்க வேண்டுமா?! ஆளும் வர்க்க அறிவு ஜீவிகள் முன்வைக்கும் வாதங்கள் பாட்டாளி வர்க்கப் பிரச்சாரத்திற்கு ஆதரவான கூறுகளைக் (if they contained elements that are useful to proletarian propaganda) கொண்டிருந்தால் அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதுதான் ஊக்கமுள்ள கம்யூனிஸ்டு பிரச்சாரகன் செய்ய வேண்டிய பணி என்பது சொல்லமலே விளங்கும்!
நல்லது! “அரசியல் ஞானமுள்ள” இக்கும்பல் என்ன முன்வைக்கிறது?!
தேர்தல் புறக்கணிப்பு என்பது மூன்றுவகைப்படுமாம்!
“ஒன்று, நிலவுகின்ற பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையானது பெரும்பான்மை மக்கள் வாழ்க்கை பிரச்சனைகளை தீர்க்க லாயக்கற்றது. பாராளுமன்ற, சட்டமன்ற அமைப்பு முறைகள் மக்களை வாழ வைக்காது. எனவே பாராளுமன்றத்திற்கு வெளியில் தீர்வை தேட வேண்டும். ஒரு புரட்சியின் மூலம் சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டுமே தவிர பாராளுமன்றத்தின் மூலம் பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்று முன்வைக்கின்ற மார்க்சிய லெனினிய அமைப்புகளின் வழிமுறை.
“இரண்டாவதாக, தேர்தலில் நாங்கள் ஓட்டு போடுகிறோம். ஆனால் எங்களது அடிப்படை பிரச்சனைகள் கிராமமாக இருந்தாலும் சரி! நகரமாக இருந்தாலும் சரி! சாலை வசதியிலிருந்து மருத்துவமனை, கல்வி வசதி மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் போன்றவற்றை அரசு செய்து தரவில்லை.
“ஊரில் உள்ள ஏரி, குளங்கள் தூர்வாரப்படவில்லை. வாய்க்கால்கள் புதர்மண்டி போய் உள்ளது. இவை காரணமாக நாங்கள் தேர்தலில் ஓட்டு போடவில்லை. தேர்தலை புறக்கணிக்கின்றோம் என்று பொருளாதார கோரிக்கைகளை முன்வைத்து தேர்தலை புறக்கணிக்கின்ற வகை.
“மூன்றாவதாக, ஒவ்வொரு தேர்தலிலும் சுமார் 70% வாக்குப்பதிவு நடப்பதும், மீதமுள்ள 30 சதவீதத்தினர் வாக்கு பதிவுக்கு செல்லாமல், ஓட்டு போடாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் தேர்தலை புறக்கணிக்கின்றனர். இவ்வாறு குறிப்பிட்ட சதவீதம் ஓட்டு போடாமல் புறக்கணிக்கின்ற முதல் வகையினரான மக்களின் ரத்தத்தை அட்டையாக உறிஞ்சுகின்ற முதலாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வரிசையில் நின்று ஓட்டு போடுவதில்லை. (மேற்படி, அழுத்தம் எமது)
இவற்றில் முதலாவது வகை மா-லெ அமைப்புகள் பின்பற்றுகிற, பின்பற்ற வேண்டிய வழிமுறையாம்! நிலவும் நாடாளுமன்றத்துக்கு வெளியில்தான் தீர்வைத் தேட வேண்டும் என்பது எல்லா நாடுகளுக்கும் பொதுவான மா-லெ (universal fact) உண்மைதானே! அவ்வாறெனில், எல்லா நாடுகளிலும் உள்ள மா-லெ கட்சிகளும் எல்லா நேரங்களிலும் நாடாளுமன்றப் புறக்கணிப்பைத்தானே மேற்கொள்ள வேண்டும்! எனில், இவர்கள் வாதப்படி பங்கேற்பு / புறக்கணிப்பு என்ற கேள்விக்கே இடமில்லையே! செங்கனலை “அரசியல் ஞானமற்ற அரைவேக்காடுகள்” என்று வசைபாடிவிட்டு, எவ்வளவு “அரசியல் ஞானத்தோடு” இக்கும்பல் தேர்தல் புறக்கணிப்பை அணுகுகிறது பார்த்தீர்களா?! இதில் எங்காவது மார்க்சிய-லெனினியம் இருக்கிறதா?! ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாடுகளின் தனிச்சிறப்பான நிலைமைகளுக்கேற்ப போர்த்தந்திர ரீதியாகவும், செயல்தந்திர ரீதியாகவும் தேர்தல் பங்கேற்பு / புறக்கணிப்பைக் கையாள வேண்டும் என்று மார்க்சிய–லெனினியம் போதிக்கிறது! இது மார்க்சியத்தின் பாலபாடமாகும்! ஆனால், செங்கனலுக்கு எதிராகக் கூர்மையாகச் சமர்புரிவதாகக் காட்டிக்கொள்ளும் நமது கலைப்புவாத “அரசியல் ஞானிகள்” எழுதிய கட்டுரையில் போர்த்தந்திரம், செயல்தந்திரம் என்ற வார்த்தை கூட இடம்பெறவில்லை!
“அதே சமயத்தில் பரகல பிரபாகர் முன்வைக்கின்ற மற்றொரு அம்சம் கவனிக்கத்தக்கது. இந்தியாவில் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக வழிமுறையிலான தேர்தல்கள் இனிமேல் நடக்காது என்பதும், போலி ஜனநாயக வடிவங்கள் அனைத்தும் காலாவதி ஆகிவிட்டது என்பதையும் அவர் முன் வைத்துள்ளார்.
“உண்மைதான்! இந்தியாவில் உள்ள போலி ஜனநாயக அரசு கட்டமைப்பு காலாவதியாகி பாராளுமன்றம், சட்டமன்றம் உள்ளிட்ட அனைத்து ஆட்சி வடிவங்களும் பாசிச எதிர்ப்பு மற்றும் பாசிச ஆதரவு என்ற உள்ளடக்கம் கொண்ட புதிய தன்மையில் மாறியுள்ளது என்று புதிய ஜனநாயகம் முன்வைக்கின்றது.”
“இதனால்தான் பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக பரப்புரைகள் செய்ய வாய்ப்பு கிடைக்கின்றது. அவை நாடு முழுவதும் பிரச்சாரமாகவும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த சூழல் 1970களில் இல்லை. (அழுத்தம் எமது)
“இந்தியாவில் உள்ள போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பு காலாவதியாகிவிட்ட”தாம்! இவ்வாறு கூறினால் இதன் பொருள் என்ன? இந்திய அரசமைப்பு ஏற்கனவே பாசிச அரசாக மாற்றப்பட்டுவிட்டது என்பதுதானே! அதாவது, ஜனநாயக மாய்மாலங்கள் கொண்ட முதலாளித்துவ ஆட்சி வடிவம் ஒழிக்கப்பட்டு, அதனிடத்தில் பாசிச சர்வாதிகாரம் ஏற்கனவே நிலைநாட்டப்பட்டுவிட்டது என்பதுதானே! நாடாளுமன்றம் உள்ளிட்ட அனைத்து அரசு உறுப்புகளையும் பாசிசம் மிச்சம் மீதியின்றிக் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது என்பதுதானே! ஆக, இவர்கள் வாதப்படி, போலி ஜனநாயக நிறுவனங்கள் அனைத்தும் காலாவதியாகிவிட்டதென்றால், அதாவது பாசிச சர்வாதிகாரம் ஏற்கனவே நிறுவப்பட்டுவிட்டதென்றால், நிலவும் நாடாளுமன்றம் மட்டும் எப்படி பாசிச எதிர்ப்புத் தன்மை, உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும்!! எனவே, பாசிஸ்டுகளால் ஏற்கனவே கைப்பற்றப்பட்டுவிட்ட நாடாளுமன்றத்தில் “பாசிச எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கான வாய்ப்பு” எப்படி இருக்கும்!!
இந்த அபத்தமான வாதத்தை ‘நிரூபிக்க’, பரகலாவையும் இக்கும்பல் துணைக்கு அழைக்கிறது. பரகலாவும் இந்தியாவில் உள்ள “போலி ஜனநாயக வடிவங்கள் அனைத்தும் காலாவதியாகிவிட்டது” என்று முன்வைத்துள்ளாராம்! எங்கே, எப்போது அவர் அவ்வாறு கூறியுள்ளார்?! உண்மையில் நிலவும் இந்தியக் குடியரசு ஒரு “பெரும்பான்மைவாத, மதவாத எதேச்சதிகார அரசாக மாற்றப்பட்டு வருகிறது” “நாம் இதைத் தடுத்து நிறுத்தவில்லை என்றால் எதேச்சதிகார அரசுக்குள் நுழைந்துவிடுவோம்” என்றுதான் பரகலா வாதிடுகிறார். மாறாக, நாம் ஏற்கனவே ஒரு எதேச்சதிகார அரசுக்குள்தான் (பாசிச அரசுக்குள்தான்) இருக்கிறோம் என்று அவர் எங்கும் எப்போதும் வாதிடவில்லை! பொதுவாக, சந்தப்பவாதிகள் மார்க்சிய-லெனினியத்தைத்தான் திரிப்பார்கள்; ஆனால், இவர்களோ ஒருபடி மேலே சென்று ஆளும் வர்க்க அறிவுஜீவிகளின் கருத்துகளையும் திரித்து தங்களது வாதத்தை ‘வலுப்படுத்த’ முயற்சிக்கின்றனர்.
இந்தியாவில் உள்ள சட்டமன்றமும் நாடாளுமன்றமும் போலி ஜனநாயகம் என்ற உள்ளடக்கத்திலிருந்து மாறி பாசிச எதிர்ப்பு என்ற புதிய தன்மையில் உள்ளடக்கம் பெற்றுள்ளதாம்! எனவே, இதனால் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராகப் பரப்புரை செய்ய வாய்ப்புகள் கிடைக்கின்றதாம்! இந்த சூழ்நிலை 1970-களில் இல்லையாம்! எனவே தேர்தல் பங்கேற்பை மேற்கொள்ள வேண்டுமாம்! என்னே இவர்களின் கற்பனை! எதிர்க் கட்சிகளை எம்.பி.களைக் கொத்தாக நீக்கிவிட்டு குரல் வாக்கெடுப்பில் மசோதாக்களை மோடி கும்பல் நிறைவேற்றிவரும் வேளையில், எதிர்க் கட்சிகள் பேசுவதற்குக் கூட வாய்ப்புத் தரப்படுவதில்லை, மைக் ஆஃப் செய்யப்படுகிறது என அக்கட்சிகளே வெளிப்படையாகப் புலம்பிவரும் வேளையில், சுருங்கக் கூறினால் ஓட்டுத் திருட்டு, எஸ்.ஐ.ஆர். என நாடாளுமன்ற ஜனாநாயகம், தேர்தல் ஜனநாயகமே புதைகுழிக்குச் சென்று வரும் வேளையில், இவைபற்றியெல்லாம் ஆளும் வர்க்க அறிவு ஜீவிகளே தங்களது அதிருப்தியையும் நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்தி வரும் வேளையில், தன்னை மார்க்சிய-லெனினியவாதி என்று அழைத்துக் கொள்ளும் பு.ஜ (மா-லெ) “நாடாளுமன்றத்தில் பாசிச எதிர்ப்புப் பரப்புரை செய்ய வாய்ப்பு கிடைப்பதாக” கற்பனை செய்கிறது! இந்தக் கேலிக்கூத்தை என்னவென்று சொல்ல!
இதேவகையில் அரசு நிறுவனங்களின் மீது கோமாளித்தனமான, ஏமாளித்தனமான நம்பிக்கையை வெளிப்படுத்திய மென்ஷ்விக்குகளை பின்வருமாறு லெனின் இடித்துரைக்கிறார்:
[முதலாளித்துவ] தாராளவாதிகள் கூடப் பொறுமையிழந்து சட்டப் பூர்வ பத்திரிக்கைகளில் தமது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தி வருகின்றனர்; எனினும், புதிய-இஸ்க்ரா வகைப்பட்ட சமூக-ஜனநாயகவாதிகளோ [மென்ஷ்விக்குகளோ] தாராளாவாதிகளைவிட எளிதில் எதையும் நம்பிவிடும் ஏமாளிகள் (credulous) என்பதை நிரூபித்துவருகின்றனர்” – (லெனின், 1905, லெ.தொ.நூ. 9, பக்.62)
ஓட்டுத் திருட்டு, எஸ்.ஐ.ஆர். என அடுத்தடுத்து தன் ஆயுதங்களை ஏவி தேர்தல் அமைப்பையே பா.ஜ.க. கும்பல் கேலிக்குள்ளாக்கிய பிறகும் கூட, எதிர்க் கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்கக் கூடாது, அது பா.ஜ.க.வுக்கு சாதகமாகப் போய்விடும் என்று இக்கும்பல் எழுதியுள்ளது.
“தேர்தல் ஆணையத்தின் மோசடிகளைத் தடுப்பது எப்படி” என்ற படோடபமான தலைப்பிட்டு ஆக 12, 2024 வெளியிட்டதொரு கட்டுரையில், இந்தியா முழுக்க கணினி மூலம் சரிபார்க்கத்தக்க டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்; வாக்குப் பதிவு சி.சி.டி.வி காட்சிகளை கட்சிகளும் பொதுமக்களும் பதிவிறக்கம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும்; மின்னணு வாக்குப் பதிவை நீக்கிவிட்டு அதனிடத்தில் காகித வாக்குப் பதிவைக் (paper ballot) கொண்டு வர வேண்டும்; வாக்குப் பெட்டிகள் அடுக்கி வைத்திருக்கும் இடங்களில் வேட்பாளர்கள் சொந்த செலவுகளில் சி.சி.டி.வி வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் – என பல்வேறு தேர்தல் சீர்திருத்தங்கள் தேவை என இக்கும்பல் முன்மொழிந்த பிறகு, பின்வருமாறு எழுதுகிறது:
“இவைகள் நிறைவேற்றப்படாமல் நடத்தப்படும் தேர்தல்களில் பங்கேற்பது என்பது புதைகுழி என்று தெரிந்தும் தானே போய் விழுந்து புதைந்து போவதற்கு சமம் என்பதை எதிர்க்கட்சிகளும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் உணர வேண்டும்.” (ஆக 12, 2025 இக்கும்பல் வெளியிட்ட கட்டுரை, அழுத்தம் எமது)
நல்லது! இக்கும்பல் முன்மொழியும் தேர்தல் சீர்திருத்தங்களை நிறைவேற்றாமல் நடத்தப்படும் தேர்தலில் பங்கேற்பது “தெரிந்தே புதைக் குழியில் விழுவதற்குச் சமமானதாகுமாம்”! சரி, அவ்வாறெனில் இவை நிறைவேற்றப்படும் வரையாவது தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்பதுதானே இந்த வாதத்தின் தர்க்க ரீதியான முடிவாக இருக்க முடியும்? ஆனால், பாமர மக்களும் வந்தடையும் இந்த எளிமையான தர்க்கத்துக்கூட, கலைப்புவாதிகள் வரவில்லை. அந்நிலையில்கூட தேர்தலைப் புறக்கணிக்க கூடாதாம்! அது பா.ஜ.க.வுக்குச் சாதகமாகப் போய்விடுமாம்!!
“எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பது தீர்வாகுமா?
“அதேசமயம் தேர்தல்களின் தில்லுமுல்லுகள் நடக்கின்றன; அந்தத் தில்லுமுல்லுகள் தடுத்து நிறுத்தப்படும் வரை தேர்தலில் பங்கேற்கப் போவதில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறினால் அதை பாஜக தனக்கு சாதகமாக்கி கொள்ளும்.
“அதாவது இப்படி தேர்தல் புறக்கணிப்பு செய்தால் இந்தியத் தேர்தல்கள் நேர்மையாக நடப்பதாகவும் அதனால் எதிர்க்கட்சிகளால் வெல்ல முடியாது போய்விடுகின்றன என்றும் எனவே, இதற்கு பயந்து போய் எதிர்க்கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடாமல் தவிர்த்து விடுகின்றன என்றும் பாஜக பொய் பிரச்சாரங்கள் செய்து மக்களை ஏமாற்றுவதற்கான வாய்ப்புகளே அதிகம் என்பதை அனைவரும் உணர வேண்டும்!” (மேற்படி, அழுத்தம் எமது)
நமது கலைப்புவாதிகளின் அப்பட்டமான சுயமுரண்பாட்டை இங்கே கவனிக்க வேண்டும். இவர்கள் கூறும் தேர்தல் சீர்த்திருத்தங்களை நிறைவேற்றப்படாமல் நடத்தப்படும் தேர்தல்களில் பங்கேற்பது என்பது “தெரிந்தே புதைகுழிக்குள் விழுவதற்குள் சமம்” என்று ஒரு பாராவில் எழுதுகிறார்கள். அதற்கு அடுத்த பாராவிலே, அப்படிப்பட்ட தேர்தல்களைக் கூட புறக்கணிக்க கூடாது என்று எதிர்க் கட்சிகளுக்கு அறிவுறுத்துகிறார்கள். அதாவது, “தெரிந்தே புதைகுழிக்குள்” இறங்குங்கள் என்று ஆலோசனை கூறுகிறார்கள்! நமது கலைப்புவாதிகளின் “அரசியல் ஞானத்தைக்” கண்டு வியக்காமல் இருக்க முடியுமா என்ன!!
இங்கு நாம் ஒரு விடயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது நடப்பது சாதாரண தேர்தல் தில்லுமுல்லுகள் அல்ல; எல்லா காலங்களிலும் ஆளும் கட்சிகள் செய்யும் தேர்தல் தில்லுமுல்லுகள் அல்ல; மாறாக, தேர்தல் ஆணையமே பாசிச கும்பலின் அடியாளாக மாறி, பாசிச கும்பலுக்கு சேவையும் வகையில் வெளிப்படும் தேர்தல் தில்லுமுல்லுகள் ஆகும். சுருங்க கூறினால், நமது நாட்டின் தேர்தல் நடைமுறையானது பாசிசமயமாகிவிட்டது என்பதாகும். இதனை நமது கலைப்புவாதிகள் உணர்ந்தே உள்ளனர். இருந்தபோதிலும், பாசிசமயமாகிவிட்ட தேர்தல்களில் பங்கேற்க வேண்டும் என்கின்றனர்.
பாசிசமயமான தேர்தல் ஆணையத்தை பாசிச-நீக்கம் செய்வதுதான் நமது நோக்கம் என்று சுருக்கிக் கொண்டால் கூட, தேர்தல் ஆணையமே பாசிசமயமாகிவிட்டது என்பதையும், அதன்மூலம் நடத்தப்படும் தேர்தல்களின் மோசடித்தனங்களைப் பருண்மையாக அம்பலப்படுத்தியும் தேர்தல் புறக்கணிப்பு செய்ய மக்களை அறைகூவியழைப்பதை வீச்சாக கொண்டு செல்வது தேர்தல் ஆணையத்தை பாசிச நீக்கம் செய்வதை நோக்கி மக்களை அணிதிரட்டுமா? அல்லது நமது கலைப்புவாதிகள் வாதிடுவதைப் போல, பாசிசமயமான தேர்தல் ஆணையத்தையும் அது நடத்தும் தேர்தல் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்திக் கொண்டே, அது நடத்தும் தேர்தல்களில் பா.ஜ.க-வுக்கு எதிராக ஓட்டுப் போட சொல்வது பாசிச-நீக்கம் செய்ய மக்களை அணிதிட்டுமா? இவற்றில் எது அதிக பயன்தரத்தக்கது, மார்க்சிய-லெனினியவாதிகள் பின்பற்ற தக்கது என்பதை வாசகர்களின் பரிசீலனைக்கே விட்டுவிடுகிறோம்.
மீண்டும் விஷயத்துக்கு வருவோம். இப்படிப்பட்ட தேர்தல்களைப் புறக்கணிப்பது கூட பா.ஜ.க.வுக்குச் சாதகமாகப் போகும் என்பது உண்மையா? ஓட்டுத் திருட்டு, எஸ்.ஐ.ஆர். என இத்தனைக்கும் பிறகும் மோசடியான இத்தேர்தல் நடைமுறையில் பங்கேற்பது, தேர்தல் நடைமுறையை மட்டுமின்றி, அமையவிருக்கும் ஆட்சியையும் நியாயப்படுத்துவதாகிவிடும் (legitimize) என்று ஆளும் வர்க்க அறிவு ஜீவிகளே வாதிட்டு வருகின்றனர். எனவே, பங்கேற்பை விட புறக்கணிப்பே எதிர்க் கட்சிகளுக்கு சாதகமானது என்று வாதிட்டு வருகின்றனர். இவர்கள் மார்க்சிய-லெனினியவாதிகள் அல்லர்; ஆளும் வர்க்க அறிவு ஜீவிகளே! எனினும், இவர்கள் முன்வைக்கும் வாதங்களில் உள்ள தர்க்க நியாயத்தின் மீது இக்கும்பல் எவ்விதக் கருத்தையும் கூறவில்லை. அவர்கள் முன்வைக்கும் வாதங்களுக்குள்கூட செல்லாமல், ஒரேயடியாக கண்ணை இறுக மூடிக்கொண்டு “தேர்தல் பங்கேற்புதான்” எதிர்க் கட்சிகளுக்கும் பாசிச எதிர்ப்புக்கும் சாதகமானது என்று வாதிடுகிறது!!
ஆக, வேறென்ன நாம் செய்ய வேண்டும்?!
“மக்கள் கிளர்ச்சியே ஒரே வழி!
“எனவே இப்பொழுது முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கு, எதிர்க்கட்சிகளுக்கு ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது.
“அடுத்த தேர்தல் அறிவிப்பு வருவதற்குள் நாம் மேலே குறிப்பிட்டுள்ளபடி தேர்தல் நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை கட்டாயம் செய்தே ஆக வேண்டும். இதை தேர்தல் ஆணையம் தானாக செய்யப் போவதில்லை.
“இந்தியா முழுமைக்கும் மக்கள் எழுச்சியை ஏற்படுத்துவதன் மூலமாக, அதாவது, தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், வருட கணக்கில் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்திய வீரம் செறிந்த போராட்டம் போன்ற போராட்டத்தை இந்தியா முழுமைக்கும் தொடர்ந்து நடத்துவதன் மூலமாக தேர்தல் ஆணையத்தையும் பாசிச பாஜகவையும் அடிபணிய வைத்து தேர்தல் நடைமுறைகளில் நாம் கூறும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
எனவே, மேற்கூறிய கோரிக்கைகளை நிறைவேற்றும்படி தேர்தல் ஆணையத்தை “அடிபணியவைப்பதற்காக” நாம் மக்களைத் திரட்டி ஜல்லிக்கட்டு போல, டெல்லி விவசாயிகள் போராட்டம் போல ஒன்றை நடத்த வேண்டுமாம்! நன்றாக கவனியுங்கள்! தேர்தல் நடைமுறையே முற்றாக மோசடித்தன்மையானதாக மாறியுள்ளதை மக்களிடையே அம்பலப்படுத்தி, அதன் மீதான மீதமுள்ள நம்பிக்கையையும் தகர்த்து பாசிசத்தைத் தேர்தல் வரம்புகளுக்கு வெளியேதான் முறியடிக்க முடியும் / முறியடிக்க வேண்டும் என்று மக்களிடம் புரியவைக்க வேண்டும்; அவர்களை ஒரு ஆயுதந்ததாங்கிய உள்நாட்டுப் போருக்குத் தயாரிப்பதற்கு இந்தச் சூழலைப் பயன்படுத்த வேண்டும் – என்று வாதிடும் செங்கனல் “அரசியல் ஞானமற்ற”வர்களாம்! ஆனால், “தேர்தல் ஆணையத்தை அடிபணிய வைப்பதற்காக” மட்டுமே இந்த அரசியல் சூழலைப் பயன்படுத்த வேண்டுமென்கிற, அக்கோரிக்கையோடு நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமென்கிற இவர்கள் “அரசியல் ஞானம் கொண்ட”வர்களாம்!! பாசிச எதிர்ப்பை முன்னெடுத்துச் செல்ல என்னே ஒரு அறிவொளிமிக்க, ஆழமானதொரு தலைமை, வழிகாட்டல் பார்த்தீர்களா?! பாசிச எதிர்ப்பை ஆளும் வர்க்க வரம்புகளுக்குள் சிந்திப்பது இவர்களின் கண்களை எந்தளவு குருடாக்கியுள்ளதென்பதைக் கவனித்தீர்களா?!
“களத்திற்கு வரும் ஆர்எஸ்எஸ் குண்டர் படை!
“இப்படிப்பட்ட மாற்றங்கள் வந்த பிறகு நடத்தப்படும் தேர்தல்களில் பாஜக மாபெரும் தோல்வியடையும் என்பது உறுதி. இதன் மூலமாகத்தான் பாசிச பாஜகவை தேர்தலில் வீழ்த்திட முடியும். அப்படி தேர்தலில் வீழ்த்தினாலும் கூட அவர்களை ஒன்றிய அரசு அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவது என்பது அவ்வளவு சுலபமானதாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.
“ஆர்எஸ்எஸ் – பாஜக விடம் உள்ள பயிற்சி பெற்ற குண்டர் படையை வைத்து அராஜகங்களை கட்டவிழ்த்து விடுவதன் மூலமாக பாசிச பாஜக பதவியில் நீடித்திடவே முயற்சிக்கும். இந்தப் பயிற்சி பெற்ற குண்டர் படையையும் எதிர்த்து மக்கள் படை முறியடிக்கும் பொழுதுதான் பாஜகவை ஒன்றிய அரசு பதவியில் இருந்து அகற்ற முடியும் என்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும்.
“மீதமிருக்கும் ஜனநாயகத்தின் எச்சங்களை காக்கும் போராட்டத்தில் முற்போக்கு, ஜனநாயக சக்திகள் அனைவரும் ஓர் அணியில் திரண்டு ஐக்கியப்பட்டு மக்களிடையே பிரச்சாரம் செய்து மக்களுக்கு பாசிசத்தை பற்றி விழிப்புணர்வு ஊடுவதே இதற்கு உள்ள ஒரே வழி.
அதாவது, இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு பின்னர் தேர்தல் நடத்தப்பட்டால் பா.ஜ.க. நிச்சயம் தோல்வியுறுமாம்! அப்போது பாசிச பா.ஜ.க. தன் தோல்வியை ஒப்புக் கொண்டு கீழிறங்காமல், தனது பாசிசப் படையைக் கொண்டு கலவரத்தில் ஈடுபடுமாம்! அப்போது நாம் “மக்கள் படையை”க் கொண்டு பாசிசக் கும்பலின் முயற்சியை முறியடிக்க வேண்டுமாம்!!
உண்மையில் “மக்கள் படை” என்ற வார்த்தைக்கும் மேற்கூறிய இவர்களின் நகைக்கத்தக்க கருத்துகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?! கணவான்களே, ஒரு மக்கள் படைக்கான தேவையைப் பிரச்சாரம் கூடச் செய்யாமல், அத்தகையதொரு படையை எங்கிருந்து கட்டுவீர்கள்?! கற்பனையில் இருந்தா?! “தேர்தல் ஆணையத்தை அடிபணியச் செய்வதற்காக” மட்டுமே மக்களைத் திரட்டும் உங்கள் வழிகாட்டல், எப்படி “பாசிசப் படையை” எதிர்த்த “மக்கள் படையை” கட்டியமைக்கும்!! ஆக, இக்கலைப்புவாதக் கும்பலின் மேற்கூறிய வார்த்தைகள் எல்லாம் பொருளற்ற குழந்தைத்தனமான உளறல்களே, புரட்சிகர வாய்ஜாலமே அன்றி வேறில்லை என்பது சொல்லாமலே விளங்கும்!!
நிற்க. பாசிச பா.ஜ.க. கும்பல் ஒருவேளை தேர்தலில் தோற்கடிக்கப்பட்டாலும் அது அதிகாரத்தில் இருந்து இறங்காது, கலவரத்தில் ஈடுபடும் என்றும் “மூச்சுவிடுவதற்கான அவகாசம்” கிடைக்கும் என்பதெல்லாம் கற்பனை கதைகள்தாம் என்றும் செங்கனல் கடந்த இரண்டு ஆண்டுகளாக திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறது. அப்போதெல்லாம் நம்மை இவர்கள் “மார்க்சிய புரோகிதர்கள்” என்றும் நாம் “ஆருடம்” கூறுவதாகவும் ஏளனம் செய்தார்கள். வசைபாடினார்கள்.
கடந்த மே 11, 2024 அன்று “தேர்தலுக்கு பிறகு பாஜக கலவரத்தில் இறங்கும்” மார்க்சிய புரோகிதர்களின் ஆரூடம்!” என்று தலைப்பிட்டு ஒரு நீண்ட கட்டுரையே எழுதினர்.
அதில்:
பாசிச பாஜகவிற்கு எதிராக நாடு தழுவிய அளவில் மிக பெரும் மாற்றம் ஒன்று உருவாகி விடாது என்ற கண்ணோட்டத்திலிருந்து பேசிக் கொண்டிருந்த போலி புரட்சியாளர்கள் மற்றும் சித்தாந்த ஓட்டாண்டிகள், மார்க்சிய புரோகிதர்கள் முன் வைத்ததை சமீபத்தில் சில நாட்களாக நாடு முழுவதும் உருவாகியுள்ள பாசிச மோடி எதிர்ப்பு அலை பொய்ப்பித்துக் கொண்டுள்ளது.
பாசிச பாஜக தேர்தலில் தோல்வியடைவதை கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத மேற்கண்ட ‘சித்தாந்த புலிகள்’ சமீபத்தில் நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் மோடி எதிர்ப்பலையை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் அல்லது தாங்கள் முன்வைத்த ஆரூடங்கள், ஜோசியங்கள் பலிக்காமல் போய்விட்டால், தங்களுக்கு பின்னால் உள்ள ஒரு சிலரும் கழண்டுக் கொண்டு விடுவார்கள் என்ற அச்சத்தில் பிதற்ற துவங்கியுள்ளனர். இதை இப்படியும் கூறலாம். தேர்தலில் பாஜகவின் தோல்வியை இவர்கள் ஏற்கவில்லை…
ஒருவேளை தேர்தலில் தோல்வியுற்றால் பாசிச பாஜக ஆர்எஸ்எஸ் குண்டர் படை கலவரங்களில் இறங்கும் என்று தற்போதே முன்வைத்து பேசுவதன் மூலம் தம்மை அனைவருக்கும் மேலான, ’மார்க்சிய சித்தாந்த புலிகளாக’ நிரூபித்துக் கொள்வதற்கு படாத பாடுபடுகிறார்கள்.
என்று எழுதினர்.
அதாவது, 2024 தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைவதை உண்மையில் செங்கனல் விரும்பவில்லை என்றும், நமது சித்தாந்த ஓட்டாண்டித்தனத்தை மறைத்துக் கொள்ளவும், நம்மிடம் எஞ்சியுள்ள அணிகளைத் தக்க வைத்துக் கொள்ளவுமே “பா.ஜ.க. தேர்தலில் தோற்றால் கலவரத்தில் இறங்கும்” என்று “மார்க்சியப் புரோகிதர்களான” நாம் “ஆருடம்” கூறினோம் என்று அவதூறு செய்தனர்.
உண்மையில் இக்கும்பலின் நம்பிக்கைதான் பொய்யானது, அப்பாவித்தனமானது என்பது சில நாட்களிலேயே நிரூபனமானது! பரகலா, அவே சுக்லா போன்ற ஆளும் வர்க்க அறிவு ஜீவிகள் இத்தகைய கலவரத்தை நோக்கி நாட்டு மக்களை எச்சரித்தது மட்டுமின்றி, இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திராத நிகழ்வாக 16 உயர் நீதிமன்ற நீதிபதிகள் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதினர். “வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாளன்று (ஜூன் 4, 2024) எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் பாதுகாக்க வேண்டுமென்றும்; அவ்வாறு நடந்தால் குடியரசுத் தலைவர் உடனடியாகத் தலையிட்டு ஜனநாயகத்தைக் காக்க வேண்டுமென்றும்” அக்கடிதத்தில் பகிரங்கமாகக் கூறினர்.
திருடனுக்குத் தேள்கொட்டி விட்டால் “அய்யோ அம்மா” என்று அலறித் துடிக்கவா முடியும்! இவ்வளவுக்கும் பிறகு அப்போது (2024) இக்கும்பல் கமுக்கமாகக் கள்ள மெளனம் சாதித்தது. தற்போதோ (ஆக 12, 2025) எவ்விதப் பரிசீலனையும் சுயவிமர்சனமும் இன்றி, “பா.ஜ.க. தேர்தலில் தோற்றால் பாசிசப் படையைக் கொண்டு கலவரத்தில் இறங்கும்” என்ற கருத்தைத் தனது சொந்தக் கண்டுபிடிப்பு போல எழுதியுள்ளது! அறிவு நாணயமோ, நேர்மையுணர்ச்சியோ கிஞ்சித்தும் இக்கும்பலிடம் உள்ளதா?!
“ஒருவேளை, பாசிச கும்பல் தேர்தலில் தோற்றால், ஆட்சியிலிருந்து இறங்காது; பாசிச ஆட்சியை நிறுவவே முயற்சிக்கும்” என்று சொன்ன நம்மை “மார்க்சிய புரோகிதர்கள்” என்று ஏளனம் செய்தவர்கள், இன்று அவர்களே “பா.ஜ.க. தேர்தலில் தோற்றால் பாசிசப் படையைக் கொண்டு கலவரத்தில் இறங்கும்” என்று சொல்கிறார்களே ஏன்?
பாசிசமயமாக்கப்பட்ட தேர்தல் ஆணையம் மூலம் பல்வேறு தில்லுமுல்லுகளுடன் நடத்தப்படும் தேர்தல்களில் பங்கேற்பது “தெரிந்தே புதைகுழிக்குள் இறங்குவதாகும்” என்று சொல்லிவிட்டு, அப்படிப்பட்ட தேர்தல்களை கூட புறக்கணிக்கக் கூடாது என்று அறிவுறுத்துவது ஏன்? இவையெல்லாம், வெறும் தர்க்கப் பிழைகளா? இவர்களது கட்டுரைகளை மட்டும் பார்த்தால், இவை தர்க்கப்பிழைகளாகவே தெரியும். ஆனால், இவர்களது நடைமுறைகளைப் பரிசீலித்தால், இந்தப் பிழைகளெல்லாம் நீங்கி, அவர்களது சிந்தனையிலுள்ள உண்மையான தர்க்கம் புரியும். அஃதென்னவென்றால், ஆளும் வர்க்க வரம்புக்குள் பாசிச எதிர்ப்பைக் குறுக்குவது, தி.மு.க-வுக்கும் இந்தியா கூட்டணிக்கும் ஓட்டு சேகரிக்கும் பாதந்தாங்கிகளாக செயல்படுவது என்பதாகும். இந்த நடைமுறையின் தர்க்கம்தான், அவர்களது கட்டுரையில் வெளிப்படும் தர்க்கப்பிழைகளை விளக்கும் காரணியாகும்.
*****
மேலே நாம் ஆதாரப் பூர்வமாக, மறுக்கவியலாத வகையில் எழுப்பியுள்ள எந்தக் கேள்விக்கும் அவர்கள் பதில் கூறப் போவதில்லை! அதற்கான நேர்மையோ, அறிவு நாணயமோ அவர்களிடம் எள்முனையளவும் இல்லை! மேலும் ஆத்திரம் தலைக்கேறி நம்மீது மேன்மேலும் அவதூறுகளையும் வசவுகளையும் வீசியெறிவதைத் தவிர வேறெதையும் அவர்கள் செய்யப் போவதில்லை! செய்யவும் முடியாது!!
அவர்கள் தலைமையில் இயங்கி வரும் புரட்சியை நேசிக்கும் எஞ்சியுள்ள அணிகளாவது இவற்றைச் சிந்திப்பார்கள் என்று நம்புகிறோம்!
*****
- செங்கனல் ஆசிரியர் குழு


