அடால்ப் ஹிட்லரின் நாஜி ஜெர்மனியின் நபோலாஸ் (தேசிய அரசியல் கல்வி நிறுவனம்) பாசிச கல்வி முறையினை பின்பற்றி ஆசிரியர்களையும், மாணவர்களையும் பார்பனிய, சனாதன மற்றும் ஏகாதிபத்திய கருத்தியலின் அரசியல் தூதுவர்களாகவும் (Political Ambassadors of Brahminhal varunshirama and Imperilist philoshopy), நாட்டினை பார்பனிய பாசிசமயமாக்குவதற்காகவும் கட்டமைப்பதற்கான கல்வி முறையாகும்.
கடந்த 2022-ஆம் ஆண்டு, தேசிய ஆசிரியர்கள் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டின் “21-ஆம் நூற்றாண்டுக்கான தேவைகளை எதிர் கொள்வதற்காக” என்னும் நோக்கத்தில் “பிரதம மந்திரியின் வளரும் இந்தியாவிற்கான பள்ளிகள்” என்ற கல்வி திட்டத்தினை அறிவித்தார். பிரதம மந்திரியின் இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த 2022-ஆம் ஆண்டு, செப்டம்பர் 7-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது. இத்திட்டமானது, தேசிய கல்விக் கொள்கை, 2020-ஐ பின்பற்றி நாடு முழுவதிலும் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட சுமார் 14,500-க்கும் அதிகமான பள்ளிகளை நவீன கல்வி நிறுவனங்களாக மாற்றும் நோக்கத்தினை கொண்டதாகும்.
ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் அறிக்கை, இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள 18 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நேரடியாக பயன்பெறுவார்கள் எனவும், இத்திட்டத்திற்காக ரூபாய் 27,360 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் அதில் மத்திய அரசின் பங்காக 18,128 கோடியும், மாநில அரசுகள் மற்றும் யூனியன் அரசுகளின் பங்காக 9,232 கோடி எனவும் குறிப்பிடுகிறது.
இத்திட்டத்தின் வழிகாட்டுதல் நெறிமுறை, PM SHRI பள்ளிகளில் கல்வி கற்பித்தல் முறை அனுபவ ரீதியாகவும் ஒருங்கிணைந்த மாணவர்களை மையமாகக் கொண்ட மற்றும் மிகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும் இருக்கும் என கூறுகிறது. மேலும் கற்பித்தல் மொழி, மாணவர்கள் கற்றல் மேம்பாடு மற்றும் பதிவினை தொடர்வதற்கான பதிவு, ICT வசதி, அனைத்து மாணவர்களுக்கும் கலை, விளையாட்டு பயிற்றுவித்தல், பள்ளி தரமதிப்பீடு செய்முறை ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும் என குறிப்பிடுகிறது.
குறிப்பாக, PM SHRI பள்ளிகளின் பாடத்திட்டத்தில் ” இந்திய பாரம்பரியம், பழக்க வழக்கங்கள் மற்றும் இந்திய அறிவு முறை” தொடர்பான பாடங்கள் சேர்க்கப்பட்டு மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் என மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறை அறிக்கை குறிப்பிடுகிறது. எனினும், இத்திட்டத்தின் அடிப்படை அரசியல் நோக்கம் வேறானதாகும்.
1920-களில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பார்ப்பனிய வர்ணாசிரம முறைக்கு எதிராகவும், இந்து சமூக ஒழுங்கு அமைப்பினை எதிர்த்தும் பல்வேறு பார்ப்பனிய எதிர்ப்பு இயக்கங்கள் பார்ப்பனர்கள் அல்லாதவர்களால் தொடங்கப்பட்டது. அவற்றில், ஜோதிராவ் பூலே அவர்களால் மராட்டியத்தில் அனைவருக்கும் கல்வி, பகுத்தறிவு மற்றும் சமூக சமத்துவம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்ட சத்ய ஜோதக் சமாஜ் என்ற அமைப்பு முக்கியமானதாகும். 1850-களில், தமிழ்நாட்டில் பார்பனர் அல்லாதாரால் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி, தென்னிந்திய நலச்சங்கம் மற்றும் தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் ஆகியவை பார்பனிய மேலாதிக்க எதிர்ப்பை அடிப்படையாக கொண்டு தோற்றுவிக்கப்பட்ட முக்கியமான இயக்கங்களாகும்.
அதே காலகட்டத்தில், மார்க்சிய கொள்கைகளாலும் இரஷ்ய புரட்சியாலும் ஈர்க்கப்பட்ட பல்வேறு கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் தோன்றின. இவையனைத்தும், அதுவரை அசைக்க முடியாத வகையில் நிலைபெற்று இருந்த பார்ப்பனிய இந்து சமூக ஒழுங்கு அமைப்பை கேள்விக்குள்ளாக்கின. சமூக சமத்துவம் சமதர்மம் அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் அரசியல் அதிகாரம் போன்ற புதிய ஜனநாயக கருத்துக்கள் நாடு முழுவதும் தோன்றின. அதன் காரணமாக மிகுந்த அச்சமும் அதிர்ச்சியும் அடைந்த மராட்டிய சித்பவன் பிராமனர்கள் இந்திய சமூகத்தில் தங்களின் சிறப்புரிமையையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், இந்து சமூக ஒழுங்கு அமைப்பை காப்பதற்காகவும் 1925-ஆம் ஆண்டு நாக்பூரில் இராஷ்டிரிய சுயம்சேவக் சங் என்ற இந்து பயங்கரவாத அமைப்பை தோற்றுவித்தனர்.
பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே அவர்கள் “பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கு இந்து என்ற அடையாளத்தை வழங்குவதன் மூலமாக பார்பனிய சாதி அமைப்பிற்கு எதிரான அவர்களின் புரட்சியை தடுத்து நிறுத்தி, அவர்களை மத ரீதியாக முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட வைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் உருவாக்கப்பட்டதாக” கூறுகிறார். எனவே, இந்திய சமுதாயத்தில் பல நூற்றாண்டுகளாக நிலை பெற்றிருக்கின்ற சாதி அமைப்பின் அடிப்படையிலான இந்து சமூக ஒழுங்கமைப்பை கட்டமைப்பதற்கான ஒரு முன்மாதிரி அரசியல் செயல்திட்டம் ஆர்.எஸ்.எஸ்-க்கு தேவைப்பட்டது. 1920-களில், ஆர்.எஸ்.எஸ் அச்செயல்திட்டத்தை ஐரோப்பாவில் அச்சமயம் உருவாகிக் கொண்டிருந்த இன அடிப்படையிலான பாசிச, நாசிச அமைப்புகளிடமிருந்து பெற்றுக்கொண்டது.
இன்றைய ஆர்.எஸ்.எஸ்-இன் பல்வேறு திட்டங்கள் நாசிச பாசிச செயல்திட்டங்களை அடிப்படையாக கொண்டவைகளாகும். அச்செயல்திட்டங்களில் முக்கியமானது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே இந்திய பாரம்பரியம் பழக்க வழக்கம் என்ற பெயரில் பார்ப்பனிய பாசிச கருத்துக்களை புகுத்தி அவர்களை பாசிஸ்ட்டுகளாகவும், பார்ப்பனிய ஏகாதிபத்திய அடிமைகளாகவும் உருவாக்குவதாகும். ஆர்.எஸ்.எஸ்-இன் இத்தகைய எதிர்கால நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டதுதான் PM SHRI திட்டம் ஆகும்.
இலண்டன் தர்காம் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் டாக்டர் ஹெலன் ரோச் (DR. HELEN ROACH) அவர்கள் நாஜி ஜெர்மனியின் நபோலாஸ் பள்ளிகள் பத்து வயதிலிருந்து மாணவர்களுக்கு எதிர்கால நாஜி தலைவர்களாக உருவாக்குவதற்கான கல்வியையும், பயிற்சியையும் அளித்தது. நபோலாஸ் மாணவர்கள் ஹிட்லரின் மாணவர்கள் என அழைக்கப்பட்டனர். நாஜி அரசு ஜெர்மனி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூன்றாம் ரீச் ஹிட்லரின் கலாச்சார தூதர்களாகவும், ஹிட்லரின் அரசியல் கொள்கைகள் மீது மக்களிடையே அனுதாப உணர்வை வளர்ப்பதற்கவும் மற்றும் நாஜி கொள்கைகளை பரப்பவும் விரும்பியது. அதன்காரணமாக, பல பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாஜிகளாக உருவாகியதாக தனது The Third Reich’s Elite Schools: A History of the Napolas என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஜெர்மனியின் நாஜி நபோலாஸ் பள்ளிகளுக்கும், PM SHRI பள்ளிகளுக்கும் கல்விமுறை, பயிற்சி மற்றும் நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் நெருங்கிய பிணைப்பு உள்ளது.
PM SHRI பள்ளிகள் மோடியின் பஞ்ச் பிரான் (ஐந்து உறுதி மொழிகள்) யை அடிப்படையாக கொண்டுள்ளன. அவை, வளர்சியடைந்த இந்தியாவினுடைய இலக்கு, காலனிய சிந்தனையின் அனைத்து கூறுகளையும் நீக்குதல், இந்திய பாரம்பரியத்தில் பெருமை அடைதல், ஒற்றுமை மற்றும் குடிமக்களிடையே கடமை குறித்த உணர்வை ஏற்படுத்துதல் ஆகியவைகளாகும். இக்குறிக்கோள்களை அடைவதற்கான பாடத்திட்டம், கற்பித்தல் முறை, பயிற்சி முறை மற்றும் விளையாட்டுகள் ஆகியவை பி எம் ஸ்ரீ பள்ளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அத்தகைய பாடத்திட்டங்கள், பயிற்சி முறைகள் மாணவர்களை பிற்போக்கு சிந்தனை கொண்டவர்களாகவும், பார்ப்பனிய கலாச்சார விழுமியங்களை கொண்டவர்களாகவும் உருவாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மோடியின் வளர்சியடைந்த இந்தியாவின் இலக்கு என்ற உறுதி மொழியை நடைமுறைப்படுத்துவதற்கான பாடத்திட்டத்தில் PM SHRI பள்ளி மாணவர்கள் வட்டார தொழில் செய்வோரிடம் சென்று அவர்களின் தொழிலினை கற்றுக்கொள்ளவேண்டும். மாணவர்கள் மண்பாண்ட குயவர், கட்டிட கலைஞர், செருப்பு தைப்பவர்கள், விவசாயிகள் மற்ற பிற வட்டார தொழிலாளர்களிடம் சென்று அவர்களிடம் கற்க வேண்டும். இத்தகைய தொழிலை கற்றுத் தருகிறவர்களை local professionals என பிஎம் ஸ்ரீ இணையதளம் குறிப்பிடுகிறது. குலத் தொழில் செய்பவர்களை தேர்வு செய்வது நாள் இடம் அதற்கான தயாரிப்புகள் ஆகியவற்றை ஆசிரியர்கள் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் ஐந்து தொழிலாளர்களை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்துதரவேண்டும். பின்னர், மாணவர்கள் தொழிலாளர்களிடம் கற்றுக் கொண்டவற்றை அறிக்கையாக ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதில் தொழிலாளரிடம் கற்ற கல்வி எவ்வகையில் நாட்டை மேம்படுத்த தூண்டுகோலாக இருந்தது என்பது குறித்து கூறியிருக்க வேண்டும். இத்தகைய தொழிலை கற்றுத் தருகிறவர்களை local professionals என பிஎம் ஸ்ரீ இணையதளம் குறிப்பிடுகிறது. இத்தைகைய பாடத்திட்டத்தின் அடிப்படையான நோக்கமானது குலக்கல்வி முறையினை மீண்டும் நவீன முறையில் திணிப்பதாகும். இதன்மூலம், மாணவர்களை சாதி ரீதியான தொழிலுக்கு பழக்கப்படுத்துவது மற்றும் சமூகத்தில் நிறுவனமயமாகியிருக்கும் சாதி ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொள்ள செய்வதாகும்.
அடுத்ததாக, காலனியத்தின் எச்சங்களை நீக்குதல் என்ற தலைப்பினான பாடத்திட்டத்தில், பாரம்பரிய விளையாட்டு வாரம் கடைப்பிடித்தல், நமது வரலாறு நமது பெருமிதம், வட்டார கலாச்சாரத்தை அறிந்து கொள்ளுதல், கிராமங்களின் சுயசார்பு குறித்து கட்டுரை எழுதுதல், இந்திய அரசியலமைப்பு விலுமியங்களை எடுத்துரைத்தல் ஆகியவை குறித்த செயல்முறைகள் அடங்கியுள்ளன. இவற்றில், நமது வரலாறு நமது பெருமிதம் என்பதில் இந்திய வரலாற்றுக்கு பங்களித்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் ஆளுமைகள் குறித்து கற்பிக்கப்படும். இதன்மூலம், இஸ்லாமிய கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு வெறுப்பினை தூண்டக்கூடிய நிகழ்வுகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். மேலும், சாவர்க்கர், ஷியாம் பிரசாத் முகர்ஜி ஆகியோரின் கருத்துக்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு, இந்துத்துவ அரசியலுக்கான தூதுவர்களாக மாணவர்கள் மாற்றப்படுவார்கள். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வரலாற்று நிகழ்வுகளையும் ஆளுமைகளையும் அறிமுகப்படுத்தும் நிகழ்வு போக்கில் ஏற்கனவே ஜாதி மத ரீதியான சிந்தனை கொண்ட பெரும்பான்மையான ஆசிரியர்கள் முழுக்க பார்ப்பனிய பாசிச கருத்துக்களை கொண்டவர்களாக உருவாக்கப்படுவார்கள்.
பிரதமர் மோடியின் பஞ்ச் ப்ரான் அல்லது ஐந்து உறுதிமொழிகளில் முக்கியமானது “நமது பாரம்பரியத்தில் பெருமையடைதல்” என்ற பாடத்திட்டமாகும். இதில், மாணவர்களுக்கு இந்திய தொன்மவியல், நாட்டார் வழக்காற்றியல் மற்றும் வரலாறு குறித்த பாடங்கள் நடத்தப்படும். அதுமட்டுமின்றி, மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பிரிந்து ஆர்யபட்டா, துளசி தாசர் போன்றோரை பற்றிய கதைகளை படிக்கவும், ஒளிகாட்சிகளை பார்க்கவும் வேண்டும். இதற்கான தயாரிப்புகளை ஆசிரியர்கள் செய்வார்கள். மாணவர்கள் இராமாயணம் மகாபாரதம் போன்ற அறிவுக்கு ஒவ்வாத கதைகளை கற்க கட்டாயப்படுத்தப்பட்டு, மத வெறியர்களாக உருவாக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. பார்பனிய சமுக விரோத பெருமிதங்களை இந்திய பாரம்பரியத்தின் அடிப்படைகளாக சித்தரித்து மாணவர்களிடம் புகுத்துவதே இதன் நோக்கமாகும். சிறுவயதிலிருந்தே, இத்தகைய பார்ப்பன புராணக் கதைகளை படிப்பதன் மூலம் பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ்-இன் பயிற்சி கூடமாக சாகாக்களாக உருவாக்குவதே மத்திய அரசின் திட்டமாகும். பிஎம் ஸ்ரீ திட்டத்தின்கீழ் கல்வி கற்ற மாணவர்கள், அவருக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமயசார்பின்மை, அரசியல் நீதி பொருளாதார நீதி சமூக நீதி போன்ற நவீனகால ஜனநாயக விழுமியங்களற்ற தக்கை மனிதர்களாக மாற்றப்படுவார்கள்.
நவீன காலத்தின் தேவைக்கேற்ப மாணவர்களை அறிவியல், தொழில்நுட்ப நிபுணர்களாகவும், சமுக சிந்தனை, பகுத்தறிவு, ஜனநாயக விழுமியங்களுடனான அரசியல் கலாச்சாரத்தை அவர்களிடம் உருவாக்குவதற்கான கல்வி முறைதான் நாட்டின் தற்போதைய தேவையாகும். எனவே, மாணவர்களை பார்ப்பன பாசிச மோடி அரசின் கருத்தில் தூதர்களாகவும், சாதி, மத, இன ரீதியான பிற்போக்கு சிந்தனை உடையவர்களாகவும் மாற்றக்கூடிய பிஎம் ஸ்ரீ திட்டத்தை தடுத்து நிறுத்துவது அவசியமானதாகும்.
- ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
செய்தி ஆதாரம்:
- Panch – Pran : A Guidebook for PM SHRI school Principles




