முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை
அரசியல்படுத்த வேண்டுமா? தடைசெய்ய வேண்டுமா?  திருமுருகன் காந்திக்கு மறுப்பு

முத்துராமலிங்கத் தேவரின் நினைவுதினத்தன்று குருபூஜை என்ற பெயரில் நடக்கும் அரசியல் கூத்துகள் இந்த ஆண்டும் நடந்து முடிந்திருக்கிறது. வழக்கம் போல தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மந்திரிகள் பட்டாளமே இந்த விழாவில் பங்கெடுத்துத் திரும்பியிருக்கிறார்கள். அதே போல தற்போது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள செங்கோட்டையன், அக்கட்சியிலிருந்து ஏற்கெனவே ஓரங்கட்டப்பட்ட தலைவர்களான டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இணைந்து இந்த ஆண்டு பசும்பொன்னில் நடந்த குருபூஜையில் கலந்து கொண்டிருக்கிறார். அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓரங்கட்டப்பட்ட தலைவர்கள் ஒன்றினையும் விழாவாக இந்த குருபூஜையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதே போன்று தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணனும் இந்த ஆண்டு வந்து கலந்து கொண்டிருக்கிறார். தேவர் சாதியினரின் ஓட்டுகளை கவர்வதற்காக நடைபெறும் இது போன்ற கூத்துகளை மக்கள் பார்த்து பழகிவிட்டனர்.

ஆனால் இந்த முறை புதிதாக மதுரையில் சுயேட்சை கவுன்சிலர் ஒருவர் அம்பேத்கரின் படத்துடன் முத்துராமலிங்கத் தேவரது குருபூஜைக்காக பிளக்ஸ் பேனர் வைத்திருக்கிறார். அதனை போலீசார் அகற்றும்படி கூறியிருக்கிறார்கள். இது குறித்த காணொளி சமூக ஊடகங்களில் சில நாட்களாக உலா வருகிறது. இந்தக் காணொளியை இணைத்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை எழுதியிருக்கிறார். அதில் அம்பேத்கரையும் முத்துராமலிங்கத் தேவரது குருபூஜையையும் இணைப்பது மக்களிடம் ஒற்றுமையுணர்வை ஏற்படுத்துவதால் அதனை போலீசார் தடுப்பதாகக் கூறியிருக்கிறார். மேலும் குருபூஜைகளை அரசியல்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் தனது பதிவில் வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.

அதாவது சாதியால் பிளவுண்டு கிடக்கும் மக்களை ஒன்றிணைக்க முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையைப் பயன்படுத்த வேண்டும், அவ்வாறு மக்களை சாதி கடந்து சிந்திக்கச் செய்வதுதான் அதனை அரசியல்படுத்துவது என்று திருமுருகன் காந்தி கூறுகிறார்.

ஆனால் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை என்பது நாம் ஏற்கெனவே கூறியது போல அரசியல்படுத்தப்பட்டுத்தான் இருக்கிறது. சாதி வெறியைத் தூண்டிவிட்டு, மக்களிடையே மோதல் போக்கை உருவாக்கி அதன் மூலம் சாதி ஓட்டுக்களைத் தங்கள் வசம் திருப்பும் அரசியல் நிகழ்வாகத்தான் இந்த குருபூஜை உருவாக்கப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு 1990-களின் ஆரம்பத்தில் அதிமுகவில் நடந்த கோஷ்டி சண்டையில் ஜெயலலிதாவின் பக்கம் தேவர் சாதியினரின் ஓட்டுக்களை ஒட்டுமொத்தமாக கொண்டுவந்து சேர்ப்பதற்காக நடராசனும், சசிக்கலாவும் திட்டமிட்டு இந்த நிகழ்வைப் பேசுபொருளாக்கினார்கள். ஒவ்வொரு ஆண்டும் பல இலட்சம் ருபாய் பணத்தை வாரியிரைத்து பெருங்கூட்டத்தைக் கூட்டி விழா எடுத்தார்கள். அதில் ஜெயலலிதாவைக் கூட்டிவந்து கலந்துகொள்ளச் செய்தார்கள். அதற்கு ஊடக வெளிச்சம் போட்டு காட்டினார்கள். சென்னையில் நந்தனம் பகுதியில் முத்துராமலிங்கத் தேவருக்கு சிலை அமைப்பது தொடங்கி அவரது சிலைக்கு 13 கிலோ எடையில் தங்கக் கவசம் செய்து கொடுப்பது வரை அதிமுகவின் விசுவாசிகளாக அந்த சமூகத்து மக்களைத் தக்கவைத்துக் கொண்டார்கள். இந்த நிகழ்வில் பங்கேற்காத அரசியல் தலைவர்கள் தேவர் சாதியினருக்கு எதிரிகளாகக் கருதும் அளவிற்கு அரசியல் சூழல் இவர்களால் திட்டமிட்டு மாற்றப்பட்டது.

அதற்காக தேவர் சமுதாய இளைஞர்கள் மனதில் ஆதிக்க சாதிவெறி, பல்வேறு சாதிக்கட்சிகளைக் கொண்டு வளர்த்து விடப்பட்டது. 1995 கொடியங்குளம் கலவரம் முதல் ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி வந்துவிட்டாலே கலவரம் நடக்குமோ என்று தென்மாவட்டங்கள் முழுவதையும் அச்சத்தில் ஆழ்த்தும் நிகழ்வாக அது மாற்றப்பட்டது.

சாதி போதையுடன் மது போதையும் இணைந்து கொடுக்கும் வெறியில் தேவர் சாதி இளைஞர் அடிக்கும் கொட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இருசக்கர வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது, சொகுசுக் கார்களில் கூட்டமாக தொங்கிக் கொண்டு செல்வது. பொது இடங்களை, சாலைகளை மறித்து குடித்துவிட்டு ஆட்டம் போடுவது. ஊர்வலமாகச் செல்லும் வழியில் இருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து வம்பிழுப்பது. சாதிய மோதல்களை வேண்டுமென்றே தூண்டிவிடுவது என பொதுமக்களுக்கு தொல்லை கொடுப்பதுடன், அவர்களைப் பதற்றத்தில் ஆழ்த்துகின்றனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்க வருபவர்களால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை விட பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை என்று கூறும் அளவிற்கு பெண் போலீசாரிடமும் வம்பிழுக்கும் வேலையைச் செய்யும் உதிரிகளாக தேவர் சமூகத்து இளைஞர்களை இந்த நிகழ்வு மாற்றி வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு சாதியினரும் தங்களது சாதிப் பெருமைகளை மீட்டுருவாக்கம் செய்வதும், அவர்களது சாதியில் பிறந்த விடுதலைப் போராட்ட வீரர்களை முன்னிறுத்தி, மக்களை அணிதிரட்டி சாதிய வாக்குகளை அறுவடை செய்வது என்பது கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை போன்ற தலைவர்கள் சாதிய அடையாளத்துக்குள் இழுக்கப்பட்டனர். முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை அவ்வாறான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருத முடியாது. ஏனெனில் முத்துராமலிங்கத் தேவரை முதலில் அப்படிப்பட்ட தலைவராகக் கருத முடியாது. இவர்கள் முன்னிறுத்துவது போல முத்துராமலிங்கத் தேவர் தேசியத் தலைவராக இல்லை. இறுதிவரை தனது சுயசாதிப் பெருமையை உயர்த்திப் பிடித்த சாதியத் தலைவராகத்தான் அவர் இருந்தார்.

1957-இல் இம்மானுவேல் சேகரன் கொலை, அதனைத் தொடர்ந்து நடந்த முதுகுளத்தூர் கலவரம் ஆகியவற்றின் மைய புள்ளியாக முத்துராமலிங்கத் தேவர் இருந்தார். இது தவிர தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பொது மேடையிலேயே சாதிவெறியைத் தூண்டும் வகையில் அவர் பேசியிருக்கிறார். அன்றைக்கு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த காமராஜரை அவரது சாதியைக் கூறி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பல முறை இழிவு படுத்திப் பேசியிருக்கிறார்.

சுபாஷ் சந்திர போஸை சந்தித்து பார்வர்டு பிளாக் கட்சியில் சேர்ந்ததை மட்டும் வைத்து முத்துராமலிங்கத் தேவரை விடுதலைப் போராட்ட தலைவர்களுல் ஒருவராக சித்தரிக்கும் வேலையை மே 17 இயக்கம் போன்றவர்கள் செய்கின்றனர். ஆனால் 1939-க்கு முன்னர் அதாவது சுபாஷ் சந்திர போஸைச் சந்திப்பதற்கு முன்னர் முத்துராமலிங்கத் தேவர் இந்து மகா சபையின் உறுப்பினராக, பகுதித் தலைவராகச் செயல்பட்டார் என்பதையும், “தென்னிந்தியாவில் இந்துக்களை ஒன்றிணைக்கும் சக்தியாக மதுரையின் தேவர் திகழ்கிறார்” என சவார்க்கரால் புகழப்பட்டதையும் வசதியாக மறந்து விடுகின்றனர். 1941-இல் சுபாஷ் சந்திர போஸ் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற பிறகு மீண்டும் தனது பழைய இந்துமகா சபா அரசியலுக்கு அவர் திரும்பிவிட்டார். தனது வாழ்வின் இறுதிவரை தேவர் சமூக மக்களின் சாதித் தலைவராகத்தான் அவர் இருந்தார். எனவேதான் முத்துராமலிங்கத் தேவரைப் பயன்படுத்தி சாதிவெறி அரசியல் செய்வது என்பது எளிதானதாக இருக்கிறது.

இது எல்லாம் திருமுருகன் காந்தி அறியாததல்ல. இருந்தும் சாதிவெறியை மையப்படுத்தி மக்களைப் பிளவுபடுத்தும் ஒரு நிகழ்வைப் பயன்படுத்தி மக்களை ஒற்றுமைப்படுத்த முடியும் என திருமுருகன் காந்தி கூறுகிறார். இது அவர் ஏற்றுக்கொண்ட அரசியலுக்கே எதிரானது என்ற போதிலும் அவர் அதனை ஆதரித்து நிற்கிறார்.  

பொதுவாக தமிழ்தேசிய அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு அந்த அரசியலை மட்டும் பேசுவதன் மூலம் இளைஞர்களை அணிதிரட்ட முடியாது என்பதால் இரண்டு வகைகளில் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களைப் பயன்படுத்திட முயல்கிறார்கள். முதல் வகை என்பது தலைவர்களை வந்தேரிகள் எனத் திட்டுவது. பெரியாரை சீமான் திட்டுவது போல. அதன் மூலம் பிரபலம் தேடுவது. இரண்டாவது வகை தலைவர்கள் மீது எவ்வித விமர்சனமும் இன்றி அவர்களை அப்படியே புகழ்வது, அவர்களைப் பின்பற்றும் இளைஞர்களைக் கவர்வதற்காக அவர்களது தவறுகளை மறைத்துவிடுவது. திருமுருகன் காந்தி போன்றவர்கள் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை ஆதரிப்பார்கள், அதேசமயம் இம்மானுவேல் சேகரன் குருபூஜையிலும் கலந்துகொள்வார்கள். எங்கே கூட்டம் கூடினாலும் அதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் சந்தர்ப்பவாதம் தான் இவர்களது இந்தப் போக்கிற்குக் காரணம்.

ஆகையால், சாதி வெறியைப் பரப்பி, உழைக்கும் மக்களை பிழவுபடுத்துகின்ற அதேசமயம், இளைஞர்கள் மத்தியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் லும்பன் கலாச்சாரத்தை ஊற்றி வளர்கின்ற முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை போன்ற நிகழ்வுகள் தடைசெய்யப்படவேண்டும். மாறாக அதனை அரசியல்படுத்தி இளைஞர்களைப் பார்ப்பனியத்துக்கு எதிராக அணிதிரட்டிவிடலாம் எனக் கூறுவது கானல் நீரை நம்பிக் கலங்கின கதைதான்.

  • சந்திரன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன