மராட்டிய விவசாயிகள் எந்தவித நிபந்தனையுமின்றி விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த அக்டோபர் 28, 2025 அன்று போராட்டம் தொடங்கப்பட்டது. நீதிமன்ற தலையீட்டின் காரணமாக நவம்பர் 1, 2025 அன்று மராட்டிய மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தப் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. எனினும் இந்த முடிவு தற்காலிகமானது மட்டுமே – கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் இன்னும் கடுமையான போராட்டத்தைத் தொடங்குவோம் என்று பிரஹார் ஜன்சக்தி பார்ட்டி கட்சியின் தலைவரான பச்சுகாடு கூறியுள்ளார்.
கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகச் செயல்படும் ஆளும் பாஜக அரசாங்கம், நீதிமன்றம், ஊடகங்கள் என அனைத்தும் விவசாயிகளின் போராட்டத்தை உடனடியாக ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தாலும், இந்தப் போராட்ட அனுபவங்களில் இருந்து பிற மாநில விவசாயிகளும், தொழிலாளர்களும் கற்றுக்கொள்ளவும், வினையாற்றவும் நிறைய இருக்கிறது.
இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பச்சுகாடு சுமார் ஆறு மாதங்களாக விதர்பாவிலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று, அந்தப் பகுதியின் நீண்டகால விவசாயப் பிரச்சினைகளுக்கு எதிராக சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) குழுவுடன் இணைந்து பேரணியை நடத்தினார். அதேபோல் அகில இந்திய கிசான் சபா (AIKS), ஷேத்கரி சங்கத்னாவின் அனைத்துப் பிரிவுகள் உள்பட்ட மராட்டியத்திலுள்ள பல்வேறு விவசாய அமைப்புகளையும் ஒன்றிணைத்தார். மேலும் ஃபட்னாவிஸ் அரசாங்கம் தனது கடன் தள்ளுபடி வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறினால், அதற்கு எதிராகக் கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாகவே டிராக்டர்கள், வண்டிகள், வாகனங்களில் வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஊர்வலமாகச் சென்று, மராட்டிய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வசிக்கும் நகரின் தெற்கு முனையில் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பெரிய பகுதியை மறித்து, போக்குவரத்தை முடக்கி, புறநகர்ப் பகுதிகளை முற்றுகையிட்டனர். அதனால் நெடுஞ்சாலையின் இரு புறமும் சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் தேங்கி நிற்கின்றன. வாகனங்கள் செல்வதற்கான மாற்றுப்பாதையைக் காவல்துறை ஏற்பாடு செய்தபோது, விவசாயிகள் அந்தப் பாதையையும் மறித்து போக்குவரத்தை தடை செய்தனர்.
பம்பாய் உயர் நீதிமன்றம் இந்தப் போராட்டத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு தனது வர்க்க பாசத்தை வெளிப்படுத்தியது. எனவே உடனடியாக போராட்ட இடத்தைக் காலி செய்யக் காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதன்மூலம் விவசாயத் தொழிலாளர்கள் வர்க்கம் அரசாங்கம் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர வேண்டும் என்ற விருப்பத்திற்கு எதிராக அமைந்தது.
எனினும் விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிடவில்லை. மாறாக, தங்களைக் கைது செய்து சிறையில் அடையுங்கள் என்றும், அப்படி சிறையில் அடைத்து வைப்பதற்கு போதுமான வசதிகள் உங்களிடம் இருக்கிறதா என்றும் ஆளும் பாஜக அரசாங்கத்தை எதிர்த்து கேள்வி எழுப்பினர்.
உண்மை என்னவென்றால் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்கான வாய்ப்புகள் இந்தியாவில் எங்குமில்லை. மேலும் மராட்டியத்தின் பிரதானத் தொழில் விவசாயம் என்பதால் விவசாயிகளின் கோபத்திற்கு ஆளாகி ஆட்சியை இழக்க நேரிடும் என்ற அச்சம் ஆளும் பாஜக அரசுக்குக் கிழியை ஏற்படுத்தியது. இந்த சாதகமான சூழல் விவசாயிகளின் போராட்டத்திற்கு கூடுதல் உத்வேகம் அளித்ததுள்ளது.
எனவேதான், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக மும்பைக்கு வருமாறு விவசாயப் பிரதிநிதிகளை பாஜக முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அழைத்தபோது, நாங்கள் அங்கு வர விரும்பவில்லை. முதலமைச்சர் நாங்கள் போராடும் இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி முதல்வரின் முகத்தில் கரியைப் பூசினர். மேலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த கட்டமாக இரயில் பாதைகளை மறித்துப் போராட்டம் நடத்துவோம் என அறிவித்தனர்.
இவையனைத்தும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை உறுதியாகவும், விடாப்பிடியாகவும் நின்று போராடியுள்ளதை மிகவும் தெளிவாகக்காட்டுகிறது. இந்த போராட்டக் குணத்தை படம்பிடித்துக் காட்டவேண்டிய பத்திரிக்கைகளோ ஆளும்வர்க்கத்தின் மற்றொரு உருப்பாக மாறி வாலாட்டிக்கொண்டிருக்கிறது.
ஆளும் வர்க்கத்திற்குச் சேவை செய்வதற்காகவே பிறப்பெடுத்துள்ள பாஜக அரசாங்கமும், பாஜக அரசாங்கம் தேர்தலின் போது விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கும்போது அதற்கு எதிராக விவசாயிகள் போராடினால் அதிகாரவர்க்க நிறுவனங்களான காவல் துறையும், நீதிமன்றமும் போராட்டத்தை ஒடுக்குவதற்கான வேலைகளை உடனடியாக முடுக்கிவிடுகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூண்களான பத்திரிக்கைகளோ இந்தப் போராட்டம் குறித்த செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்கிறது.
இத்தகைய சூழலில் விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைவரும் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நிலவுகின்ற அரசாங்கத்தை எதிர்த்துப்போராடவேண்டும் என்றால் நீதிமன்றம், போலீசு, அரசுக்கு மனுக்கொடுப்பது போன்ற வழக்கொழிந்துபோன முறைகளில் போராடிப்பயனில்லை என்பதையும், அந்தந்த வர்க்கங்கள் தனியாகவும் கூட்டாகவும் ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து மராட்டிய விவசாயிகளைப்போன்று தெருவில் இறங்கிப்போராடும் பொழுதுதான் நமக்கான உரிமைகளைப் பெறமுடியும் என்ற உண்மையையும் இனியேனும் புரிந்துகொண்டு போராடுவோம்.
- மகேஷ்




