இன்றைக்கு நமது நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கும் காவி கார்ப்பரேட் பாசிச சக்திகள், இருக்கின்ற ஜனநாயக உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து, பாசிச சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் சட்டத்திருத்தங்களைக் கொண்டுவருவது, விவசாயிகளின் போராட்டத்தை வன்முறையைக் கொண்டு ஒடுக்குவது, மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என எல்லா ஜனநாயக சக்திகளையும் பொய்வழக்கில் கைது செய்து பல ஆண்டுகள் சிறையில் அடைப்பது எனத் தொடர்ந்து பல அடக்குமுறைகளைப் காவி பாசிச சக்திகள் ஏவிவருகின்றனர்.
காவி பாசிச சக்திகளின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்து பலரும் போராடி வருகின்றனர். இவ்வாறு ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுகின்ற பல்வேறு வர்க்கங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரு கட்டத்தில் முதலாளித்துவ ஜனநாயகம் தான் சிறந்தது என்ற கருத்து பொதுவாகவே உருவாகிவிடுகிறது. காவி பாசிச சக்திகளுக்கு மாற்றாக தற்போது இருக்கும் “ஜனநாயக அமைப்பே” சிறந்தது என்றும், அதனைப் பாதுகாத்திட வேண்டும் என்றும் கருத தொடங்கிவிடுகின்றனர்.
இதன் விளைவாக இந்திய அரசியலமைப்பைப் பாதுகாப்போம் என்ற முழக்கம், பாசிச எதிர்ப்பாளர்களிடமிருந்து எழுவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். சிஏஏ போராட்டம் தொடங்கிப் பல சந்தர்ப்பங்களில் காவி பாசிசத்திற்கு எதிராக இந்திய அரசியலமைப்பு உயர்த்திப் பிடிக்கப்படுகின்றது. சாமானிய மக்கள் மட்டுமன்றி புரட்சிகர கட்சிகளின் அணிகளில் சிலரே கூட இது போன்ற கருத்துகளுக்குப் பலியாகின்றனர்.
முதலாளித்துவ ஜனநாயகம் வழங்கியிருக்கின்ற கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பறித்து, பாசிச சர்வாதிகாரத்தை நிறுவ, காவி பாசிச சகதிகள் நினைக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அதற்காக முதலாளித்துவ ஜனநாயகம் தான் சிறந்தது என்றாகிவிடாது. மக்கள்தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ள முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஜனநாயகத்தையும், ஆகப் பெரும்பாலான உழைக்கும் மக்களுக்குச் சர்வாதிகாரத்தையும் வழங்குகின்ற முதலாளித்துவ ஜனநாயக அமைப்பானது என்றைக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரானதே. முதலாளிகளுக்குச் சேவை செய்கின்ற நோக்கத்திற்காகவே இந்த ஜனநாயகம் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
மாறாக சோசலிச ஜனநாயகம் என்பது ஆகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகத்தையும், ஒரு சதவீதத்திற்கும் கீழுள்ள முதலாளித்துவ வர்க்கத்திற்குச் சர்வாதிகாரத்தையும் வழங்குகிறது. இதுதான் உழைக்கும் வர்க்கம் உயர்த்திப் பிடிக்க வேண்டிய ஜனநாயக அமைப்பாகும்.
முதலாளிகளின் சொத்துரிமையைப் பாதுகாக்கும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும், காலனி நாடுகளில் தனது நலனைப் பாதுகாக்க ஏகாதிபத்தியங்கள் உருவாக்கிய, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள ஜனநாயகத்திற்கும், உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க, அனைத்து தேசிய இனங்களையும் சரிசமமாக நடத்திட உருவாக்கப்பட்ட சோவியத் சோசலிசம் தன் குடிமக்களுக்கு வழங்கிய ஜனநாயகத்தையும், அதனை உருவாக்க அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபைகளையும், கையாளப்பட்ட நடைமுறையையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் எது உண்மையான ஜனநாயகம் என்பது தெளிவாகப் புலப்படும்.
இன்றைக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் காவி பாசிசத்திற்கு எதிராக நிறுத்தப்படும் இந்திய அரசியலமைப்பு யாரால், எவ்வாறு உருவாக்கப்பட்டது, அது வழங்குகின்ற ஜனநாயகத்தின் தன்மை எப்படிப்பட்டது என்பதை சோவியத் ஒன்றியத்தின் அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட வரலாற்றுடனும், அது உழைக்கும் மக்களுக்கு வழங்கிய உண்மையான ஜனநாயக உரிமைகளுடனும் ஒப்பிட்டுப் பார்த்தால் சோவியத் ஜன நாயகம் தான் சிறந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
இந்திய அரசியல் சாசனத்தை எழுதியவர் அம்பேத்கர் என நாம் அனைவரும் படித்திருக்கிறோம், நமக்கு அப்படித்தான் கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் இந்திய அரசியல் சாசனத்தின் முதல் நகலை எழுதியவர் பி.என்.ராவ் ஆவார். அரசியலமைப்பு ஆலோசகராக இருந்த பி.என்.ராவ் எழுதிச் சமர்ப்பித்த அரசியல் சாசனத்தைத்தான் அம்பேத்கர் தலைமையிலான அரசியலமைப்பின் வரைவுக் குழு அரசியல் நிர்ணய சபையில் தாக்கல் செய்தனர். அதன் சரத்துகளின் மீது அரசியல் நிர்ணய சபையில் விவாதம் நடத்தப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதுவே பின்னர் இந்திய அரசியலமைப்பாக மாறியது.
இந்த பி.என்.ராவ் என்பவர் இந்தியாவை ஆட்சிசெய்த பிரிட்டிஷ் அரசின் ஐ.சி.எஸ். அதிகாரி ஆவார். பிரிட்டிஷ் அரசிற்கு விசுவாசமாகச் சேவை செய்த காரணத்தினால் இங்கிலாந்து ராணியின் கைகளிலிருந்து சர் பட்டம் பெற்றவர் இவர். இவரை இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கும் வேலைக்கு அமர்த்தியதே பிரிட்டிஷ் அரசுதான்.
இரண்டாம் உலகப்போரின் முடிவில், யுத்தத்தில் பேரிழப்பைச் சந்தித்த பிரிட்டன், அன்றைக்கு மாறியிருந்த உலக சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒருபக்கம் சோவியத் சோசலிச நாடுகளின் எழுச்சி, உலகம் முழுவதும் பரவி வந்த கம்யூனிச இயக்கம், காலனி நாடுகளைப் புரட்சியை நோக்கி இழுத்துக் கொண்டிருந்தது. மறுபுறம் ஒப்பீட்டளவில் போரில் அதிக இழப்புகளைச் சந்தித்திராத, மிகப்பெரிய பொருளாதாரமாக வளர்ந்துவிட்டிருந்த அமெரிக்காவின் மேலாதிக்கத்தை மற்ற ஏகாதிபத்தியங்கள் ஏற்க வேண்டிய நிர்பந்தம் என அன்றைக்கு உலக நிலைமை மாறியிருந்தது.
அந்தச் சூழலில் காலனி நாடுகளில் கம்யூனிசப் புரட்சிகள் தோன்றாமல் இருக்கும் பொருட்டு அவற்றினை பிரிட்டன் தனது நேரடிக் காலனிகளாக வைத்திருக்காமல் விடுதலை செய்ய வேண்டும், அதன் சந்தைகளைத் தனக்கும் திறந்துவிட வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து நிபந்தித்து வந்தது. அவ்வாறு காலனி நாடுகளை விடுவிக்கும் போது அங்கே எப்படிப்பட்ட அரசு அமைய வேண்டும் என்பதற்கு பிரிட்டன் ஒரு திட்டம் வைத்திருந்தது. அந்த திட்டத்தின்படித்தான் பி.என்.ராவ் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார். பி.என். ராவ் இந்தியாவிற்கான அரசியலமைப்புச் சட்டத்தை மட்டும் எழுதவில்லை, அன்றைக்கு பிரிட்டனின் மற்றொரு காலனி நாடாக இருந்த பர்மாவின் (மியான்மர்) அரசியலமைப்புச் சட்டத்தையும் அவர்தான் உருவாக்கினார்.
பிரிட்டனின் பாராளுமன்ற முறையை அப்படியே தழுவி, பி.என்.ராவ் இந்திய அரசமைப்பை உருவாக்கினார். இங்கிலாந்து ராணிக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை, அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதிக்கும் மாநில கவர்னர்களுக்கும் கிடைக்க வழிசெய்து கொடுத்தார். சட்டம் இயற்றும் உறுப்பு (legislative), அதனை நடைமுறைப்படுத்தும் உறுப்பு (executive), நீதி வழங்கும் உறுப்பு ( judiciary) என்று ஏகாதிபத்தியங்களின் வசதிக்கேற்ப தனித்தனியாக செயல்படும் மூன்று உறுப்புகளாக அரசமைப்பைப் பிரித்ததுடன், சட்டம் இயற்றும் உறுப்பை மட்டும் மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையிலும் அவர்களை விட அதிகாரம் படைத்த நடைமுறைப்படுத்தும் உறுப்பையும், நீதித்துறையையும் மக்கள் தேர்ந்தெடுக்கத் தேவையில்லை என்றாக்கினார்.
பி.என். ராவைப் போன்றே தனக்கு விசுவாசமான அதிகாரிகளைக் கொண்டு தனது காலனி நாடுகள் அனைத்திற்கும் அவற்றின் தன்மைக்கு ஏற்றது போன்ற அரசியல் அமைப்பை பிரிட்டன் உருவாக்கியது. பாகிஸ்தான், கானா, மலாய், நேபாளம் ஆகிய நாடுகளின் அரசியலமைப்பை சர் ஐவர் ஜென்னிங்க்ஸ் என்ற அதிகாரிதான் எழுதினார். இலங்கை மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் அரசியலமைப்பை எழுதியவர் சர் சிட்னி ஆடம்ஸ். நைஜீரியா, கென்யா, ஜமாய்கா போன்ற நாடுகளின் அரசியலமைப்பை எழுதியவர் சர் கென்னத் ராபர்ட்ஸ் விரே என்ற ஆங்கிலேய அதிகாரியாவார். காலனி நாடுகளில் பிரிட்டனின் நலனைப் பாதுகாக்கவும், அவை ஏகாதிபத்தியங்களின் பிடியிலிருந்து நழுவிவிடாமல் இருக்கவும் ஏற்ற வகையில் அந்நாடுகளின் அரசியலமைப்பு இந்த அதிகாரிகளால் உருவாக்கப்பட்டது.
அவ்வாறு வடிவமைக்கப்பட்ட அரசியல் சாசனத்தைத்தான், இந்திய அரசியல் நிணய சபை விவாதித்தது. இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களும் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லர். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அன்றைக்கு இருந்த மாகாண சபைகளின் உறுப்பினர்களால் தேர்தெடுக்கப்பட்டவர்கள் – இன்றைய ராஜ்யசபா உறுப்பினர்களைப் போன்றவர்கள், நேரடி பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இல்லாத, சமஸ்தானங்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரிட்டிஷ் அரசால் நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள் அடங்கியது தான் இந்திய அரசியல் நிர்ணய சபை. அன்றைக்கு மாகாண சபைத் தேர்தல்களில் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை கிடையாது. சொத்துவரி கட்டுபவர்களால் மட்டுமே வாக்களிக்க முடியும். அத்தகைய மாகாண சபை உறுப்பினர்களால் அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாகவும் இல்லை, சாமானிய மக்களின் நலனைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாகவும் இல்லை. பார்ப்பன வக்கீல்கள், ஜமீன்தார்கள், தரகு முதலாளிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள் இவர்கள்தான் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள். கிட்டத்தட்ட முன்னூறு பேர் இருந்த இந்தச் சபையில் 5 சதவீதம் பேர்தான் பெண்கள். தொழிலாளர்களையும், விவசாயிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் அதற்கும் கீழான எண்ணிக்கையிலேயே இருந்தனர்.
இந்தச் சபையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த விவாதங்களுக்குப் பிறகு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பது சம்பிரதாயத்திற்கு நடத்தப்பட்டது பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட 7 ஆயிரத்து சொட்சம் கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டு அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில் நிறைவேற்றப்பட்டது போன்றே, ஏகாதிபத்தியங்களின் ஒப்புதலுடன், அவர்களது நலனைப் பாதுகாக்கின்ற வகையில் பிரிட்டனின் அனைத்து காலனி நாடுகளுக்கும் அடுத்தடுத்து அரசியல் அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
இது காலனி நாடுகளின் ஜனநாயகத்தின் கதை என்றால், மேற்கத்திய நாடுகளில் ஜனநாயகத்தின் அர்த்தம் என்பது வேறு வகையில் இருக்கிறது. மேற்குலகின் ஜனநாயகம் என்பது சொத்துக்களை பாதுகாக்கும் ஜனநாயகமே அன்றி வேறில்லை. இன்றைக்கு உலகின் மிகப்பெரிய ஜன நாயக நாடு என மார்தட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்க ஜனநாயகத்தின் அடிப்படை என்பது தனியார் நிறுவனங்கள் சொத்துக்களை வாங்கி விற்கவும், கைப்பற்றி வைத்திருக்கவும், முதலீடு செய்து விரிவுபடுத்தவும் உதவுவது. சுருக்கமாகச் சொன்னால் முதலாளிகளுக்குச் சொத்துரிமையை உருவாக்கிக் கொடுத்து அதனைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டவையே மேற்குலகின் ஜனநாயகம் ஆகும். பிரிட்டனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களை எப்படிப் பாதுகாப்பது, பிரித்துக் கொள்வது என்பதை வகுத்துச் சொன்னதுதான், அமெரிக்க ஜனநாயகம், அதனை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதுதான் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம்.
இவற்றிற்கெல்லாம் மாறாக சோவியத் ஜனநாயகம் என்பது மனிதனை மனிதன் சுரண்டுவதை ஒழிப்பது, மக்கள் வர்க்கமாக பிளவுபடுவதை ஒழிப்பது, சுரண்டல்காரர்கள் மீது ஒடுக்குமுறையைப் பயன்படுத்துவது, சோசலிச சமுதாயத்தை உருவாக்குவது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
இரஷ்ய சோசலிசப் புரட்சிக்குப் பிறகு மூன்று அரசியலமைப்புகள் உருவாக்கப்பட்டன. புரட்சி நடந்த உடனேயே உருவாக்கப்பட்டது, ரஷ்ய சோவியத் கூட்டாட்சி சோசலிச குடியரசு என்ற அதன் முக்கிய நோக்கம் இளம் புரட்சிகர அரசைப் பாதுகாப்பது, சோசலிசத்தைப் பாதுகாப்பது. அதன் பின்னர் மற்ற நாடுகளும் விடுவிக்கப்பட்டு சோவியத் யூனியன் உருவாக்கப்பட்ட பிறகு 1924ல் சோவியத் யூனியன் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. உலகில் சுரண்டல் அமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஏகாதிபத்திய நாடுகளும், அவற்றால் சுரண்டப்படும் காலனிய, அரைக்காலனிய நாடுகளும் அடங்கிய இரண்டு முகாம்கள் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அந்த அரசியலமைப்புச் சட்டம் ஏகாதிபத்திய நாடுகளின் முகாமிற்கு எதிராக சோசலிச நாடுகளின் முகாமை உருவாக்கிட உறுதியேற்றது.
அதன் பிறகு 1936ல் கஜக்கிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிக்கிஸ்தான், துருக்மேனிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய முழுமையான சோவியத் யூனியானான பிறகு ஒரு அரசியலமைப்புச் சட்டம் எல்லா நாட்டு உழைக்கும் மக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது. இதற்கு முந்தைய அரசியலமைப்புகள் அனைத்தும் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறிச் சென்றுகொண்டிருந்த பாதையில் உழைக்கும் மக்களின் நலனைப் பாதுகாக்கின்ற வகையில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டங்கள். ஆனால் 1936ல் உருவாக்கப்பட்டதுதான் சோசலிச அரசின் அரசியலமைப்புச் சட்டம். இதுதான் உண்மையான ஜனநாயகம் என்றால் அது சோசலிச ஜனநாயகம் தான் என்பதை உரத்துச் சொன்னது.
சோசலிச அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் 6 கோடிப் பிரதிகள் அச்சிடப்பட்டு அனைத்து உறுப்பு நாடுகளின் மக்கள் மத்தியிலும் சுற்றுக்கு விடப்பட்டன. இது தவிர அந்நாடுகளில் இருந்த பத்தாயிரம் செய்தி நிறுவனங்களால் மேலும் 3.7 கோடிப் பிரதிகள் அச்சிடப்பட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டன. சோவியத் ஒன்றியம் முழுவதிலும் நடந்த அரசியலமைப்புச் சட்டம் குறித்த விவாதக் கூட்டங்களில் உழைக்கும் மக்கள் பங்கெடுத்து அது குறித்து விவாதித்தனர். ஒட்டுமொத்தமாக 5,27,000 கூட்டங்கள் நடத்தப்பட்டன அவற்றில் மொத்தம் 3.65 கோடி மக்கள் பங்கெடுத்து தங்களது கருத்துக்களைக் கூறினார்கள். இந்தக் கூட்டங்களில் இருந்து 1,54,000 கருத்துக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த அரசியலமைப்பை உருவாக்க அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபைக்கு எல்லா உறுப்பு நாடுகளிலும் இருந்து மொத்தமாக 2016 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர். 63 தேசிய இனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இவர்களில் 419 பேர் (20%) பெண்கள். அதிலும் 177 பேர் கிராமப்புறப் பெண்கள்.
பிரதிநிதிகளாக வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் உற்பத்தியில் சாதனை செய்த, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிய, அதன் காரணமாகப் புகழ்பெற்ற சாதாரண உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 19% ஆலைத்தொழிலாளர்கள், 14% விவசாயிகள், 16% கிராம மற்றும் நகர நிர்வாக தலைவர்கள், 18% மாவட்ட அரசு உறுப்பினர்கள், 16% கட்சி மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள், 7% செம்படை உறுப்பினர்கள், 5% தொழிற்சாலை நிர்வாகிகளாக இருந்தவர்கள், 5% விஞ்ஞானிகள், கலைஞர்கள், பொறியாளர்கள் இதுதான் சோசலிச அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களின் வர்க்கப் பிரிவு.
இந்த அரசியலமைப்பு உருவாக்கிய அரசின் வடிவமானது, கூட்டாட்சி பன்னாட்டு அரசு ( Federal multinational state) என்ற அடிப்படையில் இருந்தது. பொருளாதாரம் மையப்படுத்தப்பட்டிருந்தாலும், அனைத்துத் தேசிய இனங்களுக்கும் பரந்த அளவிலான சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டிருந்தது. இந்த ஒன்றியத்திற்குள் 11 குடியரசுகள் அவர்களுக்கென சொந்த பிரதேசம், அரசியலமைப்புடன் இயங்கின. சிறுபான்மை தேசிய இனங்கள் மற்றும் மொழிகளுக்குச் சம உரிமைகள் வழங்கப்பட்டன.
இந்தியாவில் உள்ளது போன்று சட்டம் இயற்றத் தனி உறுப்பு அதனை நடைமுறைப்படுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத உறுப்பு, இவர்களுக்கு மேல் நின்றுகொண்டு நீதிபரிபாலனம் செய்யும் மற்றொரு உறுப்பு என்றில்லாமல் எல்லாவற்றையும் செய்வதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பாக சோசலிச அரசு உருவாக்கப்பட்டது.
சுப்ரீம் சோவியத்துதான் சோசலிச அரசின் நிர்வாக அமைப்பாகும். இது இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதலாவது, ஒன்றியங்களின் சோவியத் ( Soviet of Union). இது மக்கள் தொகையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. மூன்று லட்சம் மக்களுக்கு ஒரு பிரதிநிதி என்ற அடிப்படையில் இது அமைக்கப்பட்டது. இரண்டாவது தேசிய இனங்களின் சோவியத் ( Soviet of Nationalities). ஒன்றியத்தில் இருந்த 11 குடியரசுகளும் தலா 25 பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முடியும், இது தவிர தன்னாட்சி குடியரசுகளாக இருந்த தேசிய இனங்கள் 11 பிரதிநிதிகளையும், ஒவ்வொரு தன்னாட்சி மாகாணங்களும் ஐந்து பிரதிநிதிகளையும், நகரங்களை விடச் சற்று பெரியதாக, பெரும்பாலும் சில ஆயிரம் மக்கள்தொகை கொண்டதாகவும், ஆனால் ஒரு தனித்துவமான தேசியத்தையும் மொழியையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் இருந்த ஓர்க்குகளுக்கு தலா ஒரு பிரதிநிதி என்று இது எல்லாத் தேசிய இனங்களுக்கும் உரியப் பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.
இந்த இரண்டு சபைகளுக்கும் ஒரே அளவிலான அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக மிகப்பெரிய தேசிய இனங்களுக்கு நிகராக சிறிய தேசிய இனங்களின் குரல்களும் ஒலிக்க வகை செய்யப்பட்டிருந்தது.
ஜனநாயகத்தின் பிறப்பிடம் எனப் பீற்றிக் கொண்ட பிரான்சில் 1944ஆம் ஆண்டில்தான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. உலகிற்கே ஜனநாயக உரிமைகள் குறித்துப் பாடம் எடுத்த அமெரிக்காவில் 1965ல் தான் கறுப்பினத்தவர்களுக்கு முழுமையான வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால் சோவியத் ஒன்றியத்தில் 1936 அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைத்து வயது வந்த ஆண்களும் பெண்களும் வாக்களிக்கும் உரிமை நிலைநாட்டப்பட்டது.
மற்ற முதலாளித்துவ நாடுகளில் இல்லாத தனிமனிதரின் உரிமைகள் தெளிவாக சோவியத் சோசலிச அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டன. ஒவ்வொரு தனிமனிதருக்கும் வேலை செய்யும் உரிமை வழங்கப்பட்டது. வேலை செய்வது ஒருவரது உரிமையாகப் பார்க்கப்பட்டது, அதனை யாரும் மறுக்க முடியாது, வேலைவாய்ப்பின்மை என்பது ஒரு தனிமனிதனின் உரிமையைப் பரிப்பதாகும் என சோவியத் அரசியல் சட்டம் கூறியது.
வேலைசெய்வதற்கான உரிமையைப் போன்றே ஒவ்வொருவருக்கும் ஓய்வெடுப்பதற்கான உரிமையும் வழங்கப்பட்டது. வேலை நேரம் 7 மணி நேரமாகச் சுருக்கப்பட்டது. முதலாளித்துவ நாடுகளில் முன்னேப்போதும் கேட்டிராத சம்பளத்துடன் கூடிய விடுப்பு சட்டமாக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு ஓய்வரைகளும், கிளப்புகளும் கட்டாயமாக்கப்பட்டன.
வேலையை விட்டு ஓய்வு பெற்ற பிறகு, முதிய வயதில், உடல் நலம் குன்றும் போது, வேலை செய்ய முடியாமல் போகும்போது பராமரிக்கப்படுவதற்கான உரிமை வழங்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்த சமூக காப்பீடு (சோசியல் இன்சூரன்ஸ்) உருவாக்கப்பட்டது. இதனை அப்படியே காப்பியடித்து அமெரிக்காவில் பொருளாதாரப் பெருமந்தத்தின் போது சமூக பாதுகாப்பு (சோசியல் செக்யூரிட்டி நம்பர்) என்று கொண்டுவரப்பட்டது. ஆனால் இன்றுவரை அது வெறுமனே கண்துடைப்பாக மட்டுமே இருக்கிறது, மக்களின் வரிப்பணத்தில் ஒரு பகுதியைக் கொடுக்கும் வகையில் அமுல்படுத்தப்படுகிறது. ஆனால் சோவியத் ஒன்றியத்தில் நாட்டின் வளம் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானது என்பதன் அடிப்படையில் கொடுக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் சேவையல்ல உரிமை என சட்டமியற்றப்பட்டது. சமூக காப்பீட்டிற்கு நாட்டின் மொத்த வருவாயில் பத்தில் ஒரு பங்கு (10%) கொடுக்கப்பட்டது.
அனைவருக்கும் கல்வி உரிமை கொடுக்கப்பட்டது. ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை இலவச கல்வி. மதிய உணவு, பாடப் புத்தகங்கள், மற்றும் கல்வி உபகரணங்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை. இவை எல்லாம் உரிமை என்ற வரையறையில் அனைவருக்கும் கிடைக்கும். கல்வி ஊக்கத்தொகைக்கு மட்டுமே மொத்த பட்ஜெட்டில் 3 சதவீதம் ஒதுக்கப்பட்டது. இந்தியாவில் மன்மோகன் சிங் ஆட்சியின் போது 2009ஆம் ஆண்டில் பெயரளவிற்கு அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம், அதுவும் 8ம் வகுப்பு வரை மட்டும், கொண்டுவரப்பட்டது. மோடி பிரதமரான பிறகு அதுவும் தற்போது ஊற்றி முட்டப்பட்டு வருகிறது.
பெண்களுக்கான சமத்துவம் நிலைநாட்டப்பட்டது. ஆண்களுக்கு நிகரான வேலை, சம்பளம், கல்வி. ஒரே வேலைக்கு ஒரே ஊதியம். சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு. பிறந்த குழந்தை முதல் சிறுவர்கள் வரை, பராமரிப்பு இல்லங்கள். என அனைத்தும் சட்டத்தின் மூலம் உறுதிசெய்யப்பட்டது.
அனைத்துத் தேசிய இனங்களையும் சமமாக மதிக்கும், இனங்களின் சமத்துவ உரிமை சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இன வேற்றுமை பார்ப்பது தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்பட்டது. ஜெர்மனியில் நாஜிக்களின் ஆரிய வம்சாவளியினர் மட்டுமே குடிமக்கள் என சட்டமியற்றிய காலத்தில், அமெரிக்காவில் கறுப்பர்கள் மீதான பாகுபாடும் ஒடுக்குமுறையும் ஜிம் குரோ சட்டங்கள் மூலம் சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில் சோவியத் ஒன்றியம் இன வேற்றுமை பார்ப்பதை தண்டனைக்குரிய குற்றம் என்று கூறியது.
மனசாட்சி மற்றும் மத சுதந்திரம் சட்டப்பூர்வமாக்கப்பட்டது. குடிமக்கள் அனைவருக்கும் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றும் சுதந்திரம் வழங்கப்பட்டது. மதம் அரசில் இருந்தும், கல்வியில் இருந்தும் பிரித்து வைக்கப்பட்டது. மதப் பிரச்சாரத்திற்கு தடை, அதே சமயம் திருவிழாக்கள், மற்றும் மதச் சடங்குகளுக்கு அனுமதி. திருமணப் பந்தங்களை மத நிறுவனம் சான்றளிக்க வேண்டும் என்பது நீக்கம்.
பேச்சுரிமை, எழுத்துரிமை, கூடுவதற்கான உரிமை, தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் உரிமை அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. எழுதுபொருட்கள் (பேப்பர், மை) முதல் கூட்டம் நடத்த பொது இடங்கள், கட்டிடங்கள் வரை அனைத்தையும் கேட்டுப் பெறுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. இவை அனைத்தும் உழைக்கும் மக்களின் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்படும். யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. தொழிலாளர்களுக்குச் சங்கம் அமைக்கும் உரிமை சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது.
தன்னிச்சையான கைதுக்கு எதிரான உரிமை. கைது செய்யப்படுவதற்கு முன், முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. எந்த முகாந்திரமும் இல்லாமல் காவி பாசிஸ்டுகள் யாரை வேண்டுமானாலும் கைது செய்து விசாரணைக் கைதியாகவே ஆண்டுக்கணக்கில் சிறையில் வைத்திருப்பது சோவியத் ஒன்றிய சட்டங்களின் படி செல்லாது.
இது தவிர அடைக்கலம் கோரும் உரிமை, பொது சொத்துக்களைப் பாதுகாக்கும் கடமை, சோசலிசத்தைப் பாதுகாக்கும் கடமை என சோவியத் ஒன்றியத்தின் அரசியலமைப்பு அதன் குடிமக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை அளித்தது.
இவை அனைத்தையும் நம் இந்திய அரசியல் சாசனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போதுதான் நாம் மலையை மடுவுடன் ஒப்பிடுகிறோம் என்பது புரியும். காவி பாசிசத் தாக்குதலில் சிக்குண்டு, கிடைக்கின்ற, சிறிதளவு ஜனநாயகத்தைக் கூட மிகப்பெரிய விசயமாகக் கருதுகின்றவர்கள், சோவியத் அரசியலமைப்பு தனது குடிமக்களுக்கு அளித்த உரிமைகளை எண்ணிப்பார்த்தால் அந்த மயக்கத்திலிருந்து விடுபட முடியும்.
- அறிவு







