இந்தியாவின் மருத்துவத் தலைநகராக சென்னை கருதப்படுகிறது. இந்தப் ‘பெருமை’யை சென்னை பெற்றதற்கான முக்கிய காரணம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைதான். சென்னை வில்லிவாக்கத்துக்கு மருத்துவத் துறை சூட்டியிருக்கும் பெயர் “கிட்னிவாக்கம்”. அந்தளவிற்கு அங்குச் சிறுநீரக வியாபாரம் அரசிற்குத் தெரிந்தே நடந்தது. 2004-ஆம் ஆண்டு சுனாமி சென்னை மீனவர்களின் வாழ்க்கையைக் குலைத்துப் போட, வறுமையைச் சமாளிக்க மீனவப் பெண்கள் பலர் தங்கள் சிறுநீரகங்களை விற்றார்கள். அப்போதைய கமிஷனர், “29 மீனவப் பெண்களிடம் சிறுநீரகத் திருட்டு நடந்துள்ளது. சென்னையில் ஐந்து மருத்துவமனைகளும், மதுரையில் மூன்று மருத்துவமனைகளும் இதில் ஈடுபட்டுள்ளன என்று எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார். இத்திருட்டையொட்டி 13 மருத்துவமனைகளின் அங்கீகாரம் இரத்து செய்யப்பட்டாலும், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அனைவரும் தப்பித்துக் கொண்டனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுநீரகத் திருடர்கள் சென்னை கடற்கரையில் இருந்து தங்களின் முகாமைக் கோவை, ஈரோடு மற்றும் நாமக்கல்லிற்கு விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், ‘எனது கிட்னிக்கு 10 இலட்சம் ரூபாய் தருவதாகச் சொல்லிவிட்டு, 5 இலட்சம் ரூபாய் மட்டும் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள்…’ என்று பேசிய வீடியோ வைரலானது.
கடந்த ஜூலை 22-ஆம் தேதி, தமிழக அரசின் சுகாதார திட்ட இயக்குநர் வினீத் ஐ.ஏ.எஸ் தலைமையில் சிறப்புக்குழு ஒன்று இதனை நேரில்சென்று விசாரித்தது. அதில், ஆலம்பாளையம், அன்னை சத்யா நகர், காவிரி ஆர்.எஸ்., குமாரபாளையம், வெப்படை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குடும்பத் தேவைக்காக மகளிர் குழுக்களில் கடன் வாங்கியதாகவும், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்பதால் தங்களுடைய சிறுநீரகத்தை விற்றதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், திருச்சி சிதார் மருத்துவமனை மற்றும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில்தான் பெரும்பாலான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. எனவே, அந்த மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான அனுமதியை இரத்து செய்யும்படி சிறப்புக்குழு அரசாங்கத்திற்குப் பரிந்துரைத்தது. அதை ஏற்றுக்கொண்டு, அந்த மருத்துவமனைகளுக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யத் தடை போட்டிருக்கிறது.
நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுவுற மாதிரி அழு, நான் சமாதான படுத்துற மாதிரி சமாதானபடுத்துறேன் என்ற சொலவடையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதேபோலத்தான் இது இருக்கிறது.
சிறுநீரகத் திருட்டு குறித்த காணொளி வெளியில் வந்தவுடன், அதனைக் கண்டறிய ஒரு சிறப்புக்குழு அமைக்கப்படுகிறது (நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்). அது தனது விசாரணையில் சிறுநீரகத் திருட்டிற்கு காரணமான இரண்டு மருத்துவமனைகளின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான அனுமதியை இரத்து செய்யும்படி பரிந்துரைக்கிறது (நீ அழுவுற மாதிரி அழு). பரிந்துரையை ஏற்று அரசாங்கம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான அனுமதியை மட்டும் இரத்து செய்து, பிற உறுப்பு மாற்று அறுவை சிசிச்சையை தொடருவதற்கு வழிவகை செய்துகொடுத்துள்ளது (நான் சமாதான படுத்துற மாதிரி சமாதானபடுத்துறேன்). திராவிட மாடல் அரசு பல் இழிக்கத் தொடங்கிய இடம் இதுதான்.
தற்போது தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சிறுநீரகத் திருட்டு தொடர்பாக அதிமுக கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். அதில் ”சிறுநீரக விற்பனை இப்போது மட்டுமின்றி முந்தைய காலங்களிலும் நடந்துள்ளது. நாமக்கல்லில் சிறுநீரகத் திருட்டு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர். புகாருக்குள்ளான இரண்டு மருத்துவமனைகளின் உரிமங்கள் பாகுபாடின்றி இரத்து செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் சொல்லவதை ”சிறுநீரகத்திருட்டு திமுக ஆட்சிக் காலத்தில் மட்டும் நடைபெறவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்திலும் நடைபெற்றுள்ளது. எனவே நீங்கள் நினைக்கின்ற மாதிரி இது ஒன்றும் பெரிய குற்றமில்லை. இருந்தாலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றபடி எங்கள் கட்சிக்காரருடைய மருத்துவமனை என்பதற்காகச் சலுகை எதுவும் காட்டவில்லை” என்று புரிந்துகொள்ளலாம். மற்றபடி இது சிறுநீரகத் ”திருட்டு” கிடையாது. சிறுநீரக ”முறைகேடு” நடந்துள்ளது.
சிறுநீரகத் திருட்டில் ஈடுபட்டுள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, மண்ணச்சநல்லூர் தி.மு.க எம்.எல்.ஏ கதிரவனின் குடும்பத்துக்குச் சொந்தமானது என்பதை அனைவரும் அறிவோம். சமீபத்தில் திருப்பத்தூர் மக்களிடையே இதுகுறித்து அவர் பேசும்போது ”மருந்துச் செலவு, மருத்துவருக்கு கட்டணம் போக இரண்டு அல்லது மூன்று இலட்சம் தான் கிடைக்கும் என்றும், இதுவரை 252 பேருக்குத்தான் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்திருப்பதாகச் சர்வ சாதாரணமாகப் பேசிய காணொளியில் தொடர்ச்சியாகப் பேசும்பொழுது தனது அப்பா வைத்திருக்கக்கூடிய ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை 14.5 கோடி ரூபாய் எனவும், அதனை தான் வாங்கவேண்டும் என்றால் 252 பேரின் சிறுநீரகம் போதாது, திருப்பத்தூரிலுள்ள மொத்தப்பேரின் சிறுநீரகத்தையும் கழட்டவேண்டும் என்கிறார். திராவிட மாடல் அரசின் யோக்கியதையை இதைவிட யாரும் வெளியிலிருந்து அம்பலப்படுத்திவிட முடியாது.
இவ்வளவுக்குப்பிறகு திராவிட மாடல் அரசின் நாயகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினால் சும்மா இருக்கமுடியுமா? தனது நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்தியக் காவல் பணி ஆகியவற்றைக்கொண்டு சிறுநீரக திருட்டை முனைமழுங்கச் செய்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க பேச்சாளர் ஆனந்தனைப்போல, பல புரோக்கர்களும் சட்டவிரோத சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டிருப்பதைக் கண்டுபிடித்த அதிகாரிகள், பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் கடந்த ஜூலை 17-ஆம் தேதி புகாரளித்துள்ளனர். புகாரளிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குமேலான நிலையில் போலீஸார் எஃப்.ஐ.ஆர் கூட பதிவுசெய்யவில்லை.
அதேபோல், சிறுநீரகத் திருட்டு வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, பரமக்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறுநீரகத் திருட்டு குறித்து விசாரிப்பதற்காக சிறப்புப் புலனாய்வுக்குழு ஒன்றை அமைத்து, தங்களுடைய முதற்கட்ட அறிக்கையை செப்டம்பர் 24-ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சிறப்புப் புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.
இல்லம் தேடி கல்வி, உங்கள் தொகுதி முதல்வர், புதுமைப்பெண், சுமார்ட் கிளாஸ், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா பேருந்து, வட்டியில்லாக் கடன், டிஜிட்டல் ஆட்சி, மாதிரி பள்ளிகள், EV Policy 2.0 என பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி இதுதான் திராவிட மாடல் அரசு எனக்கூறி வருகிறார்கள். இது அப்பட்டமான தனியார்மயமாக்கமேயற்றி வேறொன்றுமில்லை.
இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களைவிட GDP-யில் மிக அதிகமாக உலக நாடுகளே வியக்கும் அளவிற்கு 10 சதவிகிதத்திற்குமேல் தமிழ்நாடு இருக்கிறது. இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடு, பொருளாதாரத்தில் சிறந்த தமிழ்நாடு எனப்பீற்றித்திரிகிறார்கள்.
கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில்தான் கரூர் துயரச்சம்பவம் நடந்தது என்ற உண்மை ஆட்சியாளர்களுக்கு எதை உணர்த்தியது. ஏழையால் வேலை செய்து வாழ முடியாத சமுக அவலம், அந்தச் சமுக அவலத்தைப் பணமாக்கிக் கொள்ளும் இன்னொரு அவலம். இந்தச் சமூக அவலத்தில் தமிழ் நாட்டில் சிறுநீரகத் திருட்டு தழைத்தோங்குகிறது. GDP சேர்த்தால் பல புள்ளிகள் அள்ளலாம். விவசாயிகள் முதல், நெசவாளிகள், மீனவர்கள், மலை வாழ் மக்கள் எனப் பல இலட்சம் பேர் சிறுநீரக விற்பனை செய்து தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் ’பங்காற்றுகின்றனர்’.
- மகேஷ்
செய்தி ஆதாரம்:
https://www.youtube.com/watch?v=Gksy6VuaDNg
https://www.youtube.com/watch?v=jozaU708pX4
https://www.vikatan.com/government-and-politics/governance/special-story-about-kidney-theft-issue
https://www.youtube.com/watch?v=jfyOd9B76x0
https://www.youtube.com/watch?v=PucA5DkWQeo
https://www.youtube.com/watch?v=KQWMDIBpv6g
https://www.youtube.com/watch?v=J5rMJ5-D99U
https://www.bbc.com/tamil/articles/c1ejxn52qzvo





