யூ.ஜி.சி.இன் புதிய பாடத்திட்டம்
வேதகால அனுமானங்களை அறிவியலாக்குவதற்கும் இந்து தேசவெறி பிரச்சாரத்திற்குமான மற்றொருக் கடவுச் சீட்டு

கனதரின் அணுக்கோட்பாடு, சங்கராச்சாரியாரின் வேதகணிதத்திற்கும் நவீன அறிவியலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற உண்மை தெரிந்த போதிலும், வேதகால அனுமானங்களை அறிவியல் என்றும் நவீன அறிவியலுக்கு முன்னோடியே இந்திய அறிவு பரம்பரைதான் என்ற கருத்தை வலுக்கட்டாயமாக கல்லூரி பாடத்திட்டத்திற்குள் யுஜிசி மூலம் திணிப்பதற்கான காரணம் என்ன? போலி தேசிய பெருமை, முஸ்லீம் வெறுப்பு, இந்து தேசிய வெறியை மாணவர்களிடையே பரப்புவது ஆகியவற்றின் மூலம் காவி பாசிச அரசியலுக்கான பொதுக் கருத்தை உருவாக்குவது தான் மோடி-அமித்ஷா கும்பலின் நோக்கம் ஆகும்.

இந்தியாவில், படித்த இளைஞர்களுக்கு முறையான வேலையில்லை. இதன் அளவு ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமாகும். அதாவது படித்த பாதிபேருக்கு தகுதியான வேலையில்லை. அதுவும் இளங்கலை அறிவியல் மற்றும் கலை சார்ந்த படிப்பு படித்தவர்களாக இருந்தால் வேலை கிடைக்க வாய்ப்பே இல்லை. ஏதாவது சொந்த தொழில்தான் பார்க்கவேண்டும். அக்குறையை போக்கி, பஞ்சாங்கம் பார்ப்பது, கல்யாணம், காதுகுத்து மற்றும் கருமாதிக்கு நல்ல நேரம் பார்த்துக்கொடுப்பது, குழந்தைகளுக்கு கூட்டல், கழித்தல் (வேதகணிதம்) சொல்லிக் கொடுப்பது, பழம்பெருமைகளைப் (புராணப் புனைக்கதைகளை) கற்றுக்கொண்டு பாஜக-ஆர்எஸ்எஸ்-இன் அடியாட்படையாக மாறுவது போன்ற இந்தியாவின் ‘உயரிய வேலைகளுக்கு’ மாணவர்களைத் தயார்படுத்துவதற்கான திட்டத்தை யுஜிசி வாயிலாக முன்மொழிந்துள்ளது மோடி-அமித்ஷா கும்பல்.

இளங்கலை கணிதம், வேதியியல், வணிகம், அரசியல் அறிவியல் உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளுக்கான பாடத்திட்டத்தை  கற்றல் வெளிப்பாடு அடிப்படையிலான பாடத்திட்ட கட்டமைப்பு (Learning Outcome Based Curiculam Framework-LOFC) என்ற பெயரிலான அறிக்கையாக கடந்த ஆகஸ்ட் மாதம் யுஜிசி வெளியிட்டது. கணிசமான அளவு வேத-புராணக் கதைகளை அறிவியல் பாடமாகக் கொண்டுள்ள இப்பாடத்திட்டம், மாணவர்களின் கற்றல் வெளிப்பாடுகளை மேம்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக யுஜிசி கூறுகிறது. 

வணிகவியல் பாடத்தில் “இராமராஜ்யம் சொல்லும் Corporate Social Responsibility, பகவத் கீதை மற்றும் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் முன்வைக்கும் மேலாண்மை கருத்துக்கள்” என்ற பாடமும் இரங்கோலி மற்றும் கோலம் போடுவதில் இருக்கக்கூடிய கணித முறை, Algeebra, Polynomoial, Geomentry, Computational method, ஆகிய கணிதப்பாடங்கள் குறித்து அறிந்து கொள்ள துல சூத்ரா, பரவர்த்ய யொஜயேத் சூத்ரா, பாஸ்கஷார்யாவின் லீலாவதி மற்றும் நேரத்தை கணக்கிடுவதற்கான கல ஞானனா போன்ற சமஸ்கிருத நூல்கள் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

வேதியியல் பாடத்திட்டமானது சரஸ்வதி வந்தனத்தோடு தொடங்குகிறது. இரசவாதம், கனதரின் அணுக் கோட்பாடு (Kanada’s atomic theory), குண்டலினி, பண்டைய காலத்தில் மதுபானங்கள் தயாரிப்பு, ஆயுர்வேதம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது. அரசியல் அறிவியலில் சாவர்க்கர் மற்றும் தீனதயாள் உபாத்தியாயா எழுதிய நூல்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை சில உதாரணங்கள் மட்டுமே. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் இந்திய அறிவுப் பாரம்பரியம் என்ற பெயரில் வேத-புராண புனைக்கதைகளையும் சமஸ்கிருத நூல்களையும் அறிவியல் பாடங்களாக சேர்த்துள்ளனர். ஆரம்பத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் நுழைக்கப்பட்ட வேத-புராண புனைவுகள் பிறகு பொறியியல் படிப்புகளில் விருப்பப்பாடங்களாக திணிக்கப்பட்டது. தற்போது இளங்கலை மற்றும் முதுகலை கலை அறிவியல் படிப்புகளிலும் பாடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது மோடி-அமித்ஷா கும்பல் செய்துவரும் கல்வியைக் காவிமயமாக்கும் திட்டத்தின் தொடர்ச்சி என்பது ஒருபுறமிருந்தாலும், யுஜிசி-இன் ”வல்லுநர்கள் குழு” சொல்வதைப் போல, இயற்கைக் குறித்து நவீன அறிவியல் வெளிக்கொணர்ந்துள்ள உண்மைகளும் வேத-புராண நூல்களில் சொல்லப்பட்டுள்ளவையும் ஒன்றா? அல்லது வேத-புராண-சமஸ்கிருத நூல்களில் சொல்லப்பட்டுள்ளவைகளாக காவி கும்பல் பிதற்றுபவைகளுக்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் உண்டா? இல்லை என்பதே ஆய்வாளர்களின் பதில்.

* * * * * *

உதாரணமாக வேதியியல் பாடத்தில் சொல்லப்பட்டுள்ள அணுக் கோட்பாட்டை(Atomic theory) எடுத்துக்கொள்வோம்.

வைசேஷிக தத்துவத்தை உருவாக்கியவரான கனத மகரிஷி தான் (~600BCE) அணுக்கோட்பாட்டை முதன்முதலாக உருவாக்கியவர் என்று சொல்லப்படுகிறது. கனதரின் கருத்துப்படி, அணு என்பது பிளக்க முடியாத, உடைக்க முடியாத மற்றும் கண்ணுக்கு புலப்படாத மிகச் சிறிய பொருள். பூமி, காற்று, நெருப்பு மற்றும் நீர் ஆகியவற்றின் அணுக்கள் இணைந்து தான் பொருட்களுக்கான வண்ணம், சுவை மற்றும் தொடு உணர்வு போன்றவைகளை தருவதாகக் கனதர் கருதினார்.

நவீன அறிவியலில், அணுவைப் பற்றிய முழுப் பரிமாணமும் 1914 ஆம் ஆண்டு வாக்கில் தான் கிடைக்கப்பெற்றது. அதற்கு முன்பு, ஏறத்தாழ 80 வருடங்களாக நடந்து வந்த அறிவியல் ஆய்வுகளின் வளர்ச்சி போக்கில் அதன் முடிவுகளின் அடிப்படையில் போர் (Bohr) என்ற அறிவியல் அறிஞர் தான் அணுவைப் பற்றிய முழுமையான கோட்பாட்டை முன்வைத்தார். அதன் பிறகு வந்த குவாண்டம் இயற்பியலின் வளர்ச்சியானது வெவ்வேறு தனிமங்களிலுள்ள அணுக்களின் தன்மைகள் குறித்து அறிந்து கொள்ள உதவி செய்தது. அணுவைப் பற்றிய இக்கோட்பாடுகள் ஆய்வுகள் மூலமாகவும் உறுதிசெய்யப்பட்டது.

அணு என்பது நேர் மற்றும் எதிர் மின்னூட்டம் கொண்ட மின் துகள்களின் அமைப்பு என்றும் வெவ்வேறு தனிமங்கள் வெவ்வேறு எண்ணிக்கையிலான நேர் மற்றும் எதிர் மின் துகள்களை கொண்டுள்ளன என்றும் இவற்றின் எண்ணிக்கை பொருள்களின் தன்மையை தீர்மானிக்கிறது என்பதும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. அணுவைப் பற்றி நவீன அறிவியலின் மூலமாகப் பெறப்பட்ட இந்த அடிப்படை புரிதலே வெவ்வேறு பண்புகளைக் கொண்ட ஆயிரக்கணக்கானப் பருப்பொருள்களை (functional materials) உருவாக்குவதை சாத்தியமாக்கியுள்ளது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் கணிப்பொறிகளில் உள்ள குறைக்கடத்திகள் (semiconductors), செல்போன்களில் உள்ள பேட்டரிகள் (Battery), அதிக வெப்பநிலையைத் தடுப்பதற்காக செயற்கைக்கோள்களில் பயன்படுத்தப்படும் செராமிக்குகள் (high temperature insulators), தொலைத்தொடர்பு சாதனங்களில்  உள்ள டையெலக்டிரிக் பொருள்கள் (Dielectric materials), புதிய மருந்துப்பொருள்கள் (medicine and bio materials) என பல உதாரணங்களைத் தரமுடியும்.

கனதர் கையில் உணவை ஏந்தி நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​அதை சிறு துண்டுகளாக உடைத்துக்கொண்டே போனாராம். அப்போது, ​​உணவை மேலும் பிரிக்க முடியாது என்பதை உணர்ந்தாராம். அந்த தருணத்திலிருந்து, பிரிக்க முடியாத ஒரு துகள் பற்றிய கருத்தை, அதாவது அணுவைப் பற்றிய கருத்தை, உருவாக்கினாராம்.

இந்தக் கதையை நாம் ஏற்றுக்கொண்டாலும் கூட, 10-10 மி அளவுள்ள அணுவை கதனரால் எவ்வாறு பார்த்திருக்க முடியும்? மனிதக் கண்களால் 0.1 மிமி அளவுக்கு கீழுள்ளப் பொருளைப் பார்க்க முடியாது. கனதர் வாழ்ந்த  காலத்தில் நுண்ணோக்கிகள் (Microscope) இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே, கனதரை பொருத்தவரை அணு என்பது ஏறத்தாழ 0.1 மிமி அளவுள்ள ஒரு துகளாகத்தான் இருக்கமுடியும். அதற்கு கீழுள்ள பொருள்களை அவரால் காணமுடிந்ததென்றால் அது எவ்வாறு நடந்ததென்பதை யுஜிசி-யும் அதன் வல்லுநர் குழுவும் தான் ஆதாரங்களுடன் விளக்க வேண்டும்.

நவீன அறிவியல் சோதனைகளின் படி அணுவின் ஆரமானது 0.0000001 மிமி (10-10 மி). மேலும் கனதர் கூறுவது போல பூமி, நீர், காற்று, நெருப்பு ஆகியவற்றுக்கென தனியாக அணுக்கள் கிடையாது. உதாரணமாக, காற்று என்பதே நைட்ரஜன், ஆக்சிஜன், ஆர்கான் போன்ற அணுக்களையும் ஹைட்ரஜன் டை ஆக்ஸைடு, கார்பன் டை ஆக்ஸைடு போன்ற மூலக்கூறுகளும் சேர்ந்ததுதான். மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட அணுக்கள் சேரும்போது எவ்வாறு எலக்ட்ரான்களை பங்கிட்டுக் கொள்கின்றன என்பதிலிருந்தே அப்பொருளின் பண்புகள் தீர்மானிக்கப்படுகின்றன. பூமி, நீர், காற்று, நெருப்பு ஆகியவற்றின் காரணமாக பொருளின் பண்புகள் தீர்மானிக்கப்படுவதில்லை. எனவே போர்-இன் அணுக்கோட்பாடு என்பது  கனதர் சொன்ன அணுக்கோட்பாட்டிலிருந்து (பெயரை தவிர) முற்றிலும் வேறுபட்டதாகவே உள்ளது.  

எனவே, கனதர் தனது புலனறிவிலிருந்தும் அனுபவத்திலிருந்தும் பிரிக்க முடியாத மிகச்சிறிய துகள் ஒன்று உள்ளது என்பதை அனுமானித்திருக்க முடியும்.  ஆனால் அது நவீன அறிவியல் கூறுகின்ற அணுக் கோட்பாட்டை ஒத்தது என்று கூறுவது அறிவு நாணயமற்ற செயலாகும்.

கனதரைப் போலவே புத்த, ஜைன தத்துவங்களும் அணுவைப் பற்றி பேசியிருக்கின்றன. அதே காலகட்டத்தில் வாழ்ந்த கிரேக்க தத்துவ அறிஞரான டெமாக்ரடிஸ் அணுவைப் பற்றி பேசியிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் இச்சமூகங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் நாங்கள் தான் அணுவைக் கணடுப்பிடித்தவர்கள் என்று தற்பெருமை அடித்துக்கொள்வதில்லை.

பண்டைய சமூகங்களில் வாழ்ந்தவர்கள், இயற்கையைப் பற்றி தங்களுடைய புலனறிவிலிருந்து பெறப்பட்ட அனுபவத்தைக் கொண்டு, அனுமானித்து சொல்லப்பட்ட அதே வேளையில் சோதனைகள் மூலம் நிரூபிக்கப்படாத பல கருத்துக்களை, பருப்பொருளின் இயக்கத்தைப் பற்றியும் மிகவும் சிக்கலான அதன் தொடர்புகளைப் பற்றியும் அதற்கான காரண-காரியங்கள் பற்றியும் உறுதியான சோதனை முடிவுகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட கோட்பாட்டோடு முடிவுகளோடு நேரடியாக தொடர்பு படுத்தி, அதற்கான காரண-காரியங்களையும் ஆய்வுமுறைகளையும் புறந்தள்ளி விட்டு, வேத-புராண இலக்கியங்கள் அனைத்தும் அறிவியல் உண்மை என்ற பொய் பிரச்சாரமானது இந்திய ஆளும் வர்க்கத்தினரால் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வந்திருக்கிறது. அதையே ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் இந்திய அறிவுப் பாரம்பரியம் என்ற பெயரில் இன்று பள்ளி கல்லூரிகளில் பாடமாக்கி வருகிறது.

* * * * * *

கணிதபாடத்திட்டத்தை திரும்பப்பெற வேண்டும், கணித பேராசிரியர்களைக் கொண்ட புதிய கமிட்டியை அமைத்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கவேண்டும் என்று 900 மேற்பட்ட கணித பேராசிரியர்கள் யுஜிசி-க்கு கோரிக்கை வைத்துள்ளனர். தங்களது அறிக்கையில் “கணித பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாடங்கள் மற்றும் அதன் உள்ளடக்கங்கள் மிகவும் பழையது என்றும் அது மாணவர்களின் மேற்படிப்பிற்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமானதாக இல்லை என்றும் விருப்பப் பாடப்பிரிவில்  கொடுக்கப்பட்டுள்ளப் பாடங்கள் பள்ளி மாணவர்களுக்கான தரத்தில் இருப்பதாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் 1940-க்கு முந்தையது என்றும்” கூறியுள்ளனர். யுஜிசி முன்மொழிந்துள்ள கணிதப் பாடத்திட்டம் என்பது ஏற்கனவே உள்ளதையும் நாசமாக்குகிறது என்பது தான் இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு.

யுஜிசி முன்மொழிந்துள்ள கணித பாடத்திட்டம் “காலாவதியானது மற்றும் பிற்போக்குத்தனமானது” என்கிறார் கணிதவியல் ஆராய்ச்சியாளர் பேரா. ஆம்பர் ஹபீப். மேலும் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள “வேத கணிதம் என்பது உண்மையில் 20-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும். இப்புத்தகம், கூட்டல், வகுத்தல், பெருக்கல் போன்ற கணக்கீடுகளை செய்வதற்கான எளிய வழிமுறைகளின் தொகுப்பாகும். ஆனால் அந்த புத்தகத்தின் ஆசிரியரோ இந்த எளிய வழிமுறைகள் இன்னும் வெளிவராத வேத ஸ்லோகங்களிலிருந்து பெற்றதாக பிரச்சாரம் செய்துவந்தார். அந்த வேத ஸ்லோகங்களை இன்றுவரை யாருமே பார்த்ததில்லை. இதற்கும் வேதத்திற்கும் பண்டைய இந்திய கணிதத்திற்கும் தொடர்பும் இல்லை.” என்கிறார்.

பேரா. ஹபீப் குறிப்பிடும் புத்தகத்தின் ஆசிரியர் வேறுயாருமல்ல, லோக குருக்களில் ஒருவரான பூரி கோவர்த்தன மடத்தின் முன்னாள் சங்கராச்சாரி பாரதி கிருஷ்ண திர்தாஜி. இவரை வேதகணிதத்தின் தந்தை என்று கொண்டாடுகின்றனர்.

அணுக்கோட்பாட்டிற்கோ அல்லது வேதகணிதத்திற்கோ நேரடியாக நவீன அறிவியலோடு எவ்வித தொடர்பும் இல்லை என்ற உண்மை தெரிந்திருந்த போதிலும், மோடி கும்பலோ அல்லது யுஜிசியோ, வலுக்கட்டாயமாக வேதகால அனுமானங்களை அறிவியல் என்றும் நவீன அறிவியலுக்கு முன்னோடியே இந்திய அறிவு பரம்பரைதான் என்ற கருத்தை  கல்லூரி பாடத்திட்டத்திற்குள் திணிப்பதற்கான காரணம் என்ன? இப்பாடத்திட்டத்தினை அமல்படுத்துவதின் வாயிலாக போலி தேசிய பெருமை, முஸ்லீம் வெறுப்பு, இந்து தேசிய வெறியை மாணவர்களிடையே பரப்புவதும் அதன் விளைவாக காவி பாசிச அரசியலுக்கான பொதுக்கருத்தை உருவாக்குவதுமே இவர்களது நோக்கம்.

* * * * * *

தேசிய கல்விக் கொள்கையின் அடியொட்டியே இப்புதிய பாடத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யுஜிசி பெருமைப்பட்டுக் கொள்கிறது. தேசிய கல்விக் கொள்கையோ, இந்தியாவில் இதுநாள் வரை இருந்து வந்த கல்வி முறை மற்றும் பாடத்திட்டமானது மாணவர்களை மனப்பாடம் செய்வதையே ஊக்குவித்தது என்றும் மாணவர்களிடம் ஆராய்ச்சி மனப்பான்மையை ஊக்குவிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியது. மாணவர்களிடையே ஆராய்ச்சி மனப்பான்மையை ஊக்குவிப்பதும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு வழியேற்படுத்தி தருவதுமே NEP-இன் இலட்சியம் என்றது. இதனடிப்படையில் காவி கும்பலும், தனியார் கல்வி முதலாளிகளும் NEP-ஐ நியாயப்படுத்தினர்.

ஆனால் தற்போது இந்தியாவின் முன்னணியான கணித பேராசிரியர்களே, இந்தப் பாடத்திட்டம் மிகவும் காலாவதியானது மற்றும் பிற்போக்குத்தனமானது என்று குற்றம் சாட்டுகின்றனர். அத்தோடு மட்டுமில்லாமல் பண்டைய இந்திய அறிவியல் என்ற போர்வையில் அனைத்து வகையான வேத-புராண குப்பைகளையும் அறிவியலாக பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளதையும் கண்டித்துள்ளனர்.  

கல்வி புலத்தைத் தாண்டி கேரளா அரசாங்கமும் இப்பாடத்திட்டத்தை கேரளாவிலுள்ள கல்லூரிகளில் அமல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால்        ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கு ஒரே மாற்று என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் திராவிட மாடல் அரசாங்கமோ இப்புதிய பாடத்திட்ட அறிக்கை குறித்து இன்றுவரை வாய் திறக்காமலே உள்ளது.

இப்பாடத்திட்டம் எவ்வளவு பிற்போக்குத்தனமானது மற்றும் அறிவியல் கண்ணோட்டத்திற்கு எதிரானது என்று அம்பலப்படுத்துவது மிகவும் அவசியமானது. அதேவேளையில், காவி-கார்ப்பரேட் பாசிச அரசியல் திட்டத்திற்காக, அறிவு அடியாள் படைகளை உருவாக்குவதற்கு, கல்வியை காவிமயமாக்கும் நோக்கத்திலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கும் இப்புதிய பாடத்திட்டத்தை கல்வி புலத்திற்குள் இருந்து மட்டும் முறியடிப்பதென்பது சாத்தியமில்லாதது. எனவே காவி பாசிச அரசியலை வீழ்த்துவதற்கான போராட்டங்களை கல்வி புலத்திற்கு வெளியிலும் கட்டியமைத்துப் போராடுவதன் மூலம் மட்டுமே அறிவியலைக்கூட இவர்களிடமிருந்து காப்பாற்ற முடியும்.

  • செல்வம்

  

https://peoplesdemocracy.in/2025/0914_pd/defend-education-scrap-locf-now

https://kimrendfeld.wordpress.com/2013/02/01/atom-theory-in-ancient-india/

https://santanub.medium.com/the-sage-who-dreamed-of-atom-7021d5dd73f

https://www.thehindu.com/education/nearly-1000-experts-urge-withdrawal-of-ugcs-2025-draft-mathematics-curriculum-call-it-gravely-defective/article70065708.ece

https://thefederal.com/category/education/ugc-draft-curricula-mathematics-professor-amber-habib-interview-204332

https://www.thenewsminute.com/kerala/kerala-firmly-opposes-ugcs-learning-outcome-framework-demands-complete-withdrawal

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன