தேர்தலைப் புறக்கணியுங்கள், பா.ஜ.க.வைத் தெருவில் வீழ்த்துங்கள்! – பரகலா பிரபாகர்

குறிப்பு: இந்தக் கட்டுரை, ஆகஸ்ட் 23, 2025 அன்று சென்னையில் திரு. மருதையன் தலைமையில் “திருடப்பட்ட குடியரசு” என்ற தலைப்பில் “வாய்ஸ் ஆஃப் டி.என்” நடத்திய கூட்டத்தில் டாக்டர் பரகலா பிரபாகர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவமாகும். (அழுத்தங்கள் எமது)

இன்று ஹைதராபாதில் இருந்து விமானத்தில் என்னுடன் பயணித்த சகபயணி ஒருவர் பின்வருமாறு கூறினார்: “பாருங்கள் பரகலா, நீங்கள் ஒரு முக்கியமான விசயத்தைத் தவறவிடுகிறீர்கள். பாஜக-வின் கட்டமைப்பைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். பாஜக-வுக்கு வெவ்வேறு அணிகள் உள்ளன. அவை ‘மோர்சாக்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. பாரதீய ஜன யுவ மோர்சா (இளைஞர் அணி), மகளிர் அணி, விவசாயிகள் அணி, சிறுபான்மையினர் அணி போன்ற பல அணிகள் உள்ளன. சமீபத்தில், கடந்த பத்து ஆண்டுகளில், ஒரு புதிய அணி உருவாகி உள்ளது. அது தான் தேர்தல் அணி” என்றார். அப்போது நான் யோசித்தேன். அவர் கூறியது உண்மைதானே. இன்று நம் நாட்டில் இருப்பது இந்தியத் தேர்தல் ஆணையம் அல்ல. [பாஜக-வின்] ஒரு தேர்தல் அணியே. இந்தத் தேர்தல் அணி [தேர்தல் ஆணையம்] ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளது.

உங்களுக்குத் தெரியும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில், நிறைய விசயங்கள் நடந்தன. இதே இடத்தில், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 8 ஆம் தேதி — சுமார் ஒரு வருடம் முன்பு — வோட் ஃபார் டெமாக்ரசி (VFD) அமைப்பின் சார்பில் மிகத் துல்லியமாக ஆராயப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் நான் ஒரு விரிவான விளக்கத்தை அளித்தேன். சுமார் 5 கோடி வாக்குகளின் வாக்கு வித்தியாசம் காரணமாக 79 இடங்கள் [நாடாளுமன்றத் தொகுதிகளின்] தேர்தல் வெற்றி கைமாறியுள்ளது என்று அந்த அறிக்கை கூறியது. இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த தற்காலிக புள்ளிவிவரத்திற்கும் இறுதி புள்ளிவிவரத்திற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம், சுமார் 5 கோடி வாக்குகள் வித்தியாசம் இருந்தது. [difference between provisional and final figure: தேர்தல் ஆணையம், தேர்தல் முடிந்தவுடன் தற்காலிக புள்ளிவிவரத்தை கொடுக்கும் பின்னர் அடுத்த நாள் இறுதி புள்ளிவிவரத்தைக் கொடுக்கும். இவையிரண்டுக்குமான வித்தியாசத்தையே பரகலா கூறுகிறார்.] அந்த 5 கோடி வாக்குகள் 15 மாநிலங்களில் உள்ள குறைந்தபட்சம் 79 [நாடாளுமன்ற] தொகுதிகளின் வெற்றி வாய்ப்பை மாற்றியுள்ளன. இது நடந்திருக்காவிட்டால், 2024-ல் 293 இடங்களை வென்ற பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி, 214 இடங்களையே வென்றிருக்கும். 234 இடங்களை வென்ற இந்தியா கூட்டணி, 313 இடங்களை வென்றிருக்கும். 214 என்.டி.ஏ.வுக்கு 313 இந்தியா அணிக்கு, இந்த எண்ணிக்கையை மனதில் கொள்ளுங்கள்! அப்போதுதான் [தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின்] “தேர்தல் அணி” என்ற கருத்து எவ்வளவு பொருளுள்ள ஒன்று என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்!

மருதையன், மதூர் சத்யா போன்றவர்கள் தமிழ்நாட்டில் எதுவும் நடக்கப்போவதில்லை என்று மிகவும் நம்பிக்கையாக (complacent) இருப்பதாகத் தெரிகிறது. 2024 தேர்தலுக்கு முன்பு, எனது புத்தக வெளியீட்டிற்காக நான் பல முறை கேரளாவிற்குச் சென்றேன். “உங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகள் உங்களைக் காப்பாற்றப் போகிறது என்று நினைக்காதீர்கள். ஏதோ ஒன்று நடக்கப்போகிறது. எச்சரிக்கையாக இருங்கள்” என்று நான் அவர்களை எச்சரிப்பது வழக்கம். ஆனால் அவர்கள் மிகவும் தன்னம்பிக்கையில் “கேரளாவில் எதுவும் நடக்காது” என்றார்கள். ஆனால் [2024 தேர்தலில்] அது நடந்தது.

[கேரளத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 15.64% வாக்குகளைப் பெற்றிருந்த பா.ஜ.க., 2024 தேர்தலில் 3.5% அதிகரித்து 19.14% வாக்குகளைப் பெற்றுள்ளது. பல தொகுதிகளில் இலட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. இந்த தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகளை சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துக் கணக்குப் போட்டால், 11 சட்டமன்றத் தொகுதிகளில் முதல் இடத்திலும் 9 தொகுதிகளில் இரண்டாம் இடத்திலும் வந்துள்ளது. இதைத்தான் பரகலா குறிப்பிடுகிறார்.]

இந்த விளையாட்டு மிகவும் நுட்பமான (sophisticated game) விளையாட்டு. தயவு செய்து இதைப் புரிந்து கொள்ளுங்கள். சமூக ஊடகங்களில் பின்வரும் வாதங்களை நீங்கள் கேட்கக் கூடும்: “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ஒருவேளை வாக்குகள் திருடப்பட்டிருந்தால், பா.ஜ.க. கூட்டணிக்கு 400 இடங்கள் கிடைத்திருக்குமே! ஏன் 293 இடங்களோடு நிறுத்திக் கொள்ளப் போகிறார்கள்? உண்மையில், தேர்தலை திருடி இருந்தால் பாஜக மட்டும் தனியாகவே 400 இடங்களைப் பெற்றிருக்குமே! அதனால், அவர்கள் [தேர்தலைத்] திருடவில்லை, அவர்கள் நல்லவர்கள்.” இந்த வகையான வாதங்களை நீங்கள் கேட்டிருக்கலாம். இதுதான் பிற அரசியல் [எதிர்க்] கட்சிகளிடத்திலும் உள்ள பிரச்சனை. 2024 தேர்தல் தரவுகளில் நிறைய பிரச்சினைகள் உள்ளன என்று தேர்தல்கள் நிறைவு பெற்றதிலிருந்து நாங்கள் கரடியாகக் கத்திக் கொண்டிருக்கிறோம். (we have been shouting from the rooftops). சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஏதோ சொல்லும் வரை யாரும் இதைப் பற்றி பேசவில்லை. ஒரு பெரிய முயற்சிக்குப் பிறகு, இப்போது ஒரு விவாதம் தொடங்கியுள்ளது. நல்லது! ஒரு விவாதம் தொடங்கியுள்ளது! ஆனால், நாங்கள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறோம். யாரும் கவலைப்படவில்லை. அவர்கள் ஏன் கவலைப்படவில்லை என்று உங்களுக்குத் தெரியுமா? அரசியல் கட்சிகள் ஏன் எதுவும் சொல்லவில்லை என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால், பின்வரும் கேள்விக்கு அவர்களிடத்தில் பதில் இல்லை: “நீங்கள் தெலுங்கானாவை வென்றால் தேர்தல் சரியாக நடக்கிறது. அப்படித்தானே? நீங்கள் சத்தீஸ்கரை வென்றால் சரி அப்படித்தானே? நீங்கள் இமாச்சலப் பிரதேசத்தை வென்றால் எல்லாம் சரி, ஆனால் மகாராஷ்டிராவில் தோல்வியடையும் போது அது திருடப்பட்டது என்று சொல்கிறீர்கள்!” என்று யாராவது கேட்டால் அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. “நீங்கள் கர்நாடகத்தை வென்றால் தேர்தல் திருடப்படவில்லையா?” என்றாலும் அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. ஆனால், ஒரு பதில் உள்ளது. தரவுகளில் பார்த்தாலும் ஒரு பதில் உள்ளது. தர்க்க ரீதியாகப் பார்த்தாலும் ஒரு பதில் உள்ளது. (But there is an answer. There is an answer in data. There is an answer in logic) தரவுகளால் உங்களை சலிப்படைய செய்வதற்கு முன், நான் உங்களுக்கு தர்க்கத்தைக் கூறுகிறேன். சூதாட்ட கிளப் என்றால் என்ன என்று தெரியுமா? நீங்கள் சீட்டு மற்றும் அது போன்ற சூதாட்டங்களை விளையாடுவீர்கள். ஒரு சூதாட்ட கிளப்பில், நீங்கள் ஒவ்வொரு முறையும் சென்று தோல்வியுற்றால், மீண்டும் அங்கே செல்வீர்களா? ஒரு சூதாட்ட கிளப் எப்படி இயங்கும்? ஒரு சூதாட்ட கிளப் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குகிறது. நான் அவ்வப்போது வெல்கிறேன், அவ்வப்போது தோற்கிறேன். நான் மீண்டும் வெல்கிறேன்; நான் இரண்டு முறை தோற்கலாம், ஆனால் நான் பின்னர் மீண்டும் வெல்வேன். நான் இப்போதும், பின்னரும் வெல்ல முடியும். [என்ற நம்பிக்கையை உங்களுக்குக் கொடுப்பதில்தான் சூதாட்ட கிளப் இயங்குகிறது] ஆனால் இறுதியாக யார் வெல்வார்? சூதாட்ட கிளப் தான் வெல்கிறது.

“[நீங்கள்] சத்தீஸ்கரை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவீர்கள். [ஆனால்,] மகாராஷ்டிரம், [உங்களுக்கு] இல்லை! எங்களுக்கு [பா.ஜ.க.வுக்கு] தாரவி வேண்டும். தாரவி மேம்பாடு முக்கியம். அது எங்களுக்கு வேண்டும். சத்தீஸ்கரை வேண்டுமானால் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், யாரும் கவலைப்பட மாட்டார்கள். இமாச்சலம், அதையும் எடுத்துக் கொள்ளுங்கள்! ஆனால், ஹரியானாவைக் கொடுக்க முடியாது. ஏனெனில் விவசாயிகள் டெல்லியை தாக்க நினைக்கும் போது அவர்களைத் தடுக்க எங்களுக்கு ஹரியானா தேவை.” எனவே, இந்தச் சூதாட்டம் மிகவும் நுட்பமான விளையாட்டு. தயவு செய்து இதைப் புரிந்து கொள்ளுங்கள். இங்கே வெற்றி பெற்றுவிட்டோம். அங்கே வெற்றி பெற்றுவிட்டோம் என்று ஏமாறாதீர்கள்! எதை இழந்துள்ளீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்! நீங்கள் சத்தீஸ்கரையை வெல்லலாம், ஆனால் நீங்கள் மகாராஷ்டிராவை இழப்பீர்கள். நீங்கள் தெலுங்கானாவை வெல்லலாம், ஆனால் நீங்கள் நாடாளுமன்றத்தை இழப்பீர்கள். எனவே, [இறுதியில்] இந்த சூதாட்ட கிளப் தான் வெற்றிபெறுகிறது. தயவு செய்து இதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இதை நான் ஏன் சொல்கிறேன்? ஏனெனில் தமிழ்நாட்டில் பாஜக-வின் வாக்கு விகிதத்தில் ஒரு பெரிய ஏற்றம் இருக்கிறது. எவ்வளவு தெரியுமா? 2019-ல், தமிழ்நாட்டில் பாஜக-வின் வாக்கு விகிதம் 3.58 சதவீதம். 2024-ல் அது எவ்வளவு? 11.24 சதவீதம். அவர்கள் [பா.ஜ.க.] உங்களுக்கு முன்னேற்றத்தைக் காட்டுகிறார்கள்! வளர்ச்சியைக் காட்டுகிறார்கள்! அதனால் நாளை… 2026-இல் ஏதாவது நடந்தால் என்னவாகும்? ஏற்கனவே 3.58 இலிருந்து 11.24 வரை உயர்ந்துள்ளது. அதன் பிறகு அது ஒரு பெரிய விசயமல்ல. புரிகிறதா? தமிழ்நாட்டில் 2026 தேர்தலில் எத்தனை இடங்கள் வெல்லப் போகிறார்கள் என்பதை அவர்களால் இப்போதே சொல்ல முடியும். அப்படியானால், வளர்ச்சி எவ்வளவு? 2019 முதல் 2024 வரை, வளர்ச்சி சுமார் 7% ஆகும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தற்காலிக வாக்குப்பதிவு எண்ணிக்கைக்கும் இறுதி வாக்குப்பதிவு எண்ணிக்கைக்கும் இடையே உள்ள வித்தியாசம் 7.53% ஆகும். எனவே, நீங்கள் வளர்ச்சியைப் பார்க்க முடியும். வளர்ச்சி இருக்கிறது. வளர்ச்சி எங்கிருந்தோ வருகிறது என்று நினைக்காதீர்கள். வளர்ச்சி “தேர்தல் அணியிடம்” இருந்து வருகிறது.

நண்பர்களே, நான் ஒரு அபாய மணியை அடிக்க விரும்புகிறேன். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இங்கே அமர்ந்திருக்கும் உங்களைப் பார்த்த பிறகு, நீங்கள் தீவிரமாக இருப்பதாக நான் உணர்கிறேன், அதனால் இதைச் சொல்ல விரும்புகிறேன். இப்போது இதை  நீங்கள் தடுத்து நிறுத்தாவிட்டால், ஜனநாயக இந்தியாவை மறந்துவிடுங்கள். இப்போது இதை நீங்கள் அனுமதித்தால், இன்னொரு முறையான பொதுத் தேர்தல் நாட்டில் நடக்க வாய்ப்பில்லை. நான் அதீத-எச்சரிக்கையாக இருப்பதாக நினைக்காதீர்கள். “எங்கே வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், இந்தியாவில் நடக்காது. எங்கே வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் நடக்காது” என்று நினைக்காதீர்கள். அப்படி நினைக்கவே நினைக்காதீர்கள். எல்லாவற்றுக்கும் ஒரு முதல் முறை இருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக நடந்த நிறைய விசயங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். பெகாசஸ் முதல் தேர்தல் பத்திரங்கள், சிறப்பு வாக்காளர் திருத்தம் (SIR) போன்றவை வரை பாஜக உங்களுக்கு ஒரு பெரிய பட்டியலைக் [பா.ஜ.க.] கொடுத்துள்ளது. இதுவும் நடக்க வாய்ப்புள்ளது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அது தடுக்கப்பட வேண்டுமெனில், இந்தப் போராட்டம் இரண்டு அரசியல் கட்சிகளுக்கு அல்லது இரண்டு கூட்டணிகளுக்கு இடையேயான போராட்டமாக இருக்க முடியாது. நீங்கள் இப்போராட்டத்தை ஒருவருக்கு எதிராக மற்றொருவர், A-க்கு எதிராக B, ஒரு கூட்டணிக்கு எதிராக மற்றொரு கூட்டணி, கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சி என்று கட்டமைக்க முடியாது! இப்போராட்டம் நாட்டின் மீது இந்த வகையான மோசடி நடத்தப்படுவதற்கு எதிராக, மக்களால், சாதாரண வாக்காளர்களால், உங்களாலும் என்னாலும், குடியரசுக்காக நடத்தப்படும் போராட்டமாகக் கட்டமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாம் நமது ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும். ராகுல் காந்தியோ காங்கிரஸோ அல்லது வேறு எந்த கட்சியையும் நீங்கள் ஆதரிக்க விரும்புவதால் அல்ல, இது நமது ஜனநாயகத்தையும் நமது குடியரசையும் காப்பாற்றுவதற்கானதாகும். மேலும், நமது ஜனநாயகத்தையும் நமது குடியரசையும் காப்பாற்ற, நாம் வீதிகளில் இறங்க வேண்டும். சமூக ஊடகங்களில் நீங்கள் பதிவுகள் இடுவதோடு உங்கள் கடமையை முடிந்துவிட்டது என்று நினைப்பதை நிறுத்துங்கள்! நமது ஜனநாயகத்தைக் காப்பாற்ற களத்தில் கால்களை ஊன்றி கிளர்ச்சி நடத்த வேண்டும். இல்லையெனில் இந்த நாட்டின் ஜனநாயகத்தை உங்களால் காப்பாற்ற முடியாது.

அன்றொரு நாள், நான் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன், “மேற்கூறியவை அனைத்தும் நடக்கின்றன!” என்று நான் சொன்னேன். அவர் என்னை நோக்கி மிகுந்த நம்பிக்கையுடன் “பாருங்கள், இந்த வாதங்கள் அனைத்தையும் நான் தவிடுபொடியாக்கிவிட்டேன்” என்றார். “எங்கே தவிடுபொடியாக்கினீர்கள்?” என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் சொன்னார், “நான் அவர்களை [பாஜக-வை] முகநூலில் தவிடுபொடியாக்கிவிட்டேன். நீங்கள் என்னை முகநூலில் பின்தொடரவில்லையா?” என்றார். அவர் இந்த வாதங்கள் அனைத்தையும் முகநூலில் தவிடுபொடியாக்கிவிட்டாராம்! ஆனால், அந்த இரண்டு பேரும் [மோடி, அமித் ஷா] மகிழ்ச்சியாக வங்கிக்கு – வாக்கு வங்கிக்கு – சென்று கொண்டிருக்கிறார்கள்.

நான் கூடுதலாக இன்னும் இரண்டு விசயங்களைச் சொல்கிறேன். நமக்கு ஏழு கட்டங்களில் வாக்குப் பதிவு நடந்தது தெரியுமா? முதல் கட்டத்திற்கான இறுதி வாக்குப் பதிவு சதவீதத்தை (final figure) அறிவிக்க தேர்தல் ஆணையம் 11 நாட்கள் எடுத்துக் கொண்டது. 11 நாட்கள் என்பதை அறிவீர்களா? இரண்டாம் கட்டத்திற்கான இறுதி வாக்குப் பதிவு சதவீதத்தை அறிவிக்க 4 நாட்கள் எடுத்துக் கொண்டது. மூன்றாம் கட்டத்தை அறிவிக்க 4 நாட்கள் எடுத்துக் கொண்டது. நான்காம் கட்டத்தை அறிவிக்க 4 நாட்கள் எடுத்துக் கொண்டது. ஐந்தாம் கட்டத்திற்கு 3 நாட்கள் எடுத்துக் கொண்டது. ஆறாம் கட்டத்திற்கு 4 நாட்கள் எடுத்துக் கொண்டது. ஏழாம் கட்டத்திற்கு 5 நாட்கள் எடுத்துக் கொண்டது. ஏன்? இறுதி வாக்குப் பதிவு சதவீதம் என்ன என்பதைச் சொல்ல “தேர்தல் அணி” ஏன் இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டது? இது மிகவும் அபாயகரமானதாகும். ஜூன் 1, 2024 ஆம் தேதி அன்று இறுதிக் (ஏழாம்) கட்டத் தேர்தல் முடிந்துவிட்டது. ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஆனால், ஏழாம் கட்ட இறுதி வாக்குப் பதிவு சதவீதம் ஜூன் 6 அன்று வெளியிடப்பட்டது. இது உங்களுக்குத் தெரியுமா? அதாவது, இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, [இரண்டு நாட்கள் கழித்து] தேர்தல் ஆணையம் 7-வது கட்டத்திற்கான இறுதி எண்ணிக்கையை வழங்குகிறது. என்ன நடக்கிறது டிஜிட்டல் இந்தியாவில்? [பரகலா சொல்லும் இந்த விவரம் மிகுந்த முக்கியத்துவமுடையதாகும். ஏனெனில், தகவல் தொழில்நுட்ப வசதிகளே வளராத 1952 தேர்தல்கள் முதல் எந்தத் தேர்தலிலும் தற்காலிக, இறுதி வாக்குச் சதவீதத்தை அறிவிக்க தேர்தல் ஆணையம் ஒரு நாளுக்கு மேல் எடுத்துக் கொண்டதே கிடையாது]

இன்னும் ஒரு விசயம் இருக்கிறது, இரண்டாம் கட்ட வாக்குபதிவு மிகவும் சுவாரசியமான ஒன்றாகும். இன்றுவரை இரண்டாம் கட்டத்திற்கான தொகுதி வாரியான தற்காலிக வாக்குப் பதிவு தரவு நம்மிடம் இல்லை. எனவே அது எவ்வளவு உயர்ந்துள்ளது என்று நமக்குத் தெரியாது. தற்காலிக வாக்குப்பதிவு இவ்வளவு, இறுதி வாக்குப் பதிவு இவ்வளவு என்று நீங்கள் சொன்னால், கணிதம் பற்றி அதிகம் தெரியாத என்னைப் போன்ற ஒருவர் கூட உட்கார்ந்து, இதுதான் உயர்வு (வேறுபாடு அல்லது hike) என்று சொல்ல முடியும். தமிழ்நாட்டில் [2019 – 2024 இடைப்பட்ட வாக்கு சதவீத] உயர்வு பற்றி நான் உங்களுக்குச் சொன்னேன். ஆனால் இந்தத் தேர்தலில் தற்காலிக, இறுதி வாக்குச் சதவீதத்தில் தமிழ்நாட்டில் என்ன வேறுபாடு என்று நாம் சொல்ல முடியாது. ஏனெனில் தேர்தல் ஆணையம், இரண்டாம் கட்டத்திற்கு, மாநில வாரியான தரவுகளைக் கூட கொடுக்க மறுத்துவிட்டது. மாறாக, கட்ட வாரியான தரவை (phase wise data) மட்டுமே கொடுத்தது. இதில் ஏதாவது அர்த்தமுள்ளதா? தேர்தல் ஆணையம் மாநில வாரியான தரவுகளை கொடுக்க மறுத்துவிட்டது. பின்னர், சில காலம் கழித்து, அது மாநில வாரியான தரவுகளை கொடுத்தது, ஆனால் இன்றுவரை தொகுதி வாரியான தரவுகளை கொடுக்கவில்லை. ஏன் இது முக்கியத்துவமுடையது? ஏனெனில் இரண்டாம் கட்டத்தில் பாஜக-என்.டி.ஏ-யின் வெற்றி விகிதம் அசாதாரணமானதாகும். இரண்டாம் கட்டத்தில், மேற்கு வங்கத்தில், 3 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. மூன்று தொகுதிகளும் பாஜக-வுக்குச் சென்றன. உத்தரப்பிரதேசத்தில், 8 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடந்தது. அனைத்து தொகுதிகளும் பாஜக-வுக்குச் சென்றன. மத்தியப் பிரதேசத்தில், 6 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. அனைத்து தொகுதிகளும் பாஜக-வுக்குச் சென்றன. சத்தீஸ்கரில் இரண்டாம் கட்டத்தில் 3 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. மூன்றும் பாஜக-வுக்குச் சென்றன. திரிபுராவில் இரண்டாம் கட்டத்தில் 1 தொகுதியில் தேர்தல் நடந்தது. அந்த ஒரு தொகுதியும் பாஜக-வுக்குத்தான் சென்றது. ஜம்மு காஷ்மீரில் இரண்டாம் கட்டத்தில் ஒரு தொகுதியில் தேர்தல் நடந்தது. அந்த தொகுதியும்கூட பாஜக-வுக்குச் சென்றது. கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் இரண்டாம் கட்டத்தில் தேர்தல் நடந்தது. அவற்றில் 12 பாஜக-வுக்குச் சென்றன. ராஜஸ்தானில், 13 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. 10 தொகுதிகள் பாஜக-வுக்குச் சென்றன. அசாமில் 5 தொகுதிகளில் இரண்டாம் கட்டத்தில் தேர்தல் நடந்தது. 4 தொகுதிகள் பாஜக-வுக்குச் சென்றன. [இரண்டாம் கட்டத்தில்] மிகவும் அசாதாரணமான வெற்றி விகிதத்தை பா.ஜ.க. பெற்றுள்ளது.

இன்னும் ஒரு விசயம். இந்த வாக்கு வித்தியாசங்களைப் பற்றி பேசுவது ஏன் முக்கியத்துவமுடையது? எங்கெல்லாம் பெரிய வித்தியாசம் இருந்ததோ, அங்கெல்லாம் பா.ஜ.க. கூட்டணி அசாதாரனமான வெற்றியைப் பெற்றுள்ளது. உதாரணமாக, ஒடிசாவில், வாக்கு வித்தியாசம் 12.48% ஆக இருந்தது, அங்கே என்ன நடந்தது தெரியுமா? 21 தொகுதிகளில் 20 தொகுதிகளை பாஜக வென்றது. ஆந்திரப் பிரதேசத்தில், வித்தியாசம் 12.54% இருந்தது. 25 தொகுதிகளில் 21 தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி வென்றது. இப்படி 15 மாநிலங்களில், மிகப்பெரிய வித்தியாசங்களுடன் மிகப்பெரிய வெற்றிகள் கிடைத்துள்ளன.

வித்தியாசம் மிகக் குறைவாக இருந்தபோது என்ன நடந்தது? வரலாற்று ரீதியாக, தற்காலிக மற்றும் இறுதி புள்ளிவிவரங்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் எப்போதும் [எந்தத் தேர்தலிலும்] 1% க்கும் மேல் இருந்ததில்லை. பல நேரங்களில் அது அரை சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாகவே இருந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தைப் பற்றி பேச வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். ஏழு கட்டங்களிலும் வாக்குப் பதிவு நடந்த உத்தரப்பிரதேசத்தில், முதல் கட்டத்தில், வித்தியாசம் 3.25% இருந்தது. இரண்டாம் கட்டத்தில், நமக்குத் தெரியாது. தரவுகள் நம்மிடம் கொடுக்கப்படவில்லை. அங்கே, நான் சொன்னது போல், 8 தொகுதிகளில் தேர்தல் நடந்தது, அனைத்திலும் பாஜக-வே வென்றது. மூன்றாம் கட்டத்தில், 0.2% வித்தியாசம். நான்காம் கட்டத்தில், 0.34%. ஐந்தாம் கட்டம், 0.23%. ஆறாம் கட்டம், 0.01%. ஏழாம் கட்டம், 0.25%. இங்கு என்ன  நடந்துள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? [உத்திரப் பிரதேசத்தில் 2019-இல்] 67 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க. கூட்டணி [2024-இல்] 36 இடங்கள்தான் வென்றது. எனவே வித்தியாசம் குறைவாக இருந்தபோது, பா.ஜ.க. கூட்டணி வீழ்ச்சியடைந்துள்ளது. இங்கிருந்து நாம் எங்கே செல்வது? பேச நிறைய விசயங்கள் உள்ளன. நிறைய தரவுகளைச் சொல்லி உங்களை சலிப்படைய செய்ய நான் விரும்பவில்லை. மிகப்பெரிய அளவிலான தரவுகள் உள்ளன. இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றி இரண்டு நிமிடங்கள் பேச அனுமதியுங்கள். [நான் சொல்லப் போவதை] அரசியல் கட்சிகள் இப்போது ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஒரு நாள் அவர்கள் இந்த முடிவுக்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன். இன்று நமது நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவரும் ஒரு மோசடியான தேர்தலின் அடிப்படையில் தான் அங்கே உள்ளனர். இப்போது இருக்கும் அரசாங்கமும் மோசடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நாடாளுமன்றத்தில் இருந்து தான் தேர்ந்தெடுக்கபட்டது. எனவே, அது [அந்த நாடாளுமன்றம்] கலைக்கப்பட வேண்டும். இந்த நாடாளுமன்ற அவை மோசடித் தேர்தல், தவறான வாக்காளர் பட்டியல் மற்றும் நிறைய மோசடிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று நான் ஏன் சொல்கிறேன்? எதிர்க்கட்சித் தலைவர் அதைச் சொன்னதால் மட்டுமல்ல. மோடி அரசின் ஒரு அமைச்சரும் அதைச் சொல்லியிருக்கிறார். அது உங்களுக்குத் தெரியுமா? அவர் சொன்னார், “நீங்கள் மகாதேவ்புரத்தை [பா.ஜ.க. வெற்றிபெற்ற கர்நாடக தொகுதி] பற்றி ஏன் பேசுகிறீர்கள்? ராய்பரேலியைப் பற்றி ஏன் பேசுவதில்லை? ராய்பரேலியிலும் [காங்கிரசு வெற்றிபெற்ற உ.பி. தொகுதி] மோசடி நடந்துள்ளது,” அதாவது இரண்டிலும் மோசடி நடந்துள்ளது. ஏன் அதை இரத்து செய்யக்கூடாது? அதை [மொத்தமான நாடாளுமன்றத்தை] இரத்து செய்து, தேர்தல் பட்டியலை சரியாக திருத்திய பின் இன்னொரு தேர்தலை நடத்துங்கள். அதைச் செய்வதற்கு முன், இந்த “தேர்தல் அணி” [அதாவது, தேர்தல் ஆணையத்தை] கலைக்க வேண்டும்.

நான் சொல்வது நடைமுறைக்கு உதவாதது, சாத்தியமற்றது என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால், ஒரு ஜனநாயகம், ஒரு அரசாங்கம், நாடாளுமன்றம் மற்றும் தேர்தல் என்று பாசாங்கு செய்வதில் என்ன பயன்? இவையெல்லாம் நம்மிடம் உள்ளன என்று நீங்கள் ஏன் பாசாங்கு செய்கிறீர்கள்? இந்த பாசாங்கு எதற்காக? வாக்காளர் பட்டியலில் நிறைய மோசடிகள் உள்ளன என்பது கட்சி வேறுபாடின்றி அனைவரும் கூறும் கருத்து. சிலர் முன்வந்து, இது எப்போதும் இப்படித்தான் இருந்து வருகிறது என்று சொல்கிறார்கள். தேர்தல்கள் எப்போதுமே மோசடியாகத்தானே இருந்தன என்கிறார்கள். 1952 தேர்தல்களிலும் மோசடி இருந்தது என்றும் அவர்கள் சொல்வார்கள். அப்போது நான் பிறக்கவே இல்லை, நான் அதில் பங்கேற்கவும் இல்லை. இந்த தேர்தல், நான் இங்கே இருக்கிறேன், மேலும் வாக்காளர் பட்டியலில் நிறைய மோசடிகள் உள்ளன என்பது எனக்குத் தெரியும், சாகர் இப்போது சொன்னது போல், அது கலைக்கப்பட வேண்டும். அது முழுமையாகச் சுத்தம் செய்யப்பட வேண்டும். அது சுத்திகரிக்கப்பட வேண்டும். பின்னர், ஒரு தேர்தலை நடத்துங்கள். சுத்தம் செய்வது என்பதன் பொருள் வெறுமனே மக்களை நீக்குவது அல்ல. நேர்மையுடன் சரியான சுத்திகரிப்பு தேவை. இப்போது நமக்குத் தேவை 100% நேர்மையுடன் கூடிய தேர்தல் நடைமுறை. இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது குறிப்பிட்ட தலைவரை வெறுப்பதற்காக அல்ல. முழுமையான நேர்மையுடன் கூடிய தேர்தல் நடைமுறை என்றால், யார் வேண்டுமானாலும் வெல்லட்டும். நான் அவர்களை விரும்பவில்லை என்றால், நான் அரசியல் ரீதியாக போராடுவேன். நான் அவர்களை விரும்பினால், பரவாயில்லை. ஆனால், தேர்தல் நடைமுறையே மோசடியானது என்றால் நான் எப்படிப் போராடுவது! என்னால் போராட முடியாது!

அரசியல் கட்சியில் உள்ள நண்பர்களிடம் நான் சொல்லி வருவது இதைத்தான்: “கடினமாக உழைப்பதன் மூலம் நீங்கள் அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவீர்கள் என்று நினைத்தால், அது நடக்கப்போவதில்லை. நீங்கள் சூதாட்ட கிளபிற்கு எதிராக விளையாடுகிறீர்கள்” 2024 தேர்தலில் 5 கோடி வாக்குகள் உயர்த்தப்பட்டன. இப்போது இதை நீங்கள் நிறுத்தாவிட்டால், அடுத்த தேர்தலில் 10 கோடி வாக்குகள் உயர்த்தப்படும். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தலில், 20 கோடி வாக்குகள் உயர்த்தப்படும். நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் எதுவும் செய்ய மாட்டீர்கள். இத்தகைய மோசடிகள், வாக்கு உயர்வுகள் இருந்தும் இன்னும் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள் என்றால், மோசடித் தேர்தல்களை நீங்கள் சட்டபூர்வமாக்குகிறீர்கள். எனவே, தேர்தல் பட்டியல்கள் சரியாக சுத்தம் செய்யப்படும் வரை, தேர்தலில் போட்டியிடாதீர்கள்.

தற்போதைய தேர்தல் ஆணையம் அது நடுநிலையாக இருக்கும் என்று நாம் நம்பிக்கை கொள்ள முடியாது. ஏனெனில் அது நியமிக்கப்பட்ட முறையே நமக்கு சந்தேகத்தைத் தருகிறது. [தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனமானது] ஒரு அரசாங்க செயலாளர் நியமிக்கப்படுவது போல நியமிக்கப்படுகிறது. இது பிரதமர், அவரது அமைச்சர், எதிர்கட்சி தலைவரால் நியமிக்கப்படுகிறது — எதிர்க்கட்சித் தலைவருக்கு அதில் எந்த பாத்திரமும் (role) இல்லை, பெரும்பான்மையும் இல்லை — இது வெறும் அரசாங்க முடிவு. இப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பாத்திரம் நீக்கப்பட்ட பிறகு, இந்த நியமனம் ஒரு நடுநிலையான நியமனம் என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்? சில நேரங்களில், ஒரு அரசாங்கம் நியமித்தவர் கூட நடுநிலையாக செயல்பட முடியும். டி.என். சேஷனை மறந்துவிடாதீர்கள். சேஷன் உச்ச நீதிமன்றத்தால் அல்லது வேறு யாராலும் நியமிக்கப்படவில்லை. சேஷன் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார். எனினும், “இது இந்திய அரசின் தேர்தல் ஆணையம் அல்ல” “இது இந்திய தேர்தல் ஆணையம்” என்று அவர் கூறினார். [தேர்தல் ஆணையம்] “ஒரு அரசாங்கத் துறை அல்ல. நான் அமைச்சரவைச் செயலாளருக்கு பதில் சொல்ல வேண்டியவன் அல்ல. நான் பிரதமருக்கு பதில் சொல்ல வேண்டியவன் அல்ல. யாரும் என்னை அழைக்க முடியாது. நான் யாருடைய அழைப்பையும் ஏற்க மாட்டேன். நான் இந்திய குடியரசுத் தலைவருக்கு பதில் சொல்ல வேண்டியவன். நான் இந்திய மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவன். நான் இந்திய நாடாளுமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டியவன்” என்றார் அவர். டி.என். சேஷன் போன்ற ஒரு அரசாங்க நியமன அதிகாரி அதைச் சொல்லியிருக்கிறார். ஆனால், தற்போதைய தேர்தல் ஆணையம், ஆணையர்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று பாருங்கள்! தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் 110 வெறுப்பு பேச்சு உரைகளை நிகழ்த்தினார். அவருக்கு ஒரே ஒரு நோட்டீஸ் கூட வழங்கப்படவில்லை. இதுதான் நம்மிடம் உள்ள தேர்தல் ஆணையம். முதல் கட்டத்தின் இறுதி புள்ளிவிவரங்களை 11 நாட்களுக்குப் பிறகு அவர்கள் வெளியிட்டனர். முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கடைசி கட்டத்தின் இறுதி புள்ளிவிவரங்களை அவர்கள் வெளியிட்டனர். இது எதாவது அவர்களின் மீது நம்பிக்கையை ஊட்டுகிறதா? இது நடுநிலையானதா? எனவே, தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும். இந்த பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும். இந்த அரசாங்கத்தை முற்றிலுமாக அகற்ற வேண்டும். தேர்தல் பட்டியல்களை சுத்தம் செய்து, பின்னர் தேர்தலை நடத்துங்கள். யார் வேண்டுமானாலும் வெல்லட்டும். எந்தப் பிரச்சனையும் இல்லை.

என்ன நடக்க வேண்டும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நாம் பேசிவிட்டோம். இது ஏன் நடக்கிறது என்பதைப் பற்றி இப்போது பேசலாம். இப்போது ஏன் இது நடக்கிறது? இதுதான் முக்கியமான விசயம். இந்த நாட்டை, இந்தக் குடியரசை, ஒரு மதவாதக் குடியரசாக – ஒரு இந்து பெரும்பான்மைவாத அரசாக மாற்றுவதற்கான ஒரு நோக்கம் இருப்பதால்தான் இது இப்போது நடக்கிறது. இதுதான் [பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ்.ஸின்] நோக்கம். இந்த நோக்கம் உங்களிடம் இருப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை. நான் அந்த நோக்கத்துடன் உடன்படவில்லை; அதற்கு எதிராக நான் கண்டிப்பாக போராடுவேன். பிரச்சனை என்னவென்றால், இந்திய வாக்காளர்கள் இந்த வகையான பிளவுபடுத்தும் பெரும்பான்மைவாத நோக்கத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இந்த [2024] தேர்தல் கூட இதற்கு சான்றுதான். மோசடிகள் இருந்தாலும் கூட இந்திய வாக்காளர்கள் இதை ஒப்புக்கொள்வதில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. பாஜக பிறப்பதற்கு முன்பு அது பாரதீய ஜன சங்கம் (பா.ஜ.ச) என்று அழைக்கப்பட்டது. ஜன சங்கத்தின் தலைவர்கள் மிகப்பெரிய நட்சத்திரங்களாக இருந்தார்கள். இந்தியாவை ஒரு இந்து பெரும்பான்மைவாத நாடாக மாற்றுவது என்ற திட்டம் சாமா பிரசாத் முகர்ஜி, பல்ராஜ் மாடோக், சுவாமி காரபாத்ரிஜி போன்ற மிகப்பெரிய நபர்களால் வலியுறுத்தப்பட்டது, அப்போது ஆர்.எஸ்.எஸ்.ஸில், கோல்வால்கரும் உயிருடன் இருந்தார். அப்பெரிய மனிதர்கள் அனைவரின்  உச்ச செயல்திறனின் மதிப்பு 9% தான். வெறும் 9% வாக்குகள் தான் அதிகபட்சம் அவர்களால் பெற முடிந்தது. அதன் பிறகு ஜனசங்கம் ஜனதா கட்சியில் இணைந்தது. அதன் பிறகு அவர்கள் வெளியே வந்து, நாங்கள் காந்திய சோசலிசவாதிகள் என்று சொன்னார்கள். அது உங்களுக்கு தெரியும். நினைவில் கொள்ளுங்கள், தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள், அந்த நாட்களில் பாஜக உட்பட ஒவ்வொரு அரசியல் கட்சியும் நாங்கள் அனைவரும் மதச்சார்பற்றவர்கள் என்று சொன்னார்கள் இல்லையா? இன்று அவர்கள் அப்படிச் சொல்கிறார்களா? இல்லை. அவர்கள் துணிச்சலானவர்கள். ஏனெனில் பிளவுபடுத்தும் நோக்கத்தை வெளிப்படையாகச் சொல்லி பெற்ற வாக்குகள் 9%-ஐத் தாண்டவில்லை என்பதை அவர்கள் அப்போது உணர்ந்து கொண்டார்கள். அவர்களும் மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ராம ஜென்ம பூமி, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தரும் 370-வது சட்டப்பிரிவு நீக்குவது, பொது சிவில் சட்டம் போன்ற அவர்களின் சர்ச்சைக்குரிய திட்டங்கள் [அப்போது] பின்னுக்கு தள்ளப்பட்டன. அதன் பிறகுதான், அவர்களுக்கு 20 முதல் 22% வாக்குகள் கிடைத்தது. திமுக, தெலுங்கு தேசம் போன்ற கட்சிகளோடு கூட்டணிகள் வைத்தனர் ஆட்சியையும் பிடித்தனர்.

2024-ஆம் ஆண்டும் நடந்தது மதவாத பிரச்சாரத்திற்கான வெற்றியோ அதன் வெளிப்பாடோ அல்ல. ஆனால், இந்திய அரசை ஒரு இந்து மதவாத அரசாக மாற்ற வேண்டுமென்றும், இந்திய வாக்காளர்கள் இந்த வகையான விசயத்தை ஒப்புக்கொள்வதில்லை என்று தெரிந்த பிறகு பா.ஜ.க என்ன செய்கிறது? பின்னர், தேர்தல்களுக்கான “அணிகளை” கட்டுகிறார்கள். அதனால்தான் 2024-இல் சுமார் 5 கோடி வாக்குகள் உயர்வு என்ற இந்தப் பெரிய மோசடி நடந்துள்ளது. பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களிக்கும் அனைத்து மக்களையும் வெளியேற்றும் [வாக்குரிமையைப் பறிக்கும்] சிறப்பு வாக்காளர் திருத்தத்தைப் பற்றி சாகர் இப்போது நம்மிடம் கூறினார். எனவே, இதுதான் அவர்களின் திட்டம். இந்த நோக்கத்திற்காகத்தான் இது நடக்கிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

நாம் தெருவில் இறங்கி கிளர்ச்சி செய்ய வேண்டும். ஸ்லாக்டிவிசம் செய்யக் கூடாது. [ஸ்லாக்டிவிசம் என்றால், சமூக ஊடகங்கள் அல்லது ஆன்லைன் வழிமுறைகளில் ஒரு அரசியல் அல்லது சமூக நோக்கத்தை ஆதரிப்பது, மிகக் குறைந்த முயற்சி அல்லது அர்ப்பணிப்பை உள்ளடக்கியது என்று பொருளாகும்.] சமூக ஊடகங்களில் போராடுவது அல்ல. அது போதாது. தயவு செய்து இளைஞர்களிடம் பேசுங்கள். தயவு செய்து கல்லூரி வளாகங்களில் பேசுங்கள். இது முக்கியமானது. இவையனைத்தையும் நாம் செய்தாக வேண்டும். ஏதாவது நடக்கும் என்று காத்திருக்காதீர்கள். சரியான கிளர்ச்சி இல்லாமல் “தேர்தல் அணியை” எப்படித் தவிடுபொடியாக்குவீர்கள்?! நமக்கு ஒரு இயக்கம் தேவை. நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த அரசியல் கட்சிகள் [இந்தியா கூட்டணி] தேர்தல்களிலிருந்து விலகி நிற்க வேண்டும், மோடியையும் அவர்களது ஆட்சியையும் ஒரு நகைப்புக்குரிய பொருளாக ஆக்க வேண்டும். அரசியல் கட்சிகள் “நாங்கள் தேர்தலில் போட்டியிடாவிட்டால், அவர்கள் எளிதாக ஆட்சி செய்வார்கள்” என்று நினைக்கின்றன. இல்லை. அது சாத்தியமில்லை. அது நடக்காது. அனைவரும் அவர்களைப் [பா.ஜ.க.வைப்] பார்த்து சிரிப்பார்கள். சரி, அதைப் பற்றி சிந்தியுங்கள். இது அதீத முக்கியத்துவமுடையது. இந்த நிலைமையை நீங்கள் தவறவிட்டால், இந்திய ஜனநாயகம் நமது கைகளில் இருந்து பறிபோய்விடும். பிறகு, அதை மீட்டெடுக்க நம்மால் முடியாது. அதை காப்பாற்ற நம்மால் முடியாது. குறைந்தபட்சம் இப்போது, நமக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. பிறகு, இவ்வகையான வாய்ப்பு கூட, இது போன்ற இடங்களில் அமர்ந்து இதைப் பற்றி பேசுவதும் கூட சாத்தியமற்றதாகிவிடும்.

  • டாக்டர். பரகலா பிரபாகர்.

******************

பின்குறிப்பு: இந்த கூட்டத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 30, 2025 அன்று பரகலா ஒரு நேர்காணல் கொடுத்தார். அதிலிருந்தும் சில கருத்துகளை நாங்கள் சேர்க்க விழைகிறோம்.

அவர் கூறினார்: “இதில் ஒரு ஆபத்து உள்ளது. நாம் குறிப்பிட்டது போல் இந்த விளையாட்டு மிகவும் நுட்பமான ஒன்று. இந்த வகையான கிளர்ச்சிகளுக்குப் பிறகு [வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள், போராட்டங்கள், யாத்திரைகள் இவற்றுக்குப் பிறகு] ஆர்.ஜே.டி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் என்னவாகும்?! நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லை, நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்! ஆனால் ஒரு ஆபத்து உள்ளது, தற்போதுள்ள இந்த வெப்பநிலையும் [வாக்குத் திருட்டுக்கெதிரான மனநிலையும்] திடீரென குறையும். அதன் பிறகு, ஆளும் பா.ஜ.க. கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்றாலும், நீங்கள் அதை கேள்வி கூட கேட்க முடியாது” என்கிறார்.

“அப்படியென்றால் தேர்தல்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதைத் தவிர எதிர்க் கட்சிகளுக்கு வேறு வழியே இல்லை என்கிறீர்களா?” என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு “துல்லியமாக அதேதான்! வேறு வழியே இல்லை” என்று பதிலளிக்கிறார், பரகலா பிரபாகர்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இப்போது பீகார் தேர்தலில் பா.ஜ.க. இந்தியா கூட்டணியை வெற்றிபெற அனுமதித்துவிட்டால் என்ன செய்வீர்கள்?! அது “வாக்குத் திருட்டு” “தேர்தல் மோசடி” குற்றச்சாட்டுக்கு மிகப்பெரிய பாதகமாகவும் பின்னடைவாகவும் போய்விடும் என்று எச்சரிக்கிறார். எதிர்க்கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடுவதன் மூலம் மோசடியான தேர்தல் நடைமுறையையும் வெற்றி பெறும் ஆட்சியையும் நியாயப்படுத்துகிறார்கள், சட்டப்பூர்வமாக்குகிறார்கள். அதுமட்டுமன்றி, மோசடியான SIR நடைமுறையையும் பாஜக எதிர்காலத்தில் பெறும் மோசடியான வெற்றிகளையும் சட்டபூர்வமாக்குகின்றன என்றும் அவர் கூறுகிறார். வரவிருக்கும் பீகார் தேர்தல்களில் ஆர்.ஜே.டி-காங்கிரஸ் வெற்றி பெற்றால், சிறப்பு வாக்காளர் திருத்தம் (SIR) மக்களிடையே சட்டபூர்வமாக்கப்படும் “வாக்கு திருட்டு” குறித்த எதிர்ப்பு மனநிலை மங்கி மறைந்துவிடும். அப்போது பாஜக எவ்வித அச்சமோ தயக்கமோ இல்லாமல் SIR-ஐ தேசிய அளவில் திணிக்கும். எதிர்க் கட்சிகள் மற்றும் பாசிச எதிர்ப்பு சக்திகள் SIR-க்கு எதிராக மட்டுமல்ல, எந்த தேர்தல் மோசடிகளுக்கும் எதிராகக் கூட குரல் எழுப்ப முடியாத நிலையில் இருப்பார்கள்.

******************

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன