கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலாவில் 1995 முதல் 2014ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில், வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமிகள், இளம்பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பிணங்களைப் புதைக்கும் படி கோவில் நிர்வாகத்தால் தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாகக் கூறி, கோவிலில் பணிபுரிந்த முன்னாள் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் கடந்த ஜூலை மாதத்தில், கர்நாடக நீதிமன்றத்தில் ஒரு பரபரப்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.
அதன் பிறகுதான் தர்மஸ்தலாவில் உள்ள கோவிலையும் மடத்தையும் கட்டுப்படுத்தும் மிகப்பெரிய மாபியா கும்பலின் கிரிமினல் குற்றங்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளிவரத் தொடங்கின. ஆனால் இந்தப் புகார் குறித்து கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு முற்போக்கு, ஜனநாயக சக்திகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக தர்மஸ்தலாவின் முன்னாள் ஊழியர் அளித்த புகாரை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவினர், கோவிலின் முன்னாள் ஊழியரை விசாரித்த போது தர்மஸ்தலாவை ஒட்டியுள்ள காட்டுப் பகுதியில் 17 இடங்களில் பிணங்களைப் புதைத்ததாக அவர் கூறியிருக்கிறார். அந்த இடங்களை அடையாளம் காட்டுவதற்கு அவரை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் நேரில் அழைத்துச் சென்றனர்.
அவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடங்களில் ஆறாவது மற்றும் பதினோராவது இடங்களுக்கு அருகில் சில மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 13என இலக்கமிடப்பட்ட இடத்தில் ஆய்வு செய்ய நிலத்தில் ஊடுருவும் ரேடார் பயன்படுத்தப்பட்டது, ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை. இருந்தும் அந்தப் பகுதியில் இருந்த மண் அதிக அமிலத் தன்மை கொண்டது என்பதால் அதில் புதைக்கப்பட்ட எதுவும் ஒருசில ஆண்டுகளில் மக்கிக் கரைந்து போயிருக்கும். ஆகையால் தடையங்கள் எதுவும் கிடைக்காத போதும் அப்பகுதிகளில் சேகரிக்கப்பட்ட மண்ணை பரிசோதனைக் கூடத்தில் சோதித்தால் அதில் மனித உடல் புதைக்கப்பட்டுள்ளதா எனக் கண்டுபிடிக்க முடியும். ஆகையால் அங்கே சேகரிக்கப்பட்ட மண் ஹைதிராபாத்தில் உள்ள ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான், புகாரளித்த முன்னாள் ஊழியர், கடந்த வாரம் சிறப்புப் புலனாய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையின் போது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியது, நீதிமன்றத்தில் பொய்யாக சாட்சியமளித்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
ஜூலை மாதத்தில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுக்க வந்த போதும், அதற்கு முன்னர் போலீசாரிடம் புகாரளிக்க வந்த போதும், தர்மஸ்தலாவின் முன்னாள் ஊழியர் தனது உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டு, முகமூடி அணிந்தே வந்திருந்தார். அவர் யார் என்பது வெளியில் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவர் கைது செய்யப்பட்ட பிறகு அவரது பெயர் சின்னையா என்பதும், அவரது புகைப்படமும் ஊடகங்களில் கசிய விடப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் புகாரளித்தவர் கைது செய்யப்படுவதற்குச் சில நாட்கள் முன்பு பாஜக கட்சியினர் பெங்களூருவிலிருந்து தர்மஸ்தலா வரை பேரணி நடத்தி, “இந்து மதத் தலத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரம்” எனக் குற்றம் சாட்டினார்கள். அத்துடன் கர்நாடக மாநில பாஜக தலைவர், அக்கட்சியின் எம்.எல்.ஏ.கள் அடங்கிய குழு ஒன்று தர்மஸ்தலாவின் நிர்வாக அதிகாரியைச் சந்தித்து அவருக்குத் தங்களது ஆதரவு இருப்பதாக உறுதியளித்தது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய தர்மஸ்தலாவின் நிர்வாக அதிகாரி (தர்மாதிகாரி) வீரேந்திர ஹெக்டே, “இது இளைஞர்களை மத நம்பிக்கைகளில் இருந்து விலக்கி வைக்க நடைபெறும் சதி” என்று கூறினார்.
புகார்தாரரான சின்னையாவின் கைதுக்குப் பிறகு சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சியிலும் இந்த வழக்கு குறித்துப் பல்வேறு பொய்ப்பிரச்சாரங்கள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. முதலில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த புகார்தாரரின் அடையாளம் சமூக ஊடகங்களின் வாயிலாக பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டது. அடுத்ததாக அவர் கூறியது அனைத்தும் பொய் என்றும், தர்மஸ்தலாவில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தேடுதல் வேட்டையில் புகார்தாரர் கூறியது போல எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும். இது தர்மஸ்தலாவின் பெயரைக் கெடுக்க நடத்தப்பட்ட திட்டமிட்ட சதி என்றும் நூற்றுக்கணக்கான சமூக ஊடகக் கணக்குகள் மூலமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. சில ஊடகவியலாளர்கள் சின்னையாவின் முதல் மனைவியைப் பேட்டியெடுத்துப் போட்டு அதன் மூலம் அவரது பெயரைக் கெடுப்பதையும், அவர் ஒரு பொய்யர் என்ற பிம்பத்தை உருவாக்கும் வேலையையும் செய்தனர்.
புகாரளித்தவர் ஏன் கைது செய்யப்பட்டார், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் நடத்திய தேடுதலில் கிடைத்த எலும்புகள் யாருடையது, ஹைதிராபாத் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மண் குறித்த சோதனை முடிவுகள் என்ன சொல்கின்றன, என எதுவுமே இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் புறக்கடையில், இந்த வழக்கு தர்மஸ்தலாவிற்கு எதிராகவும், மஞ்சுநாதார் கோவிலுக்கு எதிராகவும், இந்து மதத்திற்கு எதிராகவும் தொடுக்கப்பட்டுள்ள சதி என்ற பிரச்சாரம் தொடர்ந்து காவிக் கும்பலால் முன்னெடுக்கப்படுகிறது.
அதேசமயம் சிறப்புப் புலனாய்வுக் குழு தர்மஸ்தலா படுகொலைகள் குறித்து விரிவாக விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவரும் என நினைத்தவர்களுக்கு, புகார் கொடுத்தவரையே அது கைது செய்திருப்பது அதிர்ச்சியளித்திருக்கிறது.
தர்மஸ்தலா மாபியா கும்பலின் கிரிமினல் வரலாற்றை அறிந்தவர்களுக்கும், இந்த வழக்கில் அரசு, நீதிமன்றம், அரசியல் கட்சிகள், போலீசு சிறப்புப் புலனாய்வுக் குழு, ஊடகங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கும் வழக்கு விசாரணை திடீரென நேரெதிர் திசையில் பயணிக்கத் தொடங்குவது என்பது அதிர்ச்சியளிக்கக் கூடிய புதிய விசயமல்ல. ஏனென்றால் இதுகாறும் தர்மஸ்தலா குறித்த புகார்கள் அனைத்தும், சிபிஐ-யால் விசாரிக்கப்பட்ட சௌஜன்யா வழக்கு உட்பட, முறையான விசாரணை இன்றி ஊற்றி மூடப்பட்டுள்ளன. இந்த வழக்கும் அதே திசையில் தான் செல்கிறது.
தர்மஸ்தலா குறித்த புகார் பதிவுசெய்யப்பட்ட உடனேயே, இந்த விசயத்தில் தர்மஸ்தலா நிர்வாகத்தையோ, அதன் நிர்வாகிகளையோ, ஊழியர்களையோ அவர்தம் குடும்பத்தினரையோ சம்பந்தப்படுத்தி யாரும் பேசக் கூடாது என உத்தரவிடும்படியும், ஏற்கெனவே அவ்வாறு பேசி பதியப்பட்ட ஆயிரக்கணக்கான இணையதளக் கட்டுரைகள், காணொளிகளை முடக்க வேண்டும் எனவும் கோரி, தர்மஸ்தலா நிர்வாகம் தரப்பில் கர்நாடக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றமும் தர்மஸ்தலா நிர்வாகம் கேட்டுக் கொண்டபடி யாரும் அவர்களைச் சம்பந்தப்படுத்திப் பேசக் கூடாது என வாய்ப்பூட்டு போட்டு உத்தரவிட்டது. இதனையெதிர்த்து சில ஊடகவியலாளர்கள் உச்சநீதிமன்றம் வரைச் சென்ற போதும் தடையை உடைக்க முடியவில்லை.
இதன் மூலம் புகார் எழுந்தவுடனேயே அதுகுறித்த விவாதத்தை முடக்கி, யாரும் அது குறித்துப் பேசிவிடாதபடி, மக்கள் மத்தியில் இதனைக் கொண்டு செல்லாதபடி பார்த்துக் கொள்ளும் வேலையை நீதிமன்றம் செவ்வனே செய்தது.
அடுத்ததாக அம்மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு தர்மஸ்தலாவிற்கு ஆதரவாகப் பேசினார்கள். சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, “காளை மாடு கன்று போட்டதாக ஒருவர் கூறியவுடனேயே அதனை நம்பி மாட்டுத் தொழுவம் கட்ட முடியுமா” என்று கூறி தர்மஸ்தலா மீதான புகாரை நம்ப மறுப்பதை வெளிப்படுத்தினார்.
அதே போல கர்நாடக துணை முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான டி.கே. சிவக்குமார், “இது தர்மஸ்தலா கோவிலின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கச் செய்யப்படும் சதி” என்று கூறியதுடன் “இந்த வழக்கு ஆதாரங்களற்ற காலிப் பெட்டி”எனவும் கூறினார். அதாவது சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே துணை முதலமைச்சர் அந்த வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறினார்.
டி.கே சிவக்குமாரின் கருத்தை ஆதரித்துப் பேசிய அம்மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் மிகப் பெரிய சதி இருப்பதாகக் கூறினார்.
இவர்கள் மட்டுமன்றி உள்துறை அமைச்சர் ஜி.பரமேஷ்வரா, சுகாதாரத்துறை அமைச்சர் குண்டு ராவ், முன்னாள் அமைச்சர் அரங்க ஜனனேந்திரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தர்மஸ்தலாவிற்கு ஆதரவாகவும், புகாரளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தும் பேசினார்கள்.
ஆளுங்கட்சித் தலைவர்களே இவ்வாறு பேசும் போது, தர்மஸ்தலாவின் நிர்வாக அதிகாரியான வீரேந்திர ஹெக்டேவை மாநிலங்களவை எம்.பி.யாக்கி அழகு பார்க்கும் பாஜக சும்மா இருக்குமா என்ன? “தர்மஸ்தலா சலோ”, “தர்மஸ்தலா சத்ய யாத்ரா” என்ற பெயர்களில் பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடி-எஸ்) கட்சியினைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மாநிலம் முழுவதும் தர்மஸ்தலாவிற்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் இறங்கினார்கள்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடி-எஸ்) கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.ஆர்.ரமேஷ் மற்றும் சி.எஸ்.புட்டராஜூ ஆகிய இருவரும் தர்மஸ்தலாவிற்குச் சென்று இவ்விசயத்தில் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
தர்மஸ்தலா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கோவில் நிர்வாகம் குறித்து யாரும் பேசக்கூடாது என நீதிமன்றத்தின் மூலமாக வாய்ப்பூட்டு போட்டுவிட்டு, தர்மஸ்தலா நிர்வாகத்திற்கு ஆதரவாகவும் புகார்தாரருக்கு எதிராகவும் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும், முன்னாள் இந்நாள் அமைச்சர்களும் ஊடகங்களில் பிரச்சாரத்தினை மேற்கொண்டனர்.
இந்த அரசியல்வாதிகளால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவும் தன் பங்கிற்கு இந்த வழக்கு விசாரணையை எந்த அளவிற்கு நீர்த்துப் போகச் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு நீர்த்துப் போகச் செய்யும் வேலையில் இறங்கியது.
விசாரணை தொடங்கிய உடனேயே, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை அதிகாரிகளில் ஒருவரான இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் கௌடா புகார்தாரர் உடனடியாகத் தனது வாக்குமூலத்தையும் புகாரையும் திரும்பப் பெறவில்லை என்றால் அவரைக் கைது செய்து சிறையில் அடைக்கப்போவதாக மிரட்டி வாக்குமூலம் வாங்கியதாகவும், அதனை இன்ஸ்பெக்டர் தனது கைப்பேசியில் பதிவு செய்து வைத்திருப்பதாகவும், புகார்தாரரின் வழக்கறிஞர் குற்றஞ்சாட்டினார். ஆனால் மஞ்சுநாத் கௌடா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே சமயம் வழக்கறிஞரின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் தற்போது விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாக புகார்தாரர், கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே போல புகார்தாரரான சின்னையா கொடுத்த வாக்குமூலத்தின்படி அனைத்து இடங்களிலும் தோண்டவில்லை. சிறப்புப் புலனாய்வுக் குழு சில முக்கியமான இடங்களில் தோண்டாமல் விட்டதுடன், தவறான இடத்தில் தோண்டியதாக அந்தக் குழுவிற்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் உருவாயின. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்த பிரணாப் மொகந்தி விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு வேறு ஒருவர் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராகக் கொண்டுவரப்பட்டார்.
சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையும் வெளிப்படையாக இல்லாமல், காலதாமதமாக நடைபெற்றது. புகார்தாரரின் வாக்குமூலத்தில் அவர் குற்றஞ்சாட்டிய தர்மஸ்தலா நிர்வாகிகள் யாரையும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கவே இல்லை. அத்துடன் சின்னையாவுடன் பணிபுரிந்த இதர கோவில் ஊழியர்களையும் கூட விசாரிக்கவில்லை. இவ்வளவு ஏன் வாக்குமூலம் கொடுத்த சின்னையாவையும் கூட இரண்டே நாட்கள் தான் விசாரணை செய்தனர், அதுவும் கூட அவரைக் கைது செய்வதற்கு முன்பு, ஒரு முகாந்திரத்தை உருவாக்குவதற்காகவே அந்த விசாரணையை சிறப்புப் புலனாய்வுக் குழு மேற்கொண்டது. புகாரளித்தவரது அடையாளம் போலீஸ் தரப்பிற்குத் தவிர வெளியில் வேறு யாருக்கும் தெரியாத சூழலில் அவரை ஊடகங்களில் அடையாளம் காட்டிய வேலையை சிறப்புப் புலனாய்வுக் குழுவினரைத் தவிர வேறு யாரும் செய்திருக்க முடியாது.
இவையெல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது தற்போது எழும்பியிருக்கும் புகார்களில் இருந்து தர்மஸ்தலாவையும் அதனை நிர்வகிக்கும் மாபியா கும்பலையும் பாதுகாக்கும் திசையில்தான் இந்த வழக்கு விசாரணை சென்று கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
தர்மஸ்தலாவில் நடைபெற்ற கொலைகள் குறித்த பிபிசி களஆய்வின் போது எடுக்கப்பட்ட காணொளியில், இதில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதிவேண்டித் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் போராடிவரும் நாகரிக சேவா அறக்கட்டளையின் நிர்வாகி சோமநாதா பேசும் போது, இந்தக் கொலைகளைச் செய்த கொலைகாரர்கள் குறித்து புகார்கள் எழுந்து மக்கள் விசாரணை கோரிப் போராடும் போதெல்லாம், குற்றவாளிகள் மதம் மற்றும் கடவுள் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு தப்பித்துவருகின்றனர் எனக் கூறுகிறார். அவர் கூறுவது முற்றிலும் உண்மை என்பது தற்போது நிரூபணமாகிவருகிறது.
- அறிவு