ஆகஸ்டு – செப்டம்பர் 2025 – செங்கனல் இதழில் “தர்மஸ்தலா பயங்கரம்” என்ற தலைப்பில் வெளியான தலையங்கத்தை இங்கே மீள்பதிவு செய்கிறோம்.
*************
தர்மஸ்தலா குறித்து இதுவரை நாம் கேள்விப்பட்டதெல்லாம், அது கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டப்பகுதியில் அமைந்துள்ளதொரு கோவில் நகரம் என்பதும், நாடு முழுவதிலுமிருந்து பல இலட்சம் பக்தர்கள் வந்து செல்லும் அளவிற்குப் புகழ் பெற்ற நகரம் என்பதும் அங்கே தினந்தோறும் பல ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுவதும் தான்.
புகழ்பெற்ற இந்தக் கோவில் நகரம் உண்மையில், பணபலமும், அதிகார பலமும், அரசியல் செல்வாக்கும் கொண்ட ஒரு பெரிய மாபியா கும்பலின் பிடியில் சிக்கியிருப்பது நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில், மடம் ஆகியவற்றின் சொத்துக்களை நிர்வகிப்பது மட்டுமன்றி ஆரம்பப்பள்ளி முதல் மருத்துவக் கல்லூரி வரை பல்வேறு கல்வி நிறுவனங்கள், மாநிலம் முழுவதிலும் 32 மாவட்டங்களிலும் நுண்கடன் வழங்கும் கந்துவட்டி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், போக்குவரத்து நிறுவனங்கள் என இந்தக் கும்பல் மிகப்பெரிய வலைப்பின்னலைக் கொண்டுள்ளது.
இந்த மாபியா கும்பல் இதுவரை அடித்த கொள்ளையும், செய்த கொலைகளும் ஏராளம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி – தேசியக் கட்சி, மாநிலக் கட்சி என எல்லாக் கட்சியினரும் இந்தக் கும்பலின் காலடியில். உயர்நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் இவர்களது சட்டைப்பையில். போலீசுக் கான்ஸ்டபிள் தொடங்கி சி.பி.ஐ. வரை சலாம் போடும் அளவிற்கு ஒரு தனி ராஜ்ஜியத்தையே அவர்கள் அங்கு நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்த தர்மஸ்தலா கோவிலில் பணிபுரிந்த முன்னாள் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் கடந்த ஜூலை மாதத்தில், பெல்த்தங்கடி நீதிமன்றத்தில் ஒரு பரபரப்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். அதில், 1995ம் ஆண்டும் முதல் 2014ம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில், நூற்றுக்கணக்கான பிணங்களைப் புதைக்கும் படி கோவில் நிர்வாகத்தால் தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார்.
நேத்ராவதி ஆற்றின் கரையில், காட்டுப்பகுதியில், முந்நூற்றுக்கும் அதிகமானவர்களைப் புதைத்துள்ளதாக கூறும் அவர், தான் புதைத்த சடலங்கள் பெரும்பாலும் பெண்கள் எனவும், அதுவும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டவர்கள் எனவும் கூறியிருக்கிறார். பள்ளிச் சீருடையில் இருந்த சிறுமிகளையும், முகத்தில் ஆசிட் ஊற்றிச் சிதைக்கப்பட்ட பெண்களையும் கூட, தான் புதைத்ததாகவும் அவர் அந்த வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.
அதற்குச் சாட்சியமாக, தான் புதைத்த சடலம் ஒன்றைத் தோண்டி அதிலிருந்து எடுத்துவந்த மனித எலும்புகளை, நீதிபதிகள் முன்னிலையில் காட்டியதுடன், இது தொடர்பான புகைப்பட ஆதாரங்களையும் சமர்ப்பித்தார். சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்கள் தனக்குத் இப்போதும் நினைவிலிருப்பதாகவும், தன்னை போலீசார் அழைத்துச் சென்றால் அடையாளம் காட்டுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
2014ம் ஆண்டில் தனது குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரிடமே கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் அத்துமீறியதால் அங்கிருந்து தப்பித்து குடும்பத்துடன் தலைமறைவாகியிருக்கிறார். உயிருக்குப் பயந்து ஊர் ஊராக அலைந்து திரிந்தாலும், 12 ஆண்டுகளாகத் தான் செய்த தவறு குறித்து அனுதினமும் வருந்தி வந்தாகவும், இனியும் பொறுக்க வேண்டாம் என நினைத்து தற்போது உண்மையை வெளியில் சொல்ல வந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
தர்மஸ்தலா மீது இவ்வாறு புகார் எழுப்பப்பட்டு இரண்டு வாரங்களுக்கும் மேலாக கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து எழுந்த தொடர் எதிர்ப்பிற்கும், கண்டனத்திற்கும் பிறகு ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தற்போது அமைத்துள்ளது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு.
ஆனால் தர்மஸ்தலா மீதான குற்றச்சாட்டு குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, “காளை மாடு கன்று போடுமா?” என்று கேட்கிறார். கர்நாடக பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சி.டி.ரவி – “இது தர்மஸ்தலாவை இழிவுப் படுத்தும் நோக்கில் செய்யப்படுகிறது” எனக் கூறுகிறார். மதச்சார்பற்ற ஜனதா தளம் உட்பட அம்மாநில எதிர்க்கட்சிகள் அனைத்தும் இதுவரை தர்மஸ்தலா மீது விசாரணை வேண்டும் என்றோ, உண்மையைக் கண்டுபிடித்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்றோ எதுவுமே பேசவில்லை. மாநிலத்தின் முன்னணி பத்திரிக்கைகளும் கூட இவ்விசயத்தில் மௌனமே சாதிக்கின்றன. இது போதாதென்று தர்மஸ்தலா குறித்தும் அதன் நிர்வாகிகள், அவர்களது குடும்பத்தார் குறித்தும் யாரும் பேசவும் எழுதவும் கூடாது எனக் கர்நாடக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது இவ்விஷயம் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டிருந்தாலும் விசாரணை முழுமையாக நடைபெறும் என்பதற்கோ, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கோ எவ்வித உத்தரவாதமும் இல்லை. கடந்த காலங்களில் தர்மஸ்தலா மீது குற்றஞ்சாட்டிய பல வழக்குகளைப் போலீசும், நீதிமன்றமும் கையாண்ட விதமே இதற்குச் சாட்சி.
தர்மஸ்தலா நிர்வாகம் குறித்தும் அவர்கள் எப்பேர்ப்பட்ட கிரிமினல் மாபியா கும்பல் என்பதைப் பற்றியும் புரிந்து கொள்ள 1986 வரை பின்னோக்கிச் செல்லவேண்டியிருக்கிறது.
1986இல் தர்மசாலாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது தேவானந்தா என்ற சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த ஒருவர், தர்மஸ்தலா நிர்வாகிகள் நிறுத்திய வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட அவரை மிரட்டிப் பணியவைக்க அவரது 19 வயது மகள் பத்மலதாவைக் கடத்தி வைத்துக் கொண்டு இந்தக் கும்பல் மிரட்டியது. இவர்களது மிரட்டலுக்கு அவர் அடிபணியவில்லை. 56 நாட்களுக்குப் பிறகு பத்மலதா கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதற்கு முன்பும் கூட 1983இல் கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் இருந்து தர்மஸ்தலாவிற்கு வந்திருந்த அண்ணன் தங்கை இருவர் மர்மமான முறையில் நேத்ராவதி ஆற்றங்கரையில் பிணமாக கிடந்தனர். அது குறித்து விசாரிக்கச் சென்ற அவர்களது தந்தையை போலீசார், பெல்தங்காடி போலீஸ் ஸ்டேசனில் வைத்து சித்ரவதை செய்திருக்கின்றனர். இந்தப் பிரச்சனை குறித்து அப்போதைய ராய்ச்சூர் எம்.எல்.ஏ. சங்கமேஸ்வர சர்தார் கர்நாடக சட்டசபையில் எழுப்பியிருக்கிறார். அப்போது தங்களது பகுதியிலிருந்தும் பலரும் கொல்லப்பட்டிருப்பதாக இன்னும் சில எம்.எல்.ஏ.க்களும் இதே குற்றச்சாட்டை எழுப்பியிருக்கின்றனர். இருந்தும் இன்று வரை அந்தக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படவேயில்லை.
2003ம் ஆண்டில் மணிபால் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து மருத்துவ மாணவி அனன்யா பட், தர்மசாலாவிற்குச் சுற்றுலா வந்த போது காணாமல் போனவர் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவரது தாயார் மத்திய புலனாய்வுப் பிரிவு சி.பி.ஐ.யில் சுருக்கெழுத்தாளராகப் பணிபுரிந்தவர், அவர் தனது மகளைக் கண்டுபிடிக்க போகாத இடமில்லை, தட்டாத கதவுகளில்லை இருந்தும் அவரால் தனது மகள் குறித்து எந்தவொரு விசயத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
2012ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தர்மஸ்தலா கல்லூரியில் பியுசி இரண்டாம் ஆண்டு படித்து வந்த சௌஜன்யா என்ற 17 வயது மாணவி, கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கடத்தப்பட்டார். அதற்கு அடுத்த நாள் அருகிலிருந்த காட்டுப்பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து கர்நாடக மாநிலமே கொந்தளித்தது. ஆனால் இந்த வழக்கு விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. 2013ம் ஆண்டில் சிஐடி விசாரணைக்கும் பின்னர் 2014ம் ஆண்டில் சி.பி.ஐக்கும் மாற்றப்பட்டது.
சந்தோஷ் ராவ் என்ற நபர் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். ஆனால் 2023ம் ஆண்டு, சி.பி.ஐ., அவர் மீதான குற்றச்சாட்டைப் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தவறியதாக கூறி சந்தோஷ் ராவ் விடுதலை செய்யப்பட்டார். சாட்சிகள் பிறழ்ந்தது, சிசிடிவி காட்சிகள் மாயமானது, ஆரம்ப கட்ட விசாரணையில் போலீசும் மருத்துவர்களும் சரியானபடி இல்லாமல் குற்றவாளியைத் தப்பவைக்கும் நோக்கில் செயல்பட்டு ஆதாரங்களை அழித்தது ஆகியவை குற்றவாளிகள் தப்பிப்பதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
இவையெல்லாம் தர்மசாலாவில் நடைபெற்ற படுகொலைகளில் ஒரு சில மட்டுமே. 1995 முதல் 2014ம் ஆண்டுவரையில் மட்டும் 450க்கும் மேற்பட்டவர்கள் இந்தப் பகுதியில் காணாமல் போயுள்ளதாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவற்றில் 80 சதவீதம் அதாவது 350க்கும் அதிகமான வழக்குகள் இளம் பெண்கள் காணாமல் போனது குறித்தது. இந்த வழக்குகளில் காணாமல் போனவர்கள் என்ன ஆனார்கள் என்றே இதுவரை தெரியாமல் இருந்தது. தர்மச்சலாவின் முன்னாள் ஊழியர் கொடுத்துள்ள வாக்குமூலத்தின் படிப் பார்த்தால் இவர்களில் கணிசமானவர்கள் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக காணாமல் போனவர்களுடைய உறவினர்கள், அந்த வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துக் காத்திருக்கின்றனர்.
ஆனால் இவர்களது நம்பிக்கை என்றைக்கும் நிறைவேறப்போவதில்லை. ஏனென்றால் இந்த மாபியா கும்பலின் தலைவராக இருப்பது வீரேந்திர ஹெகடே, இவர்தான் தர்மஸ்தலா கோவிலின் தற்போதைய தர்மாதிகாரி, அதாவது பரம்பரை நிர்வாகி. தற்போது பாஜக சார்பில் பாராளுமன்றத்தில் மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கிறார். மேலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டுவிழா குழுவின் தலைவராக இருக்கிறார். இதற்கு முன்பு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தின் போதும் விழாக் குழுவின் தலைவராக இவர் செயல்பட்டிருக்கிறார். இவரது தம்பி ஹர்ஷேந்திர குமார் தர்மஸ்தலா கோவிலின் நிர்வாகப் பொறுப்பை கவனித்துக் கொள்பவர், ஹர்ஷேந்திர குமாரின் இரண்டு மகன்கள், நிஸ்கல் மற்றும் ஸ்ரேயாஸ், மற்றும் இவர்களது நெருங்கிய உறவினர்களை உள்ளடக்கியதுதான் இந்த தர்மசாலா மாபியா கும்பல்.
இந்தக் குடும்பம் இன்று நேற்றல்ல பல நூறு ஆண்டுகளாக இந்தப் பகுதியினைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறது. பெர்காடே என்று அழைக்கப்படும் நிலப்பிரபுத்துவ வம்சத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்தக் கோவிலின் பரம்பரை தர்மகர்த்தாக்களாக ஆண்டாண்டு காலமாக இங்கே கோலோச்சி வருகின்றனர். நாம் திரைப்படங்களில் பார்த்திருக்கின்ற நாட்டாமை தீர்ப்புச் சொல்லும் முறை இன்னமும் தர்மசாலாவில் நடைமுறையில் இருக்கிறது. ஹொயாலு என்று அழைக்கப்படும் இந்தப் பஞ்சாயத்துகளில் தர்மசாலாவின் தர்மாதிகாரி கூறும் தீர்ப்பே இறுதியானது. இதனை எதிர்த்து யாரும் நீதிமன்றத்திற்குக் கூடப் போக முடியாது. ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் வந்து போகும் தர்மசாலாவில் 2016ம் ஆண்டுவரை போலீஸ் ஸ்டேசனே கிடையாது. அந்த அளவிற்கு இந்தப் பகுதியில் தர்மஸ்தலா மாபியா கும்பல் வைத்ததே சட்டமாக இருக்கிறது.
பணபலமும், அதிகார பலமும் கொண்ட, அரசியல்வாதிகள், போலீசு, நீதிமன்றம், அரசு நிர்வாகம் என அனைத்தின் ஆதரவும் கொண்ட இந்த மாபியா கும்பலை சட்ட வாதத்திற்குள் நின்றுகொண்டு முறியடிக்க முடியாது. இவர்களை முறியடிக்க வேண்டும் என்றால் மக்கள் படை கட்டி, இந்தக் கும்பலின் சொத்துக்களையும் அதிகாரத்தையும் பறித்து, மக்கள் மன்றத்தில் வைத்து விசாரித்துத் தண்டனை கொடுப்பதுதான் ஒரே வழி சரியான வழி.