வலைதள ரீல்ஸ்களில் எதிர்காலம்
வளரும் இளைய சமுதாயம் சீரழிவதை அனுமதிக்கலாமா?

அண்மைக் காலமாக துளிர்கள் முதல் முதியவர்கள் வரை ரீல்ஸ் (குறுகிய வீடியோ) மோகம் வேகமாகப் பரவி, பெரும்பான்மையினர் அதற்கு அடிமையாகி, பலியாகி வருவதை அனைவரும் அறிவோம். பிரபலம் தேடும் நோக்கத்திற்காக தாங்கள் செய்யும் சேட்டைகளை, ஆபத்தான, ஆபாசமான, அசிங்கமான நிகழ்வுகளைக் கைப்பேசி மூலம் படமெடுத்து, அதை அவரவர் முகநூல், இன்ஸ்டாகிராம் மூலம் ரீல்ஸ் என்ற பெயரில் பரப்பி வருகின்றனர். இவை பரவலாகி, மற்றவர்களும் பகிரும் வகையில் வைரலாகி வருகிறது. இவற்றைப் பலர் பார்ப்பதும், ரசிப்பதும் மீள் பதிவிடுவதும் என்ற வகையில் ஒரு புற்று நோயைப் போல பரவி வருகிறது.

ஆண், பெண் பேதமில்லாமல், வயது வித்தியாசமில்லாமல் பகிரப்படுவதும், பரப்பப்படுவதும் இதைத் தொடர்ந்து லைக் செய்வதும், கமெண்ட் போடுவதும் என்ற பெயரில் நேரத்தை வீணடிப்பதும் மற்றவர்களின் நேரத்தை வீணடிப்பதோடு, கேடான சிந்தனைகளை விதைப்பதும், ஆபத்தை விளைவிப்பதும் நடந்தேறுகிறது. இந்த கேடான நிகழ்வுகளைப் பட்டியலிட்டு மாளாது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, பத்திரிக்கைகளில் வரும் ஒரு சில சம்பவங்களைப் பகிர்ந்தாலே இதன் அவலங்களையும், அசிங்கங்களையும், ஆபத்துகளையும் உணர முடியும். கிராமங்களில் சுற்றித் திரியும் ஆடுகளின் பாலை அங்குள்ள விடலைகள் நேரடியாகக் கறந்து குடிப்பதை போல, ஒருவர் தனது, குழந்தையைப் பசு மாட்டின் மடியில் (காம்பில்) நேரடியாகப் பாலை குடிக்க வைத்துள்ளனர். அதை வலைத்தளத்தில் ரீல்ஸ்ஸாகப் பதிவிட்டுள்ளனர். இது வைரலாகி இலட்சக்கணக்கானோரைச் சென்றடைந்துள்ளது.
பச்சைப் பாலைக் குடிப்பது கேடானது. காட்சியப்பாலைதான் குடிக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. காட்சிக் குடிப்பது மூலம் பச்சைப் பாலிலுள்ள இ.கோலி, லிஸ்டீரியா, சால் மோ நெல்லா போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன என்கிற உண்மையை அறிவியல் நிறுவுகிறது. இதை உணராமல், இது போன்ற பேர்வழிகள் தங்களது முட்டாள்தனத்தை ரீல்ஸ் மோகர்கள் அனைவரும் பரப்பி, அறிவிலிகளாக வலம் வருவதுடன் மற்றவர்களையும் அறிவிலிகளாக மாற்றி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஒரு இளைஞர் இரயிலில் செல்லும் போது, அதன் அடியில், அதாவது தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு படமெடுத்து வலைத்தளத்தின் மூலம் பரப்பியுள்ளார். ஆபத்தான குன்றுகளில் நின்றுகொண்டு செல்பி எடுப்பது, வனவிலங்குகள் மற்றும் பாம்புகளுடன் முத்தம் கொடுப்பது போல செல்ஃபி எடுப்பது, மாடியில் இருந்து குதிப்பது, ஆபத்தான மழை உச்சியில் ஏறுவது, பாலங்களில் இருந்து ஆறுகளில் குதிப்பது போன்றவற்றை ரீல்ஸ் எடுத்துப் பரப்புவது எவ்வளவு ஆபத்தானவை என்பதைச் சொல்லாமலே விளங்கும். இந்த கேடான, ஆபத்தான நிகழ்வுகளைப் பார்க்கும் எதிர்காலங்கள் இதுபோன்ற நிகழ்வுகளில், அவலங்களில் ஈடுபட நேர்ந்தால் விபரீதங்களில்தான் போய் முடியும். இதற்குச் சான்றாக, கடந்த காலங்களில் சூப்பர் மேன், பேட்மேன், ஸ்பைடர் மேன் போன்ற கற்பனை சாகசவாதிகளால் சிறுவர்கள் ஈர்க்கப்பட்டு, அதேபோல் தாங்களும் செய்யவேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர். இதன் விளைவாக பல்வேறு விபரீதங்களைச் சிறுவர்கள் சந்தித்துள்ளனர். இதனால், அவர்களின் பெற்றோர்களும் பல்வேறு சங்கடங்களை எதிர்கொள்ள நேர்ந்ததை அனைவரும் அறிந்திருப்போம்.

இதுபோன்ற கேலிக்கூத்துகளும் சாகசங்களும் விபரீத முடிவுக்கு இட்டுச் செல்லும் என்பதைத் தெரிந்தே ரீல்ஸ் எடுத்துப் பரப்புவதும், மற்றவர்களை அதில் ஈடுபட வைப்பதும் வன்மமும், வக்கிரமும் நிறைந்த, உயிரைப் பறிக்கும் செயல். இதை அங்கீகரிப்பது, அனுமதிப்பது அறிவீனம்,
நகைச்சுவைகளை வளர்க்கும், அறிவியலை வளர்க்கும், ஆரோக்கியமான பண்பை வளர்க்கும் தமிழ் மரபை மீறி, இரட்டை அர்த்தங்கள் கொண்ட, அருவருக்கத்தக்க வகையில் உரையாடுவதும், ஆபாச கூத்துகளை கூச்சநாச்சமின்றி அப்பட்டமாக அரங்கேற்றும் அநாகரிகமும் அன்றாடம் அரங்கேறிய வண்ணமே உள்ளது. மேலும், படுக்கையறையில் உறங்குவது, குளிப்பது, உடை உடுத்துவது போன்றவற்றை ரீல்ஸ்களாக எடுத்துப் பரப்புவதால், அந்தரங்கம் அசிங்கப்படுகிறதே என்கிற அச்சமில்லாமல் தொடர்வது, நாளடைவில் சிந்திக்கும் திறன் மழுங்கடிக்கப்பட்டு மரத்துப் போகும் அபாயம் உள்ளது.

திரைப்படங்களுக்குக் கூட ஒரு தணிக்கை முறை உள்ளது. ரீல்ஸ்களுக்கு அது கூட இல்லை என்பதால், அவை, எதையும், எப்படியும் எப்பொழுது வேண்டுமானாலும் பதிவிடலாம், பரப்பலாம் என்கிற வகையில் தறிகெட்டு அலைகிறது. ஒரு சில பதிவுகளை சகித்துக் கொள்ள முடியாமல், பொது மக்களில் யாராவது ஒருவர், அல்லது ஒரு சிலர் சைபர் கிரைமிற்குப் புகார் செய்தால், அதையும் தொடர்ந்து நிர்ப்பந்தித்தால் மட்டுமே, அந்த குறிப்பிட்ட பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்கின்றனர். அரசுக்கு எதிரான விமர்சனங்களைத் தவிர மனிதச் சமூகத்தைச் சீரழிக்கும் ரீல்ஸ்களை அரசு தானாக முன்வந்து நீக்கியது இல்லை, நீக்கவும் செய்யாது. காரணம், தனது இருப்புக்கு குழி பறிக்கும் எதிர்காலம் விழிப்புணர்வுப் பெறுவதை அரசும், ஆளும் வர்க்கமும் எப்போதும் விரும்புவது இல்லை.

பயிற்சியில்லாத சாகசங்கள் அனைத்தும், கரணம் தப்பினால் மரணம் என்பதை மறந்தும், அந்தரங்கங்களைப் பரப்புவது ஆபாச சீரழிவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை அறிந்தும் இது போன்ற ரீல்ஸ்களில் பயணிப்பது தற்கொலைக்கு ஒப்பானது. வாழ்க்கை என்பது கணநேர பொழுதுபோக்கு அல்ல. காலம் கடந்து நிலைத்து நிற்பவை என்கிற வகையில் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்கும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

அதற்கு, மனிதப் புனிதங்களை அழித்து, தனிநபர் சுதந்திரம் என்ற பெயரில் அந்தரங்கங்களைப் பகிரங்கப்படுத்தும் நாகரிகமற்றச் செயல்களை, மறுகாலனியாக்க நுகர்வு வெறியைப் பரப்ப அனுமதிக்கும் இந்த கேடுகெட்ட சமூக அமைப்பையும் அவற்றைக் கட்டிக் காக்கும் தரம் கெட்ட, தகுதியற்ற அரசமைப்பையும் தூக்கியெறிய முன்வர வேண்டும்.

இதன் மூலமே, எதிர்காலங்கள் (வளரும் இளைய சமுதாயம்) ரீல்ஸ்களால் சிதைந்து சீரழிவதை மீட்டெடுக்க முடியும். அத்துடன், வாழ்க்கையைச் சீரழிக்கும், சமுதாயத்தைச் சீரழிக்கும் இது போன்ற கேடுகளை ஒழித்துக் கட்டும் ரோல் மாடல்களாக எதிர்காலங்களை (வளரும் இளைய சமுதாயமாக) மாற்றி அமைக்கவும் முடியும்.

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன