“சிவகளை கீழடி காவி கும்பலுக்குப் பேரிடி” என்ற வெளியீடு ஒன்றை பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) கொண்டுவந்திருக்கிறது. வரலாற்றைத் திரிக்கும் காவி பாசிச சக்திகளின் முயற்சியையும், அதற்கு எதிராக இருக்கும் தமிழ்நாட்டு அகழாய்வு முடிவுகளையும் குறித்து விரிவாக விளக்குவதுடன், காவி பாசிஸ்டுகள் ஏன் வரலாற்றைத் திரிக்கிறார்கள் என்றும், கீழடி சிவகளை அகழாய்வு முடிவுகள் எவ்வாறு காவி பாசிஸ்டுகளின் அரசியல் அடிப்படையையே ஆட்டம் காணச் செய்யும் வகையில் இருக்கின்றன என்பதையும் எளிமையாக விளக்குகிறது இந்த வெளியீடு.
நன்கொடை ரூ: 20/-
இதழ் வாங்க தொடர்புக்கு – 9551122884, 9786951592
முன்னுரையிலிருந்து……
தனது அரசியல் நோக்கங்களுக்காக வரலாறு பற்றிய தவறான கண்ணோட்டத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்குக் காவி பாசிச சக்திகள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களைப் மதரீதியில் பிளவுபடுத்தவும், தங்களது பாசிச அரசைக் கட்டமைக்கவும், அதற்கு அடியாள் படையாக செயல்படுவதற்கு உழைக்கும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரை தங்களை நோக்கி இழுக்கவும் பொய்யான வரலாற்றை கட்டமைக்கத் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.
“பார்ப்பன வேத கலாச்சாரமே இந்திய கலாச்சாரம்! வேத கால நாகரிகமே இந்திய வரலாற்றின் தொடக்கம்! சமஸ்கிருதமே இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய். அனாதி காலந்தொட்டு இந்து மதம் இந்தியாவில் நிலவி வருகிறது.” இதுதான் காவி பாசிஸ்டுகள் நிறுவத் துடிக்கும் இந்திய வரலாறு. இந்தக் கதையாடலுக்கு மாற்றாக உண்மையான வரலாற்றை வெளிக்கொணரும் எந்த முயற்சியையும் அவர்கள் தங்களுக்கு எதிரானதாகவே பார்க்கின்றனர். அப்படி எதுவும் நடந்தால் அந்த முயற்சியை முளையிலேயே கிள்ளி எறியவும், அதனை இருட்டில் அடைக்கவும் தேவையான அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் கீழடியிலும், சிவகளையிலும் சமீப ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாய்வுகள், காவி பாசிச சக்திகள் கட்டமைக்கத் துடிக்கும் இந்த வரலாற்றைக் கேள்விக்குட்படுத்துகிறது. வேத நாகரீகம்தான் இந்திய வரலாற்றின் தொடக்கம் என்று காவி பாசிஸ்டுகள் கூறுவதற்கு மாற்றாக, வேத காலம் எனக் கூறப்படும் காலகட்டத்திற்கு முன்பு தென்இந்தியாவில் ஒரு நாகரீகம் இருந்திருக்கக் கூடும் என்பதை தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
மிகவும் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் இந்த ஆய்வு முடிவுகள் முழுமையாக இல்லாவிட்டாலும் பண்டைத் தமிழ்ச் சமூகம் குறித்த மெல்லிய கோடுகளை நமக்குக் காட்டுகின்றன. இந்த மெல்லிய கோடுகளைக் கூட காவி பாசிஸ்டுகள் தங்களது தலையில் விழுந்த பேரிடியாகக் கருதி கதறித் துடிக்கின்றனர்.
கீழடியில் 102 குழிதோண்டி, 88 கார்பன் மாதிரிகளையும், 5700 தொல் பொருட்களையும் கொண்டு அறிவியல் முறையில் பகுப்பாய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தால் ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். ஆனால் ஒரு கார்பன் மாதிரி கூட கண்டறியப்படாமல், சரஸ்வதி நதியைக் கண்டுபிடித்துவிட்டதாக கூறுகிறார்கள்.
இதிலிருந்தே தங்களது அரசியலுக்கு ஏற்ப எந்த அறிவியல் முகாந்திரமும் இல்லாத புனைகதைகளை வரலாறு என முன்னிறுத்துவதையும், தாங்கள் முன்னிறுத்தும் அரசியலுக்கு எதிரான எந்தவொரு அறிவியல்பூர்வமான கண்டுபிடிப்பையும் புறந்தள்ளுவதில் இந்தக் காவிப் பாசிசக் கும்பல் கைதேர்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.