சிவகளை, கீழடி காவி கும்பலுக்குப் பேரிடி!
சென்னை மற்றும் நெல்லையில் அரங்கக் கூட்டம்.

தமிழ்நாட்டில் சமீபமாக நடைபெற்றுள்ள பல தொல்லியல் அகழாய்வுகள், இந்திய அளவிலும் உலகளவிலும் தாக்கத்தைச் செலுத்தக் கூடியவை. தூத்துக்குடி சிவகளை அகழாய்வில் கிடைத்த இரும்புப் பொருட்கள் தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி தொடர்ச்சியான இரும்புப் பயன்பாடு இருந்திருப்பதை உறுதி செய்கிறது. உலகின் தொன்மையான இரும்புப் பயன்பாடு, கி.மு. 2,500 ஆண்டுவாக்கில் அனடோலியா பகுதியில் தொடங்கியிருக்கலாம் என்பதே இதுவரை ஏற்கப்பட்டதாகும். அதற்கு சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் இரும்புப் பயன்பாடு இருந்திருப்பதை சிவகளை ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

ஒருபுறம், இந்திய வரலாற்றின் தொடக்கம் எனக் கருதப்படும், வெண்கலப் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்ட சிந்து சமவெளி நாகரீகத்தின் சமகாலத்தில், அதைவிடத் தொழில்நுட்பத்தில் முன்னேறிய, இரும்பை உருக்கிப் பொருட்களைச் செய்யும் மக்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்துள்ளனர்.

மற்றொருபுறம், இதுவரை இலக்கியங்களில் மட்டுமே காணக்கிடைத்த சங்ககால மக்களது வாழ்வியலையும், நகரத்தையும், நிரூபிக்கும் தொல்லியல் ஆதாரமாகக் கீழடி அகழாய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. கீழடியில் கிடைத்துள்ள தமிழி எழுத்துக்கள் சுமார் 2500 ஆண்டுகள் பழைமையானவை என்பதும், சமஸ்கிருதம் உருவாவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே அது வெகுமக்களின் பயன்பாட்டில் இருந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த தொல்லியல் ஆய்வுகளை அடுத்தடுத்த கட்டங்களுக்குக் கொண்டு செல்ல ஒன்றியத்தில் ஆளும் காவி பாசிசக் கும்பல் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகிறது. இத்தொல்லியல் ஆய்வுகளை ஊற்றி மூட நினைக்கிறது. ஏன்?

தமிழகத்தின் தொல்லியல் ஆய்வு முடிவுகள், வரலாற்றைத் திரித்து எழுதத் துடிக்கும் காவி பாசிசக் கும்பலின் முயற்சிக்கு நேரதிராக உள்ளன. அவர்களைப் பொருத்தவரை இந்திய வரலாறு என்பது வேதங்களின் வரலாறு; வேதகாலத்தில் எல்லாம் இருந்தது; நவீன விஞ்ஞானத்திற்குச் சவால்விடும் அறிவியல் வளர்ச்சி வேதகாலத்திலேயே இருந்தது – என மக்கள் நம்ப வேண்டும். எல்லா மொழிகளுக்கும் மூல மொழியாகச் சமஸ்கிருதம் இருந்தது என்றும் இந்த அறிவியல் முழுவதையும், வேத கால ரிஷிகள், சமஸ்கிருதத்தில் நூல்களாக எழுதிவைத்திருந்தனர் என்பதை மக்கள் ஏற்க வேண்டும்.

இதற்காகத்தான் இல்லாத சரஸ்வதி நதியைத் தேடிக் கண்டுபிடிக்கப் பல்லாயிரம் கோடிகளை மோடி அரசு அள்ளி வீசுகிறது. தமிழ் உள்ளிட்ட இதர செம்மொழிகளை வஞ்சித்துவிட்டு, செத்துப் போன சமஸ்கிருதத்திற்கு உயிர் கொடுக்க ஆண்டுதோடும் பலநூறு கோடிகள் செலவு செய்கிறது. புராணக் கட்டுக்கதைகளான மகாபாரதத்தையும், இராமாயணத்தையும் உண்மையான வரலாற்று நிகழ்வுகள் என ‘நிறுவ’ முயற்சிக்கிறது.

வேதகாலத்தில் உன்னதமான நிலையில் இருந்த, உலகிற்கே வழிகாட்டியாக இருந்த இந்த நாட்டினை வெளியிலிருந்து வந்த இசுலாமிய ஆக்கிரமிப்பாளர்கள் வஞ்சத்தாலும் சூழ்ச்சியாலும் கைப்பற்றிக் கொண்டனர்; வேத காலப் பெருமைகளை அழித்தனர் – என மக்களை உணர்வுப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும். அப்போதுதான் இசுலாமியர்களை விரோதிகளாகக் காட்ட முடியும். இதை நம்பும் இந்துக்களை சங்கப்பரிவாரப் படைகளில் அடியாட்களாகச் சேர்த்துக் கொள்ளவும், சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களில் இறக்கிவிடவும் முடியும்.

ஆனால், வேதகால நாகரீகம் தான் இந்தியாவின் நாகரீகம், சமஸ்கிருதம்தான் எல்லா மொழிகளுக்கும் தாய் என்ற காவி பாசிஸ்டுகளின் கதையாடலுக்கு மாற்றாக, வேதத்திற்கும் அது கூறும் வாழ்வியலுக்கும் முந்தைய, சம்பந்தமில்லாத வேறு ஒரு நாகரீகமும் அதற்கான எழுத்து வடிவத்துடன் கூடியதொரு மொழியும் தமிழ்நாட்டில் இருந்துள்ளது என தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் காட்டுகின்றன. இதன் மூலம் காவி பாசிஸ்டுகளின் அரசியல் அடிப்படையையே அவை கேள்விக்குள்ளாக்குகின்றன.

இதனால்தான் இவ்வகழாய்வுகளை எப்படியாவது தடுத்து நிறுத்திவிடவேண்டும், இருட்டடிப்பு செய்துவிட வேண்டும் எனக் காவி பாசிஸ்டுகள் துடிக்கின்றனர்.

வரலாற்றைத் திரிக்கும் காவி பாசிஸ்டுகளின் முயற்சியை முறியடிப்பதும்,  இந்தியாவின், தமிழ்நாட்டின் உண்மையான அறிவியல்பூர்வமான வரலாற்றை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதும்தான் காவி பாசிசத்திற்கு எதிரான நடவடிக்கையாக இருக்கும். மாணவர்கள், பேராசிரியர்கள், அறிவுத்துறையினர், அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் இதற்காக ஒன்றுபட்டு நிற்கவேண்டியது காலத்தின் தேவையாகும்.

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) – தமிழ்நாடு

அரங்க கூட்டம் 


சென்னையில்  – 10.08.2025., ஞாயிறு., மாலை 4 மணி.,

மணியம்மை அரங்கம்., பெரியார் திடல்., சென்னை.


நெல்லையில் – 23.08.2025 சனி., மாலை 5 மணி.,

கோல்டன் மினி ஹால், அக்ரோ வளாகம், புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி


 

 

 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன