”சமூக நீதி” என பெயர் மாற்றினால் மட்டும் விடுதிகளின் அவலம் மாறிவிடுமா?

தமிழகம் முழுவதும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என்கிற பெயர்களில் இயங்கி வந்த நலத்துறை விடுதிகள் அனைத்தும் இனிமேல் ‘சமூக நீதி விடுதி’களாக அழைக்கப்படும் என சீனி சக்கரைச் சித்தப்பாவான முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதாவது, இதுவரை பல்வேறு சமூக அடையாளங்களோடு இயங்கி வந்த மாணவர் நலத்துறை விடுதிகள் அனைத்தும், இனி, சமூக நீதி விடுதிகள் என்கிற ஒற்றை அடையாளத்தோடு இயங்கும். கேட்க சீனி சர்க்கரைப் போல இனிக்கத்தான் செய்கிறது. 3000 திற்கும் மேற்பட்ட சமூக நீதி விடுதிகளில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். ஆனால், அவை அனைத்தும் சுகாதாரமற்ற, ஆரோக்கியமற்ற, ஆபத்தான சூழலில் இயக்கப்பட்டு வருவதை கேட்டால் வேப்பம்பழத்தைப் போல கசக்கிறது.

ஒரு பானைச் சோற்றிக்கு, ஒரு சோறு பதம் என்பது போல ஒரு சில விடுதிகளின் அவல நிலையை அலசினாலே சமூக நீதி விடுதிகளின் இலட்சணம் சந்தி சிரிக்கும். அரசின் அலட்சியமும் அம்பலமாகிவிடும்.

குறிப்பாக, பத்திரிக்கை செய்திகளின்படி, தூத்துக்குடி மாவட்டம் புதூர் விடுதியின் ஒரு அறையில் (ஹாலில்) ஏறக்குறைய 200 சதுர அடியில் 56 பேர் தங்கியுள்ளனர். அவர்களுக்கான கழிப்பறைகள் 6-இல் 3 பழுதாகிவிட்டன. மீதமுள்ள 3 கழிப்பறைகள்தான் பயன்படுத்த வேண்டும். இதிலுள்ள கஷ்டங்களை, துன்பங்களை இயற்கை உபாதையைக் கடக்கும் அனைவருக்கும் சொல்லாமலே விளங்கும். விடுதியைச் சுற்றியும் புதர்கள் சுத்தம் செய்யப்படாமல் மண்டிருப்பதால் பாம்புகளுக்கு பஞ்சமில்லை. இது மாணவியர் விடுதி என்பதால், இரவில் வெளியில் செல்லவும் அஞ்சுகின்றனர். இங்கு தண்ணீர் வசதியும் இல்லாததால், தெருக் குழாய்களில் தண்ணீர் பிடிக்க அப்பகுதி மக்களிடம் போட்டிப் போட வேண்டியுள்ளது. மேலும், சில விடுதியில் போதுமான பாதுகாப்பு இல்லாததால், விடுதிகளை குடிமகன்கள் ஆக்கிரமித்து மாணவ – மாணவியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றனர்.

கோவில்பட்டியில் சாப்பாடும், கழிவறையும் இன்னும் படுமோசம். பள்ளியில் குடிநீர், மின்சாரம் ஆகிய வசதிகள் அறவே இல்லை. பக்கத்திலுள்ள ஓடையில் ஓடும் நீரை பயன்படுத்தி வருகின்றனர். ஓடையில் தண்ணீர் வற்றினால் பள்ளியை மூடி விடுவிடுவார்கள். பெரும்பான்மை உண்டு, உறைவிட பள்ளிகளில் மாணவர்களை தங்க வைக்காமலே தங்க வைத்ததாகவும், மூன்று வேளை உணவுக்கு பதிலாக ஒருவேளை உணவை மட்டும் போட்டுவிட்டு மீதிப் பணத்தைச் சுருட்டி கொள்வதாகவும் கல்வித்துறை அதிகாரி ஒருவர் அம்பலப்படுத்தி உள்ளார்.

கொட்டக்குடி பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் கட்டிடம் எப்பொழுது இடிந்து விழும் என்கிற நிலையில் உயிரைப் பிடித்துக் கொண்டு மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இதை உணர்ந்த, பெற்றோர்கள் சிலர், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கே அனுப்புவதில்லை. தேனி அல்லிநகரம் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதியில் நீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வரும் மாணவியர்கள் குடிநீர் தொட்டி கேட்டு போராடியும் பயனில்லை. இதுபோன்றே மதுரை, கோவை, திருச்சி, சென்னை, திருப்பூர் என பல்வேறு மாவட்டங்களிலுள்ள பள்ளி – கல்லூரிகளின் சமூக நீதி விடுதிகளின் அவல நிலையைச் சொல்லி மாளாது.

மதுரையில் உள்ள ஒரு மாணவியர் விடுதியில் சாப்பாடு மோசமாக உள்ளது என கேள்வி எழுப்பிய மாணவியிடம் “உனக்கு ஒதுக்கிற காசுக்கு இதைத்தான் போட முடியும்” என எகத்தாளமாகப் பேசியுள்ளார் விடுதி காப்பாளர். இதை எதிர்த்து கேள்வி எழுப்பியவர்களை வாலைச் சுருட்டி கிட்டு சாப்பிடு இல்லைன்னா உன் அலாட்டைத் தூக்கி விடுவேன்னு மிரட்டுகிறார். இங்குள்ள ஒரு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சமைப்பதே இல்லை 3 வேளையும் வெளியில் வாங்கியே சாப்பிடுகிறார்கள்.

பல விடுதிகளில் படுக்கப் பாயும், போர்வையும் அறவே இல்லை. அப்படியே இருந்தாலும், அவை அனைத்தும் பயன்படுத்தும் நிலையில் இல்லை. சில விடுதிகளில் மிஞ்சிய பழைய உணவை சூடுப் பண்ணி கொடுத்ததால் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 3 வேளை சோத்துக்கு அரசாங்கம் பள்ளி மாணவனுக்கு 47 ரூபாயும்; கல்லூரி மாணவர்க்கு 50 ரூபாயும் ஒதுக்குகிறது. இதில் எப்படி நல்ல சத்தான உணவை சாப்பிட முடியும். புழுத்துப் போன சோத்தைத்தான் திண்ண முடியும். சிறைவாசிகளை விட மோசமான உணவைத்தான் விடுதி மாணவர்கள் சாப்பிட்டு வருகின்றனர். இந்த அவலத்தை அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் உணர வேண்டுமானால் ஒருவேளை உணவையாவது விடுதியில் உண்ண வைத்தால் அல்லது அவர்கள் வாயில் வலுக்கட்டாயமாக திணித்தால் தெரியும். இந்த இலட்சணத்தில் பள்ளி மாணவனுக்கு ஒரு தொகை, கல்லூரி மாணவனுக்கு ஒரு தொகை.

போலீசின் மோப்ப நாய்களுக்குக் கூட ரூபாய் 250 வரை ஒரு நாளைக்கு உணவுப்படியாக வழங்கப்படுகிறது. இதில் 200 ரூபாயாவது தினசரி உணவுப் படியாக உயர்த்தினால், ஓரளவு நல்ல சத்தான உணவை உண்ண முடியும். இதைக் கூட உணராத ஆதிதிராவிட – பழங்குடியினர் நலத்துறையானது, தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூபாய் 927 கோடியை அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளது. இந்த நிதியை விடுதிகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தியிருந்தால், ஓரளவு விடுதிகளின் அவலங்களைப் போக்கி இருக்க முடியும்.

சில விடுதிகளில் வழங்கும் வேகாத உணவையும், உப்புச் சப்பு இல்லாத குழம்பையும் மாணவர்கள் (வார்டனுக்கு தெரிந்தும், தெரியாமலும்) தங்கள் அறைகளிலேயே மீண்டும் வேகவைத்து சுவையூட்டி சாப்பிடுகின்றனர். ஒவ்வொரு விடுதிகளிலும் உணவும், அத்தியாவசிய தேவைகளான எண்ணெய்யும், சோப்பும் தருவதில்லை. இதற்காக அரசு தரும் சொற்பப் பணத்தையும் அபகரித்து விடுகிறார்கள்.

சமூக நீதி விடுதிகளில் தங்கிப் படித்து வரும் அனைத்து மாணவர்களும் ஏழை, எளிய குடும்பங்களில் இருந்து வருபவர்கள் என்பதால் அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் ஏளனமாகப் பார்ப்பதும், ஓசியில் சாப்பிடுவதற்கு இது போதாதா என்கிற வக்கிரமும் இதில் அடங்கியுள்ளது. அதனால்தான், சமூக நீதி விடுதிகளின் அறைகளை, கழிவறைகளைச் சுத்தமாக பராமரிப்பதில், சத்தான உணவு, சுகாதாரமான நீர் வழங்குவதில், மாணவர்களுக்கான அறைகளை போதுமான வகையில் அமைத்து தருவதில் போதிய அக்கறைச் செலுத்துவது இல்லை. அலட்சியமும், அத்துமீறலும் தான் நிரம்பி வழிகிறது.

அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி, கட்டாயக் கல்வி, அறிவியல் பூர்வமான கல்வி, தாய் மொழிக் கல்வியைத் தருவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் தங்கும் மாணவர் விடுதிகளையும் தரமான, ஆரோக்கியமான வகையில் பராமரிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. இதுவரை, தமிழகத்தை ஆண்ட அதிமுக – திமுக அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் மாணவர் விடுதிகளை மாட்டுக் கொட்டகைகளாகத்தான் நடத்தி வந்துள்ளனர்.

தற்போது, சீனி சக்கரைச் சித்தப்பா அறிவித்ததுப்போல சமூக நீதி விடுதிகளை ஆரோக்கியமான முறையில், ஆக்கப்பூர்வமான வகையில் மாற்றியமைக்க, சொன்னதைச் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்கிற ஸ்டாலின் அரசு இந்த அவலங்களையெல்லாம் போக்குவதற்கு முன்வர வேண்டும். இல்லையென்றால், விடுதி மாணவர்கள் அனைவரும் தமிழ்நாடு தழுவிய அளவில் மாணவர்கள் ஒரு சமூகமாகக் கிளர்ந்தெழுந்து, சமூகநீதி விடுதிகளை தரமாக மாற்றியமைக்கும் வரைப் போராடுவது தவிர்கவியலாததாக ஆகிவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை.

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன