போலீஸ் உங்கள் நண்பனா?
புதிய ஜனநாயகம் – படக்கட்டுரை

“போலீசை திருத்த முடியுமா?” திருபுவனம் கொட்டடிக் கொலையை ஒட்டி தற்போது இந்தக் கேள்வி மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது. ஆளும்வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவியாக மக்களின் மீது பாய்ந்து பிடுங்குவதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள போலீசை என்றைக்கும் திருத்த முடியாது. அதற்கு ரத்த சாட்சியாக இந்தியாவின் சமீபத்திய வரலாற்றிலேயே பல சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன. அந்த வகையில் 1989 நவம்பர் மாத புதிய ஜனநாயகம் சிறப்பிதழில் வெளியான படக்கட்டுரைகளைத் தொகுத்து பதிவிடுகிறோம்.

  • செங்கனல்

போலீஸ் உங்கள் நண்பனா?

“போலீசு. நீதியின் காவலன்; மக்களின் நண்பன்; கொலை. கொள்ளை, ரவுடித்தனங்களில் ஈடுபடும் கிரிமினல் குற்றவாளிகளைத் தங்கள் உயிரையும் பணயம் வைத்துப் பிடித்து, கோர்ட்டில் நிறுத்தி தண்டனை வாங்கித் தருவது போலீசின் கடமை. பொது ஒழுங்கிற்குக் கட்டுப்பட மறுப்பவர்களை, – சைக்கிள்களில் விளக்கில்லாமல் செல்பவர்கள் முதல் சாலையோரங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் வரை பிடிக்கவும் தண்டிக்கவும் போலீசுக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கடமையை பாரபட்சம் இல்லாமல் யாருக்கும் அஞ்சாமல் நிறைவேற்றுவதுதான் போலீசு. “போலீசை உருவாக்கிய வெள்ளைக்காரன் காலத்திலிருந்து இன்றுவரை மக்களுக்கு இப்படித்தான் சொல்லித் தரப்படுகின்றது. இது உண்மைதானா?

உண்மையில் போலீசு எதற்காக உருவாக்கப்பட்டது? யாருக்காகச் செயல்படுகிறது?

போலீஸ் என்பது ஒரு அடியாள் படை. பண்ணையார்கள், பெரும் தரகு முதலாளிகள்; பணமுதலைகள் ஆகியோரைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அரசு அமைப்பில் அது ஒரு அங்கம். மக்களுடைய வரிப்பணத்தைத் தின்றுவிட்டு ஆளும் வர்க்கங்களுக்கு ஊழியம் செய்யும் கும்பல்.

வியர்வை சிந்திப் பாடுபடும் விவசாயிகள், தொழிலாளிகள் மற்றும் உழைக்கும் மக்களை மிரட்டவும் ஒடுக்கவும் இருக்கும் கூலிப்படை. மக்கள் உழைப்பை உறிஞ்சித்தின்று அவர்களுக்கு எதிராகவே செயல்படும் இந்தப் புல்லுருவிக்கூட்டம் ஒருதனிவகைப்பட்ட சாதி.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் தலையிடவும், அவர்களைத் துன்புறுத்தவும், சுரண்டவும் அதிகாரம் படைத்ததுதான் போலீஸ். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது என்ற பெயரில் அந்த சட்டங்களுக்கே கட்டுப்படாமல் தறிகெட்டுத் திரியும் கும்பல்தான் போலீசு. துப்பாக்கியும் குண்டாந்தடியும் தான் இக்கும்பலின் ஜீவன்.

போலீசு சமூக விரோதிகளின் கூட்டாளி மட்டுமல்ல; அதுவே ஒரு கிரிமினல் கும்பல். காக்கிச் சீருடை அணிந்த, சட்டபூர்வமான கிரிமினல் கும்பல்.

போலீசின் இந்த உண்மைச் சொரூபத்தை மறைப்பதற்கு எவ்வளவுதான் முயன்றபோதும் தாங்கள் தான் இந்த நாட்டின் மிகப்பெரிய கேடிகள் என்றும், ஈவிரக்கமற்ற கிரிமினல்கள் என்றும் இக்கும்பல் நிரூபித்து வருகிறது. இதற்கு ஆதாரமாக ஆயிரமாயிரம் சம்பவங்கள் உண்டு. அவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம்!

1979 – பகல்பூர் – போலீசால் கண்கள் குருடாக்கப்பட்ட இளைஞர்கள். இவர்கள் கண்களை சைக்கிள் கம்பியால் தோண்டி திராவகம் ஊற்றியது போலீசு.

பீகார் மாநிலத்தில் பகல்பூர் ஒரு சிறு நகரம். அங்கே கிரிமினல் குற்றங்கள் அதிகரித்தன; ரவுடிகள் பெருத்துவிட்டனர். இதனால் மக்கள் போலீசின் மீது வெறுப்படையத் தொடங்கினர். இதனால் ஏற்பட்ட நிர்ப்பந்தம் காரணமாக, குற்றங்களைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

கிரிமினல்களுடன் கூடிக்குலவிக் கொண்டிருந்த பகல்பூர் போலீசு, அப்பாவி இளைஞர்களையும், அன்றாடக் கூலிகளையும், நடைபாதையில் வாழும் ஏழைகளையும் கைது செய்து கிரிமினல்களைப் பிடித்து விட்டதாகக் கணக்கு காண்பித்தது. ‘குற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கை’ என்ற பெயரில் கைது செய்யப்பட்ட அப்பாவிகளில் 32 பேரின் கண்களைத் தோண்டியது. துருப்பிடித்த ஊசியையும், சைக்கிள் கம்பியையும் அவர்கள் கண்களில் குத்தி திராவகத்தையும் ஊற்றியது. அவர்கள் கண்கள் குருடாகி விட்டதா என்பதை உறுதிசெய்து கொள்வதற்காக பக்கத்தில் ஒரு டாக்டரையும் வைத்துக்கொண்டது.

இந்தக் கொலை பாதகச் செயலுக்கு “கங்கை நீர் தெளிப்பு நடவடிக்க“ என்று வக்கிரமாகப் பெயர் சூட்டி, குற்றவாளிகளைத் தண்டித்து பகல்பூரை புனிதப்படுத்திவிட்டதாக வருணித்தது போலீசு. 1979-இல் இருந்து தொடர்ந்து நடந்து கொண்டிருந்த இந்த அக்கிரமம் 1980-இல் தான் பத்திரிக்கைகளால் அம்பலப்படுத்தப்பட்டது. போலீஸ் அஞ்சவில்லை, கண்துடைப்பு நடவடிக்கையாக ஒருசிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து பகிரங்கமாக ஊர்வலம் நடத்தியது பகல்பூர் போலீசு. அதே நேரத்தில் இந்தச் செய்தி பத்திரிக்கைகளில் வெளிவரக் காரணமாக இருந்தவர்கள் என்று சந்தேகப்பட்டு ஒரு சிறை அதிகாரி மீதும், சில போலீஸ்காரர்கள் மீதும் நடவடிக்க எடுத்தனர் போலீஸ் உயரதிகாரிகள். ஆனால் கண்ணைப் பிடுங்கிய குற்றவாளிகளோ தண்டிக்கப்படவேயில்லை.    

********

சிறுவியாபாரி கிருஷ்ண முராரி

இசைக்கல்லூரி மணவர் கோபால்யாதவ்

வாரணாசி – போலீசால் முழங்காலோடு கால்கள் முறிக்கப்பட்ட இளைஞர்கள்; மாமூல் கொடுக்காமல் போகவே இவர்கள் கால்களைப் பறித்தது போலீசு.

********

உத்திரப்பிரதேசம் – மக்களைப் பீதியூட்டுவதற்காக போலீசு கொலை செய்த கொள்ளைக்காரன் சாபிராமின் பிணம் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

********

போலீசால் நொறுக்கப்பட்டவர்கள் தப்பியோடி விடுவார்களாம்! கால்களில் விலங்குடன் சமஷ்டிப்பூர் சிறைக்கைதிகள்.

********

ஓரிசா: இதோ! இந்தச் சிறுவர்கள் எதற்காக முழந்தாளிட்டு நிற்கிறார்கள்? பிரார்த்தனையா. இல்லை பாடம் படிக்காததற்கு ஆசிரியர் கொடுத்த தண்டனையா? பள்ளி நிர்வாகத்தின் ஊழலை எதிர்த்துப் போராடியதற்காக போலீசு இவர்களுக்குக் கொடுத்த தண்டனை இது! அவர்கள் வெறுமனே முழந்தாளிட்டு நிற்கவில்லை. அவர்களது தலையில் சுமக்கமுடியாத அளவுக்குப் பாராங்கற்கள்!

********

1984 – குஜராத்: பரம்பரை பரம்பரையாகத் தாங்கள் பயன்படுத்தி வந்த 75 ஏக்கர் மேய்ச்சல் நிலத்தைப் பறிமுதல் செய்து பணக்கார விவசாயிகளுக்குக் கொடுக்கப்போவதாக குஜராத் அரசு அறிவித்ததை எதிர்த்துப் போராடினார்கள் கருடி கிராமத்தின் விவசாயிகள், விளைவு 5 விவசாயிகளை சுட்டுக் கொன்றுவிட்டு தற்காப்புக்காக சுட்டதாகக் கூறியது போலீசு. கொல்லப்பட்ட விவசாயிகளின் குழந்தைகள் இவர்கள் – இன்று அநாதைகள்!

********

மத்தியப்பிரதேசம் சட்டாப்பூர் சிறை: மாடுகளைப் போல மனிதர்களையும் காயடிக்கிறது போலீசு. ஆண்மை சூறையாடப்பட்ட விஷ்ணு சர்மா.

1982 – உத்திரப்பிரதேசம்: உள்ளூர் ரவுடிகளை எதிர்த்ததற்காக போலீசால் கொலை செய்யப்பட்ட வலது கம்யூனிஸ்டு கட்சி ஊழியர் ராம் ஸ்நேகி

********

குஜராத்: நான்கு குழந்தைகளின் தாயான இந்த விதவைப் பெண்ணை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 9 மாதம் சிறை வைத்தது போலீசு.

********


பீகார்! காக்கிச்சட்டை மிருகம். ஒரு உயிருள்ள மனிதனை தனது காலுக்கு மிதியடியாக போட்டுக் கொண்டு பவனிவருகிறது. கீழே சுருண்டு கிடப்பவன் ஒரு கிரிமினல் குற்றவாளியாம்! உடம்பு சுகவீனமான இருப்பதால் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறதாம் இந்த மிருகம்! சிறைக்கொட்டடிகுள் அவனை தீர்த்துக்கட்டினால் அது சட்டப்படிக் குற்றம்! சிறைக்கொட்டடி சித்திரவதைகளில் உயிரோடு கொன்றுவிட்டு மருத்துவமனையில் கொண்டுபோய் மூச்சை நிறுத்துகின்றன. கொலை குற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்கின்றன. அப்படி இறப்பு சான்றிதழை பெறுவதற்குதான் இந்த உயிருள்ள மனிதனை பன்றி மாதிரி கயிறு போட்டு சுட்டி எடுத்துச் செல்கிறது, போலீசு “படமா…? எடுத்துக்கொள்ளுங்கள் விபரமாக…? குறித்துக்கொள்ளுங்கள்” என்ற அகங்காரம். அதிகார திமிர்!

********

முன்னா: அலகாபாத்திலிருந்து ‘டிக்கெட்’ இல்லாமல் ரயிலில் பயணம் செய்தாராம்! 40 நாட்களுக்கும் மலாக ஜனசந்தடி மிக்க குரேகான் ரயில் நிலைய ‘பெஞ்சு’டன் விலங்கிட்டு வைத்தது போலீசு. ‘டிக்கெட்’ இல்லாமல் பயணம் செய்தவருக்கு நூறு ரூபாய் அபராதம் அல்லது ஒரு வாரம் சிறை தண்டனை! ‘சட்டமாவது, வெங்காயமாவது. இதுதான் எங்கள் சட்டம்’ என்று கொக்கரிக்கிறது. போலீசு. மன நோயாளிகளிடம் கூட கொஞ்சம் மனித நேயம் இருக்கும். ஆனால் போலீசு பைத்தியங்களோ, அதிகார வெறியேறி ஆயுதத்தை வைத்துக் கொண்டு அம்மணமாக ஆடுகின்றன!

********

பொய்க்குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்க போலீசு கையாளும் சித்திரவதைகள் வார்த்தைகளால் விவரிக்க இயலாத அளவு வக்கிரமானவை; இரத்தத்தை உறைய வைக்கும் அளவு கொடூரமானவை. குற்றத்தை ஒப்புக்கொள்ள வைப்பதற்காக ஒருவரைத் துன்புறுத்துவது கிரிமினல் குற்றம் என்று சட்டம் இருந்தபோதிலும் ‘உண்மையை வரவழைக்க’ சித்திரவதை செய்வது தான் வழி என்று பகிரங்கமாக நியாயப்படுத்துகிறார்கள் போலீசுகாரர்கள். ஆங்கிலேயரின் 400 ஆண்டு கால ஆட்சியில் நடந்ததைவிட கடந்த 40 ஆண்டுகளில் நடந்துள்ள சித்திரவதைகளும் கொலைகளும் அதிகம்.

நகக்கணுவில் ஊசியேற்றுவது, ஆணியடிப்பது, மறைவிடங்களில் சிகரெட் நுழைப்பது, மூத்திரத்தைக் குடிக்கவைப்பது – இவை யெல்லாம் சாதாரண முறைகள்.  குண்டுச்சட்டி முறை,  கோல்கொண்டா முறை, குறுந்தடி முறை, ஆண் உறுப்புகளில் மின்சாரத்தைப் பாய்ச்சுவது – என்று சித்திரவதை முறைகளை புதிது புதிதாகக் கண்டு பிடித்துச் சேர்க்கிறது போலீஸ்.

சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற போர்வையில் போலீசு செய்யும் அக்கிரமங்கள் பட்டயங்களும் பதவி உயர்வுகளுக்கும் உரிய சாதனைகளாக அரசாங்கத்தால் போற்றப்படுகின்றன. சட்டங்கள் அவர்களுக்கேற்றபடியெல்லாம் வளைகின்றன.

புதிய ஜனநாயகம் (நவம்பர் 1989)

  • தொடரும்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன