திருபுவனம் கொட்டடிக் கொலை
கொலைகாரப் போலீசை அரசு என்றைக்கும் கட்டுப்படுத்தாது, தண்டிக்காது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படியே 2016-17 முதல் 2020-21 வரையிலான ஐந்து ஆண்டுகளில் மட்டும் 11,419 கொட்டடிக் கொலைகள் நடந்துள்ளன, அவற்றில் ஒரு போலீசு கூட தண்டிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் இதே காலகட்டத்தில் மட்டும் 39 கொட்டடிக் கொலைகள் நடந்துள்ளன அதில் ஒன்றில் கூட போலீசார் கைது செய்யப்படவில்லை, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை, யாரும் தண்டிக்கப்படவில்லை.

 

கொட்டடிக் கொலைகளுக்குப் பிறகு நடத்தப்படும் வழமையான நாடகங்கள் அனைத்தும் தற்போது திருபுவனம் அஜித்குமார் கொலைக்குப் பிறகும் நடந்து முடிந்துவிட்டன. வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து மாவட்ட நீதிபதி ஒருவர் தலைமையில் அஜித்குமார் கொட்டடிக் கொலை குறித்து விசாரிக்க ஆணையிட்டுள்ளது. ஐந்து போலீசார் மீது இந்தக் கொலை சம்பந்தமாக வழக்கு பதியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய டி.எஸ்.பி. தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட எஸ்.பி. கட்டாய காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மாநிலம் முழுவதும் உள்ள “சட்டவிரோத போலீஸ் சிறப்புப் படைகள்” கலைக்கப்பட்டுள்ளன, இதற்கான உத்தரவை போலீசுத் தலைவர் (டிஜிபி) பிறப்பித்துள்ளார்.

இதையெல்லாம் தாண்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாயாரிடம் நேரடியாக அலைபேசியில் அழைத்துப் பேசி நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டிருக்கிறார். அஜித்குமாரின் குடும்பத்திற்கு நிலமும், அவரது சகோதரருக்கு ஆவின் நிறுவனத்தில் அரசு வேலையும் வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் அதிகாரிகளிடம் காணொளி மூலம் பேசிய முதலமைச்சர் கொட்டடிக் கொலைகளைச் சகித்துக்கொள்ள முடியாது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இந்தக் கொட்டடிக் கொலை குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தமிழக போலீசுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இவையெல்லாம் போலீசின் அத்துமீறலுக்கு எதிராக அரசின் பல்வேறு துறைகளும் பொதுவெளியில் வெளியிட்டுள்ள அறிவிப்புகள். இந்தச் செய்திகளை பத்திரிக்கைகளில் படிக்கும் போதும், சமூக ஊடக காணொளிகளில் பார்க்கும் போதும், இவையெல்லாம் போலீசைக் கட்டுப்படுத்தவும், மக்கள் மீது அவர்களது அடக்குமுறைகளைத் தடுக்கவும், தவறு செய்யும் போலீசாரைத் தண்டிக்கவும் அரசும் அதன் உறுப்புகள் அனைத்தும் விரும்புவதாக ஒரு சித்திரித்தை உருவாக்குகிறது.

உண்மையில் அதுதான் நடக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. திருபுவனம் கொட்டடிக் கொலையைக் கண்டித்து சுவரொட்டி அச்சிடுவதற்குக் கூட அச்சகங்கள் பயப்படுகின்றன. அனைத்து அச்சகங்களையும் போலீசார் இது குறித்து மிரட்டி வைத்துள்ளனர். அதாவது ஒரு பக்கம் தவறு செய்த போலீசாரைத் தண்டிப்பதாக கூறிக்கொண்டு மறுபக்கம் அவர்களை கண்டித்து சுவரொட்டி அச்சிடக் கூட அனுமதிக்க முடியாது என மறுக்கிறது அரசு. கொட்டடிக் கொலை குறித்து நியாயமாக விசாரித்து இனி இது போல நடக்காமல் செய்வோம் என்று கூறுவது அரசு நடத்தும் நாடகம் என நடைமுறையில் இது நமக்கு புரியவைக்கிறது.

தற்போது அஜித்குமார் கொல்லப்பட்டிருப்பதுடன் சேர்த்தால் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்றுள்ள 24-வது கொட்டடிக் கொலை இது[1]. இந்த வழக்கிற்கு கிடைத்துள்ள ஊடக வெளிச்சம் போல மற்ற கொலைகளுக்கு கிடைக்கவில்லை. அவற்றை வெளியே கொண்டு வருவதற்கே கூட பாதிக்கப்பட்ட குடும்பங்களும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. அப்படியே வெளியே கொண்டுவந்தாலும் போலீசார் மீது வழக்குப் பதியவே முடிவதில்லை.

போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று அடித்துச் சித்திரவதை செய்வதைத் தடுப்பதற்கு என்று நேரடியாக எந்த சட்டமும் இந்தியாவில் இல்லை. கைது செய்யப்பட்டவரை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது போன்ற சட்டங்களை போலீசார் எப்போதும் மதிப்பதில்லை. அப்படியே போலீசாரால் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டால் அதனை எதிர்த்து போலீசார் மீது வழக்குப் பதிவு செய்வதை பி.என்.எஸ்.எஸ். சட்டப்பிரிவு 218 தடை செய்கிறது[2]. அதாவது அவர்கள் கொட்டடிக் கொலையே செய்தலும் கூட அவர்கள் மீது வழக்கு பதிய முடியாது.

அப்படியே வழக்குப் பதிய வேண்டும் என்றால் அரசின் அனுமதி அதாவது மாநிலத்தின் தலைமைச் செயலாளரின் அனுமதியோ, முதலமைச்சரின் அனுமதியோ, கட்டாயம் தேவை. பி.என்.எஸ்.எஸ். சட்டபிரிவு 151 போலீசால் நல்ல நோக்கத்துடன், அதாவது அமைதியை நிலைநாட்ட, நடத்தப்படும் கொலைகளுக்கு அவர்கள் மீது வழக்கு பதியக் கூடாது என்று கூறுகிறது[3]. அதாவது தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தைப் போன்ற மக்களின் நியாயமான உரிமைகளுக்கான போராட்டங்களை ஒடுக்கி “அமைதியை நிலைநாட்ட” போலீசு நடத்தும் படுகொலைகளுக்கு எதிராக அவர்கள் மீது வழக்குப்பதிய முடியாது என இந்திய குற்றவியல் சட்டங்கள் நேரடியாக போலீசைப் பாதுகாக்கின்றன.

இது போதாதென்று பி.என்.எஸ்.எஸ். சட்டப்பிரிவு 223-இல் எந்த ஒரு அரசு ஊழியரின் மீதும் அவரது வேலையின் போது நடந்த குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தவோ, அல்லது நடவடிக்கை எடுக்கவோ ஒரு நீதிபதி உத்தரவிடும் முன்பாக அவரது மேலதிகாரியிடமிருந்து குற்றச்செயல் குறித்த அறிக்கையை பெற்று அதன் பிறகே நடவடிக்கைக்கு உத்தரவிட முடியும் என புதிதாக ஒரு சரத்தை பாசிச மோடி அரசு சமீபத்தில் சேர்த்துள்ளது. இதன் மூலம் போலீசின் சித்தரவதை குறித்து விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் அதற்கு உத்தரவிட்ட மேலதிகாரியே அறிக்கை கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது.

இவையெல்லாம் சட்டப்பூர்வமாகவே போலீசாரைப் பாதுகாக்கின்றன. மக்களின் மீது ஒடுக்குமுறையை ஏவுவதற்கு, அவர்களுக்கு மறைமுகமாக உரிமைகளை அளிக்கின்றன.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படியே 2016-17 முதல் 2020-21 வரையிலான ஐந்து ஆண்டுகளில் மட்டும் 11,419 கொட்டடிக் கொலைகள் நடந்துள்ளன, அவற்றில் ஒரு போலீசு கூட தண்டிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் இதே காலகட்டத்தில் மட்டும் 39 கொட்டடிக் கொலைகள் நடந்துள்ளன அதில் ஒன்றில் கூட போலீசார் கைது செய்யப்படவில்லை, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை, யாரும் தண்டிக்கப்படவில்லை[4].

திருபுவனம் அஜித்குமார் கொலை வழக்கு, சாத்தான்குளம் ஜெயராஜ் பெனிக்ஸ் கொலை வழக்கு போன்ற ஊடக வெளிச்சம் பெற்ற, பரவலான கவனம் பெற்ற, மக்கள் மத்தியில் கடும் கண்டனங்களைச் சந்தித்த வழக்குகளின் போது போலீசைக் கட்டுப்படுத்துவதாக கூறிக் கொண்டு பல்வேறு சீர்திருத்தங்கள் அறிவிக்கப்படுகின்றன. போலீசு நிலையத்தில் சிசிடிவி பொருத்துவது தொடங்கி போலீசின் சித்ரவதைகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட விசாரணை அமைப்புகளை மாநில/மாவட்ட அளவில் உருவாக்குவது போன்ற பல சீர்திருத்தங்கள், உத்தரவுகளை அரசு அப்போதைக்குக் கூறுகிறதேயொளிய அதனை நடைமுறைப்படுத்துவது இல்லை. இந்த உத்தரவுகளை போலீசார் மதித்து நடப்பதும் இல்லை இதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதும் இல்லை.

தற்போதும் கூட வெளிநாடுகளில் இருப்பது போன்று விசாரணை செய்யும் அதிகாரியின் உடலில் கேமரா (Body Cam) பொருத்த வேண்டும், போலீசு மீதான புகார்களை விசாரிக்க தனியான சுதந்திரமான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. அதையும் தாண்டி இன்னும் சிலர் போலீசாருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும், அடித்துச் சித்ரவதை செய்து தான் உண்மையை வாங்க வேண்டும் என்பது இல்லை, அடிக்காமலேயே உண்மையைக் கண்டறியும் நவீன விசாரணை முறைகள் குறித்து போலீசுக்குப் பாடம் எடுக்க வேண்டும், போலீசுக்கு யோகா, தியானம் சொல்லித்தர வேண்டும் எனப் பல பரிந்துரைகளை அள்ளி வீசுகின்றனர்.

இவையெல்லாம் போலீசு என்பது யாரால் எதற்காக உருவாக்கப்பட்டது, அரசும், ஆளும்வர்க்கமும் போலீசிற்கு இத்தனை அதிகாரங்களைக் கொடுத்து ஏன் பாதுகாக்கிறது என்று புரிந்து கொள்ளாமல் மேலோட்டமாகப் பிரச்சனையை அனுகி வழங்கப்படும் கோரிக்கைகளாகும். போலீசு என்றால் திருடனைப் பிடிக்க, கொலைகாரர்களைப் பிடிக்க உள்ள ஒரு அமைப்பு என்ற பொதுவான புரிதல் மட்டுமே பெரும்பாலானவர்களுக்கு இருக்கின்றது. இந்த புரிதல் சரி என்றால் திருட்டைத் தடுக்கின்ற, கொலைகாரர்களைப் பிடிக்கின்ற ஒரு அமைப்பிற்கு ஏன் இத்தனைச் சட்டப் பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும்?

போலீசு என்பதே, முதலாளிகளையும் அவர்களது சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக, அதற்காக வேலை செய்கின்ற அரசையும், ஆளும்வர்க்கத்தையும் பாதுகாப்பதற்காக, அவர்களுக்கு எதிரான மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு ஒடுக்குமுறைக் கருவி. மக்களின் கோபத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அரசு உருவாக்கிய கொடூரமான வேட்டை நாய்தான் போலீசு. மக்களின் மீது எப்போதும் வன்மத்தையும், வெறுப்பையும் கக்குகின்ற, அவிழ்த்துவிட்டால் யார் மீது வேண்டுமானாலும் பாய்த்து கடிக்க காத்திருக்கின்ற, தனது எஜமானனின் குரலுக்கு ஒடுங்கி வேலை செய்கின்ற வேட்டை நாயைப் போன்றே போலீசை இந்த அரசு தயார்ப்படுத்தி வைத்திருக்கிறது.

போலீசில் சேர்வதற்காக பயிற்சியளிக்கப்படும் காலம் முதலே மேலதிகாரிகளுக்குக் கீழ்ப்படிவதற்கும், தயவு தாட்சண்யமின்றி ஒடுக்குமுறையை ஏவுவதற்கும் போலீசார் பயிற்றுவிக்கப்படுகின்றனர். தான் பார்க்கும் எந்தவொரு சாதாரண மனிதரையும் எப்போதுமே குற்றவாளியாக, தனக்கு கீழானவராக, பார்ப்பதற்குப் போலீசார் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.

பயிற்சி முடிந்து பணியில் சேர்ந்த பிறகும் கூட, வாரம் முழுவதும் எல்லா நாட்களும் வேலை, 16 மணி நேரம் 18 மணி நேரம் வேலை என எப்போதும் வேலை குறித்த சிந்தனையிலேயே அவர்களை வைத்திருப்பது. வேலை நேரம் போக மீதி நேரங்களில், மக்கள் மத்தியில் அவர்கள் கலந்துவிடாதபடிக்கு போலீசாருக்கென தனித்த குடியிருப்புகளை உருவாக்கி அதையும் கூட ஊருக்கு வெளியில் வைத்திருப்பது என போலீசை சமூகத்திலிருந்து தணித்து வைக்கப்பட்ட சக்தியாக, சாதாரண மனிதர்களை விட தன்னை மேலானவராக கருதுகின்ற, மக்கள் மீது அடக்குமுறையை ஏவுவதை தனது உரிமையாக கருதுகின்ற சக்தியாக போலிசை அரசு உருவாக்கி வைத்துள்ளது.

இது போலீசு நிலையங்களில் பணியாற்றும் சட்ட ஒழுங்கு மற்றும் கிரைம் பிராஞ்ச் போலீசாரின் நிலை என்றால், ஆயுதப்படைப் பிரிவு போன்ற சிறப்புப் போலீசுப் பிரிவுகளோ, சண்டைக்குத் தயார் செய்யப்பட்டு கொட்டடியில் அடைக்கப்பட்டு, திறந்துவிட்டால் பாய்ந்து கடித்துக் குதறக் காத்திருக்கும் வெறிநாய்க் கூட்டத்தைப் போன்று வளர்க்கப்படுகின்றன. தவறு செய்து மாட்டிக் கொள்ளும் போலீசுக்கு தண்டனை என்றால் அது ஆயுதப்படைக்கு மாற்றப்படுவது என்று கூறும் அளவிற்கு போலீசே கண்டு அஞ்சும் போலீசுப் பிரிவு அது.

இது போன்ற படைகள் பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் தங்கவைக்கப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது. அவர்கள் மக்களைச் சந்திப்பது என்பதே போராட்டங்களை, கலவரங்களை ஒடுக்குவதற்காக ஊருக்குள் அழைத்துவரப்படும் போது மட்டும்தான். சிறப்புப் படைகள் என்ற பெயரில் சித்ரவதை செய்வதற்கும், என்கவுண்டர் என்ற பெயரில் கொலைகளைச் செய்வதற்கும், கூலிப்படையைப் போன்று இவர்களைத்தான் அரசு பயன்படுத்துகிறது.     

மக்களின் கோபத்திலிருந்து, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, பயிற்சியளித்து, அதிகாரங்கள் கொடுத்து; தான் உருவாக்கிய படையை அரசு என்றைக்கும் கட்டுப்படுத்தவோ தண்டிக்கவோ செய்யாது. போலீசுத் துறைச் சீர்திருத்தங்கள் என்று கூறுவதெல்லாம் வெறுமனே வாய் வார்த்தைகள். அப்போதைக்கு நிலைமையைச் சமாளிக்க கொடுக்கப்படும் வெற்று வாக்குறுதிகள் மட்டுமே. சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் கவனம் பெற்ற சாத்தான்குளம் ஜெயராஜ் பெனிக்ஸ் கொலை வழக்கு கூட ஆறு ஆண்டுகளாக சிபிஐ விசாரணையிலேயே இருக்கிறது. அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை.

கொட்டடிக் கொலைகள் கூட யாருக்கும் தெரியாமல் தனியறையில் அல்லது ஒதுக்குப்புறமான இடத்தில் நடத்தப்படுகின்றன, ஆனால் ஒட்டுமொத்த ஊரே பார்க்க, பொது வெளியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட போலீசார் யார் என்ற விவரம் கூட இன்னமும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. துப்ப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட போலீசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் கமிசனின் அறிக்கையை திமுக அரசு குப்பைத் தொட்டியில் போட்டிருக்கிறது. அதே திமுக அரசு இன்றைக்கு திருபுவனம் வழக்கில் நியாயமாக நடந்து கொள்வேன், இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வேன் என நம்மை நம்பச் சொல்கிறது.

மக்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒடுக்குமுறைக் கருவியான போலீசை என்றைக்கும் சீர்திருத்த முடியாது. அதனை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதுதான் இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு. இப்படிச் சொல்லும் போது, பலரும் போலீசை ஒழித்துவிட்டால் திருடர்களையும், கொலைகாரர்களையும், சமூக விரோதிகளையும் யார் தடுப்பது, கட்டுப்படுத்துவது என்று கேட்கிறார்கள். ஒரு படை மக்களை பாதுகாக்க வேண்டும் என்றால் அது மக்கள் மத்தியிலிருந்து உருவாக்கப்பட்ட படையாக இருக்க வேண்டும். அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரம் அளிக்கப்பட்ட, அவர்கள் விரும்பினால் திருப்பியழைத்துக் கொள்ள உரிமை இருக்கின்ற படையாக இருக்க வேண்டும். முதலாளிகளுக்கும், அதிகாரிகளுக்கும் விசுவாசமான படையாக இல்லாமல் சாமானிய மக்களுக்காக உழைக்கின்ற படையாக இருக்க வேண்டும். அத்தகைய மக்கள் படைகள் வரலாற்றில் உலகின் பல்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்டிருகின்றன. சோவியத் ரஷ்யாவில், சீனாவில், வியட்நாமில் இதுபோன்ற படைகள் மக்களைக் காக்கும் அரண்களாக, சமூகவிரோதிகளைத் தண்டிக்கும் கரங்களாக இருந்திருக்கின்றன. அப்படிப்பட்ட மக்கள் படைகளைக் கட்டியமைப்பதை நோக்கிப் போராடுவதே போலீசின் அடக்குமுறையிலிருந்து, சித்ரவதையில் இருந்து மக்களைப் பாதுகாக்கின்ற பாதையாக இருக்க முடியும்.

  • அறிவு

[1] https://www.puthiyathalaimurai.com/tamilnadu/24-police-station-deaths-in-tamil-nadu-in-the-last-4-years

[2] https://www.scconline.com/blog/post/2024/09/04/sanction-to-prosecute-public-servants-change-in-regime-a-balancing-act/

[3] https://indiankanoon.org/doc/19837901/

[4] https://www.thehindu.com/data/data-no-charge-sheets-arrests-or-convictions-in-tamil-nadu-for-custody-deaths-in-recent-years/article66682772.ece?utm_source=chatgpt.com

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன