அமெரிக்காவின் ஒற்றை துருவ மேலாதிக்கத்தைத் தக்க வைப்பதற்காகவே இஸ்ரேல் – ஈரான் போர்!
பாகம் III

மேலாதிக்கம் பெறுவதற்காக அதாவது பிரதேசக் கைப்பற்றலுக்காக ஒரு சில வல்லரசுகளுக்கிடையில் நடைபெறும் போட்டியானது அவ்வளவாகத் தமக்கே நேரடியாக பிரதேசம் வேண்டும் என்பதற்காக அல்லாமல், தமது எதிராளியைப் பலவீனப்படுத்துவதற்காகவும் அவனது மேலாதிக்கத்திற்குக் குழிபறிப்பதற்காகவும் எழும் போட்டியாக இருப்பது ஏகாதிபத்தியத்தின் அவசிய குணாதிசயமாகும் - லெனின்.

ஈரானுடனான அமெரிக்காவின் அணுசக்தி தடுப்பு ஒப்பந்தத்திற்கு (JCPOA) ஆரம்பம் முதலே அமெரிக்க அரசாங்கத்திற்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக டிரம்ப் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அதாவது, 2015-இல் “ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஒரு பயங்கரமான ஒப்பந்தம். இது ஈரானை பணக்கார நாடாக்குவதைத் தவிர வேறு எதையும் செய்யாது” என்று டிரம்ப் விமர்சித்தார். அமெரிக்க ஜனாதிபதி பிரச்சாரத்தின் போது அணுசக்தி தடுப்பு ஒப்பந்தத்தை மீண்டும் விமர்சித்து பிரச்சாரம் செய்தார். மேற்காசியாவின் பயங்கரவாத குழுக்களுக்கு ஈரான் உதவி செய்வதை நிறுத்துவதற்கு இந்த ஒப்பந்தத்தில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என அமெரிக்க அரசு நிர்வாகத்திற்குள்ளேயே முரண்பாடு எழுந்தது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று டிரம்ப் முதல் முறையாக ஆட்சிக்கு வந்ததும் ஈரானுடன் மோதல் போக்குகளை வெளிப்படையாகவே தொடங்கினார். ஈரானின் ஆட்சி மாற்றம் நடைபெறுவதற்கு திட்டங்களை வகுத்து கொடுத்து வந்த ஜான் போல்டன் என்பவரை தனது தேசிய பாதுகாப்பு ஆலோசராக நியமித்தார். ஈரானுடனான அமெரிக்காவின் அணுசக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக மே 2018-இல் ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப்பட்சமாக அறிவித்தார். டிரம்ப்பின் இந்த முடிவுக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு தான் சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் அமெனோ, ஈரான் தான் ஒப்புக் கொண்டபடி அணுசக்தி தொடர்பான உறுதிமொழிகளை செயல்படுத்துகிறது என கூறியிருந்தார். சர்வதேச அணுசக்தி முகமையின் படி டிரம்ப் முடிவெடுக்காமல், ஏப்ரல் 2018-இல் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறிய போலியான குற்றசாட்டை அடிப்படையாகக் கொண்டே ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஆனால் டிரம்ப் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான உண்மையான காரணம் ஈரானுடான விரோதத்தை மீண்டும் தொடங்கி இப்பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு தான். இதற்கான செயல்களை டிரம்ப் அரசு படிப்படியாக அமுல்படுத்த தொடங்கியது.

அணுசக்தி ஒப்பந்த விலகலைத் தொடர்ந்து, ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப்படுவதாக அறிவித்த டிரம்ப் அரசு, வெளிநாட்டு நிறுவனங்கள் ஈரானை விட்டு வெளியேறுவதற்கு மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்தது. இதனால், எண்ணைய் ஏற்றுமதி மட்டுமல்லாது, அலுமினியம், இரும்பு, நிலக்கரி தொடர்பான வர்த்தகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பெட்ரோலிய உற்பத்திப் பொருட்களுக்கான நிறுவனங்களுக்கு மட்டும் 180 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. இதனால் ஐரோப்பிய ஒன்றியமும் பிற நாடுகளும் பாதிப்புக்குள்ளானது. ஈரானுக்கோ இந்த பொருளாதார தடையால் எண்ணெய் வர்த்தக ஏற்றுமதி ஐந்து மடங்கு அளவுக்கு குறைந்து போனது. முதல் சுற்று தடைகளின் போது சலுகை என்ற பெயரில் இந்தியா, சீனா போன்ற எட்டு நாடுகளுக்கு ஈரானிலிருந்து எண்ணெய் ஏற்றுமதியை தொடர அனுமதித்தது.

இச்சலுகைகள் முடிந்த பிறகு ஈரான் மீது டிரம்ப் அரசு இராணுவ ரீதியாக காய் நகர்த்தியது. ஓமன் வளைகுடா வழியாகச் சென்ற இரண்டு எண்ணெய் டேங்கர்கள் சேதமடைந்ததற்கு ஈரானே காரணம் எனக் கூறி மேற்காசியாவிற்கு 1000 அமெரிக்க துருப்புகளை டிரம்ப் அரசு அனுப்பியது. இதற்கு ஆதாரமாக ஈரானிய புரட்சிகர காவல் படை, டேங்கரின் ஒரு பகுதியில் குண்டு வைத்ததாக ஒரு போலி வீடியோவை அமெரிக்கா வெளியிட்டது. ஆனால் ஜப்பானை சார்ந்த அந்த டேங்கரின் உரிமையாளரே இந்த வீடியோவின் சாத்தியக் கூறுகளை மறுத்தார். ஈரானின் அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சரான ஜவாத ஜரீப் என்பவர் ஜப்பான் டேங்கர் மீதான தாக்குதல் நடந்த சமயத்தில் ஜப்பான் பிரதமரான ஷின்சோ அபேவோடு ஈரானின் அயதுல்லா காமெனி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார், எனவே இதை ஈரான் செய்வதற்கு வாய்ப்பில்லை என மறுத்தார்.

இந்த டேங்கர் சம்பவம் நிகழ்ந்த ஒரு வாரம் கழித்து ஈரானின் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க டிரோனை ஈரானிய படைகள் சுட்டு வீழ்த்தின; இதற்கு ஆதாரமாக டிரோன் பறந்த வான்வழி பாதையை ஈரான் வெளியிட்டது. இந்த டிரோன் தாக்குதலையொட்டி அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டியது. அமெரிக்கப் படைகள் ஈரான் மீது தாக்குதலுக்கு தயாராக இருந்தது. ஆனால் நான் தான்  பத்து நிமிடங்களுக்கு முன்னர் இதை நிறுத்தினேன் என டிரம்ப் அறிவித்தார். மேற்கூறிய பல்வேறு தரவுகள் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரானை அடிமைப்படுத்தி அதன் மீது தனது மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு பல ஆண்டுகளாக முயன்று வந்திருக்கிறது என்பதை தெளிவாக்குகிறது.

தற்போது நடந்த இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு மீண்டும் வருவோம்

ஈரான் மீது நடந்த தாக்குதல் பற்றி மேற்கத்திய பத்திரிக்கைகள்  பல்வேறு விவாவதங்களை எழுப்பி வருகிறது. அவைகளில் சிலவற்றைக் குறிப்பிட்டால் டிரம்ப் தனது இரண்டாவது முறை ஜனாதிபதி பிரச்சாரத்தில் ”பைடன் அரசு மூன்றாவது உலகப் போரை நோக்கி உலகை இழுத்துச் செல்கிறது; நான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் போர் இல்லாத ஆட்சி இருக்கும்” என அப்பிரச்சாரத்தில் கூறியிருந்தார். எனவே தற்போது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தி நிலவுவதாக எழுதுகின்றனர். மற்றொரு பிரிவினர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சுக்கு இணங்கியே  டிரம்ப் ஈரான் மீது தாக்குதலை தொடங்கினார் என வாதம் செய்கின்றனர். அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் கூட இஸ்ரேலில் நெதன்யாகு அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை தவிர்க்கவே ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எனக் கூறினார். கடந்த ஜூன் 24-ஆம் தேதியன்று டிரம்ப் போர்நிறுத்தம் பற்றிய செய்தியை அறிவிக்கும் போது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இஸ்ரேல் மீதான தன் கோபத்தை வெளிப்படுத்தினார். இச்சம்பவத்தை வைத்து நெதன்யாகுவால் தான் அமெரிக்கா போருக்குள் இழுக்கப்பட்டதாகவும்; இதை தற்போது டிரம்ப் உணர்ந்தபடியால் இஸ்ரேல் மீது கோபத்தில் இருப்பதாகவும் எழுதப்படுகிறது; ஈரானோடு பேச்சுவார்த்தை என கூறிக்கொண்டே மறுபுறம் தாக்குதல் தொடுப்பதற்கு இஸ்ரேலுக்கு பச்சைக் கொடி காட்டினார் என டிரம்பின் தனிப்பட்ட குணநலன்கள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

ஏகாதிபத்திய நிறுவனங்கள் பரப்பும் போர் பற்றிய ஒரு தலைப்பட்சமான செய்திகள் தான் இன்று உலகமெங்கும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இச்செய்திகள் மூலம் அமெரிக்காவை நியாயத்துக்காகப் போராடும் ஜனநாயகவாதியாகவும், அவை போர் தொடுக்கும் நாட்டின் அதிபர்களை எதிரிகளாகவும் அவை சித்தரிக்கின்றன. உண்மைகளை இருட்டடிப்பு செய்துவிட்டு கருத்து ரீதியாக மக்கள் மீது நடத்தப்படும் இன்னுமொரு யுத்தமே இது.

முதலாளித்துவ பத்திரிக்கையாளர்கள் கூறுவது போல ஈரான் மீதான நேரடி தாக்குதல் என்பது ஏதோ இஸ்ரேலின் டெல் அவில் நகரத்திலோ அல்லது டிரம்பின் மூளையிலோ உருவானது அல்ல; இத்தாக்குதல் டிரம்பின் முன்னோடிகள், வளைகுடாப் பகுதியில் அமெரிக்க மேலாதிக்கத்தை  தக்கவைப்பதற்காக வாஷிங்டனில்  உருவாக்கிய கொள்கையின் படியே நடந்திருக்கிறது. டிரம்பின் போர்க்கொள்கையும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளின் போர்கொள்கைகளும் ஒன்றுதான்.

21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார வலிமை வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்தது. அமெரிக்காவில் வீழ்ச்சியடைந்து வந்த பொருளாதாரத்தின் பிரதிபலிப்பாக வர்த்தகப் பற்றாக்குறையும் ஏற்பட்டது. இதை சமாளிப்பதற்கு பல்வேறு வங்கிகளிலிருந்து கடன் வாங்கும் நிலைக்கு அந்நாடு தள்ளப்பட்டது. டாலர்  சர்வதேச நாணயமாகவும், உலகின் செல்வத்தை சேமிப்பதற்கான முதன்மையான வழியாகவும் இருந்ததால் அமெரிக்காவால் இதை எளிதாக செய்ய முடிந்தது. உலகளாவிய முதலீட்டாளர்களும், உலகின் பல்வேறு வங்கிகளும் அமெரிக்காவின் கடன் பத்திரங்கள், நிதிச் சொத்துக்களை வாங்கி, அந்நாட்டிற்கு கடன்கள் கொடுக்க முன்வந்தனர். அமெரிக்காவின் பொருளாதார நிலைமை டாலர்  மதிப்பு உலகின் மேலாதிக்கமாக இருப்பதையே சார்ந்திருந்தது.

அக்காலகட்டத்தில் ஐரோப்பா யூனியனும்; யூரோவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு போட்டியாளராக மாறும் நிலை இருந்தது. ஆசியாவில் சீனா சமூக ஏகாதிபத்தியமாக வளர்ந்து அமெரிக்காவிற்கு போட்டியாக வந்து நின்றது. இதனால் அமெரிக்க ஆளும் வர்க்கத்தினர் மேற்கூறிய பிரச்சினைகள் மேலும் வளர்ந்து விடாமல் தடுத்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தை உலக மேலாதிக்கமாக விரிவுபடுத்துவது என்ற திட்டத்தை முன்னெடுத்தனர். இத்திட்டத்திற்கு “அமெரிக்காவிற்கான புதிய நூற்றாண்டு திட்டம்” (Project for a New American Century – PNAC) என பெயரிட்டார்கள். இப்பெயரில் தொடங்கப்பட்ட சிந்தனை குழாமின் பணி அன்றைய அமெரிக்க அதிபர்  புஷ் அரசில் (2001) வெளியுறவுக் கொள்கையை வடிவமைத்தது தான். இக்குழு உருவாக்கிய கொள்கைகளில் சில அமெரிக்க அரசு 2002-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அமெரிக்கா தேசிய பாதுகாப்பு யுக்தியில் இடம்பெற்றன.

PNAC தனது நோக்கத்தை உலக மக்களுக்கானது என பாசாங்கு செய்யவில்லை. அது வெளிப்படையாகவே தனது நோக்கம் அமெரிக்க மேலாதிக்கத்திற்கானது என அறிவித்தது. பலம்  வாய்ந்த படைகள், வளங்கள் மற்றும் யுக்திகள் மூலம் அமெரிக்காவிற்கான ஒரு புதிய நூற்றாண்டை அமைப்பது, வளைகுடாப் பிராந்தியத்தில் உள்ள  பிரச்சினைகளை தீர்ப்பது, சதாம் உசைனுக்குப் பிறகும் ஈராக்கைப்  போலவே ஈரானும் அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதால்  அங்கு அமெரிக்கப் படைகளை நிரந்தரமாக குவிப்பது, அமெரிக்க மேலாதிக்கத்திற்கான எந்த ஒரு போட்டியாளர் வளர்வதையும் தடுப்பது  என தமது குறிக்கோள்களை அறிவித்தனர்.  செப்டம்பர் 2001-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைப்பெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதல் PNAC-ன் நோக்கங்களை  இப்பிராந்தியத்தில் எளிதாக அமுல்படுத்த ஒரு காரணமானது. பயங்கரவாதக் குழுக்கள் என்பதை தாண்டி, உலக நாடுகள் பேரழிவு ஆயுதங்கள் வைத்திருக்கின்றன எனக் காரணம் காட்டி போர் தொடுப்பது என இக்கொள்கை பரிணமிக்க ஆரம்பித்தன.

ஈராக் மீதான அமெரிக்கப் போருக்கு முந்தைய (2002) ஆண்டுகளின் காலகட்டத்திற்கு நாம் சென்று சற்று பரிசிலிப்போம். இப்பிராந்தியத்தின் பெரும்பகுதி அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிய மறுத்தே வந்தது. லிபியாவின் ஜனாதிபதியாக கடாபியும்; சிரியாவின் ஜனாதிபதியாக பஷர் அல்-அசாத்தும்; ஈராக்கில் சதாம் உசேனும் இருந்தனர். ஈராக்குடான போருக்குப் பிறகு ஈரானும் தனது இஸ்லாமிய குடியரசின் கீழ் பாதிப்பிலிருந்து மீண்டெழுந்து வந்து கொண்டிருந்தது. லெபனானில் ஹெஸ்பொல்லா பெரும் செல்வாக்குடனும் இருந்தனர், லெபனானின் தெற்குப் பகுதியை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தனர். பாலஸ்தீனத்தில் இரண்டாவது இண்டிபாடா எனும் இயக்கம் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பின் நாடுகளான சவூதி அரேபியா, ஓமன், பஹ்ரைன், கத்தார் போன்ற நாடுகள் தனது சொந்த மக்களின் எதிர்ப்புக்கு பயந்து இஸ்ரேலுடன் வெளிப்படையாக எந்த உறவும் வைத்துக் கொள்ளாமல் இருந்தன.

இவ்வாறு தன் மேலாதிக்கத்திற்கு எதிராக இருந்த இப்பிராந்தியத்தை கைப்பற்றுவதற்கான முதற்படியாக  ஈராக்கை வென்று அடிமைப்படுத்துவதன் மூலம் தொடர்ந்து லிபியா, ஈரான், லெபனான், சிரியா, ஏமன் என்று தனது உலக மேலாதிக்கத்திற்கு அடிபணியாத நாடுகள் மீது ஏதாவது ஒரு பழி சுமத்தி அவற்றின் மீதும் ஆக்கிரமிப்பு – அடாவடி போர் நடத்த திட்டமிட்டது. இனி ஐ.நா சபை ஒப்புதல் இல்லாமல், உலக நாடுகள் எவை எதிர்த்த போதிலும் எந்த ஒரு சுதந்திர நாட்டின் மீதும் படையெடுக்கவும், ஆக்கிரமிக்கவும் தனக்கு உரிமையும், அதிகாரமும், வலிமையும் உண்டு என்று நிலைநாட்டவும் திட்டமிட்டது.

கடந்த 23 ஆண்டுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தன் ஒற்றைத் துருவ மேலாதிக்கத்திற்காக இப்பிராந்தியத்தில்  நடத்தி  வரும் போர்கள், முற்றுகை மற்றும் தாக்குதல்களின் ஒரு பகுதி தான் இந்த ஈரான் மீதான தாக்குதல்.  இத்தனை ஆண்டுகளில் அமெரிக்காவை ஆட்சி செய்த அதிபர்களான புஷ், ஒபாமா, பைடன், டிரம்ப் அரசுகள் நடத்திய தாக்குதலால் ஈராக், சிரியா, லிபியா போன்ற நாடுகளும்; அமெரிக்க அடியாளான இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் லெபனான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளும் நிலைகுலைந்து போயிருக்கின்றன. காசாவை அதன் சுவடே தெரியாமல் இஸ்ரேல் அழித்து வருவதும் இதில் அடங்கும். பல ஆண்டுகளாக நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள், மூர்க்கத்தனமான தாக்குதல்கள்  அதிர்ச்சி மற்றும் பீதி தாக்குதல்கள் என இப்பிராந்தியத்தை அச்சத்தில் இருத்தி வைத்து இருக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஒவ்வொரு ஆக்கிரமிப்பிற்கும் ஒவ்வொரு காரணங்கள் கூறப்பட்டன. பேரழிவு ஆயுதங்களை தடுப்பதற்கு என ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டது. மனித உரிமைகளை பாதுகாக்க என்ற பெயரில் லிபியா மீதும், ISIS3-இன் வளர்ச்சியை தடுக்கப் போகிறோம் என சிரியா மீதும் போர் தொடுக்கப்பட்டது. இன்றோ ஈரான் அணு ஆயுதங்கள் வைத்திருக்கிறது என தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. மேற்கத்திய ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக அதன் ஊடகங்களும் இந்த போலியான காரணங்களை முதன்மைபடுத்தியே பிரச்சாரம் செய்கின்றன. ஆதிக்க வெறிபிடித்த ஏகாதிபத்தியங்கள் தமது இராணுவ பலத்தை மட்டும் எப்போதும் நம்பிக்கொண்டிருப்பதில்லை. பொய்கள், வதந்தி, அவதூறு, போர்வெறி, இனவெறியை அவை சிந்தனை ரீதியில் பரப்பி ஆதயமடைவதையே பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளன.

இன்று வளைகுடாப் பிராந்தியத்தின் ஈராக்கில் அமெரிக்க துருப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஈராக் அரசால் தனது இறையாண்மையைக் கூட செயல்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. சின்னஞ் சிறிய நாடான சிரியா கொடிய வறுமையில் சிக்கி சின்னா பின்னமாக்கப்பட்டுள்ளது. அங்கு அமெரிக்காவின் கைப்பொம்மை அரசான இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் ஆட்சி நடைபெறுகிறது. அச்சிறிய நாட்டின் பெரும்பகுதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. லெபனானில் ஹெல்பொல்லா எனும் இஸ்லாமிய பயங்கரவாதக் குழு தலைதூக்கா வண்ணம் நசுக்கப்பட்டுள்ளது. அங்கு அமெரிக்கத் தூதர் வைத்தது தான் சட்டம் என்ற நிலையே தற்போது உள்ளது. இஸ்ரேலோ தன் விருப்பப்படி லெபனானை தாக்குகிறது. காசாவை இஸ்ரேல் ஒட்டுமொத்தமாக  இனப்படுகொலை செய்து அழித்து வருகிறது. மேற்குக்கரையில் மஹ்மூத அப்பாஸ் தலைமையில் செயல்படும் பாலஸ்தீன ஆனையம் இஸ்ரேலின் ஒரு பிரிவாகவே தற்போது செயல்படுகிறது. வளைகுடாப் பிராந்தியத்தில் இருக்கும் பிற அரபு நாடுகளோ தன் சொந்த மக்களின் எதிர்ப்பையும் மீறி இஸ்ரேலுடன் பல ஒப்பந்தங்களை நிறைவேற்றி வருகின்றன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போர்கள் மற்றும் நாசங்கள் காரணமாக இப்பிராந்தியம் முழுவதுமே பயங்கரமான பின்னடைவிற்கு தள்ளப்பட்டுள்ளன.

ஈரான், அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்வதை தடுப்பதுதான் அமெரிக்காவின் நிலைப்பாடாக இருந்திருந்தால், 2015 அணுசக்தி ஒப்பந்தமான கூட்டு விரிவான செயல் திட்டத்தை (JCPOA) ஈரானோடு செயல்படுத்தி இருந்திருக்கும் இதனால் ஈரானும் பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு ஈடாக அணு செறிவூட்டல் உரிமையை கைவிட்டிருக்கம் என்பதே திண்ணம். ஆனால், முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் அரசு  2018-இல் ஒருதலைப்பட்சமாக JCPOA-இல் இருந்து விலகியது. பைடன் தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது JCPOA-ஐ மீண்டும் கொண்டு வருவதாக  பிரச்சாரம் செய்த போதிலும், அவரது தலைமையிலான அரசு டிரம்ப்-I இன் கொள்கைகளை அப்படியே அமுல்படுத்தியது. தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்பு அமெரிக்க மேலாதிக்கத்தை தக்க வைப்பதற்காக முன்னிலும் மூர்க்கமாக  டிரம்ப்-II அரசு செயல்படுகிறது.

உலகின் பெட்ரோலிய உற்பத்தியில் சரிபாதிக்கும் மேலாக அமெரிக்கா பயன்படுத்துகிறது. ஈரான் எண்ணெய் வளத்தில் உலகில் முக்கிய இடத்தில் இருக்கும் நாடு. பிற எண்ணெய் வளமிகு அரபு நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்திய எடுபிடிகளாகிவிட்ட நிலையில் அந்நாடுகளின் எண்ணெய் வளத்தை தன்  ஆதிக்கத்தில் கொண்டு வந்த நிலையில் ஈரானின் எண்ணெய் வளத்தையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதன் மூலம் பெட்ரோலிய எரிசக்தித் துறையில் அமெரிக்கா உலக ஏகபோகத்தை நிறுவிவிட முடியும். இதோடு யூரோ நாணயத்திற்கு எதிராக வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், பெட்ரோலியப் பொருட்களை யுவான் நாணயத்தில் வாங்கும் சீனாவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும் அமெரிக்கா வெறித்தனமாக செயல்படுகிறது. குறிப்பாக பெட்ரோலிய வர்த்தகம் யூரோவுக்கு மாறினால் ஒரே நாளில் டாலர் மதிப்பு பல மடங்கு வீழ்ச்சியுறும். எனவே இதை தடுப்பது அமெரிக்க மேலாதிக்கத்தின் உடனடி நோக்கமாகும். மேலும் வளைகுடாப் பிராந்தியத்திலிருந்து எண்ணெய் இறக்குமதியை சார்ந்திருக்கும் சீனாவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இப்பிராந்தியத்தில் மேலாதிக்கம் செலுத்துவது என்பது அமெரிக்காவின் தேவையாக இருக்கிறது. இதனால்  எண்ணெய் வளம் கொழிக்கும் இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்க யுக்தியை தடுப்பதற்காக சீனாவும், இரஷ்யாவும் இணைந்து கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளோடு இணைந்து ஷாங்காய் ஐந்து என்ற அமைப்பை உருவாக்கியிருக்கின்றனர்.

பாலஸ்தீனம், சிரியா, ஈரானில் ஆகிய நாடுகளில் நடைப்பெற்று வரும் தாக்குதல்கள், போர்கள் மற்றும் இனப்படுகொலைகள் போன்றவை தனித்தனியான நிகழ்வுகள் அல்ல நிகழ்காலத்தில் நடக்கும் தாக்குதல்கள் அனைத்தும் ஏதோ டிரம்ப் மற்றும் நெதன்யாகு மூளையிலிருந்தும், ஈராக் போர் என்பது புஷ்சின் மூளையிலிருந்தும் உதித்தவை அல்ல என்பதை நாம் மேற்கூறியவற்றிலிருந்து புரிந்து கொள்ளலாம். இவை அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்காக அதன் ஒற்றைத் துருவ மேலாதிக்கத்திற்காக நடத்தப்படுகின்றன. இவை அனைத்தும் ஆசான் லெனின் கூறியது போல ஏகாதிபத்தியங்களின் பொருளாதார பிரதேசத்திற்கான போராட்டமேயன்றி வேறல்ல.

ஏகபோகம் காலனியாதிக்கக் கொள்கையிலிருந்து வளர்ந்தெழுந்திருக்கிறது. காலனியாதிக்கக் கொள்கைக்குரிய பழைய நோக்கங்களுடன் கூட நிதி மூலதனமானது மூலப் பொருள்களின் ஆதாரங்களுக்கும் மூலதன ஏற்றுமதிக்கும் “செல்வாக்கு மண்டலங்களுக்கமான” போராட்டத்தையும், அதாவது இலாபகரமான பேரங்கள், சலுகைகள், ஏகபோக இலாபங்கள் முதலானவற்றுக்குரிய மண்டலங்களுக்கும் பொதுவாகப் பொருளாதாரப் பிரதேசங்களுக்குமான போராட்டத்தையும் சேர்த்திருக்கிறது – லெனின்.

மேலாதிக்கம் பெறுவதற்காக அதாவது பிரதேசக் கைப்பற்றலுக்காக ஒரு சில வல்லரசுகளுக்கிடையில் நடைபெறும் போட்டியானது அவ்வளவாகத் தமக்கே நேரடியாக பிரதேசம் வேண்டும் என்பதற்காக அல்லாமல், தமது எதிராளியைப் பலவீனப்படுத்துவதற்காகவும் அவனது மேலாதிக்கத்துக்குக் குழிபறிப்பதற்காகவும் எழும் போட்டியாக இருப்பது ஏகாதிபத்தியத்தின் அவசிய குணாதிசயமாகும் – லெனின்.

ஐரோப்பிய ஒன்றியம் நாளடைவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஈடாக பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தன்னைப் பலப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இவை அமெரிக்க ஏகாதிபத்தியற்கு ஒரு போட்டியாளராகவும் வளர முடியவில்லை. ஈராக் படையெடுப்பை எதிர்த்த பிரான்சின் சிராக் மற்றும் ஜெர்மனியின் ஷ்ரோடருக்குப் பதிலாக ஆட்சியில் அமர்ந்த சார்க்கோசி மற்றும் மெர்க்கலும் அமெரிக்காவுடன் நட்புறவைப் பேணி வருகின்றனர். தற்போது சீனாவும், இரஷ்யாவும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சவாலாக உருவெடுத்து வருகின்றன. டாலர் மேலாதிக்கம் பற்றி டிரம்ப்-II தற்போது அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். சர்வதேச நாணயமான டாலர் மேலாதிக்கத்திற்கு மாற்றாக எந்த நாடாவது வேறொரு நாணயத்தை ஊக்குவிக்க நினைத்தால் அந்நாடுகளுக்கு பாரிய அளவில் வரிச்சுமைகளை அளித்து டிரம்ப் அச்சுறுத்தி வருகிறார்.

டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகளை பார்த்து கேலி செய்ததைப் போல போர்கள் ஒன்றும் மலிவானவை அல்ல. பிரவுன் பல்கலைக் கழகத்தின் வாட்சன் எனும் சர்வதேச நிறுவனம் செப்டம்பர் 9/11 நிகழ்வுக்குப் பிறகு நடந்த போர்களுக்காக மட்டும் அமெரிக்கா தனது பட்ஜெட்டில் நேரடியாகவே 8 டிரில்லியன் டாலர் செலவிட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதக் குழு தாக்குதல் நடத்திய அக்டோபர் 7, 2023 லிருந்து செப்டம்பர் 30, 2024 வரை மட்டுமே இஸ்ரேலின் இராணுவச் செலவுகளுக்காகவும், அமெரிக்க இராணுவச் செலவுகளுக்காகவும் 22.76 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளதாக வாட்சன் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இத்தகைய இராணுவச் செலவுகள் அனைத்திற்கும் மேலே குறிப்பிட்ட வழியில் அமெரிக்கா கடன் வாங்கியே செலவு செய்து வருகிறது.

இப்படி அமெரிக்கா தனது ஒற்றைத் துருவ மேலாதிக்கத்திற்கான இடத்தை தக்க வைப்பதற்காக வினையாற்றும் போது, அதன் மேலாதிக்கத்திற்கு போட்டியாக கருதப்படும் சீனாவும், இரஷ்யாவும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளை நேரடியாக எதிர்ப்பதில் இருந்து விலகியே இருக்கின்றன. சீனாவும், இரஷ்யாவும் இருதரப்புக்கிடையில் மத்தியஸ்தம் செய்வது என தங்களது எதிர்வினைகளை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளன. இதனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் தங்கு தடையின்றி செயல்பட்டாலும் இப்பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை எளிதில் பெற முடியவில்லை. ஈராக் மீது தனது மேலாதிக்கத்தை  நிலைநாட்ட அதற்கு போர்கள் மற்றும் இரத்தக் களரிகளை உருவாக்கியது. தற்போதும் கூட தனது ஆதிக்கத்திற்காக  அதற்கு இராணுவ நடவடிக்கைகளே தேவைப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தனது ஆக்கிரமிப்பைத் தக்க வைக்க முடியாமல் அவமானப்பட்டு வெளியேறியது. சிரியாவில் அமெரிக்க ஆதரவு பெற்ற மத அடிப்படைவாதப் படைகள், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் பெரிதும் பலவீனமடைந்த அசாத் அரசை வெளியேற்ற 14 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. அமெரிக்க இராணுவ ஆதரவு மற்றும் அமெரிக்க ஆயுதங்கள் தன் வசம் இருந்தபோதிலும், அமெரிக்க கைப்பொம்மையான சவுதி அரேபியாவால் ஏமனில் அன்சரல்லா அரசை அடக்க முடியவில்லை. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சமீபத்திய நேரடித் தாக்குதல்களால் கூட அன்சரல்லாவை அடிபணிய வைக்க முடியவில்லை. பல ஆண்டுகளாக இடைவிடாத பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டாலும், ஈரான், சிரியாவைப் போலவே பிராந்தியத்தில் உள்ள பிற அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளுக்கு எல்லா வகையிலும் தன்னால் முடிந்த உதவியை வழங்கியே வந்தது. இப்போது ஈரான் தன் சார்பில் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலுக்கு எதிராக கணிசமாக பதிலடி கொடுத்துள்ளது.

ஈரான், சிரியா, லெபனான், ஏமன், காசா மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் பேரழிவு கிரிமினல் குற்றங்களுக்கு எதிராக உலக மக்கள் ஆங்காங்கே பொங்கி எழுந்து கோபத்துடன் பல்வேறு இயக்கங்களை முன்னெடுத்து வருகின்றனர். இப்பிராந்தியப் போரில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு ஆதிக்க வெறியர்கள் தற்காலிகமாக இராணுவ ரீதியில் வெற்றி கொள்ளலாம். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் அடியாளான இஸ்ரேலுக்கு எதிராக உலக மக்கள் நடத்தும் போர் எதிர்ப்பை ஒரு நாளும் அவர்கள் வெல்ல முடியாது! உலகம் முழுவதும் ஆற்றாது பொங்கி எழும் இந்த ஆவேசம், உணர்வுத் தீ ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களை ஓட ஓட விரட்டும் வரை நிற்கப்போவதில்லை!

( முற்றும் )

  • மகேஷ் & தாமிரபரணி

இந்த தொடர் கட்டுரை சமகால நிகழ்வுகளையும், ரூபே (RUPE) இணையதளத்தில் வெளிவந்த கட்டுரைகளையும் தழுவி எழுதப்பட்டது.

மூலக்கட்டுரை:

https://rupeindia.wordpress.com/2025/06/26/behind-the-invasions-of-iraq-libya-syria-gaza-lebanon-and-now-iran/

https://rupeindia.wordpress.com/2019/06/27/imperial-overreach-in-iran/

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன