நேட்டோ நாடுகள், இராணுவ நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு. வரவிருக்கும் போர்களுக்கான எச்சரிக்கை.

நேட்டோவின் உறுப்பு நாடுகள் மாநாடு, கடந்த 25.06.2025 அன்று கூடியது. அதில், அனைத்து உறுப்பு நாடுகளும் ஒவ்வொரு வருடமும் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% வரை நிதியைப் பாதுகாப்புத் துறைக்காக ஒதுக்குவது என முடிவு செய்துள்ளது. ஏற்கனவே முடிவு செய்துள்ள 2% நீதி ஒதுக்கீட்டை வருகின்ற 2035-க்குள் 50% ஆக உயர்த்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சூளுரைத்துள்ளது. இவை நாட்டையும் – மக்களையும் பாதுகாக்காது, பலியிடவே செய்யும். ஏற்கனவே கடனில் மூழ்கியியுள்ள ஸ்பெயின், இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த அளவிற்கு நிதியை உயர்த்த வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி எழலாம். எல்லாம், அமெரிக்க தலைமையிலான நேட்டோவின் மேலாதிக்கத்திற்கு போட்டியாக வளர்ந்து வரும் இரஷ்யா – சீனா தலைமையிலான அணிசேர்க்கையின் விளைவே, பணிப்போர் காலத்தில் சோவியத் யூனியனின் செல்வாக்கு பெருகி பரவி வருவதையும் மேலை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக வளர்ந்து வருவதையும், குறிப்பாக அண்டை நாடுகளுக்கு சோஷலிசம் பரவி வருவதையும் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டதே நேட்டோ கூட்டமைப்பு.

இதற்கு தலைமை தாங்கி வழி நடத்தி வரும் அமெரிக்காவே ஆரம்பத்தில் அதிரடியான பங்களிப்பை செலுத்தி வந்தது. ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற பல்வேறு நாடுகளில் மேலாதிக்கத்தை செலுத்த முனைந்து அடி வாங்கியதன் விளைவு, பொருளாதார இழப்பு, உள்நாட்டில் நெருக்கடி, உள்நாட்டு மக்களின் பலத்த எதிர்ப்பு போன்றவைகளால் விழி பிதுங்கி நிற்கிறது அமெரிக்கா. இச்சூழலில் நேட்டோ நாடுகள் கூட்டாக நடத்தும் ஆக்கிரமிப்பு போர்களுக்கும் அமெரிக்கா மட்டும் ஏன் அதிகமான அளவிற்கு பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்கிற அமெரிக்காவின் முன்னெடுப்பே இராணுவ பாதுகாப்பிற்கான 5% நிதி ஒதுக்கீட்டு முடிவு.

1949-இல் நேட்டோ துவங்கப்பட்ட போது, சோவியத் யூனியன் மட்டுமே அச்சுறுத்தலாக இருந்தது. இன்று இரஷ்யா – சீனா தலைமையிலான அணிசேர்க்கை நேட்டோவின் அச்சத்தை அதிகப்படுத்தி உள்ளது. மேலும், இரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புப் போருக்கு சீனாவும், வடகொரியாவும் ஆயுதங்கள் கொடுத்து உதவியதும் இவற்றை உறுதிப்படுத்தியுள்ளது. அதனால்தான் நேட்டோ மாநாட்டில் இரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு தீர்வுகாண வேண்டுமென்றும், உக்ரைன் போருக்கு இரஷ்யாவிற்கு சீனா உதவியுள்ளதை கண்டித்தும் கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து உக்ரைனுக்கு இராணுவப் பாதுகாப்பு உதவிகளை தேவையான அளவிற்கு செய்ய வேண்டுமென முடிவு செய்துள்ளது. மேலும், நேட்டோவின் உறுப்பு நாடுகளுக்கு அச்சுறுத்தல் வரும்போது ஒருவருக்கொருவர் உதவுவது என்ற வகையில் கூட்டு பாதுகாப்பு உறுதிப்பாட்டையும் மேற்கொண்டுள்ளது.

நேட்டோவின் இராணுவப் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டு அதிகரிப்பானது, ஒரு பக்கம் இராணுவத் தளவாட முதலைகளை மேலும், மேலும் கொழுக்க வைக்கும். புது, புது தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதிநவீன ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டு போருக்கு வழிவகுக்கும். இதற்கு போட்டியாக வளர்ந்து வரும் இரஷ்யா – சீனா தலைமையிலான அணிசேர்க்கையும் இதே நிலையை மேற்கொண்டால் அமைதியான சூழல் உருவாவதற்கு பதிலாக போர் சூழலையே அதிகப்படுத்தும். விரைவுபடுத்தும். விளைவு, மனித உடல்கள் பெருமளவிற்கு சிதைக்கப்பட்டு உயிர்கள் பறிக்கப்பட்டு எதிர்காலமே வாழ வழியற்ற சுடுகாடுகளாக மாறிவிடும்.

மறுபக்கம், நேட்டோ உறுப்புகள் இராணுவ பாதுகாப்பிற்கு ஒதுக்கப்படும் 5% நிதியை ஈடுகட்ட மக்களின் அன்றாட அடிப்படை –  அத்தியாவசிய தேவைகளான உணவு, கல்வி, சுகாதாரம், மருத்துவம் இன்னும் பல தேவைகளுக்கான நிதி தேவைகள் குறைக்கக் கூடும். இதன் விளைவு விலைவாசி கழுத்தை நெரிப்பதோடு, சமூகத்தில் வர்த்தகமும், உற்பத்தியும், சேவையும் பெருமளவில் பின்னடைவைச் சந்திக்கும். இதனால், உறுப்பு நாடுகளுக்கு மட்டுமல்ல, தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற மறுகாலனியாக்கக் கொள்கை எனும் சங்கிலியில் பிணைக்கப்பட்டுள்ள கண்ணிகளான இதர நாடுகளும் இவற்றின் மேலாதிக்க வெறிக்கு பலியாகும்.

இதிலிருந்து விடுபட, உலக மேலாதிக்கப் போர்வெறிக்கான நிதி ஒதுக்கீட்டு அதிகரிப்பை உடனடியாக நிறுத்தியாக வேண்டும். இல்லையேல், மக்கள் அன்றாட அடிப்படை தேவைகளான கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்றவைகளுக்கான நிதி குறைக்கப்பட்டு, மக்களின் வாழ்வு சிதைக்கப்பட்டு வருவதைத் தடுக்க முடியாது. இல்லை, தடுக்க முடியும். அந்தந்த நாடுகளின் மக்கள் விரோத அரசுகளுக்கு எதிராக, மக்கள் கிளர்ந்தெழும் போது, போரைத் தடுக்க புரட்சியே ஒரே வழி என முழங்கிடுவோம்.

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன