அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ் யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான வசதிகளை கட்டமைப்பதற்கு ஈரானுக்கு உரிமை உண்டு எனவும்; சர்வதேச அணுசக்தி முகமையுடன் கையெழுத்திட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அணுசக்தி பொருட்களை முதன் முதலில் உற்பத்தி செய்வதற்கு 180 நாட்களுக்கு முன்பு வரை இந்த வசதிகளை பற்றி சர்வதேச அணுசக்தி முகமைக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும்; அணுநிலையக் கட்டுமானத்தை பற்றி தெரிவிக்க வேண்டிய தேவை இல்லை எனவும்; மேலும் ஒப்பந்தத்தின் படி செயல்பாடுகள் தொடங்கும் முன்பு தெரிவித்தால் போதும் எனவும் ஈரான் கூறியது. ஈரான் மீது அணுசக்தி வர்த்தகத்திற்கு ஏற்கனவே அமெரிக்கா தடை விதித்திருந்த காரணத்தினால் நடான்ஸ் நகரத்தில் மேற்கொண்டு வரும் அணு உலைக் கட்டுமானம் ஈரானது விநியோகச்சங்கிலியை மேலும் பாதித்து விடக்கூடாது என்ற காரணத்திற்காக அமெரிக்காவிற்கும் ஈரான் அரசு விளக்கம் கொடுத்தது.
ஆனால் இதன் பிறகும் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ, ஈரான் மீது மற்றொரு குற்றசாட்டை வைத்தது. ஈரான் அரசு அணு தொழில்நுட்பத்தை அணு ஆயுதமாக்குவதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதாகவும்; உயர்ரக அணுபொருட்களை வெடிக்கச் செய்து சோதனை செய்வதாகவும்; அணு ஆயுதங்களை ஏவுகணைகளில் பொருத்தி தொலைதூரத்திற்கு செலுத்துவதற்கான வடிவமைப்புகளை பெற்றிருப்பதாகவும் கூறியது. மேற்கூறிய செயல்களுக்கான விரிவான ஆவணங்களை கொண்ட ஒரு மடிக்கணினி தன்னிடம் இருப்பதாக சி.ஐ.ஏ கூறியது. ஆனால் இந்த ஆவணங்கள் அடங்கிய விபரங்களை அது எவ்வாறு பெற்றது என்பதை கூற மறுத்தது. உலகிலேயே மிகவும் கொடூர அமைப்புகளில் ஒன்றான சி.ஐ.ஏ அறிக்கை மேற்கத்திய நாடுகளிடையே தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த ஆவணங்கள் அனைத்தையுமே சி.ஐ.ஏ ஒரு மடிக்கணினியில் போலியாக உருவாக்க முடியும் என்பது சாத்தியமானதே. ஆனால் ஈரான் அணு ஆயுதங்களைப் பற்றிய இந்த போலியான சி.ஐ.ஏ வின் தரவுகள் மேற்கத்திய நாடுகளிடையே அடுத்தடுத்து விவாதங்களை கிளப்பியது.
அன்றைய சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) இயக்குநராக இருந்த எகிப்தை சேர்ந்த முகமது எல்பரடேய் என்பவர் ஈரான் மீதான சி.ஐ.ஏ.வின் குற்றசாட்டுகளை பற்றி அப்போது கருத்து எதுவும் கூறாமல் இருந்தார். 2009-இல் அவர் பதவி இறக்கம் செய்யப்பட்டு, எல்பரடேய்க்கு பின்பு IAEA- வில் இயக்குநராக பதவிக்கு வந்த ஜப்பானை சேர்ந்த யுகியா அமானோ என்பவர் சி.ஐ.ஏ.வின் தரவுகள் தொழில்நுட்ப அடிப்படையில் நம்பகமானவை என்றார்.
எல்பரடேய் சர்வதேச அணுசக்தி முகமையில் தான் இயக்குநராக பணியாற்றிய போது பெற்ற அனுபவங்களை தொகுத்து ”வஞ்சக யுகம்” என்ற நூலை 2011-ஆம் ஆண்டில் வெளியிட்டார். அந்நூலில் ஈரான், வடகொரியா, ஈராக் போன்ற நாடுகளின் அணு ஆயுதப் பரவல் காலக்கட்டத்தை விவரித்துள்ளார். எல்பரடேய் தான் எழுதிய நூலில் சி.ஐ.ஏ.வின் தரவுகள் சந்தேகத்திற்குரியது எனக் குறிப்பிட்டார். மேலும் எல்பரடேய் தனது நூலில் 2003-க்கு முன்பு ஈரான் ஆயுதங்கள் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டதா என்ற கூற்றை புறநிலையாக மதிப்பிடுவது கடினம். ஈரான்-ஈராக் போரின் நடுவில் ஈரான், ஈராக்கின் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது. ஈரான் தன் மீதான தீவிர பாதிப்பு உணர்வை எதிர்கொண்டபோது, ஈரானியர்கள் முதலில் அணு ஆயுதங்களை உருவாக்க நினைத்திருக்கலாம். ஆனால் ஒரு கட்டத்தில் ஒருவேளை போர் முடிந்த பிறகு அல்லது 1990-களின் நடுப்பகுதியில் அல்லது ஒருவேளை IAEA அதன் விசாரணைகளைத் தொடங்கிய பிறகு ஈரான் அதன் திட்டத்தை அணு எரிபொருள் சுழற்சியின் வளர்ச்சிக்கு மட்டுப்படுத்த முடிவு செய்திருக்கலாம் என்கிறார்.
அமெரிக்க உளவு அமைப்புகளுக்கும் கூட ஈரான் அணு ஆயுதத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பதை 2003-ஆம் ஆண்டிற்கு பின்பு நிருபிக்க முடியவில்லை. அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் 2008-இல் அமெரிக்க காங்கிரசுக்கு விளக்கமளிக்கும் விதமாக ஒரு அறிக்கையை அளித்தனர். அவ்வறிக்கையில் 2003-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஈரான் அதன் அணு ஆயுத வடிவமைப்பு மற்றும் ஆயுதமாக்கல் நடவடிக்கைகளை நிறுத்தியது என்ற முடிவுக்கே வந்தனர்.
அமானோ தலைமையிலான IAEA-வும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் எடுத்த முடிவுக்கே 2015-ஆம் ஆண்டின் போது வந்தது. ஈரானிய ஆயுதத் திட்டம் ஒன்று இருந்திருந்தால், அது தற்காலிகமானதாகத்தான் இருந்திருக்கும் என்றும் விரைவில் ஈரானிய அரசால் நிறுத்தப்பட்டிருக்கும் என்றது IAEA. ஈரானின் அணு ஆயுதங்கள் தொடர்பான நடவடிக்கைகள் அறிவியல் ஆய்வுகள் மற்றும் சில தொழில்நுட்பத் திறன்கள் பெறுவதற்கு அப்பால் முன்னேறவில்லை என்று IAEA முடிவு செய்தது. 2009-க்குப் பிறகு ஈரானில் அணு வெடிக்கும் சாதனத்தை உருவாக்குவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்த நம்பகமான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் அது ஒப்புக்கொண்டது.
2003-ஆம் ஆண்டிற்கு பின்பு அமைந்த அமெரிக்க அரசுகள் ஈரான் மீதான அணுசக்தி பிரச்சினையை தீர்ப்பதற்கு முனையாமல் அணுசக்தி ஆயுதப் பிரச்சினைகள் மூலம் ஈரானுக்கு எப்படி அழுத்தம் கொடுத்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என்பதிலேயே கவனம் செலுத்தின. ஈரான் அணு ஆயுத திட்டத்தை செயல்படுத்தவில்லை என்பதற்கான ஆதாரங்கள் இருந்த போதிலும் ஒபாமா, புஷ் அரசுகள் ஈரான் மீது தொடர்ந்து அணு ஆயுத பிரச்சினையை காட்டி அழுத்தம் கொடுக்கும் விதமாக பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வந்தது.
முதலாவதாக ஈரான் யுரேனிய செறிவூட்டலை நிறுத்த வேண்டும் என்ற நெருக்கடியை கொடுத்தது. அணு ஆயுதப் பரவல் தடை சட்டத்தின் படியே இந்தக் கோரிக்கைக்கு எந்த சட்ட அடிப்படையும் இல்லை. இந்த கோரிக்கையை ஈரான் ஏற்றால், தான் சரணடைவதற்குச் சமம் எனக் கருதி இதை நிராகரித்தது. இரண்டாவதாக அமெரிக்கா தான் சந்தேகப்படும் ஈரானின் எந்தப் பகுதியிலும் சர்வதேச ஆய்வாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றது. ஈரானில் பார்ச்சினில் உள்ள இராணுவத் தளமும் இந்த சந்தேகப் பகுதியில் அடங்கும். ஏற்கனவே இதற்கு முன்பு ஈரானுக்கு வந்த ஐ.நா படைகளில் அமெரிக்க உளவு முகவர்கள் ஊடுருவியதால் இக்கோரிக்கையையும் ஈரான் நிராகரித்தது. இதனால் 2005-ஆம் ஆண்டில் அமெரிக்கா, IAEA அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான் மீது புகார் எழுப்பியது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலும் அமெரிக்காவின் சொற்படியே ஈரான் அனைத்து அணு ஆராய்ச்சிகளையும் நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஈரான் இதற்கு இணங்க மறுத்ததால் அதன் மீது பல்வேறு தடைகளை விதிப்பதற்கான 1747 தீர்மானத்தை நிறைவேற்றியது.

அடுத்த பத்து ஆண்டுகளில் அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பா நாடுகளும் அணுசக்தி பிரச்சினையை எளிதில் தீர்க்க கூடிய பல வாய்ப்புகள் கிட்டிய போதும் அதை நிராகரித்தனர். உதாரணமாக பிரேசிலும், துருக்கியும் ஈரானின் 80% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரானுக்கு வெளியே வேறொரு இடத்தில் பாதுகாப்பாக வைப்பதற்கும்; அதற்கு பதிலாக டெஹ்ரான் அணு உலைக்கு வேறு வழியில் எரிபொருள் அளிக்கப்படும் என்ற ஒப்பந்தத்தை முன்மொழிந்தன. மேற்கு ஐரோப்பா நாடுகள் ஒரு சில மாதங்களுக்கு முன்பு கூறிய மாற்றுத்திட்டத்தை தான் பிரேசிலும் துருக்கியும் அன்று முன்மொழிந்தன. இந்த ஒப்பந்த பேச்சு வார்த்தையின் போது அமெரிக்காவிற்கான துருக்கி தூதர் “அமெரிக்கா கேட்டதை நாங்கள் வழங்கி விட்டோம்” என்றார். ஆனால் அன்றைய ஒபாமா அரசில் வெளியுறவு செயலராக இருந்த ஹிலாரி கிளிண்டன், இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து ஈரான் மீது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மூலம் மற்றொரு சுற்றுத்தடைகளை விதிக்கச் செய்தார். ஈரான் அணு ஆயுதப் பிரச்சினையை தீர்க்காமல் ஈரானை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் விதமாக பல்வேறு முன்னெடுப்புகளை தொடுத்தார்.
அதன் ஒரு பகுதியாக ஈரானின் நடான்ஸ் செறிவூட்டல் ஆலையின் கட்டுப்பாட்டு அமைப்புகள் அனைத்தையும் “ஸ்டக்ஸ்நெட்” எனும் வைரஸ் மூலம் அமெரிக்கா முடக்கியது. மேலும் பல ஈரான் அணு விஞ்ஞானிகள் இஸ்ரேல் பின்புலத்தில் இருந்து நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இவ்வாறு அமெரிக்கா ஈரான் மீது அணு ஆயுதப் பிரச்சினையை காரணம் காட்டி அதை உயிர்ப்புடன் வைத்திருப்பதிலேயே 2002-2013 ஆண்டு வரை கவனம் செலுத்தி வந்தது.
இதற்கிடையில் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் ஈரான் மீது ஏற்படுத்திய பொருளாதார தடைகள் ஈரானை நிலைகுலையச் செய்தது. இத்தடைகளால் ஈரான் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய மருந்து பொருட்கள் கூட கிடைக்காமல் அந்நாடு திணறியது. இந்நிலையில் 2013-ஆம் ஆண்டில் சீர்திருத்தவாதியான ஹசன் ரூஹானி என்பவர் அப்போதைய மஹ்மூத் அகமதுக்குப் பதிலாக ஈரானின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003-2005 ஆம் ஆண்டு வரை ஈரானின் தலைமை அணுசக்தி பேச்சுவார்த்தையாளராக இருந்த ரூஹானி, ஈரானின் அணு சக்திப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும்,ஈரான் மக்களின் அடிப்படைத் தேவைகளை தீர்த்து வைக்கப் போவதாகவும் ஜனாதிபதி தேர்தலின் போது பிரச்சாரம் செய்தார்.
ஆனால் மேற்கத்திய நாடுகளோ பொருளாதார தடையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வரவில்லை. ஈரானின் ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவும் கூட மேற்கத்திய நாடுகளுடன் அணுசக்தி பிரச்சினையில் இணக்கமாக போவதையே விரும்பினர். இப்பிரச்சினையை தீர்க்க அந்நாடுகளுக்கு பல சலுகைகளை வழங்க காத்திருந்தனர். அமெரிக்காவும் மூலயுக்தி ரீதியில் ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக ஈரானின் ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவைத் தனக்காக பயன்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தது. புஷ் அரசு ஆட்சியில் இருந்த போது 2006-ஆம் ஆண்டு ஈரான் ஆய்வுக் குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பு புஷ் தலைமையிலான அமெரிக்க அரசிற்கு 2006-இல் அளித்த ஒரு அறிக்கையில் ஈரானும், சிரியாவும் ஈராக்கிற்குள் செல்வாக்கு செலுத்தும் திறனையும், ஈராக்கில் குழப்பத்தை தவிர்ப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பதால் ஈரான் ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவினரோடு ஆக்கப்பூர்வமான உறவில் இருக்க வேண்டும் என்றும்; ஈரான் அணுசக்தி குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் 5 பேர் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த ஒரு உறுப்பினரை கொண்டு ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என அறிக்கை அளித்தது.

மத்தியக் கிழக்கில் 2011-13 ஆம் ஆண்டில் நிலவிய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு ஒபாமா அரசு ஈரான் ஆய்வுக்குழ 2006-ஆம் ஆண்டு அளித்த முன்மொழிதலை 2015-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. விரிவான கூட்டு செயல் திட்டம் எனும் பெயரில் ஈரானுடன் அணுசக்தி திட்டத்திற்கான ஒப்பந்தங்களை அமெரிக்கா, ஐரோப்பா யூனியன் போட்டது.
2011-ஆம் ஆண்டில் வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவிலும் மேற்காசிய நாடான எகிப்திலும் நடந்தேறிய ஜனநாயகத்திற்கான போராட்டங்கள், முஸ்லீம் மக்கள் மத அடிப்படைவாத அமைப்புகளையும், கருத்துக்களையும் தான் ஆதரிப்பார்கள் என மேற்குல ஏகாதிபத்தியவாதிகள் பரப்பி வரும் அவதூறைச் சுக்கு நூறாக உடைத்துப் போட்டன. இதைத் தொடர்ந்து பிற இஸ்லாமிய நாடுகளில் பரவிய போராட்டங்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அச்சுறுத்தின.
மேலும் லெவண்ட் இஸ்லாமிய அரசு 2015-ஆம் ஆண்டு சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றியது. இதனால் அமெரிக்க அரசு அப்போது லெவண்ட் இஸ்லாமிய அரசை வீழ்த்துவதற்கு ஈரானின் உதவியை கோரியதோடு அதன் வான்பரப்பையும் பயன்படுத்தினர். ஈரானும் அமெரிக்காவிற்கு ஆதரவாக லெவணட் இஸ்லாமிய அரசுக்கு எதிராக தாக்குதல் தொடுத்தது.
இதற்குப் பலனாகவும், மேற்கூறிய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு அமெரிக்கா, ஈரான் யுரேனிய செறிவூட்டலை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்ற தன் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியது. மேலும் ஈரானோடு அணுசக்தி பிரச்சினையில் சமரசம் செய்வதற்காக விரிவான கூட்டுச் செயல் திட்டம் என்ற ஒப்பந்தத்தை போட்டது (Joint Comprehensive Plan of Action-JCPOA) இதன் படி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் 5 உறுப்பினர்கள் ஜெர்மனியின் ஒரு உறுப்பினரோடு தொழில்நுட்ப ஆலோசனைகள்; செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை 300 கிலோவாக குறைத்தல்; யுரேனிய ஐசோடோப் சுழல் கலன்களில் (Centrifuges) 80% இயக்கத்தை நிறுத்தி அவற்றை 15 ஆண்டுகளுக்கு சேமித்து வைப்பதற்கு ஈரான் ஒப்புதல் அளித்தது. இதன்படி எந்தவொரு சூழ்நிலையிலும் ஈரான் எந்த அணு ஆயுதங்களையும் உருவாக்கவோ அல்லது பெறவோ கூடாது. ஈரானின் அணு ஆயுதங்கள் மீது ஏதாவது சந்தேகம் வந்தால், ஈரான் மீதான தடைகள் மீண்டும் அமலுக்கு வரும் என இந்த ஒப்பந்தம் வரையறுத்தது.
அமெரிக்க அரசுக்குள் JCPOA ஒப்பந்தத்திற்கான எதிப்பும், டிரம்ப்பின் ஆட்சியில் அமெரிக்கா -ஈரான் வெளியுறவுக் கொள்கையைப் பற்றியும் அடுத்த தொடரில் பார்ப்போம்.
(தொடரும்)
- தாமிரபரணி