கடந்த இரண்டு வாரங்களாக உலகின் முழு கவனமும் வளைகுடா பக்கம் திரும்பியிருந்தது. மிகவும் வெறுக்கத்தக்க, காட்டுமிராண்டித்தனமான, அநாகரிகமான , அழிவுப் போரை ஈரான் மீது இஸ்ரேல் தொடுத்தது. தனது அடியாளான இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் இப்போரில் தலையிட்டு ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் மீது குண்டு வீசியுள்ளது.
ஈரான் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்பது ஈரான் நடத்திவரும் அணு ஆயுதங்களுக்கான யுரேனியச் செறிவூட்டல் என்கிற இஸ்ரேல் – அமெரிக்காவின் அண்டப்புளுகை பாமரத்தனமாக நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கும் அதை நம்ப மறுத்து அமெரிக்காவின் வளைகுடா மற்றும் உலக மேலாதிக்கத்திற்கானது தான் என்பதை புரிந்து கொண்டவர்களுக்கும் கூட ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்கா நடத்திய தாக்குதலின் போக்கு, குறிப்பாக இத்தாக்குதலின் இறுதி நாட்களில் போர் வெறியன் டிரம்ப் காட்டிய அகங்காரமும், மூர்க்கத்தனமும் ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தினால் ஏற்படும் நாசங்கள் பற்றிய அச்சமும், கோரமும் அதிர்ச்சியில் ஆழ்த்தின.
பல ஆண்டுகளாக ஈரான் மீது பொருளாதாரத் தடை உட்பட பல்வேறு தடைகளை உலக நாடுகள் விதித்துள்ளன. இந்த தடைக்குப் பதிலாக ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் முந்தைய ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2018-இல் கைவிட்டார். தற்போது, அதற்குப் பதிலான புதிய ஒப்பந்தத்தை முன்வைத்து அதனை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. ஈரானும் தன் மீது விதிக்கப்படும் பல்வேறு நிபந்தனைகளை பற்றி கவலைப்படாமல் அணு ஆயுதப் பேச்சு வார்த்தைக்கு இறங்கி வந்தது. ஓமனில் பல கட்டப் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது இஸ்ரேலும் அமெரிக்காவும் இதை நிராகரித்து ஈரான் மீது போரை தொடுத்ததால் அந்நாடுகளின் உண்மையான நோக்கம் குறித்து உலக மக்களுக்கு இயல்பாகவே சந்தேகம் எழுகிறது.
ஒரு சில நாட்களிலேயே ஈரான் மீதான போரில் வென்று விடுவோம் என குதித்த இஸ்ரேல், 200 விமானங்களை ஏவி, 100-க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் முக்கிய செறிவூட்டல் நிலையமான நடான்ஸ்-வும் ஒன்று. இதில் தான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக இஸ்ரேலும், அமெரிக்காவும் நம்புகின்றன. இந்த இஸ்ரேல் தாக்குதலில் ஆயிரம் ஈரானிய மக்கள், ஈரானின் துணை இராணுவப் புரட்சிகரப் படையின் தலைவர் ஜெனரல் ஹொசைன் சலாமி மற்றும் உயர் மட்ட அணு விஞ்ஞானிகளான முகமது மெஹ்தி டெஹ்ரான்சி மற்றும் ஃபெரேடூன் அப்பாசி ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
ஈரானும் தன் பங்குக்கு ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் மீது திருப்பி ஏவியது. இஸ்ரேலில் உள்ள பல்வேறு இலக்குகள், இராணுவ மையங்கள் மற்றும் விமான தளங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல் ‘ட்ரூ ப்ராமிஸ் 3’ என்று அழைக்கப்பட்டது. இஸ்ரேல் தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்த தாக்குதலை முறியடித்தது என்றாலும் கணிசமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இது இஸ்ரேலின் அயன் டூம் பாதுகாப்பானது; இஸ்ரேல் உலகிலேயே அதி உயர் இராணுவத்தையும், ஆயுதங்களையும் கொண்டுள்ளது என உலக நாடுகள் மிகை மதிப்பீடு செய்து கொண்டிருந்ததை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது
இஸ்ரேல் தாக்குதல் தொடங்கிய பின்னர், தங்களுக்கும் இத்தாக்குதலுக்கும் சம்பந்தமில்லை என கூறிய போர் வெறியன் டிரம்ப் இஸ்ரேலுடன் இணைந்து ஏன் போர் செய்யக்கூடாது என யோசித்து வருவதாகவும், இதனை இன்னும் இரண்டு வாரத்திற்குள் முடிவு செய்வதாகவும் தனது ட்ரு சோஷியல் சமூக வளைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 10 நாட்களாக போர் நடைபெற்ற நிலையில் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவது போல கடந்த ஜூன் 22 ஆம் தேதி அதிகாலையில், அமெரிக்கா B-2 “ஸ்பிரிட்” போர் விமானங்களை பயன்படுத்தி, ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், மற்றும் இஸ்பஹான் ஆகிய மூன்று முக்கிய அணுசக்தி மையங்களை குறிவைத்து தாக்கியது. இதில் GBU-57 “பங்கர் பஸ்டர்” எனப்படும், தரைக்கடியில் உள்ள கட்டமைப்புகளை அழிக்க உருவாக்கப்பட்ட மாபெரும் 14 குண்டுகள் வீசப்பட்டன. இந்தத் தாக்குதல்கள் ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பை முற்றிலும் நிறுத்திவிட்டதாகவும், இதை “பெரிய இராணுவ வெற்றி” என்றும் டிரம்ப் கூறினார். ஆனால் இதில் உண்மையில்லை என ஈரான் மறுத்திருக்கிறது.
இந்நிலையில் 25 ஜூன், 2025 அன்று கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தியது. ஏவுகணை தாக்குதல் நடக்கும் என எச்சரிக்கை வந்த நிலையில் முன்கூட்டியே கத்தார் தனது வான் பரப்புகளை மூடியது. இது நடந்த சிறிது நேரத்திலேயே குறிப்பாக மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளமான அல் உதெய்த் விமான தளத்தை ஈரான் தாக்கியது. கத்தார் விமானத் தள தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான 12 நாள்களுக்குப்பிறகு, ஜூன் 24 ஆம் தேதி இருநாடுகளும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன என டிரம்ப் அறிவித்தார். இதனை இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக உடனடியாக செய்தி வெளியிடவில்லை.
பின்னர் டிரம்ப் கூறியதற்கு இணங்க தற்காலிகமாக போரை நிறுத்துவதாகவும், எங்கள் நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஏதாவது நிகழ்வுகள் நடந்தால் தாக்குதல் நடத்துவோம் என்றும் ஈரான் செய்தி வெளியிட்டது. இந்த நிலையில், முன்னதாக, ஈரானில் ஆட்சி மாற்றம் தேவையென ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் பதிவு செய்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இப்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகியுள்ளார். “ஈரானில் ஆட்சி மாற்றம் என்பது தற்போது தேவையில்லை. அது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். நாங்கள் அமைதியை விரும்புகிறோம். திடீர் ஆட்சி மாற்றம் காரணமாக மேலும் பதற்றங்கள் உருவாகக்கூடும்” என தெரிவித்திருக்கிறார். ஈரான் அணு ஆயுதவல்லமையை குறைப்பதாக கூறி தொடங்கப்பட்ட போர், தற்போது ஈரானில் ஆட்சி மாற்றம் என்று நீள்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக ஈரான் அணு ஆயுதங்களுக்கான யுரேனியச் செறிவூட்டலை நடத்தி வருவதாக அமெரிக்கா பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் மூலம் ஈரானை தன் வழிக்கு கொண்டு வந்து அரசியல் – இராணுவ – பொருளாதார ரீதியில் மத்திய கிழக்கில் மட்டுமில்லாமல் உலகில் தன் ஏகபோகத்தை நிறுவலாம் என காய் நகர்த்தி வருகிறது.
வளைகுடாப் பகுதியை கைப்பற்றுவதன் மூலம் அமெரிக்க மேல்நிலை வல்லரசு இந்த உலகத்தை ஒற்றை துருவ அமைப்பாக்க முயன்று வருகிறது. அதாவது அமெரிக்காவை மையமாகக் கொண்டு அதன் நலன்களுக்காக அது விதிக்கும் நிபந்தனைகள், கட்டுப்பாடுகள், நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டுத்தான் உலக நாடுகள் இனி செயல்பட வேண்டும் என்கிற மேலாதிக்கத்தை அது உறுதிப்படுத்த கடந்த பல ஆண்டுகளாக அது முயன்று வருகிறது. இதைத் தான் ஒரு புதிய உலக அமைப்பை உருவாக்குவது என அமெரிக்கா கூறி வருகிறது.
அமெரிக்கா ஈரான் மீது கடந்த 40 வருடங்களாக தனது ஏகாதிபத்திய அத்துமீறலை எவ்வாறு தொடுத்து வருகிறது என்பதை புரிந்து கொள்வதன் வாயிலாக அமெரிக்கா தனது ஒற்றை துருவ மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு எப்படியெல்லாம் வினையாற்றி இருக்கிறது என்பதை வாசகர்களுக்கு கீழே தொகுத்து தருகிறோம்.
*************************************************
ஆதிக்கமும், ஆக்கிரமிப்பும், ஆட்சிக் கவிழ்ப்பும், நாடுபிடித்தலும், அநீதியான யுத்தமும் தான் ஏகாதிபத்தியங்களின் கொள்கை. இருப்பினும் தமது நோக்கங்களை மறைக்க அவை எப்போதும் ஜனநாயக முகமூடிகளை அணிந்து கொள்ளத் தவறுவதில்லை. அதிலும் உலக மக்களிடம் அம்பலப்பட்டுப் போயுள்ள பாசிஸ்டு டிரம்ப் அரசு, ஈரான் மீதான போரில் உலக ஜனநாயகவாதியாக நாடகமாடுகிறது. ஈரான் அணு ஆயுதங்கள் வைத்திருப்பது உலகிற்கு ஆபத்து என கூக்குரலிடுகிறது. ஈரானின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், அமெரிக்க விமானங்கள் வீசிய குண்டு வீச்சு போன்றவை ஈரானின் அணு உலையில் தயாராகும் யுரேனிய செறிவூட்டல் என்ற கதையை அடிப்படையாக கொண்டே நடத்தப்பட்டன. மேற்கு ஆசியாவில் தன்னுடைய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தவும், ஈரானை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும் அமெரிக்கா கடந்த 40 வருடங்களாக மேற்கொண்ட முயற்சியிலிருந்து தற்போதைய போர்ப் பதட்டங்களையும், இதன் பின்னணியையும் நாம் புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.
ஈரானின் அணுசக்தி திட்டத்தின் தோற்றம்; அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் மோதலை நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் சற்று பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

முகமது மொசாதேக் என்பவர் 1951-ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஈரான் தேசிய முன்னணி எனும் கட்சி சார்பில் வெற்றி பெற்று பிரதமராக பதவி ஏற்கிறார். பிரதமராக பதவி ஏற்றவுடன் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றுள் மிக முக்கியமானது எண்ணெய் தொழில் துறையை முழுவதுமாக தேசியமயமாக்குவது [அரசுடமை ஆக்குவது] என்பதாகும். முகமது மொசாதேக் பதவி ஏற்பதற்கு முன்பு மன்னராட்சி இருந்தது. இதனைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் (BP) என்ற பிரிட்டனுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனம் ஈரானின் எண்ணெய் வளங்களை ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்து வந்தது. எனவே கொள்ளையடித்த சொத்துக்களைப் பறிமுதல் செய்தார். இக்கொள்ளையால் மக்களுக்கு எந்த நன்மையுமில்லை; அதனால் இந்நிறுவனத்தை தேசியமயமாக்கி அதன் மூலம் வரும் வருவாயில் ஈரானின் பின்தங்கிய நிலைமையை சரிசெய்ய முடியும் என மொசாதேக் அறிவித்தார். மொசாதேக்கின் இந்த முடிவால் BP என்ணெய் நிறுவனம் மட்டுமில்லாமல் பிரிட்டன் அரசும் நெருக்கடிக்குள்ளானது. இதனால் பிரிட்டன் – அமெரிக்க அரசுகள் மொசாதேக்கின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு திட்டங்களை உருவாக்கியது.
1952-இல் அமெரிக்காவில் ஜனாதிபதி பதவிக்கு வந்த டுவைட் ஐசனோவர் அரசு, இரண்டு சதித்திட்டங்களை வடிவமைக்கிறது. அதில் முதலாவது ஈரானில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது மொசாதேக்கின் ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ஈரானின் மன்னரான ஷாவின் ஆட்சியை நிறுவுவதாகும். இதன்படி அமெரிக்காவின் சி.ஐ.ஏ.-வும் பிரிட்டனின் M16-ம் இணைந்து ஆபரேசன் அஜாக்ஸ் என்ற பெயரில் மொசாதேக்கிற்கு எதிராக பெரும் கலவரங்களையும், தொடர் பொய்ப்பிரச்சாரங்களையும் கட்டவிழ்த்து விட்டு 1953-ஆம் ஆண்டில் அவரது ஆட்சியை கவிழ்த்து அவரை இராணுவக் காவலில் அடைத்தனர். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உதவியோடு ஆட்சியில் அமர்ந்த கைக்கூலியான ஷா பஹ்லவி தனது சர்வாதிகார ஆட்சியில் எதிர்க்கட்சிகளை தடைசெய்தும், எண்ணெய் நிறுவனங்களை தேசிய உடைமையாக்கும் இயக்கத்தில் பங்குப்பெற்றவர்களை சிறையில் அடைத்தும் தனது எஜமான விசுவாசத்தைக் காட்டினார்.
அதே ஆண்டில் ஐசனோவர் மனித குலத்தின் அமைதியான நோக்கத்திற்கு அணுசக்தி பயன்பட வேண்டும் என்ற சதிக்கொள்கையை அறிமுகப்படுத்தினார். அமெரிக்கா – சோவியத் இரஷ்யா நாடுகளிடையேயான பனிப்போரில் அமெரிக்க நட்பு நாடுகளுக்கு ‘அமைதிக்கான அணுசக்தி திட்டம்’ என்ற கொள்கையை அறிமுகப்படுத்தினார். இந்தக் காலகட்டத்தில் அணுசக்தி தொழில்நுட்பத்தின் இரட்டைத் தன்மையான அணுசக்தியை உற்பத்தி செய்யப் பயன்படுத்தக்கூடிய அதே பிளவுப் பொருளை அணு குண்டு தயாரிக்க பயன்படுத்தலாம் என்பது எளிதாக புரிந்துகொள்ளப்பட்டது. அன்றைய இந்திய பிரதமர் நேரு அரசியலமைப்பு சபை விவாதங்களில் ”அணுசக்தி மற்றும் அணு ஆயுதங்கள் பற்றிய ஆராய்ச்சியை” எப்படி வேறுபடுத்துவது என்று தெரியவில்லை எனக் குறிப்பிட்டார்.
எனவே அமைதிக்கான அணுசக்தி திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட நாடுகளை தேர்ந்தெடுத்து அந்நாடுகள் அணுசக்தி தொழில்நுட்பத்தில் வளர்ந்து வராதபடி அமெரிக்கா பார்த்துக் கொண்டது. இந்நாடுகள் அணுகுண்டுகள் வைத்திருக்கமாட்டார்கள் ஆனால் தேவைப்பட்டால் விரைவில் ஆயுதத்தை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தோடு இருப்பார்கள். இப்படி இந்த நாடுகளின் மீது தன் கட்டுப்பாட்டை நிறுவுவதற்காகவும், அவைகளை தனது விசுவாசிகளாக மாற்றுவதற்காகவும் அமெரிக்கா இத்திட்டத்தை கொண்டு வந்தது. இதனால் அணுசக்தி தொழில்நுட்பத்திற்கு அமெரிக்கா தலைமை தாங்கி, தமது அணு உலைகளை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலாகவும் மாற்றியது. இத்திட்டத்தின் கீழ் ஈரானில் ஷா-வின் ஆட்சியில் அமெரிக்காவும், பிற ஐரோப்பிய நாடுகளும் அணுசக்தி திட்டம் தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்களை தங்களுக்குள் போட்டுக்கொண்டன.
இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஈரானின் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள டெஹ்ரான் ஆராய்ச்சி என்ற அணு உலையை 1967-ஆம் ஆண்டில் அமெரிக்காவிடமிருந்து வாங்கியது. இந்த அணு உலையில் எரிபொருளாக அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தையே பயன்படுத்த முடியும். இதன் பின்னர் ஐரோப்பிய அணு உலை நிறுவனமான யூரோடிப்பில் 10% பங்குகளை ஷா வாங்கினார். மேலும் பிரான்சில் டிரைகாஸ்டின் அணு உலையின் கட்டுமானத்திற்கு உதவ ஒரு பில்லியன் டாலர் கடனையும் வழங்கினார். மேற்கு ஜெர்மன் நிறுவனமான கிராஃப்ட்வெர்க் யூனியன், ஈரானில் புஷெர் அணு உலையைக் கட்டத் தொடங்கியது.
1968-ஆம் ஆண்டு ஈரான் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், ஷாவின் ஆட்சி அதன் அணு ஆயுத இலட்சியங்களுக்காக இந்த ஒப்பந்தங்களை மீறியே வந்தது. 1974-ஆம் ஆண்டில், இந்தியாவின் முதல் அணு ஆயுத சோதனை அமெரிக்கா, கனடா நாடுகளின் உதவியோடு நிகழ்த்தப்பட்டது இந்திய ஆராய்ச்சி உலையான சைரசில் அணுப்பிளவுப் பொருளைக் கொண்டு இச்சோதனை நடந்தேறியது. இதையொட்டி ஷா ஒரு நேர்காணலில் ஈரான் அணு ஆயுதங்களை “சந்தேகத்திற்கு இடமின்றி, ஒருவர் நினைப்பதை விட விரைவாக” பெறும் என்று பேட்டியளித்தார். ஆனால் சில நாட்களூக்குப் பிறகு ஷாவின் அரசு, நேர்காணலை மறுத்து விளக்கமளித்தது மேற்கத்திய அரசுகளோ ஷாவின் மறுப்பை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமில்லாமல், ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலும் மக்களுக்கானது என ஷாவின் அரசுக்கே வக்காலத்து வாங்கின.
இப்படி அமெரிக்காவின் கைக்கூலி அரசான ஷாவின் அரசு ஈரானில் 1979-ஆம் ஆண்டு வரை அதாவது இஸ்லாமிய மத குருமார்கள் ஆட்சியை கைப்பற்றும் வரை ஆட்சி செய்தது. ஷாவின் ஆட்சியில் நடந்தேறிய பல்வேறு ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் அம்மக்களை இஸ்லாமிய மத குருமார்களை நோக்கி இழுத்தது. இஸ்லாமிய மதகுருமார்களின் ஆட்சியில் ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் அணுசக்தி திட்டம் சம்பந்தமான தமது அனுகுமுறைகளை மாற்றின. ஷாவின் ஆட்சிக்கு பிறகு அமைந்த புதிய அரசு அணுசக்தி திட்டத்தை குறைக்க முடிவு செய்தது. ஷாவின் ஆட்சியில் போடப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட அணு உலை ஒப்பந்தங்களை ஈரான் அரசு நிறுத்தி வைத்தது. அன்றைய ஈரான் மதகுருவான ருஹோல்லா கோமெய்னி அணுசக்தி திட்டங்களை பிசாசின் வேலை என்று கூறியதுடன் இதற்கெதிராக இஸ்லாமிய சட்டத்தை கொண்டு வந்தார்.

ஷாவின் ஆட்சிக்கு பிறகு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் அணுசக்தி திட்டத்தின் இரட்டைத் தன்மையை கிளற ஆரம்பித்தன. ஈரானோடு போடப்பட்ட வணிக அணுசக்தி திட்டங்கள் உட்பட அப்போது மேற்கொள்ளப்பட்ட அனைத்து அணுசக்தி திட்டங்களையும் அவைகள் இரத்து செய்தன. புஷேர் அணுமின் நிலையத்தின் பணிகளை ஜெர்மனி அரசு நிறுத்தியது. அங்கு ஈரான் ஏற்கனவே சுமார் 8 பில்லியன் டாய்ச் மார்க்ஸை முதலீடு செய்திருந்தது. டெஹ்ரான் ஆராய்ச்சி அணு உலை இயங்குவதற்கான எரிபொருளை அமெரிக்கா நிறுத்தியது, டிரைகாஸ்டின் ஆலைக்கு வழங்கப்பட்ட கடனை திருப்பிச் செலுத்த பிரான்ஸ் மறுத்ததோடு ஈரானுக்கு அணு ஆலையின் எந்த உற்பத்தியையும் வழங்க மறுத்துவிட்டனர். அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஒப்பந்தங்கள் மூலம் மட்டுமே ஈரானிய அணுசக்தி திட்டத்தை மட்டுப்படுத்தவில்லை. அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்ட ஈராக் – ஈரான் போரின் போது ஈராக் விமானப்படை புஷேர் ஆலை இருந்த இடத்தில் மீண்டும் மீண்டும் குண்டுகளை வீசியது.
இவ்வாறுதான் ஈரான் அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருட்களை பெறுவதற்கான சர்வதேச வழிகள் அனைத்தையும் அமெரிக்காவும், ஐரோப்பாவும் அடைத்தது. எனவே இத்தொழில் நுட்பத்தை தான் பெறுவது அவசியம் என ஈரான் கருதியது. புஷேர் அணு உலைகள் மருத்துவப் பயன்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் எனவும் டெஹ்ரான் அணு உலையின் எரிபொருள் தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பது ஈரானுக்கு முக்கியமான தேவை என ஈரானிய அறிஞர்கள் நீண்ட காலமாக வாதிட்டு வந்தார்கள். ஈரான் அரசு பல ஆண்டுகளாக இரஷ்யவோடு நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஜனவரி 1995-இல், இரஷ்ய நிறுவனமான ஆட்டம்ஸ்ட்ராய் எக்ஸ்போர்ட் எனும் நிறுவனம் புஷேர் அணுமின் நிலையத்தை ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி முடிக்க ஒப்புக்கொண்டது. ஆனால் புஷேர் அணு உலைக்கான எரிபொருள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவடைவதற்கே பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இறுதியாக 2005-ஆம் ஆண்டில் எரிபொருளுக்கான ஒப்பந்தம் நிறைவேறியது. இந்தக் காலகட்டத்தில், அணு எரிபொருளாகப் பயன்படுத்த யுரேனியத்தை செறிவூட்டுவதில் ஈரானிய அரசு அதன் சொந்த நிபுணத்துவத்தை வளர்த்துக் கொண்டது.
ஈரான் மீது யுரேனிய செறிவூட்டல் எனும் பொய்க் கதையை அமெரிக்க உளவு துறையான சி.ஐ.ஏ எப்படி கட்டமைத்தது; ஒபாமா, புஷ் அரசுகள் அணு ஆயுதங்கள் என்ற கட்டுக்கதை மூலம் ஈரானுக்கு எப்படி நெருக்கடி கொடுத்தன என்பதை அடுத்த தொடரில் பார்ப்போம்.
( தொடரும் )
- தாமிரபரணி