உலகின் 4-வது பொருளாதாரமாக உயர்ந்த இந்தியாவால் யாருக்கு பலன்?

 

ஐ.எம்.எஃப் மதிப்பீட்டின்படி, இந்தியா உலகின் நான்காவது பொருளாதாரமாக உருமாறி வருகிறதென நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் தனது அறிவிப்பில் தேனை தடவி வெளியிட்டுள்ளார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (மொ.உ.உ) பாசிச மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை உலகளவில் 11-வது இடத்தில் இருந்தது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, படிப்படியாக உயர்ந்து இன்று 4-வது இடத்தைப் பிடித்து விட்டது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றன மோடி அரசும் அதன் பரிவாரங்களும். மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது,  ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் அளவை அளவிடுவதாகும். இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு நாட்டின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தை மதிப்பு என வரையறுக்கப்படுகிறது.

2024 – 25-இல் உலகப் பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.942 ட்ரில்லியன் டாலருடன் 5-வது இடத்தை வகித்த இந்தியா 2025 – 26-இல் 4.112 ட்ரில்லியன் (இந்திய நாணய மதிப்பில் ரூபாய் 4,11,200 கோடி) அளவிற்கு வளர்ந்து விட்டது என துள்ளிக் குதிக்கின்றனர். ஆனால், நமது மக்கள் தொகை, அடிப்படையில் பார்த்தால் உலகளவிலும் சரி, உற்பத்தியிலும் சரி சீனாவை விஞ்சியருக்க வேண்டும்.

2028-க்குள் உலகளவில் 3-வது இடத்திலுள்ள ஜெர்மனியைப் பின்னுக்கு தள்ளி விடும் என்று பெரும் ஆரவாரத்துடன் அறிவிக்கின்றனர். நான்காவது இடம் என்று சொல்வதே நிலையற்றதல்ல. ஏனெனில், இந்திய ரூபாயின் மதிப்பிற்கும், ஜப்பானின் யென்னுக்கும் ஏற்ற இறக்கம் ஏற்பட்டாலோ, பண வீக்கத்திற்கு கட்டுப்படாமல் கூடினாலோ, ஐ.எம்.எஃப்பின் மதிப்பீடு மாறலாம். எனவே இந்தியா நான்காவது இடத்தை எட்டாமல் நித்திய கண்டம், பூர்ண ஆயுசாகவும் நீடிக்கலாம்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உயர்வு மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துமா? என்றால் இல்லை என்பதே விடையாகக் கிடைக்கும். இவற்றை தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு, ஒப்பிட்டுப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். நமது நாட்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு 2700 டாலராகும். ஜப்பானின் மதிப்போ 34,000 டாலர். தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நம்மை விட ஜப்பான் 12 மடங்கு அதிகம். இதுதான் உலகின் 4-வது பொருளாதாரத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் இந்தியாவின் அவலம்.

அதாவது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை மொத்த மக்கள் தொகையால் வகுத்தால் கிடைக்கும் மதிப்பை (தொகையை) ஒரு சராசரி மனிதனின் வருவாயாகக் கொள்ளலாமென பொருளாதாரப் பாடநூல் கூறுகிறது. தனிநபர் வருவாயைக் கணக்கிடும் முறையை, நாட்டில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வை ஆய்வு செய்யும் மையமோ இதனை அங்கீகரிக்கவில்லை. இருப்பினும், தனிநபர் வருவாயின் தரவரிசையில் 195 நாடுகளின் வரிசையில் இந்தியாவானது 141 ஆவது இடத்தில் உள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடந்த 11 ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது உண்மையாக இருப்பினும், இவை யாருக்கான வளர்ச்சி என்றால், யாருக்கான பலன் என்றால், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவதற்கே, ஏழைகளுக்கு அல்ல. 2014-இல் 5-க்கும் குறைவாக இருந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2024-க்குள் 271 ஆக உயர்த்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையை இந்தியாவில் உயர்த்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளது பாசிச மோடி அரசு.

ஆக்ஸ்பாம் இந்தியாவில் ஈக்குவாலிட்டி ரிப்போர்ட் படி நம் நாட்டின் மொத்த செல்வத்தில் 5% பணக்காரர்கள், 60% செல்வத்தை (வளங்களை) தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதாவது நாட்டின் வளங்களை 5 பங்குகாகப் பிரித்தால் அவற்றில் 3 பங்குகளை 5% பணக்காரர்கள் அனுபவிப்பதாகவும், மீதமுள்ள 2 பங்கிற்கு 95% மக்கள் போராடுவதாகவும் உள்ளது. இவர்களுக்கு வருடத்திற்கு சுமார் ரூபாய் 91 ஆயிரம் வரை வருவாய் வருகிறது. அதாவது, மாதத்திற்கு ரூபாய் 7,666 மட்டுமே வருமானமாகக் கிடைக்கிறது. இதுவும் சராசரி வருமானமே.

ஐ.ஐ.டி பேராசிரியர் இஹான் ஆனந்தின் அறிக்கைப்படி பார்த்தால் 34% இந்திய மக்கள் ஒரு நாளைக்கு ரூபாய் 100 மட்டுமே ஊதியமாக ஈட்டுகின்றனர். இதுதான் நான்காவது பொருளாதாரத்தின் இலட்சணம். சுகாதாரம், மருத்துவம், கல்வி, வாழ்வாதாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அளவிடும் மனித மேம்பாட்டு குறியீட்டின்படி இந்தியா பின்தங்கியுள்ளதோடு மொத்தமுள்ள 193 நாடுகளில் இந்தியா 130 வது இடத்தில் உள்ளது.

அதாவது, உலகின் நான்காவது இடத்தைப் பிடித்துள்ள இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உயர்வால் 95% மக்களின் வாழ்வை மேம்படுத்த முடியாமல் பின்தங்கியுள்ளது. காரணம் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பம், நிதி, ரியல் எஸ்டேட் போன்ற தொழிலாளர் பங்களிப்பு குறைவான துறைகளில் இருந்து பெறப்பட்டது. பெரும்பான்மையினர் பங்கேற்கும் விவசாயம், தொழிற்துறையில் இருந்து வந்தடைந்தவை அல்ல. இவ்விருதுறைகள் மட்டுமே பெரும்பான்மையான மக்களுக்கு வேலைவாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் வழங்க முடியும். ஏறக்குறைய 15% -மாக குறைந்துள்ள விவசாயத்தின், தொழிற்துறையின் பங்களிப்பைப் பெருக்காமல், மேம்படுத்தாமல் பெரும்பான்மை மக்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்க முடியாது. உண்மையான வளர்ச்சியையும் எட்டமுடியாது.

சீனாவோ தனது மனித வளத்தை (உழைப்பை), பயன்படுத்தி, உலகில் எந்த நாட்டினரும் புறக்கணிக்க முடியாத அளவிற்கு உற்பத்தி மையமாக மாறியுள்ளதை மறுக்க முடியாது. அதற்கு அதன் உள்கட்டமைப்பு மட்டுமல்லாமல், இலவசமாக வழங்கப்படும் தரமான மருத்துவமும், கல்வியும் என்பதை மறுப்பதற்கில்லை.

இந்தியாவின் கல்வி அமைப்பு பட்டதாரிகளை உருவாக்கினாலும், வேலைக்கேற்ப திறன் இல்லை என ஒதுக்கப்படுகின்றனர். 2023-ஆம் ஆண்டின் தரவுப்படி 55% பட்டதாரிகள் திறன் அற்றவர்கள் என ஒதுக்கப்பட்டுள்ளனர்.   இது ஒருபுறம் இருக்க, நாடெங்கிலும் அரசின் கடைநிலை ஊழியர்களுக்கான வேலைகளுக்குக் கூட ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் போட்டி போடுகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநில அரசு அறிவித்த 62 பியூன் வேலைக்கு, 3700 பி.எச்.டி படித்தவர்களும், 50,000 பட்டதாரிகளும் போட்டியிட்டுள்ளனர். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் இலவச மருத்துவம் கிடைக்காமல், இலட்சக்கணக்கான மக்கள் சாவை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர். எப்படியாவது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி மருத்துவம் பார்க்கும் 6.3 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்த உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்கான நடைமுறையை மேற்கொள்ளாமல், போக்குவரத்துத்துறை, கட்டுமான துறை, கப்பல் கட்டும் துறை எண்ம பரிமாற்றுத்துறை என சேவைத் துறைக்கான நடைமுறையில் முன்னேறி வருவதாகவும் இதன் மூலம் உலகளவில் 3-வது பொருளாதாரமாக இந்தியா மாறும் என மோடி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகமோ மீண்டும் கார்ப்பரேட்டுகளுக்காகவே கதைக்கிறது.

வளர்ச்சி என்பது அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, உற்பத்தியை ஊக்கப்படுத்தி, அதிகப்படுத்துவதை உள்ளடக்கிய வளர்ச்சி. இதை நோக்கமாகக் கொண்ட அரசே நமக்கு தேவை. சந்தைப் பொருளாதாரத்தை மையைப்படுத்தி அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கொண்ட அரசு நமக்கு தேவையில்லை.

மக்களின் தேவைகள் அனைத்தையும் சொந்த பொறுப்பாக ஏற்றுக் கொண்டு செயல்படும் உண்மையான மக்கள் ஜனநாயக அரசுக்காகப் போராடுவோம். அப்பொழுதுதான் ஒவ்வொரு இந்திய மக்களும் கௌரவமான, வறுமையற்ற வாழ்க்கையை வாழ முடியும். இவ்வாழ்க்கையே அர்த்தமுள்ளதாகவும் அமையும்.

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன