மக்களின் வாழ்க்கைத் தரம் உயராமல்
 இந்தியப் பொருளாதாரம் வளர்வது எப்படி?

மோடியின் ஆட்சியில், அதானியின் சொத்து மதுப்பு 1300 சதவிகதம் அதிகரித்துள்ள அதேவேளையில் 40 சதவிகித கிராமப்புற இந்தியர்கள் ஒருவேளை உணவிற்கு பணம் இல்லாமல் பட்டினி கிடக்கின்றனர்.

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி (GDP) 2024-25 ஆம் நிதி ஆண்டில் ஏறத்தாழ 3.9 டிரில்லியன் டாலராக இருக்கும் என ஐ.எம்.எப் கணக்கிட்டுள்ளது. இந்த நிதியாண்டில் இது ஜப்பானின் GDP யை (4.06 டிரில்லியன் டாலர்) கடந்துவிடும் என்று எதிர்பாக்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியா ஜப்பானை பின்னுக்குதள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளதாக பலர் எழுதுகின்றனர்.

2015 இல், இந்தியாவின் GDP இன் மதிப்பு 2.1 டிரில்லியன் டாலராக இருந்தது, 2025 இல்  4 டிரில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. பத்து வருடத்தில் இது 100% வளர்ச்சியாகும். காவி கும்பலோ வழக்கம் போல, மோடி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகவே இந்த வளர்ச்சி என்ற பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டது. காங்கிரசோ, இந்தியா போன்ற 150 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில்  இந்த வளர்ச்சி இயல்பானதுதான் என்கிறது. இன்னும் அதிகரித்திரிக்க வேண்டிய GDP ஐ தனது தவறான பொருளாதாரக் கொள்கையினால் பின்னோக்கி இழுத்திருக்கிறார் பிரதமர் மோடி என்கிறார் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம். இவ்விரு தேசியக் கட்சிகளோ அல்லது மாநில கட்சிகளோ GDP வளர்ச்சியை தங்களது ஆட்சியின் சாதனைக் குறியீடாகப் பிரச்சாரம் செய்கின்றனர்.

GDP வளர்சியானது, நாட்டின் அனைத்து மக்கட்பிரிவினரின் பொருளாதார செயல்பாடுகள் மற்றும் பொருளாதார நிலைமைகள் மேம்படுவதை குறிப்பதாக முதலாளித்துவப் பொருளாதாரவாதிகள் விளக்கம் தருகின்றனர். இக்கூற்றுப்படி, 3.9 டிரில்லியன் டாலர் மதிப்பை இந்திய மக்கள் தொகையான 1.4 பில்லியனைக் கொண்டு வகுக்கும் போது ஒவ்வொரு இந்தியரும் சராசரியாக வருடத்திற்கு 2,711 டாலர் (2.36 இலட்சம்), அளவிற்கு GDP ல் பங்களிப்பு செலுத்துகிறார்கள் மேலும் அதற்கு சமமான பொருளாதாரப் பயனைப் பெறுகிறார்கள். GDP வளரும் போது, ஒரு நபருக்கான GDP அளவும் கூடுகிறது. அவரின் பொருளாதார நிலைமைகளும் மேலும் மேம்படுகிறது என்பதே முதலாளித்துவ பொருளாதாரவாதிகள் சொல்லும் விளக்கம்.     

உதாரணமாக, ஒரு அறையில் 10 பேர் இருப்பதாக கொண்டால் அதில் ஒன்பது பேரிடம் 100 ரூபாயும் ஒருவரிடம் 9,100 ரூபாயும் இருப்பதாக கருதினால் அந்த அறையில் இருப்பவர்களிடம் உள்ள சராசரி மதிப்பு ஆயிரம் ரூபாய். ஆனால் இந்த  சராசரி மதிப்பானது அறையில் உள்ள பத்து பேரிடம் பணம் எவ்வாறு பகிரப்பட்டுள்ளது என்ற உண்மையைச் சொல்லவில்லை. ஒரு நபருக்கான GDP கணக்கீடும் அதைப்போலத்தான். ஒரு நபருக்கான GDP என்பது உண்மையில் ஆட்சியாளர்கள் செய்யும் ஒரு ஏமாற்று வேலையாகும் (முதலாளித்துவ அமைப்பில் GDP என்பதே ஒரு ஏமாற்று வேலைதான்). ஆட்சியாளர்கள் ‘பெருமை கொள்ளும்’ இப்பொருளாதார வளர்ச்சியினால் உருவான இலாபம் மக்களுக்கு எவ்வாறு பகிரப்படுகிறது என்பதே பொருளாதார வளர்ச்சிக்கான சரியான குறியீடாகும்.

ஆக்ஸ்ஃபாம் இந்தியா அமைப்பு 2023 இல் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியா மக்கள் தொகையில் மிகப்பெரிய பணக்கார 1% மக்கள், நாட்டின் மொத்த செல்வத்தில் 40.5% க்கும் அதிகமான செல்வத்தை வைத்துள்ளனர். இதை, மக்கள் தொகையில் பெரும் பணக்கார முதல் 10% மக்களுக்கு விரிவுபடுத்தினால், இப்பத்து சதவிகிதத்தினர் நாட்டின் மொத்த செல்வத்தில் 72% க்கும் அதிகமான செல்வத்தை  கட்டுப்படுத்துகிறார்கள். இதற்கு நேர்மாறாக, மக்கள் தொகையின் கீழ் 50% பேர்–தோராயமாக 70 கோடி மக்கள்– ஒட்டுமொத்தமாக வெறும் 3% செல்வத்தை மட்டுமே கொண்டுள்ளனர். 

கடந்த பத்து வருடத்தில் பில்லியனர்களின் எண்ணிக்கை அதிவேகத்தில் வளர்ந்துள்ளது.  2014 இல் 109 ஆக இருந்த பில்லியனர்கள் 2022 இல் 142 ஆக உயர்ந்து 2024 இல் 334 என்ற உச்சத்தை அடைந்திருக்கிறது. கொரோனாவிற்குப் பிறகு தொழில்கள் முடங்கிய நிலையிலும் பில்லியனர்கள் அதிகரித்திருப்பது முரணாகவே உள்ளது. 2014 இல் ஐம்பதாயிரம் கோடியாக இருந்த அதானின் சொத்து மதிப்பு 2024 இல் 6,86,000 கோடி ரூபாயாக(1,300 மடங்கு) உயர்ந்துள்ளது. அம்பானியின் சொத்து அளவோ, 2014 இல் 1.68 லட்சம் கோடியாக இருந்தது, 2024 இல் 8.86 இலட்சம் கோடி ரூபாயாக (530 மடங்கு) உயர்ந்து இருக்கிறது.

இந்த GDP வளர்ச்சியினால், இதே பத்தாண்டுகளில், உழைக்கும் வர்க்கப் பிரிவினரின் பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன? அதற்கான பதிலை 2024-25 பொருளாதார அறிக்கைத் தருகிறது. இவற்றை வரிசைப்படுத்தி RUPE இணையத்தளம் வெளியிட்டுள்ள விவரங்களை கீழேத் தருகிறோம்.

  1. வருடாந்திர தொழில்துறைக் கணக்கெடுப்பு தரவுகளின் படி, 2022-23 ஆம் ஆண்டில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சாலைத் துறையில் (organized industry sector) பணிபுரியும் ஒருவருக்கான மொத்த ஊதியம், 2018-19 ஆம் ஆண்டில் (நான்கு ஆண்டுகளுக்கு முன்பு) இருந்ததை விட 3 சதவீதம்  குறைந்துள்ளது.
  1. விவசாயம் மற்றும் விவசாயம் சாராத வேலைகளுக்கான உண்மையான கிராமப்புற கூலியின் அளவு பத்தாண்டுகாலமாக எந்த மாற்றமும் அடையாமல் தேக்கமடைந்தே உள்ளன.
  1. 2017-18 ஆம் ஆண்டிலிருந்து, மாதச்சம்பளம் அல்லது நிரந்தர வேலையிலுள்ள தொழிலாளர்களின் உண்மை ஊதியம் ஆண்களுக்கு 6 சதவீதமும், பெண்களுக்கு 13 சதவீதமும் குறைந்துள்ளது.
  1. இதே காலகட்டத்தில் சுயதொழில் செய்யும் தொழிலாளார்களின் வருவாய், ஆண் தொழிலாளர்களுக்கு 9 சதவிகிதமும் பெண் தொழிலாளர்களுக்கு 32 சதவிகிதம் என கடுமையாகச் சரிந்துள்ளது.

2017-18 ஆம் ஆண்டில், சுயதொழில் செய்பவர்களின் விகிதம் மொத்தத் தொழிலாளர்களில் 52 சதவீதமாக இருந்தது. அது தற்போது, 2023-24 ஆம் ஆண்டில், 58 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. “இந்த உயர்விற்குக் காரணம், தொழில்முனைவோராவதற்கான சாதகமான சூழல்கள் இருப்பதும், நெகிழ்வான வேலை மற்றும் வேலை நேரத்திற்கான வாய்ப்புகள் உருவாகியிருப்பதினால்தான் என்கிறது சமீபத்தியப் பொருளாதார ஆய்வறிக்கை.

ஆனால் சுயதொழில் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதின் காரணம், வேலையின்மையின் விரக்தியினால் விவசாயமோ, சிறு உற்பத்தி சார்ந்த தொழிலோ அல்லது சிறு வர்த்தகமோ செய்து எப்படியாவது வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற நிலைமையேயாகும். இதே காலகட்டத்தில், மாதசம்பளம்/நிரந்தர வேலைகளில் உள்ள தொழிலாளர்களின் அளவு 23 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகக் குறைந்துள்ளது.

  1. உடனடித் தொழிலாளர்களின் (Casual labour) உண்மை தினசரிக் கூலி 2018-19 க்கும் 2023-24 க்கும் இடையில் ஆண்களுக்கு 19 சதவிகிதமும், பெண்களுக்கு 24 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் உடனடித் தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்த நாட்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் விளைவாக, அவர்களின் மொத்த வருமானம் அதிகரிக்கவில்லை. வேலையின்மை காரணமாக, மொத்த தொழிலாளர்களில் உடனடித் தொழிலாளர்களின் அளவு 25 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறைந்துள்ளது.
  1. உணவு விநியோக வேலைகளில் உள்ள ஊழியர்களின் உண்மை வருமானம், 2019 மற்றும் 2022 க்கு இடையில், 24 சதவீதம் குறைந்துள்ளதாக NCAER ஆய்வு கூறுகிறது.
  1. இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களான டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தொடக்கநிலை ஊதியங்கள் பெயரளவில், கடந்த 15-18 ஆண்டுகளாக, மாற்றமடையாமல் உள்ளது. இது உண்மை மதிப்பில் கடுமையான ஊதிய வீழ்ச்சியாகும்.

2007-ல் டிசிஎஸ்-இல் உதவி சிஸ்டம்ஸ் இன்ஜினியர் வேலையில் பயிற்சியாளராக சேர்ந்த  ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ. 3.15 இலட்சம் ஊதியமாக இருந்தது. ஆனால் 2024-இல் அதே பணியில் சேர்ந்தவருக்கு ஆண்டுக்கு ரூ. 2.95-3.36 இலட்சம் ஆக உள்ளது. இது உண்மையான மதிப்பில் 60 சதவிகித வீழ்ச்சியாகும்.

இன்போசிஸில் ஒரு சிஸ்டம்ஸ் இன்ஜினியர் பயிற்சியாளர் 2010-ல் ஆண்டுக்கு ரூ. 3.25 இலட்சம் ஊதியமாகப் பெற்றார். அவ்வேளைக்கு 2024-இல் ஒருவர் ரூ. 3.6 இலட்சம் ஊதியமாகப் பெறுகிறார். இது உண்மை ஊதிய மதிப்பில் 49 சதவிகித வீழ்ச்சியாகும். இப்போக்கு பல முன்னணி மென்பொருள் நிறுவனங்களுக்கும் பெருந்தும்.

மேற்சொன்ன அனைத்து தரவுகளும், பெரும்பான்மை மக்களால் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் தேக்கநிலை உருவாகியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதையே தொழிற்துறை உற்பத்தி குறியீட்டுத் (IIP) தரவுகளும் கூறுகின்றன. மக்களின் தினசரிப் பயன்பாட்டுப் பொருட்களான (nondurables) சோப்பு, சலவைத் தூள், பற்பசை, தேயிலைத் தூள், உணவுப் பொருட்கள், மருந்துகள், காகிதம் ஆகியவற்றின் வளர்ச்சி, பல ஆண்டுகளாக கீழ்நோக்கியே உள்ளது.

மேற்சொன்ன தரவுகளிலிருந்து, கடந்த பத்தாண்டுகளில் வேலையின்மை அதிகரித்துள்ளது, நகர்புற மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களின் உண்மை ஊதியம் உயரவில்லை, நவீனத் தொழிற்துறையான ஐடி மற்றும் கிக் (Swiggy, Zomoto, Blinkit) தொழிலாளர்களின் ஊதிய அளவும் தேக்கமடைந்துள்ளது என்பதை அரசாங்க புள்ளிவிவரங்களே அறுதியிட்டுக் கூறுகின்றன. இதன் விளைவாக வாங்கும் சக்தி குறைந்ததினால் அத்தியாவசியப் பொருட்களுக்கான தேவையும் குறைந்துள்ளது.

2022-23 ஆம் ஆண்டிற்கான குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பின் (HCES) முடிவுகளை  மோடி அரசு சமீபத்தில் வெளியிட்டது.  இவ்வறிக்கையின் விவரங்களை ஆய்வு செய்த ஆய்வாளர் புலப்ரே பாலகிருஷ்ணன்,  கிராமப்புற இந்தியாவில், 40% மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேலைக்கான (சைவ) சாப்பாட்டை (மொத்த விலை ரூ.60) வாங்க முடியாமலும், 80% பேர் ஒரு சைவ சாப்பாடு மற்றும் ஒரு அசைவ சாப்பாட்டை (மொத்த விலை ரூ. 88) வாங்கும் சக்தி இல்லாமல் இருப்பதாகவும், நகர்ப்புற இந்தியாவில், 10% மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை (சைவ) சாப்பாட்டை வாங்க முடியாமலும், 50% பேர் ஒரு சைவ உணவு மற்றும் ஒரு அசைவ சாப்பாட்டை வாங்கும் சக்தி இல்லாமல் இருப்பதாகவும் கூறுகிறார்.  

கிராமப்புறங்களில் ஏறத்தாழ 40 சதவிகிதப் பேருக்கும் நகர்புறங்களில் 10 சதவிகிதப் பேருக்கும் இரண்டு வேலை உணவு இல்லாமல் இருக்கின்றனர். இந்நிலைமை வேலையின்மை மற்றும் வாங்கும் சக்தி குறைந்துள்ளதோடு பொருந்தியே போகிறது.  

பதினோறாண்டு மோடியின் ஆட்சி குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ள அமித்ஷா, தங்களது ஆட்சியில் 26 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக நீட்டி முழக்கினார். இவர்கள் நிர்ணயித்துள்ள வறுமைக்கோடு அளவு என்ன? கிராமப்புறங்களுக்கு 60 ரூபாயும் நகர்புறங்களுக்கு 87 ரூபாயும். இம்மதிப்பிற்கு மேல் வாங்கும் சக்தியுள்ள எவரையும் ஏழையாக கருதுவதில்லை. மோடி கும்பல் பெருமைப்பட்டுக்கொள்ளும் $4 டிரில்லியன் டாலர் வளர்ச்சி என்பது அதானிக்கு ஆறு இலட்சம் கோடியாகவும் உழைக்கும் மக்களுக்கு 60 ரூபாய்க்குமான வளர்ச்சி என்பதே உண்மை.

  • செல்வம்

 

தகவல் ஆதாரம்  

https://timesofindia.indiatimes.com/business/india-business/in-7-charts-how-indias-gdp-has-doubled-from-2-1-trillion-to-4-2-trillion-in-just-10-years/articleshow/119545395.cms

https://timesofindia.indiatimes.com/business/india-business/indias-billionaire-count-up-3x-in-10-years-to-334/articleshow/112909708.cms

https://thewire.in/economy/india-gdp-per-capita-reality-inequality-average

https://rupeindia.wordpress.com/2025/06/19/the-depression-of-mass-consumption/

https://thewire.in/economy/thali-index-india-food-poverty

https://www.ideasforindia.in/topics/poverty-inequality/food-deprivation-a-thali-index-reveals-what-poverty-estimates-do-not1.html

குறிப்புகள்

1. பில்லியனர் என்பது, டாலர், யூரோ அல்லது பவுண்ட் –இல் 100 கோடி சொத்து வைத்திருப்பவர்($100 கோடி) என்று பொருள். தற்போதையக் கணக்குப்ப்டி, இந்திய மதிப்பில் 8600 கோடி சொத்து உள்ளவர் இந்தியாவில் பில்லியனர்.

2. ஒரு சைவ உணவை தயாரிக்க ஆகும் செலவு 30ரூபாய் மற்றும் ஒரு அசைவ உணவு தயாரிப்புக்கான  செலவு 58 ரூபாய் என பாலகிருஷ்ணன் நிணயித்துள்ளார். 

3. சமீபத்திய கணக்கெடுப்பில் பின்பற்றப்பட்ட வறுமை மதிப்பீடுகள் ரங்கராஜன் குழுவின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டது. இது தனிநபருடைய மாதாந்திர நுகர்வுக்கான செலவினத்தை வறுமைக்கான அளவுகோலாக பரிந்துரைத்துள்ளது. வறுமைக் கோடு 2011–12 இல் ரூ.979 ஆக இருந்தது, அதேபோல் 2022–23 இல் ரூ.1,837 ஆகவும், 2023–24 இல் ரூ.1,940 ஆகவும் திருத்தப்பட்டது. நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை, 2011–12 இல் ரூ.1,407 ஆக இருந்தது, 2022–23 இல் ரூ.2,603 ​​ஆகவும், 2023–24 இல் ரூ.2,736 ஆகவும் திருத்தப்பட்டது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன