மோடி ஆட்சிக்கு வந்து பதினோறு ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. இதனை பாஜகவும், கோடி மீடியாக்களும் மிக விமர்சையாகக் கொண்டாடின. 1947-க்கும் 2014- க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அடைந்திராத வளர்ச்சியை மோடியின் பதினோறு ஆண்டுகால ஆட்சியில் இந்தியா அடைந்துள்ளாதாக மோடி கும்பல் படுஜோராக விளம்பரம் செய்தது.
டெல்லியில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஒன்றிய கேபினட் அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி மற்றும் நட்டா, பதினோறு ஆண்டுகால மோடி ஆட்சியின் சாதனையாக ஒரு விசயத்தை முன்வைத்தனர். இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் வறுமை குறைந்திருப்பதாகவும், பதினோறு வருடத்தில் 26 கோடியே 90 லட்சம் பேர் வறுமையிலிருந்து விடுவிக்கப் பட்டிருப்பதாகவும், 2011-12 இல் 27.12 சதவீதமாக இருந்த வறுமை விகிதம் 2022-23 இல் 5.3% குறைந்திருப்பதாகவும் கூறினார்.
2024-ஆம் ஆண்டு வெளிவந்த உலகப் பட்டினிக் குறியீட்டில் இந்தியா 105 வது இடத்தைப் பெற்றிருந்தது. ஆனால் அமைச்சர்களோ, இந்திய மக்கள் தொகையில் வெறும் 5.3% பேர் மட்டுமே வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளதாக கூறுகிறார்கள். நமக்கு இது முரணாகத் தோன்றலாம். ஆனால் மோடி கும்பலைப் பொறுத்தவரை, பட்டினிக் குறியீட்டு அறிக்கையானது ‘பாரதத்திற்கு’ அவப்பெயரை உருவாக்குவதற்கு வெளிநாடுகள் செய்யும் சதி, வறுமை குறைந்திருப்பதே உண்மை என்று நாம் கருதவேண்டும். சதா இந்தியாவின் வளர்ச்சி (முதலாளிகளின் வளர்ச்சி) பற்றியே பேசிவந்த இக்கும்பல் திடீரென சாதாரண மக்களைப் பற்றியும் பேசுவதால் அவர்கள் சொல்லும் தரவுகளின் உண்மைதன்மையைப் பார்ப்பது நமது கடமையல்லவா?
ஜூன் மாத தொடக்கத்தில் உலக நாடுகளின் வறுமை விகிதம் குறித்த அறிக்கையை உலக வங்கி வெளியிட்டது. அது சர்வதேச வறுமைக் கோட்டை நிர்ணயிப்பதற்கான அளவை (International Poverty Line-IPL) 2017-ஆம் ஆண்டின் வாங்கும் திறன் சமநிலை (Purchase Power Parity-PPP) அடிப்படையில் $2.15/நாள் என நிர்ணயித்திருந்ததைத் திருத்தி 2021-ஆம் ஆண்டின் PPP அடிப்படையில் $3/நாள் ஆக சமீபத்தில் உயர்த்தியது. இந்த புதிய வறுமைக்கோடு அளவீட்டின் அடிப்படையில், இந்தியாவில் வறுமை விகிதம் 2011-12 ஆம் ஆண்டில் 27.12% ஆக இருந்த நிலையில், 2022-23 இல் இது 5.25% ஆக குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தான் ஹர்தீப் சிங் பூரி மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார்.
இங்கு 3PPP$/day என்பது நேரடியாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பைக் குறிப்பதல்ல. வாங்கும் திறன் சமநிலை (PPP) அடிப்படையில் நிர்ணயிக்கப் படுவதாகும். வாங்கும் திறன் சமநிலை என்பது ஒரு நாட்டில் பயன்படுத்தப்படும் கரன்சியைக் கொண்டு வெளிசந்தையில் எவ்வளவு பொருளை வாங்க முடியும் என்பதை அமெரிக்க டாலரோடு ஒப்பிட்டுச் சொல்வதாகும். உதாரணமாக ஒரு கிலோ அரிசியை ஒரு டாலருக்கு அமெரிக்காவில் வாங்க முடிகிறதென்றால் அதே ஒரு கிலோ அரிசியை இந்தியாவில் 50 ரூபாய்க்கு கிடைப்பதாகக் கொண்டால் PPP அடிப்படையில் 1PPP$ என்பது 50 ரூபாய்க்கு சமமாகும். சர்வதேச ஒப்பீட்டுத் திட்டத்தின் (International comparision Program-ICP) சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், ஒரு PPP$ தோராயமாக ரூ.20க்கு சமம். மூன்று PPP$ என்பது 60 ரூபாய்க்கு சமம். ஒரு நாளைக்கு 60 ரூபாய் அளவிற்கு (1800 ரூபாய்/மாதம்) அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் திறனை ஒருவர் கொண்டிருந்தால் அவர் கடுமையான வறுமைக்கோட்டிற்கு (Extereme poverty line) மேல் உள்ளவர் ஆகிறார். அதுவே ஒரு நாளைக்கு 85 ரூபாய்க்கு (4.23 PPP$) மேல் வாங்கும்-திறனைக் அவர் கொண்டிருந்தால் அவர் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவராவார்.
எனவே, இந்திய ஆளும் வர்க்கம் ஒரு நாளைக்கு 85 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் இந்தியரை எழையாகவே கருதுவதில்லை. 85 ரூபாயை கொண்டு ஒருவர் ஒரு நாளைக்குண்டான அத்தியாவசியத் தேவையை பூர்த்திசெய்யமுடியுமா? இந்த நிர்ணயம் எவ்வளவு பெரியக் கேலிகூத்தானது. இதை ஆதரித்துப் பேசும் மோடி கும்பலின் திமிர்த்தனத்தை என்னவென்பது?
ஒரு நாளைக்கு 85 ரூபாய் சம்பாதித்தால் ஒருவன் சராசரியான வாழ்க்கையை இங்கு வாழ முடியுமென்றால் முதலாளிகள் வாழ்வதற்கு போதுமான அளவு என்ன? பதினோறு ஆண்டுகால மோடி ஆட்சியில் முதலாளிகளின் சொத்துக்கள் எவ்வளவு சதவிகிதம் உயர்ந்துள்ளது, முதலாளிகளுக்காக தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள் எவ்வளவு என்று பார்த்தாலே இந்த உண்மை தெரிந்துவிடும்.
பிரிட்டீஸ் ஆட்சிகாலத்தில் இருந்ததை விட மேசமான ஏற்றத்தாழ்வு சுதந்திர இந்தியாவில் தற்போது இருப்பதாக உலக ஏற்றத்தாழ்வு ஆய்வகம் கூறுகிறது. இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பில் 40% சொத்து முதல் 10% பெருமுதலாளிகளிடம் உள்ளது. கீழுள்ள 60% மக்களிடம், வெறும் 4.7% சொத்து மட்டுமே உள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது. உதாரணமாக, 2014-இல் மோடி ஆட்சிக்கு வரும் போது அதானியின் சொத்து மதிப்பு 44,000 கோடியாக இருந்தது. இதுவே 2023-இல் 11.6 இலட்சம் கோடியாக, ஏறத்தாழ 2500 மடங்கு, அதிகரித்திருக்கிறது. அம்பானியின் சொத்தோ 350 மடங்கு ($18 பில்லியனிலிருந்து $82 பில்லியன்) உயர்ந்துள்ளது. 2014 மற்றும் 2022 க்கு இடையில், இந்திய பில்லியனர்களின் நிகர மதிப்பு 280 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இம்மதிப்புகளை இவர்கள் முன்வைக்கும் வறுமைக்கோடு அளவீடோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மோடி கும்பலின் கயமைத்தனத்தையும், வக்கிரத்தையும் நாம் புரிந்துக் கொள்ள முடியும்.
2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற ஆத்ம நிர்பர், அம்ரித்கல். ஸ்டார்டப் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி, டிஜிட்டல் இந்தியா, பாரத்மாலா, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான திட்டங்கள் என பல திட்டங்களை அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் இதனால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளதாகவும் மோடி கும்பல் வாய்ச்சவடால் அடிக்கிறது. மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டங்கள் முதலாளிகளுடைய சொத்து மதிப்பு பன்மடங்கு அதிகரிக்க பயன்பட்டு இருக்கிறதே ஒழிய பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பெரிய பங்களிப்பு செய்யவில்லை என்பதை மேற்கூறிய தரவுகளே நிருபிக்கின்றன.
தரகு முதலாளிகளின் வளர்ச்சியை இந்தியாவின் வளர்ச்சியாக காட்டும் மோடி கும்பல், இந்தியாவின் வளர்ச்சியில் சாதாரண மக்களும் பயனடைந்துள்ளதாக அனைவரையும் நம்பவைக்க “வறுமை குறைந்துள்ளது” என்ற பொய்கதையை தங்கள் ஆட்சியின் சாதனையாக சவடால் அடிக்கிறது.
* * * * * *
1990-களில் உலகமயம், தனியார்மயம், தாராளமயம் கொண்டுவரப்பட்ட பின்பு வறுமை ஒழிப்பு என்பதை ஒவ்வொரு அரசாங்கமும் தங்களது ஆட்சியின் சாதனையாக காட்டத் தொடங்கினர். ஆனால் இவர்கள் உண்மையில் வறுமையை ஒழிக்கவில்லை. வறுமையை நிர்ணயிப்பதற்கான அளவுகோல்களை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொண்டு வறுமையை ஒழித்து விட்டதாக ஏமாற்றி வருகின்றனர். 1993-94 இல் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்தபோது, ஒரு மனிதன் உண்ணும் உணவின் கலோரி மதிப்பின்படி வறுமைகோட்டைக் கணக்கிடும் முறையைக் கொண்டுவந்தார். அதன்படி 1987-88 இல் 25.5% ஆக இருந்த வறுமை விகிதம் 1993-94 இல் 19% ஆகக் குறைந்ததாகச் சொன்னார். பிறகு 2005 ஆம் ஆண்டில் டெண்டுல்கர் குழு, கிராமப்புறங்களில் ஒரு நபருக்கு மாதம் 447 ரூபாய்க்கு குறைவாகவும், நகர்ப்புறங்களில் 579 ரூபாய்க்கு குறைவாகவும் செலவிடுவதை வறுமையாக வரையறுத்தது. இந்த வரையறை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.
2011-12 ஆம் ஆண்டு வாக்கில், பணவீக்கத்தை கணக்கில் கொண்டு நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு 33 ரூபாய்க்கும், கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு 27 ரூபாய்க்கும் குறைவாக செலவிடுவதை வறுமைக்கோடு என அக்குழு நிர்ணயம் செய்தது. இதுவும் விமர்சனத்திற்குள்ளாகவே முன்னாள் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன் தலைமையில் குழு அமைத்தனர். அக்குழு, வறுமைக் கோட்டை நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு 47 ரூபாயாகவும், கிராமப்புறங்களில் 32 ரூபாயாகவும் உயர்த்தியது. அதற்குள் ஆட்சி மாற்றம் நடக்கவே இக்குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரவில்லை. இன்றுவரை தெண்டுல்கார் கமிட்டி முன்வைத்த அளவுகோல் தான் அதிகாரப்பூர்வ அளவீடாக உள்ளது.
மோடி கும்பலுக்கு சமூக-பொருளாதார கணக்கெடுப்புகளும் புள்ளிவிவரங்களும் அலர்ஜி என்பதால் கடத்த பதினோறாண்டு ஆட்சியில் வறுமைக்கோடு நிர்ணயம் குறித்தெல்லாம் கண்டுகொள்ளவேயில்லை. உலகவங்கியும், ஐ.எம்.எப்-இம் தருகின்ற புள்ளி விவரங்களையே ஏற்றுக்கொள்கின்றனர்.
வறுமைக்கோடு நிர்ணயிப்புக்குப் பின்னால் மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியைக் குறைப்பது, அத்திட்டங்களை ஒழிப்பது போன்ற வேலையை ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். உதாரணமாக, மன்மோகன் சிங் காலத்தில் வறுமைக் கோட்டை நிர்ணயம் செய்த பிறகுதான் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்த அத்தியாவசிய பொருள்களுக்கு குடும்பங்களின் பொருளாதாரப் பின்புலத்திற்கு ஏற்ப பொருட்களை வழங்க வண்ண குடும்ப அட்டைகளைக் கொடுத்தனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் ஊட்டச்சத்து தொடர்பான திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, உணவுப்பொருட்களுக்கான மானியம் போன்றவை வறுமைக்கோட்டுத் தரவுகளின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுவதால், இந்தியாவில் வறுமை மிகவும் குறைந்து விட்டது என்று மோடி கும்பல் சொல்லுவதானது மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பதற்கே இவர்கள் பயன்படுத்துவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
- செல்வம்
செய்தி ஆதாரம்
file:///G:/India%20Poverty%20story%20transformed.pdf
https://thewire.in/economy/why-india-needs-to-update-its-own-poverty-line
https://www.aljazeera.com/economy/2024/4/29/is-modis-india-more-unequal-than-under-british-rule
https://www.vinavu.com/2016/07/29/poverty-condition-after-1991-reform/