பாரதிய ஜனதா கட்சியும், இந்து முன்னணியும் இணைந்து மதுரையில் வருகின்ற ஜூன் 22-ஆம் தேதியன்று முருக பக்தர்களின் ஆன்மீக மாநாடு என்ற பெயரில் ஒரு நிகழ்வை நடத்தவிருக்கிறார்கள். முருக பக்தர்களை ஒன்றிணைப்பதற்காக இந்த மாநாட்டை நடத்தவிருப்பதாக பாஜக கூறியிருக்கிறது. மாநாட்டை ஒட்டி பேரணி ஒன்றை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்-ஷா, உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
இந்த மாநாட்டை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் பாஜகவினரும், இந்து முன்னணியினரும், இந்த மாநாட்டில் 5 இலட்சம் பேர் கலந்து கொள்வார்கள் எனக் கூறுகிறார்கள். இதற்காக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடாதிபதியை அழைத்திருக்கிறார்கள், அதுமட்டுமன்றி மாநாட்டில் கலந்துகொள்ள வரும்படி முருகன், ஐயப்பன், ஓம்சக்தி, சாய்பாபா பக்தர்கள் குழுக்களுக்கு பாஜக தரப்பிலிருந்து நேரில் சென்று அழைப்புக் கொடுத்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் இந்த மாநாட்டிற்கு மதுரை போலீசார் அனுமதி கொடுக்க மறுத்தனர். அதன் பிறகு வாகனப் பேரணி நடத்தக் கூடாது, டிரோன்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட 52 நிபந்தனைகளுடன் மாநாட்டிற்கு அனுமதியளித்தனர். போலீசின் நிபந்தனைகளை எதிர்த்து பாஜக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதுமட்டுமன்றி அறுபடைவீட்டு முருகன் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த அனுமதியளிக்க வேண்டும் என இந்து முன்னணி தரப்பிலும் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளிலும் காவிகளுக்குச் சாதகமாகவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயம் வாகனப் பேரணி நடத்தக் கூடாது என்றும், டிரோன்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியது. ஆனால் நீதிமன்றத்தின் தடையை மீறி திருவாரூரில் பாஜகவினர் வாகனப் பேரணியை நடத்தினார்கள். மாநிலம் முழுவதும் இதுபோல நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநாட்டு வேலைகள் குறித்து பாஜக நிர்வாகிகளிடம் விசாரித்துவிட்டு பணிகளை முடுக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்.
பாஜக, இந்து முன்னணி இணைந்து நடத்தும் இந்த மாநாட்டிற்கு இந்தியா கூட்டணிக் கட்சியினர் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றனர். “மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் இந்து சமய நம்பிக்கை உள்ள மக்களை பா.ஜ.க. தனது அரசியல் சுய இலாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் சதியில் ஈடுபட்டுள்ளது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் அதனை மனதில் கொண்டு தான் இந்த மாநாட்டைப் பாஜகவினர் நடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. “மதசார்பின்மை காப்போம் – மதம் மக்களுக்கானது! அரசுக்கானதல்ல!” என்ற பெயரிள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருச்சியில் பேரணி நடத்துகிறது.
சமூக ஊடகங்களிலும், யூடியூப் விவாதங்களிலும் இந்தியா கூட்டணிக் கட்சியினர் இந்த மாநாட்டைக் கடுமையாக எதிர்த்துப் பேசி வருகின்றனர். இந்த மாநாடு நிச்சயமாக வெற்றிபெறாது, மக்கள் இதனைப் புறக்கணித்துவிடுவார்கள் என அவர்கள் கூறிவருகின்றனர். அத்துடன் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்றும், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியால் வெற்றிபெற முடியாது என்றும் கூறுகின்றனர். பதிலுக்கு காவிகளின் தரப்பிலிருந்தும் இதற்கு எதிராக பதில் கொடுத்து வருகிறார்கள். “இந்த மாநாடு பெரும் வெற்றி பெறும். அது இந்து விரோத சக்திகளுக்கு சாட்டையடி கொடுப்பதாக இருக்கும். திருப்பரங்குன்றத்தில் முருக பக்தர்களின் எழுச்சி, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலித்தே தீரும்!” என்று தமிழக பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மொத்தத்தில் இரு தரப்பினரும் மாநாட்டின் வெற்றி குறித்தும், அது அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் செலுத்தவிருக்கும் தாக்கம் குறித்தும் மாறி மாறி விவாதித்து வருகின்றனர்.
ஆனால் இந்து மதவெறிப் பாசிச கும்பலைப் பொருத்தவரை, இந்த மாநாடு வெற்றியடையுமா அல்லது தோல்வியடையுமா? என்பது முக்கியம் இல்லை. மாறாக, தமிழ்நாட்டில் தங்களது பாசிச கருத்தியலுக்கு வலுவானதொரு மக்கள் ஆதரவை – அடித்தளத்தை உருவாக்க வேண்டும் என்ற அவர்களது நோக்கத்திற்கு எந்த தடையையும் ஏற்படுத்தப் போவதில்லை.
தமிழ்நாட்டில் காவி பாசிசக் கும்பல் மக்கள் ஆதரவைப் பெறுவதற்கு முருகனைப் பயன்படுத்துவது என முடிவு செய்திருக்கிறார்கள். 2020-ஆம் ஆண்டு ஜூலையில் கறுப்பர் கூட்டம் யுடியூப் சேனல் கந்த சஷ்டி கவசத்தை அவமதித்ததாகவும் அந்த சேனல் தொடர்பானவர்களைக் கைது செய்ய வேண்டுமெனவும், அந்த யுடியூப் சேனலை தடை செய்ய வேண்டுமெனவும் கோரி பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.
மேலும், அ.தி.மு.க., தி.மு.க. போன்ற கட்சிகள் இந்த விஷயத்தில் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுமென்று பாஜக அழுத்தம் கொடுத்தது. முடிவில் அந்த சேனலை சேர்ந்தவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். சிலர் குண்டர் சட்டத்தின் கீழும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கறுப்பர் கூட்டம் சர்ச்சையின் தொடர்ச்சியாக வேல் யாத்திரை ஒன்றை நடத்தப் போவதாக பா.ஜ.கவின் அப்போதைய மாநிலத் தலைவர் எல்.முருகன் அறிவித்தார். நவம்பர் 6-ஆம் தேதி திருத்தணியில் துவங்கி, டிசம்பர் 6-ஆம் தேதி திருச்செந்தூரில் இந்த யாத்திரையை முடிக்கப் போவதாக அவர் கூறினார்.
அப்போது கொரோனா நோய்த்தொற்று பரவல் இருந்ததால், அந்த யாத்திரைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்தது. இருந்தபோதும் நவம்பர் 6-ஆம் தேதி சென்னையில் இருந்து திருத்தணிக்கு ஊர்வலமாகப் புறப்பட்ட எல்.முருகனை முதலில் தடுத்து நிறுத்திய போலீசார் பின்னர் சில வாகனங்களுடன் ஊர்வலமாகச் செல்ல அனுமதித்தனர். அதேசமயம் அவர் திருத்தணியை அடைந்தவுடன் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அந்த மாதம் முழுவதும் எல்.முருகன் ஊர்வலம் செல்ல முயற்சிப்பதும், போலீசார் தடுத்து நிறுத்துவதும் என்ற நாடகம் நடைபெற்றது. முடிவாக எல்.முருகன் டிசம்பர் 6-ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு மாநாட்டை நடத்தினார். அதில் அப்போதைய மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் பாஜகவின் மாநிலத் தலைவரான அண்ணாமலை பழனி மலைக்கு காவடி எடுத்தார்.
இந்த ஆண்டு மதுரை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்க்காவில் இஸ்லாமியர்கள் ஆடு கோழி பலியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக, மற்றும் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு மதுரையில் இதற்கெதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றையும் பாஜக ஒருங்கிணைத்து, நீதிமன்றத்தின் ஆதரவுடன் நடத்தியது. இதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது இந்த மாநாட்டையும் பாஜக மதுரையில் நடத்துகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக முருகனைச் சுற்றி விவாதங்களும், சர்ச்சைகளும், போராட்டங்களும், பொய்ச் செய்திகளும் பரவ வேண்டும் என்பதில் காவி பாசிச சக்திகள் குறியாக இருந்திருக்கின்றன. தங்களது முயற்சி பலனளிக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி அவர்கள் கவலைப் படவில்லை. தொடர்ந்து முயன்று கொண்டே இருப்போம், எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பது போல ஒரு நாள் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தங்களது பாசிச சித்தாந்தத்திற்கு ஆதரவு கிடைக்கும் என அவர்கள் வேலைசெய்து வருகிறார்கள்.
கறுப்பர் கூட்டம் பிரச்சனையைப் பொருத்தவரை, அவர்களைக் கைது செய்ய வேண்டும் என அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவினை பாஜக நிர்பந்தித்து பணியவைத்தது. எல்.முருகனின் வேல் யாத்திரைக்கு மக்கள் மத்தியில் எந்தவொரு ஆதரவும் கிடைக்கவில்லை. திருப்பரங்குன்றம் பிரச்சனையிலேயே கூட மதுரை மக்களின் ஆதரவு கிடைக்காததால் வெளி மாவட்டங்களில் இருந்து ஆட்களைக் கொண்டுவந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆனால் இவை எதுவும் காவிக் கும்பலைத் தடுத்துவிடவில்லை. தங்களது திட்டங்களை அடுத்தடுத்து நிறைவேற்றிக் கொண்டே செல்கிறார்கள். ஏனென்றால் இதுதான் வடமாநிலங்களில் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு அவர்கள் பின்பற்றிய வழிமுறை. குறிப்பாக இராமனை மையப்படுத்தி வடமாநிலங்களில் கடந்த 40 ஆண்டுகளாக அவர்கள் தொடர்ந்து பல மாநாடுகளை, ஊர்வலங்களை, பேரணிகளை, போராட்டங்களை, இன்னும் சொல்லப்போனால் பல கலவரங்களை அவர்கள் நடத்தியிருக்கிறார்கள். இராமன் என்ற ஒற்றைக் கடவுளை மையப்படுத்திக் கடந்த 40 ஆண்டுகளில் தங்களது பாசிச சித்தாந்தத்திற்கு வடமாநில மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை உருவாக்கியிருக்கிறார்கள்.
1980-களில் அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை இடிக்க வேண்டும் என்றும் அந்த இடத்தில் இராமர் கோவிலைக் கட்ட வேண்டும் என்றும், விஷ்வ இந்து பரிஷத் மூலமாகத் தமது திட்டத்தை அவர்கள் செயல்படுத்த தொடங்கினார்கள். அதனைத் தொடந்து 1990-இல் அத்வானி குஜராத்தின் சோம்நாத்திலிருந்து அயோத்தியை நோக்கி இராமர் கோயிலைக் கட்டுவோம் என்ற முழக்கத்துடன் இரத யாத்திரையை நடத்தினார். அத்வானியின் இரத யாத்திரை சென்ற இடங்களிலெல்லாம் இந்து முஸ்லீம் கலவரம் வெடித்தது. 1992-இல் பாபர் மசூதி இந்துத்துவ மதவெறிக் கும்பலால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல இடங்களில் கலவரம் நடைபெற்றது. கலவரம் நடைபெறாத இடங்களிலும் கூட வெற்றி யாத்திரை என்ற பெயரில் ஊர்வலம் நடத்தி இஸ்லாமியர்களைத் தூண்டிவிட்டு கலவரத்தை காவிக் கும்பல் திட்டமிட்டு நடத்தியது. இவையெல்லாம் முக்கியமான நிகழ்வுகள் மட்டுமே, இவையன்றி அந்த 30 ஆண்டுகளில் எண்ணற்ற போராட்டங்களையும், ஊர்வலங்களையும் காவி பாசிசக் கும்பல் நடத்தியிருக்கிறது. இவற்றின் மூலமாகத்தான் மக்கள் மத்தியில் தங்களது பாசிச சித்தாந்தத்திற்கு ஒரு வழுவான அடித்தளத்தை காவி கும்பலால் உருவாக்க முடிந்தது.
வடநாட்டிற்கு இராமன் என்றால் தமிழ்நாட்டிற்கு முருகனைப் பயன்படுத்த வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். ஏனென்றால் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் முருகனை வழிபடுவது என்பது ஒரு பாரம்பரியமாக பல நூற்றாண்டுகளாக இருக்கிறது. சாமானிய மக்களின் இறை நம்பிக்கையைத் தங்களது பாசிச சித்தாந்தத்தை பரப்புவதற்குப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் திட்டமிடுகிறார்கள். இதில் எத்தனை முறைத் தோற்றாலும் அவர்கள் பின்வாங்கப் போவதில்லை. மீண்டும் மீண்டும் வேறு பெயர்களில், வெவ்வேறு வடிவங்களில் மக்களிடம் தங்களது சித்தாந்தத்தைக் கொண்டு செல்ல அவர்கள் முயன்றுகொண்டுதான் இருப்பார்கள்.
காவி பாசிசக் கும்பலின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக அவர்களைத் தடுத்து நிறுத்தும் வகையிலான நடவடிக்கைகள், இயக்கங்கள் எடுக்கப்பட்டுள்ளனவா எனப் பார்த்தால், இதுவரை அப்படி எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்றுதான் கூற வேண்டும்.
பாசிச எதிர்ப்பில் முன்னணியில் நிற்பது நாங்கள்தான் எனப் பிரச்சாரம் செய்துவரும் திமுக, காவி பாசிஸ்டுகள் முருகனை மையமாக வைத்து அரசியல் செய்கிறார்கள் என்று உணர்ந்துகொண்ட போது, அதனைத் தானும் கையில் எடுக்கும் உத்தியைக் கையாள்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை திமுக அரசு நடத்தியது. அதனைத் தொடர்ந்து பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு கந்த சஷ்டி கவசம் சொல்லிக் கொடுக்கப்படும் என்றும், மாநிலம் முழுவதிலும் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான 12 கோவில்களில் பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களைக் கொண்டு கந்த சஷ்டிக் கவச பாராயணம் செய்யப்படும் என்று இந்து அறநிலையத் துறை அறிவித்தது. இவ்வாறு செய்வதன் மூலம் முருக பக்தர்களின் ஆதரவையும் வாக்குகளையும் பெறலாம் என நினைக்கிறது.
அதேபோன்று, தங்களை மார்க்சிய லெனினியவாதிகள் எனக் கூறிக் கொள்ளும் லும்பன் கும்பல் “முருகனை மீட்போம் கருப்பனைக் காப்போம்” என்று கடவுள் நம்பிக்கையைப் பயன்படுத்தியே காவி பாசிஸ்டுகளை முறியடித்துவிடலாம் என திமுகவிற்குப் போட்டியாக களத்தில் குதித்திருக்கிறது.
ஆனால் இது போன்ற நடவடிக்கைகள் காவி பாசிசத்திற்கு ஒத்திசைவான நடவடிக்கைகளே அன்றி பாசிசத்தை முறியடிக்கக் கூடிய நடவடிக்கைகள் அல்ல. இதுபோன்றவை சில நேரங்களில் காவி பாசிசத்திற்கு தற்காலிக பின்னடைவை உருவாக்கினாலும் கூட அது நீண்டகால கண்ணோட்டத்தில், காவி பாசிசம் எதனை உருவாக்க நினைக்கிறதோ அதனை, மக்களை இந்துமத நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒன்றுதிரட்டுவதை, வேறு வகைகளில் நிறைவேற்றிக் கொடுக்கின்றன. இது போன்ற நடவடிக்கைகள் காவி பாசிஸ்டுகளுக்கு சாதகமாக மாறுமே அன்றி அதற்கு பெரிய அளவில் பாதிப்பை உருவாக்காது.
மற்றொருபுறம் மதநல்லிணக்கம், மதச்சார்பின்மை என்ற பெயரில் காவி பாசிஸ்டுகளை வீழ்த்திவிடலாம் என ஒரு சில இயக்கங்கள் நினைக்கின்றன. ஓடுகாலி மருதையனது ஆசி பெற்ற மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் அத்தகைய வேலையில் இறங்கியிருக்கிறார். மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் ஜனநாயக சக்திகளையும், சிறுபான்மையினரையும் இணைத்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அதன் மூலமாக தமிழ்நாட்டில் அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள், இடையில் வந்த காவிக் கும்பல் தங்களது அரசியல் இலாபத்திற்காக மக்களை மதரீதியில் பிளவு படுத்தும் வேலையைச் செய்கிறது என்று கூறி அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக இருந்து பாசிசத்தை வீழ்த்த வேண்டும் எனப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
காவி பாசிசத்திற்கு எதிராக மதச்சார்பின்மையையும், மதநல்லிணக்கத்தையும் முன்நிறுத்துவது என்பதைக் காங்கிரஸ் கட்சியின் 35 ஆண்டுகளுக்கு முன்னரே செய்திருக்கிறது. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து இராமர் கோயில் கட்டுவதற்காக அத்வானி இரத யாத்திரை மேற்கொண்ட போது, அதற்கெதிராக காங்கிரஸ் கட்சி மதச்சார்பின்மையை முன்னிறுத்தியது. ஆனால் அதனை அத்வானி 1990-களிலேயே உடைத்தெறிந்துவிட்டார். மதச்சார்பின்மை அல்லது மதநல்லிணக்கம் என்பது “சர்வ பந்த் சம்பவ்” அதாவது அனைத்து வழிபாட்டு முறைகளையும் சமமாக நடத்துவதாக இருக்க வேண்டும் என்றும் மதச்சார்பின்மை என்ற பெயரில் சிறுபாண்மையினரின் ஓட்டுக்களை அறுவடை செய்ய காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவர்களுக்குச் சாதகமாக சலுகைகளையும், உரிமைகளையும் வழங்கிவிட்டு, மதநல்லிணக்கம் என்று இந்துக்களை ஏமாற்றுகிறது என்ற அத்வானியின் பிரச்சாரம்தான் அன்றைக்கு வெற்றிபெற்றது.
2024 பாராளுமன்றத் தேர்தல் வரை இதே பிரச்சாரத்தை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. காங்கிரசு ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் தாலியைக் கூடப் பிடுங்கி இஸ்லாமியர்களுக்குச் சலுகையாகக் கொடுத்துவிடுவார்கள் எனக் கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சார மேடையில் மோடி பேசியிருக்கிறார். மோடியின் பேச்சிற்கு ஆதரவு இருக்கிறது என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன. எனவே மதச்சார்பின்மை என்ற ஒற்றை ஆயுதத்தை வைத்து பாசிசத்தை வீழ்த்த முடியாது. அதனைக் காவி பாசிஸ்டுகள் எளிதில் உடைத்துவிடுவார்கள்.
காவி பாசிசத்தை வீழ்த்தவேண்டும் என்றால் அவர்களுக்கு ஒத்திசைவான வழியில் இல்லாமல், அவர்களால் எளிதில் உடைத்தெறியக் கூடிய வகையில் இல்லாமல், பலமான அதேசமயம் அவர்களால் ஊடுருவ முடியாததொரு எதிர்ப்பியக்கத்தை நீண்டகாலக் கண்ணோட்டத்தில் கட்டியமைக்க வேண்டும். அதனை எவ்வாறு சாதிப்பது?
காவி பாசிசம் என்பதை வெறுமனே கலாச்சார ரீதியிலான தாக்குதலாகச் சுருக்கிப் பார்ப்பதனால்தான் மேற்சொன்ன இயக்கங்கள் எல்லாம் இது போன்ற போராட்ட வழிமுறைகளை முன்வைக்கின்றனர். காவி பாசிஸ்டுகளின் செயல்பாடுகள் மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் போது கலாச்சார ரீதியிலானதாகத் தோன்றினாலும், பாசிசத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் அதன் பொருளாதார அடித்தளத்தில், முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் அதன் முயற்சியில் வேர்கொண்டிருக்கிறது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
மோடி தலைமையிலான பாசிச சக்திகள் ஒன்றியத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய கடந்த 11 ஆண்டுகளை எடுத்துக் கொண்டால், எந்த அளவிற்குத் தமது காவி பாசிச சித்தாந்தத்திற்கு, இந்துத்துவத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஏற்ற வகையிலான நடவடிக்கைகளையும், சட்டங்களையும் கொண்டு வந்தார்களோ, அதே அளவிற்கு, இன்னும் சொல்லப்போனால் ஒருபடி மேலாக, முதலாளித்துவத்தைக் காப்பாற்றும் நடவடிக்கைகளை, தனியார்மய தாராளமய உலகமயமாக்கலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள்.
புதிய கல்விக் கொள்கை, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வேளாண் சட்டங்கள், தொழிலாளர் நலச்சட்டத் திருத்தங்கள் என அவர்கள் அமுல்படுத்திய திட்டங்கள் காரணமாக விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு முதலாளிகள், மாணவர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள், தங்களது நிலைமைக்குக் காரணம் என்ன என்று உணர்ந்துகொள்ள முடியாத வகையில் அவர்களை மதரீதியில் பிரித்து, இஸ்லாமியர்கள்தான் பிரதான எதிரி என்றும் அவர்களை ஒடுக்குவதுதான் முதன்மையான வேலையென்றும் நம்பவைத்திருக்கிறார்கள்.
காவி-கார்ப்பரேட் பாசிசக் கும்பலின் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளினால் விவசாயத்தை விட்டு விரட்டப்பட்டு நகரங்களை நோக்கி, வேறு மாநிலங்களை நோக்கிப் படையெடுக்கும் வடமாநில விவசாயிகளும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும் தங்களுடைய இந்த நிலைமைக்குக் காரணம் காவி பாசிசக் கும்பல்தான் என்பதை உணரவில்லை. அதனால்தான் வடமாநில இளைஞர்கள் அற்பக் கூலிக்காகப் பல ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து, தகரக் கொட்டகையில் அடிமைகள் போல வாழ்ந்து வேலை செய்து கொண்டிருக்கும்போது, அமித்ஷா, ஆதித்யநாத், பிரக்யாசிங் போன்ற காவி பயங்கரவாதிகள், செல்வாக்கோடும், அதிகாரத்தோடும் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.
கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள், இந்தக் காவி கார்ப்பரேட் பாசிசக் கும்பல்தான், தங்களது உண்மையான எதிரி என உணரும்போதுதான் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியும். அவர்களது அதிகாரத்தைப் பிடுங்குவது மட்டுமல்ல சுதந்திரமாக நடமாடவே முடியாதபடிக்கு அவர்களை ஒடுக்க முடியும்.
இதனைச் சாதிக்கின்ற வகையில், காவி பாசிசத்தின் பொருளாதார அடித்தளமாக உள்ள முதலாளித்துவ நலனை அம்பலப்படுத்தி, அதற்கெதிராக உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதுதான் நீண்ட காலக் கண்ணோட்டத்தில், பாசிசத்தை வீழ்த்துவதற்கான வழி. காவி பாசிசத்திற்கு நேரெதிரான அரசியலைப் பேசுகின்ற, அவர்களால் ஊடுருவ முடியாத, ஊடுருவ நினைத்தால் அம்பலப்பட்டுப் போகின்ற வழியும் இதுதான். இதனைக் கைவிட்டு முருகனைக் காப்போம் என்று ஒத்திசைவாகச் செல்வதும், மதநல்லிணக்கம் என்று பக்கவாட்டில் செல்வதும் எவ்விதபலனும் அளிக்காது.
- அறிவு