கடந்த வாரம், பெங்களூரு மாநகரம் ஒரு துயரச் சம்பவத்தைக் கண்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கோப்பையை வென்றதையடுத்து நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்ற பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 5 இலட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டதே கூட்ட நெரிசல் ஏற்படுவதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
நிகழ்ச்சியை நடத்திய மாநில அரசும், போலீசின் நிர்வாகத் தவறுகளும்தான் இந்த உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு காரணம் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தாலும், குறுகிய காலத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு எவ்வித விளம்பரங்களும் இல்லாமல் நடைபெற்ற இந்த நிகழ்வில் இவ்வளவு இலட்சம் இளைஞர்கள் எவ்வாறு திரண்டனர் என்ற கேள்வியை நாம் பிரதானமாகப் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.
இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றக்கூடியது, கொண்டாட்டத்தின் உச்சக்கட்டம் எனக் கூறப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் உண்மையில் நுகர்வுவெறியின் உச்சக்கட்டம் என்பதை இந்த மரணங்கள் நமக்குக் காட்டுகின்றன.
கிரிக்கெட் என்ற விளையாட்டைத் தாண்டி பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களையும், அவர்கள் புதிதாக உருவாக்குகின்ற பிராண்டுகளையும், கோடிக்கணக்கான இரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஊடகமாகவே ஐபிஎல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கென சினிமா பிரபலங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் விளம்பரங்களை திரும்பத்திரும்ப ஒளிபரப்பி அவற்றை இரசிகர்களின் மனதில் பதியச்செய்கிறார்கள். ஒவ்வொரு போட்டியையும் ஐந்திலிருந்து பத்துக்கோடிப் பேர் வரை நேரடி ஒளிபரப்பில் பார்க்கிறார்கள் என்கிற போது மற்றெந்த நிகழ்ச்சிகளைக் காட்டிலும் அதிக விளம்பர வருவாயை ஈட்டித்தருவதாக ஐபிஎல் இருக்கிறது. இது கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபத்திற்காகக் கனவுகள், அடையாளங்கள் மற்றும் கற்பனைகளை விற்பனை செய்கிறது.
ஒவ்வொரு ஐபிஎல் அணியும் ஒரு இந்திய நகரத்தின் பெயரைப் பயன்படுத்துவதன் மூலம், மாநிலப் பெருமையையும், உணர்ச்சியையும் புத்திசாலித்தனமான முதலீடாக மாற்றியிருக்கிறார்கள். ஆனால் இந்த உணர்ச்சி எவ்வளவு உண்மையானது? பெரும்பாலும், ஐபில் அணியில் விளையாடும் வீரர்கள் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். இன்னும் சொல்லப்போனால் பலர் சர்வதேச நட்சத்திரங்கள். அணி உரிமையாளர்களும் கூட பெரும்பாலும் அணி முன்னிறுத்தும் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருப்பதில்லை. ஆனாலும், இடைவிடாத விளம்பரங்கள் மூலமாகவும், சமூக ஊடகங்களில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட உணர்வின் மூலமாகவும், அந்த அணி தங்களது அணி என்று அம்மாநில மக்கள் நம்ப வைக்கப்படுகிறார்கள்.
இவையெல்லாம் வழக்கமாக நடைபெறுவதுதான் என்றாலும், இந்த ஆண்டு, அதிலும் குறிப்பாக ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்றவுடன் அது ஏன் இவ்வளவு பெரிய கொண்டாட்டமாக, இத்தனை இளைஞர்கள் ஏதோ தாங்களே வெற்றி பெற்றது போன்று உணர்ந்தார்கள். மற்ற அணிகள் பலமுறை கோப்பைகளை வென்ற போது கூடாத இவ்வளவு பெரிய இரசிகர் கூட்டம், இந்த அணி வெற்றி பெற்ற பிறகு ஏன் கூடியது? இதற்கான காரணத்தை நெருங்கிச் சென்று பார்க்கும் போதுதான் கிரிக்கெட் என்பது எந்த அளவிற்கு விளையாட்டு என்பதைத் தாண்டி ஒரு மதம் போல இன்றைய இளைஞர்கள் மனதில் ஆட்கொண்டிருக்கிறது, கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது இலாபத்திற்காகத் திட்டமிட்டு நடத்தும் சூதாட்டத்தை பல கோடி இளைஞர்கள் உண்மையென நம்பி உணர்வுப்பூர்வமாக அதனுடன் ஒன்றியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
பொதுவாகவே ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டால் அதுகுறித்த செய்திகளும் விளம்பரங்களும் ஊடகங்களை நிரப்பிவிடும். அதுவும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கி 18வது ஆண்டு என்பதால், இத்தனை ஆண்டுகளாக ஒரு முறை கூட வெற்றிபெறாத ஆர்.சி.பி. அணி இந்த முறை வெற்றிபெறுமா? என்ற எதிர்பார்ப்பைப் போட்டிகள் தொடங்கியது முதலே பரப்ப ஆரம்பித்துவிட்டனர்.
ஆர்.சி.பி. அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் முதுகில் இருக்கும் எண்ணான 18 என்பது இத்துடன் ஒத்துப் போவதால், அந்த அணி இந்த ஆண்டு நிச்சயமாகக் கோப்பையை வெல்லும் என்று சமூக ஊடகங்கள், யூடியூப் சேனல்கள், இரசிக பக்கங்கள் என அனைத்திலும் விவாதங்கள் நடக்க ஆரம்பித்தன. இந்த ஆண்டு ஆர்.சி.பி.யின் ஆண்டு என அணியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்தது, இந்த விவாதத்தில் இன்னமும் எண்ணை ஊற்றியதுபோல பற்றிக்கொள்ள வழி செய்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சி போன்றதொரு ரியாலிட்டி ஷோவாக, ஆரம்பம் முதலே ஆர்.சி.பி. அணி வெற்றிபெருமா என்ற எதிர்பார்ப்பை ஒவ்வொரு போட்டியின் போதும் முன்னிலைப்படுத்தினார்கள். பரபரப்பான இறுதிக் காட்சியில் ஆர்.சி.பி. அணி வெற்றிபெற்றவுடன் அதனைக் கொண்டாட இரசிகர்கள் வீதியில் திரண்டதற்கு, இவ்வாறு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்புதான் காரணம்.
இத்தனை விளம்பரங்களும், எதிர்பார்ப்புகளும் ஏன் உருவாக்கப்படுகின்றன? அவற்றின் பின்னால் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபவெறி ஒழிந்திருக்கிறது. இன்றைக்கு ஐபிஎல் அணிகள் என்பது பெரும்பணக்கார முதலாளிகளின் சொத்தாக மாறியிருக்கிறது. அம்பானி, வாடியா, ஷாருக்கான், சன்டிவி கலாநிதி மாறன் என தற்போது தனிநபர்களின் கட்டுப்பாட்டில் அவை இருந்தாலும் அனைத்து அணிகளும் பங்குச் சந்தையில் பட்டியலிடக் காத்திருக்கின்றன. அதன் முதல்படியாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி நிர்வாகம் தன் பங்குகளைத் தனிப்பட்ட ரீதியில் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது. தில்லி அணியும் பஞ்சாப் அணியும் பி.சி.சி.ஐ.யின் அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளன.
இவ்வாறு அணியின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் பல ஆயிரம் கோடிகளை இலாபமாகப் பெற வேண்டும் என்றால், அந்த அணிக்கு என மிகப்பெரிய இரசிகர் கூட்டம் இருப்பது அவசியம். ஆகையால் உணர்வுப்பூர்வமான இரசிகர்களை உருவாக்குவதற்காக ஒவ்வொரு அணியும் பல கோடிகளைச் செலவு செய்கின்றன. அணிகளிடமிருந்து வரும் விளம்பர வருவாயில் வயிறு வளர்க்கும் ஊடகங்களும், இரசிகர்களைப் பிடித்து தரும் புரோக்கர் வேலையினைத் திறம்படச் செய்கின்றன.
ஐபிஎல் போட்டிகளை நடத்துகின்ற இந்திய கிரிக்கெட் கவுன்சில் (பி.சி.சி.ஐ.) என்பது ஆண்டுக்கு 5000 கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டும் ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. அதன் அதிகாரம் இந்திய கிரிக்கெட்டை தாண்டி சர்வதேச கிரிக்கெட்டையே கட்டுப்படுத்தும் வகையில் இன்றைக்கு வளர்ந்திருக்கிறது.
ஐபிஎல் அணிகளும், பி.சி.சி.ஐ.யும் போட்டிகளின் மூலம் நேரடியாக இலாபத்தைச் சம்பாதிக்கின்றன என்றால் டிரீம் 11 போன்ற ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள், இளைஞர்களைச் சூதாட்டத்திற்கு அடிமையாக்கி அவர்களது வாழ்க்கையை அழிப்பதன் மூலம் கொள்ளை இலாபம் ஈட்டுகின்றன. ஐபிஎல் சீசன் தொடங்கிவிட்டால் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் காட்டில் மழைதான் என்று சொல்லும் அளவிற்கு கிரிக்கெட்டின் மீதான இளைஞர்களின் பற்றை, ஒரு போதையாக மாற்றித் தங்களது இலாபத்திற்கு அதனை அந்நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.
திரைக்குப் பின்னால் இத்தனை பெரிய கொள்ளைக் கூட்டம் உட்கார்ந்து கொண்டு, தோனியையும், கோலியையும் முன்னிறுத்தி இரசிகர்களை ஈர்க்கின்றனர். இளைஞர்களும் இதில் உள்ள ஆபத்தை உணராமல் விட்டில் பூச்சிகளாகச் சென்று விழுகின்றனர்.
- மகேஷ்