சாதிவாரி கணக்கெடுப்பு சாதிய இருத்தலுக்குத் தான் வழிவகுக்குமே ஒழிய, சாதியை ஒருபோதும் ஒழிக்காது

1947-போலி சுதந்திரத்தைத் தொடர்ந்து தன்னைக் குடியரசாக அறிவித்துக்கொண்ட அன்றைய ஒன்றிய அரசு “குடிமக்கள் அனைவரும் சமம்” என்கின்ற அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பைக் கைவிட்டது. சாதி-மத ரீதியான பிரிவினை-வெறுப்பு அரசியலை விதைத்து வரும் பாசிச மோடி அரசோ, “குடிமக்கள் அனைவரும் சமம்” என்கின்ற கருத்தளவிலான சமத்துவத்தைக்கூட விட்டுவைக்க மனம் ஒப்பவில்லை.

பிரிவினை-வெறுப்பு அரசியலைத் தொடர்ந்து விதைக்க வழிவகுக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் கூடிய சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தலாமென பாசிச மோடியின் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

ஆனால், இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பானது சாதி ரீதியாக மக்களை-நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சி என்று எதிர்த்த மோடி அரசு, இப்போது மட்டும் கொண்டுவரக் காரணம் என்ன என்கின்ற கேள்வியை திமுக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கேள்வியெழுப்புகின்றன. மேலும் பீகார் அரசு 2023-ல் நடத்திய சாதிவாரி கணக்கெடுப்பும், வரப்போகும் பீகார் தேர்தல் ஆதாயமுமே காரணம் என்று கூறுகின்றன.

மோடி அமைச்சரவையோ, தமது அறிவிப்பில் “சாதிவாரி கணக்கெடுப்பை வெளிப்படையான முறையில் மேற்கொள்வதன் மூலம் சமூக, பொருளாதாரக் கட்டமைப்பு வலுப்பெறும். மேலும், சமூகத்தின் எந்தவொரு பிரிவினருக்கும் பாதிப்பு வராத வகையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதன் மூலம் சமூகத்தின் நலன்களை-மதிப்புகளைக் காத்துள்ளதாகக் கூறுகிறது. ஆனால், இது எப்படி சமூக-பொருளாதார கட்டமைப்பை வலுப்பெரச்செய்யும்? வெறும் 2% உள்ள பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு எப்படி ஒட்டுமொத்த நாட்டின் நலன்களையும், மதிப்புகளையும் காக்கும் என்கின்ற கேள்வியை எழுப்புவதற்கு எந்த எதிர்க்கட்சிகளுக்கும் துணிவில்லை.

மறுபுறம், 2024 செப்டம்பரில் நடந்து முடிந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் சாதிவாரி கணக்கடுப்பில் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று அறிவித்ததும், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மோடி-அமித்ஷாவை சந்தித்ததுமே ஒன்றிய அமைச்சரவை அறிவிப்புக்கு காரணம் எனச் செய்திகள் கூறுகின்றன.

ஏறக்குறைய அனைத்துக் கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பு தாமதமான அறிவிப்பாக இருந்தாலும் அதனை அங்கீகரித்து வரவேற்கின்றன. இந்த அறிவிப்பு சாதி இருப்பை உறுதிப்படுத்தும், சாதி ஒழிப்புக்கு உதவாது என்கின்ற சமூகக் கவலையோ, அக்கறையோ அறவே இல்லை. இவர்கள் கவலையெல்லாம் எப்போது தொடங்கி, எப்போது முடியும் என்பதில்தான் இருக்கிறது. எப்படி இருப்பினும் இவர்களைப் பொருத்தவரை சீக்கிரம் அதாவது 2026 தேர்தலுக்குள் முடிக்கவேண்டும் என்பதேயாகும்.

பாசிச ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலானது, சாதிவாரி கணக்கெடுப்பு இந்து மக்களைப் பிளவுபடுத்தும் சதி எனத் துவக்கத்தில் இருந்தே கூப்பாடு போட்டது. ஆனால், தற்போது தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக அங்கீகரித்துள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை. மேலும், சாதிவாரி கணக்கடுப்பை மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்துவதற்கு தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும் அறிவித்துவிட்டது.

இவர்களைப் பொருத்தவரை காவி-கார்ப்பரேட் பாசிச பயங்கரவாதத்தை நடைமுறைப் படுத்துவதற்கு தடையாக இல்லாத எதிலும் சந்தர்ப்பவாதிகளாக, பச்சோந்திகளாக மாறுவார்கள் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை.

ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு சாதி இருத்தலுக்குத் தான் வழிவகுக்குமே தவிர சாதியை ஒழிப்பதற்கு ஒருபோதும் பயன்படாது. மேலும், குடும்பம், கல்வி, வேலை என அனைத்திலும் இருந்துவரும் சாதி இறுத்தலை, சாதிவாரி கணக்கெடுப்பு மேலும் உறுதிப்படுத்துமே ஒழிய சாதியை ஒழிக்காது என்கின்ற எளிய உண்மையைக் கூட சமூகநீதிக்கு கிடைத்த வெற்றியென களிப்பில் மிதக்கும் எதிர்க்கட்சிகள் உணர மறுக்கின்றன. காரணம் இவர்களிடம் நிலவும் இடஒதுக்கீட்டின் மீதான, தேர்தல் அரசியல் மீதான மோகம், இனி இவர்கள் அனைவரும் சாதி ஒழிப்பைப் பற்றியோ, ஒடுக்குமுறையைப் பற்றியோ பேசுவதற்கு-விவாதிப்பதற்கு அருகதை அற்றவர்கள் என்கின்ற வரையறையின் கீழ் இவர்களை வைத்துக்கொள்வோம்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் கூடிய சாதிவாரி கணக்கெடுப்பு சாதி ஒழிப்பிற்கோ, அதன் ஒடுக்குமுறையைத் தடுப்பதற்கோ உதவாது. வர்க்க ஒடுக்குமுறையையும் தடுக்காது. மாறாக, சாதிய இறுத்தலுக்கும், வர்க்கப் பிளவுக்கும், ஆணவப் படுகொலைகளுக்குமே வழிவகுக்கும். வேண்டுமென்றால், மோடி அரசு கூறுவதுபோல் ஒரு குறிப்பிட்ட முற்பட்ட பிரிவினருக்கான 10% ஒதுக்கீட்டைப்போல அவர்களின் நலன்களை-மதிப்புகளை உயர்த்தவுமே உதவக்கூடும். ஒட்டுமொத்த சமூகத்தையோ, அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தையோ ஒருபோதும் உயர்த்த உதவாது என்பது திண்ணம்.

  • மோகன்  
2 thoughts on “சாதிவாரி கணக்கெடுப்பு சாதிய இருத்தலுக்குத் தான் வழிவகுக்குமே ஒழிய, சாதியை ஒருபோதும் ஒழிக்காது"
  1. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் இன்றைய உள்ஒதுக்கீடு, EWS(அநியாய ஒதுக்கீடு) பிரச்சனைகளுக்கு தீர்வு தெரியவரும்.

    இடஒதுக்கீட்டினால் இச்சமூகம் முன்னேறியுள்ளது. அதை யாரும் மறுக்க முடியாது.

    சாதிவாரி கணக்கெடுப்பு இடஒதுக்கீட்டை சரியான விகிதாச்சரத்தில் தர நமக்கான தரவு அவ்வளவே.தனியார்மயமாக்கலால் இடஒதுக்கீடு பறிபோகிறது.

    பார்ப்பனியம் தன்னுடைய வர்க்க நலனுக்காக EWS வைத்து கொள்கிறது.

    பார்ப்பனரல்லாதவருக்கு இதுபோன்ற அறிவுறுத்தல்கள் மட்டும் தானா?

    ஒரு விசயத்தை முன்னகர்த்தாமல் அப்படியே இருக்கட்டும் என்பது இயங்கியல் பார்வையல்ல புரட்சி நடந்தால் கூட சாதி ஒழியாது.

    சாதி இருத்தலுக்கான பொருளாதார காரணிகளை நம்மால் ஒழித்து விட முடியுமே தவிர

    பண்பாடு காரணிகளை ஒழிக்க புரட்சிகால கட்டங்களிலும் அரசியல் போராட்டங்களை நடத்தியே ஆக வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன