மாட்டுமூத்திரம் குடித்தால் காய்ச்சல் குணமாகும், மஞ்சள்நீர் தெளித்தால் கொரோனா வராது போன்ற நிருபிக்கப்படாத விசயங்களை மதம், ஆன்மீகம் மற்றும் தேசபற்று ஆகியவற்றோடு கலந்து தனது இந்துத்துவா பிரச்சாரத்தை மக்களிடம் பரப்பிவருகிறது பாஜக-ஆர்எஸ்எஸ் பாசிச கும்பல். அந்த வரிசையில் தற்போது உத்திரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் இல் நடந்து வரும் மகாகும்பமேளாவை ஏறத்தாழ இந்தியாவினுடைய அடையாளமாக மாற்றும் அளவிற்குப் பிரச்சாரம் செய்துள்ளது மோடி-ஆதித்யநாத் கும்பல். இதுவரை 50 கோடி பேருக்கும் அதிகமாக பிரயாக்ராஜ் இன் திருவேணி சங்கமத்தில் நீராடி இருப்பதாக பத்திரிக்கைகள் கூறுகின்றன.
அம்பானி தொடங்கி சினிமா நடிகர்கள், முர்மு, மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள், பவன்கல்யாண் உள்ளிட்ட உள்ளூர் அரசியல்வாதிகள் வரை அனைத்து பிரபலங்களும் திருவேணி சங்கமத்தில் குளித்தும் ‘அப்புனித நீரை’ குடித்தும் தங்களது பாவத்தைத் தீர்த்துள்ளனர்.
‘அப்புனித நீர்’ அவர்களது பாவத்தை தீர்த்தா அல்லது இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் குளித்த/குடித்த அப்புனித நீர் 100% உறுதியாக கடுமையான தொற்று நோய்களை தோற்றுவிக்கும் தன்மை கொண்டது என்பது உறுதியாகியுள்ளது.
இரு நாட்களுக்கு முன்பு, தேசிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திரிவேணி சங்கமத்தின் (January 12, 13, 15, 19, 20 மற்றும் 24) வெவ்வேறு இடங்களில் சேகரித்த நீரின் மாதிரிகளைச் சோதனை செய்து தனது அறிக்கையை தேசிய பசுமைத் தீர்பாயத்திடம் சமர்பித்துள்ளது. அவ்வறிக்கையில் “தொற்று நோய்களை உருவாக்கக்கூடிய பியுகல் கோலிபார்ம் (மலத்தில் உள்ள பாக்டீரியா) எனும் நுண்ணுயிரி சராசரியாக நீரில் இருக்கின்ற அளவைவிட பல மடங்கு அதிகம் இருப்பதாகக் கூறியுள்ளது”.
பியுகல் கோலிபார்ம் என்ற நுண்ணுயிரி மனிதக் கழிவு மற்றும் விலங்குகளுடைய மலத்திலிருந்து வரக்கூடியது. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் தண்ணீரில் சராசரியாக இருக்க வேண்டிய அளவைவிட 17 மடங்கு அதிகமாக இந்நுண்ணுயிரி இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்டறிந்துள்ளதாக பத்திரிக்கைகள் கூறுகின்றன.
இந்த நீர் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் தகுதியற்றது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. ஆனால் நோய்க்கிருமிகள் அதிகம் கலந்துள்ள இந்நீரீல் குளிப்பதன் மூலம் தங்களுடைய பாவங்கள் தீரும் என்று மோடி கும்பல் பிரச்சாரம் செய்கிறது.
இந்த பியுகல் கோலிபார்ம் என்ற பாக்டீரியாவினால் டயேரியா(வயிற்றுப்போக்கு), வாந்தி, டைபாய்டு, காலரா, தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற தொற்றுநோய்கள் அதிகம் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பாவத்தைத் தீர்க்க கும்பமேளாவில் புனித நீராடி வந்த சென்னை பக்தர்கள் சிலருக்கு தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக ஒரு பத்திரிக்கையாளர் தனது சமூக வலைதளத்தில் எழுதியிருக்கிறார்.
புனித நீராடல் நடக்கும் இடத்திற்கு திரிவேணி சங்கமம் என்று பெயர். இந்த இடத்தில் தான் கங்கை யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் கலப்பதாக சங்கிக் கும்பல் பிரச்சாரம் செய்கிறது. ஆனால் சரஸ்வதி நதி என்பது வேதங்களில் சொல்லப்பட்டுள்ள ஒரு கற்பனை நதி. அந்நதி இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இன்றுவரைக் கிடைக்கவில்லை. இந்த திருவேணி சங்கமத்தினுடைய மொத்த நீளம் 40 கிலோ மீட்டர். இந்த 40 கிலோ மீட்டர் ஆற்றுக் கரையில் தான் ஒரு நாளைக்கு சராசரியாக 1.5 கோடிப் பேர் குளிக்கின்றனர்.
கும்பமேளா ஆரம்பிப்பதற்கு முன்பே பிரயாக்ராஜ் ஆற்றுப்படுகையானது மிகவும் அசுத்தமாக இருப்பதாக தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் யோகி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தது. பிரயாக்ராஜ் மாவட்டக் கழிவுநீர் கங்கையில் கலப்பது தொடர்பான வழக்கு விசாரணையில் (அக்டோபர் 30, 2024) உத்தரபிரதேச அரசு சமர்ப்பித்த அறிக்கையில், “பிரயாக்ராஜ் நகரம் ஒரு நாளைக்கு 468.28 மில்லியன் லிட்டர் (MLD) கழிவுநீரை உற்பத்தி செய்கிறது, அதே நேரத்தில் அம்மாவட்டத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு திறன் 340 MLD மட்டுமே. அதாவது 128.28 MLD கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கங்கையில் கலக்கிறது.”
பிரயாக்ராஜ் இல் 10 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. அதன் மொத்த கொள்ளளவு 340 MLD. இருப்பினும் சலோரியில் உள்ள 14 MLD திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு கழிவுநீரைச் சுத்திகரிப்பு செய்கிறது. மீதமுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்படும் கழிவுநீரின் தரம் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விடக் குறைவாகவே உள்ளதாக அறிக்கை கூறுகிறது.
மேலும் பிரயாக்ராஜ் இல் குவிந்துள்ள கழிவுகளை அகற்றுவது தொடர்பான வழக்கில், பிரயாக்ராஜ் இல் குவிந்துள்ள 14 லட்சம் டன் கழிவுகளை அகற்றியதாக பிரயாக்ராஜ் முனிசிபல் கார்பரேஷன் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில்(NGT) (ஜனவரி 2025) பதிலளித்துள்ளது. அதற்கு NGT அமர்வோ “ஆறு மாதங்களுக்கு முன்பு, பிரயாக்ராஜில் மில்லியன் கணக்கான டன் கழிவுகள் குவிந்திருப்பதை நான் தனிப்பட்ட முறையில் பார்த்தேன், அது திடீரென்று எங்கே போனது?” “ஆறு மாதத்தில் 14 லட்சம் டன் கழிவுகளை அகற்றியதாக கூறுகிறீர்கள், மிகக் குறுகிய காலத்தில் 14 லட்சம் டன் கழிவுகள் எவ்வாறு அகற்றப்பட்டன? அவை முறையாகச் சுத்திகரிக்கப்பட்டதா? என்ற கேள்விகளுக்கு ஆதித்யநாத் அரசாங்கம் பதிலளிக்கவில்லை. உண்மையில் 14 லட்சம் டன் கழிவுகள் சுத்திகரிக்கப்படவும் இல்லை அகற்றப்படுவும் இல்லை.
மிகவும் அசுத்தம் நிறைந்த பகுதியில், உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிரிகள் கொண்ட கழிவு நீரில் கும்பமேளா நடத்துவதற்கு யோகி ஆதித்யநாத் அரசாங்கம் திட்டமிட்டிருப்பது அவர்களுடைய பதிலறிக்கையில் இருந்தே ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.
“மகாகும்பமேளம் ஒரு மத நிகழ்வு மட்டுமல்ல, இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தின் சின்னம்,…….சனாதன தர்மம் இந்தியாவின் ஆன்மா, அதன் கண்ணியத்தை நிலைநிறுத்துவது நமது கடமை. பொய்யான கதைகளால் மகாகும்பமேளத்தைக் கேவலப்படுத்த நினைக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகள் பொறுத்துக்கொள்ளப்படாது,” என்று சட்டப்பேரவையில் ஆதித்தியநாத் பேசியிருக்கிறார்.
ஒரு காவி பாசிஸ்ட்டிடம் இருந்து வேறு என்ன பதிலை நாம் எதிர்பார்க்க முடியும். ஏற்பாட்டு குறைபாடுகளினால் பலரைக் கொன்றும் (48, இன்னும் பலர்) முறையான கழிவுநீர் சுத்திகரிப்புச் செய்ததாகப் பொய்யான அறிக்கையை சமர்ப்பித்தும் நோய்தொற்றுக்கு அதிக வாய்ப்பிருப்பதாக எச்சரித்ததைப் புறந்தள்ளியும் “இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தின் சின்னமான கும்பமேளாவை” நடத்தியே தீருவோம் என்கிறது மோடி-அமித்ஷா-ஆதித்யநாத் பாசிசக் கும்பல். இவர்களுக்கு மக்களின் நலன் குறித்து சிறிதும் அக்கறை கிடையாது. இவர்களைப் பொருத்த வரை கும்பமேளா என்பது பெரும்பான்மையான மக்களை இந்துத்துவா கருத்தாக்கத்திற்குள் கொண்டுவருவதற்கான ஒரு வாய்ப்பு அவ்வளவுதான்.
- செல்வம்
கட்டுரை சிறப்பு..காலத்தின் தேவை..வாழ்த்து துகள் ..மாசு கட்டுப்பாட்டு வாரியம் எசாசரிக்கைக்கு பிறகும் உ.பி முதல்வர் அதில் குளிக்கலாம் என்று பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்..அறிவிலித்தனம்..