ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய சுமார் 2400 கோடி ருபாய் நிதியை ஒன்றிய அரசு தராமல் நிறுத்திவைத்திருக்கிறது. ஒவ்வொரு காலாண்டிலும் முறையாக வழங்கப்பட வேண்டிய இந்த நிதியை, 2023ம் ஆண்டின் இறுதிக் காலாண்டு முதல் கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளாக தரமால் இழுத்தடித்து வந்தது மட்டுமல்லாமல், புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு அமுல்படுத்தினால்தான் இந்த தொகையைத் தர முடியும் என பகீரங்கமாக மிரட்டுகிறார், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
பி.எம்.ஸ்ரீ. பள்ளிகளை அமைப்பதற்கு ஒப்புக் கொள்வது, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துவது என புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ள மறுப்பதால்தான் நிதியைத் தராமல் நிறுத்தி வைத்திருப்பதாக ஒன்றிய கல்வி அமைச்சர் கூறுகிறார்.
தர்மேந்திர பிரதானின் பகீரங்க மிரட்டலுக்கு மாநிலம் முழுவதிலுமிருந்து மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. திமுக, அதிமுக, காங்கிரஸ், சிபிஐ., சிபிஎம், பாமக, தவெக என பாஜக தவிர்த்து தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் மூன்றாவது மொழியாக இந்தியைத் திணிப்பதை எதிர்த்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் இணைந்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறது.
அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மட்டுமே மும்மொழிக் கொள்கையைத் திணிப்பதை ஆதரித்துப் பேசிவருகிறார்கள். புதிய கல்விக் கொள்கை மூன்றாவது மொழியாக இந்தியைத் திணிக்கவில்லை என்றும், எந்த மொழியை வேண்டுமானாலும் மூன்றாவது மொழியாக தேர்ந்தெடுத்துப் படிக்கலாம் என அவர்கள் கூறி வருகிறார்கள்.
2019ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்ட புதிய கல்விக் கொள்கை நகல் அறிக்கையில் (Draft), இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் 6ம் வகுப்பு வரை கட்டாயம் இந்தியைப் படிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்த பிறகு அந்த சரத்தை ஒன்றிய கல்வி அமைச்சகம் மாற்றியமைத்தது.
தமிழகத்தில் இயங்கிவரும் ஒன்றிய அரசின் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லை. அதே சமயம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இந்தியும், சமஸ்கிருதமும் கட்டாயப்பாடமாக இருக்கிறது. இந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 21 பள்ளிகள் தற்போது புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்தும் பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளிகளாக ஒன்றிய அரசு மாற்றியிருக்கிறது. ஆனால் இந்தப் பள்ளிகளில் இன்னமும் இந்தியும், சமஸ்கிருதமும் கட்டாயப் பாடமாகவும், தமிழ் ஆசிரியர் இல்லாத விருப்ப பாடமாகவும் இருக்கிறது. இந்தப் பள்ளிகளில் ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தி வரும் மும்மொழிக் கொள்கை என்பது இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் மட்டுமே. அதில் தமிழுக்கு இடமில்லை.
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ள பாஜக ஆளும் மாநிலங்களில் குறிப்பாக உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ஹரியாணா, ஹிமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதமே கற்பிக்கப்படுகிறது. அதாவது இந்தி பேசும் மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை என்பது இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம். இந்தி பேசாத மாநிலங்களில் மும்மொழி என்பது ஆரம்பத்தில் மாநில மொழி, இந்தி, ஆங்கிலம். பின்னர் மாநில மொழியை நீக்கிவிட்டு அந்த இடத்தில் சமஸ்கிருதத்தை கொண்டுவருவது.
தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழிகளைப் பரிந்துரைப்பதன் உண்மை நோக்கம் இந்தியையும் சமஸ்கிருத்ததையும் திணிப்பதுதான் என்பது இதன் மூலம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுள்ளது. ஆனால் அப்படியில்லை என பாஜகவினர் நம்மை நம்பச்சொல்கின்றனர்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற காவி கார்ப்பரேட் பாசிச சக்திகளின் “ஒரே நாடு, ஒரே மக்கள் ஒரே கலாச்சாரம்” என்ற கொள்கைக்கு நாடு முழுவதும் மக்கள் ஒரே மொழியைப் பேசுவது தேவையாக இருக்கிறது. மொழியின் அடிப்படையில் பல்வேறு கலாச்சாரங்களுடன் வாழ்ந்து வரும் மக்களின் கலாச்சார அடையாளங்களை அழித்து அவர்களை இந்துத்வ புதைசேற்றில் அழுத்துவதற்கு அவர்களது தாய் மொழிகளை அழித்து அவ்விடத்தில் முதலில் இந்தியையும் பின்னர் சமஸ்கிருதத்தையும் நிரப்புவது அவர்களுக்கு முன் தேவையாக இருக்கிறது.
ஏற்கெனவே இந்தியை ஏற்றுக் கொண்டுள்ள உ.பி, பீகார், ஹரியாணா, ஹிமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநில மக்களின் தாய்மொழிகளான மைதிலி, மகாகி, போஜ்புரி, ஹரியாண்வி, பஹாரி, பிராஜ், கன்னோஜி, ரத்தோரி போன்றவை கிட்டத்தட்ட அழியும் நிலையில் உள்ளன. இதே நிலையை மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்துவதற்காகத் தான் கடந்த பத்து ஆண்டுகளாக ஒன்றிய பாஜக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் புதிய கல்விக் கொள்கையும், மும்மொழித் திணிப்பும் தமிழ்நாட்டின் மீது ஏவப்படுகிறது.
அதேசமயம் புதிய கல்விக் கொள்கையை விமர்சிப்பவர்கள் அது முன்னிறுத்தும் மும்மொழிக் கொள்கையைத் தாண்டி மற்ற அம்சங்கள் குறித்துப் பேசுவதில்லை. கல்வியை முற்றிலுமாக தனியார்மயமாக்குவதுடன், பள்ளிக் கல்வியிலும், உயர்கல்வியிலும் காவி பாசிச சித்தாந்தத்தை புகுத்துவதை நோக்கமாக கொண்டுதான் காவி கார்ப்பரேட் பாசிச மோடி அரசு புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தது.
காவி பாசிச சித்தாந்தத்தை திணிப்பதற்காக, கல்வியை காவி பாசிச சக்திகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பாட திட்டங்களைத் திருத்துவது, சமஸ்கிருதத்தை எல்லா பட்டப்படிப்புகளிலும் நுழைப்பது, இடஒதுக்கீடு மறுப்பு, 3ம் வகுப்பு, 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வைத்து கல்வியில் நவீன மனுதர்மத்தைப் புகுத்துவது, என பல அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதே போல பல்கலைக்கழக மானியக் குழுவை கலைப்பது அல்லது அதிகாரமற்ற அமைப்பாக செல்லாக் காசாக மாற்றுவது. அரசு உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கிவந்த மானியங்களையும், மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகளை நிறுத்துவது. அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை மாணவர்களின் கல்விக் கட்டணத்திலிருந்து இயங்கும் தன்னாட்சி அமைப்புகளாக மாற்றுவது. அதன் மூலம் பன்னாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தொழில்தொடங்க களம் (level playing ground) அமைத்துக் கொடுப்பது. மருத்துவ கல்விக்கென நாடுதழுவிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது போல பொறியியல் பட்டப்படிப்பிற்கும், கலை இலக்கிய கல்லூரிகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வுகள் நடத்துவது. இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் பயிற்சி மையங்களின் தொழிலுக்கு பக்க பலமாக இருப்பது, என புதிய கல்விக் கொள்கையில் கல்வியைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைள் ஏராளம். இவை ஒவ்வொன்றையும் ஒன்றிய அரசு அடுத்தடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த திட்டங்கள் பலவற்றை, இல்லம் தேடிக் கல்வி, நம்ம ஸ்கூல் பவுண்டேசன், எண்ணும் எழுத்தும், திறன் சார்ந்த கல்வி போன்ற பெயர்களில் திமுக அரசு ஏற்கெனவே அமுல்படுத்தி வருகிறது. தற்போது பிரச்சனையாகியிருக்கும் பிஎம்ஸ்ரீ பள்ளிகள் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக 2024ம் ஆண்டு மார்ச் மாதத்தில் திமுக அரசின் அப்போதையை தலைமைச் செயலாளார் சிவ்தாஸ் மீனா ஒப்புக் கொண்டுள்ளார். இதையெல்லாம் மறைத்துக் கொண்டுதான் திமுக புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது போல காட்டிக் கொள்கிறது. அதிமுக முதல் நடிகர் விஜயின் தவெக வரை ஒன்றிய அரசைக் கண்டிப்பது எல்லாம் ஓட்டுச் சீட்டு அரசியலுக்காக தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காகத்தானே ஒழிய மக்களின் மீதான அக்கறையில் இருந்து இவர்கள் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை. இதனை இவர்கள் வெளியிட்டிருக்கும் மேம்போக்கான கண்டன அறிக்கைகளே பறைசாற்றுகின்றன.
பல்வேறு தேசிய இனங்களையும், மொழி, கலாச்சாரங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் கொண்ட நாட்டில் தேசிய அளவில் ஒரே கல்விக்கொள்கை அதுவும் தனது காவி கார்ப்பரேட் பாசிச நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான கல்விக் கொள்கையை பாஜக அமுல்படுத்த நினைக்கிறது, அதன் கொள்கைகளில் ஒத்துப்போகாத கட்சிகளையும் மாநிலங்களையும் தன் வழிக்குக் கொண்டுவர நிதியை நிறுத்திவைத்துக் கொண்டு பகீரங்கமாக மிரட்டுகிறது. இதனை எதிர்த்து முறியடிக்காவிடில் நம் எதிர்கால சந்ததியரின் கல்வியுரிமையே கேள்விக்குள்ளாகிவிடும்.
- அறிவு
தேசிய இனங்களின் தாய்மொழி வாயிலாக கல்வி கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியத்தையும் ஆசியாவில் புரட்சி அரசாங்கத்தில் தோழர் லெனின்.ஸ்டாலின்வகுத்தளகத்தமொழிக்கொள்கையையும்தொடர்கட்டுரையாகவெளியிட்டால்இந்தபிரச்சினையைமக்கள்மத்தியில்எடுத்துச்செல்லஇலகுவாகஇருக்கும்