காவி பாசிசத்தின் பாதந்தாங்கியான சீமான், தந்தை பெரியார் குறித்து பேசி வந்த அவதூறுகளை அடுத்து, சீமானின் தம்பிகளில் பலரும், பிரபாகரனையும், பெரியாரையும் ஒப்பிட்டுப் பேசி பெரியார் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். இவர்களுடன் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் இணையக் கூலிகளும் கைகோர்த்துக் கொண்டு பெரியாருக்கு எதிரான துவேசப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
2009ல் நடந்த இனப்படுகொலைக்குப் பிறகு வந்திருக்கும் ஒரு தலைமுறையினருக்கு, குறிப்பாக சீமான் மூலம் தமிழ்த் தேசியம் குறித்தும், ஈழ விடுதலைப் போர் குறித்தும் அறிந்து கொண்டிருக்கும் தலைமுறையினருக்கு, ஈழத் தமிழர்களின் தன்னுரிமைப் போர் என்றாலே அது விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும்தான் என்ற கற்பிதம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபாகரனுக்காக உருவாக்கப்பட்ட நாயக பிம்பம் இவர்கள் மண்டையில் பிரபாகரன் தன்னிகரில்லாத தலைவர் என்ற எண்ணத்தை ஏற்றியிருக்கிறது. இதன் அடிப்படையில் தான் பெரியார் குறித்த சீமானின் பிதற்றல்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு அவர்கள் வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பெரியாருக்கு எதிராக பிரபாகரனை நிறுத்தும் காவிகளின் சூழ்ச்சியை பெரியாரிய ஆதரவாளர்கள் உணர்ந்து கொண்டாலும், யாருடன் யாரை ஒப்பிடுவது என வெகுண்டெழுந்து அதனை எதிர்கொள்ளத் தயாரில்லாமல், பெரியார் குறித்து, பிரபாகரனும், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மற்ற தலைவர்களும், கடந்த காலங்களில் பேசியவற்றை குறிப்பிட்டு வாதாடுகின்றனர். இப்படிச் செய்வதற்கு அவர்களிடம் பிரபாகரன் குறித்து உள்ளதொரு மயக்கம் காரணமாக இருக்கிறது.
நமக்கு அப்படிப்பட்ட மயக்கம் எதுவும் கிடையாது. ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான, தன்னுரிமைக்கான போரை நாம் பிரபாகரனுடனும், விடுதலைப்புலிகளுடனும் சுருக்கிப் பார்ப்பதில்லை. ஈழ மக்களின் தன்னுரிமைக்கான போராட்டத்தின் ஆரம்ப காலம் தொடங்கி, 2009ல் நடந்த இன அழிப்புப் போர் வரையிலும், விடுதலைப் புலிகளின் தவறுகளையும், அவர்களை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் சந்தர்ப்பவாத அரசியல் நடத்தி வந்த போலி தமிழ்த் தேசிய தலைவர்கள் குறித்தும் “புதிய ஜனநாயகம்” இதழ் தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளது.
அந்த வகையில், பிரபாகரன் மீது கட்டமைக்கப்பட்ட நாயக பிம்பத்தைக் கேள்விக்குள்ளாக்கி, 1987 ஜனவரி 1-15 – புதிய ஜனநாயகம் இதழில் வெளியான “ஈழத்து எம்.ஜி.ஆர். பிரபாகரனின் பொய்கள் சதிகள் கொலைகள்” என்ற கட்டுரையை மீள்பிரசுரம் செய்வதன் மூலம் இன்றைய தலைமுறையினருக்கு பிரபாகரன் குறித்து ஏற்பட்டிருக்கும் மயக்கத்தை தெளிவிக்க முடியும் என நினைக்கிறோம். – செங்கனல் ஆசிரியர் குழு
*************
ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரைத் தொடர்ந்து ஊசலாட்டமின்றி, உறுதியோடு ஆதரித்து வருகிறோம். ஈழ மக்களின் சுய நிர்ணய உரிமையை மறுத்தும், எதிர்த்தும், ஈழப் போராளிகளை இழிவுபடுத்தியும் வரும் இந்திய பிற்போக்காளர்களை திரை கிழித்தும் வருகிறோம். நமது சக்திக்கும் வாய்ப்புக்கும் இயன்றவரை ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகிறோம்.
ஈழ மக்களுக்கு ஆதரவாக முதலைக் கண்ணீர் வடிக்கும் ராஜிவ்- எம்ஜிஆர் கும்பல், நாம் ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமை போரை ஆதரிப்பதைக் கண்டு அஞ்சுகின்றன. 1983 ஜூலை இலங்கை இனப்படுகொலையை எதிர்த்து தமிழகமே திரண்டு எழுந்தது. ஈழ மக்களுக்கு ஆதரவாக ஒரு பேரெழுச்சியையே கண்டோம். இதில் பங்கேற்றதற்காக கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டனர். தமிழக ”கெஸ்டபோ” தலைவர் மோகன்தாசின் படை புரட்சியாளர்கள் மீது ஏவிவிடப்பட்டது. நமது தோழர்களைப் பிடித்துப்போய் ஈழ மக்களுக்கு ஆதரவு கொடுத்ததற்காகவே மிரட்டினார்கள்.
அதன் பிறகு கம்யூனிச புரட்சியாளர்களுடன் ஈழப் போராளிகள் எந்தவிதத் தொடர்பும் கொள்ளக்கூடாது என்று மிரட்டப்படுகின்றனர். இந்த உறுதி அடிப்படையிலேயே ஈழப் போராளிகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈழப் போராளிகள், இந்தியப் புரட்சியாளர்கள் இரு சாராருமே தொடர்ந்து ”கியூ” பிரிவு சிறப்பு இரகசிய போலீசாரால் கண்காணிக்கப்படுகின்றனர். இருப்பினும் ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமை போரை ஆதரிப்பதில் இருந்து நாம் பின்வாங்கவில்லை. போபால் விஷவாயு படுகொலை, இந்தியாவில் உளவு வேலை, ஈழத் தமிழ் மக்களை படுகொலை செய்வதில் பாசிச சிங்கள செயவர்த்தனேவுடன் கூட்டு ஆகிய காரணங்களுக்காக, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க தூதருக்கு தஞ்சையில் கருப்புக்கொடி காட்டிய நமது தோழர்களை கைது செய்து பொய் வழக்கு போட்டனர்.
ஈழப் போராளிகளுக்கு எதிராக அவதூறுப் பிரச்சாரம் உச்ச நிலையில் இருக்கும் போது, அவர்களை தமிழக மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதில் எதிரிகள் வெற்றி பெற்ற போது, புரட்சி பேசும் ஓடுகாலிகள் உட்பட போலி கம்யூனிஸ்டுகள் இந்த அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, ஈழ விடுதலைக்காக உயிரையே கொடுப்பதாக சபதமேற்றிருந்த திராவிட பாரம்பரியத்தினர் வாய்மூடிக் கொண்டிருந்த போது, சென்னை-சூளைமேடு துப்பாக்கிச் சூடு பற்றிய உண்மையை நாம் மட்டுமே வெளிக்கொண்டு வந்தோம். ”போராளிகள் கைது-ஆயுதப் பறிப்பு”க்கு எதிராக இயக்கம் நடத்தினோம். அதற்காக தஞ்சையில் நமது தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவ்வளவும் தற்பெருமைக்காகவோ, ஏதோ பிரதிபலன் கருதியோ இங்கு எழுதப்படவில்லை. சில கசப்பான உண்மைகளை சொல்வதற்கு முன் குறிப்புகள்தான் இவை. ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் உயிர் கொடுத்து, இரத்தம் சிந்தி தியாகம் செய்து வருவது ஈழத்தை நாயிடம் இருந்து காத்து பேயிடம் தருவதாக முடிந்து விடக்கூடாது. ஈழ மக்களின் தியாகத்தினால் விளையும் பலனை அறுவடை செய்து கொள்வதற்கு ஈழ விடுதலைப் போராளிகள் என்கிற போர்வையில் உலாவும் சமூக பாசிஸ்டுகள், சமூக விரோத அராஜகவாதிகள், கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள் ஆகியோரின் கரங்கள் நீளுகின்றன, ஆனால் சமூக பாசிச இயக்கமான பிரபாகரனின் தலைமையிலான புலிகள் அமைப்பு உட்பட அனைத்து அமைப்புகளிலும் இன்னமும் புரட்சிகர போராளிகள் இருக்கவே செய்கின்றனர். அவர்கள் விடுதலையும் சுதந்திரமும், ஜனநாயகமும் நிலவக்கூடிய ஈழத்துக்காகவே உயிரை பணயம் வைத்துப் போராடுகிறார்கள்.
சக போராளிகளை படுகொலை செய்யும் சமூக பாசிஸ்டுகள், சொந்த மக்களை கொன்று கொள்ளையிடும் சமூக விரோத அராஜகவாதிகள், ருசியா அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கும் தனது இன மக்களை அடகு வைக்கும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள் ஆகிய இரண்டு சக்திகளிடம் ஈழத்தை இழந்து விடக்கூடாது; அப்படி எதுவும் நடந்து விட்டால் விடுதலைக்கும், சுதந்திரத்துக்கும், ஜனநாயகத்திற்கும் ஆன போராட்டத்தை விடாப்பிடியாக ஈழ மக்கள் தொடரவும் வேண்டும். இதை ஈழ மக்களுக்கு சுட்டிக்காட்டி எச்சரிப்பதும் இந்தப் போராட்டத்தில் உண்மையான ஈழப் போராளிகளுக்கு துணை நிற்பதும் அவசியமாகும். இது நமது கடமையாகும்.
ஈழ மக்களுக்கு உண்மையான விடுதலையையும், சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பெறுவதற்காக போரிடும் உண்மையான ஈழப் போராளிகளுக்கு மட்டுமே தமிழக மக்கள் ஆதரவளிக்க வேண்டும். ஈழப் போராளிகள் என்கிற போர்வையில் உலாவும் சமூக பாசிஸ்டுகள், சமூக விரோத அராஜகவாதிகள், சந்தர்ப்பவாதிகளை இனங்கண்டு புறக்கணிக்க வேண்டும், இந்த நோக்கங்களுக்காக அவர்களின் சமூக பாசிச, சமூக விரோத அராஜகவாத, சந்தர்ப்பவாத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துகிறோம். இந்த நோக்கங்களுக்காக தான் சில கசப்பான உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறோம். இப்படி செய்து ஈழ மக்களுக்கு, ஈழ விடுதலைக்கு, பொதுவில் ஈழப் போராளிகள் அனைவருக்கும் எதிரானது என்று அவர்கள் நம் மீது அவதூறு சேற்றை அள்ளி வீசுவார்கள். பிழைப்புவாதிகளாக சீரழிந்து போன திராவிட பாரம்பரியத்தினரும், புரட்சி பேசும் தன்னார்வக் குழுக்களின் தாசர்களும், ஓடுகாலிகளும் உட்பட போலி கம்யூனிஸ்டுகளும் கூட நமக்கு எதிரான பிரச்சாரத்தில் இறங்குவர். ஆனால் இது எந்த வகையிலும் ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போருக்கு எதிரானதல்ல. மாறாக ஈழ மக்களின் உண்மையான விடுதலை, சுதந்திரம், ஜனநாயகத்திற்கு துணை நிற்கும் கடமையாகும்.
தமிழீல விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை ஈழத்து எம்ஜிஆர் என்று வர்ணிப்பது பல வகையில் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இரண்டு பேருமே பாசிசமும் வக்கிரமும் தனிநபர் வழிபாடு கோமாளித்தனமும் கலந்து அரசியல் நடத்துகிறார்கள்.
எம்ஜிஆரை முழு அரசியல்வாதியாக வளர்த்து சித்தாந்தம் மூட்டியவர், சூத்திரதாரியாக இருந்து இயக்கியவர் போலி கம்யூனிஸ்ட் தலைவர் மோகன் குமாரமங்கலம் எம்.ஜி.ஆரின் பாசிச கொடுங்கோல் ஆட்சியை கண்டுகளிக்க வாய்ப்பின்றி சூத்திரதாரி அகால மரணம் அடைந்து விட்டார். அவர் அளவுக்கு அறிவார்ந்தவர்களாக இல்லாவிட்டாலும் அவரது விசுவாச சீடர்களான மக்கள் குரல் டி.ஆர்.ஆரும், சோலையும் எம்.ஜி.ஆரின் முக்கியமான ஆலோசகர்களாக இருக்கின்றனர். போதாக்குறைக்கு மோகன் தாஸ், ரங்காச்சாரி, வி.பி. ராமன் இப்படி ஒரு பெரும் கும்பல்.
அதேபோன்று ஈழத்து எம்ஜிஆரின் சித்தாந்த-அரசியல் சூத்திரதாரியும் ஒரு போலி கம்யூனிஸ்ட் தான். டிராட்ஸ்கியவாதி பாலசிங்கம். போதாக்குறைக்கு தி.க. வீரமணி, காமராஜ் காங்கிரஸ் நெடுமாறன் இப்படி இன்னும் ஒரு பெரும் கும்பல். எனவேதான் எம்ஜிஆர், பிரபாகரன் இரண்டு பேரின் அரசியல் ராணுவ-போலீசு நடவடிக்கைகள் ஒரே மாதிரி இருக்கின்றன. இந்திய ஈழத் தமிழ் மக்களை ஏய்க்க தனிமனித வழிபாடும் கவர்ச்சியும், அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டுவதற்கு பாசிச கொலை வெறியாட்டம். அரசியல் எதிரிகள் என்கிற போது இந்திய-ஈழத் தமிழ் மக்களின் எதிரிகளான பாசிச ராஜீவ்- ஜெயவர்த்தனே கும்பலை ஒழித்துக் கட்டுவதற்கு அல்ல. அவர்களுடன் தான் சமரசம் பேசி காலில் விழுகிறார்கள் அல்லது அதற்கு காலம் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே! தங்களுடைய அதிகாரத்திற்கு இவர்களால் ஆபத்து வந்துவிடும் என்று அஞ்சக்கூடிய அரசியல் எதிரிகளைத் தான் பாசிச கொலை வெறியாட்டம் நடத்தி ஒழிக்கிறார்கள்.
இந்திய-ஈழ மக்கள் மீது தங்கு தடையற்ற தனது அப்பட்டமான பாசிச ஆட்சியை நிறுவுவதற்கான தருணத்தை நோக்கித்தான் எம்ஜிஆரும், பிரபாகரனும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
30, 35 ஆண்டு சினிமா கதாநாயக வேஷத்தின் மூலமும், வெளியில் வள்ளல் வேஷமும் போட்டு தனிமனித கவர்ச்சியைத் திட்டமிட்டு வளர்த்தார் எம்ஜிஆர். பத்தாண்டு கால கொடுங்கோள் ஆட்சியிலே பாசிச வக்கிரத்தைக் காட்டினார். ஆனால் இத்தனையும் நான்கே ஆண்டுகளில் சாதித்து விட துடிக்கிறார் ஈழத்து எம்ஜிஆர் பிரபாகரன். தனி நபர் கவர்ச்சி பேராசையினால் அடுக்கடுக்காக அவர் கட்டவிழ்த்து விடும் பொய்கள். தன்னை ஒரு மாபெரும் அரசியல் ராணுவ தலைவனாக சித்தரிப்பதற்காகவே அவர் வெளிப்படுத்தும் தன்னகங்காரமான பேச்சுக்கள். பிற போராளி அமைப்புகள் மட்டுமல்ல தனது அமைப்பிலேயே கூட கருத்து வேறுபாடு கொண்டவர்களை ஒழிப்பதற்கான அவரது சதிகள், அதை நிறைவேற்றுவதற்காக அவர் கட்டவிழ்த்து விட்டுள்ள படுகொலைகள், இவையே குறுகிய காலத்தில் ஈழத்து எம்ஜிஆர் ஆகிவிட வேண்டும் என்ற பிரபாகரனின் அவசர துடிப்பை காட்டுகின்றன.
இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள நிலைமைகள் தான் எம்ஜிஆருக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான துவக்க முறையை வேறுபடுத்துகின்றன. ஈழ மக்கள் மீது சிங்கள பேரினவாத பாசிச ராணுவ தாக்குதல், ராணுவ ரீதியிலான துவக்கம் பிரபாகரனுக்கு தவிர்க்க முடியாததாகி விட்டது. ராணுவ ஆதிக்கம் பாசிச வெறி, வக்கிரத்திலிருந்து தொடங்கினாலும் எம்ஜிஆரை போன்று அதோடு தனிமனித வழிபாட்டையும் வளர்த்துக் கொள்ளத் தலைப்பட்டார்.
நேருவும், இந்திராவும் முகஸ்துதியாளர்களால் சூழப்பட்டனர். ஆனால் ராஜீவும், எம்ஜிஆரும், பிரபாகரனும் முகஸ்துதியாளர்களால் உருவாக்கப்பட்டனர் என்றே சொல்ல வேண்டும்.
முகஸ்துதியாளர்கள் இயல்பாகவே தமது தலைவரை பிரம்மையிலே மூழ்கடித்து ஆதாயம் தேட முயலுபவர்கள். இறுதியில் தலைவரின் அகால முடிவுக்கும் அவர்களே பாதையும் அமைக்கின்றனர். துவக்க காலத்தில் இருந்தே இத்தகைய முகஸ்துதியாளர்களையும் அவர்களின் பிரம்மைகளையும் வைத்துக் கொண்டு தனிநபர் புகழ் பரப்ப முயலுகிறார் பிரபாகரன்.
பிரபாகரனின் சூத்திரதாரியும், மக்கள் தொடர்பு அதிகாரியும் ஆன பாலசிங்கம், அவரது தனிநபர் புகழ் பரப்பும் பணியைத் தலையாய கடமையாக ஏற்றுள்ளார். ஜூனியர் விகடன் பத்திரிக்கையும் கடந்த ஓராண்டாக இவர்களின் பிரதான ஊதுகுழலாக இருந்து செயல்படுகிறது. இது போதாதென்று பிரபாகரன்- பாலசிங்கம் கும்பல் தமக்கென்று ஒரு பினாமி பத்திரிக்கையான ‘புதுயுகம்’ தொடங்கியுள்ளனர் இந்த எல்லையையும் தாண்டி மஞ்சள் மசாலா பத்திரிக்கையான தேவி முதல் ஆச்சார பத்திரிகையான கல்கி வரை பிரபாகரனின் அட்டைப் படத்துடன் பேட்டிகளைத் தாங்கி வருகின்றன. தனது ஆசை நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டது என்று குதியாட்டம் போடும் பிரபாகரன், இலங்கையிலே கொலை வெறியாட்டத்தையும் முடுக்கி விட்டுள்ளார். சக போராளிகளைத் தேடிக் கொண்டு கொன்றொழிப்பதற்காக வெறிநாயாய் அலைகிறார். ஈழத்தில் தான் நிறுவ இருக்கும் பாசிச சர்வாதிகாரத்திற்கு சிறு எதிர்ப்புக்கூட இருக்கக் கூடாது என்று விரும்புகிறார்.
இந்த காரியங்களை எல்லாம் விரைந்து நிறைவேற்றிடும் அவசர ஆத்திரத்திலே சுயமுரண்பாடான, அடுக்கடுக்கான பொய்களைக் கட்டவிழ்த்து விடுகிறார். எந்த ஊதுகுழலை வைத்துக்கொண்டு தனது தனிநபர் வழிபாட்டை- கவர்ச்சியை தமிழகத்தில் பரப்ப நினைக்கிறாரோ, அதே ஊதுகுழலான ஜூனியர் விகடனே ஈழத்து எம்ஜிஆரின் முகத்திரை கிழிப்பதற்கான ஆதாரமாக விளங்குகிறது. அவரது சுயமுரண்பாடுகளிலே சிக்கிக்கொள்கிறார் அவர். ஆனால் மக்கள் மறந்து விடுவார்கள் என்கிற மமதையிலே தொடர்ந்து இந்த கும்பல் பொய் பிரச்சாரம் செய்கிறது.
பொய்-1 பிரபாகரன் இந்தியா வந்தது எப்படி?
பிரபாகரன் கைது செய்யப்பட்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், ஜூனியர் விகடன் (19-11-86) எழுதியது. “மேலோட்டமாக பார்க்கும் போது தெரியாவிட்டாலும் பிரபாகரன் உள்ளுக்குள் வேதனைப்படுகிறார். (அடடா ஜுவிக்கு என்ன கரிசனம்!) ‘பிரபாகரன் இங்கே தானாக வரவில்லை… அரசு அழைத்துத்தான் வந்தார்’ என்பதை ஒரு போராளி நினைவு படுத்தினார்”. அப்போதைய பத்திரிக்கை அறிக்கையில் பிரபாகரன்-பாலசிங்கம் கும்பல் இப்படித்தான் சொன்னது.
ஆனால் பத்தே நாட்களில் பல்டி அடித்தார்கள். செய்தி தொடர்பு சாதனங்களை தமிழக போலீசார் பறித்துக்கொண்டதும் உண்ணாவிரதம் இருந்த பிரபாகரன் ஜூனியர் விகடனுக்கு (3-12-86) பேட்டி அளிக்கிறார், ”இந்தியாவுக்குள் கொள்ளைப்புற வழியாக வந்தது நாங்கள் செய்த பெரும் தவறு என்று ஒரு கட்டத்தில் வருத்தப்பட்டார் அவர்.”
பொய் 2. பிரபாகரன் சமரசத் திட்டத்தை ஏற்பாரா?
பெங்களூர் சார்க் மாநாட்டின் போது தன்னையே ஈழத்தின் ஏகப்பிரதிநிதி என்று பீற்றிக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு போன பிரபாகரன் எல்லாப் பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுத்தார். ”ஈழ மக்கள் விருப்பம் தான் எனது விருப்பம். ஈழ மக்கள் ஏற்றுக்கொள்ளும் எந்தத்திட்டத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார்.
ஆனால் பத்தே நாட்களில் இதிலும் பல்டி அடித்தார். உண்ணாவிரதம் இருந்தபோது அதே ஜூனியர் விகடன் (3-12-86) பேட்டியில் சொல்கிறார்: ”ஈழ மக்கள் இதுபோன்ற சமரசத் திட்டத்தை ஏற்பார்களானால் நான் விடுதலைப்புலி இயக்கத்தைக் கலைத்துவிட்டு அரசியலில் இருந்தே ஒதுங்கிவிடுவேன்” என்றார். அதாவது பதவியைப் பிடிக்க சமரசத்திற்கான வாய்ப்பு இருப்பதாக பிரபாகரன் எண்ணும்போது பழியை ஈழ மக்கள் மீது சுமத்த முயலுகிறார். அந்த வாய்ப்பு நழுவிவிடும்போது வேறு மாதிரி வீரப்பிரதாபமடிக்கிறார்.
பொய் 3: சிங்கள சிவிலியங்களை பிரபாகரன் கொன்றதில்லையா?
சமீபத்தில் ஆச்சார ஏடு கல்கிக்கு (24-12-86) அளித்த பேட்டியில் ”ஒரு சிங்கள சிவிலியனைக்கூட எங்கள் இயக்கம் கொன்றதில்லை. நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல” என்று பிரபாகரன் கூறியுள்ளார்.
ஆனால் பிரபாகரனின் ஊது குழலான ஜூனியர் விகடன் 4-9-86 இல் பிரபாகரனின் சூத்திரதாரி பாலசிங்கம் நாடு கடத்தப்பட்டது பற்றி எழுதியது அதில் உள்ள வாசகத்தை அப்படியே தருகிறோம்.
“இந்த வருடம் மே மாதம் 14ஆம் தேதி, இலங்கையில் சிங்கள மக்கள் வசிக்கும் அனுராதாபுரத்தில் புகுந்தனர் விடுதலை புலிகள். பிசியான காலை நேரத்தில் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் சிங்களத் தொழிலதிபர்கள், வியாபாரிகள் குடும்பத்தினர்களைச் சுட்டு வீழ்த்தினார்கள்.
சிங்கள குடியிருப்புகளுக்குள் புலிகள் புகுந்தது மக்களிடையே ஒரு பீதியைக் கிளப்பியது. பல மணி நேரம் நடந்த தாக்குதல்களின் போது, போலீஸ் அந்த பகுதியில் எட்டிப் பார்க்கவேயில்லை. போலீசுக்கு போன் செய்த போது ’உயிரைவிட நாங்கள் தயாராக இல்லை’ என்று சொன்னார்களாம். இந்தச் சம்பவத்திற்கு பின், ’தங்களுக்கு பாதுகாப்புதர யோக்கியதை இல்லாத அரசு’ என்று சிங்கள மக்கள் போலீஸ், அரசாங்கத்திற்கு எதிராக ஒரு மக்கள் இயக்கத்தை துவக்கி, எதிர் குரல் கொடுத்தார்கள்.
சிங்கள மக்களை, அரசுக்கு எதிராக கிளப்பி விட, நடந்த இந்த தாக்குதலை நடத்திய விடுதலை புலிகள் எந்த அணி என்று அப்போது தெரியவில்லை. ஆனால், இதைத் திட்டமிட்டது பாலசிங்கம். நடத்தியது பிரபாகரனின் ’தமிழீழ விடுதலை இயக்கம்’ என்று சொல்லப்படுகிறது.”
சுய பாதுகாப்புத் கருதியே ஜூனியர் விகடன் இப்படி பட்டுக் கொள்ளாமல் எழுதுகிறது. மற்றபடி அனுராதாபுரம் சிங்கள சிவிலியன்களை பிரபாகரனின் புலிகள் கடித்து குதறியது ஊரறிந்த உண்மை. ஆனால் இதை திட்டமிட்டது பாலசிங்கம் அல்ல. இந்திய இரகசிய உளவுத்துறையான ரா (RAW) திட்டமிட்டு ஆயுதங்கள் வழங்கித் தூண்டிவிட்டது. பிற போராளி அமைப்புகள் மறுத்துவிட்டன. ஆனால் புலிகளை ஏவிவிட்டது பிரபாகரன்-பாலசிங்கம் கும்பல் தான். இதற்காக ரகசியமாகப் பெருமையடித்துக்கொள்ளும் இந்த கும்பல் வெளியில் புளுகுகிறது.
பொய் 4. புலிகள் தமிழகத்தில் ரகளை செய்தது இல்லையா?
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஈழப் போராளிகளை கைதுசெய்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்த போது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்குக்கு அவர்களால் ஆபத்து ஏற்பட்டது என்கிற சாக்கு சொன்னார்கள் அரசினர். சென்னை சூளைமேடு துப்பாக்கிச் சூடு காரணம் காட்டப்பட்டது. அப்போது எல்லாப் பத்திரிக்கை அறிக்கைகள், பேட்டிகளிலும் ”சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளை ஒதுக்குங்கள, நாங்கள் இதுவரை தமிழக சட்டம் ஒழுங்குக்கு எதிராகப் போனதில்லை. எங்கள் அமைப்பினர் கட்டுப்பாடானவர்கள்” என்று சொன்னார் பிரபாகரன்.
அவரது ஊதுகுழல் ஜூனியர் விகடன் (19-11-86) எழுதியது. ”கட்டுப்பாடான பிரபாகரன் இயக்கத்தினர், தமிழ்நாட்டில் இதுவரை எதுவும் செய்ததாக கேள்விப்பட்டதில்லை. இவர்களால் மக்கள் அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்ட நிகழ்ச்சியே நடந்தது கிடையாது” என்று சான்றிதழ் வழங்கியது.
ஆனால் தமிழகத்தில் ரகளை செய்வதைத் தொடங்கி வைத்தவர்களே புலிகள்தாம். 19-11-86 அதே ஜூனியர் விகடன் அதே பக்கத்தில் அடுத்த பத்தியிலேயே எழுதுகிறது, ”சில ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக பாண்டி பஜாரின் நடந்த ஒரு கோஷ்டி மோதலில் ’விடுதலைப்புலி’ என்பதெல்லாம் தெரியாமல் இவரை நகர போலீஸ் கைது செய்தது. போலீஸ் நிலையத்தில் பிரபாகரன் அடிக்கப்பட்டார்.”
இதிலே பாருங்கள் ’விடுதலைப்புலி’ என்பதெல்லாம் தெரியாமல் போலீசார் இப்படி நடந்தார்கள். தெரிந்திருந்தால் நடந்திருக்க மாட்டார்கள்.
தியாகராயநகரில் பாண்டி பஜார் சென்னையில் நெரிசலும் சாரி சாரியான போக்குவரத்தும் நிறைந்த கடைவீதிகளில் ஒன்று. மக்கள் நிறைந்துள்ள கடை வீதிகளில் வைத்து பிரபாகரன் தனது அமைப்பிலிருந்து முகுந்தன் என்கிற உமா மகேஸ்வரன் என்ற இன்னொரு தலைவரைச் சுட்டுக்கொள்ள துப்பாக்கிச் சூடு நடத்தினார். இது ஜூனியர் விகடனுக்கும் பிரபாகரனுக்கும் ரகளையாக, மக்கள் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நிகழ்ச்சியாகத் தெரியவில்லை.
பொய் 5. பிரபாகரன் உத்தம சிலர் சுத்தம் சுயம்பிரகாசரா?
பிரபாகரன் உத்தமர், சுத்தம் சுயம்பிரகாசர், வஞ்சகம் இல்லாத நேர்மையாளர் என்று தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறது ஜூனியர் விகடன். (19-11-86) “எதிலும் அப்படி ஒரு பர்ஃபெக்க்ஷன் எதிர்பார்க்கிறார் பிரபாகரன்… இந்த அணுகுமுறை அவரது எல்லா செயல்களிலும் எதிரொலிக்கிறது” என்று தூக்கி வைத்துக்கொண்டு ஆடியது.
“என் இயக்கத்தில் யாராவது தெரிந்து தவறு செய்தால் அவர்களை நான் மன்னிப்பதில்லை. ஆகவே இங்கே இருப்பவர்களுக்கு தவறு செய்ய நிறையவே துணிச்சல் தேவைப்படும்.” (ஜூவி.19-11-86) என்று பீற்றிக்கொள்கிறார் பிரபாகரன். முகுந்தனை எதற்காக சுட்டுக் கொள்ள முயன்றார்? புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டின்படி யாரும் மணம் செய்து கொள்ளக்கூடாது என்பது முன்பிருந்த விதி. அதைமீறி ஊர்மிளா என்கிற பெண்ணை மணந்ததற்காகத்தான் முகுந்தனைச் சுட்டுக்கொண்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முயன்றார் பிரபாகரன். ஆனால் பின்னர் பிரபாகரனே இயக்க விதியை மீறி மணம் செய்துகொண்டு விட்டு விதியையும் மாற்றி விட்டார்.
பொய் 6. உண்ணா விரதம் இருப்பது பிரபாகரனின் கொள்கைப்படி சரியா?
சமீபத்தில் ஈழப் போராளிகளின் ஆயுதங்களோடு செய்தித் தொடர்பு சாதனங்களையும் தமிழகப் போலீசார் பறிமுதல் செய்தபோது உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினார் பிரபாகரன். போராளி உண்ணாவிரதமிருப்பது சரியாவென்று கேட்ட (எல்லா பத்திரிகைகளிலும் வந்தது) நிருபர்களிடம் ஐரிஷ் போராளிகள் உண்ணாவிரதமிருந்ததைப் போன்று தானுமிருந்ததாக நியாயப்படுத்தினார். 24-12-86 கல்கி பேட்டியிலும் இதை உறுதிப்படுத்தினார்.
ஆனால், சில கோரிக்கைகள் வைத்து யாழ் மாணவர்கள் அங்கு உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது ”உண்ணாவிரதமிருப்பது கோழைத்தனம்” என்று கூறி, போராட்டத்தை கலைப்பதற்காக உண்ணாவிரதம் இருந்த பெண்களைப் புலிகள் இயக்கத்தினர் கடத்திப் போனார்கள். அப்படிக் கடத்திச் செல்லப்பட்ட பெண்களில் ஒருவரான மதிவதனியைத்தான் பிரபாகரன் மணந்து கொண்டார்.
பொய் 7. புலிகள் உயிரோடு சிக்க மாட்டார்களா?
பேட்டி காணச் சென்ற ஜூனியர் விகடன் நிருபர் பிரபாகரன் எதிரில் இருந்த மருந்து குப்பியைப் பார்த்து ”அது என்ன?” என்று கேட்டாராம். ”இதில் தான் எனது இயக்கத்தவர்கள் சயனைடு நிரப்பிக் கழுத்தில் மாட்டிக் கொண்டிருப்பார்கள்… எதிரிகளிடம் சிக்கினால் சயனைடை வாயில் போட்டுக் கொண்டு உயர்த்தியாகம் செய்வார்கள்… பலர் செய்துமிருக்கிறார்கள்.”
இதே விசயத்தை 4-9-85 இல் ஜூனியர் விகடன் எழுதியது. ”பாலசிங்கத்தினுடைய தமிழீழ விடுதலைப்புலிகள் மட்டும் தாக்குதல்களில் உயிரோடு சிக்கியதில்லை. பிணமாகவோ அல்லது பிடிபட்டவுடன் சயனைடை முழுங்கி உயிரை விடுவார்கள். இது பாலசிங்கம் புலிகளுக்குக் கற்றுக் கொடுக்கும் அரிச்சுவடி போர் முறை.”
போராளிகளின் தியாகத்தை நாம் குறைத்து மதிப்பீடு செய்யவில்லை. எல்லா அமைப்புகளின் போராளிகளும் தான் தியாகம் செய்கிறார்கள். ஆனால் பிரபாகரன் இயக்கத்தினர் பற்றி மட்டும் இப்படி ஊதிப் பெருக்குவது ஏன்? உண்மையில் அனைவரும் இந்தப் படிக்கே இருக்கிறார்களா?
இல்லை. உயிரோடு பிடிக்கப்பட்ட புலிகளின் பட்டியல் ஒன்றை சிங்கள அரசிடம் கொடுத்து பேச்சு வார்த்தைகளுக்கு நிபந்தனையாக அவர்களை விடுதலை செய்யும்படி கோருகின்றனர். (இந்தியன் எக்ஸ்பிரஸ் 29- 12- 86) அது மட்டுமல்ல, புலிகள் பிடித்து வைத்திருந்த இரண்டு சிங்கள ராணுவ கைதிகளை இரண்டு புலிப்படை கைதிகளுக்கு மாற்றாக டிசம்பர் 19 அன்று பரிமாறிக் கொண்டுள்ளனர். அவர்களின் ஒருவர் ”மேஜர்” அருணா. ’86 ஏப்ரல் 27ஆம் தேதி மட்டக்களப்பு பகுதி புலிகளின் தளபதி ”மேஜர்” அருணா கைது செய்யப்பட்டார். இப்போது விடுதலை ஆகியுள்ளார். இந்துவின் 20-2-86, கொழும்பு சன் பத்திரிக்கையில் 21-12-86, பி.பி.சி ஒலிபரப்பு 21-12-86 அன்று இது உறுதிப்படுத்தப்பட்டது.
எதிரியிடம் சிக்கினால் உறுதியாக இருந்து இரகசியங்களைக் காப்பது தான் புரட்சியாளர்களுக்குரிய கடமையும் பயிற்சியும். விதிவிலக்காகவே தற்கொலை நடக்கிறது. ஆனால் இதையே விதியாக்கிக் குட்டி முதலாளித்துவ கோழைகளிடம் பெயர் பெறுவதற்கு ஊதிப் பெருக்குகிறது பிரபாகரன் பாலசிங்கம் கும்பல்.
பொய் 8. “டெலோ” வை தாக்கியதற்கான முகாந்திரம் உண்மையா?
ஈழப் போராளிகளின் இன்னொரு அமைப்பான ”டெலோ” வைத் தாக்கி அதன் தலைவர் சிறீ சபா இரத்தினம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகளைப் படுகொலை செய்தது பிரபாகரன் படை. இதில் புலிகள் பலரையும் பலி கொடுத்தது. சமூக விரோத நடவடிக்கைகளில் ”டெலோ” ஈடுபட்டதாலும், மக்கள் கேட்டுக் கொண்டதாலும் இந்த இராணுவ நடவடிக்கை எடுத்ததாகச் சொன்னார்கள். ”டெலோ” மீதான இராணுவ நடவடிக்கைக்கு முன்னோடியான சம்பவமாக ஜூனியர் விகடன் (21.5.86) பேட்டியில் பாலசிங்கம் ஒரு சம்பவத்தை சொன்னார்.
“86 ஏப்ரல் 27ஆம் தேதி புலிகள் பயணம் செய்த படகை இலங்கை இராணுவம் அளித்தது. அதில் இறந்து போன சிறீசபா ரத்தினத்தின் நெருங்கிய உறவினரும், பிரபாகரனின் வலது கரங்களில் ஒருவரும், மட்டக்களப்புப் பகுதி புலிகளின் தளபதி மேஜர் அருணா கொல்லப்பட்டார். அவரது மறைவுக்கு யாழ் மக்கள் துக்க தினம் கடைபிடித்தார்கள். இது ”டெலோ” வுக்குப் பிடிக்கவில்லை. அதற்கு சில நாட்கள் முன்பு ”டெலோ” படகு ஒன்று இலங்கை இராணுவத்தினால் அழிக்கப்பட்டது. மறுநாள் அதற்குத் துக்கதினம் கடைபிடிக்கும்படி நகர மக்களை ”டெலோ” கட்டாயப்படுத்தியது. ஆனால் துக்க தினம் பிசுபிசுத்தது. இதனால் ”டெலோ” வின் ஆத்திரம் பொதுமக்கள் மீது திரும்பியது. இதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப் போன கேப்டன் லிங்கம் உட்பட 3 பேரை ”டெலோ” வினர் சுட்டுக் கொன்றனர். எனவேதான் டெலோவின் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றார்.
ஆனால் எந்த மேஜர் அருணா இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டதாகச் சொல்லிக்கொண்டு துக்கதினத்திற்கு புலிகள் அழைப்பு விடுத்தனரோ, அவர் சாகவில்லை. அப்போது உயிரோடு சிறைபிடிக்கப்பட்டார். இப்போது கைதிகள் பரிமாற்றத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார். (முந்தய ஆதாரங்கள்) எனவே புலிகள் டெலோவை தாக்கி கொலை வெறியாட்டம் போட்டதெல்லாம் சயனைடு கற்பனையின் விளைவு. அந்த கடற் சண்டையில் மேஜர் அருணா காணாமல் போய்விட்டதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தங்கள் தளபதி மேஜர் அருணா புலிகளின் இயக்க இராணுவ விதிப்படி சயனைட் விழுங்கி இறந்திருப்பார் என்கிற கற்பனையில் யாழில் துக்கதினம் கடைபிடித்தனர் புலிகள். இந்தச் சம்பவத்தின் வெற்றியினால் பொறாமைப்பட்டார்கள் ”டெலோ” வினர் என்று சொல்லி பல போராளிகளைப் படுகொலை செய்துள்ளனர்.
பொய் 9. ”டெலோ” மீதான தாக்குதல் தான் தொடக்கமா?
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டெலோ மீது தொடுத்த கொலை தாக்குதல்தான் சக போராளி அமைப்பின் மீதான முதல் தாக்குதல்; அவர்கள் கொலை, கொள்ளை போன்ற சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் இந்த இராணுவ நடவடிக்கை என்று பிரபாகரனும் அவரது ஊதுகுழலான ஜூனியர் விகடனும் (21.5.86) படுகொலைகளை நியாயப்படுத்தினர்.
ஆனால் சகப்போராளிகளையும் பிற அமைப்பினரையும் தாக்கிக் கொள்வதை தொடர்ந்து செய்து வருகிறவர்தான் பிரபாகரன். ”டெலோ” மீதான இராணுவ தாக்குதலுக்கு முன்பே மைக்கேல் செல்வம், சுந்தரம், இ.பி.ஆர்.எல்.எப்-இன் ரீகன், அமின் டெலோவின் ஓபராய் தேவன், மனோ மாஸ்டர், ”டெலி”யின் ஜெகன் ஆகியோரைப் பிரபாகரனின் புலிகள் கடித்துக் குதறிக் கொன்றிருக்கின்றனர்.
பிரபாகரனின் ஊது குழலாக மாறுவதற்கு முன் ஜூனியர் விகடன் (1-1-86) எழுதியது ”சமீபத்தில் பத்து நாட்களுக்கு முன்பு (86 டிசம்பர் இறுதியில்) யாழ்ப்பாணத்திற்கு அருகில் பிரபாகரன் கோஷ்டியைச் சேர்ந்தவர்களுக்கும் உமா மகேஸ்வரன் கோஷ்டியைச் சேர்ந்தவர்களுக்கும் பெரிய மோதலே நடந்திருக்கிறது. சென்னையில் பாலசிங்கம் வீட்டில் ’டைம் பாம்’ வெடித்தது… அது யாழ்ப்பாணம் கோஷ்டி மோதலை அடுத்து நடந்த விஷயமாக இருக்கலாம் என்று கூட போலீஸ் சந்தேகிக்கிறது!”
பொய் 10. போலீசு புலிகளை மிரட்டுவது முதல் முறையா?
‘86 நவம்பரில் ஈழப் போராளிகளை கைது செய்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்தது. ஈழப் போராளிகளை எப்படி தமிழக போலீஸ் மிரட்டுவதும், நிர்பந்திப்பதும் முதன்முறையாக நடப்பதை போல பிரபாகரன் சொல்லுகிறார். சென்னை- சூளைமேடு துப்பாக்கிச் சூடு தான் தமிழக போலீஸ் நடவடிக்கைக்கு காரணம் என்றும் பல பத்திரிகை அறிக்கைகளில் சொல்லுகிறார்.
ஆனால் புலிகளிடமிருந்து ஆயுதங்களைப் பறிப்பதாக பலமுறை தமிழக போலீஸ் மிரட்டி வந்திருக்கிறது. அதற்கெல்லாம் காரணமாக இருந்தது பிரபாகரன் கும்பல் தான். இதற்கும் ஆதாரமாக இருப்பது ஜூனியர் விகடன் (1-1-86) “சில வருடங்களுக்கு முன்பு தி.நகரில் விடுதலை புலிகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது, முகுந்தனை பிரபாகரன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நினைவிருக்கிறதா? அதற்குப் பிறகு அவர்களிடம் இருந்து ஆயுதங்களை உடனே ‘சரண்டர்’ செய்து விடுமாறு சென்னை போலீஸ் உத்தரவு போட்டது. ‘இனிமேல் இம்மாதிரி மோதல்கள் நடக்காது’ என்று விடுதலைப்புலிகள் உத்திரவாதம் கொடுத்ததால் போலீசு சும்மா இருந்து விட்டது. ஆனால் இவர்களுக்குள் நடக்கும் மோதல்கள் ஓய்வதாக இல்லை. அண்மையில் ஒரு கோஷ்டியைச் சேர்ந்த வசந்த் என்ற விடுதலைப் புலி சென்னையில் கடத்தப்பட்டார். அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்! (இது முகுந்தன் கோஷ்டியில் நடந்தது) இப்படி கடத்தலும், கொலையும் நடந்துதான் வருகின்றன. பாலசிங்கம் வீட்டில் ‘பாம்’ வெடித்த பிறகு தமிழக போலீஸ் கடும் நடவடிக்கை எடுத்திருக்கிறது. விடுதலை புலிகளுக்கு ஆயுதங்களை ஒப்படைத்து விடுமாறு மீண்டும் இரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.”
பொய் 11. ஈ.பி.ஆர்.எல்.எப் மீதான தாக்குதலுக்கு என்ன காரணம்?
சென்னை- சூளைமேடு துப்பாக்கிச் சூடு சம்பவம் தவிர இரண்டு காரணங்களை சொல்கிறார் பிரபாகரன். ‘ஈழத்தில் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈபிஆர்எல்எப் ஈடுபட்டது. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை தாக்கி வருகிறது’. இவை இரண்டுமே அப்பட்டமான பொய் என்று நிரூபிக்கப்பட்டு விட்டன.
யாழ் பல்கலைக்கழக மாணவர் விஜிதரனை பிரபாகரனின் புலிகள் கடத்தினர். அதை கண்டித்து யாழ் மாணவர்கள் உண்ணாவிரதமும் ஊர்வலமும் நடத்தினர். அவர்களையும் புலிகள் தாக்கிக் கலைத்தனர். யாழ் பத்திரிகைகளில் இது வந்திருக்கிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் (17- 12-86) லண்டன் பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிலையமும் இதை உறுதி செய்தது. ஆனால் மக்கள் தான் தடுத்தனர் என்கிறார் பிரபாகரன். இங்கே போராட்டங்களை ஒடுக்குவதற்காக அதிமுக குண்டர்களை ஏவி விடும் எம்ஜிஆர் கூறுவதே மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பது தானே! அதையே செய்கிறார் ஈழத்து எம்ஜிஆர் பிரபாகரன்.
கிழக்கு யாழ்ப்பாணத்தில் மக்கள் ஆதரவு பெற்று பலமாக இருப்பது ஈபிஆர்எல்எப்-பும் ஈரா-சும் தான். அவர்கள் தான் மலையக மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவு பெற்றவர்கள். யாழ்ப்பாணத்து பிற்போக்கு மேல் சாதிக்காரர்கள், குறிப்பாக புலிகளின் ஆதிக்கத்தை கண்டு முஸ்லிம்கள் உட்பட கிழக்கு மாகாண தமிழர்கள் அஞ்சுகின்றனர். எனவே தான் வடக்கு மாகாணத்துடன் இணைய தயங்குகின்றனர். 30-12-86.
இது என்ன தனிநபர் தாக்குதலாகவே போய்க்கொண்டிருக்கிறது? அரசியல்- சித்தாந்த ரீதியில் விமர்சிப்பது தானே மார்க்சிய-லெனினிய அணுகுமுறையாக இருக்கும்? இப்படி சொல்லித்தான் தமது தவறான நடத்தைகளுக்கு தகுந்த பதில் சொல்ல முடியாதவர்கள் நழுவிக் கொள்ள முயல்கிறார்கள். அரசியல்-சித்தாந்த விமர்சனம் என்கிற பெயரில் வெறுமனே எழுத்துச் சண்டை போட்டுக் கொண்டிருங்கள், நாங்கள் எதையாவது எழுதி வைத்துக்கொண்டு பேசிக்கொண்டு அதற்கு எதிரான நடத்தையில் இருக்கிறோம். நடத்தை வேறு-அரசியல் சித்தாந்தம் வேறு. அதை மட்டும் கண்டு கொள்ளாதீர்கள் என்று உபதேசம் செய்கிறார்கள். தனிநபர்கள் அமைப்புகளின் நடத்தைகள், அவர்களின் அறிக்கைகள் பேச்சுகளை உரசிப் பார்க்கும் சோதனை கற்கள்.
தேசிய பத்திரிகைகளின் செய்தி இது.
பொய் 12. புலிகள் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது இல்லையா?
முன்பு ”டெலோ” வையும் இப்போது ஈ.பி.ஆர்.எல்.எப்-பையும் தாக்கிய போது பிரபாகரனின் முக்கிய குற்றச்சாட்டு அவர்கள் கொலை கொள்ளை சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள், அதை அனுமதிக்க முடியாது, அவர்களை தண்டிக்கிறோம் என்பது தான். ஏதோ பிரபாகரனின் புலிகள் இத்தகு நடவடிக்கைகளில் ஈடுபடாத உத்தமர்கள் போல நடிக்கிறார்கள்.
முன்பே கூறியது போல பல கொலைகள் புரிந்துள்ள பிரபாகரன் பல கொள்ளைகளிலும், கட்டாய கப்பம் வசூலிப்பதிலும் ஈடுபட்டுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு இப்படி வசூல் செய்வதை எதிர்த்த லாரி சொந்தக்காரர்கள் ஈழத்தில் வேலை நிறுத்தம் செய்தனர். புலிகள் மன்னிப்பு கூறிய பிறகே அதை முடித்துக் கொண்டனர். தமிழ் அகதிகளிடம் கட்டாய நிதி வசூலித்ததற்காக புலிகளின் பிரதிநிதிகள் மேற்கு ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல் குற்றத்திற்காக புலிகளின் நிதிப் பொறுப்பாளர் பிரான்சில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சமூக விரோத நடவடிக்கைகளுக்காக சிறு அமைப்புகளை தடை செய்து ஈபிஆர்எல்எப், டெலோ மீது தாக்குதல் தொடுத்ததாக சொல்லும் பிரபாகரன் கும்பல் 30 பேரை கொன்ற மீனம்பாக்கம் விமான நிலைய குண்டுவெடிப்பு மற்றும் வேதாரண்யம் மக்கள் மீதான துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களுக்கு காரணமான தமிழ் ஈழம் ராணுவத்தைத் (டி.இ.ஏ) மட்டும் யாழ்ப்பாணத்தில் தாராளமாக அனுமதிக்கிறது. காரணம், அது பிரபாகரனின் வரலாற்றில் தனி நபர்களின் பாத்திரம் பற்றிய இயக்க இயல் கண்ணோட்டம் நமக்கு உண்டு. சரித்திரம் சில நாயகர்களை உருவாக்குவதைப் போலவே சரித்திரத்தின் போக்கை மாற்றும் பங்கும் இவர்கள் வகிக்கின்றனர். அப்படி சரித்திரத்தில் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின். மாவோ போன்ற மாபெரும் ஆசான்களும் உண்டு. உழைக்கும் மக்களின் உத்வேகத்தை தூண்ட அவர்களின் பாத்திரத்தைச் சொல்கிறோம்.
இதற்கு நேர் எதிராக சரித்திரத்தில் முசோலினி, ஹிட்லர், இடி அமீன், செயவர்த்தனே, எம்ஜிஆர், பிரபாகரன் போன்ற பாசிஸ்டுகளும் உண்டு, உழைக்கும் மக்கள் இவர்களுக்கு எதிராக விழிப்புணர்வு பெற இவர்களின் பாத்திரத்தையும் சொல்கிறோம்.
பினாமி அமைப்பு, நேரடியாக ஈடுபட்டால் குட்டு வெளிப்பட்டு போகும் என்பதற்காக இப்படி பினாமிகள் மூலம் சமூக விரோத நடவடிக்கைகளை நடத்துகிறது பிரபாகரனின் புலிப்படை.
பொய் 13. பிரபாகரனின் லட்சியம் சுதந்திர ஈழமா?
“சுதந்திர ஈழம் தான் தனது லட்சியம். இந்தியா உட்பட எந்த வெளி ஆதிக்கத்தையும் ஏற்கமாட்டோம். ”டெலோ”வைப் போலவே ஈ.பி.ஆர்.எல்.எப்-பும் இந்தியாவைச் சார்ந்து நிற்பதாலேயே தாக்குகிறோம்“ என்று பத்திரிகைகளுக்கு ஈழத்திலிருந்து பேட்டி கொடுக்கிறார் (29-12-86 தினசரிகள்) புலிகளின் தளபதி கிட்டு என்கிற கிருஷ்ணகுமார்.
ஜெயவர்த்தனே அரசுக்கு அடுத்து பரம எதிரியாக கருதும் அமெரிக்காவின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க சபைகளின் பிரதிநிதித்துவ சபைகளின் துணை கமிட்டி தலைவர் ஸ்டீபன் கோலாரெஸை பிரபாகரன்-பாலசிங்கம் குழு சென்ற மாதம் இரகசியமாக சென்னையில் சந்தித்துள்ளது. சந்திப்பு பற்றிய இரகசியம் அம்பலமாகியும் கூட அந்த கும்பல் காரணத்தைச் சொல்லவில்லை. இஸ்ரேலிய உலவுப் படையுடன் பாலசிங்கம் இரகசிய தொடர்பு வைத்திருக்கிறார் என்கிற செய்தியையும் அவர்கள் மறுக்கவில்லை.
– ஆர்.கே. (புதிய ஜனநாயகம் – 1987 ஜனவரி 1-15)