நூல் அறிமுகம்:
பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்

”பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்; ஒரு பிற்போக்கு தத்துவம் பற்றிய விமர்சன ஆய்வுரை” என்ற இந்த நூலை லெனின் 1908ல் பிப்ரவரி மாதம் தொடங்கி அக்டோபர் வரை ஜெனிவா, லண்டனிலிருந்து எழுதினார். ஒன்பது மாதங்களாக லெனின் மேற்கொண்ட பிரம்மாண்டமான, ஆக்கப்பூர்வமான விஞ்ஞான ஆய்வின் விளைவே இந்த நூல். லெனின் இந்த நூலில் மேற்கோளாக் காட்டுகிற அல்லது குறிப்பிடுகிற ஆதாரங்களின் பட்டியல் 200 தலைப்புகளையும் மீறிச் செல்கிறது.

ஜெனிவாவிலிருந்து பாரிஸுக்கு 1908ல் டிசம்பரில் சென்ற லெனின் இந்நூலின் படிவங்களை பிழைதிருத்தும் வேலையை 1909 ஏப்ரல் மாதம் வரை அங்கு செய்தார். மிகுந்த சிரமங்களுக்கிடையே ரஷ்யாவில் இது வெளியிடப்பட்டது. இந்நூல் விரைவாக வெளிவர வேண்டும் என்று லெனின் வலியுறுத்தினார். இலக்கிய அக்கறையுடன் மட்டுமல்லாமல் தீவிரமான அரசியல் கடமைகளும் அக்கறையுடன் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். லெனினது இந்த சிறந்த படைப்பு பல நாடுகளில் பிரபலமாயிற்று.1909 ஆம் ஆண்டு மே மாதத்தில் 2000 பிரதிகளைக் கொண்ட ஒரு பதிப்பாக இந்நூல் வெளியானது.

லெனினின் கடுமையான உழைப்பில் உருவான இந்நூல் வெளியாகி 116 ஆண்டுகளாகிவிட்டது. லெனின் குறிப்பிட்டது  போல இலக்கிய கடமைகள், அரசியல் கடமைகள் தாங்கி வரும் இந்நூல் இன்றைக்கு முக்கிய தேவையாக இருக்கிறது.

லெனின் எழுதிய இந்நூல் சற்றுக் கடினமானது. இதை புரிந்துக் கொள்வதற்கு நாம் சற்று சிரமப்பட வேண்டும். காரணம் இது தத்துவம் பற்றிய நூல். அதுவும் தத்துவத்தில் அறிவு பெறுவது எப்படி என்ற ஒரு பிரிவைச் சார்ந்தது. இது மிக நுணுக்கமான ஒரு பிரிவு. மிகவும் கடினமான பிரிவும் கூட. இது ’அறிவுத் தோற்றவியல்’ எனப்படுகிறது. இது பற்றி பல தத்துவவாதிகள் பல கொள்கைகளை உருவாக்கியுள்ளனர். இந்தியாவில் பல தத்துவவாதிகள் இது பற்றி ஏராளமாக எழுதி உள்ளனர். மேலை நாடுகளிலும் அவ்வாறே.

நமது தத்துவவாதிகள் அறிவைப் பெறும் வழிகளாக மூன்றைக் கொள்கின்றனர். ஒன்று பிரத்தியட்சம். இதில் நமது ஐம்பொறிகள் வாயிலாக கிடைப்பது அறிவு எனப்படுகிறது. இரண்டாவது அனுமானம் என்பது. ஒன்று இருப்பதைக் கொண்டு மற்றொன்று இருப்பதாகக் கூறுவது. மூன்றாவது ஆப்தவாக்கியம். இது நமக்கு முன் சென்றவர்கள் கூறியது ஆகும். இவற்றைக் காண்டல் கருதல் உணர்தல் என்றும் கூறுவர். இவ்வாறு நமது தத்துவவாதிகள் அறிவு பெறும் வழிகளை வகைப்படுத்தினர்.

இதே போன்ற நிலை மேலையத் தத்துவத்திலும் வேறு விதமாக உள்ளது அதில் பொருள்கள் மூலமாக கிடைப்பது மட்டும் தான் உண்மை என்று கூறும் தத்துவப் போக்கினை அனுபவவாதம் என்று அழைக்கின்றனர். இது பற்றிய விரிவான ஆய்வுதான் லெனினின் இந்த நூல்.

இந்த நூலின் மையக் கருத்தைக் காண்பதற்கு முன்னர் லெனின் கூறும் அனுபவவாத விமர்சனம் தொடர்பாகச் சிலரைப் பற்றியும் காண வேண்டியுள்ளது. இதில் முக்கியமானவர்கள் அவெனரியஸ், ஏர்னஸ்ட் மாக், போக்தனோவ் ஆகியோர்.

இவர்களில் அவெனரியஸ் ஜெர்மானியத் தத்துவவாதி (1843-1896). இவரது கருத்துப்படி விஞ்ஞான ரீதியான தத்துவம் என்பது பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்பவனவற்றைச் சாராமல் இருக்க வேண்டும் என்பதாகும். இவர் அனுபவவாத விமர்சனம் என்ற கொள்கையை உருவாக்கியவர். சுத்த அனுபவத்தின் மூலம் உலகம் பற்றிய ஓர் இயல்பான கருத்தை உருவாக்க வேண்டும்; இதனைப் பெற வேண்டும் என்றால் அனுபவத்தின் மூலம் பெறும் தகவல்களை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்ற குறுக்கீடு இருக்க கூடாது; ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளே இருக்கும் அனுமானங்களின் மாறுபட்ட வடிவமே அறிதலின் உள்ளடக்கம்; எந்த விதமான இடையூறு அல்லது குறுக்கீடு இல்லாத சுத்த அனுபவத்தினையே அறிவின் அடித்தளமாகக் கொள்ள வேண்டும் என்றார் அவெனரியஸ்.

இவருக்கு அடுத்தபடியாக உள்ளவர் ஏர்னஸ்ட் மாக் என்பவர் (1783-1816). ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர், தத்துவஞானி. இவர் அனுக்களே இல்லை என்று கூறும் அளவுக்கு சென்றார். விஞ்ஞான விபரங்களுக்கான அடிப்படை அனுபவம் மட்டும் தான் என்ற கண்ணோட்டமுள்ள மாக் பொருள்முதல்வாதத்தை மறுத்தார். இவர் ஹியூமின் தத்துவத்தைப் பின்பற்றியவர்.

போக்தனோவ் என்பவர் ஒரு ரஷ்யர் (1872-1928). இவர் ஏர்னஸ்ட் மாக்கின் கொள்கையை ஆதரித்தார். ஆனால் மாக்கிடமிருந்து மாறுபட்டு அனுபவ ஒருமைவாதியாக மாறினார். இவர் மார்க்சிய இயங்கியலை மறுத்தார். இவர் அனுபவங்களை மூலகங்கள் என்று அழைத்தார். புரோகலிஸ்ட் இயக்கம் என்ற ஒன்றை போக்தனோவ் ஆரம்பித்தார். இதன்படி முதலாளித்துவ கலாச்சாரம் முழுவதையும் அழிக்க வேண்டும் என்று கூறினார். லெனின் இதை அராஜகவாதம் எனக் கூறி இதை எதிர்த்தார். இது தான் 1890 லிருந்து 1910 வரையில் ரஷ்யாவில் நிலவிய கருத்தியல் ஆகும்.

இயங்கியல் பொருள்முதல்வாதியான லெனினுக்கு இவற்றை மறுக்க வேண்டிய சூழல் இருந்தது. ஓர் அரசியல்வாதி எல்லாத்துறைகளிலும் செயல்பட வேண்டும் என்பது லெனினியம். தத்துவப் பிடிப்பு இல்லாத தலைமை கட்சியைச் சீரழித்து விடும் என்பது லெனினது கருத்து. 1905 ஆம் ஆண்டில் முதல் புரட்சி தோல்வியடைந்த பிறகு ரஷ்ய கருத்து உலகிலும் அரசியலிலும் பெரும் குழப்பம் இருந்தது.  எந்தப் பாதையில் செல்வது, புரட்சியை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு நகர்த்துவது என்ற வாதங்கள் அங்கு அதிகமாக இருந்தன. இந்தக் குழப்பங்களுக்கிடையே லெனின் மார்க்சியப் பாதையை உறுதியாகப் பின்பற்றி மார்க்சியத்தைக் குழப்புவர்களுக்குப் பல இடங்களில் பதில் கொடுத்தார். அதன் சிகரமாகத் தான் இந்த நூலை எழுதினார். இந்த நூல் மார்க்சியம் பயில்பவர்களுக்கு பல தெளிவுகளை ஏற்படுத்தும் நூலாக அமைந்துள்ளது.

நூல்: பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்
பக்கங்கள்: 475
விலை: ரூ.500
ஆசிரியர்: லெனின்
தமிழில்: எஸ்.தோதாத்ரி – மணியம்
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம், சென்னை-89
கைப்பேசி: 9841775112

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன