“பன்றியின் காதிலிருந்து வெள்ளிக் கொடியெடுக்க முடியாது” என்றொரு சீனப் பழமொழியிருக்கிறது. ஆனால் முடியும் என்று தனது எட்டாவது பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியிருக்கிறார். அதாவது மக்கள் நலனில் அக்கறை கொண்டு, அவர்களது சேமிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு, இந்த பட்ஜெட்டில் காவி கார்ப்பரேட் பாசிச மோடி அரசு வரிச்சலுகைகளை அறிவித்திருக்கிறது என நம்மை நம்பச் சொல்கிறார்கள். காதில் பூச்சுற்றலாம், பூந்தோட்டத்தையே சுற்ற முடியாது.
2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே இந்திய நடுத்தர வர்க்கத்திற்கு வரிச்சலுகைகள் வழங்கப்படுவது குறித்த செய்திகள் பெரிய அளவில் பரப்பப்பட்டன. நுகர்பொருள் விற்பனை நிறுவனங்களான மாரிகோ, பார்லே போன்றவைகளின் நுகர்வு விகிதம், அதிலும் குறிப்பாக நகர்ப்புற மக்களின் நுகர்வு விகிதம், தொடர்ந்து சரிந்து வருவதைச் சுட்டிக்காட்டி, இந்தப் பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெரும் வகையில் வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்திருந்தன.
சொல்லிவைத்தார் போல நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனும், பிப்ரவரி 1ம் தேதியன்று வெளியிட்ட பட்ஜெட்டில் ஆண்டுக்கு 12 லட்சம் ருபாய் வரை மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு (Salaried Individuals), தனிநபர் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்தார். இதன் மூலம் அரசுக்கு 1 லட்சம் கோடி ருபாய் அளவிற்கு வருமான இழப்பு ஏற்படும் என்றாலும் மக்களின் நலனுக்காக இந்த வரிச்சலுகையை அதிகரித்திருப்பதாக கூறியிருக்கிறார்.
இந்த வரிச்சலுகை அறிவிப்பைத் தொடர்ந்து எல்லா ஊடகங்களும் அது குறித்தே மிகப்பெரிய அளவில் விவாதிக்க ஆரம்பித்தனர். எல்லா விவாதங்களும் இதனை ஆகா ஓகோ என வானளாவப் புகழ்வதையே நோக்கமாக கொண்டிருந்தன. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கு நிதியமைச்சர் மிகப்பெரிய அளவில் நன்மை செய்துள்ளார் என ஊடகங்கள் அனைத்தும் பாராட்டித் தள்ளிவிட்டன. யாருக்கு எவ்வளவு சேமிப்பு என ஒவ்வொரு பத்திரிக்கையும் கணக்கெடுத்து வெளியிட்டுவிட்டது.
பட்ஜெட்டில் வரிச்சலுகை அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடியும் கூட, “இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் வரி என்ற பெயரில் வெடிகுண்டுகளையும் தோட்டாக்களையும் மக்கள் மீது எரிந்தார்கள் நாங்கள் அந்த புண்ணிற்கு மருந்து தடவினோம் தற்போது காயங்கள் ஆறிவிட்டதால் கட்டுகளை அவிழ்கிறோம்” என பேசியிருக்கிறார்.
இத்தனை படாபடோபமாக விளம்பரப்படுத்தி, வெளியிடப்பட்ட இந்த வரிச்சலுகை உண்மையிலேயே மக்களுக்குப் பயன்படக்கூடியதாக இருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பதில்.
2023-24 நிதியாண்டில் வருமான வரித் தாக்கல் செய்தவர்களின் கணக்கெடுப்பின் படி பார்க்கும் போது, அந்த ஆண்டில் மொத்தமாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தவர்கள் 10 கோடி பேர் அதில் மாத சம்பளம் வாங்குபவர்கள் 7.5 கோடிப் பேர், அதிலும் கூட இதற்கு முந்தைய வரிச் சலுகைகளின் படி 7 லட்சம் ருபாய்க்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்டு வரி எதுவும் செலுத்த தேவையில்லாதவர்கள் 5.9 கோடிப் பேர். அதாவது இதற்கு முன்னர் வழங்கப்பட்ட வரிச்சலுகைகளின் படியே மாதச் சம்பளம் வாங்குபவர்களில் 1.5 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்திவந்தனர்.
தற்போது வழங்கப்பட்டிருக்கும் வரிச்சலுகை என்பது இந்த 1.5 கோடி பேருக்கு மட்டுமே பலனளிக்கக் கூடிய ஒன்றாகும். இது நமது நாட்டின் மொத்த தொழிலாளர்களது எண்ணிக்கையில் வெறும் நான்கு சதவீதம், மொத்த மக்கள் தொகையில் வெறும் 1 சதவீதம் மட்டுமே.
140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் வெறும் ஒரு சதவீதம் பேர் மட்டுமே பயனடையக் கூடிய வரிச் சலுகையை அறிவித்துவிட்டு ஏதோ மிகப்பெரிய சாதனையைப் படைத்துவிட்டது போன்றதொரு மாயையை ஆளும்வர்க்கமும் ஊடகங்களும் சேர்ந்து கொண்டு கட்டமைக்கின்றன.
இந்த அரசு மக்களின் மீது உண்மையான அக்கறை கொண்டு வரிச்சலுகை வழங்க வேண்டும் என நினைத்திருந்தால், அவர்கள் தளர்த்தியிருக்க வேண்டியது வருமான வரியைப் போன்ற நேரடியான வரிவிதிப்பை அல்ல. பெரும்பான்மை மக்களை அழுத்திக் கொண்டிருக்கின்ற, விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணியாக இருக்கின்ற மறைமுக வரிகளைத் தான் முதலில் தளர்த்தியிருக்க வேண்டும். கோடிக்கணக்கான மக்களின் வருமானத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கிற ஜி.எஸ்.டி. மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் மீதான மறைமுக வரிகளை இந்த அரசு தளர்த்தாது. ஏனென்றால் மறைமுக வரிகள் என்பது அரசுக்குப் பொன் முட்டையிடும் வாத்து போன்றது. அதனை ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே போகுமே தவிர அதில் என்றைக்கும் அரசு கைவைக்காது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 2019ம் ஆண்டில் ஒன்றரை லட்சம் கோடி ருபாய் வரிச்சலுகை வழங்கியது தொடங்கி இன்றைக்கு வரை, கார்ப்பரேட் வரி விதிப்பு சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 10% என்ற அளவில் மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது 2021-22ம் ஆண்டில் 7.3 லட்சம் கோடியாக இருந்த கார்ப்பரேட் வரி இப்போது 9 லட்சம் கோடியாக இருக்கிறது.
ஆனால் அதுவே ஜி.எஸ்.டி. வரி வசூலின் அளவு ஆண்டுக்காண்டு 22% முதல் 23% சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது 2021-22ம் ஆண்டில் 14.76 லட்சம் கோடியாக இருந்த ஜி.எஸ்.டி. வரி வசூல் தற்போது 20 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. அதுவே வரும் ஆண்டில் 24 முதல் 25 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அரிசி, பால் முதலான உணவுப் பொருட்கள் தொடங்கி குழந்தைகளின் கல்விக்கான நோட்டுப் புத்தகங்கள், நோய் தீர்க்கும் மருந்துகள் என உழைக்கும் மக்கள் தங்களது அன்றாட வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளுக்குச் செலவிடும் அனைத்திலும் அவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் தொகைதான் இது. இது ஆண்டுக்கு ஆண்டு 22 சதவீதம் அதிகரிக்கிறது என்றால் மக்கள் செலுத்தும் மறைமுக வரி ஆண்டுக்காண்டு 22 சதவீதம் அதிகரிக்கிறது என்று அர்த்தம்.
மறைமுகமாக அரசு வசூலிக்கும் இந்த வரிதான் விலைவாசி உயர்வு என நேரடியாக மக்களை வந்து தாக்குகிறது. அதாவது 2022ம் ஆண்டில், இந்தியாவில் உள்ள உழைக்கும் மக்கள் ஒவ்வொருவரும் தங்களது வருமானத்தில் இருந்து சராசரியாக 20 ஆயிரம் ருபாய் மறைமுக வரியாக செலுத்தினார்கள் என்றால் அதுவே தற்போது 30 ஆயிரம் ருபாயாக அதிகரித்திருக்கிறது. வரும் ஆண்டில் அதுவே 37 ஆயிரம் ருபாயாக அதிகரிக்கும். மக்களுக்கே தெரியாமல் இந்தப் பணம் அரசின் கஜானாவிற்கு செல்கிறது.
மக்களிடமிருந்து கசக்கிப் பிழிந்து வசூலிக்கப்படும் இந்தப் பணத்தைத்தான் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சலுகைகளாக, கடன் தள்ளுபடிகளாக, பாசிச மோடி அரசு அள்ளிக் கொடுக்கிறது.
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் சலுகைகள் அறிவித்திருந்தால் அது ஒட்டுமொத்தமாக நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களின் சேமிப்பை நேரடியாகச் சென்றடைந்திருக்கும். ஆனால் வெறுமனே ஒரு சதவீதம் பேர் பயனடையும் வரிச்சலுகைகளை அறிவித்துவிட்டு ஏதோ நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய நம்மையைச் செய்துவிட்டது போல படம் காட்டுகிறார்கள்.
மக்கள் தொகையில் வெறும் ஒரு சதவீதத்தினருக்கு இப்படி ஒரு வரிச்சலுகையை அறிவிப்பதற்குக் கூட ஆளும் வர்க்கத்தின் நலன் ஒளிந்து கொண்டிருக்கிறது.
2023ம் ஆண்டுக்கான வீட்டு நுகர்வு செலவீனக் கணக்கெடுப்பின் படி (Household Consumption Expenditure Survey) இந்தியாவின் நகர்ப்புற மக்களின், குறிப்பாக ஆண்டுக்குப் 12 லட்சம் ருபாய் வரை வருமானம் பெறுகின்ற நடுத்தர வர்க்கத்தினரின் நுகர்வு கணிசமாகக் குறைந்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கார்கள், மின்சார வாகனங்கள் மற்றும் ஐபோன், ஏசி போன்ற விலை உயர்ந்த மின்னணுச் சாதனங்கள் வாங்குவது குறைந்திருக்கிறது என கூறியிருக்கிறார்கள். இதன் காரணமாக இவர்களை நம்பி இந்த பொருட்களை உற்பத்தி செய்த பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும் சூழல் உருவாகியிருப்பதாக 2024ம் ஆண்டு ஜூலையிலேயே கூறியிருக்கிறார்கள்.
தற்போது இந்தப் பிரிவினருக்கென குறிப்பாக வரிச் சலுகை அறிவித்திருப்பது என்பது, அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான விலை உயர்ந்த செல்போன் வாங்குவதற்கும், மின்சார வாகனத்தை வாங்குவதற்கும் தூண்டுதலாக இருக்கும் என எல்லா முதலாளித்துவ பத்திரிக்கைகளும் அரசை மெச்சி எழுதி வருகின்றன. அதாவது நிர்மலா சீத்தாராமன் கூறிய 1 லட்சம் கோடி ருபாய் வரி இழப்பு என்பதை, அரசு தனது வருமானத்தில் ஒரு லட்சம் கோடி ருபாயை பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் கையில் தூக்கிக் கொடுத்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
நகர்புற நடுத்தர வர்க்கத்தினர் கையில் பணத்தைக் கொடுத்து அதன் மூலம் நுகர்வை அதிகரிப்பதும் கூட ஒரு தற்காலிகமான நடவடிக்கைதான் எனச் சில பத்திரிக்கைகள் அரசை விமர்சிக்கின்றன. வெளிநாட்டு நிதி மூலதனம்தான் உண்மையான பொருளாதார வளர்ச்சியை உருவாக்க முடியும் ஆகையால் அதனை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை அறிவித்திருக்க வேண்டும் அதை விட்டு விட்டு இது போன்ற அறிவிப்புகள் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது எனக் கூறுகின்றன. மக்களிடம் பணத்தைக் கொடுத்து அதனை கார்ப்பரேட்டுகள் வாங்குவது என ஏன் சுற்றிவளைக்க வேண்டும், நேரடியாக கார்ப்பரேட் நிறுவனங்களிடமே அந்தப் பணத்தைக் கொடுத்துவிட வேண்டியதுதானே என்பதுதான் அவர்களின் அங்கலாய்ப்பு.
மற்றொரு பக்கம் வரிச்சலுகைகளை விமர்சனம் செய்யும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அது மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேருக்கு மட்டும் கொடுக்கப்படுவதைச் சுட்டிக் காட்டி, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் அதாவது நூறு நாள் வேலைக்கு அதிக நிதி ஓதுக்கி, அதற்கான கூலியை உயர்த்தியிருந்தால் அது பெரும்பான்மை மக்களுக்குச் சென்றடைந்திருக்கும் எனக் கூறியிருக்கிறது. இதில் ஓரளவிற்கு உண்மையிருக்கிறது என்ற போதிலும், விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வை சமாளிக்க இது உதவுமா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் கூற வேண்டும்.
விலைவாசி உயர்வும் அதற்குப் பின்னால் இருக்கும் பணவீக்கமும் மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை உணர, உண்மை ஊதியம் குறித்த புள்ளி விவரங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2025-26 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை (அட்டவணை XII; பக்கம் 378-379) இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் உண்மை ஊதியத்தின் (Real Wages) போக்குகளை தெளிவாக காட்டியிருக்கிறது. 2017-18 மற்றும் 2022-23 ஆண்டுகளுக்கு இடையில், தொழிலாளர்களின் உண்மையான ஊதியம், ஆண்களுக்கு, மாதத்திற்கு ரூ.12,665-ல் இருந்து ரூ.11,858 ஆகவும், பெண்களுக்கு, மாதத்திற்கு ரூ.10,116-ல் இருந்து ரூ.8,855 ஆகவும் குறைந்துள்ளது. இது மாதச் சம்பளம் வாங்குபவர்களின் கணக்கு அதுவே எலக்ட்ரீசியன், பிளம்பர், டெய்லர் என சுயமாக வேலை செய்பவர்களைப் பொறுத்தவரை, இது ஆண்களுக்கு ரூ.9,454-ல் இருந்து ரூ.8,591 ஆகவும், பெண்களுக்கு ரூ.4,348-ல் இருந்து ரூ.2,950 ஆகவும் குறைந்துள்ளது.
உண்மை ஊதியம் என்பது ஒருவர் வாங்கும் சம்பளத்தில் பணவீக்கத்தின் மதிப்பைக் கழித்த பிறகு வரும் தொகையாகும். அதாவது ஒரு தொழிலாளி தான் வாங்கும் சம்பளத்தில் உண்மையில் எவ்வளவு பொருட்களை, சேவைகளை வாங்க முடியும் என்பதை குறிப்பதாகும். உண்மை ஊதியம் குறைவது என்பது மக்களின் வாங்கும் சக்தி குறைவதை நேரடியாக குறிக்கின்றது. பணவீக்கம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்ல, அதற்கு நேரெதிராக உண்மை ஊதியம் ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டு சென்றால் மக்கள் அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியாத சூழலுக்குள் தள்ளப்படுவார்கள்.
தற்போதுள்ள பொருளாதார நிலைமைகளுக்கு, மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருப்பதற்கு மூன்று முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று நாம் ஏற்கெனவே பார்த்தது போல ஜிஎஸ்டி போன்ற மறைமுக வரிகளின் காரணமாக விலைவாசி உயர்வு ராக்கெட் வேகத்தில் அதிகரித்துக் கொண்டே செல்வது. இரண்டாவது இதே ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டு தொடர்ந்து மூடப்பட்டுவருவது. இந்த இரண்டு காரணங்களினால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதுடன், நிலையான வருமானம் இல்லாத சூழல் உருவாகியிருக்கிறது. மூன்றாவது தொழிலாளர்களின் உண்மை ஊதியம் என்பது ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருவது. இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. ஒன்றின் மீது ஒன்று பாதிப்பைச் செலுத்துபவை.
இவற்றைச் சரி செய்வதற்கு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, மறைமுக வரிகளை குறைப்பதற்கு, சிறுதொழில்களைப் பாதுகாப்பதற்கு, மக்களின் உண்மை ஊதியத்தை அதிகரிப்பதற்கு இந்த பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை. ஏனென்றால் காவி கார்ப்பரேட் பாசிச மோடி அரசு போட்டிருக்கும் பட்ஜெட் என்பது மக்கள் நலனை முன்னிறுத்திச் சிந்தித்துப் போடப்பட்ட பட்ஜெட் அல்ல. அது கார்ப்பரேட் முதலாளிகளின் நலனை முன்னிறுத்தி, அவர்கள் மனம் கோணாதவாரு இந்தியப் பொருளாதாரத்தை எப்படித் திட்டமிடுவது, அரசு நிர்வாகத்தை எப்படி நடத்துவது என சிந்தித்துப் போடப்பட்ட பட்ஜெட் என்பதால் பன்றியின் காதிலிருந்து வெள்ளிக் கொடியெடுக்க முடியும் என்று நிர்மலா சீத்தாராமன் கூறுவது அப்பழுக்கற்ற பொய். எனவே வரிச்சலுகைகள் என்பது மக்களை ஏமாற்றும் கண் கட்டி வித்தையேயன்றி வேரொன்றும் இல்லை.
- அறிவு
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நாட்டை எழுதி கொடுக்கும் பட்ஜெட், நம்ம மாமி போட்ட பட்ஜெட்.