தில்லி தேர்தல் :
பதவிப் போட்டியிடம் சரணடைந்த பாசிச எதிர்ப்பு

பாஜகவை அம்பலப்படுத்தி, அதன் மதவெறி அரசியலை, பாசிசத்தின் கொடூர முகத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பதில், தோழமைக் கட்சிகளை விமர்சிப்பதை, அதன் தலைவர்களைக் கேவலப்படுத்துவதை பிரதானமாக காங்கிரசும், ஆம் ஆத்மியும் செய்து வருகின்றன.

தில்லி சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கிறது. தேர்தல் களத்தில் ஒருவரை ஒருவர் வசைபாடுவதும், குற்றம் சுமத்துவதும், வாக்காளர்களைக் கவர்வதற்கு வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் என கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக தில்லி தேர்தலைச் சுற்றியே வடஇந்திய ஊடகங்கள் திரியும் அளவிற்கு அரசியல் கட்சிகள் தினமும் ஏதாவதொரு ஒரு பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த தேர்தலில் தில்லி சட்டமன்றத்தில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுகிறது. இந்தியா கூட்டணியில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன. அதேசமயம் இந்தியா கூட்டணியின் பெரிய கட்சியான காங்கிரஸ் ஆம் ஆத்மியை எதிர்த்துப் போட்டியிடுகிறது. இதனால் தில்லி தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு மும்முனைப் போட்டி ஏற்பட்டிருப்பது என்பது பாஜகவிற்கு ஆதரவாகத்தான் போய் முடியும் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. தில்லியில் ஆட்சியமைக்க மொத்தம் உள்ள 70 இடங்களில் 36 இடங்களில் வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும். இதற்கு முன்பு நடந்த இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது (2015 – 67, 2020 – 62). அந்த இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.

அதேசமயம் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியினர் மீது, குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டது என்பது அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் வெற்றிபெற்றது போல அல்லமால் ஆம் ஆத்மி அறுதிப் பெரும்பான்மை (36) மட்டுமே பெற முடியும் எனவும் கூறப்படுகிறது. ஆம் ஆத்மி இழக்கும் தொகுதிகள் அனைத்தும் பாஜகவின் வசம் செல்லும் வாய்ப்புகளே அதிகம் எனவும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வெற்றிபெற்றாலே அதிகம் எனத் தெரிகிறது.

இந்தச் சூழ்நிலையில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒன்றாக போட்டியிட்டால் பாஜகவின் வெற்றி வாய்ப்பில் பாதிப்பை செலுத்த முடியும். ஆனால் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் எல்லா தொகுதிகளிலும் தோல்வியடைவோம் எனத் தெரிந்தே ஆம் ஆத்மிக்கு எதிராக போட்டியிடுகிறது. இதன் மூலம் மறைமுகமாக பாஜகவின் வெற்றிக்கு வழி செய்து கொடுக்கிறது. காங்கிரஸ் மட்டுமன்றி இந்தியா கூட்டணியில் உள்ள சி.பி.ஐ. சி.பி.எம். கட்சிகள் இடது முன்னணி அமைத்துக் கொண்டு 10 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. நல்லவேளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தில்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இல்லையென்றால் இந்தியா கூட்டணிக்குள்ளேயே நான்கு முனைப் போட்டி ஏற்பட்டிருக்கும்.

தேர்தலில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது என்று வந்துவிட்ட பிறகு பாஜக என்ன தோழமைக் கட்சி என்ன எல்லாம் ஒன்றுதான் என, இந்தியா கூட்டணிக் கட்சிகள், ஒருவரை ஒருவர் கடுமையாக சாடிக் கொள்வதை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து செய்து வருகிறார்கள். பாஜகவை அம்பலப்படுத்தி, அதன் மதவெறி அரசியலை, பாசிசத்தின் கொடூர முகத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பதில், தோழமைக் கட்சிகளை விமர்சிப்பதை, அதன் தலைவர்களைக் கேவலப்படுத்துவதை பிரதானமாக காங்கிரசும், ஆம் ஆத்மியும் செய்து வருகின்றன.

“அரவிந்த் கேஜ்ரிவால் மோடியை விட தந்திரமானவர், அவரைவிட மோசமாக பொய் பேசுபவர்” என்றும் “மதுபான ஊழலின் சுத்திரதாரி” என்றும் ராகுல்காந்தி கேஜ்ரிவாலை பகீரங்கமாக விமர்சிக்கிறார். பதிலுக்கு கேஜ்ரிவால் ராகுல்காந்தி மீது தொடுக்கப்பட்ட நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கை ஊழல் வழக்கையும், பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா மீதான ஊழல் வழக்குகளையும் காட்டி நீ மட்டும் யோக்கியமா எனக் கேட்கிறார். நேர்மையற்ற மனிதர்கள் எனப் பட்டியல் வெளியிட்டு அதில் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் படத்திற்கு முன்னதாக ராகுல் காந்தியின் படத்தைப் போட்டு அவரைக் கேவலப்படுத்துகிறார்.

இதுவரை மதுபான ஊழல் வழக்கையும், நேஷனல் ஹெரால்ட் வழக்கையும் இந்தியா கூட்டணிக் கட்சிகளைப் பழிவாங்க, அதன் தலைவர்களை கைது செய்து முடக்குவதற்காக, எதிர்க்கட்சிகளின் பெயருக்கு கலங்கம் விளைவிப்பதற்காக பாஜக ஜொடித்த வழக்குகள் என்றும், பாசிசம் வருமான வரித்துறையையும், அமலாக்கத் துறையையும் பயன்படுத்தி எதிர்ப்புகளை நசுக்கப் பார்க்கிறது என்றும் கூறிவந்த இவர்கள் தற்போது பாஜக போட்டது பொய்வழக்கு இல்லை எனக் கூறுகிறார்கள். இது யாருக்குச் சாதகமாக போய் முடியும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பாசிசத்தின் தாக்குதல்களை ஒன்றாக நின்று சமாளிப்பதற்கு பதிலாக அதையே பயன்படுத்தி ஒருவரை ஒருவர் பழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாசிசத்தை வீழ்த்துவோம், வேரறுப்போம் என 2024 பாராளுமன்றத் தேர்தலின் போது முழங்கிய இந்தியா கூட்டணிக் கட்சிகள் தேர்தல் முடிந்து 6 மாதங்களில் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ளத் தொடங்கிவிட்டனர். இவர்கள் பேசி வந்த பாசிச எதிர்ப்பு என்பது வெறும் பம்மாத்து. பதவிப் போட்டியின் முன்பு இவர்களது பாசிச எதிர்ப்பு மண்டியிட்டுவிட்டது. தில்லியில் உள்ளது போன்று ஆளும் கட்சி வலுவிழக்கும் சூழல் தமிழ்நாட்டில் ஏற்பட்டால் இந்தியா கூட்டணியில் பல கட்சிகள் “கசப்புடன்” தொடர்வதற்கு பதிலாக பதவி கிடைக்கும் மற்ற கூட்டணிகளை நாடிச் சென்றுவிடுவார்கள். இதுதான் இவர்களது பாசிச எதிர்ப்பின் லட்சணம்.

  • மகேஷ்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன