மீண்டும் வருகின்றன வேளாண் சட்டங்கள்
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்பதுதான் விவசாயத்தைப் பாதுகாக்க ஒரே வழி.

மாநில அரசுகள் வழங்கிவரும் கொஞ்ச நஞ்ச வசதிகளையும் பிடுங்கிக் கொண்டு விவசாயிகளைக் கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்குள் தள்ளிவிட துடிக்கிறது பாசிச மோடி அரசு. இனி அதானி, அம்பானி, டாடா, கார்கில், பெப்சி, வால்மார்ட், பேயர், அமேசான் போன்ற பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய விவசாயத்தையும், உணவுபொருள் விநியோகத்தையும் கட்டுப்படுத்தவிருக்கிறார்கள்

காவி கார்ப்பரேட் பாசிச மோடி அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்வதைத் தனது உயிர் மூச்சாக கொண்டுள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளின் நலனைக் கைவிடுவது என்பதை பாசிஸ்டுகளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஆனால் மூன்று விவசாய சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி விவசாயிகள் நடத்திய போராட்டம் உருவாக்கிய அழுத்தம் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், அதிலிருந்து அவர்கள் தற்காலிகமாக பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்படி தற்காலிகமாக பின்வாங்கினாலும், மூன்று வேளாண் சட்டங்களையும் எப்படியாவது வேறு வகையில் நடைமுறைப்படுத்திட வேண்டும் என அன்றிலிருந்து துடித்துக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு.

தற்போது அதனை நோக்கமாக கொண்டுதான், ஒன்றிய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் “வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதலுக்கான தேசிய கொள்கை கட்டமைப்பு” என்று புதிதாக ஒன்றை நவம்பர் மாத இறுதியில் களமிறக்கியிருக்கிறது. இந்த கொள்கை செயல்படுத்தப்பட்டால் அது அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும். மூன்று வேளாண் சட்டங்களில் இரண்டை இதன் மூலம் நடைமுறைப்படுத்த நினைக்கின்றனர்.

மோடி அரசு அறிவித்துள்ள இந்த கொள்கையில் தனியார் மொத்த விற்பனைக் கூடங்களை அமைப்பது, விவசாயிகளிடமிருந்து சந்தையில் அல்லாமல், அவர்களின் வயல்களில் இருந்தே நேரடியாக கொள்முதல் செய்து கொள்வது போன்ற வசதிகளை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க இருக்கிறார்கள். இதற்கென உணவுப் பொருள் பதப்படுத்துபவர்கள், ஏற்றுமதியாளர்கள், ஒழுங்குமுறை விற்பனையாளர்கள், மொத்த கொள்முதல் நிறுவனங்கள், ஆகியோர் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய ஏற்கெனவே இருக்கும் தடைகளை அகற்றப்போவதாக கூறியிருக்கிறார்கள்.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள களஞ்சியங்களையும், குளிர்பதன கிடங்குகளையும் சந்தைகளாக அறிவிப்பது, அவற்றை தனியார் வசம் ஒப்படைத்துவிடுவது என்றும், மாநில அரசுகளின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு பதிலாக கார்ப்பரேட் நிறுவனங்களின் கிடங்குகளைப் பயன்படுத்த போவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். விவசாயிகள் தமது பகுதியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம்தான் தமது விளைபொருட்களை விற்க முடியும் என்ற கட்டுப்பாட்டை இதன் மூலம் தகர்க்கவிருக்கிறார்கள்.

அதாவது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வேளாண் விளைபொருட்கள் சந்தைக் குழுவிற்கு (APMC) பதிலாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள் ஏற்பாடு செய்வதாக கூறுகிறார்கள். இதன் மூலம் போட்டி அதிகரிக்கும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று கதையளக்கிறார்கள்.

தங்களது விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கோரி விவசாயிகள் போராடி வருகின்றனர், ஆனால் அவர்களைச் சந்திக்க கூட நேரம் ஒதுக்க முடியாத மோடி அரசு, கார்ப்பரேட்டுகளின் கையில் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை ஒப்படைக்க நினைக்கிறது.

விவசாயத்தின் மீதான மாநிலங்களின் உரிமையைப் பறித்துவிட்டு, ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநில நிதியமைச்சர்களைக் கொண்ட குழுவை பெயருக்கு வைத்திருப்பது போல மாநில விவசாயத்துறை அமைச்சர்களைக் கொண்ட விவசாய விலை பொருட்கள் கவுன்சில் என ஒன்றை உருவாக்கவிருக்கிறார்கள்.

பஞ்சாப், ஹரியாணா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் விவசாய விளைபொருட்களுக்கென குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்கின்றன. தமது கட்டுப்பாட்டில் உள்ள வேளாண் விளைபொருட்கள் சந்தைக் குழுக்களின் மூலம் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் அரசு நிர்ணயித்த விலையில் வாங்குவதை உத்தரவாதப்படுத்துகின்றன.

தமிழ்நாடு அரசு நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, பருத்தி, தேங்காய் உள்ளிட்ட 21 விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 278 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இந்த விலையில் விற்றுக் கொள்ள முடியும். அதுமட்டுமன்றி விவசாயிகள் தங்களது விளைபொருட்களைப் பாதுகாப்பாக வைக்க, மாநில அரசுக்குச் சொந்தமான 111 குளிர்பதன கிடங்குகள் மற்றும் 63 பண்டகசாலைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கரும்புக்கு ஒன்றிய அரசு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயித்தாலும் தமிழ்நாடு அரசு, கரும்பு விவசாயிகளுக்கு கூடுதலாக ஒரு மெட்ரிக் டன்னிற்கு 215 ருபாயை சிறப்பு ஊக்கத்தொகையாக கொடுக்கிறது. அதாவது சர்க்கரை ஆலைகள் ஒன்றிய அரசு நிர்ணயித்தபடி டன் ஒன்றிற்கு 2919 ருபாயை கொடுக்கும். அதற்கு மேல் இந்த சிறப்பு ஊக்கத்தொகையை தமிழக அரசு விவசாயிகளுக்கு கொடுக்கும் இதற்கு ஆண்டுதோரும் 247 கோடி ருபாயை தமிழக அரசு ஒதுக்குகிறது.

தமிழ்நாடு அரசைப் போலவே மற்ற மாநில அரசுகளும் இதுபோல பல வசதிகளை விவசாயிகளுக்கு வழங்கிவருகின்றன. இவையெல்லாம் விவசாயிகள் பல ஆண்டுகளாக போராடி பெற்ற சொற்பமான சலுகைகள் மட்டுமே. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ருபாய் வரிச்சலுகைகளை வாரி வழங்கும் மாநில அரசுகள், கொள்முதல் செய்ய விவசாயிகள் கொண்டுவரும் நெல்லிற்கு கூறை அமைக்க காசில்லை எனக் கையை விரிக்கும் நிலைதான் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது.

மாநில அரசுகள் வழங்கிவரும் இந்த கொஞ்ச நஞ்ச வசதிகளையும் பிடுங்கிக் கொண்டு விவசாயிகளைக் கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்குள் தள்ளிவிட துடிக்கிறது பாசிச மோடி அரசு. இனி அதானி, அம்பானி, டாடா, கார்கில், பெப்சி, வால்மார்ட், பேயர், அமேசான் போன்ற பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய விவசாயத்தையும், உணவுபொருள் விநியோகத்தையும் கட்டுப்படுத்தவிருக்கிறார்கள்.

குளிர்பதன கிடங்குகளையும், களஞ்சியங்களையும் கார்ப்பரேட்டுகளின் கையில் கொடுப்பதன் மூலம், விவசாயிகளுக்க அவற்றை எட்டாமல் செய்வதுடன், கார்ப்பரேட்டுகள் கேட்கும் விலைக்கு விளைபொருட்களை விற்க வேண்டும் அல்லது கெட்டுப்போன விளை பொருளை தெருவில்தான் கொட்ட வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தவிருக்கிறார்கள்.

மாநில அரசுகளின் விவசாய விளைபொருட்கள் சந்தைக் குழுக்களைக் கலைத்துவிட்டால், விவசாயப் பொருட்கள் கொள்முதல் செய்வதில் முதலாளிகள் போட்டி போடுவார்கள் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும், வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருட்கள் கொள்முதல், பதப்படுத்துதல், விநியோகித்தல் ஆகியவற்றில் அந்நிய நேரடி முதலீடுகள் வந்து குவியும் எனக் கூறுகிறார்கள். ஆனால் கேரளாவில் அரசு கொள்முதல்  நிலையங்களே இல்லை ஆனால் அங்கே தனியார் முதலாளிகள் யாரும் வரவில்லை. மராட்டிய மாநில அரசும் 2018ல் மண்டிகளுக்கு வெளியே விவசாய பொருட்களை விற்பனை செய்யும் வகையில் சட்டதிருத்தம் செய்துள்ளது ஆனால் பன்னாட்டு முதலாளிகள் யாரும் அங்கே தொழில் தொடங்கவில்லை.

அரசின் கட்டுப்பாட்டை விலக்கிவிட்டால் முதலாளிகளின் போட்டி காரணமாக விலை உயரும் என்பது சுத்தப் பொய் என பீகார் உதாரணம் நமக்கு ஏற்கெனவே எடுத்துகாட்டியிருக்கிறது. பீகார் மாநில அரசு கொள்முதல் நிலையங்களை 2006ம் ஆண்டே மூடிவிட்டது. ஆனால் அங்கே இவர்கள் கூறுவது போல முதலாளிகள் போட்டி போட்டுக் கொண்டு விலையை உயர்த்தவில்லை, மாறாக சிண்டிகேட் அமைத்துக் கொண்டு விலையைக் குறைத்தார்கள். நெல்லுக்கு குவிண்டாலுக்கு 800 ருபாய் அளவிற்கு விற்பனை செய்ய விவசாயிகளை நிர்பந்தித்தார்கள். அதுவே பஞ்சாப் மாநில அரசு நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 1800 ருபாய் என குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயித்து கொள்முதல் செய்த போது, இடைத் தரகர்கள் பீகாரில் 800 ருபாய்க்கு வாங்கிய நெல்லை பஞ்சாப்பிற்கு கடத்திச் சென்று 1800 ருபாய்க்கு அம்மாநில அரசிடம் விற்றார்கள். இவர்களை நம்பி விவசாயப் பொருட்கள் கொள்முதலில் அரசின் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் எனக் கூறுகிறார்கள்.

அரசுக் கட்டுப்பாட்டை நீக்குவது விவசாய சட்ட திருத்தத்தின் ஒரு அம்சம் என்றால் கான்டிராக்ட் விவசாயம் என்பது மற்றுமொரு அம்சம். கான்டிராக்ட் விவசாயம் அல்லது ஒப்பந்த விவசாயம் என்பது ஒரு ஒப்பந்த விவசாய நிறுவனத்திற்கும் ஒரு விவசாயிக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலான விவசாயமாகும். ஒப்பந்த நிறுவனம் அளிக்கும் இடுபொருட்களான விதை உரம் பூச்சிக் கொல்லி மருந்துகள் விவசாயக் கருவிகளின் சேவை ஆகியவற்றை அந்நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட தரம் உற்பத்தி அளவு மற்றும் தீர்மானிக்கப்பட்ட காலகட்டத்தில் விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்து அந்நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். இந்த ஒப்பந்த விவசாயத்தில் விவசாயி தனது நிலம் நீர் மற்றும் உழைப்பைக் கொண்டு சாகுபடி செய்ய வேண்டும். விளைச்சலை ஒப்படைக்கும் போது முன்கூட்டியே ஒப்பந்தத்தில் தீர்மானிக்கப்பட்ட விலைக்கோ அல்லது சந்தை விலைக்கோ அல்லது உற்பத்திக்கான கூலியைக் கொடுத்தோ அந்த ஒப்பந்த நிறுவனம் வாங்கிக் கொள்ளும்.

விவசாயிகளுக்கு நன்மை செய்வதற்காகவே கொண்டுவரப்படுவதாகக் கூறிக்கொண்டாலும், ஒப்பந்த விவசாய முறை என்பது உண்மையில் இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் கார்ப்பரேட்டுகளின் காலடியில் சமர்பிப்பதை நோக்கமாக கொண்டது. ஆங்கிலத்தில் பல நூறு பக்கங்களில் போடப்படும் ஒப்பந்தத்தில் என்ன சரத்துகள் ஒளித்துவைக்கப்பட்டுள்ளன என்பது அவர்கள் ஏமாற்றப்படும் போதுதான் விவசாயிகளுக்கே தெரியவருகின்றன.

சில மாதங்களுக்கு முன்னர் கூட ராஜஸ்தானில் அத்திப்பழம் கொள்முதல் செய்யும் நிறுவனம் ஒன்று விவசாயிகளிடம் ஒப்பந்த விவசாயம் என்ற பெயரில் ஏமாற்றி பல கோடி ருபாய்களைச் சுருட்டிக் கொண்டு விவசாயிகளை நடுத்தெருவில் நிறுத்திச் சென்றுள்ளது. விவசாயத்தில் மட்டுமல்லாது, விவசாயத்தின் துணைத்தொழில்களாக உள்ள கால்நடை வளர்ப்பு, கோழி மீன் வளர்ப்பு போன்றவற்றிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஒப்பந்தகள் செய்வதை மோடி அரசு தற்போது முன்மொழிந்திருக்கும் வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதலுக்கான தேசிய கொள்கை கட்டமைப்பு ஆதரிக்கிறது. சுகுணா சிக்கன் முதல் ஈமு கோழி வரை இந்த கான்டிராக்ட் முறையால் தமிழக விவசாயிகள் ஏற்கெனவே பலமுறை ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். வேளாண் பொருட்கள் கொள்முதல் மையங்களை மூடிவிட்டால் விவசாயிகள் வேறு வழியின்றி, தங்களது விளைபொருட்களை இது போன்று ஒப்பந்த விவசாயத்தின் மூலம்தான் விற்க முடியும் என்ற நிலையை உருவாக்க இருக்கின்றனர். இந்த கொள்கை அறிக்கையில் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்யும் உத்தரவாதமும் இல்லை, விவசாயிகளை ஏமாற்றிச் சுருட்டிக்கொண்டு ஓடிப்போகும் கார்ப்பரேட் நிறுவனங்களை தண்டிப்பதற்கு வழியும் இல்லை.

இதைத்தான் 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விவசாய சட்ட சீர்திருத்தங்கள் செய்யவிருந்தன. இதற்கு எதிராக விவசாயிகள் மழையிலும் வெளியிலும் ஓராண்டுக்கும் மேல் போராடினார்கள். அந்த போராட்டத்தில் 700க்கும் அதிகமான விவசாயிகள் தங்களது உயிரைக் கொடுத்தார்கள். அன்று பஞ்சாப், ஹரியாணா மாநில தேர்தல்களுக்காக விவசாய சட்டங்களைத் திரும்ப பெருவதாக நாடகமாடிவிட்டு இன்றைக்கு வேறு பெயரில் அதே விவசாய சட்டங்களைக் கொண்டுவருகிறது பாசிச மோடி அரசு.

இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சம்யுக்தா கிசான் மோர்ச்சா, அனைத்திந்திய கிசான் சபா உள்ளிட்ட விவசாய சங்கங்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்திவருகின்றன. ஏற்கெனவே குறைந்த பட்ச ஆதாரவிலை கேட்டுப் போராடி வரும் தல்லேவால் தலைமையிலான, கட்சி சார்பற்ற சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பும் இந்த கொள்கைக்கு எதிராகப் போராடப்போவதாக அறிவித்துள்ளது.

“விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் அனைத்து விவசாய விளைபொருளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும், விவசாயத்திற்கான அரசின் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், விவசாயிகளுக்கு எளிமையான கடன் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் இதுதான் விவசாயிகளின் இன்றைய தேவை ஆனால் மோடி அரசோ விவசாயத்தில் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டை நீக்குவதற்கு முயற்சிக்கிறது” என அனைத்திந்திய கிசான் சபா கூறியிருக்கிறது.

“இந்த புதிய கொள்கை கட்டமைப்பின் மூலம் விவசாயத்திற்கான அரசின் ஆதரவை விலக்கிக் கொண்டு, விவசாயம் மற்றும் பொது உணவு விநியோகத்தை கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கும் திட்டத்தை நிறைவேற்ற பார்க்கிறார்கள். இதற்காக மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கப் பார்க்கிறார்கள்” என்றும் “வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதலுக்கான தேசிய கொள்கை கட்டமைப்பு என்பது மூன்று விவசாய சட்டங்களையும் விட மிகவும் மோசமானது” என்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருக்கிறது.

ஆனால் மோடி அரசோ, விவசாயிகளின் கண்டனங்களையும், போராட்டங்களையும் கண்டுகொள்ளாமல் இந்த தேசிய கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் வேலையில் தீவிரமாக உள்ளது.

2020ம் ஆண்டில் நடந்ததைப் போன்ற ஒரு மிகப்பெரிய விவசாயிகள் போராட்டத்தை நடத்தப் போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. அப்படிப் போராடுவதன் மூலம் மோடி அரசை முன்பு போல பணியவைத்துவிட முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் கார்ப்பரேட் நலனைப் பாதுகாப்பதை லட்சியமாக கொண்ட மோடி அரசு நிச்சயமாக விட்டுக் கொடுக்காது. மீண்டும் மீண்டும் விவசாயச் சட்டங்களின் அம்சங்களை அமுல்படுத்த முயற்சித்துக் கொண்டே இருப்பார்கள். காவி கார்ப்பரேட் பாசிசத்தின் இந்த கோர முகத்தினை அம்பலப்படுத்தி அதற்கு எதிராக விவசாயிகள் தொழிலாளர்கள் என அனைவரையும் அணிதிரட்டிப் போராடி பாசிசத்தை முறியடிப்பது என்பதுதான் இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றுவதற்கான ஒரே வழி.

  • அறிவு

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. சீமான், அண்ணாமலை, தமிழிசை போன்ற கோமாளிகளை விட்டு ஏதாவது ஒரு பொய் செய்திகளை சொல்லி நம்மை பேச வைத்து. வ கார்ப்பரேட்டுகளுக்கு விவசாயத்தையும், நாட்டையும் கூட்டிக் கொடுக்கிற வேலையை, ஒன்றிய மாநில அரசுகள் தினம் தோறும் செய்து கொண்டு தான் இருக்கிறது. இதை முறியடிக்க தொழிலாளி, விவசாயிகளை மாணவர்களை, அணிதிரட்டும் கடமை நம் முன் இருக்கிறது.