விளை (உணவு) பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, வழக்குகளைத் திரும்பப்பெறுவது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் 70 வயதைக் கடந்த ஜக்கீர் சிங் தலே வாலா, கடந்த 40 நாட்களுக்கும் மேலாக உயிரைப் பணயம் வைத்து உண்ணாமல் போராடி வருகிறார்.
அவருடைய உடல்நிலை மோசமடைந்து வருவதைக் கணக்கில் கொண்டு, உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கும்படி பஞ்சாப் அரசுக்கு உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. ஒன்றிய அரசு எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாத வரை, கட்டாய சிகிச்சையை ஏற்க முடியாது என நிராகரித்து விட்டார் தலே வாலா.
பஞ்சாப் மாநில விவசாயிகள், டெல்லியை நோக்கி நடத்திய பேரணியைக் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசி தடுத்து நிறுத்தப்பட்டது. இதில் 6 விவசாயிகள் காயமடைந்ததால், பேரணியை, மேலும் தொடர முடியாத நிலையில், அதன் எல்லையான கானளரி பகுதியிலேயே முகாமிட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு வருகின்றனர். இப்போராட்டத்தின் அவசியத்தை ரயில் மறியல் போராட்டம், சாலை மறியல் போராட்டம் எனப் பல்வேறு போராட்ட வடிவங்கள் மூலமாகக் கொண்டு சென்று, நியாயமான கோரிக்கைகளையும், அதேபோல் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை கூட நடைமுறைப்படுத்த மறுக்கும் பாசிச மோடி அரசை திரைகிழித்து வருகின்றனர். மேலும், மாநிலம் முழுவதும் ஒருநாள் முழு அடைப்புப் போராட்டத்தையும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.
இதனால், வெறுப்படைந்த உச்ச நீதிமன்ற அமர்வு, நெஞ்சை உலுக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை, முடிவுக்குக் கொண்டு வரவும், சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டால் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கவும் உத்தரவிட்டது. இவற்றைப் பஞ்சாப் அரசு அதிகாரிகள், விவசாய சங்கத் தலைவர்கள், ஊடகங்கள் பொதுவெளியில் அம்பலப்படுத்தினர். உடனே, உச்ச நீதிமன்ற அமர்வு, உடல் நிலை மோசமடைந்து வரும் தலே வாலாவுக்கு, உடனடியாக, மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டதே ஒழிய, உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர உத்தரவு விடவில்லை, என அந்தர் பல்டி அடித்தது.
மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே போடப்பட்டதாக கூறும் உத்தரவை, நிரூபிப்பதற்காக உச்ச நீதிமன்ற அமர்வு பல குட்டிக்கரணங்களை அடிக்கிறது. அதில் ஒன்றாக, தற்போது ஒரு குழுவை அமைத்து, உண்ணாமல், சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரை மாய்த்துக் கொண்டு வரும் தலே வாலாவை, நேரில் சந்தித்து மருத்துவ உதவி சிகிச்சை எடுத்துக் கொள்ள தாஜா செய்துள்ளது. அவர் மறுத்ததோடு, “தனக்கு விவசாயம் தான், முதன்மையானது, உடல்நலம் இரண்டாம் பட்சம் தான்” என உறுதியாக அறிவித்துவிட்டார்.
ஒருபுறம், விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனத் துடிக்கும் உச்ச நீதிமன்ற அமர்வு, மறுபுறம் விவசாய சங்கத் தலைவர் தலே வாலாவின் உடல்நிலை குறித்து நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டே விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு எதிராக ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது ஏன்?
2021 இல் மோடி அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது, ஒன்றிய அரசு, விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு, சட்டப் பூர்வ அங்கீகாரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றும்படி ஊர் சுற்றும் வாலிபரான மோடி தலைமையிலான அரசுக்கு உத்தரவிடலாமே?
ஒரு கண்ணில் சுண்ணாம்பும், இன்னொரு கண்ணில் வெண்ணையைத் தடவும் உச்ச நீதிமன்றம், ஜனநாயகத் தூண்களில் ஒன்றல்ல, பாசிசத் தூண்களின் ஒன்று என்பதை, அயோத்தி தீர்ப்பு, 370 வது சட்டப்பிரிவு ரத்து போன்ற வரிசையில் இதுவும் ஒன்றாகச் சேரவிருப்பதன் மூலம் நிரூபித்து வருகிறது.
புழுத்து நாறும் நாடாளுமன்றம், ஊழலில் ஊறித் திளைத்து வரும் அதிகாரவர்க்கம், சோரம் போகும் ஊடகங்கள் போன்றவைகளால் நசுக்கப்படும் ஜனநாயக உரிமைகளை கடைசிப் புகலிடமான உச்சநீதி மன்றத்திடம் எதிர்பார்ப்பது முட்டாள் தனத்திற்கு ஒப்பானது.
விளை (உணவு) பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கை என்பது விவசாயிகளுக்கானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் உணவுக்கான கோரிக்கை என்பதை நினைவில் நிறுத்துவோம். விவசாயிகள் சேற்றில் கை வைக்கவில்லை என்றால் நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியாது என்பதை உணர்ந்து, அவர்களுடன் கைகோர்த்து களத்தில் நிற்போம்.
- மோகன்