மன்மோகன் சிங் : சீர்திருத்தங்களின் சிற்பியா? ஏகாதிபத்தியங்களின் ஏஜென்டா?

மன்மோகனின் ஆட்சியில் இந்தியத் தரகு முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும் தான் பலனடைந்தார்கள். அம்பானியையும் டாடாவையும் உலகப் பணக்காரராக்கவே மன்மோகன்சிங் உழைத்தார். நாள் ஒன்றுக்கு 32 ருபாய் சம்பாதித்தாலே வறுமைக் கோட்டிற்கு மேலே இருக்கிறார்கள் என மாற்றி 138 கோடி பேரை வறுமையிலிருந்து காப்பாற்றிவிட்டதாக மன்மோகன் சிங் நாடகமாடியதை மறக்க முடியுமா?. அவரது ஆட்சியின் போதுதான் பல லட்சம் விவசாயிகள் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டனரே, அதைத்தான் மறக்க முடியுமா? விவசாயம் நட்டமடைவதை தடுக்க முடியாது, விவசாயம் நட்டமடைந்தால்தான் தொழிற்துறை வளரும் என மன்மோகன் சிங் கூறியதைத்தான் மறக்க முடியுமா?

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவை அடுத்து அவருக்கு எல்லா தரப்பிலிருந்தும் ஒருவழியாக நினைவஞ்சலியும், புகழஞ்சலியும் செலுத்தி முடித்திருக்கிறார்கள். இறந்தவர்களின் தவறுகளைப் பற்றிப் பேசக் கூடாது என்ற இத்துப்போன சம்பிரதாயத்திற்கு இணங்க ஆளுங்கட்சி எதிர்க்கட்சி கூட்டணிக் கட்சி என எல்லா தரப்பும் மன்மோகன் சிங்கை வானளாவப் புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். தமிழ்நாட்டு ஊடகங்களும் இதில் விதிவிலக்கல்ல விஜயகாந்தை விடிவெள்ளியாக்கியவர்கள், மன்மோகன் சிங்கை மட்டும் விட்டுவைப்பார்களா என்ன?

பத்திரிக்கைகளை திறந்தாலே மன்மோகன் புராணம்தான் படிக்கப்படுகிறது. நவீன இந்தியாவின் தந்தை, சீர்திருத்தங்களின் சிற்பி என மன்மோகனுக்கு பட்டங்கள் பல வழங்கி கௌரவித்துள்ளனர். 1991ல் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இந்தியா சிக்கிக் கொண்டிருந்த போது, நிதியமைச்சராகத் திறம்பட செயல்பட்டு அதிலிருந்து நாட்டை மீட்டு எடுத்தவர். நாட்டின் இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கு அன்றே வித்திட்டவர். மன்மோகனின் பொருளாதாரக் கொள்கையைத்தான் இன்றைக்கும் மோடி அரசு கூட பின்பற்றுகிறது. பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் கிடைக்காமல் அது ஏழை எளிய மக்களுக்கும் போய்ச் சேர வேண்டும் என நினைத்தவர், அதற்காக ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்ற உன்னதத் திட்டத்தை கொண்டுவந்தவர், எளிமையானவர், கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என ஊடகங்களில் தீட்டப்படும் மன்மோகனின் சாதனைப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

ஊடகங்கள் என்னதான் பவுடர் போட்டு மறைத்தாலும் மன்மோகன் சிங்கின் உண்மை முகத்தை மறைக்க முடியுமா? ரிசர்வ் வங்கியின் கவர்னராக 3 ஆண்டுகள், நிதியமைச்சராக 5 ஆண்டுகள், நாட்டின் பிரதமராக 10 ஆண்டுகள் என பல்வேறு உயர்பதவிகளில் அமர்ந்து கொண்டு சீர்திருத்தங்கள் என்ற பெயரில் நாட்டை ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்குத் திறந்துவிட்ட மன்மோகன் சிங்கின் உண்மை முகத்தை நாமும் அசைபோடத்தான் வேண்டும்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்து, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் வாங்கிய மன்மோகன் சிங் ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் (UNCTAD) தனது பொருளாதாரப் பணியைத் தொடங்கினார். அதன்பிறகு இந்திய ஆளும் வர்க்கத்திற்கு பொருளாதார ஆலோசனைகள் வழங்கும் பல்வேறு பதவிகளை அவர் வகித்தாலும். 1985-87 காலகட்டத்தில், சவுத் கமிசன் என்ற பன்னாட்டு ஆலோசனை நிறுவனத்தின் (Think Tank) தலைவராக பணியாற்றிய காலத்தில்தான் மன்மோகன் சிங் ஏகாதிபத்தியங்களின் எஜென்டாக முழுமையாக மாறினார்

அமெரிக்கா சோவியத் யூனியன் இடையிலான பனிப்போரின் இறுதிக் கட்டத்தில் சோவியத் யூனியன் தோல்வியடைந்து கொண்டிருந்த சமயத்தில் அமெரிக்கா முன்னிறுத்திய பொருளாதார கொள்கைகளை (தனியார்மயம், தாராளமயம், உலகமயம்) இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு ஏற்ற வகையில் புகுத்துவது எப்படி என்பதை ஆய்வு செய்யும் பணியை, ஏகாதிபத்திய நிதிமூலதன நிறுவனங்களுக்கு அன்றைக்கு தேவையாயிருந்த முக்கியமான வேலையை தலைமையேற்று நடத்திக் கொடுத்தார் மன்மோகன் சிங்.

அதற்குப் பிரதி உபகாரமாகத்தான் 1991ல் நரசிம்மராவ் பிரதமராக பதவியேற்ற பிறகு எவ்வித அரசியல் பின்புலமும் இல்லாத மக்களை இதுவரை சந்தித்தேயிராத மன்மோகன் சிங் நாட்டின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் 1985-87 காலகட்டத்தில் அவர் உருவாக்கியிருந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வேலையை ஏகாதிபத்தியங்கள் அவருக்கு கொடுத்திருந்தன. அவற்றை பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் ஒன்றன்பின் ஒன்றாக நடைமுறைப்படுத்திக் காட்டினார்.

அந்நிய நேரடி முதலீட்டிற்கு (FDI) இருந்த தடைகள் அனைத்தையும் நீக்கிப் பன்னாட்டு நிதிமூலதனச் சூதாடிகள் இந்தியாவில் நேரடியாகத் தங்களது மூலதனத்தைக் கொண்டுவந்து கொட்டவும், இலாபத்தை எடுத்துக் கொண்டு போகவும் பாதையமைத்துக் கொடுத்தார். இதற்குத் தகுந்தபடி இந்தியாவின் தொழிற் கொள்கையையும், வர்த்தகக் கொள்கையையும் மாற்றியமைத்தார்.

நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டும் எனக் கூறி நவரத்தினம் என்று அழைக்கப்பட்ட இலாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்குத் தாரைவார்க்கும் வேலையைத் தொடங்கி வைத்தார்.

வங்கித்துறை சீர்திருத்தம் என்ற பெயரில் கோடிக்கணக்கான இந்திய மக்களின் சேமிப்பை இந்தியத் தரகு முதலாளிகள் சூறையாடுவதற்கு வசதியேற்படுத்திக் கொடுத்தார்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல 1995ம் ஆண்டில் உலக வர்த்தக கழகத்தில் இந்தியாவை இணைத்ததன் மூலம் நாட்டை மீண்டும் காலனியாக்கும் மறுகாலனியாக்கச் சுறுக்குக் கயிற்றை இந்திய மக்களின் கழுத்தில் வலுவாக இழுத்துக் கட்டினார். இந்த வேலைகள் அனைத்தையும் நாட்டின் முன்னேற்றத்திற்காக, மக்களின் முன்னேற்றத்திற்காகச் செய்வதாக கூறிக் கொண்டே நடைமுறைப்படுத்தினார்.

நிதியமைச்சராக ஐந்து ஆண்டுகளில் இந்தளவிற்கு ஏகாதிபத்திய விசுவாசத்தைக் காட்டிய மன்மோகன் சிங், நாட்டின் பிரதமராக இருந்த பத்து ஆண்டுகளில் நாட்டை மொத்தமாக ஏகாதிபத்தியங்களின் காலடியில் கொண்டு சென்று சமர்பிக்கும் வேலையைத் திறம்படச் செய்தார்.

2004 முதல் 2014 வரை பத்தாண்டுகளில் பொருளாதாரக் கொள்கையில் மட்டுமல்ல வெளியுறவுக் கொள்கை, இராணுவக் கொள்கை, உள்நாட்டு விவகாரங்கள் என அனைத்திலும் ஏகாதிபத்திய நலனே பிரதானம் என மாற்றினார் மன்மோகன் சிங்.

இந்தியா ஈரான் நாடுகளுக்கு இடையே பல பத்தாண்டுகளாக நிலவி வந்த நல்லுறவை, அமெரிக்காவிற்காக இந்தியா முறித்துக் கொண்டது. ஈரானிலிருந்து குழாய் மூலம் இந்தியாவிற்கு எரிவாயு கொண்டுவரும் திட்டத்தை கடைசி நேரத்தில் இந்தியா ரத்து செய்தது. அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த அரேபிய நாடுகளிடம் இருந்து அமெரிக்க டாலரில் கச்சா எண்ணை வாங்க வேண்டும் என்ற நிலை மாறி இந்திய ருபாயில் ஈரானின் எரிவாயுவை இந்தியா வாங்கியிருக்க முடியும்.

அந்நியச் செலாவணியாக அமெரிக்க டாலரை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும், அதற்காக அந்நிய நேரடி முதலீட்டைச் சார்ந்திருக்க வேண்டும் என்ற நிலையில் ஈரானிடமிருந்து எரிவாயு வாங்கியிருந்தால் சிறிதளவாவது மாற்றியிருக்க முடியும் ஆனால் அதனை அமெரிக்காவின் அரசியல் நலனை முன்னிறுத்தி இந்தியா கைவிட்டது. இந்தத் திட்டத்தை முன்வைத்த குற்றத்திற்காக அன்றைக்குத் தனது அமைச்சரவையில் பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த மணிசங்கர் ஐய்யரை பதவியை விட்டே தூக்கியடித்தார் மன்மோகன் சிங்.

இது மட்டுமன்றி போர் வெறி பிடித்த ஜார்ஜ் புஷ் அரசுடன் இரகசிய இராணுவ ஒப்பந்தம் செய்து கொண்டு, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா முன்னெடுத்த ஆக்கிரமிப்பு போர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆப்கான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க படைகளுக்கு உதவி செய்ய இந்திய தொழிலாளர்களையும், முன்னாள் இராணுவத்தினரையும் அனுப்பிவைத்தார். போரில் ஈடுபடும் அமெரிக்க போர்க்கப்பல்கள் எரிவாயு நிரப்பிக் கொள்ளவும், பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் வேலைகளைச் செய்து கொள்ளவும் இந்திய துறைமுகங்களைத் திறந்துவிட்டார்.

123 ஒப்பந்தம் என்ற பெயரில் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டு நாட்டின் கொஞ்ச நஞ்ச இறையாண்மையையும் அமெரிக்காவின் காலடியில் சமர்பித்தார். விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்த அமெரிக்க அணு உலைகளை பல ஆயிரம் கோடி கொடுத்து வாங்குவது, அந்த அணு உலைகள் இயங்குவதற்கான மூலப் பொருட்களை பல பத்தாண்டுகளுக்கு அமெரிக்காவிடமிருந்தும் அது கைகாட்டும் நாடுகளிடமிருந்தும் மட்டும் வாங்குவது உள்ளிட்ட சரத்துகளுடன், இந்திய அணு உலைகள் அனைத்தையும் சர்வதேச அணுசக்திக் கழகத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவது. இதற்காக அணு உலைகளில் கேமரா பொருத்தி அதனை சர்வதேச அணுசக்திக் கழக அதிகாரிகளுக்கு போட்டுக் காட்டுவது என மொத்தமாக அமெரிக்காவின் காலில் விழுந்தார் மன்மோகன் சிங்.

அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து அன்றைக்கு காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் மன்மோகன் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறப்போவதாகப் பயமுறுத்திய போது, அப்பழுக்கற்ற, ஊழல் கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரரான மன்மோகன் சிங், எம்.பி.க்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தில் இறங்கினார். இந்திய பாராளுமன்ற வரலாற்றில் அதுவரை இல்லாத வகையில் முதல்முறையாகத் தங்களை விலைக்கு வாங்கக் கொடுக்கப்பட்ட பணத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து கொட்டினார்கள். மன்மோகன் சிங் அரசைக் காப்பாற்ற இந்தியாவில் இருந்த அமெரிக்க தூதரகங்களே நேரடியாக தலையிட்டு எம்பிக்களை விலைக்கு வாங்கியதாக  பின்னர் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போதும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தடையின்றித் தொடர்ந்தன. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி மூலதனத்தை 100% அனுமதித்து கோடிக் கணக்கான சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வேலையை மன்மோகன் சிங் அரசு கடும் எதிர்ப்புக்களையும் மீறி நடத்திக் காட்டியது.

வங்கித் துறையை சீரமைக்கிறோம் என்ற பெயரில் பெரும் பணக்கார முதலாளிகளின் வாராக் கடன்களைத் தள்ளுபடி செய்யும் முறையை அன்றைக்குத் தொடங்கி வைத்ததே மன்மோகன் சிங் அரசுதான்.

பொதுத்துறைப் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை மன்மோகன் சிங் தனது பத்து ஆண்டுகால ஆட்சியில் தொடர்ந்து செய்தார். தொழிலாளர் சேமநல நிதியை (PF) பங்குச் சந்தையில் கொட்டிச் சூதாடுவதை சட்டப்பூர்வமாக்கினார். இந்தியாவிலுள்ள தனியார் வங்கிகளைப் பன்னாட்டு பகாசூர வங்கிகள் கைப்பற்றிக் கொள்வதற்கு வசதியாக, அந்நிய வங்கிகள் இந்திய வங்கிகளில் மூலதனமிடுவதை 74 சதவீதமாக உயர்த்தினார்; இதற்காக வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தைத் திருத்தினார்.

காப்பீட்டுத் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதித்தது, அந்நிய நேரடி மூலதனத்தை அனுமதித்தது என பன்னாட்டு நிறுவனங்களின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்தார்.

வங்கித்துறையில் இவர் கொண்டுவந்த சீர்திருத்தங்கள் எல்லாம் மக்கள் நலனை முன்னிறுத்திக் கொண்டுவரப்படவில்லை. நிதித்துறை முழுவதையும் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து அமெரிக்காவில் உள்ளது போல பன்னாட்டு நிதிமூலதனக் கும்பலின் கையில் ஒப்படைத்துவிடுவதை நோக்கமாகக் கொண்டே அவை நிறைவேற்றப்பட்டன.

தொலைத்தொடர்புத் துறையில் இன்றைக்கு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். முடமாக்கப்பட்டு மூலையில் கிடக்கும் நிலையில் இருப்பதற்கு அச்சாரமிட்டுத் தொடங்கிவைத்தவர் மன்மோகன் சிங் என்றால் அது மிகையாகாது. மன்மோகன் ஆட்சியில்தான் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) என்ற கட்டப் பஞ்சாயத்து அமைப்பைப் பயன்படுத்தி அணில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனமும், ஏர்டெல் உள்ளிட்ட மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களும் பி.எஸ்.என்.எல்.ஐ ஏமாற்றிப் பல ஆயிரம் கோடி சம்பாதித்தனர்.

இந்தியாவின் இயற்கை வளங்களைப் பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாகக் காடுகள் சட்டத்தை திருத்தி, பழங்குடியினர்களுக்கு காடுகளின் மேல் இருந்த உரிமையைப் பிடுங்கினார் மன்மோகன் சிங். தங்களது வாழ்வாதாரம் பறிபோவதை எதிர்த்துப் பழங்குடியினர் போரடிய போது அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது மன்மோகன் அரசு. பன்னாட்டு நிறுவனங்கள் மலைகளைக் குடைந்து சுரங்கம் அமைத்து இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதை எதிர்த்துப் பழங்குடியினர் போராடிய போது, “பச்சை வேட்டை” (Operation Green Hunt) என்ற பெயரில் அவர்கள் மீது போர் தொடுத்தது மன்மோகன் அரசு. இதனை “இந்தியாவின் இதயத்தின் மீதான போர்” என்று எழுத்தாளர் அருந்ததி ராய் அன்றைக்கு கூறினார். நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பையும் மீறி பச்சை வேட்டையைத் தொடர்ந்து நடத்தி பல நூறு பழங்குடியினரைக் கொன்று குவித்தது மன்மோகன் அரசு.

மன்மோகன் சிங்கின் ஆட்சியில் ஊழலும், முறைகேடுகளும் நிரம்பி வழிந்தன ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல் என நிர்வாகம் புளுத்து நாறியது.

இன்றைக்கு மன்மோகன் சிங்கை புகழ்பவர்கள் அவர் கொண்டு வந்த பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நாட்டை முன்னேற்றியிருப்பதாகவும், மக்களின் வாழ்நிலையை மேம்படுத்தியிருப்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால் மன்மோகனின் ஆட்சியில் இந்தியத் தரகு முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும் தான் பலனடைந்தார்கள். அம்பானியையும் டாடாவையும் உலகப் பணக்காரர்களாக்கவே மன்மோகன் சிங் உழைத்தார். நாள் ஒன்றுக்கு 32 ருபாய் சம்பாதித்தாலே வறுமைக் கோட்டிற்கு மேலே இருக்கிறார்கள் என மாற்றி 138 கோடி பேரை வறுமையிலிருந்து காப்பாற்றிவிட்டதாக மன்மோகன் சிங் நாடகமாடியதை மறக்க முடியுமா? அவரது ஆட்சியின் போதுதான் பல இலட்சம் விவசாயிகள் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டனரே அதைத்தான் மறக்க முடியுமா? விவசாயம் நட்டமடைவதைத் தடுக்க முடியாது, விவசாயம் நட்டமடைந்தால்தான் தொழிற்துறை வளரும் என மன்மோகன் சிங் கூறியதைத்தான் மறக்க முடியுமா?

நாட்டை மீண்டும் ஏகாதிபத்திய நிறுவனங்களின் காலனியாக மாற்றும் மறுகாலனியாக்க நிகழ்ச்சிப் போக்கின் முக்கியமான சூத்திரதாரிதான் இந்த மன்மோகன் சிங். இந்திய நாட்டின் நிதியமைச்சராகவும், பிரதமராகவும் இருந்து அவர் செய்த சீர்திருத்தங்கள் எல்லாம் ஏகாதிபத்தியங்களின் ஏஜென்டாக நாடு மறுகாலனியாவதற்கான பாதையைச் செவ்வனே சீர்திருத்திக் கொடுப்பது தான். மன்மோகன் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் இந்திய உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பிடுங்கி அவர்களை வாழவழியில்லாத நிலைக்குத் தள்ளியதுதான், வளர்ச்சி என்ற கவர்ச்சி வாக்குறுதிகளைக் கொடுத்து பாசிச மோடி தேர்தலில் வென்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற உதவியது.

  • அறிவு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன