பள்ளி மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து குலக் கல்வியை புகுத்தும் புதிய கல்விக் கொள்கையின் சதி.

ஐந்தாவது வகுப்பிற்குமேல் தேர்ச்சியடையத் தவறும் மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திறன் மேம்பாட்டுப்பயிற்சி அளிக்கப்படும் என புதிய கல்விக் கொள்கை கூறும்போது, அந்த மாணவர்களின் உடல் தகுதியையும் பார்த்துப் பயிற்சி அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனக் குறிப்பிடுகிறது. மூளை உழைப்புக்கு பார்ப்பனர்கள், உடல் உழைப்புக்கு கீழ்சாதியினர் என்ற சனாதன தர்மத்தைத்தான், புதிய கல்விக் கொள்கை சுற்றிவளைத்துக் கொண்டு வருகிறது. அதனை அமுல்படுத்தும் முதல் படியாகத்தான் கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்ய எத்தனிக்கிறது.

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து “குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமை (திருத்தம்) விதிகள், 2024” என்ற பெயரில் ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள டிசம்பர் 16 தேதியிட்ட அறிவிப்பாணையில், 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கு இறுதி ஆண்டு தேர்வு நடத்தி தகுதிப்பெற்ற மாணவர்களுக்கு மட்டும் தேர்ச்சி அளிக்கவும், தகுதி அடையாத மாணவர்களுக்கு 2 மாதங்கள் பின்னர் மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மறுதேர்விலும் தேர்ச்சியடையாத மாணவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டில் இயற்றப்பட்ட இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை கொண்டு வரப்பட்டு இன்று வரை அமுலில் உள்ளது. மோடி அரசு பதவியேற்ற பிறகு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய வேண்டும் என பல முறை முயற்சி செய்யப்பட்டது.

ஆனால் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில், கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, கட்டாய தேர்ச்சி முறையில் மாநிலங்கள் விருப்பத்திற்கு ஏற்ப 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கு தேர்வு நடத்தி கொள்ள அனுமதிக்கப்பட்டது. அதற்குப் பிறகு குஜராத், ஒடிசா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் தில்லி உள்ளிட்ட 2 யூனியன் பிரதேசங்களில் 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கு தற்போது இறுதி ஆண்டு தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் தான் ஒன்றிய அரசின் தற்போதைய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவே விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும். இதன் மூலம் மாணவர்களின் திறன் மேம்பாடு குறித்து தொடர்ந்து கண்கானிக்கவும், மாணவர்களின் கற்றல் இடைவெளிகளைக் கண்டறிந்து அதற்குத் தகுந்தது போல சிறப்பு கவனம் கொடுத்து அவர்களை வளர்ப்பதற்கு முயற்சி எடுக்கப்படும் என இந்த நடவடிக்கையின் நோக்கத்தை ஒன்றிய பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் சஞ்சய் குமார் நியாயப்படுத்துகிறார்.

அதே சமயம் மோடி அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்துவதற்காகத்தான் இந்த நடவடிக்கை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக கல்வித்துறை அதிகாரிகள் பலரும் செய்தி ஊடகங்களிடம் கூறி வருகின்றனர். புதிய கல்விக் கொள்கை 2020ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டாலும் அதற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (National Curriculum Framework) 2023ம் ஆண்டுதான் வெளியிடப்பட்டதால் இந்த மாற்றத்தைச் செய்வதற்கு இவ்வளவு கால தாமதம் ஆனதாக ஒன்றிய அரசின் கல்வித் துறையின் மூத்த அதிகாரிகள்  தெரிவித்ததாக தி இந்து பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.[1]

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை விமர்சிக்கும் கல்வியாளர்களும், ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளும் இதனை புதிய கல்விக் கொள்கையின் அங்கமாக பார்ப்பதில்லை. பொருளாதாரத்திலும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய, மாணவர்கள் கல்வி கற்கும் விதத்திலும், கிராமபுறத்தில் இருக்கும் மாணவர்களுக்கு பள்ளி கல்வி கிடைக்கும் வகையில், இடைநிற்றலை தடுக்கவும், கட்டாய தேர்ச்சி முறை உதவும் என்றும் அதனை தற்போது நீக்கியிருப்பது அம்மாணவர்கள் கல்வி கற்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் பொதுவாக கருத்துக் கூறி ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்களுக்கு பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வை நடத்துவது என்பது பள்ளிக் கல்வியில் குலக் கல்வி முறையை புகுத்தும் நடவடிக்கை என்பதை இவர்கள் அனைவரும் பார்க்கத் தவறுகின்றனர். காவி கார்ப்பரேட் பாசிச மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையின் படி இதுவரை உள்ள 10 + 2 என்ற முறைக்கு பதிலாக 5 + 3 + 3 + 4 என பள்ளிக் கல்வியை மாற்ற உள்ளனர். அதாவது 10வது மற்றும் 12வது பொதுத் தேர்வுகள்தான் இதுவரை மாணவர்களின் உயர்கல்வியையும், எதிர்காலத்தையும் நிர்ணயிப்பதாக உள்ளன.

புதிய கல்விக் கொள்கையின் படி முதல் 5 வருடங்களுக்கு பிறகு அதாவது ஐந்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்கள் தரம் பிரிக்கப்படுவார்கள். தேர்ச்சியடையத் தவறும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி (Vocational training) வழங்கப்படும். அவர்கள் அதற்குப் பிறகு மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் என எந்த உயர்கல்விக்குள்ளும் செல்ல முடியாது. 5ம் வகுப்பிலேயே மாணவர்களைத் தரம் பிரிக்கும் நோக்கத்திற்காகவே கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுகிறது.

கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள், நகர்ப்புறங்களில் உதிரித் தொழிலாளர் குடும்பப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள் ஆகியோரைத்தான் இந்த விதி கடுமையாகப் பாதிக்கும். சிறப்புக் கவனம்கொடுத்துக் கைதூக்கிவிடவேண்டிய இந்த வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களை நைச்சியமான வழியில் பள்ளிக் கல்வியிலிருந்து அப்புறப்படுத்த முனைகிறது, பாசிச மோடி அரசு.

பார்ப்பனர் அல்லாத சாதிகளுக்குக் கல்வியறிவு தேவையில்லை என மனுதர்மம் கூறியது என்றால், அடித்தட்டு சாதி மற்றும் வர்க்கங்களுக்கு ஆரம்பக் கல்விக்கு அப்பால் தேவையில்லை என்கிறது, புதிய கல்விக் கொள்கை.

ஐந்தாவது வகுப்பிற்குமேல் தேர்ச்சியடையத் தவறும் மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திறன் மேம்பாட்டுப்பயிற்சி அளிக்கப்படும் என புதிய கல்விக் கொள்கை கூறும்போது, அந்த மாணவர்களின் உடல் தகுதியையும் பார்த்துப் பயிற்சி அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனக் குறிப்பிடுகிறது. மூளை உழைப்புக்கு பார்ப்பனர்கள், உடல் உழைப்புக்கு கீழ்சாதியினர் என்ற சனாதன தர்மத்தைத்தான், புதிய கல்விக் கொள்கை சுற்றிவளைத்துக் கொண்டு வருகிறது. அதனை அமுல்படுத்தும் முதல் படியாகத்தான் கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்கிறது. மற்ற சாதியினருக்குக் கல்விபெறும் உரிமையை மறுத்ததன் மூலம் பார்ப்பனர்கள் தம்மை அறிவுஜீவிகளாகக் காட்டிக்கொண்ட அயோக்கியத்தனத்தைத்தான் புதிய கல்விக்கொள்கை மீண்டும் அமலுக்குக் கொண்டுவர எத்தனிக்கிறது.

கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்ய வேண்டும் எனப் பரிந்துரைத்து இணையவெளியிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் பேசும் காவிக் கும்பலை சேர்ந்தவர்கள், 10 மற்றும் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெறத் தவறுவதையும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒழுங்காக வாசிக்க கூடத் தெரியவில்லை என்பதையும் சுட்டிக் காட்டி தங்களது கருத்தை நியாயப்படுத்துகின்றனர்.

இன்றைக்கு பள்ளி மாணவர்களின் படிப்புத்திறன் வீழ்ச்சியடைந்திருக்கிறது என்பது உண்மை என்றாலும், அதற்குக் காரணம் கட்டாயத் தேர்ச்சி முறையோ, மாணவர்களோ அல்ல. அரைகுறை உண்மைகளை வைத்துக் கொண்டு திரித்துப் புரட்டுவது பார்ப்பனக் கும்பலுக்குக் கைவந்த கலை என்பதால், மாணவர்களின் மீதும் தேர்ச்சி விதியின் மீதும் பழியைப் போட்டுவிட்டு, இப்பிரச்சினையிலிருந்து அரசினைத் தப்பவைக்க இவர்கள் முயலுகின்றனர்.

பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை, ஒவ்வொரு புலத்துக்கும் ஏற்ற சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பது, பள்ளிக்கூடங்கள் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், திண்ணைப் பள்ளிகளாகவோ, மரத்தடிப் பள்ளிகளாகவோ இருப்பது மற்றும் ஆசிரியர்களின் அக்கறையின்மை இவைதான் பள்ளிக் கல்வியின் தரம் வீழ்ச்சியடைந்திருப்பதற்கு முக்கிய காரணங்கள். இவற்றை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் கொண்ட அரசு, அதிலிருந்து கழன்று கொள்ளும் தீய நோக்கில்தான் தேர்ச்சி விதியை மாற்றியமைக்கும் முடிவை அறிவித்திருக்கிறது.

தற்போது கட்டாயச் தேர்ச்சிய ரத்து செய்துள்ள ஒன்றிய அரசின் அறிவிப்பு ஒன்றிய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகள் உள்ளிட்ட 3000 பள்ளிகளுக்குத்தான் பொருந்தும் என்பதால் தற்போதைக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநில பள்ளிகளில் இது பெரும் தாக்கத்தைச் செலுத்தாது என்றாலும் இதன் மூலம் பள்ளிக் கல்வியில் குலக்கல்வி முறையைப் புகுத்த எத்தனிக்கும் புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்துவதில் காவி கார்ப்பரேட் பாசிசம் ஒரு அடி முன்னே எடுத்து வைத்துள்ளது. தனது நோக்கத்தை நிறைவேற்றுவதில் முன்வைத்த காலை பாசிசம் என்றைக்கும் பின் வைக்காது, நாம் அதனைப் போராடி வீழ்த்தாத வரை.

  • அறிவு  

 

தகவல் உதவி

[1] https://www.thehindu.com/education/centre-scraps-no-detention-policy-for-classes-5-and-8-students-who-fail-to-clear-year-end-exams/article69018641.ece

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன