ஊழல் வழக்கில் முடக்கப்பட்ட
அஜித் பவாரின் சொத்துக்கள் விடுவிப்பு
ஊழல்வாதிகளை உத்தமர்களாக்கும்
பாஜகவின் மோடிவித்தை

ஊழல் வழக்குள்ள எதிர்கட்சி நபர்களை அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை மூலம் ரெய்டு நடத்தி விசாரணையை உட்படுத்துவது, அந்நபர் பாஜகவில் இணைந்துவிட்டால் ஊழலற்றவர் என்று நற்சான்றளித்து வழக்கை மூடிவிடுவது. ஊழலை சுத்தம் செய்யும் இந்த வாசிங் மிசின் அனுகுமுறையை ஆட்சியைப் பிடிப்பதற்கான ஒரு உத்தியாகவே பாஜக செய்துவருகிறது. இதன்மூலம், தான் ஆட்சியமைக்கும் மாநிலங்களை தனது காவி-கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்காக பரிசோதனைக் கூடமாகவும் பயன்படுத்துகிறது.

 

 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமானவரித்துறை பதிவு செய்த பினாமி சொத்து வழக்கில் முடக்கப்பட்டு இருந்த ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் விடுவிக்கப்படுவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அஜித் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்ற அடுத்த நாளே வந்துள்ளது.

அஜித் பவார், மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியின் நிர்வாகக் குழுவில் இருந்த போது (2010) மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி ஜராந்தேஷ்வர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை குறைந்த விலைக்கு ஏலம் விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சர்க்கரை ஆலையை குரு கமாடிட்டி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் வாங்கியது. இந்நிறுவனத்திற்கு அஜித் பவார் மற்றும் அவரது மனைவி சுனேத்ராவுடன் தொடர்புடைய ஸ்பார்க்லிங் சாயில் பிரைவேட் லிமிடெட் மூலம் நிதியளிக்கப்பட்டதாகவும் குரு கமாடிட்டி சர்வீசஸ் ஒரு பதிலி உரிமையாளராக செயல்பட்டதாகவும், உண்மையான கட்டுப்பாடு அஜித் பவாரின் ஸ்பார்க்லிங் சாயில் நிறுவனத்தின் வசம் உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனையடுத்து 2021ல், வருமான வரித்துறை அஜித் பவாருக்கு தொடர்புடைய மும்பை, புனே, பாராமதி, கோவா மற்றும் ஜெய்ப்பூரில் சுமார் 70 இடங்களில் சோதனை நடத்தியதில் ரூ.183 கோடி மதிப்புள்ள கணக்கில் வராத மற்றும் பினாமி பரிவர்த்தனைகளைக் கண்டுபிடித்தது. இதையடுத்து அஜித் பவாரின் குடும்பத்தினர் மற்றும் அவரோடு தொடர்புள்ளவர்களுக்கு சொந்தமான 1,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது.

இந்த வழக்கு, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது போடப்பட்டது. 2023 ல், அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது ஆதரவு எம். எல்.ஏ.க்களை திரட்டி கொண்டு பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்தார். அதன் பிறகு மகாராஷ்டிரத்தில் அமைந்த பாஜக-ஷிண்டே-அஜித்பவர் கூட்டணி ஆட்சியில் துணைமுதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அஜித்பவார், பாஜக கூட்டணிக்கு வந்த பின்பு அவர் மீது போடப்பட்டுள்ள பல ஊழல் வழக்குகளிலிருந்து அவரை படிப்படியாக விடுவித்து வருகிறது பாஜக. 

அஜித் பவார் மீது இரண்டு ஊழல் வழக்குகள் உள்ளது. ஒன்று, 1999-2009 காலக்கட்டத்தில் நீர்பாசனத்துறை அமைச்சராக இருந்தபோது நீர் பாசன திட்டத்தில் செய்திருந்த 37000 கோடி ஊழல். மற்றொன்று, மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியின் நிர்வாக பொறுப்பில் இருந்த போது, சர்க்கரை ஆலையை குறைந்த விலைக்கு ஏலம் விட்டதில் செய்த ஊழல். இவ்விரு ஊழல்களையும், மகாராஷ்டிரா மாநிலத்தின் ஊழல் தடுப்பு பிரிவு மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. அடுத்தடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி ஆட்சியே மாகாராஷ்ட்ராவில் அமைந்ததால் அஜித் பவார் மீது நடவடிக்கைகள் எதும் எடுக்கப்படவில்லை. ஆனால் 2014 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அஜித் பவாரின் ஊழலை வைத்துதான் பாஜக பிரச்சாரம் செய்தது. மோடியும் பட்னாவிசும், பாஜக ஆட்சிக்கு வந்தால் அஜித்பவார் ஜெயிலுக்கு போவது உறுதி என்று பேசினர்.

இவ்விரு ஊழல் வழக்குகளில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் மோடியின் அமலாக்கத்துறை பண மோசடி வழக்கையும் வருமான வரித்துறை பினாமி சொத்து வழக்கையும் பதிவு செய்து விசாரித்து வந்தது. 2023ல் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து பாஜகவுக்கு ஆதரவு கொடுத்து துணை முதலமைச்சர் ஆன பிறகு இந்த இரு ஊழல் வழக்குகளில் இவருக்கு தொடர்பு இல்லை என்று கூறி மகாராஷ்டிரா மாநிலத்தின் ஊழல் தடுப்பு பிரிவும் பொருளாதார குற்றப்பிரிவும் வழக்கை முடித்து வைத்தது. தற்போது மோடியின் வருமான வரித்துறை சர்க்கரை ஆலையை ஏலம் விட்டதில் அஜித்பவார் எந்த முறைகேடுகளும் செய்யவில்லை என்று கூறி பினாமி வழக்கிலிருந்து விடுவித்துள்ளது. ஆனால் அமலாக்கத்துறையினரால் பதியப்பட்ட இரு வழக்குகள் இன்னும் விசாரனையில் தான் உள்ளது. அஜீத் பவார், பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கின்ற வரை இந்த வழக்குகள் மீது எந்த நடவடிக்கையும் இருக்காது என்பதை உறுதியாக நம்பலாம்.

* * * * * * * * *

அஜித் பவாரின் சொத்துக்கள் விடுவிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி “மோடியுடன் சேருங்கள் – உங்கள் அனைத்து கரைகளையும் துடையுங்கள், அதிக பணம் சம்பாதியுங்கள்”, என்று விமர்சித்துள்ளது காங்கிரஸ் கட்சி. இதில் உண்மையில்லாமலும் இல்லை. முதலில் ஊழல் வழக்குள்ள எதிர்கட்சி நபர்களை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் பிற ஏஜென்சிகள் மூலம் ரெய்டு நடத்தி விசாரணையைத் உட்படுத்துவது, அந்த ஊழல் பேர்வழி பாஜகவில் இணைந்துவிட்டால் ஊழல் எதுவும் நடக்கவில்லை என்று சான்றளித்து வழக்கை மூடிவிடுவது. ஊழலை சுத்தம் செய்யும் இந்த வாசிங் மிசின் அனுகுமுறையை ஆட்சியைப் பிடிப்பதற்கான ஒரு உத்தியாகவே பாஜக வைத்துள்ளது. இதன் மூலம் பலரின் ஊழல் கரையை அகற்றியிருக்கிறது பாஜக.

“ஊழலை ஒழிப்பது இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக அவசியம். எனவே எந்த தருணத்திலும், ஊழல் செய்தவர்களை தண்டிக்காமல் விடமாட்டேன் பிறரை ஊழல் செய்யவும் விடமாட்டேன்” என்றார் மோடி. ஊழலை ஒழிக்க வந்த கட்சி பாஜக என்பதுதான் அவர்களின் தேர்தல் பிரச்சார் முழக்கம். ஆனால் எதார்த்தத்தில், பாஜக என்பதே ஒரு ஊழல் கம்பெனி என்பதைத் தாண்டி, தான் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க பிற கட்சிகளிலுள்ள ‘ஊழல் கறை படிந்தவர்களையெல்லாம்’ தன் கட்சியில் சேர்த்துக் கொண்டு அவர்களை ஊழலற்றவர்களாக பரிசுத்தம் செய்து விடுகிறது. அதற்கு அஜித் பவார் உள்ளிட்ட பல உதாரணங்கள் உண்டு.

தற்போது அசாம் மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஹேமந்த பிஸ்வாஸ் சர்மா முன்பு காங்கிரஸில் இருந்தவர். காங்கிரஸ் ஆட்சியில் குடிநீர் விநியோகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக பாஜக அவர் மீது குற்றம் சாட்டியது. வெள்ளை அறிக்கையும் வெளியிட்டது. ஹேமந்த பிஸ்வாஸ் சர்மா பாஜகவுக்கு தாவியவுடன் அவர் மீது போடப்பட்ட ஊழல் வழக்கில் பிஸ்வாஸ் குற்றமற்றவர் என முடித்து வைக்கப்பட்டது.

மகாராஷ்டிராவின் நாராயன் ரானே காங்கிரஸில் இருந்தவர் அவர் மீது CBI மற்றும் ED பல வழக்குகளை பதிவு செய்தது. பாஜகவில் சேர்ந்தவுடன் இந்த வழக்குகள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்டது. தற்போது Mr. clean ஆக மோடி அமைச்சரவையில் மந்திரியாக உள்ளார். மேற்கு வங்க திரிணமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் சுவெந்து அதிகாரி. சாரதா சிட் ஃபண்ட் ஊழலில் பல்லாயிரம் கோடி மோசடி செய்ததாக அவர் மீது அமலாக்க துறையும் மத்திய புலனாய்வு துறையும் வழக்கு பதிவு செய்தது. சுவெந்து அதிகாரி பாஜக வில் சேர்ந்தவுடன் அவர் மீது இருந்த அனைத்து வழக்குகளும் மூடப்பட்டுவிட்டது. பாஜக கூறும் ஊழல் ஒழிப்பின் யோக்கியதை இதுதான்.

காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் நிலைக்காக அனுதாபப்படுவது நமது நோக்கமல்ல. ஏனெனில் தேர்தல் ஜனநாயகம் என்பதே ஒரு நரகல். அதில் உள்ள நல்லதைப் பற்றி பேசுவதெல்லாம் முட்டாள்த்தனம். ஓட்டுக் கட்சிகள் இந்தியாவில் அமல்படுத்தி வந்த தனியார்மய தாராளமயக் கொள்கையின் விளைவாக செய்துள்ள ஊழல் முறைகேடுகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது பாஜக என்பதுதான் இங்கே மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம்.

இது போன்ற வழிகளின் மூலம் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பது மட்டுமே பாஜகவின் நோக்கமல்ல. தான் ஆட்சியமைக்கும் மாநிலங்களை தனது காவி-கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைக்கு பரிசோதனைக் கூடமாகவும் பயன்படுத்துகிறது. முஸ்லிம் விரோதப் பிரச்சாரம், மாட்டுக் கறிக்கு தடை, இந்து மத பண்டிகைகள் அரசு நிகழ்ச்சியாக நடத்துவது, பொது சிவில் சட்டம் கொண்டுவருவது, தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது, மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவது, தொழிலாளர்-விவசாயிகளை ஒடுக்குவது, கார்ப்பரேட்டுகளின் கட்டற்ற சுரண்டலுக்கு தேவையான சட்ட திட்டங்களை கொண்டு வருவது போன்ற அனைத்துமே பாஜக ஆளும் மாநிலங்களில் உடனுக்குடன் அமல்படுத்தப்படுகின்றன. அஸ்ஸாம், ஹரியானா, மகாராஷ்ட்ரா, உத்திரபிரதேச மாநில பாஜக அரசின் செயல்பாடுகளை கவனித்தாலே இதை புரிந்து கொள்ள முடியும்.

  • அழகு

தகவல் ஆதாரம்

https://www.hindustantimes.com/india-news/washing-machine-cong-mp-gives-notice-in-lok-sabha-over-clean-chits-to-chandrababu-naidu-ajit-pawar-101733723044593.html

https://thewire.in/politics/day-after-ajit-pawar-takes-oath-as-deputy-cm-i-t-dept-clears-properties-seized-in-2021-report

Ajit Pawar: ED to Pursue 2 Key Probes Despite I-T Relief in Benami Cases | Mumbai News – Times of India

Income Tax Tribunal Clears Ajit Pawar in Benami Property Case

https://www.udayavani.com/english-news/bjp-washing-machine-from-which-accused-in-years-old-cases-come-out-spotless-congress

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன