இரயில்வே இலாபத்திற்கா? சேவைக்கா?

இரயில்வே பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் விதமாக, அதிவேக விரைவு இரயில்களான வந்தே பாரத், தேஜாஸ், கதிமான், போபால் சதாப்தி, இராஜஸ்தானி போன்றவைகள் இயக்கப்படுகிறது. மேலும், இதர அனைத்து விரைவு இரயில்களிலும் தூங்கும் வசதிக் கொண்ட முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளதாக “இரயில்வே நிர்வாகம்” அறிவித்துள்ளது.

அதிவேக விரைவு இரயில்கள் அனைத்தும் குளிர்சாதன வசதிகளுடன் முன்பதிவு செய்யப்பட்டு, கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்கக் கூடியவை. அதாவது, சென்னையில் இருந்து திருச்சி வரை சாதாரண முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் பயணக் கட்டணம் ரூபாய் 130 வரை என்றால், அதிவேக விரைவு இரயில்களில் கட்டணம் ரூபாய் 750 முதல் 1300 வரை வசூலிக்கப்படுகிறது. இவற்றில், முன் பதிவு செய்யப்படாத குறைந்த கட்டணத்துடன் பயணம் செய்யக்கூடிய சாதாரண பெட்டிகளே கிடையாது. வேண்டுமானால், வசதிப் படைத்தவர்கள் சொகுசாகப் பயணம் செய்வதை, வெளியில் இருந்து விமானத்தைப் போல வேடிக்கைப் பார்க்கலாம். ஒரு சிலரை சொகுசாகப் பயணிக்க விட்டு, மற்றவர்களை அதற்காக ஏங்க வைப்பதைப் தவிர வேறென்ன?

விரைவு இரயில்களிலும் முன்பதிவு செய்யப்பட்ட தூங்கும் வசதிக் கொண்ட பெட்டிகள் கூடுதலாக இணைக்கப் போவதாக தற்போது ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது இரயில்வே நிர்வாகம். இவை, இணைக்கப்போவதாக கூறுவது, புதிய கூடுதல் பெட்டிகள் அல்ல. விரைவு இரயில்களில் ஏற்கனவே உள்ள முன்பதிவு செய்யப்படாத சாதாரண மக்கள் குறைந்தக் கட்டணத்தில் பயணிக்கக் கூடியப் பெட்டிகளை சற்று சேர்த்து விட்டு, அப்பெட்டிகளுக்கு பதிலாக முன்பதிவு செய்யப்பட்ட தூங்கும் வசதிக் கொண்ட பெட்டிகளை இணைப்பதாக கூறுவது எவ்வளவு பெரிய மோசடி?

ஏனெனில், விரைவு ரயில்களில், ஏற்கனவே இருந்து வந்த முன்பதிவு செய்யப்படாத, சாதாரண மக்கள் குறைந்தக் கட்டணத்தில் பயணித்த ஆறு (6) பெட்டிகளை மூன்று (3) பெட்டிகளாகக் குறைத்ததும், மூத்த குடிமக்களின் பயணக் கட்டண சலுகையை இரத்து செய்ததும் ‘மகா கணம் பொருந்திய’ பாசிச மோடி அரசின் சாதனை என்பதை எவரும் மறந்திருக்க முடியாது. அச்சலுகையை, மீண்டும் மூத்த குடிமக்களுக்கு வழங்கும் படி, தற்போதைய மக்களவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளதையும் நினைவூட்டுகிறோம்.

தற்போதைய மக்களவைக் கூட்டத்திலும் இரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் குளிர்சாதனப் பெட்டிகளை அதிகரிக்காமல், பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை நாடு முழுவதும் டிசம்பருக்குள் 1000 பெட்டிளாகவும் (எந்த டிசம்பர் என்பது அஸ்வினிக்குதான் தெரியும்) விரைவில் 10,000 பெட்டிகளை தயாரிப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதாக திருவாய் மலர்ந்துள்ளார். இந்த அறிவிப்பும் மோசடியானவை என்பதை சொல்லி புரிய வைக்க வேண்டியது அவசியம் என கருதுகிறோம். ஏனெனில், மந்திரியின் அறிவிப்பில், குளிர்சாதனப் பெட்டிகளை அதிகரிக்காமல், மாறாக பொதுப்பட்டிகளை அதிகரிக்கப் போவதாகத் தான் கூறியுள்ளாரே தவிர, முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதியுடன் கூடிய பெட்டிகள் எத்தனை? முன்பதிவு செய்யப்படாத, குறைந்தக் கட்டணத்துடன் கூடிய சாதாரண பெட்டிகள் எத்தனை என்பதை அறிவிக்கவில்லை. இதிலிருந்தே இவர்களின் நயவஞ்சகத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஏற்கனவே, முன்பதிவு செய்யப்படாத குறைந்தக் கட்டணத்தில் பயணிக்கக் கூடிய சாதாரணப் பெட்டிகளை இரத்து செய்யும். இவர்கள் சாதாரணப் பெட்டிகளை அதிகரிக்கப் போவது இல்லை என்பது நிச்சயம். அதிகரித்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு போதிய இருக்கைகள் இல்லாமல், படுமோசமான நிலையில் நடைபாதைகளிலும், அதன் இருக்கைகளிலும், கழிவறைகளிலும், உயிரைப் பறிக்கும் கதவோரங்களிலும் பயணிக்க வேண்டிய அவல நிலையே மீண்டும் நீடிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் வேண்டாம்.

இது ஒரு புறமிருக்க, அதிகரித்து வரும் விபத்துகளைத் தடுக்க ரயில்வே கட்டுமானங்களை மறுசீரமைக்க முன்வரவில்லை. அதற்கு தேவையான தொழிலாளர்களை நிரந்தரமாக நிரப்ப வில்லை; அதற்கேற்ப நிதியையும் ஒதுக்கவில்லை. மனித உயிர்களை, மாடுகளுக்காக கொலை செய்யும் இவர்களிடம், மனித உயிர்களைப் பற்றி கவலைப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம் தான். அதனால் தான், குறைந்த ஆட்களை வைத்தே, ஒப்பேற்றுவது என்கிற வகையில், மனித உயிர்கள் மீது அக்கறையில்லாமல் சுரண்டல் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, ஒன்றிய அரசின் இரயில்வே நிர்வாகம். அதிகரித்து வரும் விபத்துகளைத் தடுக்க வக்கற்ற ஒன்றிய இரயில்வே மந்திரி, இரயில்வே நிலையங்களை மறு கட்டமைப்புச் செய்யப் போவதாகக் கூறுவது என்பது எவ்வளவு பெரிய வக்கிரம்?

சேவைத்துறை என்கிற வகையில் போக்குவரத்துத் துறைகளில் ஒன்றான இரயில்வே துறையை, பெரும்பான்மை மக்களின் போக்குவரத்து நலனைக் கணக்கில் கொண்டு இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்தக் கட்டணத்திலோ இயக்க வேண்டியது அவசியம். இது ‘மக்கள் நல அரசின்’ கடமையும் கூட. அதைவிடுத்து, சேவைத்துறையை இலாபம் பார்க்கும் நோக்கில், தனியார் மையத்தை நோக்கி நகர்த்திச் செல்லும். மறுகாலனியாக்கத்தைத் தீவிரப்படுத்தி வரும் எந்த ஆட்சியாளர்களாலும், மக்களுக்கான சேவைத் துறையான போக்குவரத்து போக்குவரத்தை குறைந்தக் கட்டணத்திலோ, கட்டணமில்லாமலோ இயக்க முடியாது.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றவோ அல்லது தக்க வைத்துக் கொள்ளவோ, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்தை ‘திராவிட மாடல் அரசைப் போல’ அறிவிக்கலாம். அவைக் கூட டீலக்ஸ் போன்ற சிறப்புப் பேருந்துகளுக்குப் பொருந்தாது. இந்த இழப்பைக் கூட அந்தந்த குடும்ப ஆண் உறுப்பினர்களுக்கு சாராயத்தை ஊத்திக் கொடுத்தும், போக்குவரத்து ஊழியர்களின் ஊதியத்தை – ஓய்வூதியத்தை வெட்டியும், போனஸ் போன்ற இதர ஊக்க ஊதியங்களைக் குறைத்தும் ஈடு செய்து விடுவார்கள்.

கல்வி, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து, தொலை தொடர்பு போன்ற இதர அனைத்து சேவைத்துறைகளையும் மறுக்காலனியாக்கச் சுரண்டலுக்கு ஏற்ப தாராளமாக்குவதையும் அரசு பொதுத்துறைகளை தனியார்மயமாக்குவதையும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல், எந்த கொம்பனாலும் சேவைத் துறைகள் அனைத்தையும் கட்டண மில்லாமலோ, குறைந்தக் கட்டணத்திலோ இயக்கவோ, பராமரிக்கவோ முடியாது என்பதை நிதர்சனம்.

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன