காவி பாசிச சித்தாந்த கருத்துக்கள் அரசின் உறுப்புகளில் தொடர்ந்து விஷம் போலப் பரவி வருகிறது. இதற்கு நீதித்துறையும் விலக்கல்ல என்பது அவ்வப்போது வரும் நீதிமன்றத் தீர்ப்புகளிலும், நீதிபதிகளின் கருத்துக்களிலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. காவி பாசிஸ்டுகளின் கோட்டையாக உள்ள உத்திரபிரதேசம், குஜராத் மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறும். ஆனால் காவிகளுக்கு சிம்மசொப்பனமாக இருப்பதாக திராவிட கட்சிகள் மார்தட்டிக் கொள்ளும் தமிழ்நாட்டின் நீதிமன்றங்களிலும் கூட காவி பாசிச சித்தாந்தம் எந்த அளவிற்கு ஊடுருவியுள்ளது என்பதை, மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் சமீபத்தில் தெரிவித்திருக்கும் கருத்து துலக்கமாக எடுத்துக்காட்டுகிறது.
மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் சமீபத்தில் ஒரு வழக்கு விசாரணையின் போது, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கை வெளிவந்த பிறகுதான் நெற்றியில் பொட்டு வைக்க ஆரம்பித்ததாகக் கூறியிருக்கிறார். அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிரந்தர டீன்களை நியமிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணையின் போது வழக்கிற்கு துளியும் சம்பந்தம் இல்லாமல், “பள்ளிகளில் சாதிய மோதல்களைத் தவிர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரைகள் என்னைப் பொறுத்த அளவில் ஏற்புடையது அல்ல. சாதியப் பாகுபாடு எண்ணங்களை ஒழிக்க வேண்டும் எனில் சகிப்புத்தன்மை அதிகரிக்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதியின் அறிக்கைக்கு பிறகே, நான் பொட்டு வைத்து வருகிறேன்” என்று நீதிபதி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.[1]
பள்ளிகளில் சாதிய மோதல் நடப்பதைத் தடுப்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் கமிசன், அளித்துள்ள பரிந்துரைகளில், பள்ளி மாணவர்கள் தங்களது சாதியைக் காட்டும் வகையில் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு குறிப்பிட்ட வண்ணத்தில் கயிறு கட்டிக் கொண்டு வருவது என்பது, அவர்கள் சாதி ரீதியிலாக ஒருங்கிணையவும், மற்ற சாதி மாணவர்களை அடையாளம் காணவும் வழி செய்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் இது படிக்கும் மாணவர்கள் மத்தியில் இளம் வயதிலேயே சாதிய பாகுபாடுகளைக் கற்பிப்பதுடன், பள்ளி மாணவர்களிடையே சாதி மோதல்களுக்கு வித்திடுகிறது என்பதால் பள்ளி மாணவர்கள் கைகளில் பலவண்ணக் கயிறுகளைக் கட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது என செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த செய்தி வெளியானவுடனேயே, பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவைக் கடுமையாக விமர்சித்திருந்தார். தமிழகத்தைப் பொருத்தவரை சாதிதான் பாஜகவின் அரசியல் அடித்தளம். மக்கள் சாதிரீதியாகப் பிளவுபட்டு நிற்கும்போதுதான் அவர்களால், தங்களது மதவாத அரசியலை எந்த தடையும் இன்றி எடுத்துச் செல்ல முடியும். ஆகையால், மாணவர்கள் மத்தியில் சாதிய மோதலைத் தடுக்க, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு சில பரிந்துரைகளைக் கொடுத்துள்ளார். அப்பரிந்துரைகள் என்னவென்று படிப்பதற்கு முன்பே அண்ணாமலைக்கு கடுமையான ஆத்திரம் ஏற்படுவது வெள்ளிடைமலை ஆனால் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இத்தனை ஆற்றாமை ஏன் ஏற்பட வேண்டும்?
இதற்கு முன்பும் கூட 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது, பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு நடத்திய ஆய்விற்கு பிறகு தமிழக பள்ளிக் கல்வித்துறை, மாணவர்கள் பள்ளிக்கு கையில் கையிறு கட்டி வரக் கூடாது என சுற்றறிக்கை அனுப்பியது.[2] அப்போதும் எச்.ராஜா உள்ளிட்ட காவி பாசிஸ்டுகள் அதற்கெதிராக பொங்கியெழுந்தனர். அதற்கு அடிபணிந்து அன்றைய கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சுற்றறிக்கையைத் திரும்ப பெறுவதாக அறிவித்தார்.[3]
பள்ளிகளில் மாணவர்கள் சாதியைக் குறிக்கும் கையிறுகளை கட்டிக் கொண்டு வருகிறார்கள் என்பதும், பள்ளிகளில் நடக்கும் சாதிய மோதல்களுக்கு அது முக்கிய காரணமாக இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இது நீதிபதிக்குத் தெரியாதது அல்ல இருந்தும் அவர் இந்த பரிந்துரையை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தங்களது மதவாத அரசியலுக்கு அடிப்படையாக உள்ள சாதிப்பாகுபாட்டிற்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்ற காரணத்திற்காக காவி பாசிஸ்டுகளான அண்ணாமலையும், எச்.ராஜாவும் துடிப்பது போல, உயர்நீதிமன்ற நீதிபதி பேசியிருக்கிறார். ஏனெனில் அந்த அளவிற்கு தமிழ்நாட்டு நீதித்துறையில் காவி பாசிச சித்தாந்தம் ஊடுருவியிருக்கிறது.
- மகேஷ்
[1] https://www.maalaimalar.com/news/state/chandru-arikkaikku-pirage-naan-pottu-vaikkiren-subramanian-736860
[2] https://www.vikatan.com/government-and-politics/tamilnadu-school-education-department-banned-colour-bands-in-schools
[3] https://www.hindutamil.in/news/tamilnadu/511578-ka-sengottaiyan-clarifies-tn-government-circular-about-caste-in-schools-2.html