அண்மையில் சென்னை அரசு பள்ளி மாணவியருக்கு, நன்னெறி போதிப்பதாக கூறி அறிவியலுக்குப் புறம்பான அபத்தங்களை பேசிய மகாவிஷ்ணு என்ற அயோக்கியன் தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்ட மாற்றுத் திறனாளி ஆசிரியரை அவமதித்த நிகழ்வின் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் கண்டனத்திற்கு உள்ளானது.
விநாயகர் சதுர்த்திக்கு உறுதிமொழி ஏற்க சுற்றறிக்கை அனுப்பி விட்டு, கண்டனங்கள் எழுந்தவுடன் திரும்பப் பெற்றது போல, இந்த நிகழ்விலும் கூட்டணிக் கட்சிகளே கண்டித்த பிறகு வாழாவிருக்காமல் நடவடிக்கை எடுத்து பள்ளி தலைமை ஆசிரியரை வேறு இடத்திற்கு மாற்றியதுடன், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விருப்பதாகவும் கூறியிருக்கிறது திமுக அரசு. தற்போது மகாவிஷ்ணுவையும் கைது செய்து சிறையிலடைத்துள்ளது.
ஊழ்வினை குறித்தும் மறுபிறப்பு குறித்தும் பள்ளிக் குழந்தைகளுக்கு அறிவியலுக்கு புறம்பாக சொல்லிக் கொடுத்த மகாவிஷ்ணுவும், இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தவர்களும் தண்டனைக்கு உரியவர்களே.
பிற்போக்கினை மொத்த குத்தகைக்கு எடுத்துள்ள காவிக் கோஷ்டி இவ்விசயத்திலும் உட்புகுந்து மகாவிஷ்ணுவுக்கு ஆதரவாகவும், தலைமை ஆசிரியர் மீதான நடவடிக்கையை எதிர்த்தும் பேசி வருகிறது.
சமூக ஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும் நடைபெறும் பல்வேறு விவாதங்களில், காவி கும்பல் தொடர்ந்து ஒரு வாதத்தை முன்வைக்கிறது. மகாவிஷ்ணு திருக்குறளில் உள்ளதைத்தானே பேசினார். அது தவறென்றால் திருக்குறளைப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கிவிடலாமா என்று கேட்கின்றனர்.
இதற்குப் பதிலளிக்கும் திக, திமுக அன்பர்கள் சற்றுத் தடுமாறி, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” குறளைப் போன்று திருவள்ளுவர் கூறிய மற்ற குறள்களைக் காட்டி திருவள்ளுவர் எத்தனை நல்ல குறள்களை எழுதியுள்ளார் பாருங்கள் என வாதிடுகின்றனர் அல்லது திருக்குறளில் அப்படிக் கூறப்படவில்லை என்றும் அதற்கு தவறான அர்த்தம் கற்பிப்பது ஆரியத்தின் சதி என்றும் வாதிடுகின்றனர்.
திருக்குறள் என்பது ஒரு சமண நூல், அதில் சிலப்பதிகாரம் உள்ளிட்ட சமண காப்பியங்களில் உள்ள பிற்போக்கு கருத்துக்களைப் போன்று நிறைய உள்ளது. அவற்றில் காலத்திற்கு ஒவ்வாதது மட்டுமல்ல அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களும் உண்டு.
ஊன் (மாமிசம்) உண்ணாமை குறித்து வள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதியிருக்கிறார்.
“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை யுண்டாகப் பெறின்”
கற்புநெறியில் உறுதியாக இருப்பதே பெண்ணுக்குப் பெருமை என கற்புநெறி குறித்த பிற்போக்கு கருத்துகள் திருக்குறளில் இருக்கிறது. கணவனே கண் கண்ட தெய்வம் என கும்பிடும் பெண்கள் ‘பெய்’ என்றால் மழை பெய்யும் என வள்ளுவர் கூறியிருக்கிறார். அதைப் போன்றதுதான் ஊழ்வினை குறித்த திருக்குறளும்.
“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்”
என ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதை வள்ளுவர் வலியுறுத்துகிறார். ஆனால் இந்த இழிவிலிருந்து வள்ளுவரைக் காப்பாற்ற ஊழிற்கு “இயற்கை அறிவு” அதாவது பிறவிக் குணம் என்ற இன்னுமொரு அறிவியலுக்குப் புறம்பான விளக்கத்தையும் இங்கே கொடுக்கிறார்கள். ஊழ்வினை குறித்து தனி அதிகாரமாக குறள்களை எழுதிய வள்ளுவர், நூல் நெடுங்கிலும் ஏழு பிறவி குறித்தும், பிறப்பறுத்தல் குறித்தும் பல இடங்களில் கூறியிருக்கிறார்.
இவற்றைப் பிற்போக்கு காவி பாசிச கும்பல் தனக்கு சாதகமாக பயன்படுத்தி திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூச பார்க்கிறது. இதனை முறியடிக்க வேண்டும் என்ற வேகத்தில் வள்ளுவரைப் புனிதராக்கும் முயற்சியில் திக, திமுக அன்பர்கள் இறங்கிவிடுகின்றனர்.
சமஸ்கிருத, வேத நூல்கள், புராண இதிகாசங்களோடு ஒப்பிடும்போது தமிழ் இலக்கிய நூல்களில் இது போன்ற பிற்போக்கு குப்பைகள் குறைவுதான் என்றாலும், அதற்காக தமிழ் இலக்கிய நூல்கள் அனைத்தும் முற்போக்கானது என்று வரிந்து ஆதரிக்க வேண்டியதில்லை.
வள்ளுவரே கூறியிருந்தாலும் பிற்போக்குத்தனமான கருத்துக்கள் தவறானதே என்பதை முதலில் அங்கீகரிக்க வேண்டும். பின்னர் தவறான கருத்துக்களை புறக்கணித்து, சரியானதை வரித்துக் கொண்டிட வேண்டும். வள்ளுவருக்கு மட்டுமல்ல எல்லா இலக்கியங்களுக்கும் இது பொருந்தும்.
எனவே தமிழர் கலாச்சாரத்தை பெருமையை உயர்த்திப் பிடிக்கிறேன் எனத் தடுமாறாமல், திருவள்ளுவரே கூறியிருக்கிறாரே என்ற காவிக்கும்பலின் வாதத்திற்கு தக்க பதிலடி கொடுத்திட வேண்டும்.
- கைவல்ய சீடன்.
சிறப்பான கருத்து தோழர்