“வளர்ந்த இந்தியா என்கிற இலக்கை எட்ட, அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள், அரசியலுக்கு வர வேண்டும்” என ‘சுதந்திர’ தின விழாவில் பேசிய அதே உரையை, கடந்த 25.8.2024 அன்று மனதின் குரலிலும் (மன்.கீ.பாத்) மீண்டும் ஒலித்துள்ளார், நரேந்திர மோடி.
அதிலும் குறிப்பாக, “சாதியவாதம் – குடும்ப அரசியலில் இருந்து நாட்டின் அரசியலை விடுவிக்க வேண்டும்; உள்ளாட்சி முதல் மக்களவை வரை மக்களின் பிரதிநிதிகளாக உருவெடுக்கும் வகையில், குடும்ப அரசியல் தொடர்பு இல்லாத சுமார் ஒரு லட்சம் இளைஞர்கள் பொதுவாழ்வுக்கு வரவேண்டும்; தாங்கள் விரும்பும் எந்தக் கட்சியிலும் அவர்கள் இணையலாம். அரசியலில் பாய்ச்சப்படும் இந்தப் புதிய இரத்தமும், புதிய மனநிலையும் ஜனநாயகத்தைப் பெரிதும் வளப்படுத்தும்” என திருவாய் மலர்ந்துள்ளார்.
இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு, கார்ப்பரேட் பணத்தை வாரியிறைத்து, சனாதன அரசியல் இரத்தத்தைப் பாய்ச்சி, அன்றாடம் அவர்களின் சிந்தனையில், பாசிச வெற்றியைத் திணித்து வரும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பலின் கோயபல்ஸ் மோடி, ஜனநாயகத்தை வலுப்படுத்த, வளப்படுத்த போவதாக ஒலிப்பதை எந்த வழியில் இரசிப்பது என்பதை இளைஞர்களை முடிவு செய்யட்டும்.
பல இளைஞர்கள், “குடும்ப அரசியல் நடப்பது, திறமை வாய்ந்த பலரின் அரசியல் வாய்ப்புகளைப் பறிப்பதாக, இவரிடம் கடிதம் – சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்துக் கொண்டதாகக் கூறுகிறார்”. இது உண்மையோ, பொய்யோ ஆனால், காவி பாசிச கும்பல் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒழிக்க வேண்டும் என்பதை, குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும் என்று எப்போதும் கூறுவதைத்தான் அப்படியே தனது மனதின் குரலாக ஒலித்துள்ளார் மோடி என்பதை மட்டும், எவராலும் மறுக்க முடியாது.
அதே வேளையில், ‘சுதந்திர’ தின விழாவில் இடம் பெற்ற சாதியவாத அரசியலில் இருந்து, நாட்டின் அரசியலை விடுவிக்க வேண்டும் என்கிற மோடியின் அழைப்புக்கு எந்த இளைஞரும் கருத்து தெரிவிக்கவில்லை. இது குறித்து மோடியும் எந்த சவுண்டும் விடவில்லை. சவுண்டு விட்டால் தங்களின் சாதி – மதவாத அரசியலுக்கே சூனியம் வைத்துக் கொண்ட கதையாகிவிடும் என்பதற்காகவும் அடக்கி வாசித்திருக்கலாம்.
மாணவர்களும், இளைஞர்களும் அரசியலில் ஈடுபடக் கூடாது என்கிற ‘உபதேசம்’ நிலவி வரும் சூழலில், அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வந்து ஜனநாயகத்தை மேலும் வலுவடையச் செய்யப் போவதாக ஒலிக்கும் மோடியின் குரல் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கானது அல்ல, பாசிசத்திற்கானதே என்பதை கடந்த 10 ஆண்டுகால மோடியின் ஆட்சியைப் பரிசீலித்தாலே விளங்கும்.
அதாவது, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை விவாதிக்க விடாமல் முடக்கியது; எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றமாக உருவாக்க முயன்றது; சாதியவாத – மதவாத விசக்கருத்துகளை, அறிவிப்பூர்வமற்ற, மூடநம்பிக்கைகளை, புதிய கல்விக் கொள்கையில் திணித்து ஜனநாயகப் பண்புகளை சிதைத்தது; சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமையை CAA, NPR, NRC போன்றவைகளைக் கொண்டு வந்து அவர்களின் குடியுரிமையையும் பறிக்க முயன்றது; விவசாயிகள் – தொழிலாளர்களை கார்ப்பரேட்களுக்கு கொத்தடிமையாக்கும் சட்டங்களைக் கொண்டு வந்து, அவர்களின் உரிமையையும், உயிரையும் பறித்தது; தொடர்ந்து மக்கள் விரோதச் சட்டங்களை கொண்டு வந்து ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையைப் பறித்தது; மேலும், பல்வேறு அரசியல், பொருளாதார பண்பாட்டு ரீதியான ஒடுக்குமுறைச் சட்டங்களை – நடவடிக்கைகளை, கடந்த 10 ஆண்டுகளில் பாசிச ஆர்எஸ்எஸ் – பிஜேபி மோடிக் கும்பல் அரங்கேற்றிய அராஜகத்தைப் பரிசீலனைக்கு உட்படுத்தினாலே பாசிச மோடிக் கும்பல் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும், வளப்படுத்தும் இலட்சணத்தை எவராலும் புரிந்துக் கொள்ளாமல் இருக்க முடியாது.
கல்வி, மருத்துவம், சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு மக்களின் அடிப்படை உரிமைகளை நிறைவேற்ற துப்பில்லாத மோடி அரசைக் கண்டித்தால், எதிர்த்துப் போராடினால் அடக்குமுறைகளை ஏவிவிடும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி மோடி தலைமையிலான கும்பல் ஜனநாயகத்தை அல்ல; பாசிசத்தையே வலுப்படுத்தும், வளப்படுத்தும் என்பது சொல்லாமலே விளங்கும்.
இதற்கு மூன்று வர்ண கொடியை வீடு தோறும் கட்டாயப்படுத்தி ஏற்ற வைப்பது மூலம், பாசிச அரசை நிறுவும் பட்சத்தில், மூவர்ண கொடியை காவிக் கொடியாக மாற்றியமைத்து, அதை அனைத்து வீடுகளிலும் ஏற்ற வைத்து விடலாம் என்ற அடிப்படையில் சுதந்திர தின விழாவை ஒரு குறியீடாக பயன்படுத்துகிறது.
மேலும், பாசிசத்திற்கு எதிராகப் போராடும் மக்களையும், ஃபிட் இந்தியா, யோகா போன்றவைகள் மூலம் முடக்கி விடமுடியும் என்கிற அடிப்படையில், நிறைவேற்றி வருவதை பாசிசத்தின் வெற்றிக்கான நடவடிக்கையாகவும் பார்க்கிறது.
இதன் அடிப்படையில் தான் அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்களை இலக்கு வைத்து காவி – கார்ப்பரேட் பாசிச அரசியலுக்கு கொண்டுவர துடிக்கிறது. இதன் மூலம், கார்ப்பரேட்களுக்கான வளர்ந்த இந்தியாவாக மாற்றியமைக்கப்படும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த மனதின் குரலின் மறுஒலிபரப்பும் – சுதந்திர தின உரையும் அமைந்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
- மோகன்