ஹோ-சி-மின்: ஏகாதிபத்திய எதிர்ப்புப் புயல்

இன்று (செப்டம்பர் 2), ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியும் மாபெரும் கம்யூனிசப் புரட்சியாளருமான தோழர் ஹோ-சி-மின் அவர்களின் 55வது நினைவு தினம். ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டு, துண்டாடப்பட்டுக் கிடந்த, மிகவும் பின் தங்கிய ஏழை நாடான வியட்நாமை ஒன்றினைத்து, பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா என மூன்று ஏகாதிபத்தியங்கள் அடுத்தடுத்து தொடுத்த ஆக்கிரமிப்புப் போர்களை எதிர்த்து நின்று முறியடித்த மகத்தான சாதனையை தோழர் ஹோ-சி-மின்னின் தலைமையில் வியட்நாம் மக்கள் சாதித்துக் காட்டினர். நாட்டின் விடுதலைக்காகவும், உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவும் போராடும் ஒவ்வொரு கம்யூனிசப் புரட்சியாளரும் கற்க வேண்டிய பாடங்கள் நிறைந்தது தோழர் ஹோ-சி-மின்னின் வாழ்க்கை. அவரது வாழ்க்கை பற்றிய சிறு குறிப்பை நமது வாசகர்களுக்கு கொடுத்திட, தோழர் ஹோ-சி-மின்னின் நூற்றாண்டை ஒட்டி புதிய ஜனநாயகம் இதழில் 1990ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியான கட்டுரையை இங்கு மீள் பிரசுரம் செய்கிறோம்.  

 

ஹோ-சி-மின்: ஏகாதிபத்திய எதிர்ப்புப் புயல்

சின்னஞ்சிறு ஏழைநாடு மிகப் பெரிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வெற்றி கொள்ள முடியுமா? ”ஏன் முடியாது? ஏகாதிபத்தியங்கள் சாராம்சத்தில் காகிதப் புலிகள்; சிறிய நாடு பெரிய ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி நிச்சயம் விடுதலையைச் சாதிக்க முடியும்” என்ற மாவோவின் கூற்றை 70களில் நிரூபித்துக் காட்டியது வியட்நாம், பிரெஞ்சு ஏகாதிபத்தியம். அதைத் தொடர்ந்து ஜப்பானிய பாசிசம் பின்னர் வந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு அனைத்தையும் சுக்குநூறாக உடைத்தெறிந்து, இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஒடுக்கப்பட்ட மக்களின் உத்வேகமூட்டும் புரட்சிக் களமாகத் திகழ்ந்தது வீர வியட்நாம்.

உலகம் முழுவதுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சிகர உணர்வுக்குப் புத்துயிர் ஊட்டி, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரின் நாயகனாக, வீரத்தின் விளைநிலமாக வியட்நாமை மாற்றிய அந்த மாவீரன் யார்?

மெலிந்த தேகம்; எளிமையான தோற்றம்; கூர்மையான கண்கள்… அந்த மாமனிதர்தான் ஹோ-சி-மின். சைகோன் அருகே மே 19 அன்று கிராமப் பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்து, காலனியாதிக்கத் தளைகளை உடைத்தெறிந்த அந்த மாபெரும் புரட்சியாளரின் மறைவு நாளை இன்று உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் பெருமிதத்துடன் கொண்டாடுகின்றனர்.

தனது இளமைக் காலத்திலேயே ஹோ-சி-மின் புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினார். பிரெஞ்சுக் காலனியாதிக்கவாதிகளை எதிர்த்து அன்று வியட்நாமில் போராடிக் கொண்டிருந்த தேபக்த – ஜனநாயக வாதிகளுக்கு தகவல் தொடர்பாளராகப் பணியாற்றிய போது அவருக்கு வயது பதினைந்து.

பாதை தேடிப் பயணம்

பள்ளிப் படிப்பை முடித்து சிறிது காலம் கல்லூரியில் பயின்ற அவர், பின்னர் பள்ளியாசிரியராகப் பணியாற்றினார். வியட்நாமில் தேச விடுதலை இயக்கம் தெளிவான பாதையோ, கண்ணோட்டமோ இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்த காலம் அது. எனவே புரட்சிகர இயக்கத்தைப் பற்றி ஆழ்ந்த ஞானம் பெறவும் அடிமைப்பட்டுக் கிடக்கும்வியட்நாமிய மக்களை விடுவிப்பதற்கான வழியைக் காணவும் அவர் வெளிநாடு செல்லத் தீர்மானித்தார்.

பிரெஞ்சு கப்பலில் பணியாளராகச் சேர்ந்து பிரான்சுக்கு வந்தடைந்த அவர், அங்குள்ள கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு கொண்டு, காலனி நாட்டு மக்கள் சங்கத்தை நிறுவி “லிபெரியா” (ஒடுக்கப்பட்டவர்கள்) என்ற பத்திரிக்கையை நடத்தினார்.

கடின உழைப்பினூடே புரட்சிப் பணி

பின்னர் அவர் லண்டனுக்குத் திரும்பி அடுப்பு எரிப்பவராகவும், சாலைகளைக் கூட்டுபவராகவும், சமையல் உதவியாளராகவும் பணியாற்றினார். இக்கடுமையான வேலைகளினூடே அவர் புரட்சிகர சித்தாந்தத்தைக் கற்பதிலும், புரட்சிகர இயக்கங்களில் தீவிரமாகப் பங்கேற்பதிலும் கடுமையாக உழைத்தார்.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்ட அவர் கம்யூனிஸ்ட் அகிலத்தின் கீழை நாடுகள் பிரிவின் நிரந்தர உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1924-ல் மாஸ்கோவுக்குச் சென்றார். அக்டோபர் புரட்சியின் ஒளியில் காலனி நாடுகளின் விடுதலைக்கான பாதையை அவர் அங்கு கற்றறிந்தார். பின்னர் சீனாவுக்குச் சென்று தோழர் மாவோ தலைமையில் முன்னேறி வந்த புதிய ஜனநாயகப் புரட்சியின் செழுமையான அனுபவங்களைக் கிரகித்துக் கொண்டு 1930-ல் வியட்நாமிய கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினார்.

ஆகஸ்டு புரட்சி

சீனாவின் தோழர் மாவோ தலைமையில் நடந்த ஹுனான் விவசாயிகளின் எழுச்சியின் தாக்கத்தையும், மகத்தான மக்கள் யுத்தப் பாதையின் சரியான தன்மையையும் கிரகித்துக் கொண்ட அவர் வியட்நாமில் விவசாயிகளின் ஆயுதமேந்திய எழுச்சிக்குத் திட்டமிட்டார். கம்யூனிஸ்டுகளோடு, நாட்டுப்பற்றும் ஜனநாயகப் பற்றுமிக்க சக்திகளை ஐக்கியப்படுத்தி ”வியட்மின்” எனும் வியட்நாமிய விடுதலை முன்னணியை நிறுவினார்.

பிற நாடுகளின் புரட்சி இயக்கங்களில் பங்கேற்றதன் மூலம் அவர் பெற்ற செழுமையான அனுபவம், மார்க்சிய லெனினியத்தை வியட்நாமிய சூழலுக்கேற்ப பிரயோகிக்கும் அவரது ஆற்றல், விவசாயிகளை அணிதிரட்டி மக்கள் யுத்தப் பாதையில் தொடர்ந்து புரட்சி இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற அவரது உறுதி ஆகியவற்றின் விளைவாக 1945-ல் செப்டம்பர் 2-ம் நாளன்று வியட்நாம் ஜனநாயகக் குடியரசின் சுதந்திரப் பிரகடனத்தை தோழர் ஹோ-சி-மின் வெளியிட்டார். 1946-ல் கூடிய வியட்நாம் மக்கள் சபையில் அவர் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

தேசவிடுதலைப் போர்

தமது காலனி நாடு பறிபோன வெறியில் பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகள் தென் வியட்நாமைத் தளமாக்கிக் கொண்டு வியட்நாம் மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரில் இறங்கினர். இடையில் இரண்டாம் உலகப் போரின்போது மூர்க்கமாகக் கிளம்பி ஜப்பானிய ஏகாதிபத்தியமும் வியட்நாமை ஆக்கிரமித்தது.

ஜப்பான் பின்வாங்கிய அதே நேரத்தில் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் தொடர்ந்து போரில் ஈடுபட்டது. இறுதியில், ஜெனரல் ஜியாப் வழிநடத்திய வியட்நாமிய செஞ்சேனை தியன்-பியன்-ஃபூவில் பிரெஞ்சுப் படைகளை முறியடித்து மகத்தான வெற்றியைச் சாதித்தது.

அமெரிக்க ஆக்கிரமிப்பு

இதைத் தொடர்ந்து, தென் வியட்நாமிலுள்ள ஏகாதிபத்திய ஆதிக்கத்தை வீழ்த்தி வியட்நாமை ஐக்கியப்படுத்தவும், பொதுத் தேர்தல் நடத்தி நாட்டை மறுநிர்மாணம் செய்யவும் ஜெனீவாவில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதை ஏற்க மறுத்து, அமெரிக்க அடிவருடியான நகு-தியன்-தியம் என்பவன் தனக்குத்தானே தென் வியட்நாமின் அதிபராக முடிசூட்டிக் கொண்டு எதிர்ப்புரட்சி சதியில் இறங்கினான். அவனை ”வியட்நாமின் சர்ச்சில்” என்று அமெரிக்க அதிபர் ஜான்சன் உச்சி முகர்ந்தார். ஆனால் தென் வியட்நாமி்ன் தலைநகர் சைகோனை அவன் அமெரிக்காவின் விபச்சார விடுதியாக்கினான். அமெரிக்க பொம்மை அரசுக்கு எதிராக வியட்நாம் முழுவதும் கிளர்ச்சிகளும் ஆர்ப்பாட்டங்களும் பெருகத் தொடங்கியதும் 1961-ல் அமெரிக்கா நேரடியாக வியட்நாமை ஆக்கிரமித்தது.

வீரத்தின் விளைநிலம்

அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து வியட்நாம் மக்கள் தொடுத்த வீரஞ்செறிந்த விடுதலைப் போர் உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டது. அதன் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேரலை தென் கிழக்காசியா எங்கும் சுழன்றடித்து மாணவர்-இளைஞர்களின் “கலக“மாக வெடித்தது.

விளைநிலங்களைப் பாழாக்கியும் கணக்கற்ற அட்டூழியங்களைச் செய்தது அமெரிக்க கொலைகாரப் படை. முதுகிலே துப்பாக்கி ஏந்தியபடியே வியட்நாமிய வீராங்கனைகள் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டனர். தாயின் வயிற்றிலிருந்த போதே போராட கற்றுக் கொண்ட குழந்தைகள் வீரப்புதல்வர்களாக வளர்ந்து கொரில்லா போராளிகளானார்கள். இந்த புரட்சி யுத்தத்தில் 60 லட்சம் வியட்நாமியர்கள் கொன்றொழிக்கப்பட்டனர். அதேசமயம் உலகில் இதுவரை சந்திக்காத  மாபெரும் இழப்பை அமெரிக்கா எதிர்கொண்டது. ஏறத்தாழ 58 ஆயிரம் அமெரிக்கத் துருப்புக்கள் வியட்நாமிய யுத்தத்தில் பலியாகினர். அமெரிக்காவிலேயே ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பெருகி ஏகாதிபத்தியவாதிகள் முற்றாகத் தனிமைப்பட்டனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் படுதோல்வியைத் தொடர்ந்து 1973-ல் பாரீசில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இருப்பினும் தென் வியட்நாமிய கூலிப்படைகள் தொடர்ந்து போரை நடத்தின. 1975-ல் அவை முறியடிக்கப்பட்டு அனைத்து வியட்நாமும் விடுதலை அடைந்தது. அதன்பிறகு தலைநகரான ஹனாய், ஹோ-சி-மின் நினைவாக “ஹோ-சி-மின் நகர்“ என அழைக்கப்படுகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை முறியடித்து ஐக்கியப்பட்ட வியட்நாமின் விடுதலையைச் சாதிக்கும் வரை ஹோ-சி-மின் உயிரோடு இருக்கவில்லை. 1969-ம் ஆண்டில் அவர் இயற்கை எய்தினார். ஆனால் அவர் மூட்டிய ஏகாதிபத்திய எதிர்ப்புக் கனலை வியட்நாமிய மக்கள் பெருந்தீயாக மாற்றி ஏகாதிபத்தியத்தை சுட்டெரித்து விடுதலையைச் சாதித்தார்கள்.

எளிய வாழ்வும் கம்யூனிசப் பண்பும்

வியட்நாமின் தந்தை என்று போற்றப்படும் தோழர் ஹோ-சி-மின் எளிய வாழ்வையும் கடின உழைப்பையும் இறுதிவரை மேற்கொண்டார். தனது வாழ்நாள் முழுவதும் சாதாரண ரப்பர் செருப்புக்களையே அவர் அணிந்தார். எந்தவொரு வேலைக்கும் அவர் பிறருடைய உதவியை எதிர்பாத்ததே இல்லை.

இளந்தலைமுறையினர் மீது குறிப்பாக குழந்தைகள் மீது அவருக்கு கொள்ளைப்பிரியம். 1945-ல் சுதந்திரப் பிரகடனத்தை அவர் தயாரித்து முடித்ததும் அவர் வியட்நாமிய குழந்தைகளுக்கான நூலைத்தான் முதலில் எழுதினார். பெருமை, புகழ், தனிநபர் துதி முதலானவற்றில் அவர் என்றுமே நாட்டம் கொண்டவரல்ல. 1959-ல் வியட்நாமிய செம்படையினர் அவர் பிறந்த கிராமத்தில் அவர் பெயரால் ஒரு அருங்காட்சியகம் நிறுவ முற்பட்டபோது, அதைத் தடுத்து குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் கட்டுமாறு தோழர் ஹோ-சி-மின் பணித்தார்.

நாட்டு விடுதலையின் மீது மாளாக்காதல் கொண்ட அவர் சிறந்த கவிஞருமாவார். குறிப்பாக, சீனாவில் சியாங்கை ஷேக் எதிர்ப்புப் புரட்சி அரசினால் அவர் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டபோது அவர் எழுதிய கவிதைகளும் சிறைக் குறிப்பும் மிகப் பிரபலமானவை.

சிந்தாந்த பலவீனம்

உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த தோழர் ஹோ-சி-மின், 60களில் சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் எழுந்த சித்தாந்தப் போராட்டத்தின் போது அதில் ஊக்கமாகப் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார். குருச்சேவின் திருத்தல் வாதத்தையோ பின்னர் சோசலிச ரஷியா சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்ததையோ அவர் எதிர்த்து அம்பலப்படுத்தாமல், நடுநிலை வகித்தார். திரிபுவாதத்துக்கும் மார்க்சியத்துக்குமிடையே தெளிவான எல்லைக் கோட்டை வகுத்து வேறுபடுத்திப் பார்க்காமல் “சகோதர கட்சிகளிடையே பிளவும் வேறுபாடுகளும் நீங்கி மீண்டும் ஒன்றுபடும் என நம்புகிறேன்“ என்றார். ரஷிய திரிபுவாத கும்பல் வியட்நாம் புரட்சிப் போருக்கு சீனா வழியாக ஆயுத உதவி செய்ய மறுத்தபோதும், சமாதான முயற்சி என்ற பெயரில் துரோக ஒப்பந்தத்தை திணிக்க முயன்றபோதும் இந்த சோசலிச கபட வேடதாரிகளை ஹோ-சி-மின் எதிர்க்கவோ அம்பலப்படுத்தவோ செய்யவில்லை.

சித்தாந்தத் துறையில் அவர் காட்டிய இந்த பலவீனத்தின் விளைவாக, விடுதலைக்குப் பின்னர் வியட்நாமிய கம்யூனிஸ்ட் கட்சி ரஷிய சமூக ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாகி, நாட்டை ரஷியாவுக்கு அடிமைப்படுத்தியது. தென் சீனப் பிராந்தியத்தில் ரஷியாவின் வேட்டை நாயாக வியட்நாம் சீரழிந்து, கம்பூச்சியாவையும் லாவோசையும் ஆக்கிரமித்தது. சீனாவுடன் எல்லைத் தகராறை செயற்கையாக உருவாக்கி அநீதியான யுத்தத்தில் இறங்கியது. சுயசார்பான பொருளாதாரத்தைக் கட்டியமைக்க மறுத்து ரஷிய தயவை நம்பியிருந்த வியட்நாம், இன்று உலக வங்கியிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இடர்பாடும் துன்பதுயரமிக்கதாயினும் புரட்சிகர சித்தாந்தத் தெளிவுடன் உறுதியாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை, இன்றைய வியட்நாம் எதிர்மறை அனுபவமாக உலகப் பாட்டாளி வர்க்கத்துக்குப் போதிக்கின்றது.

தோழர் ஹோ-சி-மின் சித்தாந்தத் துறையில் நடுநிலையை மேற்கொண்ட பொதிலும் அவர் உணர்வு பூர்வமாக திரிபுவாத்தை ஏற்று அங்கீகரிக்கவில்லை. அதன் காரணமாக தேச விடுதலைப் போரைக் கைவிடவும் இல்லை. கடினமான தேச விடுதலைப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால், ஊக்கமாக சித்தாந்தப் போராட்டத்தில் பங்கேற்க இயலாத நிலையில் அனைவரும் ஒன்றுபட வேண்டுமென பாமரத்தனமாக அவர் நம்பினார். அவரது ஒட்டுமொத்த புரட்சி வாழ்வைப் பார்க்கும் போது இக்குறை அற்பமானதுதான். எனினும் சித்தாந்த விவகாரங்களில் நடுநிலைமை வகிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை உலகப் பாட்டாளிவர்க்கம் மறந்துவிட முடியாது.

மாபெரும் புரட்சியாளர்

தோழர் ஹோ-சி-மின்னிடம் சித்தாந்த பலவீனங்கள் இருந்த போதிலும் நமது சகாப்தத்தின் மாபெரும் கம்யூனிசப் புரட்சியாளர்களில் அவரும் ஒருவர். அவரைப் புறக்கணித்து விட்டு வியட்நாமை யாரும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. எளிய வாழ்வும், கடின உழைப்பும், நாட்டுப்பற்றும், மக்களுடன் ஐக்கியமும் கொண்ட அவர் மிகச் சிறந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி. காலனி – அரைக் காலனி நாடுகளின் விடுதலைக்கான பாதை, நீண்ட கால மக்கள் யுத்தப் பாதையே என்பதை நிரூபித்துக் காட்டிய மார்க்சிய – லெனினியவாதி அவர்.

இந்திய புதிய ஜனநாயகப் புரட்சியில் ஈடுபட்டுள்ள நாம் அவரது மிகச் சிறந்த கம்யூனிசப் பண்புகளை நமதாக்கிக் கொண்டு உறுதியுடன் முன்னேறுவோம். தோழர் ஹோ-சி-மின் நினைவை நெஞ்சிலேந்தி விவசாயிகளின் விவசாயப் புரட்சியைச் சாதிக்க தொடர்ந்து போராடுவோம். தோழர் ஹோ-சி-மின் புகழ் நீடுழி வாழ்க! ஒழியட்டும் ஏகாதிபத்தியம்! ஓங்கட்டும் புரட்சி!

  • மனோகரன். 

புதிய ஜனநாயகம்  1-15 ஜூன் 1990

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன