பட்ஜெட்டிற்கு முன் வெளியிடப்பட்ட 2023-24 ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையில், இந்திய தொழிலதிபர்கள் மற்றும் வணிகத்தில் சிறந்து விளங்குபவர்கள் (Bussiness elite) “அதிக லாபத்தில் நீந்துவதாக” குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுடைய கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்கு அதிக வரி விதிப்பதின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு இந்திய மக்களின் கல்விக்கும் மருத்துவத்திற்கும் தாராளமாக நிதியளிக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல், நடப்பு பட்ஜெட்டில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியை 40% லிருந்து 35% ஆக குறைத்திருக்கிறது மோடி அரசு.
“கடந்த ஆண்டிற்கான வருவாய் சுமார் 15% அதிகரித்துள்ளது, அதேவேளையில் மொத்த செலவு வெறும் 5.9% மட்டும்தான் அதிகரித்துள்ளது”, இது கடந்த ஆண்டை விட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8% குறைவாகும். மொத்த செலவு விகிதம் குறைவதற்கு முக்கியக் காரணம் மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்படுவதே ஆகும். குறிப்பாக பொது சுகாதாரம், உணவு மற்றும் கல்வி ஆகியவற்றிக்கு போதிய நிதி ஒதுக்குவதில்லை.
நடப்பு நிதியாண்டில் சுகாதாரத்திற்காக 89,257 கோடி ரூபாயை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 13 சதவீதம் அதிகம் என்று மோடியின் சகாக்கள் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். உண்மையில், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தொகையான 88,956 கோடி ரூபாயை(BE) சில மாதங்களுக்குப் பிறகு 79,221 கோடி ரூபாயாக(RE) குறைக்கப்பட்டது. மேலும் திருத்தப்பட்ட நிதியோடு ஒப்பிட்டே 13 சதவிகிதம் அதிகம் என்று கூறுகின்றனர். ஆனால் கடந்தாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியோடு(BE) ஒப்பிடுகையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதே உண்மை.
நடப்பு பட்ஜெட்டில் சுகாதாரத்துறையின் பல திட்டங்களுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது. நகர்புற மற்றும் கிராமப்புற அரசு மருத்துவமனைகள் மேம்பாட்டு திட்டமான PM-ABHIM திட்டத்துக்கான நிதி கடந்தாண்டைவிட 23.2% குறைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளால் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளையும், செவிலியர் கல்லூரிகளையும் மேம்படுத்துவதற்கும், பணியாளர்களை நியமிப்பதற்கும் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் கடந்தாண்டைவிட 80% குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட வேண்டிய நிதியும் கடந்தாண்டைவிட 35% குறைக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு சுகாதாரத்திற்காக ஒதுக்கியுள்ள நிதியை 140 கோடி மக்களுக்குப் பிரித்தால், ஒரு நபருக்கு 638 ரூபாய் கிடைக்கும். இதனை அடுத்த ஒரு வருடத்திற்கான மருத்துவ நிதியாக மோடி அரசு ஒதுக்கியுள்ளது. சாதாரணமாக சளி அல்லது காய்ச்சலுக்காக மருத்துவரை சென்று பார்த்தாலே சராசரியாக 700 லிருந்து 1000 ரூபாய் வரைக்கும் செலவு செய்ய வேண்டியிருக்கும் சூழலில் ஒரு நபருக்கு ஒரு வருடத்திற்கு 638 ரூபாய் (கட்டடம், மருந்துவ உபகரணம், சம்பளம், மருந்து செலவு சேர்ந்து) ஒதுக்கி இருப்பது மிகவும் கேலிக்கூத்தானதும், வஞ்சிக்கப்படுவதும் ஆகும். மக்கள் தங்களுடைய மருத்துவச் செலவை தாங்களே பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் மோடியரசின் பட்ஜெட் சொல்லும் செய்தியாகும்.
இந்தியாவில் சுகாதாரம் மற்றும் மருத்துவத்திற்காக செலவு செய்யப்படும் மொத்த தொகையில் 35.3% மட்டுமே மத்திய மாநில அரசுகளின் பங்களிப்பு. 52% பங்களிப்பு மக்கள் தங்களது சொந்த பணத்தை செலவு செய்வதிலிருந்து வருகிறது. 35.3% இல் மாநில அரசுகளின் பங்கு மத்திய அரசைவிட மிகவும் அதிகம். இதில் ஒன்றிய அரசு சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை படிப்படியாக குறைத்து வருவதால் தவிர்க்க இயலாதபடி மக்கள் தங்களுடைய பணத்தை செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே மருத்துவச் செலவினால் மக்கள் தங்களுடைய நிதியாதரங்களை இழந்து ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்படுகின்றனர்.
உலக சுகாதார மையம் 2022 ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு அறிக்கையில் படி இந்தியாவில் உள்ள மொத்த குடும்பங்களில் 17% குடும்பங்கள் ஒவ்வொரு வருடமும் மருத்துவத்திற்காக மிக அதிக அளவு செலவு செய்வதாகவும் இதில் கணிசமானோர் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருந்தது.
நிதி ஆயோக்கின் அறிக்கையோ மருத்துவத்திற்காக செலவு செய்வதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் இந்திய மக்கள் தொகையில் ஏழு சதவீத மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்படுவதாகக் கூறியிருக்கிறது. அதாவது ஒவ்வொரு வருடமும் மருத்துவத்திற்காக செலவு செய்வதன் காரணமாக 10 கோடி இந்தியர்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்படுகிறனர். இவ்வுண்மைத் தெரிந்திருந்தும் மருத்துவத்திற்கும், சுகாதாரத்திற்கும் அதிகளவில் நிதியை ஒதுக்காமல் தனக்கு வாக்களித்த மக்களை வஞ்சித்துவிட்டு, வெளிநாட்டு கார்பரேட்களின் மீதான வரியைக் குறைத்து பாதுகாத்திருக்கிறது பாசிச மோடி கும்பல்.
ஆகப்பெரும்பான்மையினரான விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் வஞ்சித்துவிட்டு, விரல்விட்டு எண்ணக்கூடிய உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளுக்கு வரிச்சலுகைகளை வாரியிறைத்திருப்பதன் மூலம் தாம் யாருக்காக ஆட்சி நடத்துகிறோம் என்பதை பட்ஜெட்டின் மூலம் அறிவித்திருக்கிறது மோடி கும்பல். நாம் என்ன செய்யப்போகிறோம்.
- அழகு