இன்று பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சித்தாந்தத்தை வடித்துக் கொடுத்த மாமேதைகளில் ஒருவரான, பிரடெரிக் எங்கெல்ஸின் 129வது நினைவு தினம். கார்ல் மார்க்ஸுக்கு அடுத்தபடியாக உலகெங்கும் பாட்டாளி வர்க்கத்தின் தலை சிறந்த அறிஞராகவும் ஆசானாகவும் விளங்கியவர் எங்கெல்ஸ்.
தொழிலாளி வர்க்கத்திற்கு மார்க்ஸும் எங்கெல்ஸும் ஆற்றிய பணிகளைப் பற்றி ஒரு சில சொற்களில் பின்வருமாறு சொல்லி விடலாம்: தொழிலாளி வர்க்கம் தன்னைத் தானே அறிந்து கொள்ளுமாறு, தன்னைப் பற்றிய உணர்வு கொள்ளுமாறு அவர்கள் போதித்தார்கள்; மேலும் கனவுகள் இருந்த இடத்தில் விஞ்ஞானத்தை நிலைநாட்டினார்கள். ஆகவே தான் எங்கெல்ஸின் பெயரும் வாழ்க்கையும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்றார் லெனின்.
நூற்றாண்டுகள் கடந்தும் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான ஒளியாக விளங்கும் எங்கெல்ஸின் நினைவுகளில் சிலவற்றை அறிந்து கொள்ள ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரான பிரான்ஸ் மேரின்க், அக்கட்சியின் “புதிய காலம்” எனும் இதழில் 1905 ஆம் ஆண்டு எழுதிய எங்கெல்ஸின் நினைவுகள் பற்றிய கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம்.
********
இந்த ஆகஸ்ட் 5ம் தேதியுடன் பிரெடெரிக் எங்கெல்ஸ் தமது கண்களை என்றைன்றைக்குமாக மூடி பத்தாண்டுகள் முடிவடைந்து விட்டது. மகிழ்ச்சியும் பயனும் தரும் வாழ்கையின் கடைசியில் அல்லாமல் அதன் உச்சகட்டத்தில் அவர் மறைந்தார். பைபிள் வயோதிகம் என்று கருதப்படும் வயதில் கூட அவர் இளமையுடன் திகழ்ந்தார். அவருடைய வயோதிக வயதுடன் அவரது வரலாற்றுரீதியான செல்வாக்கும் மாட்சியுற்றது. லஸ்ஸால் விசயத்தில் இளமையுடனும், மார்க்ஸின் விசயத்தில் அவரது அறிவு முதிர்ச்சியுடனும் இந்த செல்வாக்கு மாட்சியுற்றது.
இதனால் எங்கெல்சின் அறிவு முதிர்ச்சியடையத் தாமதேமேற்பட்டது என்ற முடிவுக்கு வருவது தவறு. மாறாக லஸ்ஸால், மார்க்ஸ் இவர்களை போலவே அவரும் காலத்துக்கு முந்திய அறிவு முதிர்ச்சியைப் பெற்றிருந்தார். ஏனெனில் மார்க்ஸை விட மிகவும் இளம் பிராயத்திலேயே அவர் சகாப்த முக்கியத்துவம் வாய்ந்த என்றென்றைக்கும் முக்கியத்துவடன் விளங்கும் விஞ்ஞான சோசலிசத்தின் முதல் மாபெரும் நூலை இயற்றினார். ’இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை’ பற்றிய நூலை எழுதிய பொழுது அவருக்கு வயது 24. இத்தகைய இளம் வயதில் இவ்வளவு விஞ்ஞானத் துறையில் பிரவேசிப்பது என்பது அரிய வெற்றியாகும். இது அவரது மேதைமைக்கும் ஆற்றலுக்கும் அழியாத சாட்சியம். ஏனென்றால் அரை நூற்றாண்டு காலத்திய தொடர்ச்சியான வளர்ச்சிக்கு இது துவக்கமாக இருந்தது. முதிர்ந்த வயதில் அவர் வாலிபத்தின் வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றினார்.
தமது ஆராய்ச்சி நூலை எழுதிய போதே எங்கெல்ஸிற்கு மார்க்சைத் தெரியும். இருவரும் பரஸ்பரம் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்ததோடு சில நாட்கள் சேர்ந்திருந்து பின்னால் “புனிதக் குடும்பம்” என்று வெளியிடப்பட்ட நூலைக் கூட்டாக எழுதத் திட்டமிட்டிருந்தார்கள்.
சில ஆண்டுகளுக்குப் பின்னால் அவர்களிருவரும் சேர்ந்து “கம்யூனிஸ்ட் அறிக்கை”, ஒன்றை எழுதிய போது எங்கெல்ஸ், அவரே எப்பொழுதும் வலியுறுத்தி வந்தது போல, இரண்டாம் அணியில் நின்றார். புரட்சி நடந்த ஆண்டுகளில் அவர் தமது நண்பரின் உதவியாளாராக மட்டுமே, ஆனால் மிகவும் ஆற்றல் பெற்ற விசுவாசம் மிகுந்த உதவியாளராக இருந்தார். பிறகு ஏறக்குறைய ஒரு சந்ததி காலம் பொது வாழ்விலிருந்து மறைந்து விட்டார். [i]
பின்னால் கிட்டத்தட்ட 60 வயதான போது, எங்கெல்ஸ் தமது இரண்டாவது மாபெரும் நூலை இயற்றினார். இதுவும் விஞ்ஞான சோசலிசத்தின் வரலாற்றில் சகாப்த முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்ந்தது. இறந்து வரும் தம் நண்பரின் சோர்ந்த கரங்களில் இருந்து நழுவும் ஆயுதங்களை தம் கையில் எடுத்துக் கொண்டு எங்கெல்ஸ் பல ஆண்டுகளுக்கு சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு தலைமை தாங்கினார்.
அவரது வாழ்க்கையின் காலையிலும் நண்பகலிலும் எது மறுக்கப்பட்டதோ அது வாழ்க்கையின் மாலையில் அவருக்கு அமோகமாக எங்கெல்ஸே கூறியபடி வெகு அமோகமாக கிடைத்தது. ஆயினும் விதி இன்னமும் அவரது கடன்காரனாகவே இருந்தது என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார். மார்க்ஸுடன் அவருக்கு ஏற்பட்ட நட்புறவு அவருக்கு கிடைத்த மாபெரும் இன்பம், அதே சமயத்தில் அவரது வாழ்வில் இரகசியமானத் துயரமும் கூட. மாவீரனும் கூட தியாகம் செய்யக் கஷ்டப்படும் அளவுக்கு அவர் அதற்கு மாபெரும் தியாகங்கள் செய்தார். ஆனால் எந்தக் கூர்மையான அறிவாற்றல் செயலை விட அவருக்கு அதிகப் பெருமையைத் தந்தது. அவர் சுய விருப்பத்துடன், வருத்தமின்றி தயக்கமின்றித் தம்மை விடப் பெரிய மாபெரும் மேதைக்குக் கீழ்ப்படிந்து விரும்பிச் செயல்பட்டதேயாகும். அறிவாளிகள் சிலர் மேதையின் மேல் கொண்ட பொறாமையின் காரணமாக மகோன்னதமான பேராற்றல்களை வீணடித்தனர். ஆனால் பொறாமையின் சுவடே இல்லாத வகையில் ஆசிரியருடன் சேர்ந்து செயல்பட்ட எங்கெல்ஸ் அவருக்கு ஜோடியாக ஆனார்.
மார்க்ஸையும் எங்கெல்ஸையும் வாழ்க்கை ஒன்று சேர்த்திராவிட்டால் அவர்கள் என்ன ஆகியிருப்பார்கள் என்றெல்லாம் நினைப்பது வெறும் சோம்பேறிக் கனவுகளாகும். அவர்கள் நிச்சயம் ஒன்று சேர்ந்திருக்க வேண்டும், அவ்வாறு தான் நடந்தது. அவர்களது பொதுவான வாழ்க்கைப் பணிக்கு நன்றி தெரிவிக்கும் அவர்களது வாரிசுகள் இந்த இரு மனிதர்களின் இறவாத பணிகளைப் பாராட்ட வேண்டும்.
லஸ்ஸால், மார்க்ஸ் இவர்களின் புயல் வீசிய வாழ்க்கையோடு ஒப்பீடும் பொழுது எங்கெல்ஸின் வாழ்க்கை ஒளியும் மகிழ்ச்சியும் உள்ளதாகத் தோன்றும். ஆனால் அந்த வாழ்க்கையிலும் அலைகளும் சுழல்களும் இல்லாமல் போகவில்லை.
தன்னைப் பற்றி மிகையாகப் பாராட்டும் போக்கு (அவ்வாறு அவர் கருதினார்) தனது மரணத்திற்குப் பிறகு சரியான அளவுக்கு வரும் என்று தமது வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் எங்கெல்ஸ் கூறுவது வழக்கம்.
உண்மையில் நடந்ததும் இதுவே, இன்று அவரைப் பற்றி அதிகமாக மதிப்பிடுவதை விடக் குறைவாக மதிப்பிடும் அபாயம் தான் உள்ளது. ஒரு வேளை குள்ள மனிதர் சிலர் தங்களது வீண் ஆடம்பரத்தால் மார்க்ஸின் புகழ் பீடத்தின் அடித்தளத்தில் மொய்த்து, அவரது சிரத்தில் உள்ள வெற்றி கிரீடத்தைப் பறிக்க முயன்றாலும் மார்க்ஸின் உருவம் மேலே மேலே பராக்கிரமம் மிகுந்ததாக உயர்ந்து கொண்டே போகிறது. எங்கெல்ஸை விட மார்க்ஸ் உயர்ந்து நிற்பதாகத் தோன்றும். ஆனால் எங்கெல்ஸும் தம்முடன் சேர்ந்து உயர்ந்து வராமல் மார்க்ஸினால் உயர்ந்து செல்ல முடியாது. ஏனெனில் மார்க்ஸின் வாழ்க்கைக் காலத்திலும் அவர் மரணத்திற்குப் பிறகும் வேறு பலரைப் போல, மார்க்ஸின் வெறும் உதவியாளராக அல்லது விமர்சகராக மட்டும் எங்கெல்ஸ் இருக்கவில்லை. அவர் தம்மைத் தாமே நம்பி நின்ற சக ஊழியர். மார்க்ஸுக்கு நிகரல்ல. ஆயினும் அறிவாற்றலில் அவருக்கு சமநிலையில் இருந்தார். மார்க்ஸைப் பற்றிக் கூறாமல் எங்கெல்ஸைப் பற்றிப் பேச முடியாது. அவர்கள் பரஸ்பரம் கொண்டிருந்த நட்பை பற்றிக் குறிப்பிடாமல் அவர்கள் இருவரையும் பற்றிப் பேச முடியாது. வாழ்கையின் விதி மறுத்துவிட்டவை குறித்து முனு முனுப்பது எங்கெல்ஸின் வழக்கமல்ல. “இறுதியில் எல்லாவற்றையும் வரலாறு முடிவு செய்யும். அதற்குள் நாம் நமது காலத்தை மகிழ்ச்சியுடன் கழித்திருப்போம். எதைப் பற்றியும் எதுவும் தெரியாத நிலையில் இருப்போம்” என்று அவர் கூறுவது வழக்கம்.
தமது புகழைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் தாம் விதைத்த விதை எவ்வளவு அற்புதமாக முளை விடுகிறது என்பதைக் கண்டு பெருமிதம் அடைந்தார் எங்கெல்ஸ். இன்பம் என்னும் அவரது வாழ்க்கைக் கோப்பையில் இருந்த ஒரே ஒரு கசப்புத் துளி என்னவென்றால் இந்தக் காட்சியை அவருடனிருந்து மார்க்ஸ் காணவில்லையே என்பது தான்.
எங்கெல்ஸின் பயன்மிக்க வாழ்வு மகிழ்ச்சிகரமாகவும் இருந்தது. ஆண்டுகள், பத்தாண்டுகள் பல எவ்வித கவலையுமில்லாமல் கடந்து சென்றன. பின்னால் ஒரு சிறிய காலம் உடல் நலமற்று, தமது மகிழ்ச்சியான மனப்போக்கால் துயரங்களைச் சகித்து தமது 75 வயதில் அவர் அமைதியாக மரணம் அடைந்தார்.
புரட்சியையும் தற்போது உருவாகி வரும் அதன் அற்புதமான பலன்களையும் கண்டு ரசிக்க எங்கெல்ஸ் நம்முடன் இல்லையே என்று நாமும் வருந்துகிறோம்.[ii] கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச குறிப்பாக ஜெர்மன் சோசலிச டெமாக்ரஸியில் நிகழ்ந்த எல்லாவற்றையும் எங்கெல்ஸ் நிச்சயமாக அங்கீகரித்திருக்க மாட்டார்.[iii] எந்த மனிதனும் மாற்றுக்கு அப்பாற்பட்டவன் என்பது உண்மைதான், ஆயினும் எங்கெல்ஸ் மேலும் அதிக நாள் வாழ்ந்திருந்தால் அவரது தீட்சண்யமான பார்வையாலும் விவேகமான அறிவுரைகளாலும் நிகழ்கால தொழிலாளி வர்க்கம் பல வழிகளில் சுற்றியலையாது தவிர்த்திருப்பார் என்பது உண்மை. எல்லாவற்றையும் விட புரட்சிகரமான ருஷ்யாவில் கொழுந்து விட்டு எரியும் சுவாலைகளைப் பார்த்து பெருமகிழ்ச்சி அடைந்திருப்பார். இந்த புரட்சித் தீயை மூட்ட சர்வதேசத் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு மார்க்ஸும் எங்கெல்ஸும் சேவை புரிந்துள்ளனர். ஆயினும் இது அவர்கள் கடைசி சேவை அல்ல.
தமது வாழ்நாள் முழுவதும் அடிமுதல் முடிவரை புரட்சியாளர்களாகத் திகழ்ந்த மார்க்ஸும் எங்கெல்ஸும் ஜாரின் எதேச்சதிகார ஆட்சியை ஒழித்துக் கட்டுவது பாட்டாளி வர்க்கப் புரட்சியின் திருப்பு முனையாக இருக்கும் என கருதினார்கள். வெகு நாட்களுக்கு முன்பே நியூ ரைனிஷ் சைடுங் பத்திரிக்கையில் இந்த ரத்த வெறி பிடித்த ஆட்சிக்கு எதிராகப் போர்க்கோலம் கொள்ளும் படி அவர்கள் மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்கள். இந்த ஆட்சிக்கு மரண அடி கொடுக்க வேண்டும் என்ற கடமையை அவர்கள் ஒருபோதும் மறக்கவில்லை. ருஷ்ய புரட்சி சக்திகளின் கரு அவர்களது ஊக்கத்தின் மேல் அவர்களது கோட்பாட்டின் கீழ் வளர்க்கப்பட்டு வந்தது. கீழ்நாடுகள் புலர்ந்து வரும் இந்த கட்டத்தில் இங்கிலாந்தின் தலைநகரில் புரட்சி வீரர் மார்க்ஸ் நிரந்தர அமைதியில் இருக்கும் சமாதியும், புரட்சி வீரர் எங்கெல்ஸின் சாம்பல் தூவப்பட்ட கடலின் அலைகளும் நம் கண்முன்னே காட்சியளிக்கின்றன.
கிழடு தட்டிப் போன ஐரோப்பா, புரட்சியின் பராக்கிரமம் நிறைந்த அடியின் கீழ் நடுநடுங்கி கொண்டிருந்த சமயத்தில் அவர்களது உணர்ச்சி ஒளிப்பிழம்பாக விளங்கியது. சிந்தனை எப்பொழுதும் கூர்மையாக இருந்தது. சொற்கள் தீரமாகத் திகழ்ந்தன. யாருக்காக அவர்கள் வாழ்ந்து போராடித் தமது அமரத்துவம் வாய்ந்த படைப்புகளை சிருஷ்டித்தார்களோ, அவர்களிடையில் இந்த நினைவு நின்று நிலைத்து வாழ்கிறது. அவர்களது ஒவ்வொரு பிறந்த தினமும், மறைந்த தினமும் அந்த ஞாபகத்தைப் புதுப்பிக்கின்றன. ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் உள்ள, தரித்திரம் நிரம்பிய இந்த மரண வேதனையிலுள்ள உலகில், புதிய புரட்சி சகாப்தம் புலரும் ஒவ்வொரு சமயமும் அவர்கள் நம்முடன் இன்னும் வாழ்ந்து வருவதைப் போன்று அவர்களது மணிக்குரல் தெளிவாக முழங்குவதைக் கேட்கிறோம்.
அடிக்குறிப்பு:
[i] மார்க்ஸ் தமது தத்துவ பணியில் தொடர்ந்து ஈடுபட, பொருளாதார உதவி செய்யும் பொருட்டு மார்க்ஸுக்கும் எங்கெல்ஸுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் எங்கெல்ஸ் 1850 ஆம் ஆண்டு நவம்பரில் மாஞ்செஸ்டர் வந்து மீண்டும் ஏர்மன் அண்டு வேலையில் சேர்ந்தார். இதுவே எங்கெல்ஸ் வேலையில் சேர்ந்ததற்கு பிரதான காரணமாகும். மார்க்ஸ் லண்டனில் வாழ்ந்து வர எங்கெல்ஸ் மாஞ்செஸ்டரில் வாழ்ந்து வந்தார். இருந்த போதிலும் அவ்விருவரும் பரஸ்பரம் உற்சாகம் பொங்கும் அறிவுத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதை அது தடுக்கவில்லை. பெரும்பாலும் தினந்தோறும் ஒருவருக்கொருவர் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கடிதப் போக்குவரத்து மூலம் இவ்விரு நண்பர்களும் தங்கள் கருத்துக்களையும் அறிவையும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர், விஞ்ஞான பூர்வமான சோசலிசத்தை வகுத்துக் கொடுப்பதில் இணைந்து பணி புரிவதை தொடர்ந்தார்கள். பின்பு 1870 ஆம் ஆண்டு எங்கெல்ஸ் லண்டனுக்கு வந்து அங்கேயே தங்கி விட்டார்
எங்கெல்ஸ் மார்க்ஸிற்கு பொருளாதார உதவி செய்யும் பொருட்டு வேலை பார்த்துக் கொண்டே பல்வேறு பணிகளை மார்க்ஸோடு சேர்ந்தும், தனியாகவும் செய்து வந்தார். அவற்றில் ஒரு சில உதாரணங்களை கால வரிசையில் தருகிறோம்
- 1851 ஆம் ஆண்டில் சார்டிஸ்ட் இயக்க வெளியீடான மக்களின் செய்தித்தாள் எனும் பத்திரிக்கையில் எங்கெல்ஸ்,மார்க்ஸோடு சேர்ந்து எழுதி வந்தார்.
- 1851 – 1862 ஆம் ஆண்டுகளில் நியூயார்க் டெய்லி டிரிபியூன் எனும் பத்திரிக்கைக்கு மார்க்ஸ் பணியாற்றினார். இந்த வேலையில் மார்க்ஸிற்கு எங்கெல்ஸ் தொடர்ந்து உதவினார்.” ஜெர்மனியில் புரட்சியும், எதிர்ப்புரட்சியும் என்ற தலைப்பில் தொடர்ச்சியாகப் பல கட்டுரைகளையும் வேறு பல கட்டுரைகளையும் எங்கெல்ஸ் இந்த பத்திரிக்கைக்கு எழுதினார்.
- சுமார் பத்துவருட காலம் தொடர்ச்சியாக இப்பத்திரிக்கையில் இந்தியா, சீன தேசிய விடுதலை இயக்கங்கள் பற்றியும் ஸ்பெயின் புரட்சி, கீரிமியப் போர், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ்,இத்தாலி- மற்றும் இதர நாடுகளின் நிகழ்ச்சிகள் பற்றியும் மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவரும் பல கட்டுரைகளை எழுதினார்கள்
- 1853 ஜனவரியில் கம்யூனிஸ்ட் லீக்கின் கொலோன் மத்திய கமிட்டி உறுப்பினர்களுக்கு எதிராக பிரஷ்ய அரசு தொடுத்த வழக்கை அம்பலப்படுத்தி மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் கடிதங்கள், கட்டுரைகள் பல எழுதினர்.
- 1861ல் வியன்னாவின் பிரசுரங்கள் எனும் பத்திரிக்கைக்கு மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் அமெரிக்காவில் நடக்கும் உள்நாட்டுப் போருக்கு ஆதரவாக பல கட்டுரைகளை எழுதினார்கள்.
- 1866ல் தேசிய இனப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்காத புருதொனிஸ்ட்டுகளுக்கு எதிராக போலந்து விசயத்தில் தொழிலாளர் வர்க்கம் செய்தவதற்கு என்ன இருக்கிறது? என்ற கட்டுரை தொடரை எங்கெல்ஸ் எழுதினார்.
- 1869 ஆம் ஆண்டு, எங்கெல்ஸ் மாஞ்செஸ்டரிலுள்ள வர்த்தக அலுவல் பொறுப்பை விட்டு முழு நேரத்தையும் அரசியல் விஞ்ஞான பணிகளுக்கு, தாம் இறக்கும் வரையில் அர்ப்பணித்தார்
- செங்கனல் ஆசிரியர் குழு
[ii] இந்த கட்டுரை முதல் ருஷ்யப் புரட்சியின் (1905-07) ஆரம்பக் காலத்தில் எழுதப்பட்டது.
[iii] இரண்டாவது அகிலத்திலும், ஜெர்மன் சோசலிச ஜனநாயக கட்சியிலும் சந்தர்ப்பவாதம் அதிகரித்து வந்ததை இங்கே ஆசிரியர் பிரான்ஸ் மேரின்க் குறிப்பிடுகிறார்.