உலகப் பணக்காரர்களில் ஒருவரான, முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் (என்கோர் ஹெல்த் கேரின் நிறுவனரான வீரேன் மெர்ச்சன்ட் – சைலா மெர்ச்சன்ட் மகள்) திருமணமானது, அதாவது, திருமணம் என்ற பெயரில் அரங்கேறிய வக்கிரமானது, கடந்த மார்ச்சில் தொடங்கி நலங்கு – சங்கீத் – மெஹந்தி – ஹல்தி போன்ற சடங்குகளுடன் நடந்தேறியது.
திருமணத்தின் முந்திய நிகழ்வாக, இத்தாலியில் கப்பல் விருந்து உட்பட, பல்வேறு விருந்துகளுடன், அமெரிக்க டாப் பாடகி ரிஹானாவின் பாடல் கூத்துடன் கடந்த ஜூலை 12-இல் இந்த வக்கிரம் நடந்து முடிந்துள்ளது. இதற்காக செலவிடப்பட்ட தொகை சுமார் ரூ.5000 கோடி. இவை இல்லாமல், கருப்பு பணம் எவ்வளவு என்பது, அம்பானிக்கும், அமலாக்கத்துறை எஜமானனுக்கும் தான் வெளிச்சம்.
இந்த வக்கிரத்திற்கு, ரஜினி உள்ளிட்ட சினிமா கழிசடைகள், மோடி உள்ளிட்ட மக்கள் வியாதிகளான அரசியல்வாதிகள், இவற்றை காட்சிப்படுத்தி, காசாகிக்கிய கார்ப்பரேட் ஊடகங்கள் மற்றும் வரி, வங்கி, பங்குமார்க்கெட் மோசடி பேர்வழிகளுக்கு, ரூ.7 லட்சம் மதிப்பிலான திருமண அழைப்பிதழ், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருள்கள் வழங்கி, அம்பானியின் பால்கன் விமானங்கள், ஜெட் விமானங்கள், ஆடம்பர கார்கள் மூலம் சொகுசாக அழைத்து வரப்பட்டனர்.
ரூபாய் 5000 கோடியானது, அம்பானியின் சொத்து மதிப்பில் 0.5% மட்டுமே. இந்த வகையில், இவை மிகவும் சொற்பமானதே; பெருமை கூடியதே என்கிறது வக்கிரத்தை வர்ணிக்கும் ஊடகங்கள். அப்பா திருபாய் அம்பானி தொடங்கி, தம்பி அணில் அம்பானி வரை ஒட்டுமொத்த அம்பானி குடும்பமே மக்களை ஏய்து, அரசின் சலுகைகளைத் தின்று, வங்கிகளை திவாலாக்கி சேர்த்த சொத்துதான் இந்தப் பணம். ஆம்பானி ஏதோ இந்த பணத்தை ராப்பகலாக மூட்டை தூக்கி கஷ்டப்பட்டு சம்பாதித்தது போல எழுதுகின்றனர்.
உழைக்காமலேயே, அடுத்தவன் உழைப்பில் உண்டு வாழும் ஒரு செயல், அடுத்தவனை வதைத்து வாழும் ஒரு செயல், அடுத்தவன் உழைப்பைத் திருடி வாழும், சுரண்டி வாழும் ஒரு செயல், ஒரு வக்கிரமே.
பெரும்பான்மை மக்கள் வறுமையில் வாழும்போது, குறைந்த கூலியில் அவதிப்படும்போது, ஆனந்த் அம்பானியின் ஆடம்பர திருமணம் வக்கிரமில்லாமல் வேறென்ன? உழைக்கும் மக்களைப் பொருத்தவரை ஒரு கோடிக்கு எத்தனை சைபர் என்பது கூட தெரியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தெருக்கோடியும், செத்தவனுக்கு போடும் கோடியும் தான்.
தனிநபரின் மாத வருமானம் ரூ.8000 முதல் ரூ.20,720 வரை இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. (இதில் உத்திர பிரதேசம் முதலிடத்திலும், தமிழ்நாடு 7-வது இடத்திலும் உள்ளது) இதனடிப்படையில், தனிநபரின் சராசரி மாத வருமானம் ரூ.20,000 என்று வைத்துக் கொள்வோம். அதாவது, 1 லட்சம் ரூபாயில் தல 4 பேர் கொண்ட ஐந்து குடும்பங்கள் வரம்புக்கூட்பட்ட வகையில், மாதம் முழுவதும் வாழ முடியும்.
இதனடிப்படையில், இந்த வக்கிரத்திற்கு செலவுச் செய்யப்பட்ட ரூ.5000 கோடியில், சுமார் 250,000 குடும்பங்கள் மாதம் முழுவதும் வாழ முடியும். அதாவது, 250,000 குடும்பங்கள் ஒரு மாத வாழ்வை, ஒரு நாள் கூத்துக்காக வாரி இறைக்கப்பட்டதை வக்கிரம் என்று சாடாமல், எளிமையான நிகழ்வாக, பெருமைப்படத்தக்கதாக வர்ணிக்கும் ஊடகங்களின் செயல் வக்கிரத்தின் உச்சம்.
இச்செலவை ஈடு கட்டும் வகையில், இந்த வக்கிரத்திற்கு வராத உழைக்கும் மக்களுக்கு தண்டனையாக ஜியோ-வின் கட்டணத்தை உயர்த்தி விட்டது. ‘மருமகள் வந்த ராசியில்’ பங்குச்சந்தையிலும் ஒரே நாளில் ரூ.25000 கொடியை சூறையாடி, திருமணச் செலவு 5000 கோடியை ஈடு செய்து கொண்டது. மீதமுள்ள 20000 கோடியை, அதாவது, 10 லட்சம் மக்களின் ஒரு மாத சம்பளத்தை, ஒரே நாளில் மூலதனமாகச் சுருட்டிக் கொண்டது. சாதாரண நடுத்தர மக்கள் உட்பட தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு குறைந்தபட்ச செலவில் கூட, அதாவது, தங்களுடைய 50 வருட, உழைப்பின் சேமிப்பிலிருந்து கூட, திருமணத்தை நடத்த முடியவில்லை. வேறு வழியின்றி கடனைப் பெற்று திருமணத்தை நடத்திவிட்டு, அக்கடனை அடைக்க முடியாமல், அவதிக்குள்ளாகி, தற்கொலைச் செய்து கொண்ட குடும்பங்கள் எண்ணில் அடங்காதவை. இவற்றை ஒப்பிடும்போது, ஆனந்த் அம்பானியின் திருமணம் வக்கிரமில்லாமல் வேறென்ன?
திருமணம் என்ற பெயரில் நடந்த இந்த வக்கிரத்தில், கலந்து கொண்ட கழிசடைகள் அனைவரும், ஏதாவதொரு வகையில் உழைக்கும் மக்களின் உதிரத்தை உறிஞ்சிக் கொழுத்த சுரண்டல் பேர்வழிகளே என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இது போன்ற கழிசடைகளை, அவர்களின் வர்க்க வாழ்வின் வக்கிரத்தை, ஆசான் மார்க்ஸ் கூறுவது போல, இதற்கு அடிப்படையான வர்க்கச் சுரண்டலை முறியடிக்காமல், உழைக்கும் மக்கள் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கையைக் கூட பெற முடியாது.
கடந்த 10 ஆண்டுகளில், பாசிச மோடி அரசின் அரவணைப்போடு, சூறையாடல் – சுருட்டல் – சுரண்டல் மூலம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.10 லட்சம் கோடி வரை எதிறியுள்ளது. இவைதான், மோடி அரசின் வளர்ச்சி. இவற்றைத் தான், எதிர்க்கட்சிகள் ஒடுக்க முயற்சிப்பதாகச் சாடுகிறார்கள். வளர்ச்சி என்கிற பெயரில் பொதுத்துறைகளை, வரிச்சலுகையை வாரி வழங்கி, லட்சக்கணக்கான கோடியில் கார்ப்பரேட் கல்லாவை நிரப்பும், மோடி வகையறாக்களான அரசியல்வாதிகளை, அவர்களின் ஆளும் வர்க்கச் செயலை, சேவையைப் புரிந்து கொள்ளாமல், இதுபோன்ற, வக்கிர நிகழ்வுகளின் மீது வர்க்கக் கோபம் வராது. இதற்கு, உழைக்கும் வர்க்க அரசியலையும், விழிப்புணர்வையும், தேடலையும், அதற்கான பயணத்தையும் துவங்கும் போது மட்டுமே வரும்.
- மோகன்
மக்கள் பணத்தை தின்று கொளுக்கும் கார்ப்பரேடுகள்.