கார்ப்பரேட் கொள்ளையை எளிதாக்குவதற்காக அரசால் உருவாக்கப்பட்டதே மணிப்பூர் கலவரம்.

இயற்கை வளம் நிறைந்த இந்தப் பகுதிகள் முழுவதிலும் நீர்-நிலம்-காடுகளைப் பாதுகாக்கவும், தங்களது கண்ணியத்தையும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், இராணுவமயமாக்கலுக்கு எதிராகவும், கார்ப்பரேட்மயமாக்கலுக்கு எதிராகவும் பழங்குடியின விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் இந்திய அரசோ, இன-மத மோதல், எனும் திரைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு மக்களின் அனைத்து வகையான எதிர்ப்புகளையும் நசுக்கிவருகிறது.

 

 

மணிப்பூர் கலவரம் தொடங்கி ஓர் ஆண்டு முடிவடைந்துவிட்டது. இந்தக் கலவரமானது எல்லோரும் கூறுவது போல இரண்டு இனங்களுக்கு இடையிலான பகைமையினால் உருவான கலவரம் அல்ல. இது, இயற்கை வளம் கொழிக்கும் மணிப்பூரின் வனப்பகுதிகள் முழுவதையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் எவ்வித தடையும் இன்றி கைப்பற்றிக் கொண்டு கொள்ளையடிப்பதற்காக, பார்ப்பன இந்துத்வ பாசிச கும்பல் திட்டமிட்டு உருவாக்கிய கலவரம் என அம்பலப்படுத்துகிறது, FACAM (கார்ப்பரேட்மயமாக்கலுக்கும் இராணுவமயமாக்கலுக்கும் எதிரான மன்றம்) அமைப்பின் அறிக்கை. Counterview இணையதளத்தில் வெளிவந்துள்ள அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகிறோம்.

**********

மே 3ம் தேதியுடன், மணிப்பூரில் இனப்படுகொலை வன்முறை தொடங்கி ஒரு வருடம் ஆகிறது. இந்த வருடம் முழுவதும் வன்முறையானது தீவிரமடைந்தே வந்திருக்கிறது. மே 1, 2024 நிலவரப்படி, ஆளும் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணியால் தொடங்கப்பட்ட வன்முறையின் காரணமாக, 185 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 200 க்கும் மேற்பட்ட கிராமங்கள் எரிக்கப்பட்டுள்ளது, மணிப்பூரில் இருந்து 41,000க்கும் அதிகமான பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

பழங்குடியின விவசாயிகளின் நிலங்களை மையமாகக் கொண்டே இந்தப் பிரச்சனை தொடங்கியது, மணிப்பூர் மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் உள்ள பாஜக அரசாங்கம், மலைகளில் உள்ள வன நிலங்களை பள்ளத்தாக்கில் வசிக்கும் நில உரிமையாளர்கள் வாங்குவதை ஊக்குவித்தன் மூலம், குகி-சோ, நாகா விவசாயிகள் மற்றும் மெய்தி பழங்குடி சமூகங்களுக்கு இடையே வன்முறையைத் தூண்டியது.

இந்த மோதலின் போது, இந்திய இராணுவம் மற்றும் துணை ராணுவத்தின் ஆயுதங்களும் வெடிமருந்துகளும் “திருடப்பட்டு”, பார்ப்பன இந்துத்வா பாசிச அரசிற்கு சேவை செய்யும் படைகளை உருவாக்க பயன்படுத்தப்பட்டதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன.

மணிப்பூர் மாநிலத்தின் இயற்கை வளங்களைச் சுற்றியே மோதல்கள் நடந்துள்ளன, குறிப்பாக சொல்வதானால் உக்ருல் மாவட்டத்தில் உள்ள ஹுண்டுங், புங்யார் மற்றும் மைலியாங் கிராமங்களிலும், தெங்னௌபால் மற்றும் சாண்டல் மாவட்டங்களின் டூபோக்பி, சக்பிகாரோங், பல்லேல், நுங்புரா, நுங்பால், சாஜிக் தம்பாக் மற்றும் ஹைகோட் கிராமங்களிலும் காணப்படும் சுண்ணாம்புகல், குரோமைட், நிக்கல், தாமிரம், மலாக்கிட், அசுரைட், மேக்னடைட் மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றை குறிவைத்தே இந்தக் கலவரம் நடத்தப்பட்டுள்ளது.  

புவியியல் பகுப்பாய்வின்படி, இந்த வளங்களில் 80 சதவீதம், கிறித்தவ குக்கி-சோ மற்றும் நாகா பழங்குடி சமூகங்கள் வசிக்கும் பகுதிகளில் இருக்கின்றன. அதே சமயம் பெரும்பான்மையாக இந்துக்களாக உள்ள மெய்தி இனத்தை சேர்ந்தவர்கள் ஆளும் பார்ப்பன இந்துத்துவ பாசிச அரசின் அடித்தளமாக மாற்றப்பட்டுள்ளனர்.

ஏகாதிபத்தியங்கள், இந்திய பெரும் கார்ப்பரேட்டுகள் மற்றும் உள்ளூர் மணிப்பூரி கூட்டாளிகளின் நலன்கள் காக்கப்பட வேண்டும் என்றால், இயற்கை வளங்களை பெருநிறுவனங்கள் கொள்ளையடிப்பதை எளிதாக்க வேண்டும் என்றால், இந்த வளங்கள் நிறைந்த காடு மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி-சோ மற்றும் நாகா விவசாயிகளை அங்கிருந்து விரட்டியடிப்பதுடன், அதற்கெதிராக போராடாதபடி அவர்களின் அரசியல் உணர்வுகளை மழுங்கடிக்க வேண்டும்.

பிரிட்டீசாரின் ஆட்சியின் போதும் சரி, 1947ல் பிறந்த இந்திய அரசுடனும் சரி, மணிப்பூரால் ஒருங்கிணைய முடியவில்லை. இதன் காரணமாக எழுந்த தேசிய விடுதலை இயக்கங்களும் கூட இன்றைக்கு, அரசால் தூண்டிவிடப்பட்ட இன மோதல்களைச் சாக்கிட்டு, தாக்கப்பட்டுள்ளன.   

கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காக, உள்ளூர் அரசு ஆதரவு கூலிப்படைகளுக்கு ஆயுதம் வழங்குவதற்கான ஒரு வழிமுறையாக இந்த மோதல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘வன்முறையை அடக்குவது’, ‘அமைதியை மீட்டெடுப்பது’ என்ற பெயரில் அப்பகுதியில் இராணுவத்தையும், துணை ராணுவ படைகளையும், போலீசையும் அதிக அளவில் குவித்து வைப்பது நியாயப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதை எளிதாக்க முடியும். பெருமளவிலான விவசாயிகள் இப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பதே இதற்கு சாட்சி.

பஸ்தார் பகுதியில், கார்ப்பரேட்டுகளின் கொள்ளையை பாதுகாக்க, தனது சொந்த மக்களின் மீது திட்டமிட்ட போரைத் தொடுத்துள்ள இந்திய அரசை எதிர்த்து, தங்களது நிலங்களுக்காகவும், இனப்படுகொலைக்கு எதிராகவும் போராடும் பழங்குடி விவசாயிகளை நசுக்குவதற்கு முன்னர் சல்வா ஜூடும் என்றும், தற்போது மாவட்ட ரிசர்வ் காவலர்கள், பஸ்தார் போராளிகள் என்றும் பல பெயர்களில் தனியார் கூலிப்படைகளை உருவாக்கியது போல, இன்றைக்கு மணிப்பூரிலும் இந்த அரசு கூலிப்படைகளை உருவாக்கி வருகிறது.

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆம் தேதிகளில், மத்திய துணை இராணுவப் படைகளின் ஒரு பகுதியான அஸ்ஸாம் ரைபிள்ஸ், குகி-சோ மக்கள் வசிக்கும் ஜிரிபத்தில் உள்ள லீசாங்பாய் மற்றும் செஜாங் கிராமங்களுக்கு அருகிலுள்ள வனப் பகுதிகளில், போராளி ஒருவரைத் தேடுகிறோம் என்ற போர்வையில் தாக்குதல் ஒன்றை நடத்தியது.

இந்த தேடுதல் வேட்டையைக் காரணம் காட்டி கிராமங்களில் இருந்த விவசாயிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகு தனியார் கூலிப்படைகளைக் கொண்டு கிராமம் முழுவதும் இடித்துத் தள்ளப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் இருந்து விவசாயிகள் நிரந்தரமாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

பஸ்தாரிலும் சரி மணிப்பூரிலும் சரி, இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதைப் பாதுகாக்க, பழங்குடியின விவசாயிகள் மீது இராணுவம் ஏவிவிடப்படுகிறது. இயற்கை வளம் நிறைந்த இந்தப் பகுதிகள் முழுவதிலும் நீர்-நிலம்-காடுகளைப் பாதுகாக்கவும், தங்களது கண்ணியத்தையும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், இராணுவமயமாக்கலுக்கு எதிராகவும், கார்ப்பரேட்மயமாக்கலுக்கு எதிராகவும் பழங்குடியின விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் இந்திய அரசோ, இன-மத மோதல், எனும் திரைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு மக்களின் அனைத்து வகையான எதிர்ப்புகளையும் நசுக்கிவருகிறது.

கார்ப்பரேட்மயமாக்கல் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு எதிரான மன்றமானது (FACAM) மணிப்பூர் மக்கள் தங்களது நிலங்களைப் பாதுகாக்கவும்,  நீர்-நிலம்-காடுகளைப் பாதுகாக்கவும், பார்ப்பன இந்துத்துவா பாசிசத்திற்கு எதிராக நடத்தும் போராட்டத்தில், அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறது. FACAM இராணுவமயமாக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்துகிறது, அப்பகுதியில் அரசின் ஆதரவு பெற்ற தனியார் கூலிப்படைகளை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது, ஏகாதிபத்தியங்கள், இந்திய பெருநிறுவனங்களின் நலனுக்காக, மலைவாழ் விவசாயிகளை விரட்டியடிக்கின்ற, கொடூரமான சுரங்க நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

அறிக்கையை வெளியிட்டவர்கள் – FACAM

FACAM: அரசு-கார்ப்பரேட் தொடர்பை அம்பலப்படுத்த உறுதிபூண்டுள்ள முற்போக்கு அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் கூட்டமைப்பு.

நன்றி – Counterview இணையதளம்.

(https://www.counterview.net/2024/05/manipur-conflict-state-manufactured-in.html)

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. இந்திய மக்கள் கார்ப்பரேட் கொள்ளை பற்றி இன்னும் முழுமையாக புரிந்துக் கொள்ளவில்லை.