கடந்த ஆண்டு அக்டோபரில் ஆரம்பித்த காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் இன்று வரை தொடர்கிறது. இத்தாக்குதலில் இதுவரை 35000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 79000 பேர் காயமடைந்துள்ளதாகவும் பத்திரிக்கைகள் கூறுகின்றன. சில நாட்களுக்கு முன்பு மத்திய காஸாவில் உள்ள நுசெரேட் அகதி முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை தொடுத்துள்ளது. வடக்குப்பகுதியில் உள்ள ஜபலிய அகதி முகாமை இஸ்ரேலின் டேங்கர்கள் மற்றும் ஆயுதமேந்திய வாகனங்கள் சுற்றி வளைத்துள்ளன. அப்பகுதியை விட்டு மக்கள் வெளியேறுமாறு அறிவித்துள்ளது இஸ்ரேல் இராணுவம். தற்போது காஸாவின் கிழக்குப் பகுதியில் உள்ள நகரமான ராபாவில் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
ஏறத்தாழ 140000 க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் இப்பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர். இப்பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவார்கள் என்பதால் தாக்குதலை நிறுத்துமாறு போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நாடுகள் கோரியுள்ளன.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதியன்று, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில்(UNHRC) இஸ்ரேல் மீது ஆயுதத் தடையை வலியுறுத்தும் தீர்மானத்தை கொண்டுவந்தது. “இஸ்ரேலுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற இராணுவ உபகரணங்களை விற்பனை செய்தல், பரிமாறிக் கொள்ளுதல் ஆகியவற்றை நிறுத்த வேண்டும்” என்று உலக நாடுகளுக்கு UNHRC அழைப்பு விடுத்தது. ஆனால் இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் இந்த தீர்மானத்தில் வாக்களிப்பதில் இருந்து புறக்கணித்துள்ளது.
ஐ.நா.வினுடைய பாலஸ்தீன சிறப்பு பிரதிநிதி பிரான்செஸ்கா அல்பானீஸ் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் மேற்கண்ட தீர்மானத்தை UNHRC கொண்டுவந்தது. அவர் அந்த அறிக்கையில் காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நீதிமன்றமும் இதனை இனப்படுகொலை என்று அங்கீகரித்துள்ளது. நிலைமை இப்படியிருக்க உலகத்துக்கே விஸ்வகுருவான மோடியின் புதிய இந்தியா இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டை ஏன் ஆதரிக்க வேண்டும்? இந்தியாவின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டிற்குப் பின்னால் இந்திய முதலாளிகளின் லாபம் ஒழிந்திருக்கிறது. குறிப்பாக இஸ்ரேலுடன் இராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி/இறக்குமதி செய்கின்ற முதலாளிகளின் நலனைக் காக்க இந்திய அரசு விரும்புகிறது.
இஸ்ரேல் காஸாவின் மீது தொடுத்துவரும் தாக்குதலில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் ட்ரோன்களில் சில இந்தியாவில் இருந்து தாயாரித்து அனுப்பப்படுகிறது. பிப்ரவரி மாதம் 20 ஹெர்ம்ஸ்-900 ட்ரோன்களை இந்தியா இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதனை தயாரிப்பதே மோடியின் மானசீக நண்பரான அதானியின், அதானி டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தான்.
2016 ஆம் ஆண்டில், அதானி டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கும், இஸ்ரேலின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனமான எல்பிட் சிஸ்டத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனடிப்படையில் அதானி-எல்பிட் அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் என்ற தொழிற்சாலை ஹைதிராபாத்தில் தொடங்கப்பட்டது. இஸ்ரேல் இராணுவத்திற்காக ஹெர்ம்ஸ் 900 ட்ரோன்களை தாயாரிப்பது தான் அதானி-எல்பிட் நிறுவனத்தின் பிரதான வேலையாகும்.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் பயன்படுத்தும் ட்ரோன்களில் 85% எல்பிட் நிறுவனம் தான் தயாரிக்கிறது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், ஹெர்ம்ஸ்-900 ட்ரோன்களைப் மூலம் காசா மீது குண்டுகளை வீசி ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்றுள்ளது இஸ்ரேலிய இராணுவம்.
2018 ஆம் ஆண்டில், அதானி டிபன்ஸ் நிறுவனமும் இஸ்ரேல் வெபன் இன்டஸ்ட்ரி நிறுவனமும் இணைந்து PLR சிஸ்டம் என்ற நிறுவனத்தை தொடங்கினர். இது தாக்குதல் ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் இயந்திர துப்பாக்கிகளை (‘TAVOR Assault Rifle, X95 Assault Rifle, GALIL Sniper Rifle, NEGEV லைட் மெஷின் கன் மற்றும் UZI சப் மெஷின் கன்’) தயாரிக்கிறது. மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் உள்ள இந்நிறுவனத்தின் 51% பங்குகளை அதானியும் மற்றும் மீதமுள்ள 49% இஸ்ரேல் வெபன் இன்டஸ்ட்ரி நிறுவனமும் வைத்துள்ளது. 2022ல் செயற்கை நுண்ணறிவு துணையுடன் இயங்கும் துப்பாக்கிகளை தயாரிப்பதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.அதானி மட்டுமில்லாது, பாரத் போர்ஜ்ன் கல்யாணி ஸ்ரேட்ரஜிக் சிஸ்டம் நிறுவனம் இஸ்ரேலின் ராபேல் சிஸ்டம் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஏவுகணைகளைத் தயாரிக்கின்றன.
தனியார் நிறுவனங்கள் மட்டுமல்லாது இந்திய அரசின் ஆய்வு நிறுவனமான DRDO இஸ்ரேலுடன் சேர்ந்து இராணுவ தடவாளங்களை தயாரிக்கின்றது. மேலும் இந்தியா இஸ்ரேலிடமிருந்து ஏராளமான இராணுவ தடவாளங்களை வாங்குகிறது. இதன் அளவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கண்காணிப்பு கருவிகள், ட்ரோன்கள் மற்றும் புவியிலிருந்து தாக்கும் வான் ஏவுகணைகள் ஆகியவற்றை இந்தியா இஸ்ரேலிடமிருந்து அதிகமாக வாங்குகிறது. 2014ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுதங்கள் அளவு 42.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல், தான் உற்பத்தி செய்யும் போர்கருவிகள் மற்றும் ஆயுதங்களை மற்ற நாடுகளுக்கு விற்கும் போது அவை “போரில் சோதிக்கப்பட்டவை” என்ற உத்தரவாதத்துடன் விற்பனை செய்கிறது. இவ்வாறு விற்பனை செய்வதற்கு காரணம் தான் உற்பத்தி செய்யும் அனைத்து ஆயுதங்களையும் போர் கருவிகளையும் பாலஸ்தீன மக்களின் மீது சோதனை செய்துள்ளது என்பதுதான். இது குறித்து பல பத்திரிக்கை செய்திகளும் வெளியாகியுள்ளன.
கடந்த அக்டோபரில் தொடங்கப்பட்ட காசா மீதான தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலின் ராணுவ தடவாளங்கள்/ஆயுதம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் வருவாய் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. எல்பிட் நிறுவனம் 2023 இறுதி காலாண்டில் 1.6 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டி உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலாண்டோடு ஒப்பிடும்போது ஏழு சதவீதம் அதிகமாகும். இதே நிறுவனம் தேட்டாக்கள் மற்றும் வெடிமருந்துகளை இஸ்ரேல் இராணுவத்திற்கு விற்றதன் மூலம், கடந்த ஆண்டைவிட 12 சதவிகிதம் அதிக லாபத்தை ஏட்டியுள்ளது. இஸ்ரேலின் IWI நிறுவனம் கடந்த ஆண்டு இறுதி காலாண்டில் 1.4 மில்லியன் டாலர் அளவிலான வருவாயை ஈட்டியுள்ளது. ராபேல் சிஸ்டம் நிறுவனத்தின் விற்பனை 19 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கூடவே எல்பிட், IWI மற்றும் ராபேல் நிறுவனங்கள் முறையே $17.8 மில்லியன், $18 மில்லியன் மற்றும் $14 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தங்களையும் கையிருப்பில் வைத்துள்ளனர்.
இந்த லாபத்தில் இந்திய முதலாளிகளுக்கும் பங்கு இல்லாமல் இல்லை. அதானி டிபன்ஸ் மற்றும் பாரத் போர்ஜ் நிறுவனங்கள் மேற்சொன்ன இஸ்ரேல் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுக்கான இராணுவ ஆயுதங்களையும் ட்ரோன்களையும் உற்பத்தி செய்து தருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் மக்களை ஒடுக்குவதற்கும் கண்காணிப்பதற்கான உத்திகளை இஸ்ரேலிடமிருந்து இந்திய ஆட்சியாளர்கள் பெறுகின்றனர். பெகசஸ் என்ற உளவு மென்பொருள் மூலம் எதிர்கட்சி தலைவர்களையும் சமூக செயற்பாட்டாளர்களையும் வேவுபார்த்து சிறையிலடைத்தது மோடி கும்பல். இந்த பெகசஸ் மென்பொருள் இஸ்ரேலிடமிருந்து வாங்கப்பட்டது. டெல்லியை நோக்கிய விவசாயிகள் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை அடையாளம் காண்பதற்கும், அவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசவும் ட்ரோன்களை ஹரியான பாஜக அரசு பயன்படுத்தியது. இதே முறையை இஸ்ரேல் பாலஸ்தீனர்களை வேவுபார்க்க பயன்படுத்தி வருகிறது. இதிலிருந்து பெறப்பட்ட அனுபவத்தைதான் விவசாயிகள் மீது ஹரியான பாஜக அரசாங்கம் அமல்படுத்தியது என்கிறது “மிடில் ஈஸ்ட் ஐ” என்ற பத்திரிக்கை.
இந்தியா உலகத்துக்கே விஸ்வகுருவாக வளர்ந்துவருகிறது என்று கதை அளக்கிறார் பாசிஸ்ட் மோடி. அதே வேலையில் இந்திய தரகு முதலாளிகளின் நலன்களிலிருந்தே பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டிக்க திரானியில்லாமல் இருக்கிறார். அதானியின் நலன்களுக்காகத்தான் இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கியநாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரிக்காமல் அதனை புறக்கணித்துள்ளது இந்த காவி-கார்பரேட் பாசிச கும்பல்.
- அழகு