ஆண்டுதோறும் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை “தலித் வரலாற்று மாதம்” என்ற பெயரில் நீலம் அமைப்பு ‘கொண்டாடி’ வருகிறது. அவ்வாறு கடந்த ஏப்ரல் மாதத்தில் நீலம் அமைப்பின் “வேர்ச்சொல் இலக்கிய விழா”வில் கம்யூனிஸ்டுகள், முற்போக்காளர்கள் எல்லாரும் சாதிவெறியர்கள் என்ற தொணியில் ஷாலின் மரியா லாரன்ஸ் பேசியதும் அதைத் தொடர்ந்து அதற்கு பதிலாக ஆதவண் தீட்சன்யா பேசியதும் சர்ச்சையாகியது. இதைத் தொடர்ந்து ஓரிரு நாட்கள் கழித்து இயக்குனர் பா.இரஞ்சித் தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இவைகளைத் தொடர்ந்து “தலித்துகள் தனித்து அரசியல் செய்வது”, “தனிநீரோட்ட அரசியல்”, “அடையாள அரசியல்” போன்றவை குறித்து சமூக வலைத்தளங்களில் பலவாறான விவாதங்கள் எழுந்தன.
அடையாள அரசியல் அல்லது தனிநீரோட்ட அரசியல், தலித் வகைமை அரசியல் என்று கூறி முன்வைக்கப்படும் அரசியல் சரியா தவறா? அது உண்மையில் சாதி ஒழிப்புக்குப் பயன்படுமா? சாதி ஒழிப்பிற்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் செயல்படுவதாகக் கூறிக் கொள்ளும் நீலம் அமைப்பும் இயக்குனர் பா.இரஞ்சித்தின் செயல்பாடுகள் உண்மையில் அந்தத் திசையை நோக்கித்தான் உள்ளதா? – போன்ற அம்சங்களை இன்று விவாதப்பது சாதி ஒழிப்பைப் பற்றிய சரியான பார்வையைப் பெறுவதற்கு அவசியம் என்று கருதுகிறோம். எனவே, உண்மையாகவே சாதி ஒழிப்பிலும், சமூக மாற்றத்திலும் அக்கறை கொண்டுள்ளவர்கள் இந்தக் கேள்விகளைக் குறித்து நாங்கள் கூறவருவதைத் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு நேர்மையாகப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
சமூகநீதி பேசுபவை என்று கூறிக் கொள்ளும் தி.மு.க. உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் சாதிவெறியர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வதும்; சாதிவெறித் தாக்குதல்கள் நடக்கும்போது அதைக் கண்டும் கானாமல் சமரசமாக நடந்துகொள்வதும்; சமூகநீதி என்று பேசிக் கொண்டே பா.ம.க. கொ.ம.தே.க. போன்ற கட்சிகளைக் கூட்டணியில் வைத்துக் கொண்டு சாதிவெறியர்களுக்கு சீட்டுக் கொடுப்பதும் இளைஞர்கள் பா.இரஞ்சித் போன்ற அடையாள அரசியல் பேசுபவர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்படுவதற்கு ஒரு முக்கியக் காரணமாகும். மேற்சொன்ன ஓட்டுக் கட்சிகள் இவ்வாறு நடந்துகொள்ளும்போது சாதியை ஒழிக்க வேண்டுமென்ற நேர்மையான நோக்கம் உள்ள சிலருக்கும் “தனித்து நின்று அரசியல் செய்வதில் என்ன தவறு” என்ற கேள்வி எழக்கூடும்.
மேற்சொன்ன கட்சிகள் சாதி ஒழிப்பிற்காகத்தான் நிற்கின்றன என்று வாதிடுவதோ; சமூகநீதிக்காக நிற்கின்றன என்று வாதிடுவதோ சுத்த அயோக்கியத்தனமானதாகும். நிலவும் சாதிய அமைப்பைக் கட்டிக் காப்பதில்தான் எல்லா ஓட்டுக் கட்சிகளின் நலனும் அடங்கியுள்ளது. இக்கட்சிகளிலெல்லாம் சாதி பார்த்துதான் வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள். ஆதிக்க சாதி மக்களைத் தாஜா செய்து ஓட்டுக்களை அறுவடை செய்ய வேண்டுமென்றுதான் பார்க்கிறார்கள். அதனால்தான் வேங்கைவயல் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தாலும் தி.மு.க. போன்ற கட்சிகள் சாதிவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட தலித்துகளையே குற்றவாளிகளாக்க முயற்சிக்கின்றன. எனவே, உண்மையில் மேற்சொன்ன கட்சிகளின் மீது அதிருப்தியடைந்துள்ளவர்களின் கோபமும் குமுறலும் முற்றிலும் நியாயமானவை. ஆனால் அவர்கள் வந்து சேர வேண்டிய இடம் “அடையாள அரசியல்” அல்ல; வர்க்கப் போராட்ட அரசியலே! கம்யூனிச அரசியலே! இதையும் இக்கட்டுரையில் எடுத்துக்காட்டுகிறோம்.
000
தனிநீரோட்ட அரசியல், தலித் வகைமை அல்லது அடையாள அரசியல் என்பது என்ன?
பா.இரஞ்சித் தனது இந்த உரையிலும் சரி, தனது முந்தைய உரைகள், திரைப்படங்கள் போன்ற அனைத்திலும் பேசிவரும் அரசியல் என்பது தலித்துகளுக்கென தனியான ஒரு அரசியல் தேவை என்பதுதான்! அரசியல், சினிமா, இலக்கியம், நாவல்கள் என எல்லாவற்றிலும் தலித் வகைமை என்று ஒன்று உண்டு; தலித்துகளுக்கென தனியான அரசியல் என்று ஒன்று உண்டு என்பதுதான்! தேர்தல் அரசியல் களத்தில் மட்டுமல்ல, எல்லாக் களங்களிலும் தலித்துகள் தனித்து நிற்க வேண்டும்; அவர்களுக்கென ஒரு அடையாளம் உண்டு; கலாச்சாரம் உண்டு; அதை அவர்கள் பாதுகாத்து நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான்! இதுதான் அடையாள அரசியல் அல்லது தலித்திய அரசியல். இதை நாம் சுருக்கமாகவேனும் புரிந்துகொள்ள வேண்டும்.
இது தலித்துகளுக்கு மட்டுமல்ல, பெண்கள், கறுப்பர்கள், மாற்றுப் பாலினத்தவர், இசுலாமியர்கள் என சமூகத்தில் பல்வேறு பிரிவினர்கள் உள்ளனர். அவரவர்களுக்கென்று தனிப்பட்ட வரலாறு, கலாச்சாரம், பெருமிதங்கள் எல்லாம் உள்ளன. அவரவர்கள் மீதான ஒடுக்குமுறையை அவரவர்களால்தான் புரிந்துகொள்ளவும் பேசவும் போராடவும் முடியும். இப்படி ஒவ்வொரு குழுவும் தனித்தனியாகப் பிரிந்து தமக்கான விடுதலையைத் தேடிக் கொள்ள வேண்டும். அதற்காக செயல்பட்டுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அடையாள அரசியலின் சாரம்சமாகும்.
“தனித்து நிற்கும் அரசியல்”, “தனிநீரோட்ட அரசியல்”, “தலித் வகைமை” என்பதெல்லாம் அடையாள அரசியல் என்பதை மறைக்கப் போட்டுக் கொள்ளும் முகமூடிகளே அன்றி வேறல்ல.
பின்நவீனத்துவத்தையும் அடையாள அரசியலையும் பேசி வருகிறவர்கள் காலங்காலமாக “கட்டுடைத்தல்” (Unbundling) என்ற பெயரில் இதைத்தான் பிதற்றி வருகிறார்கள். “நீங்கள் வர்க்கம் என்ற பேரடையாளத்துக்குள் பெண்கள், தலித்துகள், கறுப்பர்கள் போன்ற இதர அடையாளங்களை அடைத்துவிடப் பார்க்கிறீர்கள். அவரவர்களுக்கென்ற ஒரு அடையாளம் உண்டு. தனித்தன்மை உண்டு. எனவே வர்க்கம், வர்க்கப் போராட்டம் என்பதெல்லாம் பெருங்கதையாடல். தலித்தியம்., பெண்ணியம்., பாலின பிரச்சனைகள் என தனித்தனியாக இவை பேசப்பட வேண்டும். கட்டுடைக்கப்பட வேண்டும்.” என்று இவர்கள் வாதிடுகிறார்கள்.
ஒருபடி மேலேபோய் தலித்தல்லாதோர் தலித் உரிமைகளுக்காகப் பேசினால், போராடினால் “நீங்கள் மேலிருந்து எங்களுக்கு மீட்சி வழங்க வேண்டாம்” என்று ஏளனம் செய்கிறார்கள். அதாவது தலித் அல்லாதோர் தலித்துகளின் விடுதலைக்காக, மீட்சிக்காக வெளியில் இருந்து “பிச்சையிட வேண்டாம்” என்பதுதான் இதன் பொருள்.
“தனது விடுதலையைத் தானே தீர்மானிக்கும் இடத்தை புனைவுக் கதைகளில் கூட கொடுக்க விரும்பாத உயர்சாதி மனநிலையை ராஜ்கவுதமன் மேலிருந்து மீட்சி வழங்குதல் என்கிறார்.”[1]
உதாரணமாக மேற்கூறிய நிகழ்ச்சியில் பா.இரஞ்சித்தின் உரையிலும், “தலித் அல்லாத நிறைய எழுத்தாளர்கள், இயக்குனர்களின் படைப்புகளை நான் பார்த்துள்ளேன். ஆனால் அவையெல்லாம் தலித்துகளின் வாழ்க்கையையும் வலியையும் சரியாக காட்டவில்லை. கருக்கு என்ற நாவலை எழுதிய பாமாவின் எழுத்தில் இருக்கும் தலித் வாழ்க்கையை நீங்கள் தலித்தல்லாதோரின் படைப்புகளில் பார்க்க முடியாது. தலித் அல்லாதோர் தலித்துகளைப் பற்றி எழுதினால் அதில் கழிவிரக்கம்தான் உள்ளது”[2] என்கிறார்.
இந்த சாதிய சமூகத்தில் ஒரு சராசரி நபரை சீரற்ற (random) முறையில் தேர்ந்தெடுத்தால் அவர் ஒரு சாதியவாதியாகவோ அல்லது தலித்துகளின் துயரத்தை முழுமையாக புரிந்து கொள்ளாதவராகவோ இருக்க வாய்ப்பதிகம் என்ற உண்மையை எடுத்துக் கொண்டு அதை மிகைப்படுத்தி எந்த ஒரு ஆதிக்க சாதியினராலும் அவர் முயற்சித்தாலும் ஒரு தலித்தின் துயரத்தை புரிந்து கொள்ள முடியாது; தலித்துகளின் வாழ்க்கை புரிந்து கொள்ள முடியாது என்ற வாதம் வைக்கப்படுகிறது. இதனால் தலித்துகளின் வாழ்க்கையை வாழாமல், “சாதியை கண்டுணரமால்” தலித் வாழ்க்கையை படமாகவோ, எழுத்தாக்கவோ படைக்க முடியாது என்று வாதிடப்படுகிறது.
இரஞ்சித், வாசுகி பாஸ்கர், ராஜ் கவுதமன் போன்றவர்களின் கூற்றின்படி, தலித்துகளின் வாழ்க்கையை தலித்தாக வாழ்ந்து பார்த்தவர்ககள்தான் ஆவணப்படுத்த முடியும் என்றால் பெண்களின் வாழ்க்கையையும் வலியையும் பெண்கள் தானே பேச முடியும்; தன்பாலின ஈர்ப்பாளர்கள், திருநங்கைகள், நம்பிகளின் வாழ்க்கையை அவர்கள்தானே புரிந்துகொள்ளவும் பேசவும் போராடவும் முடியும்; இசுலாமியர்கள், கறுப்பர்களின் வலியை அவரவர்கள்தானே புரிந்துகொளவும் பேசவும் போராடவும் முடியும். இப்படித்தான் அடையாள அரசியலும் பின் நவீனத்துவமும் போதிக்கிறது. உழைக்கும் மக்களை இப்படி நூறு துண்டுகளாக உடைத்து சிதறடித்து அவர்களின் வர்க்க ஒற்றுமையைக் குலைப்பதுதான் மேற்படி வாதத்தின் நோக்கம்.
சரி ஒருவாதத்துக்காகக் கேட்போம். தன்பாலின ஈர்ப்பாளராகவும், தலித் பெண்ணாகவும், திருநங்கை, நம்பியாகவும் இல்லாத, அவர்களின் வாழ்க்கையையும் வலியையும் வாழ்ந்து பார்த்து உணராத ஒரு ஆணான பா.இரஞ்சித், தனது நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் மட்டும் எப்படி இவையனைத்தையும் காட்சிப்படுத்தியுள்ளார். எல்லா வகைப் பண்டங்களும் கிடைக்கும் ஒரு பலசரக்கு அங்காடியைப் போல மேற்கண்ட பிரச்சனைகள் எல்லாவற்றையும் ஒரே படத்தில் எடுக்க இரஞ்சித் என்ன ‘ஒரு இலக்கிணத்தில் ஒன்பது கிரகணமும் உச்சம் பெற்ற ஒருவரா?’; மேற்சொன்ன பிரிவு மக்களுக்கு இரஞ்சித் “மேலிருந்து மீட்சி வழங்குகிறாரா? அல்லது பக்கவாட்டில் இருந்து மீட்சி வழங்குகிறாரா?” அறிவு நாணயமுள்ளவர்கள் இகேள்விக்கு பதிலளிக்க வேண்டும்.
மேற்கண்ட வாதங்கள் எல்லாம் சுத்த அபத்தமானவை மட்டும்மல்ல அயோக்கியத்தனமானவை. எல்லா பிரிவு உழைக்கும் மக்களாலும் எல்லோரின் வலியையும் பேசவும் புரிந்துகொள்ளவும் அதற்காகப் போராடவும் முடியும். எங்கோ காசாவில் 30,000 மக்கள் கொன்றொழிக்கப்பட்டதை எதிர்த்து இன்று அமெரிக்காவின் பல்கலைக் கழகங்கள் போர்க்களமாகியுள்ளன. எங்கோ வியட்நாமில் அமெரிக்கா கொத்துக் குண்டுகளைப் போட்டதை எதிர்த்து அமெரிக்க மக்கள் தமது சொந்த அரசை எதிர்த்துப் போராடி பின்வாங்க வைத்தனர். எங்கோ மணிப்பூரில் குக்கி மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு, பெண்கள் கற்பழிக்கப்பட்டதை எதிர்த்து இந்தியாவே ஆத்திரம் கொள்கிறது. மாநிலம் கடந்து, தேசம் கடந்து, நிறம், இனம், மொழி, பாலினம், சாதி கடந்து உழைக்கும் மக்களின் வர்க்க ஒற்றுமை என்பது சாத்தியம்தான் என்பதை அன்றாட நடைமுறைகள் நமது செவிப்பறையில் அறைந்து சொல்கின்றன.
இந்த எளிய உண்மையைப் புரிந்துகொள்வதைத்தான் அடையாள அரசியல் தடுக்கிறது; வர்க்க ஒற்றுமை, வர்க்கப் போராட்டம், புரட்சி என்பதெல்லாம் பெருங்கதையாடல் என்று கூறி அதை நிராகரித்து ஒவ்வொரு சமூகப் பிரிவும் தனித்தனியே பிரிந்து தமக்கான விடுதலையைப் பெற்றுக் கொள்ளுமாறு போதிக்கிறது. அதன் மூலம் வர்க்க ஒற்றுமையைத் துண்டாடி ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்கிறது.
ஆனால் பா.இரஞ்சித் போன்ற அடையாள அரசியல் பேசும் பேர்வழிகள் செய்வதெல்லாம் இதைத்தான்.
உண்மையில் தலித்துகளின் விடுதலை எங்கு இருக்கிறது?
தலித்துகளுக்கென்று தனி ஒரு விடுதலைப் பாதை கிடையாது என்பதே நிதர்சனம். தனியார்மயம், தாராளமயம், உலகமயக் (LPG) கொள்கையால் மதம், இனம் ,சாதி, மொழி ,பாலின வேறுபாடுகளை கடந்து அந்நியமுதலீட்டாலும், இந்திய தரகு முதலாளிகளாலும் சுரண்டபட்டு வரும் உழைக்கும் வர்க்கம், இந்தப் பாகுபாடுகளைக் கடந்து ஒன்று சேர்ந்து வர்க்க போராட்டத்தின் வாயிலாக இந்த சுரண்டலை பாதுகாக்கும் அமைப்பு முறையைத் தூக்கியெறிய நடத்தும் புதிய ஜனநாயகப் புரட்சியில் தான் தலித்துகள் உட்பட அனைத்து மக்களின் விடுதலையும் அடங்கியுள்ளது.
உழைக்கும் வர்க்கமாக ஒன்று சேர வேண்டுமென்றால் அதற்கு சாதி கடந்து வர வேண்டுமல்லவா? இந்த சாதிய சமூகத்தில் ஆதிக்க சாதியினர் சாதியை கடந்து எப்படி வருவார்கள்?
இதற்கான பதிலும், அதாவது சாதி ஒழிப்பிற்கான பதிலும் வர்க்க போராட்டத்திலேயே இருக்கிறது. உழைக்கும் வர்கத்திற்க்குள்ளையே சாதிய முரண்பாடுகள் இருக்கிறது என்பது உண்மை. சாதியைக் கடக்காமல் வர்க்க ஒற்றுமை இல்லை என்பதும் உண்மை.
அனைத்து சாதிகளில் இருக்கும் உழைக்கும் வர்க்கமும் தனக்கான நலன் சாதிப் பெருமையில் இல்லை, மாறாக சாதிப் பெருமை ஊட்டும் சங்கங்கள் மற்றும் மூலதன சுரண்டலை ஊக்குவிக்கும் ஆளும் வர்க்க கட்சிகளுக்கு எதிராக அணிதிரண்டு சாதி கடந்து ஏற்படும் வர்க்க ஒற்றுமையிலும், அதன் வாயிலாக ஏற்பாடும் ஜனநாயகப் புரட்சியிலும்தான் இருக்கிறது என்ற அரசியல் விழிப்புணர்வை பெரும்போதுதான் இது சாத்தியம். தனக்கு எந்த நலனும் தராத சாதி அடையாளத்தை விடுவதன் மூலம் தான் வேலைவாய்ப்பின்மை, பட்டினி, விலைவாசி உயர்வு, கல்வி-மருத்துவம்-மின்சார தனியார்மயம், சிறுகுறு தொழில்கள் அந்நிய முதலீட்டின் கீழ் நசுங்குவது என தன் எல்லா பருண்மையான பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும் என்பதை உழைக்கும் வர்க்கத்திற்கு பிரச்சாரத்தின் மூலமாகவும், போராட்ட அனுபவங்களின் வாயிலாகவும் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த வர்க்க போராட்டத்தின் வாயிலாக மட்டுமே சாதிய தளர்வுகள் ஏற்படும்.
இப்படி நாம் கூறும்போது, உங்களுக்கு வேறு வேலையே இல்லை; கம்யூனிஸ்டுகள் எப்போது பார்த்தாலும், வர்க்கம், வர்க்கப் போராட்டம், புரட்சி, சமூக மாற்றம் என்று நடைமுறைக்கு உதவாதவற்றை உளறுவார்கள்; நாலு புத்தகங்களைப் படித்துவிட்டு மண்ணையும் மக்களையும் புரிந்துகொள்ளாமல் நமக்கு வகுப்பெடுக்க வந்துவிடுவார்கள் – என்று “தலித்திய அறிவு ஜீவிகள்” ஏளனத்துடன் கேட்கக்கூடும்.
சமீபத்தில் மூன்று வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் போராட்த்தில், நிலமற்ற தலித்துகளும் நிலமுள்ள ஜாட் சாதியனரும் ஒன்றிணைந்து போராடியது மட்டுமல்ல; சாதி ஒடுக்குமுறைகளுக்காக அவர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர்; அதேபோல முசாபர் நகர் கலவரம் நடந்த மேற்கு உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜாட் இந்து விவசாயிகள் அக்கலவரத்திற்காக இசுலமிய மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர். எந்தக் கம்யூனிஸ்டுகளும் பிரச்சாரம் செய்யமலேயே இந்த வர்க்க ஒற்றுமையை நடைமுறையில் விவசாயிகள் சாதித்துள்ளவையெல்லாம் இவர்களின் காமாலைக் கண்களுக்குத் தெரியப்போவதில்லை.
“எப்போதும் நிகழ்ந்திராத அத்தகைய பரந்துபட்ட கூட்டணியை அவர்கள் வெற்றிகரமாக உருவாக்கினார்கள். கிட்டத்தட்ட ஒட்டுமொத்த பஞ்சாப் மாநிலத்தையும் வர்க்க, சாதியப் பிளவுகளைக் கடந்து வெற்றிகரமாக ஒருங்கிணைத்[துள்ளனர்] … பாரதிய கிசான் யூனியன் என்ற விவசாய சங்கம் மேற்கு உத்திரப் பிரதேசத்தில், விவசாயிகளின் மகாபஞ்சாயத்துகள் மூலமாகவும் வேர்மட்ட அளவிலான பரந்துபட்ட கூட்டங்கள் மூலமாகவும் முசுலீம்கள் உட்பட எல்லாத் தரப்பு விவசாயிகளையும் ஒருங்கிணைத்தது. இந்நிகழ்வுகளானது இந்தியாவின் பல பகுதிகளிலும் இத்தகைய கூட்டங்களை நடத்துவதற்குத் தூண்டுதலாக அமைந்தது. இசுலாமியர்களின் மீது கடைபிடிக்கப்பட்டுவந்த சமூகப் புறக்கணிப்பு முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டது. பாரதிய கிசான் யூனியன் சங்கமானது இசுலாமியர்களுடன் தனது உறவைப் புதுப்பித்துக்கொண்டதன் மூலம் அவர்கள் [ஜாட்டுகள்] 2000 ஆம் ஆண்டுகளில் ஆதரித்து வந்த பா.ஜ.க.வின் இசுலாமியவிரோதக் கொள்கையை இப்போது நிராகரித்தனர். தலித்துகளும் ஜாட்டுகளும் சமமானவர்கள் என்று இப்போது அவர்கள் மீண்டும் மீண்டும் கூறுவது முன்னெப்போதும் நிகழ்ந்திராத ஒன்றாகும். பெரும்பாலான ஜாட் விவசாயிகளிடையே நிலவிவந்த சாதிய, மதவாத தப்பெண்ணங்களுக்கு எதிரான திசையில் பாரதிய கிசான் யூனியன் சங்கத்தின் செயல்பாடுகள் சென்று கொண்டிருக்கிறது”[3]
ஆனால் “ஜாட்டுகள் தலித்துகளை கொடுமைப்படுத்தியுள்ளனர்; எனவே தலித்துகள் வேளாண் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிக்கக் கூடாது; அவர்களுடன் நிற்கக் கூடாது; இது நிலமுள்ள ‘பண்ணையார்களான’ ஜாட் விவசாயிகள் அவர்களின் நலனுக்காக நடத்தும் போராட்டம்; இதில் நிலமற்ற தலித் விவசாயிகளுக்கு எந்த நலனும் இல்லை” என்றெல்லாம் பேசி இத்தகைய வர்க்க ஒற்றுமையைச் சிதைக்கும் வேலையைத்தான் இப்போராட்டங்கள் நடந்தபோதும்கூட தலித்திய அறிவு ஜீவிகள் செய்துவந்தனர்.
இந்த மாதிரியான போராட்டங்களால் சாதி முற்றிலுமாக ஒழிந்துவிட்தா? என அடையாள அரசியலின் ஆதரவாளர் யாரேனும் ஆத்திரப்பட்டு சீறீயெழலாம். ஆம். இப்போராட்டங்களே சாதியை முற்றாக ஒழித்துவிடாதுதான். ஆனால் இத்தகைய போராட்டங்களினால் எழும் வர்க்க ஒற்றுமையும், அதன் போக்கில் வர்க்க எதிரிகளையும் அரசையும் தூக்கியெறிந்து அமைக்கப்படும் புதிய ஜனநாயாக அரசும்தான் சாதியை முழுமையாக ஒழிக்கும். சாதிவெறி சங்கங்கள், கட்சிகள், அமைப்புகளைத் தடைசெய்யும். இதுதான் சாதி ஒழிப்பிற்கான ஒரேயொரு வழி.
மீண்டும் சொல்கிறோம். ஓட்டுக் கட்சிகளின் மீது அதிருப்தியடைந்துள்ள, சாதிய ஒழிக்க வேண்டுமென்ற நேர்மையான நோக்கம் கொண்டவர்கள் வந்து சேர வேண்டிய இடம் அடையாள அரசியலல்ல. வர்க்கப் போராட்ட அரசியலே! கம்யூனிச அரசியலே!
தனிநீரோட்ட அரசியல் அல்லது அடையாள அரசியலின் சமூக விளைவு என்ன?
இப்போது ரஞ்சித்தின் “தனி நீரோட்ட அரசியல்”இன் சமூக விளைவு என்ன என்ற கேள்வியைப் பரிசீலிப்போம்.
இவ்வாறு தனித்து நின்று செய்யும் அரசியலுக்கு உதாரணமாக பா.இரஞ்சித்தே தனது உரையில் சொன்ன கதைதான் தீ மிதித் திருவிழா. அதாவது தனது சிறுவயதில் “தலித்துகளாகிய எங்களை ஊர்த்தெருவில் தீ மிதிக்க அனுமதிக்கவில்லை; எனவே நாங்கள் எமக்காகவே உள்ள கோவிலில் தீ மிதித் திருவிழா ஏற்பாடு செய்துகொண்டோம்” என்று பேசினார். இவ்வாறு தனித்து நின்று தனக்கானவற்றை உருவாக்கிக் கொள்வதைத்தான் அம்பேத்கரும் செய்தார் என்றும்., “இதுதான் அதிகாரத்திற்கு எதிராக அதிகாரத்தை நிறுவுவது” – அதாவது கிராமப்புறங்களில் இருக்கும் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராக சேரியில் தலித்துகளின் அதிகாரத்தை நிறுவுவது – என்றும் கம்பு சுத்துகிறார்.
தாழ்த்தப்பட்ட மக்களைக் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கக் கோரி போராடினால், கொங்கு மக்கள் தேசியப் பேரவை., பா.ம.க. போன்ற சாதிவெறிக் கட்சிகள் என்ன வாதம் வைப்பர்? நாங்கள் வரிபோட்டு கட்டிய கோவிலில் நீ உள்ளே நுழைவாயா? நீ உன் சொந்தப் பணத்தைப் போட்டு கோவிலைக் கட்டிக் கொள். அதற்குள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என்பார்கள். இதற்கும் பா.இரஞ்சித்தின் பேச்சுக்கும் என்ன வேறுபாடு! சாதிவெறியர்கள் சாதியைப் பாதுகாக்க வேண்டுமென்று பிரகடனப்படுத்திக் கொண்டே இதைக் கூறுகிறார்கள். பா.இரஞ்சித் சாதியை ஒழிக்க வேண்டுமென்று கூறிக் கொண்டே இதைக் கூறுகிறார். அவ்வளவுதான்!
தலித்துகளைப் பொதுக் கிணற்றில் தண்ணீரெடுக்க அனுமதிப்பதில்லை; பொதுப் பாதையின் வழியே சுடுகாட்டுக்குச் செல்ல அனுமதிப்பதில்லை; பொதுச் சுடுகாட்டில் புதைக்க அனுமதிப்பதில்லை; பொதுக் குளத்தில் குளிக்கவும் புழங்கவும் அனுமதிப்பதில்லை – எனவே இரஞ்சித்தின் வாதப்படி, “நீ என்ன என்னைத் தனித்து வைப்பது நானே தனித்து இருந்து இவற்றையெல்லாம் கொள்கிறேன் பார்” என்று தலித்துகளே இங்கெல்லாம் தமக்கானவற்றை உருவாக்கிக் கொள்ள வேண்டுமா? இவற்றையெல்லாம் தனித்து உருவாக்கிக் கொண்டால், தனித்து நின்றால் அதன் சமூக விளைவு என்னவாகும். சாதி இறுகுமா? தளறுமா?
ஆதிக்கச் சாதிகளில் உள்ள ஜனநாயக சக்திகளையும் சேர்த்துக் கொண்டு இதற்கெல்லாம் எதிரான போராட்டத்தை நடத்தி பொதுவில் உள்ள எல்லாவற்றிலும் புழங்கும் உரிமையை தலித்துகள் வென்றெடுக்கும்போதுதான் சாதிய இறுக்கம் தளறும். மாறாக இரஞ்சித் கூறுவது போல “அதிகாரத்திற்கு எதிராக ஒரு அதிகாரத்தை நிறுவுகிறேன்” என்று இவற்றை தனித்து உருவாக்கிக் கொண்டால் அது சாதியப் பாகுபாட்டையும் ஆதிக்கத்தையும் இறுக்கமாக்கவே செய்யும் அல்லவா.
தலித்துகள் தலித்துகளாகத் திரண்டு தங்கள் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை காண வேண்டும்; தலித்துகள் தலித்துகளாகத் தம்மை உணர வேண்டும்; தமது அடையாளத்தைப் பாதுகாத்துக்கொள்ளவும் அதனால் பெருமிதம் கொள்ளவும் வேண்டும்; ஆண்டாண்டு காலமாய் அடையாளம் நசுக்கப்பட்டவர்கள், மறுக்கப்பட்டவர்கள் தமது அடையாளத்தைப் பறைசாற்றுவதிலும் பாதுகாப்பதிலும் என்ன தவறு உள்ளது – என்ற வாதத்தைப் பரிசீலிப்போம். இதுதான் அடையாள அரசியலின் மையமான வாதமாகும். சாதியை ஒழிக்க வேண்டும் என்று கூறுபவர், அந்த அடையாளத்தையும் ஒழிக்க வேண்டுமா? பாதுகாக்க வேண்டுமா? ஆதிக்க சாதிகள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களும் தமது சாதியின் அடையாளத்தால் தமக்கு எவ்வித நன்மையும் இல்லை என்று உணர்ந்து அதைத் துறக்கும்போதுதான் குறைந்தபட்சம் கடக்கும்போதுதான் வர்க்க ஒற்றுமை ஏற்படும். மேலே விவசாயிகள் போராட்டத்திலும் அவ்வாறுதான் நிகழ்ந்துள்ளது. ஆனால் இதற்கு நேரெதிரானதைத்தான் அடையாள அரசியல் போதிக்கிறது.
ஒவ்வொரு அடையாளத்தையும் பாதுகாப்பதன் மூலம் சமூகத்தில் அதன் இருப்பை உறுதி செய்வதுதான் அதன் நோக்கம். அதாவது கறுப்பர் வெள்ளையர் என்ற வேற்றுமை; தலித் தலித் அல்லாதோர் என்ற வேற்றுமை போன்றவற்றை படிப்படியாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்கு பதிலாக அதை நியாயப்படுத்தி, புனிதமாக்கி, பெருமிதம் கொள்ளவைப்பதன் மூலம் அதன் சமூக இருப்பை (presence) உறுதிப்படுத்துகிறது.
ஆண்டாண்டு காலமாக தலித்துகளுக்கான சுயமாரியாதையையும் உரிமைகளையும் இடத்தையும் வழங்கவில்லை; அவைகளை வென்றெடுப்பதற்காகத்தான் நாங்கள் அடையாள அரசியல் செய்கிறோம் என்று இரஞ்சித் தரப்பினர் முன்வைக்கின்றனர். தலித்துகளுக்கென்று தனிவரலாறு உண்டு, பெருமிதம் உண்டு இவற்றை தலித்துகள் உணரும்போதுதான் அவர்கள் தம்மை விடுவித்துக் கொள்ள முடியும்; தாழ்த்தப்பட்டவர்களாக உனராமல் சுயமரியாதையுடன் உணரமுடியும்; தலைநிமிர்ந்து நடக்க முடியும்; அதற்காகத்தான் நாங்கள் அரசியல் செய்கிறோம் என்கின்றனர். இதற்காக முன்னொரு காலத்தில் பல அரச பதவிகளிலும் உயர்ந்த இடங்களிலும் தலித்துகள்தான் இருந்துள்ளனர் என்பதைப் போன்ற கதைகளைக் கொட்டுகின்றனர். “தலித்துகளுக்குத் தன்னம்பிக்கையூட்டுவது” “தலித் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வது” என்ற பெயரில் இதைச் செய்கின்றனர்.
இவ்வாதத்தைப் பரிசீலிக்கும் முன்னர் ஓன்றைத் தெளிவுபடுத்திவிடுவோம். அடையாளத்துக்கான போராட்டம் என்பது நிலவும் சமூக அமைப்பை அப்படியே பாதுகாத்துக் கொண்டு (maintainig status quo), சமூக இயக்கத்தின் போக்கிலேயே அதில் தனக்கான அடையாளத்தைத் தேடுவதாகும். ஆனால் சுயமரியாதை, உரிமைகளுக்கான போராட்டம் என்பது ஜனநாயகத்துக்கான போராட்டமாகும். நிலவும் ஜனநாயகமற்ற சமூக அமைப்பை அடித்து நொறுக்குவதன் மூலம்தான், மாற்றியமைப்பதன் மூலம்தான் அதை வென்றெடுக்க முடியும். எனவே அடையாளத்தைப் பாதுகாப்பது என்பதும் சுயமரியாதை, ஜனநாயகத்தை வென்றெடுப்பது என்பதும் நேரெதிரான விசயங்களாகும்.
தலித்துகள் மட்டுமல்ல எல்லா உழைக்கும் மக்களும் படிநிலை சாதிய அமைப்பில் தமக்கு மேலுள்ளவர்களால் சுயமரியாதை இன்றி நடத்தப்பட்டுள்ளனர்; கீழுள்ளவர்களை சுயமரியாதை இன்றி நடத்தியுள்ளனர். இன்றுவரை நடத்தியும் வருகின்றனர். இங்கே ஜனநாயகத்துக்கான சாதி ஒழிப்புப் போராட்டமின்றி தலித்துகளின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளின் மூலம் எங்கனம் சுயமரியாதையை வென்றெடுக்க முடியும் என்று இந்தக் கணவான்கள் விளக்கியாக வேண்டும்.
தலித்துகளுக்கு “தலித்” என்ற அடையாளம் என்றைக்கும் சுயமரியாதையையும் ஜனநாயகத்தையும் தந்துவிடாது. மாறாக, அந்த அடையாளம் சமூகத்தில் இருக்கும் வரை அது அவர்களை அடக்கியாளவே பயன்படும்.
மேலும் “தலித்துகளுக்கு தன்னம்பிக்கையூட்டுவது” “தலித் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வது” என்ற பெயரில் இவர்கள் கடைவிரிக்கும் சீமான் பாணியிலான கதைகளெல்லாம் தலித்துகள் மத்தியில் சாதியப் பெருமிதத்தைத் தூண்டிவிடுவதில்தான் போய் முடியும்.
இரஞ்சித்தும் இதைத்தான் செய்கிறார் என்று கூறுவது மிகையல்ல. “கச்சநத்தம் பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை விவசாய வேளாண்குடிகள் என்று அழைத்துக் கொள்கின்றனர்” என்று அதைப் புகழ்ந்து கிருஷ்ணசாமி தொணியில் ஒரு மேடையில் இரஞ்சித் பேசியுள்ளார்.[4] இது தலித் மக்களிடம் ஒருவகை சாதிப் பெருமிதத்தை வளர்ப்பதுதான்.
சரி. தலித்துகள் தாம் தலித்தாக இருப்பதிலும் தமது அடையாளத்திலும் கலாச்சாரத்திலும் பெருமிதம் கொள்கிறார்கள்; தலித்துகளாகத் திரள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். எதிர்முனையில் என்ன நடக்கும். தலித்துகள் ஒரு பக்கம் கூடுவதால் இன்னொரு பக்கம் சாதி வெறி அமைப்புகள் தலித்தல்லாதோரோய் எளிமையாக திரட்டி சமூகத்தில் உள்ள சாதிய கட்டமைப்பே இன்னும் இறுகுவதில்தான் போய்முடியும். இது தமிழ்நாட்டிற்கு புதிதும் இல்லை; திருமாவளவன், கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் போன்றோர் பல ஆண்டுகளாய் செய்துவந்த அரசியல் இதுதான். இது எதிர்முனையில் ராமதாஸ், கோவை ஈஸ்வரன் போன்ற சாதி வெறியர்கள் தமது சாதி இளைஞர்களை வெறியூட்டி ஒன்று திரட்டுவதற்கு உதவி செய்வதில்தான் போய் முடிந்தது.
இசுலாமியர்கள் இசுலாமியர்களாகத் திரண்டால் இந்துமதவெறியர்களுக்கு என்ன நன்மை ஏற்படுமோ அதுதான் தலித்துகள் தலித்துகளாகத் திரண்டால் ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் ஏற்படும். இந்துமதவெறியை ஒழிக்க வேண்டுமென்றாலும் சாதிய ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமென்றாலும் இசுலாமியர்களும் தலித்துகளும் தமது சாதி, மத அடையாளத்தைத் துறந்து வர்க்கமாக பிற உழைக்கும் மக்களுடன் ஒன்றிணைந்தால்தான் முடியும்.
இதை “அதிகாரத்திற்கு எதிராக இன்னொரு அதிகாரத்தை நிறுவுவது” என்று இரஞ்சித் பேசுவதெல்லாம் கேட்கவும் கைதட்டவும் விசிலடிக்கவும் நன்றாக இருக்கலாம். நடைமுறையில் அதை அமல்படுத்தினால் தாழ்த்தப்பட்ட மக்களை மரணக்குழியில் தள்ளுவதில்தான் போய் முடியும்.
இதனை எல்லாம் பரிசீலித்து பார்க்கும் போது இவர்களின் முன் இப்போது இரண்டு வழிகள் தான் உள்ளன
- அடையாள அரசியலினால் தலித்துகள் சாதிய குழுக்களாக அணி திரளவது ஆதிக்க சாதியினரையும் எதிர்முகாமில் அணிதிரளச் செய்து சாதிய பாகுபாடுகளை இன்னும் கூர்மையாக்குவதை இவர்கள் எப்படிச் சரி செய்வார்கள் என்று வழி சொல்ல வேண்டும்.
- இல்லையென்றால் தான் சொல்லிக் கொள்வது போல் சாதி ஒழிப்பிருக்கெல்லாம் தான் வேலை பார்க்கவில்லை, சாதி ஒழிப்பில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும்.
“எப்பொழுதும் தலித்துகளையே குற்றம் கூறுகிறீர்கள்; பொதுவில் சாதி வெறி இருப்பதால் தான் நாங்கள் தனித்து நிற்கிறோம்; பொதுவை மாற்றுங்கள் எங்களுக்கு உபதேசம் செய்யாதீர்கள்; தலித்துகளுக்கு தமது சாதிய அடையாளத்தால் ஒன்றுமில்லை, ஆதிக்க சாதிகள்தான் அதை விட மறுக்கிறார்கள்; அவர்களிடம் போய் உபதேசம் செய்யுங்கள்” என இவர்கள் வாதிடுவதைப் பார்க்க முடிகிறது.
ஆம். ஆதிக்க சாதியினரை மாற்றுவதுதான் சாதி ஒழிப்பிற்கான முதற்படி. ஆனால், “பொதுவில்” உள்ள சாதிவெறியை “தனித்து நின்று” எப்படிக் களையப் போகிறீர்கள்? பொதுவில் உள்ள ஜனநாயக சக்திகளோடு ஒன்றிணையாமல் பொதுவில் உள்ள சாதி வெறியர்களை எப்படி எதிர்க்கப் போகிறீர்கள். தலித்துகள் தங்கள் அடையாளத்தைப் பாதுகாத்துக் கொண்டு அரசியல் செய்வது ஆதிக்க சாதிகள் தமது அடையாளத்தை விட்டொழிப்பதற்கு எவ்வாறு உதவி செய்யும்? உங்கள் வாதப்படி தலித்துகள் தமது அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்வது சரியென்றால், ஆதிக்க சாதிகளும் அவ்வாறு வாதிடுவது சரியென்று ஆகிவிடுகிறதே! இப்படி எல்லவிதமான சாதிய அடையாளங்களும் தொடர்ந்து பாதுகாக்கப்படுமானால் சாதி எப்படி ஒழியும்?
அறிவு நாணயம் துளியேனும் இருந்தால் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அடையாள அரசியல் பேசுபவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் தான் சாதியை ஒழிப்பதற்காக நிக்கவில்லை பாதுகாப்பதற்காகவே நிற்கிறேன் என்று ஒப்புக்கொள்ள வேண்டும்.
சேரியில் இருப்பவர்கள் சாதியக் கட்டமைப்புக்கு எதிரானவர்களாம் – பா.இரஞ்சித்தின் புதிய கண்டுபிடிப்பு!
“சேரியில் இருப்பவர்களிடம் சாதி ஒழிப்பு பேசாதீர்கள். சேரி மிகவும் சரியாகத்தான் இருக்கிறது. இயல்பாகவே சாதியத்துக்கும் சனாதானத்துக்கும் எதிராக இருக்கிறது. ஊரில் உள்ளவர்கள்தான் சாதிய சிந்தனையில் உள்ளவர்களாக இருக்கிறார்கள். எனவே சேரியைப் பார்த்துதான் ஊர் கற்றுக் கொள்ள வேண்டும். சேரி சாதிய ஆதிக்கத்திற்கு எதிராக வரலாறு நெடுகிலும் கலகம் நிகழ்த்தி வந்துள்ளது. சேரியில் இருப்பவர்களா பா.ஜ.க.வை உள்ளே விட்டார்கள்.” … “பொது சமூகத்தை பார்ப்பனியம் விழுங்கிவிட்டது; அதனால் பொதுசமூகத்தோடு சேர வேண்டாம் என்கிறேன். சேரியை அவ்வாறு விழுங்கவில்லை. விழுங்க முடியாது. சேரி தனித்திருப்பதுதான் சரி”[5] இது தனது தனித்து நிற்கும் அரசியலை ‘நியாயப்படுத்த’ பா.இரஞ்சித் கண்டுபிடித்த புதிய வாதம்!
மேற்கூறிய வாதத்தில் இரஞ்சித் பேசுவதைக் கவனிக்கவும்! சேரி-ஊர் என்ற பாகுபாடு ஒழிய வேண்டும்; அனைவரும் சமத்துவமாக வாழ வேண்டும் என்பதல்ல. மாறாக சேரி தனித்தே இருக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே வாதிடுகிறார். அதற்கு அவர் முன்வைக்கும் வாதம்தான் மிகவும் அபத்தமானது. குதர்க்கமானது. “பொதுவைப்” பார்ப்பனியம் விழுங்கிவிட்டதாம்; சேரிக்குள் சாதியும், சனாதானமும் இல்லையாம்; எனவே நாங்கள் சேரியாக இருப்பதே சரி என்கிறார்.
சாதியை ஒழிக்க விரும்பும் யாரும் இதை ஏற்றுக் கொள்ள முடியுமா? ஊரும் சேரியும் இறுதிவரை பிரிந்துதான் கிடக்க வேண்டும், அது சரிதான் என்பதற்கு சொல்லும் வாதங்கள் சரியா, தவறா என்பது ஒருபுறமிருக்கட்டும். ஆனால் அவ்வாறு பிரிந்து கிடப்பது சாதியை ஒழிக்குமா? வளர்க்குமா?
நடைமுறையில் சாதி எப்படி உள்ளது என்ற சாதாரண அறிவு உள்ளவர்கள் கூட இரஞ்சித்தின் வாதம் எத்தகைய அபத்தமானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். நடைமுறையில் சாதி சவர்ணர்கள், (நால்வர்ணத்தவர்கள்) அவர்ணர்கள் (வர்ணத்தில் அல்லாதோர்) என்றில்லை. எல்லா வர்ணத்தினரிடையிலும் வர்ணத்துக்கு வெளியிலுள்ள தலித்துகள், பழங்குடிகளிடையிலும் படிநிலையாக உள்ளது. ஒவ்வொரு வர்ணத்துக்குள்ளும், ஒவ்வொரு சாதிக்குள்ளுமே படிநிலைகள் உள்ளன. உதாரணமாக தாழ்த்தப்பட்டவர்கள் பழங்குடிகளை படிநிலை அடிப்படையில் ஒடுக்குகிறார்கள் என்பது மட்டுமல்ல; தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ளேயே கூட பல்வேறு படிநிலைகள் உள்ளன. இவை அனைவரும் அறிந்த உண்மைதான். இவையெல்லாம் இப்படியிருக்க இரஞ்சித் ஒரே போடாக சேரியில் இருப்பவர்கள் ஜாதியத்திற்கு எதிரானவர்கள் என்று நம்மை நம்பச் சொல்கிறார். அதன் மூலம் தனித்து நிற்கும் தனது அரசியல் அந்த தனித்தன்மையைக் காப்பதற்கானதுதான் என்றும் நம்பச் சொல்கிறார்.
தலித்துகளும் பழங்குடிகளும் சாதி ஆதிக்கத்தின் கீழ்நிலைப்படியில் உள்ளனர்; எனவே அவர்களை சாதி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு எளிதாக திரட்ட முடியும் என்று கூறுவது வேறு. அவர்களிடையே சாதியே இல்லை; முற்றாக இயல்பிலேயே சனாதானத்துக்கு எதிரானவர்கள் என்று வாதிடுவது வேறு. இரண்டாவதைத்தான் இரஞ்சித் செய்கிறார்.
மேலும், தமிழ்நாட்டில் இருந்து கொண்டு பா.ஜ.க. சேரியில் எல்லாம் நுழைய முடியாது, சேரியைப் பார்ப்பனியம் விழுங்க முடியாது என்று இரஞ்சித் கம்பு சுத்துவதைக் கண்டு அவரது இரசிகர் பட்டாளங்கள் விசிலடிக்கலாம். ஆனால் தமிழ்நாட்டிற்கு வெளியே குறிப்பாக பழங்குடிகள், தலித்துகள் அதிகமுள்ள உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் எல்லாம் அவர்களிடையே பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பல் எப்படி வேர்பதித்து கிளைபரப்பி நிற்கிறது என்பதைப் பற்றி சரஞ்சரமான ஆய்வுகள் வந்துள்ளன. பல கலவரங்களில் இசுலாமியர்களுக்கெதிரான காலட்படையாக ஆர்.எஸ்.எஸ். தலித்துகளையும் பழங்குடியின மக்களையும் தான் ஏவியுள்ளனர் / ஏவுகின்றனர். அவற்றையெல்லாம் படித்தாலே இரஞ்சித்தின் பேச்சில் உள்ள அபத்தத்தையும் ஆபத்தையும் புரிந்துகொள்ள முடியும்.
நிற்க. சேரியில் வந்து சாதி ஒழிப்பு அரசியல் பேசாதீர்கள்; ஊர்த்தெருவிற்குள் போய் உங்கள் அரசியலைப் பேசுங்கள் – என்று இவர்கள் பேசுவதில் இன்னொரு முக்கியமான ஒரு நோக்கமும் உள்ளது. அதாவது, “கம்யூனிஸ்டுகள் தலித்துகளை தமது கட்சிகளில் திரட்டி அவர்களைக் காலாட்படையாகப் போராட்டங்களில் பயன்படுத்திக் காவு கொடுக்கின்றனர்” “எனவே கம்யூனிஸ்டுகள் சேரியில் வேலை செய்யாமல், முதலில் ஊரில் உள்ளவர்களைப் போய் திரட்டுங்கள்” என்ற அவதூறை காலங்காலமாக அடையாள அரசியல் பேசும் தலித்திய அறிவு ஜீவிகள் பேசி வருகின்றனர். இந்தக் கருத்தை வெளிப்படையாகக் கூறாமல் நைச்சியமாகவும் கபடத்தனமாகவும் கூறுவதே இரஞ்சித் பேச்சின் நோக்கமாகும்.
அடையாள அரசியலுக்கும் கம்யூனிச அரசியலுக்கும் இடையே இருப்பது நட்பு முரணா?
இவர் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் வரும் ரெனே என்ற கதாப்பாத்திரம் “தான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. அம்பேத்கரைட்” என்று கூறிவிட்டதைக் கொண்டு தன்னைக் கம்யூனிச விரோதி என்று சித்தரிக்க முயல்கிறார்கள் என்றும்; அதற்காக சி.பி.எம். கட்சியின் ஜி.செல்வா போன்றோரை வைத்து வீடியோ போடுகிறார்கள் என்றும் பா.இரஞ்சித் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.
அத்துடன் ஜி.செல்வா போன்ற ‘கம்யூனிஸ்டுகளுக்கும்’ தனக்கும் இருப்பது நட்பு முரண்தான் என்றும்; கம்யூனிஸ்டுகள் தமது மேடையில் சுதந்திரமாக உரையாட எல்லா வாய்ப்பும் உள்ளதாகவும் நாடகமாடுகிறார்.
ரெனே பேசிய அந்த ஒரு வசனத்தை வைத்து மட்டுமின்றி அத்திரைப்படம் முழுவதையும் பா.இரஞ்சித் இயக்கிய முந்தைய படங்கள் மற்றும் அவரது பேட்டிகளையும் கொண்டு இரஞ்சித்தின் உள்ளக் கிடக்கையே எப்படி கம்யூனிச வெறுப்புதான் என்பதை ஏற்கனவே விரிவாக அம்பலப்படுத்தியுள்ளோம். அவற்றை இங்கே குறிப்பிட்டால் மிக நீண்ட கட்டுரையாகிவிடும் என்பதால் வாசகர்களை அக்கட்டுரையைப் படித்துத் தெளிவுபெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். [6]
இரஞ்சித் குறிப்பிடுவது போல அடையாள அரசியலும் கம்யூனிச அரசியலும் நட்பு முரனானவை அல்ல. மாறாக ஒன்றையொன்று எதிர்ப்பவை. நேரெதிரானவை. இன்னும் சொல்லப் போனால் கம்யூனிச அரசியலை சிதைத்து வர்க்க ஒற்றுமையைத் துண்டாடுவதற்காக ஏகாதிபத்தியங்களாலும் என்.ஜி.ஓ.க்களாலும் பரப்பப்படுபவை.
ஒன்று வர்க்க ஒற்றுமையை குலைப்பதற்காகவே பெற்றெடுக்கப்பட்ட பின்நவீனத்துவ அடையாள அரசியல் கைவிடப்பட வேண்டும் இல்லை என்றால் கம்யூனிசம் கைவிடப்பட வேண்டும். இரண்டும் சேர்ந்து பயணிக்க வாய்ப்பென்பதே இல்லை.
ஏகாதிபத்தியங்களால் பரப்பப்படும் பின்நவீனத்துவத்தையும் அடையாள அரசியலையும் முறியடிப்போம்!
அண்மைக் காலத்தில் தமிழகத்தில் தலித்திய அடையாள அரசியலின் பேருருவாக (embodiment), ஒட்டுமொத்தப் பிரதிநிதியாக பா.இரஞ்சித்தும் அவரது நீலம் பண்பாட்டு மையமும் உருவெடுத்துள்ளது. ‘அம்பேத்கர்’ ‘சாதி ஒழிப்பு’ ‘முற்போக்கு’ ‘தலித் வகைமை’ ‘தனிநீரோட்ட அரசியல்’ போன்ற முகமூடிகளுக்குள் ஒளிந்துகொண்டு அடையாள அரசியலைக் கடைவிரித்து வருகின்றனர். பல்வேறு நிகழ்வுகள், சொற்பொழிவுகள், விருது வழங்கும் விழக்கள் என பின்நவீனத்துவ எழுத்தாளர்களை, குறிப்பாக தலித்திய அடையாள அரசியலைப் பேசியும் எழுதியும் வருகிறவர்களை ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைத்து, ஊக்குவித்து, ஊட்டி வளர்த்து வருகிறது அவ்வமைப்பு.
ஷாலின் மரியா லாரன்ஸ், ஆதவன் தீட்சன்யாவின் வாதங்கள் சர்ச்சையானது. அடையாள அரசியலின் உண்மை குணாம்சத்தைத் தோலுரிக்கும் வகையில் விமர்சனங்கள் பெரும்பாலும் எழவில்லை என்றாலும் கூட, ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி.ஐ நாடு எதிர்கொண்டிருக்கும் சமயத்தில் கம்யூனிஸ்டுகளையும் முற்போக்காளர்களையும் தலித்துகளின் பகைவர்களாகச் சித்தரிக்கும் இத்தகைய அரசியல் ஆபத்தானது என்ற கண்ணோட்டத்தில் இருந்து ஷாலின் பேசியது தோலுரிக்கப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் எழுந்த இத்தகைய விவாதங்களினால் தான் கட்டி வந்த கோட்டை இடிந்து தரைமட்டமாய்விடுமோ என்று பதறியடித்த பா.இரஞ்சித், ஓரிரு நாள் கழித்து அதே நிகழ்வில் பேசினார். கம்யூனிஸ்டுகள், முற்போக்காளர்கள் எல்லோரும் சாதி வெறிபிடித்தவர்கள்தான் என்று பேசிய / பேசிவரும் ஷாலின் மரியா லாரன்ஸின் அபத்தமான வாதங்களும் இந்தச் சூழலில் பொது எதிரியான ஆர்.எஸ்.எஸ்.ஸை எதிர்த்து தலித்துகள் உட்பட அனைவரும் ஒன்றாகத் திரள வேண்டும் என்ற ஆதவன் தீட்சன்யா பேசியவையும் ஒன்றுக்கொன்று நேரெதிரானவை. இந்த இருவரின் கருத்தின் மீது எவ்விதக் கருத்தையும் தெரிவிக்காமல் “இது அவர்கள் இருவருக்கிடையிலான தனிப்பட்ட கருத்துமுரண். இதைப் பொதுமுரணாக மாற்றி தலித்தியத்தையும் அம்பேத்கரியத்தையும் அழிக்க (dismantle) முயற்சிக்கிறார்கள்”[7] என்று ஒரே போடாகப் போட்டுவிட்டு, சரிந்து வந்த அடையாள அரசியலை முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்த முயன்றுள்ளார்.
“இந்தச் சூழலில் தலித்துகள் பொது எதிரியான பா.ஜ.க.வுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள், ஜனநாயகவாதிகளுடன் ஒன்றிணைந்து போராட வேண்டுமா அல்லது அவர்களையே தமது பகைவர்களாகக் கருதிக் கொண்டு சண்டையிட வேண்டுமா” என்று எழுந்த நேரடியான கேள்விக்கு எவ்வித பதிலையும் அளிக்காத பா.இரஞ்சித், “தலித்துகள் எத்தகைய சாதிய ஒடுக்குமுறையில் இருக்கிறார்கள் தெரியுமா? என்னை சிறுவயதில் கோயில் திருவிழாவில் தீ மிதிக்க அனுமதிக்கவில்லை தெரியுமா? தலித்துகளாகிய நாங்கள் இப்போதுதான் எங்களுக்கான அரசியலைப் பேசத் தொடங்கியிருக்கிறோம்; அதற்குள் எங்களை இப்படியெல்லாம் பேசுவீர்களா? ஆதிக்க சாதியினரான நீங்கள் தலித்துகளை மென்மையான குரலில் அணுகவில்லை; சமத்துவமாக நடத்தவில்லை; எனவே எங்கள் குரல் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் நீங்கள்தான் நாங்கள் சொல்வதைப் புரிந்துகொள்ள முயல வேண்டும்; எங்களைப் பார்த்து குரலை மாற்றிக் கொள்ளும்படிக் கூறாதீர்கள்”[8] என்றெல்லாம் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். எழுந்த கேள்விக்கும் பா.இரஞ்சித் கொடுத்த பதிலுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பது சொல்லாமலே விளங்கும். உணர்ச்சியைக் கிளப்பிவிட்டு உண்மையான விவாதத்தின் கருப்பொருளில் இருந்து திசை திருப்பும் உத்திதான் இது. இந்த உணர்ச்சிப் பசப்புகள் நீலிக்கண்ணீருக்கெல்லாம் நாம் மயங்கிவிடக் கூடாது.
பலரும் பா.இரஞ்சித் பேசியதும் ஷாலின் பேசியதும் வேறுவேறு என்று கருதலாம். ஷாலின் மரியா லாரன்ஸ் அளவுக்கு பா.இரஞ்சித் ஒன்றும் அரசியல் தெரியாதவரல்ல, மோசமானவரல்ல என்று கருதலாம். பா.இரஞ்சித்தின் உடனிருக்கும் சிலர்தான் அவரைத் தவறாக வழிநடத்துகிறார்; மற்றபடி அவர் சாதி ஒழிப்பிற்காக உண்மையாகப் பாடுபடக் கூடியவர்தான் என்று கருதலாம். இவை எதுவும் உண்மையல்ல. இதைத்தான் மேலே எடுத்துக் காட்டியுள்ளோம்.
ஷாலின் மரியா லாரன்ஸ் போன்றவர்கள் தமிழகத்தில் தலித் அடையாள அரசியலை வெளிப்படையாகவும் கேடுகெட்ட முறையிலும் (open and cynical form) பேசி வருகிறார்கள். பா.இரஞ்சித் போன்றவர்கள் அதையே நயவஞ்சகமாகவும், கபடத்தனமாகவும், மூகமூடி தரித்த முறையிலும் (veiled and disguised form) கடைவிரித்து வருகிறார்கள். அவ்வளவுதான்! எப்போதும், எந்த விசயத்திலும் வெளிப்படையான எதிர்க் கருத்துக்களைவிட கபடத்தனமான, முகமூடிதரித்த எதிர்க் கருத்துக்களை அடையாளம் கண்டுகொள்வதும் முறியடிப்பதும் கடினம்.
“தலித்துகள் தேர்தலில் தனித்து நின்றால் என்ன தவறு. சேரியில் இருப்பவர்கள் தெளிவாக பா.ஜ.க.வையும் சனாதனத்தையும் எதிர்க்கிறார்கள். பா.ஜ.க.வை சேரியில் இருப்பவர்களா உள்ளேவிட்டார்கள்?” என்று தேர்தலைக் குறித்து இரஞ்சித் பேசியதை மட்டும் எடுத்துக் கொண்டு, தி.மு.க., காங்கிரசு போன்ற ஓட்டுக் கட்சிகளோடு தேர்தல் அரசியலில் சேராமல் தலித்துகளை தனி அரசியல் செய்யச் சொல்கிறார் பா.இரஞ்சித்; இது தவறானது; இது பா.ஜ.க.விற்குத்தான் சேவை செய்வதில் போய் முடியும் என்ற விமர்சனங்கள் தி.மு.க. ஆதரவாளர்களாலும் பிறராலும் வைக்கப்பட்டன.
ஆனால் பா.இரஞ்சித்தின் பேச்சு, நடவடிக்கையின் சாரம்சத்தை வெறும் தேர்தல் அரசியலோடு மட்டும் நாம் சுருக்கிப் பார்த்துப் புரிந்துகொள்ளக் கூடாது. இலக்கியம், சினிமா, அரசியல் என எல்லாக் களத்திலும் முக்கியமாக அதன் மூலம் சமூக அரங்கிலும் தலித், தலித் அல்லதோர் என்ற பிளவை இறுகச் செய்வதும் அதன் மூலம் வர்க்க ஒற்றுமையைத் துண்டாடி ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்வதுதாம் அடையாள அரசியல் பேசுபவர்களின் நோக்கம். பா.இரஞ்சித்தின் நோக்கமும் கூட.
இவை தற்செயலான நடவடிக்கைகள் அல்ல. ஏகாதிபத்தியம் திட்டமிட்டு ஒருங்கிணைந்த முறையில் செய்துவருவதன் விளைவுகளாகும். முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாகப் பரிணமித்த பின்னர் பாட்டாளி வர்க்க இயக்கத்துக்குள்ளேயே மார்க்சிய சித்தாந்த்ததை எதிர்க்கும் சந்தர்ப்பவாத, கலைப்புவாதப் போக்குகளை ஊட்டி வளர்த்து, உருப்பெற வைத்து, வலிமைப்படுத்தியது. மார்க்சியத்தை சித்தாந்த ரீதியில் குழப்பிவிட்டு, அதன் மீது அவநம்பிக்கையை விதைத்து பாட்டாளி வர்க்க அணிகளை கட்சியில் இருந்து வெளியேறும்படிச் செய்தது.
இவ்வாறு மார்க்சியத்தை சித்தாந்த ரீதியில் சிதைப்பதற்காக இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏகாதிபத்தியங்களால் ஸ்பான்சர் செய்யப்பட்டு என்.ஜி.ஓ.க்களால் கடைவிரிக்கப்பட்டது பின்நவீனத்துவம் சித்தாந்தம். இதுதான் இந்த அடையாள அரசியலின் தாய். வர்க்கம், வர்க்கப் போராட்டம், மார்க்சியம், கம்யூனிசம் போன்றவற்றையெல்லாம் கேவலப்படுத்தி, மட்டம்தட்டி, மதிப்பிழக்கச் செய்து ஏகாதிபத்தியச் சுரண்டலை உத்திரவாதப்படுத்துவதும்; அதற்கெதிராக எழும் போராட்டங்கள், ஒற்றுமைகளை நீர்த்துப் போகச் செய்வதும்தான் அடையாள அரசியலின் நோக்கம். குறிப்பாக பாட்டாளி வர்க்கக் கட்சி, மார்க்சிய சிந்தனையின் மீது அவநம்பிக்கையை விதைத்து அதன் அணிகளை கட்சியிலிருந்து வெளியேற்றுவதே அதன் நோக்கம். எனவே அடையாள அரசியலின் கருப்பையே (womb) கம்யூனிச வெறுப்புதான்.
இதை நீங்கள் இரஞ்சித் உள்ளிட்ட அடையாள அரசியல் பேசும் அனைவரது பேச்சுக்கள், எழுத்துக்கள், படைப்புகளிலும் காணலாம்.
வர்க்கம், வர்க்கப் போராட்டம் போன்றவற்றையெல்லாம் பெருங்கதையாடல் என்று கூறி நிராகரித்துவிட்டு பன்மைக் கலாச்சாரவாதம் (Multiculturalism), கட்டுடைத்தல் (Unbundling) என்ற பெயரில் இப்பின்நவீனத்துவக் கோட்பாடானது 1980-களின் பிற்பகுதியில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு கடைவிரிக்கப்பட்டது.
சமூகம் என்பது ஒரு மரம் போன்றதோ படிநிலை அமைப்பிலானதோ செங்குத்தானதோ அல்ல; அது கிடைமட்டமானது; வலைப் பின்னல் போன்றது என்று போதிக்கப்பட்டது. அதாவது, அரசு, முதலாளி, நிர்வாகி, தொழிலாளி என சமூகமும் சமூக உறவுகளும் செங்குத்தான படிநிலை அமைப்பாக இல்லை. மாறாக இவர்களனைவரும் கிடைமட்டமான வலைப்பின்னல் அமைப்பில் இருக்கிறார்கள் என்று வாதிடப்பட்டது.
உதாரணமாக, தமிழகத்தில் பின்நவீனத்துவம் பரவி வருவதை ஏற்றிப் போற்றிக் கொண்டாடி 2004 ஆம் ஆண்டில் ஒரு நூலை வெளியிட்டுள்ள எம்.ஜி.சுரேஷ் என்பவர் பின்வருமாறு கூறுகிறார்:
“மனிதனின் சமூக உறவுகள் செங்குத்தானவை அல்ல. கிடைமட்டமானவை. உள்ளார்ந்த இணைப்புகளால் ஆனவை. இணையதளத்தின் வலைப்பின்னல்கள் போல சிக்கலான ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை. ஆரம்பமும் முடிவும் இல்லாத கிழங்குத் தன்மையிலான (Rhizomic structure) வடிவம் கொண்டவை.”[9]
இதைத் தெளிவாகப் புரிய வைக்க அவர் ஒரு சித்திரத்தையும் நமக்கு வழங்குகிறார். (காண்க : வரைபடம்) எம்.ஜி.சுரேஷின் சித்திரத்தையும் அவரது விளக்கத்தையும் கவனியுங்கள்! சமூக உறவுகள் இப்படிக் கிடைமட்டமாக இருக்கின்றன என்று கூறுவதன் மூலம் நிலவும் சமூகத்தில் சுரண்டலும் ஒடுக்குமுறையும் படிநிலையிலான ஏற்றதாழ்வும் ஏதுமில்லை என்று கூறி, இச்சமூக அமைப்பை ஜனநாயகத் தன்மையிலானது என்று கேடுகெட்ட முறையில் வியாக்கியானம் செய்வதன்றி வேறென்ன!
தலித்தியம், பெண்ணியம், பன்முகப் பார்வை, கட்டுடைத்தல், தகர்த்தல் என்ற போர்வையில் உலா வருவதெல்லாம் வேறொன்றுமல்ல; கம்யூனிச சித்தாந்தத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் சிதைப்பதற்காக ஏகாதிபத்தியங்களால் பரப்பப்பட்ட பின்நவீனத்துவ அரசியல்தான். இதை நாம் நமது வாயால் சொல்வதை விட பின்நவீனத்துவத்தின் பரவலை ஏற்றிப் போற்றிக் கொண்டாடும் எம்.ஜி.சுரேஷே பின்வருமாறு கூறுவதைக் கேட்போம்:
“பின்நவீனத்துவம் தமிழகத்தில் பிரவேசித்தபோது, [1980-களின் இறுதியில்] பின்நவீனத்துவத்திற்கேற்ற சூழ்நிலை தமிழகத்தில் இல்லை. எனவே பின்நவீனத்துவம் புரியாத ஒரு புதிராகவே இருந்தது. இன்றைக்கோ நிலைமை மாறிவிட்டது. [2004 இல் இந்நூல் எழுதப்பட்டுள்ளது] … இப்போது எல்லாருமே பெண்ணியம், தலித்தியம், பன்முகப்பார்வை உரையாடல், தகர்த்தல் என்றெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதெல்லாம் அவர்கள் தங்களையும் அறியாமல் தங்களின் ஆழ்மனத்தில் பின்நவீனத்துவத்தை அங்கீகரித்திருப்பதைக் காட்டுகிறது. தமிழ்ச்சூழலில் பின்நவீனத்துவம் தன்னை ஸ்தாபித்துக் கொண்டுவிட்டதையே இவை காட்டுகின்றன.”[10]
எனவே, வர்க்க ஒற்றுமையையும் கம்யூனிச சித்தாந்த்ததையும் துண்டாட வரும் எந்த ஒரு சித்தாந்தத்தையும், அது எந்த வடிவில் வந்தாலும் சரியாக இனம் கண்டுகொள்வதும் முறியடிப்பதும் அவசியமாகும். இதைச் செய்யாமல் உழைக்கும் மக்களின் விடுதலை நடைமுறையில் சாத்தியமே இல்லை.
000
[1]வாசுகி பாஸ்கர், அயோத்திதாசப் பண்டிதரை மீட்போம் (வாசுகி பாஸ்கர் என்பவர் நீலம் இதழின் ஆசியர் குழுவின் முக்கிய நபராவார்)
[2] பா.இரஞ்சித்தின் மேற்கூறிய உரை
[3] Jens Lerche, The Farm Laws Struggle 2020-2021: class-caste alliances and bypassed agrarian transition in neoliberal India
[4] தேவேந்திர குல வேளாளர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் பள்ளர் சாதி மக்களைப் பற்றி பா.இரஞ்சித் ஒரு மேடையில் பேசியது, https://youtu.be/1PzOYCdlLB8
[5] பா.இரஞ்சித் மேற்கூறிய உரை & தலித்தை பற்றி அனல் பறக்க பேசிய பா.ரஞ்சித் Pa Ranjith Fiery speech on Dalit in Tamilnadu https://www.youtube.com/watch?v=4_mwkRIYjO8
[6] நட்சத்திரம் நகர்கிறது : அடையாள அரசியல் எனும் புளித்த மாவில் சுட்ட ‘புரட்சிகர’ தோசை (பாகம்-1) http://senkanal.com/…/natchathiram-nagargirathu-review…/
நட்சத்திரம் நகர்கிறது : அடையாள அரசியல் எனும் புளித்த மாவில் சுட்ட ‘புரட்சிகர’ தோசை (பாகம் 2) http://senkanal.com/…/21/natchatiram-nagarkirathu-review/
[7] மேற்கூறிய வேர்ச்சொல் நிகழ்ச்சியில் பா.இரஞ்சித்தின் உரை : Pa Ranjith latest controversial speech, BJP politics and Dalits in Tamil Nadu, https://www.youtube.com/watch?v=7h4NCzqFrlo
[8] மேற்கூறிய உரை
[9] பின்நவீனத்துவம் என்றால் என்ன? எம்.ஜி.சுரேஷ்., பக்கம் 134. (2004-ஆம் ஆண்டில் வெளியான நூல்)
[10] மேற்கூறிய நூல், பக்கம் 166
தமிழகத்திலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் BJP- RSS க்கு கிளைகள் உண்டு. தற்குறி பா.ரஞ்சித் போன்றவர்கள், சாதியை வைத்து பிழைக்கும் கும்பல், இதனை எளிதாக மக்களால் புரிந்துக் கொள்ள முடியாத கும்பல்.
சமூகம் என்பது தான் சார்ந்த சாதி என்ற கிணற்றுத் தவளை மனப்பான்மையும் இயங்கியல் அறிவியல் வர்க்கப் போராட்ட வரலாறு அற்ற குறுகிய கண்ணோட்டமும் பாரடா உனது மானிடப் பரப்பை என்று முழங்கிய பாவேந்தரின் பரந்த அறிவை ம(றை)றுத்தலின்றி வேறென்ன?