பாசிச எதிர்ப்பு பாட்டாளிவர்க்க ஐக்கிய முன்னணியை கட்டியமைப்பதே இன்றைக்கு நமது முக்கிய கடமை!

காவி கார்ப்பரேட் பாசிசம் நமது நாட்டைச் சூழ்ந்து கொண்டு மக்களின் மீது பாசிச சர்வாதிகார ஆட்சியைச் செலுத்துவதற்கான தயாரிப்புகளைச் செய்து வருகிறது. காவி கார்ப்பரேட் பாசிசம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று மட்டும் பார்ப்பது தவறு. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, புதிய கல்விக் கொள்கை, புதிய விவசாய சட்டங்கள், தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழிப்பது, கல்வி, சுகாதாரம் என அனைத்து துறைகளிலும் தனியார்மயத்தை விரைவுபடுத்துவது எனக் கடந்த பத்து ஆண்டுகளில் அனைத்து உழைக்கும் வர்க்கத்துக்கும் எதிரான நடவடிக்கைகளை பாசிச சக்திகள் ஒவ்வொன்றாக அமுல்படுத்திக்கொண்டு வருகின்றன. எனவே காவி கார்ப்பரேட் பாசிசம் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல நமது நாட்டில் வாழும் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிரானது. விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், சிறு முதலாளிகள் என யாரையும் விட்டுவைக்கவில்லை.

பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தின் மிக முக்கியமான தருணத்தில் நாம் இன்றைக்கு இருக்கிறோம். கார்ப்பரேட் முதலாளிகளின் நலன் காக்க, தொழிலாளர்கள் மீதும் சமூகத்தின் அனைத்து உழைக்கும் வர்க்கங்கள் மீதும் காவி கார்ப்பரேட் பாசிசம் தொடுத்துவரும் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதோடு, பாசிச சர்வாதிகார ஆட்சி நிறுவப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டியது இன்றைக்கு முக்கியமானதாக உள்ளது,

நாம் எதிர்கொள்ளும் காவி பாசிஸ்டுகள் சாதாரணமானவர்கள் அல்ல. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கி கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாகிவிட்டது. இந்த நூறு ஆண்டுகளில் நாடு முழுவதும் மிகவும் வலிமையானதொரு வலைப்பின்னலை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியிருக்கிறது. துணை இராணுவம் போலப் பயிற்சியளிக்கப்பட்ட ஒரு ஆயுதப் படையைக் கொண்டிருக்கிறது. கடந்த நூறு ஆண்டுகளில் பல நூறு கலவரங்களை நடத்திய அனுபவத்தைக் கொண்டிருக்கிறது.

காவி பாசிசம் இரண்டாயிரம் ஆண்டுகால பார்ப்பனிய சித்தாந்தப் பின்புலம் கொண்டது. மக்கள் மத்தியில் தனது மதவெறி பாசிச கருத்துக்களை பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டு சென்று, பாசிச கருத்துக்களுக்கு ஆதரவான மனநிலையை, அடித்தளத்தை நாடு முழுவதும் உருவாக்கியிருக்கிறது.

அரசின் அனைத்துத் துறைகளிலும், போலீசு, இராணுவம், நீதிமன்றங்களிலும் தனது ஆதரவு சக்திகளை நுழைத்து அவற்றைத் தனது விருப்பத்திற்கு ஏற்ப செயல்படவைக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. பத்திரிக்கைகள், காட்சி ஊடகங்கள் தொடங்கி சமூக ஊடகங்கள் வரை அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது.

இவ்வாறு சித்தாந்த பலமும், மக்கள் அடித்தளமும், அமைப்பு பலமும் கொண்டு மிகப்பெரிய சக்தியாக பாசிசம் இன்றைக்கு வளர்ந்து நிற்கிறது. ஆனால் பாசிசத்தின் எதிர்த்தரப்பு என்பது மிகவும் பலவீனமாக இருக்கிறது. பாசிச எதிர்ப்பைத் தலைமை தாங்கிச் செல்ல வேண்டிய பாட்டாளி வர்க்கம் அணிதிரட்டப்படாமல் சிதறிப்போய்க் கிடக்கிறது. நமது நாட்டின் தொழிலாளர்கள் ஒரே தலைமையின் கீழ் அணிதிரட்டப்படவில்லை என்பது மட்டுமல்லாமல், தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் ஆளூம்வர்க்கத்தின் செல்வாக்கின் கீழ் இருக்கிறார்கள்.

காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பாஜகவைத் தேர்தலில் தோற்கடித்து, ஒன்றியத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டு, தங்களைப் பாசிச எதிர்ப்புப் போராளிகளாக காட்டிக் கொண்டு மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறையின் சோதனைகள், வழக்குகள், 150 பாராளுமன்ற உறுப்பினர்களின் இடைநீக்கம் என பாசிசம் தங்கள் மீது தொடுத்த தாக்குதல்களுக்கு எதிராகச் சிறிய அளவு எதிர்ப்பினைக் கூடப் பதிவு செய்ய முடியாத இந்த கட்சிகளை,  சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் மட்டுமன்றி, தங்களை இடதுசாரிகளாக அடையாளப்படுத்திக் கொள்ளும் முன்னாள் புரட்சியாளர்கள் வரை, பாசிச எதிர்ப்பின் தலைமை சக்திகள் என முன்மொழிகின்றனர்.

என்னதான் இந்த முதலாளித்துவக் கட்சிகள் எண்ணிக்கையில் அதிகமாகவும், பணபலமும், அதிகாரபலமும் கொண்டவர்களாக இருந்தாலும், அடிப்படையில் அவர்கள் பாசிச எதிர்ப்பில் ஊசலாடும் சக்திகளே. எந்த நேரத்திலும் பாசிச எதிர்ப்பைக் கைவிட்டு அவர்கள் பக்கம் ஓடிப்போகும் தன்மை கொண்டவர்களே. இவர்களால் என்றைக்கும் பாசிச எதிர்ப்பைத் தலைமைதாங்கி கொண்டு செல்ல முடியாது.

வேறு யார் தலைமை தாகங்க முடியும்? என்னதான் ஒற்றுமை இல்லாமல் சிதறிப்போய், சிறியதாக இருந்தாலும், பாசிச எதிர்ப்பின் தலைமை சக்தியாக என்றைக்கும் பாட்டாளிவர்க்கமே இருக்க முடியும்.

பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையைச் சாதிப்பதன் மூலமே பாசிசம் ஆட்சி அதிகாரத்திற்கு வராமல் தடுப்பதும், பாசிசத்தை வீழ்த்துவதும் சாத்தியம். இதனை நாம் எங்கிருந்து தொடங்குவது, எப்படிச் செய்வது என்ற கேள்வி, நாம் விடைகாண வேண்டிய முக்கிய கேள்வியாகும். இதற்கு பாசிச எதிர்ப்பு போரின் முக்கிய தலைவரான டிமிட்ரோவ் நமக்கு கீழ்கண்டவாறு வழிகாட்டுகிறார்.

ஒவ்வொரு தொழிற்சாலையிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு பிராந்தியத்திலும், ஒவ்வொரு நாட்டிலும், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் செயல்ஒற்றுமையை நிலைநிறுத்த, ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்குவதே முதலில் செய்ய வேண்டிய, நாம் முதலில் தொடங்க வேண்டிய விஷயமாகும். தேசிய மற்றும் சர்வதேச அளவில் பாட்டாளி வர்க்கத்தின் செயல்ஒற்றுமை என்பது தொழிலாளர் வர்க்கத்தின் வெற்றிகரமான தற்காப்பு மட்டுமின்றி, பாசிசத்திற்கு எதிராக, வர்க்க எதிரிக்கு எதிராக வெற்றிகரமான எதிர்த்தாக்குதலையும் ஆற்றும் வல்லமை வாய்ந்த ஆயுதமாகும். (பாசிசத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்க ஐக்கிய முன்னணி – டிமிட்ரோவ்)

ஆம், நாம் நாடு முழுவதிலும் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் செயல் ஒற்றுமையைச் சாதிப்பதில் இருந்து தொடங்க வேண்டும். பாசிச எதிர்ப்பு பாட்டாளி வர்க்க ஐக்கிய முன்னணி ஒன்றினைச் சாதிப்பதன் மூலம்தான் பாசிசத்தின் தாகுதலில் இருந்து மக்களைப் பாதுகாப்பதுடன், வெற்றிகரமான எதிர்த்தாக்குதலைத் தொடுக்க முடியும். ஏனெனில் பாட்டாளி வர்க்கத்தின் ஒரு சக்திவாய்ந்த ஐக்கிய முன்னணி உழைக்கும் மக்களின் மற்ற அனைத்து அடுக்குகளிலும், விவசாயிகள், நகர்ப்புற குட்டி முதலாளித்துவ வர்க்கம், அறிவுஜீவிகள் மீது பெரும் செல்வாக்கை செலுத்தும்.

இந்த ஐக்கிய முன்னணியானது, ஊசலாடும் சக்திகளை, தொழிலாளர் வர்க்கத்தின் பலத்தில் நம்பிக்கை கொள்ள செய்யும்.

இதற்கு தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரும், அவர்கள் எந்தக் கட்சி அல்லது அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒரு வர்க்கம் என்ற அடிப்படையில் தனது பொது எதிரிக்கு எதிரானதொரு செயல் ஒற்றுமையை நிறுவுவது அவசியம்.

இதனைச் சாதிப்பதற்கு நாம் விதிக்க வேண்டியது ஒரே நிபந்தனை மட்டுமே, அது, அனைத்து தொழிலாளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அடிப்படை நிபந்தனை, அதாவது, பாசிசத்திற்கு எதிராக, மூலதனத்தின் தாக்குதலுக்கு எதிராக, போர் அச்சுறுத்தலுக்கு எதிராக, வர்க்க எதிரிக்கு எதிராக செயல் ஒற்றுமையை கொண்டு செல்ல வேண்டும் என்பதேயாகும்.

பாட்டாளி வர்க்க ஐக்கிய முன்னணியின் உள்ளடக்கம் மற்றும் வடிவங்கள்

பாட்டாளி வர்க்க ஐக்கிய முன்னணியினை நாம் முன்னெடுக்கும் போது அது என்ன உள்ளடக்கத்துடன் இருக்க வேண்டும், என்னென்ன வடிவங்களில் நாம் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பது முக்கியமானது.

“தொழிலாளர் வர்க்கத்தின் உடனடி பொருளாதார மற்றும் அரசியல் நலன்களைப் பாதுகாப்பது, பாசிசத்திற்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தின் பாதுகாப்பு”, இவையே ஐக்கிய முன்னணியின் தொடக்கப் புள்ளியாகவும், முக்கிய உள்ளடக்கமாகவும் இருக்க வேண்டும்.

இதற்கென மக்களின் முக்கிய தேவைகளில் இருந்து எழும் கோரிக்கைகளையும் முழக்கங்களையும், போராட்ட வடிவங்களையும் நாம் கைக்கொள்ள வேண்டும். முதலாளித்துவ கொள்ளைக்கு எதிராகவும் பாசிசத்தின் தாக்குதலுக்கு எதிராகவும் தற்காத்துக் கொள்ள மக்கள் இன்று என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.

தொழிலாளர்கள் இன்றைக்குப் பல்வேறு தொழிற்சங்கங்களின் கீழ் திரண்டுள்ள சூழலில், பாசிசத்திடமிருந்து தொழிலாளி வர்க்கத்தின் முக்கிய நலன்களைப் பாதுகாப்பதற்கு, பல்வேறு போக்குகள், தலைமைகளைக் கொண்ட தொழிலாளர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கையைச் சாத்தியமாக்க வேண்டும்.

இதனை எப்படி செய்வது? என்ன அடிப்படையில் அதனைச் சாதிப்பது?

நமது நாட்டு தொழிலாளர்கள் இதுகாறும் போராடிப் பெற்ற உரிமைகள், சலுகைகள் அனைத்தையும், காவி கார்ப்பரேட் பாசிசமானது பறிக்கும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டி இதற்கெதிராக, பாசிசத்தின் தாக்குதலில் இருந்து தொழிலாளர் வர்க்கத்தினை பாதுகாக்க வேண்டும் என்றால் ஒன்றுபட்டுப் போராடவேண்டும் என்பதனை உணர்த்த வேண்டும். அதன் அடிப்படையில் தொழிலாளர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கையைச் சாத்தியமாக்க வேண்டும்.

சீர்திருத்தவாத தொழிற்சங்கங்கள் மற்றும் உழைக்கும் மக்களின் பிற அமைப்புகளுடன் பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் முன்னணியை உருவாக்க வேண்டும். பாசிச எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கும் உடன்படிக்கைகளை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவற்றை விசுவாசமாக நிறைவேற்ற வேண்டும்.

அதேசமயம் இந்த முன்னணியை உடைப்பதற்கும், களைப்பதற்கும் உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் நாச வேலைகளைச் செய்கின்ற தனிநபர்கள், அமைப்புகளை அம்பலப்படுத்தித் தனிமைப்படுத்த வேண்டும். தொழிலாளர் வர்க்க ஒற்றுமையைச் சிதைக்கும் எந்தவொரு முயற்சியையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து அம்பலப்படுத்த வேண்டும்.

தொழிலாளர் வர்க்கத்தின் செயல் ஒற்றுமையைச் சாதிக்க என்னென்ன வடிவங்களில் நாம் கூட்டமைப்புகளை, முன்னணிகளை உருவாக்குவது. இவற்றை நாம் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் தேவைக்கு ஏற்ப (case by case)  உருவாக்க வேண்டும்.

  • தனிப்பட்ட நிறுவனங்களில் அல்லது முழுத் தொழில்களிலும் ஒருங்கிணைந்த கோரிக்கைகள் அவற்றிற்கான நடவடிக்கைகள். உதாரணத்திற்கு வாகன உற்பத்தித் தொழிலாளர்களின் பொதுக் கோரிக்கைகளுக்கான சங்கங்களை ஒருங்கிணைப்பது.
  • உள்ளூர் அளவில், அல்லது மாநிலம் தழுவிய அல்லது தேசிய அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள்.
  • தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள். (ஊதிய உயர்வு, எட்டு மணி நேர வேலை, காண்டிராக்ட் முறை ஒழிப்பு போன்றவற்றிற்கான போராட்டங்கள்)
  • சமூக பிற்போக்குத்தனத்திற்கு எதிரான போராட்டங்களுக்காக தொழிலாளர்களை ஒருங்கிணைப்பது.
  • கலாச்சார செயல்பாடுகளில் பாசிசத்தின் தாக்குதல்களுக்கு எதிராக (ஜல்லிக்கட்டு தடை போன்று) போராடுவது

இவ்வாறு பல வடிவங்களில், பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தொழிலாளர் வர்க்க செயல் ஒற்றுமையை சாத்தியப்படுத்தும் அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

இந்த அமைப்புகள் அனைத்தும் கட்சி சார்பற்றதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைக் கமிட்டிகளைக் கொண்ட வர்க்க அமைப்புகளாக உருவாக்க வேண்டும். இவை தனித் தொழிற்சாலைகளுக்கான அமைப்புகளாக இருக்கலாம், ஒரு குறிப்பிட்ட தொழிற்பேட்டையில் உள்ள தொழிலாளர்களுக்கான அமைப்புகளாக இருக்கலாம், அல்லது முழு நகரத்திற்கோ, மாவட்டத்திற்கோ பொதுவானதொரு அமைப்பாகவும் இருக்கலாம்.

இவ்வாறு தொழிற்சங்கங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்களின் கூட்டு நடவடிக்கைகளைச் சாதிப்பதென்பது ஆரம்பம் மட்டுமே. நமது நாட்டைப் பொறுத்தவரை அமைப்பு சாராத் தொழிலாளர்கள்தான் எண்ணிக்கையில் பெரும்பாண்மை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். எனவே தொழிற்சாலைத் தொழிலாளர்களின் ஒற்றுமையைச் சாதிப்பதற்காக அவர்கள் அணிதிரண்டுள்ள தொழிற்சங்கங்களை அணுகி வேலை செய்யும் அதே நேரத்தில் அமைப்புசாராத் தொழிலார்களின் சங்கங்களையும் ஒன்றிணைக்க வேண்டும்.

கட்சி சாராத வர்க்க அமைப்புகளைக் கட்டுவது மக்கள் மத்தியில் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியைக் கொண்டு சேர்ப்பதற்கான மிக முக்கியமான வடிவமாகும். அதே சமயம் பாசிசத்தின் தாக்குதலுக்கு எதிராக பாதுகாப்பு அரணாகவும் இது செயல்படும்.

தொழிற்சங்க ஒற்றுமைக்கான போராட்டம்

பாசிச எதிர்ப்பு பாட்டாளிவர்க்க முன்னணியின் மிக முக்கியமான கட்டம் என்பது தேசிய அளவிலான தொழிற்சங்கங்களின் ஒற்றுமையைக் கட்டியமைப்பதேயாகும்.

நமது நாட்டில் தேசிய அளவில் தொழிற்சங்க கூட்டமைப்புகள் உள்ளன. இடதுசாரி சங்கங்களின் கூட்டமைப்பு (சி.பி.ஐ/எம் – மாலெ கட்சி சங்கங்கள்), தனிநபர் சங்கங்கள் இணைந்து கூட்டமைப்பு, அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றின் சங்கங்கள், அந்தந்த கட்சிகளின் அணிசேர்க்கைக்கு ஏற்ப மாறும் கூட்டமைப்பு என தேசிய அளவிலும் மாநில அளவிலும் தொழிற்சங்க கூட்டமைப்புகள் பல உள்ளன.

ஆனால் இவை பாசிச எதிர்ப்பு என்ற உள்ளடக்கத்தில் கட்டியமைக்கப்பட்டதில்லை. எனவே காவி கார்ப்பரேட் பாசிசம் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தொடுத்துள்ள தாக்குதலில் இருந்து தொழிலாளர் வர்க்கத்தினைப் பாதுகாத்திடவேண்டும் என்ற நோக்கத்துடன் தொழிற்சங்கங்களின் ஒற்றுமையைச் சாதிக்க வேண்டும்.

இதற்கு முன்னர் சீர்திருத்தவாத சங்கங்களின் தலைவர்கள், தனிநபர் சங்கங்களின் தலைவர்கள் முதலாளித்துவ வர்க்கத்துடன் சமரசம் செய்துகொண்டு தொழிலாளர் வர்க்கத்தின் முக்கிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதை நாம் கடுமையாக எதிர்த்து அவர்களைத் தொழிலாளர்கள் மத்தியில் அம்பலப்படுத்தியுள்ளோம் அவர்களுக்கு எதிராக தொழிற்சாலைகளுக்குள் நாம் போராடியுள்ளோம்.

ஆயினும், இன்றைக்கு நமது செயல்பாடு என்பது,  இத்தகைய தொழிற்சங்கங்களின் தனிப்பட்ட தலைவர்களின் நடத்தையின் அடிப்படையில் அல்ல, பாசிசத்திற்கு எதிராக தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவது என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். இந்த தொழிற்சங்கங்களே பாசிச எதிர்ப்பு இயக்கத்திற்குத் திரளான தொழிலாளர்களை வழங்கக் கூடியவை என்பதை உணர்ந்து தொழிற்சங்கங்களின் ஒற்றுமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

பாசிசத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கிய முன்னணி என்று நாம் பேசும் போது, அது எங்கோ தொலைதூரத்தில் இருப்பதாகவும், சாத்தியமற்ற இலக்கு என்றும் பலரும் கருதுகின்றனர். குறிப்பாக பாட்டாளி வர்க்கதின் மீது நம்பிக்கை இழந்து, முதலாளித்துவக் கட்சிகளின் பின்னால் வால்பிடித்துச் செல்பவர்களுக்கு பாட்டாளி வர்க்கத்தின் செயல் ஒற்றுமை என்பது எட்டிக்காயாய் கசக்கிறது.

ஆனால் அவர்களுக்கு, பாசிசத்திற்கு எதிரான தொழிலாளர் வர்க்கத்தின் செயல்ஒற்றுமை சாத்தியம் என்பதை விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் முகத்தில் அறைந்தாற்போல பதிலளித்திருக்கிறது. பல்வேறு கட்சி அமைப்புகளிலும், சாதிய மத அமைப்புகளிலும் உள்ள விவசாயிகள் அனைவரும் ஒரே குடையின் கீழ் திரண்டு ஆளும் பாசிச சக்திகளை நிர்பந்திக்கும் வகையிலான போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்பதை விவசாயிகள் உணர்த்தியிருக்கிறார்கள்.

எனவே பாசிசத்திற்கு எதிரான தொழிலாளர்களின் செயல்ஒற்றுமையைச் சாதிப்பதும், பாட்டாளிவர்க்க ஐக்கிய முன்னணியை உருவாக்குவதும் சாத்தியம் என்பது மட்டுமல்ல இன்றைக்கு நம் முன்னாள் உள்ள முக்கிய கடமையுமாகும்.

பரந்துபட்ட உழைக்கும் மக்களை பாசிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அணிதிரட்ட வேண்டுமானால், பாட்டாளிவர்க்க ஐக்கிய முன்னணியின் அடித்தளத்தின் மேல் கட்டியமைக்கப்பட்ட பரந்த பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைக்க வேண்டும்.

இதன் மூலம்தான் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளிவர்க்கத்துடன் ஏனைய உழைக்கும் வர்க்கங்களையும், (கூலி விவசாயிகள், விவசாயிகள்), நகர்ப்புறக் குட்டி முதலாளிகள், அறிவுஜீவிகள் ஆகியவர்களை இணைக்க முடியும்.

இதன் மூலம்தான் பாசிசத்தின் தாக்குதலில் இருந்து பரந்துபட்ட உழைக்கும் மக்களைத் தற்காத்துக் கொள்வதுடன், பாசிசத்திற்கு எதிரான தாக்குதலைத் தொடுத்து அதனை முறியடிக்க முடியும்.

பாட்டாளி வர்க்க முன்னணியைக் கட்டியமைப்போம்!
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன